Saturday, November 13, 2021

குழுமப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் 'நான் மிகவும் மதித்துப் போற்றும் ஒரு மாமனிதர்' எனும் தலைப்பில் நீவீர் ஆற்றும் சொற்பொழிவு.

 யாழினி ஶ்ரீ அண்ணாதுரை (307) - 2021 


ஆன்றோரே, சான்றோரே, என்னைப் போன்றோரே - உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம். இந்த இனிய வேளையில் நான் உங்கள் முன் , ‘நான் மிகவும் மதித்துப் போற்றும் ஒரு மாமனிதர்' என்றத் தலைப்பில் உரையாற்றவிருக்கிறேன். 

“ உறுபசியும் ஒவாப்பிணியும் செறு பகையும் 

சேரா தியல்வது நாடு " 

என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்காகும். அதாவது பசியும், போர்பகையும் இல்லாமல் மக்களின் நல்வாழ்வைப் பொருத்தே ஒரு நாட்டின் மகிமை உள்ளது. பாதுகாப்பு என்றால் சிங்கப்பூர், சிறந்த கல்வி என்றால் சிங்கப்பூர், நல்லிணக்கம் என்றால் சிங்கப்பூர், நிலைக்குலையா அரசு என்றால் சிங்கப்பூர் என்று அடுக்கடுக்காக நம் நாடு பலவற்றில் முத்திரைப் பதித்துள்ளது. நமது தேசம் இவ்வாறு உருவாக பலரும் அரும்பாடுப்பட்டுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவரான ஒருவரே நான் மிகவும் மதித்துப் போற்றும் மாமனிதர் ஆவார். அவர் தான் சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ அவர்கள். 


லாபம் தந்த வழக்கறிஞர் தொழிலில் வேலை செய்து வந்த திரு லீ ஒரு நாள், தமது தாய்நாடான சிங்கப்பூரின் நிலையை எண்ணி வருந்தினார். அக்காலத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டு வர முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில், தாய்நாட்டைக் காப்பவன் தாயைக் காப்பவனுக்குச் சமம் என்பதற்கேற்ப திரு லீ குவான் யூ சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆனார். சிங்கப்பூர் மலேயாவுடன் சேர்ந்தால் தமது தாய்நாட்டிற்கு நன்மை விளையும் என்று எண்ணிய அவர் அவ்வாறு இரு நாடுகளைச் சேர்க்க முற்பட்டார். இம்முயற்சி தோல்வியைக் கண்டாலும், திரு லீ மனந்தளராமல் “முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன், முன்வைத்தக் காலை நான் பின்வைக்க மாட்டேன்" என்பதற்கேற்பச் சிங்கப்பூர் ஒரு வளமிக்க நாடாகத் திகழ பாடுப்பட்டார். அவர் செய்தவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். நீங்களும் கேட்டு மகிழுங்கள். 


“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”. அதிலும் பல இன மக்கள் கூடி வாழ்ந்தால் நன்மை பல கோடி என்று திரு லீ குவான் யூ நம்பினார். பல இன மக்கள் கொண்ட சிங்கப்பூரை இணைக்க அவர் பல முயற்சிகளில் ஈடுப்பட்டார். அனைவருக்கும் சம உரிமை வழங்கித் தாமும் இன நல்லிணக்கத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக விளங்கினார். குடியிருப்பு பேட்டைகளில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழும்படிச் செய்தார். தமிழ், மலாய், சீனம் ஆகிய மூன்று மொழிகளுக்கு அங்கீகாரம் தந்தார். 


அடுத்து அவர் “இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்" என்பதிலும் பண்பட்ட அறிவு பெற்ற குடிமக்களை உருவாக்குவதிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். சிறு வயதிலிருந்தே சிங்கப்பூரர்களுக்கிடையே நாட்டுப்பற்று, சமூகப் பொறுப்பு, கடமை உணர்வு, நன்றியுணர்வு ஆகியப் பண்புகளைப் போதிக்கும் பாடங்களைக் கல்வித் திட்டத்தில் இழையோடச் செய்தார். அதோடு சிங்கப்பூர் கல்வித்திட்டம் உலகப் புகழ் பெற அல்லும் பகலும் உழைத்தார். 

“ மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 

காடும் உடையத் தரண் “ 

என்பது வள்ளுவரின் பொன்சொற்கள் ஆகும். அதவாது ஒரு நாட்டின் வளம் அதன் இயற்கை வளங்களின் செழிப்போடு இணைந்துள்ளது. சிங்கப்பூரில் நிலவசதி இல்லாவிட்டாலும் தம் நாட்டைக் கண்ணுக்குக் கவர்ச்சித் தரும் வகையில் பச்சைப் பசேலான நாடாக உருவாக்க திரு லீ பல முயற்சிகளை மேற்கொண்டார். மரங்களை நட்டும், பூங்காக்களையும் நீர் தேக்கங்களையும் அமைத்தார். இவர் மேற்கொண்ட முயற்சிகளால் சிங்கப்பூர் இன்றும் இயற்கையைச் சார்ந்த நகரமாகத் திகழ்கிறது. 


மேலும் திரு லீ சிங்கப்பூர் ஓர் உலகத்தரம் வாய்ந்த நாடாகத் திகழ தம் வாழ்க்கையையே அற்ப்பணித்தார் என்று கூறினால் அது மிகையாகாது. மீன்பிடிக் கிராமமாக இருந்த சிங்கப்பூரை வானை உரசும் கட்டடங்களைக் கொண்ட நாடாக வளரச் செய்தார். “சுத்தம் சுகம் தரும்” என்பதற்கேற்ப சிங்கப்பூர் தூய்மையான நாடாகத் திகழ வழி கண்டார். இவ்வாறு அவர் செய்ததால் சிங்கப்பூர் பல சுற்றுப்பயணிகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியும் அடைந்தது. அவர் மற்ற சான்றோருடன் சேர்ந்து வடிவமைத்த சுகாதார அமைச்சு இந்த கோவிட்-19 கிறுமித்தொற்றின் காலத்திலும் நமக்குப் பயன் தந்து வருகிறது. போக்குவரத்து அமைச்சை நிறுவி சிங்கப்பூரர்களாகிய நாம் பெருவிரைவுப் போக்குவரத்து ரயில் அல்லது பொதுப் பேருந்தில் பயணித்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாகவும் சுலபமாகவும் செல்ல வழி வகுத்தார். 


இவ்வாறு திரு லீ குவான் யூ அவர்களின் பெருமைகளைக் கூறிக் கொண்டேப் போக முடியும். ஆனால், அதற்கு ஏடுகள் பல தேவை. ஏனென்றால் அவர் செய்தது அனைத்தும் அவ்வளவு நன்மை. ஆயினும் நான் அவர் புரிந்த சாதனைகளைப் பற்றி மட்டும் நினைத்து அவரைப் போற்றவில்லை, அவரது பண்புகளும் கூட பெரிதும் போற்றத்தக்கவை.


“ அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 

பெருமை முயற்சித் தரும் “ 

என்று தெய்வப்புலவரான வள்ளுவர் விடாமுயற்சியின் சிறப்பை எடுத்துரைக்கிறார். பலர், சிங்கப்பூர் வளராது என்று கூறியபோதும் திரு லீ குவான் யூ தம் எதிரே தோன்றிய தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு விடாமுயற்சியுடன் போராடினார். அடுத்து, வெற்றி கண்டபோதும் கூட அவர் “அடக்கம் ஆயிரம் பொன் தரும்” என்பதற்கேற்ப ஆடம்பரவாழ்க்கையையோ பொன்னோப் பொருளையோ விரும்பாமல் அடக்கத்தைக் கடைபிடித்துத் தம் வாழ்க்கையை நடத்தினார். இறுதியாக, “மன்னன் எவ்வழி, நாடும் அவ்வழி”, என்பதற்கேற்ப ஒரு நல்ல தலைவர் கொண்டிருக்க வேண்டிய அனைத்து நெறிகளையும் பின்பற்றி முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். 


“அரிது, அரிது மனிதராய் பிறத்தல் அரிது”. அதைவிட அரிது மாமனிதராய்த் திகழ்வது. சிங்கப்பூர் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறியதற்கு திரு லீ குவான் யூ அவர்கள் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. அவரது பண்புநலன்களும் அவர் பின்பற்றியவையும் மகத்தானவை என்று சொன்னால் அதுவும் மிகையாகாது. ஆஹா ! அவருக்குப் புகழ் மாலைகளைப் பொழிந்துகொண்டே போக வேண்டும் தான். இவரே நான் மிகவும் மதித்துப் போற்றும் ஒரு மாமனிதர் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைக் கொள்கிறேன். நாம் அனைவரும் அவரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அவரைப் போல் சாதனை புரிந்து மாமனிதராய்த் திகழ முயல்வோமாக என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். 


No comments: