Friday, April 16, 2021

சொற்பொழிவு - பேச்சுப் போட்டிகளுக்குச் சென்ற மாணவர்களுக்கு எழுதிக்கொடுத்த வரைவு

   தலைப்பு: சோதனைகளை வென்று சாதனைகளைப் படைப்போம் 

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் ________________ . நான் --------- உயர்நிலைப் பள்ளியைப் பிரதிநிதித்துப் பேசுகிறேன். இந்தச் சொற்பொழிவுக்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு  சோதனைகளை வென்று சாதனைகளைப் படைப்போம் என்பதுதான். 

   ஒரு சராசரி மாணவனுக்குத் தேர்வுதான்  சோதனை! இணையத்துக்கு அடிமையாகிப் போனப் பதின்ம வயதுப் பிள்ளையைத் திருத்தி மீட்பது பெற்றோருக்குப் பெரும் சோதனை. அண்மைய ஆண்டின்போது ஏற்பட்ட சார்ஸ் நம் நாட்டு மருத்துவ உலகுக்கு ஒரு சோதனை. 

சோதனைகள் இல்லாத வாழ்க்கை எங்கும் எப்போதும் இருந்ததில்லை. தருமனுக்குத் துரியோதனனின் சூதாட்ட அழைப்பு மூலம் சோதனை வந்தது. தருமம் முதலில் தோற்றது. இறுதியில் தருமமே வென்றது. அரியணை ஏற இருந்த ராமனுக்குக் கூனியால் தூண்டப்பட்ட கைகேயினால் சோதனை வந்தது. காட்டுக்குப் போனான். மனைவியை இழந்தான். எண்ணற்ற சோதனைகளயும் வேதனைகளையும் அனுபவித்தான். ஆனாலும், இறுதியில் தருமனும் சரி, இராமனும் சரி தமக்கு நேர்ந்த சோதனைகளை வென்றார்கள், சுடச்சுடரும் பொன்போல் திகழ்ந்தார்கள். இவ்விருவருக்கும் ஏற்பட்டவை  தனிமனித வாழ்வு சம்பந்தப்பட்டவைதான்.  

ஆனால், 1997 இல் நாம் நாடு பொருளியல் மெதுவடைதல் என்னும் சோதனையைச் சந்தித்தது. ஆனால், நம் நாட்டு அரசாங்கம், தொழிலதிபர்கள், ஊழியரணி என முத்தரப்பும் கை கோர்த்தன ;  திட்டங்களை வகுத்துச் செயல்பட்டன; நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்தன. மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள். மீண்டும் நமது பொருளியல் வளர்ச்சி பீடு நடை போடத் தொடங்கிற்று. 

அடுத்ததாக மீண்டும் இப்போது 2009 இல் ஒரு பொருளியல் வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டிய நிலை. ஆனால், இப்பொருளியல் வீழ்ச்சி ஒரு சுனாமியைப் போல் உலகெங்கும் பல நிறுவனங்களைச் சுருட்டிப் போட்டுவிட்டது. உலக அளவில் பல நாடுகள் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. எனவே இம்முறை ஏற்பட்டிருக்கும் பொருளியல் வீழ்ச்சி சற்றுக் கடுமையானது. அது மக்களுக்குக் கொடுமை விளைவிக்கக் கூடும். ஆனால், கவலை வேண்டாம். ஏனென்றால், நம் நாட்டு அரசியல் தலைவர்கள், 

 “வருமுன் காவாதான் வாழ்க்கை எரி முன் 

  வைத்தூறு போல் கெடும்” என்பதை நன்கு உணர்ந்தவர்கள்.  

   அதனால், அவர்கள் தொலைநோக்கோடு சில நாடுகளை ஏற்கெனவே அணுகிப் பலதரப்பட்ட வாய்ப்புகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்க அரசாங்கம் வேறு வகையிலும் இந்தச் சோதனையை முறியடிக்க முயல்கிறது. அதாவது அவசர காலத்துக்கான நிதி வைப்பிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்துப் பயன்படுத்த இருக்கிறது. அதன்காரணமாகப்  பல வேலை வாய்ப்புகள் உருவாகும். அதனால் குடும்பங்கள் மீண்டும் சந்தோஷக் காற்றைச் சுவாசிக்கும். இவ்வழியில் பொருளியல் சரிவு என்னும் சோதனையைச்  சமாளித்து  நம் நாடு மீண்டு வரும் என்பது உறுதி.  

   பொருளியல் சரிவு காரணமாகச் சுற்றுப்பயணிகளின் வருகை இவ்வாண்டு வெகுவாகக் குறைந்துவிட்டது. இது நமக்கு இன்னொரு சோதனைதான். அதற்காக நாம் அஞ்சவோ அரட்டவோ தேவையில்லை. ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பார்கள். அதுபோல, அரசாங்கம் ஏற்கெனவே எடுத்த முயற்சியின் காரணமாக ஒருங்கிணைந்த   உல்லாசத் தளம் இவ்வாண்டின் இறுதியில் செயல்படத் தொடங்கும். நம்நாட்டுக்குச்  சுற்றுப்பயணிகளை ஈர்க்க  அது ஒரு புத்தம் புதுக் கவர்ச்சியாக விளங்¢கும். அதனால், பொருளியலுக்கு அது ஒரு ஊக்குவிப்பாக இருந்து உவகை தரும். ஓடாகத் தேய்ந்துபோன பிறைதான் வட்ட நிலவாக  நாளும் வளர்கிறது. மறைகின்ற சூரியன் தான் மறுநாள் காலையில் மீண்டும் புத்துணர்ச்சியோடு புறப்பட்டுவருகிறது. எனவே பொருளியல் சரிவு என்னும் சோதனையைச் சிங்கப்பூரர்களாகிய நாம் ஒன்றுபட்டு வெல்வோம். பொருளியல் வளர்ச்சியில் சாதனை படைப்போம். நன்றி வணக்கம்.  ( கும்பலிங்கம் உத்தமன்) 


************************************************************************

                      தலைப்பு:     விழிபோல் மொழி காப்போம் 


அ             அனைவருக்கும்  வணக்கம். என் பெயர் _____________________. நான்

­­­­­­­­­____________ உயர்நிலைப் பள்ளியைப் பிரதிநிதித்துப் பேசுகிறேன். இந்தச் சொற்பொழிவுக்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு விழிபோல் மொழி காப்போம். என்பதுதான்.

எந்தப் பெற்றோரும் குழந்தைகளை என்மூக்கே, என் நாக்கே என்று கொஞ்சமாட்டார்கள், கண்ணே கற்கண்டே என்று தான் கொஞ்சுவார்கள். ஏன்தெரியுமா? உடலுறுப்புகளில் விழிதான் அழகைப் பார்க்க, பருக  உதவுகிறது. அதுமட்டுமா! விழியே ஒரு அழகுதான் மானுடத்துக்கு. அதனால்தான் கவிஞர்கள் மான்விழி, மை விழி, சேல்விழி, வேல் விழி, வாள் விழி என்று விழியைப் பலபட விளித்துப்போந்தார்கள். இன்னும் சொல்லலாம். சொன்னால் என் வாய் வலிக்கும். பேச்சில் பொருட்குற்றம் என நீதிபதிகள் முகம் சுளிப்பார்கள்.  

 

சரி ஏன் மொழியை விழியைப் போல் காக்க வேண்டும். இப்போது அதற்கு என்னவாகிவிட்டது? என்று ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். நியாயம்தான். அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்டை வீட்டார் வேற்று மொழிக்காரர். பள்ளியில் பக்கத்திலிருந்து படிப்பவரோ பிற இனத்தவர். வேலை இடத்திலும் இதே நிலை. எனவே, தமிழ்ப் புழக்கம் குறைந்துவந்துவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் புகல்கின்றன. மக்களின் நெஞ்சு தமிழ் பேச  நினைக்கிறது. ஆனாலும் நா தமிழை உச்சரிக்க நாணுகிறது, நயம்பட நம் தமிழ் இருக்குமோ இருக்காதோ என்று நினைத்து. விளைவு என்ன? வீட்டில், விளையாட்டில், கட்டிலில், தொட்டிலில் எங்குமே மட்டாகவே ஒலிக்கிறது மதுரத் தமிழ்.

 “யாமறிந்த மொழிகளிலே இனிதாவது எங்கும் காணோம்” என்றார் பாரதியார். என்று மேடையில் முழங்கும் பிள்ளைகளும் சரி, அதைப் பேச்சுப் போட்டியில் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தவரும் சரி. ம்ம்... ‘ஒரு நாள் கூத்துக்கு மீசைய வச்சான் மேடையிலே’ என்பது போல அன்றோடு மறந்துவிடுகிறார்கள். இந்நிலை மாறி, தமிழுக்கு நன்னிலை உருவாகத்தான் பல்லாற்றானும்  கல்வி அமைச்சு முயன்று வருகின்றது.

 

அக்காலத்தில் மன்னர்கள்,  தமிழில் பொருள் நிறைந்த படைப்புகளைப் புனைந்த புலவர்களைப் போற்றினார்கள். புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் தந்தார்கள். மெய்சிலிர்க்க மெச்சினார்கள். அதன் பயனாக,  பலனாக உலகம் போற்றும் சங்க  இலக்கியங்கள் கிடைத்தன.  காலத்தை வென்று வாழும் திருக்குறள் முதலான நீதி இலக்கியங்கள் கிடைத்தன. இந்நூல்களின் அருமை பெருமைகளை இன்றைய இளையரும் வருங்காலத் தலைமுறையினரும் அறிந்துகொள்ள வேண்டும். அவை உணர்த்தும் தமிழரின் பண்பாட்டுக்கூறுகளை, பாரம்பரியங்களை,  விழுமங்களை, உணர்ந்து பின்பற்ற வேண்டும். உலகம் போற்றும் உன்னத சமுதாயமாகத் தமிழ்ச் சமூகம் வருங்காலத்திலும் விளங்க வேண்டும். இவையெல்லாம் நடந்தேற தமிழ்மொழியை விழிபோல் போற்ற வேண்டும்; புகழ வேண்டும்.  இல்லையென்றால்,  விழி இழந்த மனிதன் எத்தகயை இன்னல்களை அனுபவிப்பானோ அதுபோல, மொழியைத் தொலைத்துவிட்ட மனிதன் துன்பப்படுவான். துயரப்படுவான். அவன் தன் கலாச்சாரம் தெரியாமல், தனக்கென்று அடையாளம் இல்லாமல் அவதிப்படுவான்.    

 

சிங்கப்பூரில் தமிழை  வாழும்மொழியாகத் தொடர்ந்து வைத்திருப்பதில் அரசு தன் பங்கை ஆற்றிக்கொண்டு வருகிறது. தமிழ் முரசில் அன்றாடச் செய்திகளைத் தமிழில் தாங்கி மலரச் செய்திருக்கின்றது.  வானொலியில் இருபத்து நான்கு மணிநேரமும் தமிழை மெல்லிசையாய் ஒலிக்கச் செய்திருக்கிறது. தொலைக்காட்சியில் நெஞ்சை அள்ளும் நிகழ்ச்சிகளைப் படைக்க உதவியும் ஊக்கமும் அளித்துவருகிறது. சமூக அமைப்புகளும் போட்டிகள், சொற்பொழிவுகள், குடும்ப ஒன்று கூடல்கள் முதலான பல நடவடிக்கைகளை நடத்துகின்றன;  மக்களைத் தமிழ் மழையில் நனைவிக்கின்றன. மக்கள் மனதில் தமிழ் உணர்வைத் தழைக்கச் செய்கின்றன. இவற்றையெல்லாம் நாம் உணர்ந்து நாளும் வாய் மணக்க, நம் வாயிலும் மணக்கத் தமிழ் பேசுவோம்.  தமிழை நம் விழிபோல் காத்து வாழ வைப்போம். “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.   ( கும்பலிங்கம் உத்தமன்)



கதாக் காலட்சேபம்

 

    அறிமுகம் 

 2002 ஆம் ஆண்டு யூசூன் டவுன் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தபோது. அப்பள்ளியில் தமிழ் பயின்ற மாணவர்களுக்குத் தமிழ்மொழி மற்றும் கலாச்சார முகாம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியபோது சிரவணன் கதையைக் கதாக்கலாட்சேபமாக எழுதி, நண்பர்கள் திரு மோகன் மற்றும் ஞானசேகரனுடன் படைத்தேன். சிரவணன் கதை சிரவணன் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனது தாயும் தந்தையும் மிகவும் வயதானவர்கள்.அத்துடன் இருவரும் கண் தெரியாதவர்கள்.தங்களின் மகனின் உதவியில்லாமல் எந்த ஒரு வேலை யையும் செய்ய இயலாதவர்கள். நடக்க இயலாமலும் கண் தெரியாமலும் தவிக்கும் தன் பெற்றோருக்கு ஊன்றுகோலாகவும் கண்ணாகவும் இருந்தான் சிரவணன். இந்நிலையில் அவர்களுக்குத் தொலைதூரத்தில் உள்ள புனித நகரத்துக்குச் சென்றுவர வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. இதை அறிந்த சிரவணன் இரண்டு பெரிய பிரம்புத் தட்டுகளில் இருவரையும் அமரவைத்து அத்தட்டுகளைத் தராசு போல் அமைத்து அதைத்தன் தோளில் தூக்கிக் கொண்டான். வாலிப வயதை நெருங்கியவன் ஆனதால் சிரவணன் சிரமமின்றி தன் பெற்றோரைச் சுமந்து சென்றான். வெகு தூரம் நடந்து வேறு ஒரு காட்டுப் பகுதியை அடைந்தனர். சிரவணனின் தயார் நீர் அருந்தக் கொண்டுவருமாறு கூறினார். தந்தையாரும் தாகமாக உள்ளது எனக்கூறவே இருவரின் தாகத்தையும் நீக்க எண்ணினான். குடுவையில் நீர் காலியாக இருந்ததால் குளமோ கிணறோ அருகில் உள்ளதா எனத் தேடிச் சென்று நீர் கொண்டு வருவதாகக் கூறினான் சிரவணன்..விரைவில் வந்துவிடுமாறு கூறி அனுப்பிவைத்தனர் அந்த வயோதிகத் தம்பதியர். அவர்களை வணங்கி விடை பெற்றுப் புறப்பட்டான் சிரவணன். அந்தப் பகுதி அயோத்தி நகரைச் சேர்ந்தது. அயோத்தி அரசன் தசரதன். காட்டுவிலங்குகளின் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பதற்காக துஷ்ட மிருகங்களை வேட்டையாட தசரதன் கானகம் வந்திருந்தான். மாலைநேரம். இருள் லேசாகக் கவிந்து கொண்டிருந்தது. மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் மன்னன். அவன் அருகே மிருகம் ஒன்று தண்ணீர் குடிப்பதுபோல சத்தம் கேட்டது. மன்னன் துள்ளி எழுந்தான்.தன் வில்லில் நாணைத் தொடுத்தான். வில்லிலிருந்து அம்பு புறப்பட்ட மறுகணமே "அம்மா !" என்ற அலறல் குரல் கேட்டது. மனிதக் குரலைக் கேட்ட மறுகணம் மன்னன் திடுக்கிட்டான். குரல் வந்த திசை நோக்கி ஓடினான். அங்கே சிரவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்தான். அவனிடம் தசரதன் மன்னிக்குமாறு வேண்டினான். தவறு நேர்ந்துவிட்டது என்று புலம்பி அழுதான். அவனைத் தடுத்த சிரவணன், "அரசே! என் பெற்றோர் வனத்தில் தாகத்தால் தவித்தவாறு உள்ளனர். அவர்களிடம் நான் இறந்த செய்தியைச் சொல்லாமல் அவர்களை நீர் அருந்தச் செய்துவிடுங்கள். பெற்ற தாய் தந்தையரின் நீர் வேட்கையைத் தீர்க்காமல் சாகிறேன் .நீங்கள் அவர்களின் மகனாக இருந்து அவர்கள் தாகத்தைத் தீர்த்து விடுங்கள். இதுதான் என் கடைசி ஆசை."என்று கூறிவிட்டு இறந்தான். சிரவணன் கூறியது போல் நீரை எடுத்துக்கொண்டு அவன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் தசரதன். குரலைக் காட்டாமல் நீரை அந்த வயோதிகத் தாயிடம் கொடுத்தான். தசரதனின் கை பட்டதுமே "யார் நீ?" என்று சத்தமிட்டாள் அந்தத்தாய். இருவரும் "எங்கள் மகன் எங்கே? நீ ஏன் வந்தாய்? எங்கள் மகனுக்கு என்னவாயிற்று?" என்று அழுது புலம்பினர். அதைத் தாங்காத தசரதன் தான் தவறாக அம்பெய்திய காரணத்தால் சிரவணன் மாண்ட செய்தியைக் கூறினான். புத்திர சோகம் தாங்காத அந்தப் பெற்றோர் "ஏ! மன்னா! நாங்கள் மகனை இழந்து தவித்து உயிர் விடுவது போலவே நீயும் எத்தனை புத்திரர்களைப் பெற்றாலும் யாரும் அருகே இல்லாமல் புத்திர சோகத்தாலேயே உயிர் விடுவாய். இது எங்கள் சாபம் " என்று சபித்துவிட்டு உயிர் விட்டனர். பின்னாளில் இந்த தசரதன் ராமனை வனவாசத்திற்கு அனுப்பிவிட்டு புத்திரசோகத்தில் ஆழ்ந்து துன்பப்பட்டான். பரதனும் சத்ருக்னனும் கேகயநாடு செல்லவும் ராம இலக்குவர் வனம் ஏகவும் தசரதன் தனிமையில் தவித்து பின் உயிர் விட்டான். நல்லோர் சொல்லுக்கு வலிமை உண்டு.பெற்றோரை தெய்வமாக எண்ணி அவர்களுக்கு அன்புடன் சேவை செய்து வந்த சிரவணன் பண்பால் பெருமை பெற்றான். அவன் பெற்றோரின் சாபம் பலித்துவிட்டது. எனவே பெற்றோரிடம் நாம் ஆசிபெற என்றும் அவர்களை வணங்க வேண்டும்.  

                        கதாக் காலட்சேபம்

தலைவர்: முன்னொரு காலத்திலே பாரத தேசத்திலே ஒரு கிராமத்திலே சரவணன் சரவணன்னு ஒரு இளைஞன் இருந்தான்.

குழுவினர்: ஆமாம். ஆமாம். இருந்தான்.

தலைவர்: சரவணனுக்கோ ஒரு குறையுமில்ல. ஆனால், அவனோட வயதான பெற்றோருக்கோ கண் இரண்டும் தெரியாது. அதனால, சரவணன்தான் அவாளுக்குப் பணியாள், பக்க துணை எல்லாம்.

இப்படி இருக்கையில ஒரு நாள் அவனோட பெற்றோருக்கு ஒரு ஆசை வந்துச்சு.

சின்ன சின்ன ஆசை. சிறகடிக்கும் ஆசை. முத்து முத்து ஆசை. முடிஞ்சு வைச்ச ஆசை.

குழுவினர்: என்ன ஆசை  சொல்லுங்கோ

தலைவர்: காசி, ராமேஸ்வரம் போகனும்னு ஆசை. அதை மெதுவா சரவணன் காதுல போட்டாங்க. சரவணனுக்கோ பெத்தவங்களோட ஆசையை நிறைவேத்தனுமேன்னு கவலை. சிந்திச்சான்... சிந்திச்சான்.. ராத்திரியெல்லாம் சிந்திச்சான்.  விடிய காலையிலே வீட்டுப் பின் பக்கம் போனான். ஒரு பெரிய மூங்கில் கம்பை எடுத்தான்.

குழுவினர்: அடடா என்னன்னா? பெத்தவாளா அடிக்கப் போறானா?

தலைவர்: அபிஷ்டு. அபிஷ்டு .. பெரிய கம்ப எடுத்து, அதுல முன்னாலயும் பின்னாலயும் ஒவ்வொரு பெரிய கூடைய வெச்சு கட்டினான். அந்தக் கூடைக்குள்ள அவா ரெண்டு பேரையும் தூக்கி  ஓக்கார வெச்சான். கிளம்பிட்டான் காசிக்கு.. 

எப்படி புறப்பட்டான் தெரியுமோ?

தலைவரும் குழுவினரும்:

ஈஸ்வரா வானும் மன்னும் கேண்ட் சேக் பண்ணுது 

உன்னால் ஈஸ்வரா!

நீரும் நெருப்பும் பிரண்ட்ஷிப் ஆனது

உன்னால் ஈஸ்வரா

மயிலையிலே கபாலீஸ்வரா

கயிலையிலே பரமேஸ்வரா

அப்படின்னு பாடிண்டே புறப்பட்டான்.


குழுவினர்: ஆமாம் ஆமாம் பாடிண்டே புறப்பட்டான்.

தலைவர்: சரவணனோ வயசால சின்னப் பையன். ஆனாலும் மனசால பெரியவன்... பெரியவன். குணத்தால சிறந்தவன். ஆகையினாலே  காடு, கோடு, புல், மலை,மழை, ஆறு, வாய்க்கால், குளம், குட்டை இப்படி எல்லாத்தையும் கடந்து நடந்தான். ஆனால், பையன் கொஞ்சங்கூட அலுக்கலை, அசரல, அதாவது  He never grumble lha.

குழுவினர்: ஏன்னா? அந்தப் பையனுக்கு எங்கேயும்  தடங்கல் வரலியோ?

தலைவர்: வந்துது. வந்துது. வராம  இருக்குமோ?

        அப்போல்லாம் என்ன பண்ணுவான் தெரியுமோ?

        வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா

        தடைக்கல்லும் உனக்கு ஒரு படிக்கல்லப்பா

என்று பாடிக்கொண்டே போவான். அப்படி போய்க்கிட்டிருக்கிற வழியில, வழக்கம்போல ஒரு காடு வந்துச்சு.  அந்தக் காட்டு வழியா போய்க்கிட்டிருந்தான். அப்போ அப்பாவும் அம்மாவும் குடிக்க தண்ணி வேணும்னு கேட்டாங்க.  சரவணன் உடனே, அவா ரெண்டு பேரையும் கீழே உட்கார இறக்கி உட்கார வெச்சுட்டு தண்ணி கொண்டு வரப்போனான்.

குழுவினர்: எப்படின்னா புறப்பட்டான்?

தலைவர்: புறப்பட்டான் வீர நடை கொண்டு புறப்பட்டான்

        வெற்றி நடைகொண்டு புறப்பட்டான்.

நடந்தவன் ஒரு நீரோடையை அடைந்தான். கையில் இருந்த சொம்பைத் தண்ணீருக்குள் அமுக்கினான். தண்ணீர் சொம்புக்குள்ள பப். பட் என்ற pubbling sound ஓடு நிறைஞ்சது. அப்போ. அந்தக் காட்டுல ஒரு மரத்துக்குப் பின்னால, மறைஞ்சிருந்தான் ஒரு மக்கு ராஜா. மட சாம்பிராணி ராஜா. அவன், ஏதோ விலங்கு தான் தண்ணி குடிக்குதுனு தப்பா நினைச்சுட்டான். எடுத்தான் வில்லை. விட்டான் அம்பை.

ஆ.. அம்மா. என்ற சத்தத்தால் காடே அதிர்ந்தது. ஓடின மான்கள் மருண்டு நின்றன. பறந்த பறவைகள் பதறி சிறகடித்துக்கொண்டன.

குழுவினர்: அடடா! என்ன ஆச்சு? என்ன? ஆச்சு

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை.

அம்பி சரவணன் அம்பு தாக்கினதால குற்றுயிரும் குறையுயிருமாய் விழுந்தான்.

ராஜா ஓடோடி வந்தான். பையனைத் தூக்கினான்? நீ யாரப்பா? நீ யாரப்பா? என் இங்கு வந்தப்பா? ன்னு  கேட்டான். பையன் நடந்ததை எல்லாம் சொன்னான். 

நானொரு முட்டாளுங்க. நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க.

நானொரு முட்டாளுங்க நானொரு முட்டாளுங்க

என்று அரற்றியபடி அரசன் பையனிடம் அவனோட கடைசி ஆசை என்னன்னு கேட்டான்.  பையன் தன் பெற்றோரின் தண்ணீர் தாகத்தைச் சொன்னான். அவர்களின் புனிதப் பயணத்தை நிறைவேத்தி வைக்கச் சொன்னான்.  பொசுக்குன்னு உயிரையும் விட்டான்.

ராஜா ஆறா மனத்துயரோடு சரவணின் ஆசைகளை நிறைவேற்ற உத்தரவிட்டான்.

இத்தோட கதை முடியறது. இதுவரைக்கும் காதுகொடுத்துக் கதை கேட்டவாளுக்கும். என்னோட கதை சொன்னவாளுக்கும் நன்றி. நன்றி.

தலைவரும் குழுவினரும்:

வாழிய வாழியவே!

சரவணன் நாமம்

வாழிய வாழியவே வாழியவே!

வாழிய வாழியவே வாழியவே!

*********************************

முன்னாள் மாணவர்களின் ( 1998- 2002) கட்டுரைகள்

  உன் மனத்தைப் பாதித்த ஒரு கசப்பான சம்பவம்.

முன்னுரை

மனித வாழ்க்கையில் நாம் எல்லோரும் நிச்சயமாக ஏதாவது கசப்பான அனுபவத்தைக் கடந்து வந்திருக்கலாம். கசப்பான அனுபவம் என்று குறிப்பிடும்போது அச்சம்பவம் நம் மனத்தைப் பாதித்து இருக்கலாம். பலர் வாழ்க்கையில் அச்சம்பவம் பெரும் அளவில் பாதித்திருக்கும். மற்ற சிலர் வாழ்க்கையில் சிறிய அளவில் பாதித்து இருக்கும். 

கசப்பான அனுபவம் அல்லது சம்பவம் என்று கூறும்போது , நிறைய குறிப்பிடலாம். என் பதினைந்து வருட வாழ்க்கையில் , என்னைப் பெரிதும் பாதித்த ஒரு கசப்பான அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இச்சம்பவம் என்னையும் பால் வடியும் முகம் கொண்ட என் அன்புத் தம்பியையும் பற்றியது.

அன்று புனிதமான வெள்ளிக் கிழமை , நான் குட்டிபோட்ட பூனை போல மருத்துவமனையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன். ஏனென்றால் எனக்குத் தம்பி பாப்பா பிறக்கப் போகிறான். களிப்பு என்னும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். எனக்குக் காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை.எனக்கென்று ஒரு தம்பி வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.

 என் தம்பி எப்படி இருப்பான்  என்று கனவு என்னும் உலகில் தத்தளித்தேன். கண்மூடி கண் திறப்பதற்குள்ளாகக் குழந்தை அழும் சத்தம் என் காதில் ஒலித்தது. தாதி ஒருவர் என்னை என் தாயார் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழைந்ததும் நான் என் அம்மாவிடம் பசுவைப் பார்த்த கன்றுக் குட்டிபோல ஓடினேன். என் தந்தை, என் தாயார்  இருக்கும் இடத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். என் அம்மா பக்கத்தில் ஒரு அழகான குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை தான் என் தம்பி என்று நினைவுக்குத் தோன்றியது. நான் என் தம்பியை அன்பாக தூக்கி அவனை அணைத்தேன்.

நாங்கள் நால்வரும் வீட்டிற்குத் திரும்பினோம் .அன்று முதல் நான் என் தம்பியைக் கண்ணை இமை காப்பது போல காத்து வந்தேன். பள்ளி முடிந்து வந்தவுடன், முதல் வேலை நான் என் தம்பியோடு விளையாடுவேன்.  அவனின் கண்கள் நட்சத்திரம் போல் மின்னின.பெயர் சூட்டும் விழாவில் என் தம்பிக்கு `தேவராஜ்` என்ற பெயரைச் சூட்டினோம்.

நாட்கள் கடந்து ஓடின. என் தம்பி  மழலை மொழியில் பேசத் தொடங்கினான்.  அதை கேட்கக் கேட்க நான் எப்பொழுதும் மெய்மறந்து நிற்பேன்.

ஆண்டுகள் பல கடந்தன. என் தம்பி பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் படிப்பில் நன்கு விளங்கினான். எல்லோரும் பாராட்டியபடி அவன் பெயர் வாங்கினான். படிப்பு உயர உயர அவன் வகுப்பில் குன்றின் மேலிட்ட விளக்குப் போல தோன்றினான். அதைப் பார்த்து நான் மிக பெருமை அடைந்தேன்.ஒரு நாள் என் தம்பிக்காக ஆசையாகக் காத்துக் கொண்டிருந்தேன். காரணம் அன்று அவனின் பதினொன்றாவது ஆண்டு பிறந்த நாள். அவன் எங்களிடம் ஆசையோடு கேட்ட நாய்க்குட்டியோடு வாசற்படியில் நின்று கொண்டிருந்தேன்.

மணி சுமார் பிற்பகல் இரண்டாயிற்று . அவன் ஒன்றறைக்கெல்லாம் வீட்டில் இருப்பேன் என்று கூறினானே இன்னும் காணவில்லையே என்று என் மனம் பதறியது. என் தாயர் ஒரு பெரிய பரிசுப் பொருள் ஒன்றை வாங்கி வந்தார்.  ``தேவா இன்னும் வரவில்லையா ? `` என்று ஒரு புன்னகையோடு கேட்டார். நான் தலையசைத்தவாறு `` இன்னும் வரவில்லை`` என்றேன். 

மணி  மூன்றாயிற்று நான் என் அம்மாவிடம் கூறாமல் நான் என் தம்பியின் பாடசாலைக்கு விரைந்து ஓடினேன். என் தம்பியின் தோழன் ஒருவன் அங்கே இருந்தான். அவனிடம் விசாரித்தேன். என் தம்பி ஒரு மணிக்கெல்லாம் சென்று விட்டான் என்று என் தலையில் குண்டு ஒன்றை போட்டான். அவன் வீட்டிற்கு வரும் பாதையில் மனம் ``படபட`` வென்று அடிக்க ஓடினேன். ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டடக் கீழ்த்தளத்தில் பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. நான் வேதனையோடு அங்கே சென்றேன். கூட்டத்தில் வளைந்து நெளிந்து நுழைந்தேன்.நான் கண்ட காட்சி என் தலையில் இடி விழுந்தாற்போல இருந்தது. காரணம், கள்ளம் கபடமில்லாத பிஞ்சு உள்ளம் கொண்ட என் தம்பி இரத்தக் கடலில் மிதந்து கொண்டிருந்தான். நான் அவனின் அருகில் சென்று கதறிக்கதறி அழுதேன். என் தம்பியை யாரோ கொலை செய்து விட்டான் என்ற செய்தி கேட்டவுடன் என் மனம்  சுக்கு நூறாக உடைந்தது.

சிறிது நேரத்தில்  மருத்துவமனை வண்டி என் தம்பியைக் கொண்டு சென்றது..நான என் கைத் தொலைபேசியில் என் தந்தைக்குத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினேன். நான் வீட்டிற்கு அழுதுகொண்டே சென்றேன். என் அம்மா அங்கே வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தார். ` எப்படி சொல்லப்போகிறேன்` என்று திருதிருவென்று விழித்தேன். என் தந்தை கண்கலங்கியவாறு வீட்டை அடைந்தார். என் அம்மாவிடம் நடந்ததைக் கூறினார். என் அம்மாவும் நானும் கதறி அழத் தொடங்கினோம்.

நாங்கள் மருத்துவமனையை அடைந்ததும் மருத்துவர் என் தம்பி இறந்து விட்டான் என்று மொழிந்தார். என் தம்பி இருக்கும் அறைக்குச் சென்றோம். அவன் பரிதாப நிலையில் இருந்தான். நான் அவனை அணைத்து அழுதேன். என் செல்லத் தம்பிக்கு  இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தோம். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

நாட்கள் பறந்தோடின. என் வீடு அமைதியாக இருந்தது. நான் என் தம்பியின் ஆசை நாய்க்குட்டியைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் விடுவேன். `` ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ`` என்ற பழமொழி என் நினைவுக்கு வரும்.

என்னால் பல வாரங்கள் படிப்பில் கவனஞ்செலுத்த முடியவில்லை. என் தம்பியின் குரல், சிரிப்பு என் காதில் தினமும் ஒலித்துக்கொண்டேயிருகும். என் தம்பியின் இறப்பு என்னை மிகவம் பாதித்தது. இது தான் என் கசப்பான அனுபவம் என்று மன வருத்தத்தோடு கூறுகிறேன்.

முடிவுரை

நமக்கு எந்தக் கசப்பான நிலை வந்தாலும் நாம் அதை கனவு என்று நினைத்து மறந்து விடவேண்டும். நாம் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கை பாதிக்கப்படால்ம. நம் வாழ் நாள் மிகவும் குறைவு. எனவே நாம் அதை நல்வழியில் செலுத்த வேண்டும்.     (சுந்தரவள்ளி   Sec 4  )


  **************************************************************

அறிவை வளர்க்க இணையத்தை) விட நூலகமே மாணவர்க்குப் பொருத்தமானது - கருத்துரை

``கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே`` என்று நம் முன்னோர் கல்வியின் அருமை குறித்துக் கூறிச் சென்றதை நாம் கேட்டிருக்கலாம். நம் மாணவர்கள் படிப்பதற்கு இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். `` காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ளவேண்டும். ``இக்கால மாணவர்கள் தாங்கள் கற்றது போதாது என்று சிறுவயதிலேயே அறிந்து கொள்கின்றனர். ``கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு`` அல்லவா?

ஆகையால் அவர்கள் தங்கள் பள்ளிப் பாடங்களை மட்டும் படிக்காமல் வேறு இடங்களிலிருந்தும் தங்கள் பாடங்கள் தொடர்பான  செய்திகளைத் திரட்டுகின்றனர். இக்கால மாணவர்கள் தங்களுக்குத் தேவையான செய்திகளை இணையத்திலிருந்தும் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களிலிருந்தும் சேகரிக்கின்றனர்.இவ்வழியில் செய்திகளைச் சேகரிக்கும்போது அவர்கள் அவற்றில் இருக்கும் நன்மை தீமைகளை நன்கு ஆராய வேண்டும்.

 

நூலகத்திற்குச் செல்வது ஒரு மிகச்சிறப்பான நடவடிக்கை. அறிவை வளர்க்க வேண்டும் என்றால் நூலகம் ஒரு மிகப் பெரிய உதவியாக இருக்கிறது. பாடப்புத்தகங்கள் முதல் தினசரி செய்தித் தாள் வரை அங்கி¢ருக்கும் புத்தகங்கள் பற்பல.நூலகங்களை ஒரு புத்தகக் கடல் என்று வர்ணிக்கலாம். அங்கு சென்றால் நமக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்கும். நம் பொது அறிவு உலக சஞ்சிகைகள் படிக்கப் படிக்க அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஆகவே பொது அறிவைச் செலவில்லாமல் வளர்த்துக் கொள்ள நூலங்கள் தூண்களாக இருக்கின்றன.

 

இணையம் என்ற வார்த்தையைக் கேட்டதும் பலருக்குப் பல எண்ணங்கள் ஆசைகள். இணையம் மற்றொரு களஞ்சியம். அதில் இல்லாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். பொது அறிவையும் , கல்வி அறிவையும் வளர்த்துக்கொள்ள அது மிகவும் துணையாக இருக்கின்ற காரணத்தினால் அதை இக்காலத்தில் மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 

நூலகத்தில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் இணையத்தில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் வேற்றுமைகள் பல. நூலகத்திற்குச் செல்லும்போது நடந்து சென்றால் உடல் உறுதியாகும். `` உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே `` என்று திருமூலர் கூறினார். நீண்ட நாட்கள் வாழ்ந்தால் தான் நாம் நிறைய விசயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் , இணையத்தில் அறிவை வளர்த்துக் கொண்டால் நம் கண்களுக்கும், நம் உடம்பிற்கும் கெடுதல் விளையலாம்.

 

நூலகம் செல்வது ஒரு விலை மலிவான நடவடிக்கை ஆகும். புத்தகங்களை அமைதியான சூழ்நிலையில் படிக்க அங்கே பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்பொழுது அதிக அளவிலான நூலகங்கள் நம் வீடமைப்புப் பேட்டைகளில் இருக்கின்றன. ஆகவே சென்று வரும் செலவும் மிச்சம். ஆனால், இணையத்தில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் கணினி வாங்க வேண்டும்,அதற்கு இணைய சேவை வாங்க வேண்டும், என பல செலவுகள். ஆகவே, நம் அறிவை வளர்க்கச் சிக்கனமான வழி நூலகத்திற்குச் செல்வது தான்.

 

இணையம் பலருக்கு ஒரு தகவல் பரிமாற்றக் கருவியாக பயன்படுகிறது. ஒரு மாணவர் செய்யும் ஆராய்ச்சியை வெளிநாட்டு மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இணையத்தில் வசதி உண்டு. ஆனால் நூலகத்தில் இது இல்லை.

 

இணையத்தில் தகவல்கள் மட்டும் இல்லாமல் பல விசயங்கள் இருக்கின்றன. விளையாட்டுத் தளங்கள், ஆபாசதளங்கள் உள்ளன. வேடிக்கைத் தளங்கள் என்று பல தளங்கள் உள்ளன. இவற்றிற்கு மாணவர்கள் தற்செயலாகச் சென்றாலும் அவர்களுடைய மனம் படிப்பதலிருந்து திசை திரும்பி விடும். ஆனால், செய்திகளை  உடனுக்குடன் இணையத்தில் மட்டுந் தான் பார்க்க முடியும். குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல இல்லாமல் நம் மாணவர்கள் அவ்வப்போதைய சம்பவங்கள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் எண்ணங்களைச் சிதைக்கும் பக்கங்களுக்குச்  சென்று தங்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது. காலம் பொன் போன்றது அல்லவா?

தங்கள் அறிவை வளர்க்க மாணவர்கள் இணையத்தையும் நாடவேண்டும். நூலகங்களுக்கும் செல்ல வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவர்கள் இருந்தால் அறிவை வளர்க்க முடியாது.முயற்சி எடுத்தால் தான் அறிவை வளர்க்க முடியும். முயற்சி திரு வினையாக்கும்.

( கலைச் செல்வன். 3 E) 

********************************************************************** 

சிங்கப்பூரில் தைப்பூசத்திருநாள் கொண்டாட்டத்தின்போது  நீ வழக்கமாகக்   காணும் காட்சிகளை விவரித்து எழுதுக.   

Note: இந்துக்கள் அல்லாத மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம்.  விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம்.

முன்னுரை

தைப்பூசத் திருநாள் சிங்கப்பூரில் பல்லாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் , நான் என் குடும்பத்தினரோடு ஸ்ரீ தண்டபாணிக் கோயிலுக்குத் தைப் பூசத்திருநாளைக் காணச் செல்வேன்.  

பாடல்கள் வரவசப்படுத்தும் காகண்களுக்கு விருந்தளிக்கும்

     `` வேல் ! வேல் ! வெற்றி வேல் ! `` என ஒரு  கூட்டத்தினர் ஒரு மூளையில் பாடிக்கொண்டே காவடிகளோடு நடந்து வர, இன்னொரு மூளையில் `` கந்தனுக்கு  அரோகரா, முருகனுக்கு அரோகரா `` என்று பஜனைக் குழுக்கள் கைகளில் மேள தாள வாத்தியங்களோடு இசைத்து வருவர். பக்தி மிக்க இப்பாடல்களைக் கேட்கும்போது காதுகளுக்கும் மனத்திற்கும் இன்பமாகவும் இனிமையாகவும் இருக்கும். பலநாள் விரதம் இருந்து வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்களுக்கும் இப்பாடல் பலம் கொடுக்கும். பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என பல்வேறு காவடிகளைக் காணும்போது என் கண்களையே என்னால் நம்ப முடியாது. அழகுக்கு அழகூட்டும் விதத்தில் சில காவடிகளில் முருகளை வரைந்திருப்பார்கள் மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் கந்தனைக் காண என் கண் இரண்டு போதாது.

கூட்டமும் குழந்தைக

கோயிலுக்குச் செல்லும் வழியில் மிக கூட்டமாக இருக்கும். நான் என் தந்தையாரின் கரத்தை இருக்கமாகப் பிடித்துக் கொள்வேன். சில நேரங்களில்  குழந்தைகள் சிலர் கூட்டத்தில் தொலைந்து போயிருப்பார்கள். இதனால் சில பெற்றொர்களின் முகத்தில் ஈ ஆடாது. பதற்றமும் பயமும் அவர்கைளப் பற்றிக் கொள்ள கதிகலங்கிய நிலையில் கண்களில் கண்ணீர் மல்க, வருவோர் போவோர் அனைவரிடமும் தங்களின் காணாமல் போனக் குழந்தைகளைப் பற்றி விசாரிப்பர். காவல் அதிகாரிகள் இப்பெற்றோருக்கு உதவி செய்வார்கள். ஒலிப் பெருக்கியில் இக்குழந்தைகளைப் பற்றி அறிவிப்பு செய்வர்.

சின்னஞ்சிறு கடைகள்

கோயிலுக்குச் செல்லும் பாதையில் சில வயதான முதியோர்கள் வளைகள், சாமிப்படங்கள், திரு நீர் போன்ற பல பொருட்களை நடைபாதையின் வழியின் ஓரமாக  அமர்ந்தபடி விற்றுக் கொண்டிருப்பார்கள். சில சின்ன கூடாரங்களினுள் மங்கையர்  சிலர் வடை, பாயசம், லட்டு, இட்லி, தோசை மற்றும் பல தின்பண்டங்களையும் குளிர்பானங்களையும் பசியுடையோர் வாங்கி புசிப்பதற்காக விற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்களின் உயவுப்பொருள்களின் வாசனை கமகமவென்று மூக்கைத் துளைக்கும்.

பஞ்சாமிர்தம்

நினைக்கவே எனக்குப் பசிக்கிறதே .எனக்கு மிகவும் பிடித்தது பஞ்சாமிர்தம்.பக்தர்கள் பலரும் தங்களுடைய நேர்த்திக் கடன்களை முடித்த பின்னர் பஞ்சாமிர்தத்தை வழிபட வந்திருப்போரிடம் வழங்குவர். `` ஆசை வெட்கம்அறியாது `` என்று கூறுவர் .நான் கூச்சப்படாமல் நிறைய பஞ்சாமிர்தத்தை வாங்கி உண்ணுவேன்.வாழைப்பழத்தால் செய்யப்பட்ட இந்த பஞ்சாமிர்தம் மிக இனிப்பாக இருக்கும்.

முருகனின் சன்னிதானம்

முருகனின் சன்னிதானத்திற்குள் மக்கள் கூட்டம் அலைமோதும். முட்டி மோதி தான்  கடவுளைக் காண இயலும். மக்கள் நடமாட்டத்தைச் சுலபாக்குவதற்காக பல  தடுப்புக் கம்பிகள்  காவல் அதிகாரிகளால்  போடப்பட்டிருக்கும். இவை ஒரு சில நிமிடங்களுக்கு நாம் முருகளைக் கண்டு வணங்க உதவும் . அதன் பின் நம்மை ஓட ஓட விரட்டி விடுவர் கடமையைச் செய்யும் கண்ணிய காவலர்கள். என் அன்பு வேலனைக் கண்டதே எனக்குக் கிடைத்த  அதிர்ஷ்டம் என நினைத்துக் கொண்டு நான் என்னைத் திருப்தி படுத்திக் கொள்வேன். காவடிகளுடன்  பக்தர்கள் முருகனின் முன் நின்று சில நிமிடங்களுக்குப் பாட்டு தாளத்துக் கேற்றபடி ஆடுவார்கள். காவடிகளைச் சில  பக்தர்கள் சுழற்றும் விதத்தைக் காண அழகாக இருக்கும். சதங்கை ஒலி `` ஜல் ஜல் `` என்று ஒலிக்க என் கால்களும் தன்னை மறந்து தாளம்போடும் . எனக்கும் ஆட ஆசையாக இருக்கும்.

முடிவுரை

ஒவ்வொரு வருடமும் நான் காணும் காவடிகள் வேறு வேறு வகையில் அலங்கரிக்கப் பட்டிருக்கும். நிறைய மயில் தோகைகள், இறகுகள் கொண்டும் , வண்ண வண்ண மாலைகள் கொண்டும் , விதவிதமான பூக்கள் கொண்டும் காவடிகள் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன.  முத்து மணிகளும் மாலைகளும் , முருகனின் புகைப்படங்களும் , வரைபடங்களும்  கூட அலங்காரத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் நான் கேட்கும் பாடல்களும் காணும் வாத்திய இசைக்கருவிகளும் கூட நவீன காலத்திற்கு ஏற்றபடி மாறி வருகின்றன. இவையே சிங்கப்பூரில் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டத்தின் போது நான் வழக்கமாகக் காணும் காட்சிகள் ஆகும். எது எப்படி இருந்தாலும் நான் தைப்பூசத்திருநாளில் கோயிலுக்குச் சென்று பெரும் உவகை அடைகின்றேன். நான் மட்டுமல்ல கடவுளை வணங்கும் அனைவருக்கும் மனத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருகி இருக்கும்.   (மு. இராஜி 3 )