Friday, November 5, 2021

ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும் - கருத்துரைக்க

  G. Mirudhula    - 2021 

நாம் ஒவ்வொருவரும் உயிர் வாழ நமது அனைத்து உறுப்புகளும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்படுவது மிகவும் அவசியமாகும். ஏதேனும் ஒரு உறுப்பு மட்டுமே வேலை செய்தால் நம்மால் நலத்தோடு வாழ இயலாது. அந்த ஒரு உறுப்பைப் போன்றது தான் சட்டங்கள். சட்டங்களை மட்டுமே கொண்டு ஒரு நாட்டில் விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டு வர நிச்சயம் இயலாது. சட்டங்களுடன் சேர்ந்து சிறப்பான கல்விமுறையும், மக்களுக்குச் சமூக சேவையில் ஈடுபடும் வாய்ப்புகளும், ஒரு நிலையான அரசாங்கமும் இருந்தால்தான் ஒரு நாட்டினால் பொருளாதாரம், மக்களின் மனமகிழ்ச்சி, இயலாதோரின் முன்னேற்றம் என்ற முக்கியப் பிரிவுகளில் விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும். மாறாக, சட்டங்களால் மட்டுமே ஒரு நாட்டில் விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலாது என்பதே என் கருத்தாகும்.

முதலில் வளார்ந்த நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைக் கண்டால் அந்த நாடுகள் அனைத்திலும் ஒரு திடமான கல்விமுறை இருப்பதைக் காணலாம்.

             “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
              எழுமையும் ஏமாப்பு உடைத்து

ஏன்று அறுதியிட்டு கூறியுள்ளார் நம் வள்ளுவப் பேராசான். அதாவது, ஒரு முறை ஒருவர் கற்ற கல்வி ஒருவருக்கு ஏழேழு பிறவிகளுக்கும் உதவும். இதிலிருந்தே கல்வி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது. கற்ற ஒருவராலேயே நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தமது பங்கை ஆற்ற முடியும். கல்வி என்ற ஆயுதத்தைக் கொண்டே நம்மால் சிக்கல்களிலிருந்து எழுந்து நம்மை உயர்த்திக்கொள்ள முடிகிறதுஅதுமட்டுமில்லாமல், கல்வி பெறுவது முன்பை விட சுலபமாகிவிட்ட இன்றைய 21-ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டின் மக்கள் அல்லது இளையர்கள் புத்தக அறிவைத் தாண்டி திறன்களைப் பற்றியும் கற்றுக் கொள்ளுமாறு கல்விமுறை அமைந்தாலேயே நாட்டு மக்களால் தந்தம் வாழ்க்கைகளில் வெற்றி கண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முடியும். அவ்வாறே, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு நாட்டில் விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்பது வெள்ளிடைமலை.

      அடுத்ததாக, ஒரு நாட்டில் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் ஏற்பட உதவி தேவைப்படும் மற்றும் வறுமையில் இருக்கும் மக்களை நாடு கண்டு அவர்களுக்கு தகுந்த உதவிகளை வழங்குவது மிக அவசியம் என்பது என் கருத்து. நாட்டுமக்களுக்கு, உதவி தேவைப்படுவோரை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட ஒரு நாட்டின் அனைத்து மக்களுக்கும் தொண்டூழியத்தின் அவசியம் புரிந்திருப்பதோடு அதில் ஈடுபடவும் நிறைய வாய்ப்புகள் இருக்க வேண்டும். ஒரு நாட்டில் விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படவேண்டுமெனில் வசதியான ஒரு பிரிவு மக்கள் மட்டுமே தம்மை உயர்த்திக் கொண்டே செல்லக்கூடாது. மாறாக, முதலில் உதவி தேவைப்படுவோரின் கஷ்டங்களை அறிந்து அதை நாடு போக்க இயல வேண்டும். அவ்வாறு செய்ய தொண்டூழியம் என்பது அவசியம். நாட்டு மக்கள் தொண்டூழியத்தில் ஈடுபடும்போது உதவி தேவைப்படுவோரின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் உயர்த்துவதால் நாடும் முன்னேறுகிறது. அதோடு, தொண்டூழியர்களும் இதிலிருந்து உதவும் மனப் பான்மை என்று பல அறநெறிகளைக் கற்றுக் கொள்வதால் நாடே மேலும் பண்படைகிறது என்றே கூறலாம். அதுமட்டுமின்றி, நாட்டு மக்கள் மத்தியிலும் அதிக இணக்கம் மற்றும் ஒற்றுமை ஏற்படுகிறது.

  “அரம்போலும் கூர்மையறேனும் மரம்போல்வர்
   மக்கட்பண்பு இல்லா தவர்

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க ஒருவர் எவ்வளவு படித்தவராக இருந்தாலும் அவர் பண்பற்றவராக இருந்தால் ஓருயிராக மரத்திற்கு சமமாகிறார். அப்படியிருக்கையில், தொண்டூழியம் புரியும் மக்கள் தமது பண்புகளை வளர்த்துக் கொண்டு இன்னும் சிறந்த மனிதர்களாகத் திகழ்வதால் அவர்கள் நிச்சயம் நாட்டிற்கு ஏற்புடைய மாற்றங்களைக் கொண்டு வருவர். அதுமட்டுமா, தொண்டூழியம் செய்யும் மக்கள் மத்தியில் மன நிறைவும் மனமகிழ்ச்சியும் ஏற்படுவதே நாட்டில் விருப்பத்தக்க ஒரு மாற்றமாக அமைகிறது என்று கூறினால் அதில் எள்ளவும் ஐயமில்லை.

      மேலும், ஒரு நாட்டில் வளர்ச்சி வேண்டுமெனில் ஒரு பொருப்பான அரசாங்கம் இருப்பது மிக அவசியம். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கோவிட் -19 கிருமித்தொற்றே ஆகும், கிருமித்தொற்று வெளிவந்த முதன்முதலில் அமெரிக்கா போன்ற சில நாடுகளில் அரசாங்கம் கிருமித்தொற்றைப் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்காமலே இருந்தன. மேலும், அப்போதைய பிரதமர் திரு. ட்ரம்ப் அவர்கள் மக்களிடம் கை சுத்திகரிப்பான்களைக் குடிப்பதால் கோவிட்-19 வருவதிலிருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பொய் செய்தி விடுத்தார். அதனால், சில மக்கள் ஆபத்தான அந்தச் சுத்திகரிப்பான்களைக் குடித்துவிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும், அந்த நாடுகளில் கிருமித்தொற்று தலைவிரித்து ஆடியதால் நாட்டின் வாளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்தது. மாறாக, சிங்கப்பூர் முதலிய சில நாடுகளில் அரசாங்கம் அதிக பொறுப்பு மற்றும் விவேகத்துடன் செயல்பட்டு கிருமித்தொற்றை முறியடிக்கவும் பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் பல முயற்சிகளில் ஈடுபட்டனர் என்பது பெருமைக்குரியது. இதனால், இந்த நாடுகளால் பெரும் நெருக்கடியின் மத்தியிலும் வளர்ச்சி காண முடிந்தது. ஆக, ஒரு நாடு சிறப்பாக இயங்கி அதில் விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்பட ஒரு திடமான அரசாங்கம் அவசியம் தேவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறதல்லவா?

      அதே சமயத்தில், ஒரு நாட்டில் விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்பட சட்டங்களுதவா என்று கூறவும் இயலாது. ஏனெனில், ஒவ்வொரு நாட்டிலும் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளைப்  பிடிக்கவும், நாட்டு மக்களைப் பாதுகாக்கவும் நாட்டில் அமைதியைக் கட்டிக்காக்கவும் சட்டங்கள் அவசியம். இந்த சட்டங்களே ஒரு நாட்டில் எவ்வாறு நடப்பது அல்லது நடக்கக் கூடாது என்பதற்கான வழிமுறைகளாக திகழ்கின்றன. இவையே, மக்களை சரியான பாதையில் கொண்டு செல்ல உதவி அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகளை கொடுக்கின்றன. ஆனால், இந்த சட்டங்கள் ஒன்றைக் கொண்டே மாற்றங்களைக் கொண்டு வர இயலாது.

      காரணம், முதலில் மக்களுக்கு சட்டங்களின் அவசியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அறிவு அவசியம். மேலும், பொறுப்புடன் அந்தச் சட்டங்களை எப்பொழுதும் மதித்து நடக்க அற நெறிகள் அவசியம். அதுமட்டுமா, இந்த சட்டங்களை சரியாக நிலைநிறுத்த ஒரு சிறந்த அரசாங்கம் தேவை. ஆகவே, ஒரு நாட்டில் சட்டங்காளால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும் என்று கூறுவது சோற்றில் முழுப்பூசணிக்காயை மறைக்க முயல்வது போன்றது. சட்டங்களோடு தரமான கல்வி, தொண்டூழிய வாய்ப்புகள் மற்றும் பொறுப்பான அரசாங்கம் ஒரு நாட்டில் இருந்தால்தான் அந்த நாட்டினால் விரும்பத்தக்க மாற்றங்களைக் காண முடிமுடியும் என்பதே எனது ஆணித்தரமான கருத்தாகும். 

No comments: