Saturday, November 13, 2021

எந்த நிகழ்வுக்கும் காலதாமதமாகச் செல்லும் பழக்கம் உன்னிடமிருந்தது. ஆனால், அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தால் அப்பழக்கத்தை நீ மாற்றிக்கொண்டு விட்டாய். அந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளோடும் உணர்வுகளோடும் விளக்கி எழுதுக - சிவமுத்து நிகித வர்ஷினி (303) 2021

சிவமுத்து நிகித வர்ஷினி (303) 2021 'ரிங்! ரிங்!' என்ற ஒலி என்னை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பியது. ஒரு நொடிக் கூட தாமதிக்காமல் நான் துயில் எழுந்து பள்ளிக்குக் கிளம்பத் தொடங்கினேன். சில வாரங்களுக்கு முன் நேர்ந்த சம்பவம் என் வாழ்வைப் புரட்டிப் போட்டதோடு, என்னை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியிருப்பதை உணர்ந்து வியந்தேன். என் எண்ண அலைகள் பின்னோக்கிச் சென்றன… அன்று என் பாட்டியின் எழுபதாவது பிறந்தநாள் விழா ஆரவாரத்துடன் நடைபெறவிருந்தது. என் அப்பா என்னிடம் விழாவிற்கு மாலை ஆறு மணிக்கு வரச் சொன்னார். நானோ 'எதற்குப் பாட்டியின் பிறந்தநாளுக்கு அவ்வளவு சீக்கிரமாகப் போக வேண்டும்’ என்று எண்ணினேன். ஆகையால், நான் கணினி விளையாட்டுகளை ஆசைதீர விளையாடிவிட்டு, காலதாமதமாக மாலை எட்டு மணிக்குப் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றேன். அங்கு என் பெற்றோர் கோவைப் போல் சிவந்த முகத்துடன் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் கண்கள் கோபக் கனல்கள் வீசின. நான் மௌனமாக என் பாட்டியிடம் சென்று பிறந்தநாள் வாழ்த்துக் கூறினேன். எப்பொழுதும் சூரியனைக் கண்டத் தாமரையைப் போல் மலர்ந்திருக்கும் என் பாட்டியின் முகம் வாட்டமாக இருந்தது. என் பாட்டியின் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்த்தன. என் பாட்டி தன் கண்களைத் துடைத்துவிட்டு, ஒரே வார்த்தையில் 'நன்றி' என்று கூறிவிட்டார். என் அப்பா என்னிடம் வந்து, “மாரா! நீ காலதாமதமாக வந்து பாட்டியின் மனதைக் காயப்படுத்திவிட்டாய். உன் பாட்டி எவ்வளவு ஆவலுடன் உனக்காக காத்திருந்தார் தெரியுமா? நீயோ கேக் வெட்டிய பிறகு ஆடி அசைந்து வருகிறாய். எல்லா நிகழ்வுகளுக்கும் காலதாமதமாகச் செல்லும் உன் பழக்கம் ஒரு நாள் உன்னையே அழித்துவிடும்!” என்று கூறினார். என் அப்பா நான் தாமதமாக வந்ததற்காக ஏன் அவ்வளவு கோபப்பட்டார் என்று எனக்கு அப்பொழுது புரியவில்லை. அதே வாரத்தில், என் நண்பர்களைக் குழு ஒப்படைப்பைச் செய்ய சனிக்கிழமை காலை பத்து மணிக்குச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், நான் நண்பர்கள் தானே என்ற மெத்தன சிந்தனையினால், விடுமுறை என்பதால் அதிக நேரம் தூங்கிவிட்டு, ஆமை வேகத்தில் நண்பர்களைக் காணச் சென்றேன். நான் என் நண்பர்கள் கூடியிருந்த நூலகத்தை அடையும்போது மணி பதினொன்று. என் நண்பர்கள் அதிக எரிச்சலுடன் காணப்பட்டனர். அவர்களின் முகத்தில் ஒரு துளி மகிழ்ச்சிகூட இல்லை. என் நண்பன், மாதவன், “மாரா, நாங்கள் அனைவரும் உனக்காக ஒரு மணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறோம். உனக்கு ‘காலம் பொன் போன்றது’ என்று தெரியாமல் இருக்கலாம், ஆனால் எங்கள் அனைவருக்கும் தெரியும்.” என்று எண்ணெய்யில் போட்ட கடுகைப்போல் வெடித்தேன். நான் அவனிடம், “காலதாமதமாக வருவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? கோபம் உடம்பிற்கு நல்லதில்லை மாதவா.” என்று பதிலளித்தேன். பின்னர் என் நண்பர்களுடன் குழு ஒப்படைப்பைத் தொடங்கி, மாலை நான்கு மணிக்குதான் ஒப்படைப்பை முடித்தோம். என் நண்பர்கள் அந்நேரம் முழுவதும் ஒரு தருணத்தில் கூட என்னிடம் முக மலர்ச்சியுடன் பேசவில்லை. ஆனால், நான் இச்சம்பவத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை. பின்னர், என் அத்தை அவரின் வீட்டிற்கு என் குடும்பத்தினரை இரவு ஏழு மணிக்கு விருந்திற்காக அழைத்திருந்தார். நான் என் அத்தை வீடுதானே என்று எண்ணி, மெதுவாக கிளம்பி, அவர் வீட்டை இரவு எட்டு மணிக்கு அடைந்தேன். அங்கு என் அத்தை தட்டுகளையெல்லாம் கழுவ தொடங்கிவிட்டார். ஆனால், எனக்கென்று ஒரு தட்டில் உணவை வைத்திருந்தார். என் அத்தையின் முகம் கோபமும் வட்டமும் கலந்த கலவையாக இருந்தது. அவர், “மாரா, நான் உனக்காக உணவு எடுத்து வைத்துள்ளேன். ஆனால், நீயோ என் அழைப்புக்கு மரியாதை கொடுக்காமல், இவ்வளவு தாமதமாக வருகிறாய். இன்னும் காலதாமதமாக எல்லா இடங்களுக்கும் செல்லும் பேய்க்குணம் உன்னிடம் உள்ளதே!” என்று வருந்தினார். நான் உணவு கிடைத்தால் போதும் என்று என் அத்தையின் வார்த்தைகளைச் செவிமடுக்கவில்லை. அன்று எப்பொழுதும் போல் பள்ளிக்குச் செல்ல தாமதமாக ஏழு மணிக்கு கண் விழித்தேன். பள்ளி ஏழு பதினைந்திற்குத் தொடங்கியது. அப்போதுதான் எனக்கு ஒன்று நியாபகத்திற்கு வந்தது. என் முகம் வெளிறிப்போனது. என் இதயம் 'டப் டப்' என்று அதிவேகமாக துடித்தது. என் கைகள் வெடவெடக்க ஆரம்பித்தன. என்னிடம் எப்போதும் காலதாமதமாகப் பள்ளிக்குச் செல்லும் பழக்கம் இருந்ததால், அன்று ஏழு மணிக்குத் தொடங்கிய தேசிய நிலையிலான பரிச்சை நடைபெறுவதையே மறந்துவிட்டேன். நான் மின்னல் வேகத்தில் தயாராகிய பிறகு பள்ளிக்கு ஓடிச் சென்றேன். என் பெற்றோர் காலையில் நேரத்திற்கு வேலைக்குச் சென்றுவிட்டதால், என்னால் அவர்களிடம் உதவி கேட்க இயலவில்லை. நான் என் நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளைத் துடைத்தவாறு, ஓடியதினால் கலைந்த சீருடையுடன் என் ஆசிரியரின் முன் நின்றேன்.அவர் என்னை பார்த்து முகம் சுழித்தவாறு, “மாரா! எத்தனை முறை உன்னிடம் எல்லா நிகழ்வுகளுக்கும் காலதாமதமாகச் செல்லும் பழக்கத்தை மாற்றிக்கொள் என்று அறிவுரை கூறியுள்ளேன். இப்பொழுது உன் நிலையைப் பார்! காலதாமதமாக வருபவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க இயலாது. இதுதான் உன் மதிப்பெண்!” என்று காது கிழியும் அளவிற்கு சத்தமிட்டு, பூஜியம் என்று எழுதப்பட்டிருந்த தாளை என்னிடம் நீட்டினார். ஒரு கணம் என் இதயம் நின்றுவிட்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. துக்கம் என் தொண்டையை அடைத்தது. என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. என் மீது இடி விழுந்ததைப் போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. என் எதிர்காலத்தை நானே அழித்துவிட்டேன் என்று உணர்ந்தபோது என் கண்கள் அகல விரிந்தன. அன்றுதான் நான் ‘மணியோசை வரும் முன்னே, யானை வரும் பின்னே’ என்பதற்கான அர்த்தத்தை உணர்ந்தேன். எத்தனை பேர் காலதாமதமாக எல்லா நிகழ்வுகளுக்கும் செல்லும் பழக்கத்தை ஒழிக்க அறிவுரை கூறினார்கள். ஆனால், இன்று இப்பழக்கம் என் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிவிட்டது. அன்று காலதாமதமாகச் செல்வதால் உறவுகள் விரிசல் அடைவதோடு நானும் அழிந்து விடுவேன் என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். ஆனால், நான் வீணாக்கிய காலம் திரும்பவில்லையே. ‘மாரா’ என்று என் அம்மா அழைத்து என் எண்ணத்தை இன்றைக்குத் திருப்பினார். நான் அந்த நாளிலிருந்து ஒரு பொழுதும் எங்கேயும் தாமதமாகச் செல்வதில்லை.

No comments: