Monday, November 30, 2020

நம் வாழ்வில் பரபரப்பு மிகுந்துவிட்டாலும், நமது அடையாளங்களை நாம் மறந்துவிடலாகாது - எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு


ரித்திக்கா ரங்கநாதன் (401) 

“ஒன்பது மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை

ஒன்பதரை ஆனால் உன் அம்மா சொந்தமில்லை 

தாயென்று காட்டுவதற்கும் தாவி எடுப்பதற்கும் 

ஞாயிற்றுக்கிழமை வரும், நல்லவளே கண்ணுறங்கு” 


அவையோர் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கங்கள். நான் இன்று பேச எடுத்துக்கொண்ட தலைப்பு, நம் வாழ்வில் பரபரப்பு மிகுந்துவிட்டாலும், நமது அடையாளங்களை நாம் மறந்துவிடலாகாது. 


அவையோரே, இன்றைய நவீன இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு வாழ்க்கை தொழில்நுட்ப வளர்ச்சியால் மிகுந்த பரபரப்பாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக நமது சிங்கை நகரில், நாம் அனைவரும் ஒரு நாளுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதால் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருக்கிறோம். இதன் காரணமாக, சுயமுன்னேற்றம், வெற்றி முதலானவற்றை மட்டுமே மனதில் கொண்டு, நமக்கென ஓர் அடையாளத்தைக் கொடுக்கும் குடும்பம், கலாச்சாரம், நாடு முதலான அம்சங்களை மறந்து நிற்கும் அவலநிலையை அடைந்திருக்குகிறோம். ஆனால், எவ்வளவுதான் வெற்றியைத் துரத்து வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாலும் தனிமனிதனாக நாம் நம் அடையாளங்களை நிச்சயமாக மறந்துவிடலாகாது. 


முதலாவதாக, நமக்கு மிக அருகில் இருக்கும் குடும்ப நிலையிலிருந்தே துவங்குவோம். அவையோரே, ஒரு நிமிடம் கண்களை மூடிச் சிந்தித்துப் பாருங்கள். கடைசியாக உங்களது தூரத்துச் சொந்தங்களிடம் நீங்கள் எப்போது பேசியிருப்பீர்கள்? ஒரு சில மாதங்கள் ஆகியிருக்குமா? அல்லது ஒரு வருடமே ஆகியிருக்குமா? நம் அடையாளத்தை நாம் எவ்வளவுதான் பேணுகின்றோம் என்பது இதிலிருந்தே தெரிகிறதே அவையோரே! நான் உரையின் தொடக்கத்தில் கூறிய வரிகள் இதை அழகாக எடுதிரைக்கின்றன. நமது பிஞ்சுக் கால்களால் இவ்வுலகிற்குள் முதல் பதம் எடுத்து வைக்கும்போதே, நம்மைச் சூழ்ந்திருப்பது நம் குடும்பம்தான். நன்மை தீமை கற்றுக்கொடுத்து, நமது எண்ணங்களைச் செதுக்கி, புத்திக்கூர்மையும் நற்பண்புகளும் கொண்ட சிறந்த மனிதனாக நம்மை உலக அரங்கில் நிற்கவைப்பவர்கள் நம் குடும்பம்தான். நமது அடையாளத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பார் நம் குடும்பம்தான். வாழ்க்கை பரபரப்பில் நம் குடும்பத்தை நாம் மறந்துவிடலாகுமா? குடும்பம், சொந்தம், பந்தம் எனும் நம் அடையாளங்களை நாம் மறந்துவிட்டால், எவ்வளவுதான் வாழ்க்கை எனும் ஏணியில் மேலே ஏறினாலும், ஆதரவின்றி அங்கே நிலைக்கமுடியாமல் கீழே விழுந்துவிடுவோம். நமது நற்பண்புகளை என்றும் நம்மை இழக்கவிடாமல் வைத்திருப்பது, வாழ்க்கைக்கு காட்டில் நாம் தொலைந்துவிடாமலிருக்க வழிகாட்டியாய் இருப்பது, நம் குடும்பத்தினர் தான். ஆகவே, வாழ்க்கை பரபரப்பில் குடும்பம் எனும் அடையாளத்தை நாம் மறந்துவிட்டால், வாழ்வில் நாம் சிகரங்களைத் தொட்டு சிங்கார நடை போடவியலாது. 


அடுத்தபடியாக, நாம் கலாச்சார நிலைக்குச் செல்வோம் அவையோரே. தனிமனிதனாக நமது அடையாளத்தில் மிகப்பெரிய பங்கை வகிப்பது நம் கலாச்சாரமும் பாரம்பரியமும் தான். குறிப்பாக நம் தமிழ்க்கலாச்சாரத்திற்கு இது நூற்றுக்கு நூறு உண்மையே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ்க் குடி அல்லவா அவையோரே? நமது கலாச்சாரத்திலே தமிழ்மொழி, உணவுமுறை, உறவுமுறை முதலான பற்பல அம்சங்கள் சேர்ந்து நம் கலாச்சாரத்திற்கு விண்ணளவு தொன்மையும் மண்ணளவு பெருமையும் தருகின்றன; தமிழன் எனும் அடையாளத்தை நமக்குத் தருகின்றன. ஆனால், தொழில்நுட்பத்தாலும் உலகமயமாக்கலாலும் வாழ்க்கை பரபரப்பாலும் இந்த மிக முக்கிய அடையாளத்தை நாம் இழந்துவருவதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறவில்லையா அவையோரே? பரபரப்பான உலகில் வாழ்கின்றோம் என்ற பெயரில் நாம் நம் மொழியை மறந்துவிட்டு அதை அழிய விடலாமா? நமது கலாச்சார பழக்கவழக்கங்களை புறக்கணிக்கலாமா? நமது அடையாளத்தைச் சாம்பலாய் எரியவிடலாமா? இந்தத் துயரத்தை நோக்கித்தான் நாம் பயணிக்கிறோம் அவையோரே! இந்நிலை நம்மைத் தாக்காமலிருக்க, கலாச்சாரம் எனும் அடையாளத்தை நாம் என்றும் மறக்கக்கூடாது. நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்ளவேண்டும். அப்போதே உலகம் நம்மை மதிக்கும், நமது அடையாளம் நிலைத்து நிற்கும்!


இறுதியாக, மானிடனிற்கு ஆகப்பெரிய அடையாளம்? அவனது மண்தான்; அவனது நாடுதான். "நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் எது வீடு?" எனும் பாடல் வரி காலத்தால் அழியாதது. ஆனால், இன்றைய பரபரப்பான, நவீன உலகில், பல மக்கள் சொந்த நாட்டிலேயே இருப்பதில்லை என்பதை நீங்களே கண்டு அனுபவித்திருக்கலாம் அவையோரே! இப்படி இருக்கும் பெரும்பாலான மக்கள், நாதங்கள் தாயநாடு எனும் அடையாளத்தையே மறந்து, வெவ்வேறு நாடுகளில் வாழும் பரபரப்பான வாழ்க்கையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். அவையோரே, வாழ்வின் பயணத்தில் நாம் எங்கே சென்றாலும், நமது அடையாளத்தை நமக்குத் தருவது நாம் பிறந்து, வளர்ந்து, படித்து, மகிழ்ந்த நம் தாய்நாடுதான். இந்த அடையாளத்தை மட்டுமே நாம் மறந்துவிட்டால், நம் வாழ்விற்கு ஒரு பொருளோ அர்த்தமோ இல்லாமல் போய்விடும். ஆனால், மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், நாடு எனும் அடையாளத்தை மறந்து நிற்பவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மட்டுமல்ல, தாய்நாட்டிலே தொடர்ந்து வாழ்பவர்களும்தான். வீடு, வேலை எனும் நம் சிங்கை நாட்டு பரபரப்பில், நாட்டுப்பற்றை இழந்து, நாட்டை நம் அடையாளமாக நாம் காண்பது கூட அல்ல இவ்வாறே நாம் வாழ்ந்தால், நாடு என்பது வீடாய் இருக்காது, வெறும் நிலமாய் ஆகிவிடும். அந்நிமிடமே, நாம் அனைவரும் அடையாளத்தை இழந்து அனாதையாகிவிடுவோம்! ஆகையால், வாழ்வின் எந்த மூலைக்குச் சென்று என்ன செய்தாலும், நாம் சிங்கப்பூரர்கள் எனும் அடையாளத்தை மட்டுமே மறந்துவிடலாகாது, அவையோரே!


அவையோரே, அடையாளம் என்பது மனிதனாகிய மரத்திற்கு வேரைப்போன்றது. மரம் எவ்வளவுதான் செழித்து வளர்ந்தாலும், அதன் வேர்களை மட்டுமே இழந்துவிட்டால் அடியோடு சாய்ந்துவிடுமல்லவா? அதை போல், மனிதன் எவ்வளவுதான் இன்றைய பரபரப்பான உலகிற்குள் தன்னைப் பூட்டிக்கொண்டு வெற்றியைத் துரத்தித் துரத்திச் சென்றாலும், அடையாளம் எனும் வேர்கள் இல்லாவிடில் மடிந்துவிடுவான். எனவே, நமக்கு என்றென்றும் அடையாளாமாகத் திகழும் குடும்பம், கலாச்சாரம் மற்றும் நாட்டை மறந்துவிடாமல், அவற்றில் பெருமை கொள்ளவேண்டும் அவையோரே! அப்போதுதான் வாழ்க்கை முழுமையானதாகவும் நிறைவானதாகவும் இருக்கும். எனவே, தேடித் சோறு நித்தம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, நரை கூடி கிழப்பருவம் எய்தி, கொடுங்கூற்றுக்கு இரை எனபின் மாயும், பல வேடிக்கை மனிதரைப்போல் வீழாமல் நம் அடையாளத்தைக் கட்டிக்காப்போம், பேணுவோம், போற்றுவோம் -- நமது அடையாள அம்சங்களே நமது மூச்சு என்று உணர்வோம் எனக்கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!




இளையர்கள் இந்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கிறார்களா


ஆராதனா- 204

      இன்றைய இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் சிறிதளவும் ஆர்வம் காட்டுவதில்லை. பெண்கள் பொட்டு வைப்பதிலிருந்து ஆண்கள் வேட்டி கட்டுவது வரை இன்றைய இளையர்களிடம் காணமுடிவதில்லை. விழாக்காலங்களில் கூட கோவில்களுக்குப் போவதோ , குடும்பத்தினருடன் வாழை இலையில் சாப்பாடு சாப்பிடுவதோ, அவ்வளவு செய்வதில்லை. அவ்வாறு செய்தாலும், பெற்றோர்கள் வற்புறுத்துவதால்தான் செய்கிறார்கள். இந்தியர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் பல நன்மைகள் உண்டு என்று இளைஞர்களுக்குப் புரிவதில்லை.

 

      நம் இந்தியப் பாரம்பரியத்தில், பாரம்பரிய ஆடைகள் அணிவது வழக்கம். பெண்கள் தங்கள் நெற்றியில் பொட்டுவைத்து, பூவைத்து, பல்வேறு நகைகளும் அணிவதுண்டு. நெற்றியில் திருநீறு, குங்குமம் ஆகியவற்றையும் பூசுவார்கள். ஆண்கள் வேட்டி, சட்டை அணிவதும், பெண்கள் சேலை கட்டுவதும் உண்டு. ஆனால் இன்றைய இளைஞர்கள் அவற்றைச் செய்வதில்லை. அவ்வாறு செய்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. பாரம்பரிய ஆடைகளையோ ஆபரணங்களையோ அணிவதற்கு அவமானப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் செய்வதற்குத் சோம்பேறித்தனமாகவும் இருக்கிறார்கள். மேலும் பாரம்பரிய ஆடைகள் அணிந்தால் சூடாக இருக்கிறது என்றும் பலர் புலம்புகிறார்கள். ஆனால், இவ்வாறு செய்வது நம்முடைய அடையாளம் என்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் அணியும் உடைகளையோ ஆபரணங்களையோ பார்த்துத் தான் மற்றவர்கள் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். இப்படிப்பட்ட பழக்கவழக்கத்தை நாம் கடைப்பிடிக்காவிட்டால், யார் கடைப்பிடிப்பார்? அதோடு இவ்வாறு பாரம்பரிய உடைகள் அணியும்போது தான் மிகவும் அழகாக இருக்கும். 

 

      விழாக்காலங்களின் போது , நாம் வழக்கமாகக் கோவிலுக்குச் செல்வோம். ஆனால் ,  இளைஞர்கள் பலர் கோவிலுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சிங்கப்பூரில் , இந்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பல கோவில்களும் கட்டி இருக்கிறார்கள். ஆனால் , கோவிலுக்குச் செல்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள மறக்கிறார்கள் இளைஞர்கள். விழா நாளின்போது கோவிலுக்குச்சென்று , காலையில் கடவுளை வணங்கி , ஆசிர்வாதம் பெற்றால் , அந்நாள் நல்லபடியாக இருக்கும். அதுவும் கோவிலுக்குச் சென்று, சாமியைக் கும்பிட்டுச் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இருப்பது நமக்கு மனஉளைச்சலைக் குறைத்து , நிம்மதியைத் தரும். அதுவும் பல்வேறு கோவில்கள் முன்னோர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. கோவிலின் கோபுரத்தில் இருக்கும் சிலைகள் எல்லாம் கையாலேயே செய்யப்பட்ட பொருட்கள். அதன் பின் பல கதைகளும் அதிசயங்களும் உண்டு. இவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றால் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். 

 

      வாழை இலைகளில் சாப்பிடுவதை இளைஞர்கள் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், எவ்வளவு பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பது வேறொரு விஷயம். வாழை இலையில் உணவு பரிமாறுவது இக்காலத்தில் அரிது. ஆனால் , அவ்வாறு செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. வாழை இலையில் சாப்பிடும்போது , அதன் மருத்துவக்குணம் நமக்குக் கிடைக்கும். வாழை இலைக்குப் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. அதுவும் உணவைக் கையில் எடுத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்போதுதான் நமக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் சாப்பிட முடியும். கையில் எடுத்துச் சாப்பிடுவது நம்முடைய முக்கியப் பழக்கவழக்கமாகும். ஆனால், கைகள் அழுக்காகிவிடும் என்று இளையர்கள் கூறி அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு செய்வதன் நன்மைகளை முதலில் புரிந்துகொண்டு , இளைஞர்கள் செயல்பட வேண்டும். 

 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்பது பழமொழி.

      நம் பெற்றோர்கள் நம் கண்களுக்கு முன் தென்படும் தெய்வங்கள் என்று நாம் கருதுகிறோம். அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது ஒரு இந்தியப் பழக்கவழக்கம். ஆனால் , இளைஞர்கள் அவ்வாறு செய்வதும் இல்லை, பெற்றோர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் , நம்மை இந்த உலகிற்கு கொண்டுவந்ததே அவர்கள் தான். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை.மாதா பிதா குரு தெய்வம்என்பதில் நம் அம்மாவும் அப்பாவும் தான் முதல். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்போது நமக்குப் புண்ணியம் கிடைக்கும். இவ்வளவு மரியாதையுள்ள இந்தப் பழக்கவழக்கத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுபோல் நம் பாரம்பரியத்தில் பல பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றின் பின் காரணங்களும் இருக்கின்றன , நன்மைகளும் இருக்கின்றன. இவற்றை இளையர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்தியப் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொன்டே வருகிறது. இளையர்கள் தான் அதைக் கடைப்பிடித்து பாரம்பரியத்தைக் காக்க வேண்டும். அவ்வாறு செய்வது அவர்களுடைய கடமை.ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?" இளமையிலேயே இதுபோன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தால் தான் முதுமை வரை பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம். இளமையிலேயே பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நன்மைகளையும் அவர்களுக்கு விளக்குவது இளைஞர்களின் பொறுப்பு. நம் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் வேறு யார் கடைப்பிடிப்பார்? அதனால் , இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது முக்கியம் மற்றும் அவசியம். 

 

      இந்தியப் பழக்கவழக்கங்களே நம்முடைய அடையாளம் அவற்றை மறக்காமல் கடைப்பிடிப்பது அவசியம். இளையர்கள் பழக்கவழக்கங்களின் அவசியத்தையும் நன்மைகளையும் புரிந்துகொள்வது முக்கியம். அப்போது தான் கடைப்பிடிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். அவ்வாறு செய்வதற்கு அவமானமோ சோம்பேறித்தனமோ படக்கூடாது. இந்தியப் பாரம்பரியத்தை காப்பது அவர்களின் கைகளில் தான் இருக்கிறது.இந்தியர்கள் நாம்! பெருமையாக இருப்போம்!யாமறிந்த பாரம்பரியங்களில் இந்தியப் பாரம்பரியம் மிகச்சிறந்தது. இளையர்கள் பெருமையாகப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். 

 

 

மற்றவர்களது குறைகளைப் பற்றிக் கேலி பேசும் பழக்கத்தால் ஏற்பட்ட விளைவு - யாழினிஸ்ரீ அண்ணாதுரை வகுப்பு : 206 - 2020

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நன்று” என்ற வள்ளுவரின் பொன்சொற்களை நாம் பல முறை கேட்டிருப்போம். ஆனால், இக்குறளை அறிந்தும் நான் அதை நடைமுறையில் கொண்டு வராமல் செயல்பட்ட சம்பவம் என் மனதில் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கும். நான் அப்போது உயர்நிலை இரண்டில் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நெருங்கிய தோழிகள் பலர் இருந்தாலும், ஒரு தோழி மட்டும் வித்தியாசமாக இருந்தாள். மாதவி என்ற பெயர் கொண்ட அவள் திக்கித் திக்கிப் பேசுபவள். வகுப்பில் யாரும் அவளுடன் சேரமாட்டார்கள். உயர்நிலை ஒன்றில் அவள் எந்த நண்பரும் இன்றி தனியாகத் தான் இருந்தாள். அவளுக்கும் எனக்கும் இடையே எந்தவித பேச்சு வார்த்தையும் இல்லை. நானும் மற்ற மாணவர்களைப் போல் அவளை விட்டு விலகியே இருந்தேன். ஆனால், உயர்நிலை இரண்டில் எங்களின் வகுப்பாசிரியர் அவளை என் பக்கத்தில் உட்காரச் செய்தார். கணக்கிலும் அறிவியலிலும் நான் சிரம்ப்பட்டுக் கொண்டிருக்க, அவள் அவற்றில் மேதையாக விளங்கினாள். நாட்கள் செல்லச் செல்ல நான் சிரமப்படுவதை அறிந்த அவள் , ‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்பதற்கேற்ப தன் தாட்களை என்னிடம் காட்டி எனக்குப் புரிய வைக்கும்படி கூறினாள். திடீரென்று, அவள் எனக்கு உதவுவதை உணர்ந்த நான் முதலில் அவள் கூறியவற்றைப் பொருட்படுத்தாமல் , “நன்றி. ஆனால், எனக்கு உதவி தேவையில்லை,” என்று அலட்சியமாகக் கூறினேன். ஆனால், இந்த எண்ணத்தை என் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் சுக்கு நூறாக்கிக் காற்றில் பறக்கவிட்டன. கணக்கிலும் அறிவியலிலும் தேர்ச்சி பெறாத நான் இம்முறை தானாகவேச் சென்று மாதவியிடம் உதவி கேட்டேன். அவள் என்னை மன்னித்துவிட்டு எனக்கு ஒவ்வொரு நாளும் உதவ உதவ, நானும் அவளும் கூடிய சீக்கிரத்தில் இணைபிரியா தோழிகள் ஆனோம். ஆனால், என்னிடம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பழக்கம் இருந்தது. அதாவது வகுப்பு மாணவர்களிடம் உள்ள குறைகளைப் பற்றி மற்றவர்களிடம் கூறிக் கேலி பேசி மகிழ்வது ஆகும். மாதவி என் நண்பர்களிலேயே அதிகக் கருணை குணம் கொண்டவள் என்றாலும் அவளது திக்கித் திக்கிப் பேசும் பழக்கம் எனக்கு அதிக வியப்பையேத் தந்தது. என் மற்ற நண்பர்கள் என்னிடம், “நீ ஏன் அவளுடன் பழகுகிறாய்? அவள் பேசுவதை யாராலும் புரிந்துகொள்ள முடியாதே,” என்றெல்லாம் வினவியபோது நான் அவர்களிடம் கல்வியில் உதவி பெறுவதற்காகவே அவளுடன் பழகுவதாகப் பொய் சொல்வேன். பிறகு, அவர்களும் நானும் அவளைத் தொடர்ந்து கேலி செய்வோம். என் மற்ற நண்பர்களை இழக்க விரும்பாத நான் இப்போக்கை ஓட்டிக்கொண்டே இருந்தேன். முகத்தளவில் மட்டும் மாதவியுடன் நட்புகொண்டிருந்ததால் என் உள்ளத்தில் அவள் மீது ஒருவகையான வெறுப்பு வளர்ந்தது. இவை அனைத்தையும் அறியாத மாதவி தனது ஒரே நெருங்கிய தோழியாக விளங்கிய என்னை மிகவும் நேசித்தாள். “உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவரது சொற்களைப் போல் அவள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எனக்குத் துணையாக நின்றாள். அம்மாதிரியான நற்குணம் படைக்காத நான் அவள் எனக்குச் செய்ததை எல்லாம் புறக்கணித்து அடுத்த வருடம் வகுப்பு பிரிவதால் அவளைவிட்டுப் போய் விடலாம் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு முற்றுப்புள்ளியை வைத்தது. ஒருமுறை நான் மாதவியை ஏளனம் செய்துகொண்டிருந்தபோது மாதவி அங்கே இருப்பதை நான் கவனிக்கவில்லை. அன்று உலக நண்பர்கள் தினம் என்பதால் அவள் எனக்காக ஒரு பெரிய பரிசுப்பொருளுடன் நின்றுகொண்டிருப்பதை நான் பார்க்கவில்லை. நான் தொடர்ந்து என் நண்பர்களுடன் அவளைக் கேலி செய்ய, திடீரென்று ஒரு பொருள் பலத்த சத்தத்துடன் விழுவது என் காதுகளில் விழுந்தது. ஆம், அது மாதவி எனக்கு வாங்கி வந்த பொருளாகும். திரும்பிப் பார்த்தபோது மாதவியைக் கண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளது கண்களிலிருந்து நீர் அருவிபோல் வழிந்தது. இதைக் கண்ட என் மற்ற நண்பர்கள் நான் நேர்மையின்றி நடப்பதை அறிந்தனர். அவர்கள் என்னை வெறுப்புடன் பார்க்க நான் வெட்கத்தில் தலைகுனிந்து நின்றேன். ஆனால், என் கால்களோ மாதவி சென்ற வழியைப் பின்தொடரச் சென்றன. மாதவி ஓர் ஊஞ்சலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பதைக் கண்டபோது என் மனம் உடைந்தது. “என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன், ஓர் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்” என்ற பாடல் வரிகள் என் மனத்தில் ஒலித்தன. நான் ஒரு நல்ல தோழி என்று என்னை நம்பி வந்த மாதவியை ஏமாற்றி விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னுள் குடிகொள்ள நான் கண்ணீர் மல்க என் போக்கைப் பற்றிய உண்மையைக் கூறி அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். அவள் திக்கித் திக்கி “என்னுடன் இனிமேல் பேசவேப் பேசாதே!” என்று தன் பலத்தைத் திரட்டிக்கொண்டு தொண்டை கிழியக் கத்தினாள். அவள் மனம் புண்படுமாறு நடந்துகொண்ட என்னை அவள் எவ்வாறு மன்னிப்பாள். இவ்வளவு நாள் அவள் முன் மட்டும் இனிதாகப் பேசி அவளுக்குப் பின் அவளைக் கேலி செய்ததை எப்படி மன்னிப்பாள் ? இக்கேள்விகள் அனைத்தும் என் மனத்தை ஆட்கொள்ள நான் என் செயல்களை நினைத்து ஒரு நல்ல தோழியை இழந்துவிட்டோமே என்று வருந்தி வீடு திரும்பினேன். அன்றிலிருந்து என் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் என்னுடன் பழகுவதை நிறுத்தினார்கள். அவர்கள் எல்லோரும் மாதவி மீது பரிதாபப்பட்டு அவளுக்குத் துணையாக இருக்க நான் மட்டும் தனிமையில் வாடினேன். என் செயல்களின் விளைவுகளை அனுபவித்தேன். “நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற பாடல் வரிகளை நாம் பல முறை கேட்டிருப்போம். நேர்மை என்பது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய தலைசிறந்த பண்பாகும். நம்மை நம்பி இருப்பவர்களைக் கைவிடாமல் அவர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்டுவது போல் நாமும் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு வாழ்ந்தால் தான், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்று நாம் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வள்ளுவர் கூறும் தெய்வ நிலையை அடைய முடியும். நல்லொழுக்கத்தின் முக்கியமான பண்பாக விளங்கும் நேர்மையை உணர்த்திய இச்சம்பவத்தை நான் என்றென்றும் நினைவில் வைத்துக்கொண்டு நேர்மையுடன் நடத்துகொள்ளத் தொடர்ந்து முற்படுவேன்.

Thursday, October 29, 2020

 

   பதின்மவயதினர் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்களா? இதுபற்றிய உன் கருத்தை விளக்கி எழுதவும். 

 

         இன்றைய இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் சிறிதளவும் ஆர்வம் காட்டுவதில்லை. பெண்கள் பொட்டு வைப்பதிலிருந்து ஆண்கள் வேட்டி கட்டுவது வரை இன்றைய இளையர்களிடம் காணமுடிவதில்லை. விழாக்காலங்களில் கூட கோவில்களுக்குப் போவதோ , குடும்பத்தினருடன் வாழை இலையில் சாப்பாடு சாப்பிடுவதோ, அவ்வளவு செய்வதில்லை. அவ்வாறு செய்தாலும், பெற்றோர்கள் வற்புறுத்துவதால்தான் செய்கிறார்கள். இந்தியர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களுக்குப் பல நன்மைகள் உண்டு என்று இளைஞர்களுக்குப் புரிவதில்லை.

 

         நம் இந்தியப் பாரம்பரியத்தில், பாரம்பரிய ஆடைகள் அணிவது வழக்கம். பெண்கள் தங்கள் நெற்றியில் பொட்டுவைத்து, பூவைத்து, பல்வேறு நகைகளும் அணிவதுண்டு. நெற்றியில் திருநீர், குங்குமம் ஆகியவற்றையும் பூசுவார்கள். ஆண்கள் வேட்டி சட்டை அணிவதும், பெண்கள் சேலை கட்டுவதும் உண்டு. ஆனால், இன்றைய இளைஞர்கள் அவற்றைச் செய்வதில்லை. அவ்வாறு செய்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. பாரம்பரிய ஆடைகளையோ ஆபரணங்களையோ அணிவதற்கு அவமானப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் செய்வதற்குச் சோம்பேறித்தனமாகவும் இருக்கிறார்கள். மேலும் பாரம்பரிய ஆடைகள் அணிந்தால் சூடாக இருக்கிறது என்றும் பலர் புலம்புகிறார்கள். ஆனால் இவ்வாறு செய்வது நம்முடைய அடையாளம் என்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் அணியும் உடைகளையோ ஆபரணங்களையோ பார்த்துத் தான் மற்றவர்கள் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். இப்படிப்பட்ட பழக்கவழக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் , யார் கடைப்பிடிப்பார்? அதோடு இவ்வாறு பாரம்பரிய உடைகள் அணியும்போது தான் மிகவும் அழகாக இருக்கும்.

 

         விழாக்காலங்கள்போது , நாம் வழக்கமாகக் கோவிலுக்குச் செல்வோம். ஆனால் , பல இளைஞர்கள் கோவிலுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சிங்கப்பூரில் , இந்தியப் பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்குப் , பல கோவில்களும் கட்டி இருக்கிறார்கள். ஆனால் , கோவிலுக்குச் செல்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள மறக்கிறார்கள் இளைஞர்கள். விழாநாளின்போது கோவிலுக்குச்சென்று , காலையில் கடவுளைக் கும்பிட்டு , ஆசிர்வாதம் பெற்றால் , அந்நாள் நல்லபடியாக இருக்கும். அதுவும் கோவிலுக்குச் சென்று , சாமியை கும்பிட்டு சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இருப்பது நமக்கு மனஉளைச்சலைக் குறைத்து , நிம்மதியை தரும். அதுவும் பல்வேறு கோவில்கள் முன்னோர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. கோவிலின் கோபுரத்தில் இருக்கும் சிலைகள் எல்லாம் கையாலேயே செய்யப்பட்ட பொருட்கள். அதன் பின் பல கதைகளும் அதிசயங்களும் உண்டு. இவற்றை தெரிந்துகொள்ள முயன்றால் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

 

         வாழை இலைகளில் சாப்பிடுவதை இளைஞர்கள் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் எவ்வளவு பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பது வேறொரு விஷயம். வாழை இலையில் உணவு பரிமாறுவது இக்காலத்தில் அரிது. ஆனால் , அவ்வாறு செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. வாழை இலையில் சாப்பிடும்போது , அதன் மருத்துவக்குணம் நமக்கு கிடைக்கும். வாழை இலைக்கு பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. அதுவும் உணவை கையில் எடுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்போதுதான் நமக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் சாப்பிட முடியும். கையில் எடுத்து சாப்பிடுவது நம்முடைய முக்கிய பழக்கவழக்கமாகும். ஆனால், கைகள் அழுக்காகிவிடும் என்று இளையர்கள் கூறி அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு செய்வதன் நன்மைகளை முதலில் புரிந்துகொண்டு , இளைஞர்கள் செய்லபட வேண்டும்.

 

அண்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்பது பழமொழி.

         நம் பெற்றோர்கள் நம் கண்களுக்கு முன் தென்படும் தெய்வங்கள் என்று நாம் கருதுகிறோம். அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது ஒரு இந்தியப் பழக்கவழக்கம். ஆனால் , இளைஞர்கள் அவ்வாறு செய்வதும் இல்லை, பெற்றோர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் , நம்மை இந்த உலகிற்கு கொண்டுவந்ததே அவர்கள் தான். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. “மாதா பிதா குரு தெய்வம்என்பதில் நம் அம்மாவும் அப்பாவும் தான் முதல். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்போது நமக்கு புண்ணியம் கிடைக்கும். இவ்வளவு மரியாதையுள்ள இந்த பழக்கவழக்கத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுபோல் நம் பாரம்பரியத்தில் பல பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றின் பின் காரணங்களும் இருக்கின்றன , நன்மைகளும் இருக்கின்றன. இவற்றை இளையர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்தியப் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொன்டே வருகிறது. இளையர்கள் தான் அதைக் கடைப்பிடித்து பாரம்பரியத்தை காக்க வேண்டும். அவ்வாறு செய்வது அவர்களுடைய கடமை. “ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?" இளமையிலேயே இதுபோன்ற பழக்கங்களை செய்து கடைப்பிடித்து வந்தால் தான் முதுமை வரை பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம். இளமையிலேயே பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நன்மைகளையும் அவர்களுக்கு விளக்குவது இளைஞர்களின் பொறுப்பு. நம் பாரம்பரியத்தை கடைப்பிடிக்காவிட்டால் வேறு யார் கடைப்பிடிப்பார்? அதனால் , இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது முக்கியம் மற்றும் அவசியம்.

 

         இந்தியப் பழக்கவழக்கங்களே நம்முடைய அடையாளம் அவற்றை மறக்காமல் கடைப்பிடிப்பது அவசியம். இளையர்கள் பழக்கவழக்கங்களின் அவசியத்தையும் நன்மைகளையும் புரிந்துகொள்வது முக்கியம். அப்போது தான் கடைப்பிடிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். அவ்வாறு செய்வதற்கு அவமானமோ சோம்பேறித்தனமோ படக்கூடாது. இந்தியப் பாரம்பரியத்தை காப்பது அவர்களின் கைகளில் தான் இருக்கிறது. “இந்தியர்கள் நாம்! பெருமையாக இருப்போம்!” யாமறிந்த பாரம்பரியங்களில் இந்தியப் பாரம்பரியம் மிகச்சிறந்தது. இளையர்கள் பெருமையாக பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.

 

ஆராதனா, 204

        

Thursday, September 24, 2020

 

       2019 ஆம் ஆண்டு உயர்நிலை நான்காமாண்டு மாணவியர்களின்   கவிதைகள்

கரு : இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் 

பூமித்தாய்

ஸ்வேதா சரவணன் (401)

 

மனிதன் உன் மேல் நடந்தான்; உனை இகழ்ந்து வீடுகள் கட்டினான்

காடுகளை அழித்தான்; குப்பைகளால் உன் முகத்தை மறைத்தான் 

கழிவுப் பொருட்கள், புகை, இரசாயனம், உனை வருடவே; 

நீயும் எழுந்தாய், கோபக்கனலாய்

 

பூகம்பமாய் விழுங்கினாய்; எரிமலையாய்ச் சுட்டெரித்தாய் 

காட்டுத் தீயாய் வளத்தை அழித்தாய்; சூறைக்காற்றாய் வீசிச் சூரையாடினாய் 

சுனாமியாய் எழுந்து அடித்துச் சென்றாய்; அசுரப் பனியாய்ப் பொழிந்தாய்

பேய் மழை பெய்து வெள்ளமாய்ச் சூழ்ந்து நின்றாய்

 

பூமி தாயே, உன் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று காட்டிவிட்டாய்

இனியாவது நாங்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்திவிட்டாய்

நாளைய தலைமுறையை வாழ வைப்பது ஒவ்வொருவரின் கையிலே

இயற்கையைச் சேதமின்றி பாதுகாக்க அக்கறைக் கொள்வோம் இனி நம் முயற்சிகளிலே!


************************


சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இனியா (401) 

 

காடுகளை அழித்தோம்

கேடு வந்தது!

மரங்களை வெட்டிச் சாய்த்தோம்

மழை நின்றது!

வெட்டபட்ட மரங்களால்

புவி வெப்பமயமானது!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினோம்

பூமி மாசுபட்டது!

தொழிற்சாலைகளைப் பெருக்கினோம்

சுவாசக்காற்றும் சுருங்கிப் போனது!

தொழில்நுட்ப வளர்ச்சியென

இயற்கையைத் தொலைக்கிறோம்!

இயற்கையை அழிக்க நினைப்பது பாவம்

ஆகவே சுற்றுச்சூழலைக் காப்போம்!

அதற்காகத் தொண்டுகள் பல செய்வோம்!


************************

கண்ணீர் குடிநீர்

ப்ரீத்தி (401) 

 

நீல வானில் அலைபாயும்

கார்முகிலும், 

கண்ணீரை உரமாக்கி தலை

கவிழ்ந்து காத்திருந்த 

உழவனை வஞ்சித்து 

கடல் மீது கன மழையாய் 

பொழிந்தது. 

கண்ணீரை குடிநீராய்

மாற்ற வேண்டிய காலம் வருமுன்

கிடைக்கும் மழைநீரை

சேமிக்கும் வழிவகுத்து

உழவனின் தலையை நிமிர்த்திடுவோம். 


 ************************

முட்டாள் மனிதன்

ஹர்ஷா (401)

 

ஐந்தறிவு படைத்த பறவைகள் கூட

 

யோசிக்கின்றன மரங்களைக் கொத்த

 

ஆறறிவு கொண்ட மனிதனோ 

 

சுயநலவாதியாய் மரங்களை வெட்டிச் சாய்க்கிறான்

 

தண்ணீருக்குப் பஞ்சமில்லாத காலம் அன்று 

 

தண்ணீருக்காகக் கண்ணீர் விட வேண்டிய நிலை இன்று 

 

பிறந்ததிலிருந்து எல்லாவற்றையும் தந்தாள்

 

மனிதன் அவற்றை பறித்து வந்தான்

 

பூமி தாயை அழிப்பதாய் எண்ணி 

 

முட்டாள் மனிதன் தன்னையே அழித்துக்கொள்கிறான்


************************

நேரம் இருந்திருந்தால்

அதிதி (401)

 

சுதந்திரமாய் சிறகடித்து ஆகாயத்தை அலங்கரிக்கும் பறவைகள் எங்கே? 

அவற்றிற்குப் பதிலாக வானில் கரும்புகை ஏன்? 

நதியில் நிதானமாய் நீந்திச் செல்லும் வண்ண மீன்கள் எங்கே?

மங்கலானக் காட்சி அவற்றை மறைக்கிறதே, ஏன்?

மரக்கிளையில் மௌனமாய் குனுகும் ஜோடிப் புறாக்கள் எங்கே?

அவற்றின் சத்தத்திற்குப் பதில் மௌனத்தின் கூச்சல், ஏதோ தவறு நடக்கிறது.  

 

கடிகார முள்ளை திருப்ப மனம் ஏங்குகிறது,

நேரம் இருந்திருந்தால் இவ்வுயிர்களைக் காத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சிறிது நேரம் – புவிக்கு நாம் ஏற்படுத்தும் அழிவை உணர, 

சிறிது நேரம் – நம் பாவங்களை எண்ணிப் பதற. 

எங்கேயும் அலைப்பாயும் மனிதனின் மாசுப்பட்டப் பேராசைகள், 

 

அவற்றின் மத்தியில் கரைசேருமா கடல் அலைகள்.  


************************


என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்

கீர்த்தனா (401) 

 

என் குடும்பமான மரங்களைக் கொடூரமாக அழித்து, அவர்களின் கல்லறையில் புதுமனைப் 

புகுவிழாவை நடத்துகிறான் அவன்

 

காடுகளில் உல்லாசமாக வாழ்ந்த என் தோழர்களைத் துரத்தி விரட்டி, கூண்டுகளில் 

அடைக்கிறான் அவன் 

 

என்னையும் விட்டுவிடவில்லை; கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்து, சித்திரவதைச் செய்து, 

சாகடிக்கிறான் அவன் 

 

குப்பைகளால் என்னையும் மண்ணோடு மண்ணாகப் புதைக்கிறான் அவன் 

 

தீ, புகை, இரசாயனத்தால் என்னை நாசமாக்குகிறான் அவன்

 

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி மூச்சுத் திணறும் அளவுக்கு என்னை அடைத்துத் 

திணிக்கிறான் அவன் 

 

உலக வெப்பத்தை ஏற்றி எனக்கு இடைவிடாத காய்ச்சல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான் 

அவன் 

 

என் வாழ்வை நரகமாக்கித் தன் வாழ்க்கையைச் சொர்க்கமாக்கிக் கொள்கிறான் அவன்

 

அவன் வாழ்வியலுக்கே அடிப்படையான என்னை அழிப்பதால் அவனுக்கு என்னை நன்மை 

கிட்டப் போகிறது? 

 

இவன்போன்ற சுயநலவாதியைப் பாரில் எங்காவது கண்டதுண்டோ? இந்த கொடுமையைத்

தட்டி கேட்க யாருமில்லையா? 

 

தயவுசெய்து,  என்னை காப்பாற்றுங்கள், என்னை காப்பாற்றுங்கள் 

 

************************************************************************

 

அழிவின் விளிம்பில்

மீனுலேகா (401) 

 

நடந்துச் சென்ற பச்சை வெளிகள் கட்டடங்களாய் மாறின

பட்டம் விட்ட வானில் மாசு நிறைந்திருக்கிறது

மீன்கள் நீந்திய நதிகள் வற்றிப் போய்விட்டன

வாழ இடமில்லாமல் வாயில்லா ஜீவன் தவிக்கின்றது

 

நாம் இந்த உலகத்தில் வாழ நாம் செய்த புண்ணியம் என்ன

நாம் இந்த உலகத்தில் வாழ இவ்வுலகம் செய்த பாவம்  என்ன 

நாம் அமைக்க நினைத்ததோ ஒரு நகரம்

ஆனால், நாம் உருவக்கியுள்ளதோ ஒரு நரகம்

 

நம் முன்னோர்கள் விதைத்த விதை

இப்போது என்ன ஆயிற்று அதன் நிலை  

நம் வளர்ச்சிகளால் நேர்ந்தது காயம்

எங்கே போனது நமது மனித நேயம் 


************************

மென்தோல் கன்னிகையே

ஷஹானா (402)

 

இயற்கையே, இளையக் கன்னியாய் காட்சியளித்த நீ

இன்றோ ஔவையாகிப் போனாய்!

 

கார்முகில்கள் மோதிடும் நின் குறிஞ்சி மேனியோ

மரங்களின்றி இன்று பாலை நிலமாகியதே! 

 

பசும்வெளிப் போர்த்திய நின் மேனியோ

நெகிழிகளால் இன்று கிழிந்தச் சேலையானதே!

 

என்று நான் மீண்டும் உன்னை

இளையக் கன்னியாய் காண்பேன்?

 

ஐயோ என் நெஞ்சம் வெடித்து

கண்ணீர் வறண்டு பார்வையும் புண்ணானதே! 


************************


சிறுகும் நெஞ்சம் குறுகுறுக்குமோ  

ஹர்ஷிதா (402)

 

காலையில் எழுந்திருக்கக் குயிலின் கீதமும்,

ஜன்னலைத் திறந்தவுடன் காணக் கண்களுக்குக் குளிர்ச்சியாக

பச்சைப் பசேல் என்று எங்குப் பார்த்தாலும் 

மரங்களும், செடி கொடிகளும், தாவரங்களும் 

பூங்காவனம் போல் காட்சியளித்து மனதை இலேசாக்கும்போது,

அதன் அருமையைப் புரிந்துகொள்ளாமல்,

குயில்களை அலாரங்களாக்கி

மரங்களைக் கட்டடமாக்கி

செடி கொடிகளைக் கம்பிகளாக்கி

இயற்கை அன்னையின் அடிவயிற்றில் ஒங்கி மிதித்தப் பாவத்திற்கு

இன்று நீ வாழும் பூமி மயாணமாகுவதைப் பார்க்கும்போது,

உன் நெஞ்சம் குற்ற உணர்ச்சியால் குறுகுறுக்கவில்லையா மானிடா?


************************


என்று விமோசனம்?

ஷன்மதி (402) 

 

சுவாசிப்பதற்குத் தூய்மையான காற்றைக் கொடுத்தாய்

மலை உச்சியிலிருந்து அருவியாய்க் கொட்டிப் பருகுவதற்கு நீரைக் கொடுத்தாய்

உண்பதற்குச் சுவையான காயும் கனியும் கொடுத்தாய் 

 

ஆனால் மனிதனோ அறிவியல் வளர்ச்சியின் பெயரில் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக 

அழிக்கிறான்

கட்டடங்களை எழுப்ப மரங்களை வெட்டுகிறான்

குப்பைகளால் உன் முகத்தை மறைக்கிறான்

அணு கழிவினால் உன் உடலை சிதைக்கிறான்

 

எங்கள் அறியாமையைப் போக்கி உன் சினத்தை குறைத்துக் கொள்வாயோ?

இந்த சீற்றம் தான் சுனாமியும் எரிமலை வெடிப்புமோ?

தவறு புரியும் மானிடர்களை மன்னிக்கமாட்டாயா?


************************ 


தேடலற்ற மூடன்

அபிராமி (402)

 

அழகின் வடிவமாக தெரிகிறதே அந்த மலை

புனித்ததின் உருவமாக இருக்கிறதே அந்த நிலவு

செவிகளுக்கு மெல்லிசையாக கேட்கிறதே அந்த நதி

மனதிற்குப் புத்துணர்ச்சி அளிகின்றதே அந்த மேகங்கள்

பருவநிலைக்கேற்ப இதமாக வீசுகிறதே அந்தக் காற்று

இதையெல்லாம் கவனிக்காமல் போகிறானே, மனிதன் ஒரு மூடன்.


************************ 


செமாக்காவ் தீவு

கெஜ ஷ்ரேயா (402)

 

நட்சத்திரங்கள் எங்கே?— சிறு வயதில் 

நான் கண்ட நட்சத்திரங்கள் எங்கே?

இதோ இந்தச் சாம்பல் காட்டில் 

 

நாட்டிற்குள் காணமுடியாத இவற்றை - இந்த சாம்பல்

காட்டிற்குள் கொண்டு வந்து வைத்தது யார்?

ஆமாம்! ஏது இந்தச் சாம்பல்? எங்கிருந்து வந்தது?

 

பொறுப்பில்லாதவர்கள் புறந்தள்ளிய குப்பைத்தொட்டிகள்

போதுமென்ற மனமில்லாப் பேதைகளின் பேராசை

வீணர்கள் குவித்துத் தள்ளிய உணவுக் கழிவு

இவை எல்லாம் இங்குச் சாம்பலாய் 

 

ஈராயிரத்து நாற்பதுவரை நமக்குப் போதுமாம் இந்தக் கொள்ளிடம்

இன்றை மட்டும் எண்ணும் நாம் எங்கே தேடுவது வேறிடம்!


************************

நெஞ்சுப் பொறுக்குதில்லையே

ஐஸ்வர்யா (402) 

 

நான் அழிகிறேன்; அழுகிறேன் 

உதவிக்காகக் கதறி, உன் காலடியில் கெஞ்சுகிறேன் 

 

ஒரு காலத்தில் ஓடிக்கொண்டிருந்த என் நதிகள் வற்றலாய் வறண்டுகிடக்கின்றன 

பசுமை நிறைந்த என் காடுகள் இப்பொது உயிரற்றப் பாலைவனங்களாய் 

உலர்ந்துகிடக்கின்றன 

செழிப்புடன் வளர்ந்த என் மரங்கள் தீப்பற்றி எரிகின்றன 

என் கடல்களில் நீந்திய மீன்கள், பிளாஸ்டிக்கில் சிக்கித் திணறி மிதக்கின்றன 

 

நெருப்பாய்க் கொந்தளிக்கும் என் ஆத்மாவில் எண்ணையை ஊற்றிவிட்டாய் 

என்னைக் காயப்படுத்திவிட்டாய்; என் சாபத்தைப் பெற்றுவிட்டாய்

 

கடுமையான வறட்சியின்போது, ஆகாயத்தைப் பார்த்து மழையிற்காக வேண்டுகிறாய் 

வெயில் உன்னைச் சுட்டெரிக்கையில், வெப்பம் தாங்காமல் மயங்கிவிழுகிறாய்

 

கண் கெட்டப் பின் சூரிய வணக்கம் எதற்கோ? 


************************

தொப்புள்கொடி அறுத்தோம்

விஷ்ணு (402)

 

பிணமாகும்முன்னே சிறியனச் சரியெனச் செய்தவனின் 

உணர்ச்சியில் நன்றி ஊனமாகி - இகழ்ச்சியால் 

கனம் தலைக்கொண்டு அன்னையை அடிமையாக்க

அனல்வீசும் காற்றில் ஒற்றை மரமும் அசையவில்லை

 

பணமே நிரந்தரம் எனும் மாயையில் தவித்தவனின் 

குணவரங்கள் மாசுக்காற்றோடு காற்றாகக் கறைந்து 

வனத்திலுறை ஜீவன்களைத் துடைத்தொழித்து வீடுகட்ட 

தனவந்த மரங்களின் ஒடிந்தகைகளில் நாடியில்லை 

 

இரணங்கள்நிறை அன்னையின் மேனியிலே, நெஞ்சினிலே 

மனிதஇனம் தற்காலிகமாய் தழைக்கச் செய்யும்குற்றங்களால் 

சினக்கனலெழுந்து அவள்மக்களே அவளுக்கு எதிரியாகிவிட்டனரே - இன்று

பாசமணம் நீசமடைந்து போகின்றதே நமதுலகில். 


************************


மரம்

தேஜஷ்வி (402)

 

உயிர் கொடுத்தாய்

உயிருக்கெல்லாம் நிழல் கொடுத்தாய்

உண்ண கனி கொடுத்தாய்

உத்தம புத்தருக்கோ ஞானம் கொடுத்தாய்

ஊருக்கெல்லாம் மழை கொடுத்தாய்

கொடுத்து கொடுத்து சலித்தாயோ?

 

உனக்கு மனிதன் மரணத்தை கொடுத்தான்

உன் மரணம் தன் மரணம் என அறிந்தான்

உடனே விழித்தான், பறவை போல் செயல்பட்டான்

உன் விதையால் விதைபந்தை தயாரித்தான்

ஊரூராய் உருட்டிவிட உறுதிக்கொண்டான்

கொடுத்தான், கொடுத்தான், தன்னுயிர் காக்க சலிப்பானோ?

 

************************

 

தூய காற்று எங்கே?

ஸ்ருதி அ. (403)

 

காற்றே, தூயக் காற்றே

நீ எங்கே சென்றாயோ

மக்கள் கக்கிடும் புகையினால்

நீ ஒளிந்துகொண்டாயோ

 

அலைகளின் புகைப் போதாதோ

மனிதனும் புகைப் பிடிக்கிறான்

நெல்லை விதைக்க தீயைக்கொண்டு

காட்டை வதைக்கிறான்!

 

காற்றே, தூயக் காற்றே

நீ மீண்டும் வருவாயா?

மக்கள் திருந்தினால்

நீ திரும்பி வருவாயா?


************************

 

இயற்கையின் குமுறல்

காருண்யா (403)

 

இலையுதிர் முடிவு, சிலுசிலுவென்ற தென்றலின் ஆரம்பம் 

இப்பொழுது காடெங்கும் ஒலிக்கின்றது ரம்பம் 

 

முதற்பனி விழும் நேரம், சொர்க்கம் போல் தோன்றும் 

இப்பொழுது நிற்காமல் சிந்தும் வானின் கண்ணீர், ஏன் என்று தோன்றும்

 

குளிரால் மூக்கின் நுனி சிவக்க, கீழமர்ந்திருந்த மரத்தின் காம்பு நுனி முறியும் 

இப்பொழுது தொழிற்சாலைகள் அதிகரிக்க, வனக்குருவிககளின் பாடல் குறையும்

 

கடலின் அலைகள் இதமாக வெள்ளை மணலில் நுறைய, மீன்கள் சூரியனைப் பிடிக்க 

முயன்றன 

இப்பொழுது, மணலில் குப்பையும் கூளமும் நிறைய, அதே மீன்கள் வாழ வீட்டை 

தேடுகின்றன 

 

கண்கள் குளிரவும் நெஞ்சம் நெகிழவும் பார்ப்பது, பறவைகள் நீந்தும் முடியா நீல 

எல்லையையும், பச்சை இலைகளையும்  

இப்பொழுது ரசிப்பது, அதே அதிசயத்தை மீண்டும் மீண்டும் காண்பிக்கின்ற இயந்திர 

பெட்டிகளை

 

எங்குச் சென்றன இந்த மெல்லிய காற்று, இதமான அலைகள், ரகசிய வனங்கள்

இப்பொழுது அவற்றைக் காப்பாற்றத் தேவையானது நமது எண்ணங்கள் 


************************ 

 

மனித நேயம்

ரச்சனா (403) 

 

எங்குப் பார்த்தாலும் கருமையான புகை மூட்டம்

அங்குமிங்கும் பாயும் பரிதாபமில்லாதத் தீப்பொறிகள்

அச்சத்தால் அங்கிருந்து தப்பிக்க முயலும் விலங்குகள்

சில வினாடிகளுக்கு முன் பச்சைப் பசேலென்று இருந்த காடுகள்

இக்காட்சிகளைச் செய்தித்தாள்களில் பார்க்கிறோம்

ஆனால், நாம் மனமாற முயல்கிறோமா?

 

அசுத்தமானக் காற்றினால் நோய்கள் பரவுகின்றன

கடும் நோயால் அப்பாவியான மக்கள் மாள்கின்றனர்

இருந்தாலும் இரக்கமில்லாத மனிதர்கள் சுயநலம் கருதி

சுற்றுபுறச் சுகாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர்

காற்றுத் தூய்மைக் கேடு அதிகரிக்கும்போது

மனிதனுக்குள்ள மனித நேயம் குறைகிறது 


************************ 


சமுத்திரத்தின் குரல்

சுபத்திரா மணிகண்டன் (403) 

 

பூமியின் பல கறைகளை என்னுடைய கரங்களால் துடைத்தேன்

 

பூமியின் பல விலங்குகளுக்கு உயிர் கொடுத்து வாழ்வித்தேன்

 

பூமியின் பல மனிதர்களை என் இரு விழிகளாய்க் காத்தேன்.

 

பூமியின் பல தளங்களை என் தூய மனதால் புனிதமாக்கினேன்.  

 

 

வாடகை வாங்காமல் ஜீவராசிகளைக் காத்தருள்கிற ஒரே மனையை இரக்கமில்லாமல் 

அழித்தாய்!

யமுனை, கங்கை கலந்த புனித மங்கை மீது ப்ளாஸ்டிக் கழிவுகளை எறிந்தாய்!

 

கரையோரக் கட்டடங்கள் கட்டி உன் உயிர் நாடியை நீயே வெட்டினாய்!

 

கரியமில வாயுவை இஷ்டம் போல விடுவித்து, வெப்பத்தால் என்னைச் சுட்டெரித்தாய்!

 

 

தரையோடுத் தரையாய்த் தவழ்ந்து வந்து காப்பாற்றக் கெஞ்சியபோது -  என் வார்த்தை மீது 

மௌனம் வைத்தாய்

 

எரிமலையாய்க் குமுறி நகரங்களை அழித்துப் பார்த்தேன், வற்றி, நீரின்மையின் வலியைப் 

புரியவைத்துப் பார்த்தேன் - ஒரே நாளில் போதனையை மறந்தாய்

 

துக்கங்களைச் சொல்ல யாருமில்லாமல் கண்ணீரால் தண்ணீரைக் கரிக்க வைத்தேன்

 

என் இறப்பிற்கு பிறகு நீ தற்கொலைக்கு ஆளானாய் என்பதை உணரவைப்பேன்



************************


ஊழ்வினையோ ஊழியின் வினையோ 

ஷ்ரேயா ராமன் (403) 

 

அழகானக் காலை, குளிரானக் காற்று,

மேகம் மூடிய வானம், முகம் காட்டத் துடிக்கும் சூரியன்

நீல வானில், பறவைகள் பறந்துச் செல்லும் நேரம்

மனதை கவரும் கண்கொள்ளாக் காட்சி இது

 

பூமித் தாயே, எங்களை எப்போதும் உன் கருவறையில் சுமக்கிறாய்

யார் எதை கேட்கிறார்களோ அதை அப்படியே தருகிறாய்

நீ எப்போதும் தேசத்தின் அணிகலனாக விளங்குகிறாய்

ஆனால், மனிதனோ தன் ஆசை, பேராசை தீர என்னென்னவோ செய்கின்றான்

 

புனிதமான நீரை சாக்கடை நீர் ஆக்குகிறான்

இயற்கை வளமுள்ள காடுகளை எல்லாம் தன் இஷ்டத்திற்கு அழிக்கிறான்

இப்பிரச்சினையில் அவனுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை

இவ்வழியே தொடர்ந்தால், மனித குலம் அழிந்துப் போய்விடுவது தவிர்க்க முடியாத விதி ஆகும் 

 

 ************************ 


அழிவை நோக்கும் மனிதனே!

ஹர்ஷ்னி (405) 

 

காய்கனிகளை இலவசமாக வழங்கும் வள்ளல்களை 

மனமின்றிக் கொல்லும் அரக்கனே

 

நம் பூமியை எரித்து ஆகாயத்தின் அழகிய நீல சேலையைக் 

கறையாக்கும் சதிகாரனே

 

நம்மைப் பாராட்டித் தாலாட்டி வளர்த்த தாயை 

நிலத்தில் விழுந்த மீன்போல்  துடிக்கவைக்கும் துரோகியே

 

நம் சகோதர சகோதரிகளான விலங்குகளின் வீடுகளைச் 

சுடுகாடாகிய சுயநலவாதியே 

 

பிளாஸ்டிக் பையைச் சமுத்திரத்தில் அலட்சியமாக வீசிக் கடலினங்களைத் 

தூக்குக்கயிற்றில் சிக்கவைக்கும் சண்டாளனே

 

கடலைக் களங்கப்படுத்தும்; மரங்களை மரிக்கச் செய்யும், 

மண்ணை மலடாக்கும் முட்டாள் மனிதனே விழி!

 

இல்லையேல், நீயே உன் அழிவுக்குக் காரணமாவாய்!


************************


அம்மா

கரிஷ்மா (405)

 

தாய் என்பவள் சிம்மாசனத்தில் அமர வேண்டியவள்; பாசத்தில் சிந்துவாள் 

உதிரத்தையும் கண்ணீரையும்   

 

அவளை விட உயர்நிலையில்லை, அவள் கொடுக்கும் அன்பைவிட உயர் தங்கமில்லை. 

 

குழந்தையின் முதல் வார்த்தை அம்மா; பார்க்கும் முதல் முகமானது அம்மா; கேட்கும் முதல் 

இருதயம் அம்மா.

 

பிள்ளைமீது தூசி பட்டால் கூட உலகையே எதிர்த்துப் பேசுவார், நேரில் நிற்கும் 

தெய்வம்தான் என் அம்மா

 

ஆனால், இவ்வுலகில் அனைவரது முதல் மற்றும் கடைசி அடிகளைக் கண்ட ஒருத்தி, 

எல்லோரின் தாய், இருக்கிறாள். 

 

பூமி மாதா என வணங்கும் அம்மா, நம்மை ஒன்பது நிலாக்களாகச்  சுமந்தவள்

போன்றில்லையா? 

 

ஒவ்வொரு உயிர்க்கும் உயிர் கொடுத்து, ஒவ்வொருவரின் பாதங்களையும் தன் 

தோள்களின்மீது சுமக்கும் தாய் அவள். 

 

உலகிலேயே உயர்ந்த நிலை இவளுக்குத்தான், ஏனெனில், இவள் இல்லையென்றால், 

உலகே இல்லை.  

 

தாயின் புனித நிலத்தைப் பணத்திற்காக மாசுடுத்தி, அவளின் கடல்களைக் கணக்கின்றி 

பிளாஸ்டிக்கால் நாசபடுத்தியது சரியா?

 

எதையும் காண முடியாத அளவிற்கு அவளின் காற்றை அழுக்காக்கி அவள் 

கொடுத்ததையெல்லாம் கண்ணீரின்றி அழித்தது சரியா? 

 

தாய் நடக்கும் மண்ணை வணங்கும்போது, தாயாக இருக்கும் மண்ணை அவமதித்துத் தலை நிமிர்ந்து நிற்கிறோம்;

 

பூமி மாதா, உங்களின் குழந்தைகள் உங்களுக்குத் துரோகம் செய்துவிட்டோம்.

************************

 

செவிடன்

ஸ்ருதி மு. (405)

 

வானம் வரமாக சிந்தும் நீர் துளிகள்

விவசாயியின் வியர்வைதத் துளிகளுடன் சேரும்போது

வறண்ட பூமியிலும் உயிர் துளிர்க்கின்றது.

 

அத்துளிகள் மண்ணின் மீது சிந்தும் அவ்வேளையில்

கடலலைகளின் மெல்லிய உறுமல், அடர்ந்த காட்டில் காற்றின் உரசல்

                  

செவிடான மனிதன் செவிகளில் படவில்லையே!

செம்மையான எழில்கொண்ட இயற்கையின்மீதுள்ளப் பொறாமையினால்

சிதைக்கிறான் அவன் இயற்கையின் பேரழகை

 

பூமிக்கு வரமாகக் கொடுக்கப்படும் மழைநீர்

சிமெண்ட் தரையில் பட்டு, கால்வாயில் ஓடும் இயற்கை அன்னையின் கண்ணீர்

 

காடுகளோ தரைமட்டமான பாலைவனங்கள்கடல்களோ மனிதனின் குப்பை மேடுகள்

கண்டு கதறுகிறாள் இயற்கை அன்னை

 

ஆறரிவு கொண்டவனாம் மனிதன்

ஆனால் அவனுக்கோ அன்னையின் அழுகுரல் கேட்கவில்லையே?


************************


பூமித்தாயின் நவரத்தின மாலை

மஹிமா (405)

 

வைரமே, உன்னிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.

செல்லம், உன் அம்மாவை நாசப்படுத்துகிறாய், நஞ்சை நரம்பில் ஊற்றுகிறாயே,

என் வாயில் பிளாஸ்டிக்கை அடைத்து முழுங்க வைக்கிறாயே,

நீலமும் பச்சையுமாய் இருந்த என்மீது பவள ஆறுகளை ஓடவிட்டாயே

வைடூரியமே, உன் சகோதரர்களை வேட்டையாடி கொல்கிறாயே

முத்துமழை பெய்யும் இடத்தில் அமிலமழை பெய்யவைத்துவிட்டாயே

மரகதமென திகழ நினைத்த என்னை மரணப் பிடியில் தவிக்க வைத்தாயே

புஷ்பமும் ராகமும் என் வாழ்வில் என்றுதான் திரும்ப வருமோ… 

கோமேதகமே, உன்னை என் வயிற்றில் சுமந்து செல்லமாக வளர்த்தேனே

பாலும் பழமும் அள்ளி அள்ளி அளித்தேனே

உன்னை ஒன்றே ஒன்று மட்டும் கேட்கிறேன் - 

உன்னை நான் நேசிக்கின்ற அளவில் ஒரு துளிகூட

திரும்ப நேசித்தால் போதுண்டா. போதும்.

அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாயா?