Wednesday, November 24, 2021

காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக . SHAMITA BALAKRISHNAN 109 -2021

“மணி! இங்கே வா!” என்று நான் என்னுடைய செல்லபிராணியான நாயை அன்புடன் அழைத்தேன். நான் என்னுடைய நாயைக் கண்ணை இமைக் காப்பதுப்போல் காத்துவந்தேன். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தான் நான் என்னுடைய நாயைப் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை அறிந்தேன். அச்சம்பவம் எனக்கு ஒரு நல்ல பாடத்தைப் புகட்டியது. மணியைக் கண்டவுடன் சில நாட்களுக்கு முன் நடந்த அச்சம்பவம் என் நினைவிற்கு வந்தது. “ராதா! எவ்வளவு நேரம் தான் கைத்தொலைபேசியையே பார்த்துக்கொண்டிருப்பாய்? இப்படி செய்தால் சீக்கிரமாகவே நீ முக்குக்கண்ணாடி போட அவசியமாகும். மணியைச் சற்று நேரம் பூங்காவிற்கு அழைத்துச் செல்!” என்று எனது தாயார் கத்தினார்.இன்னும் வீட்டிலே இருந்தால் அம்மா திட்டுவார். நாம் கீழே சென்றால்தான் அவர் நிறுத்துவார்,” என்று நான் முகம் சுளித்துக்கொண்டே கோபமாக மணியை அழைத்து பூங்காவிற்குச் சென்றேன். மாலை மங்கி இலேசான இருள் கௌவத் தொடங்கியது. காற்றில் மரங்கள் தலை அசைத்தன. அனைவரும் கலகலப்பாக இருந்தனர். அனால் என் முகம் மட்டும் வாடியிருந்தது. மணியோ புத்துணர்ச்சியுடன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறு மணி என்னையும் பூங்காவில் ஓட வைத்தது. விருப்பமில்லாத நான் வேறு வழியில்லாமல் மணியுடன் பூங்கா முழுவதும் ஓடினேன். ஆனால் என் கோபமோ அதிகரித்தது. “நான் எதற்கு மணியைப் பூங்காவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்? நான் யாரையும் தொந்தரவு செய்யாமல் வீட்டில் தானே இருந்தேன்?” என்று கோவைப்பழம் போல் சிவந்துகொண்டவாறே நினைத்தேன். அனால் மணி என் கோபத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் விளையாட்டுத் தனமாகவே இருந்தது. அப்போது மின்னலென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் ஓர் ஓரமாகச் சென்று என் கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டே மணியையும் கவனிக்கலாம். இதே இடத்தில் தானே மணி விளையாடும்? ஆனால் நான் அவ்வாறு நினைத்தது எவ்வளவு தவறு என்பது எனக்குப் பிறகு தான் புரிந்தது. நான் உடனே இந்த யோசனையின்படி நடந்து கொண்டேன். ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டே, ஒரு கண் கைத்தொலைபேசியையும், ஒரு கண் மணியையும் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் நேரம் செல்ல கண்கள் இரண்டும் கைத்தொலைபேசியைப் பார்த்து மணியைக் கவனிக்காமல் இருந்தேன். எவ்வளவு நிமிடங்கள் சென்றதோ தெரியவில்லை. ஆனால் நான் கடைசியாக ஓர் ஒளிக்காட்சியைப் பார்த்து வீடு திரும்ப எண்ணினேன். “மணி! வா, போகலாம்!” என்று மணியைக் கூப்பிட்டேன். ஆனால் பதிலுக்கு மணி குரைக்கவில்லை. திரம்பிப் பார்த்த நான் மணியைப் பார்க்கவில்லை. அப்போதுதான் மணி காணவில்லை என்பதை உணர்ந்தேன். ஒரு கணம் என் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஆனால் மணி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து அங்கும் இங்கும் அலைந்தேன். “மணி! மணி!” என்று தொண்டைக்கிழிய கத்தினேன். என் மனத்தில் பதற்றம் அதிகரித்தது. ஏன் நான் மணியைக் கவனிக்கவில்லை? என் பொறுப்பில் தானே அம்மா அதை விட்டார்! ஆனால் ‘பதறாத காரியம் சிதறாது’ என்று என்னுடைய ஆசிரியர் நிறைய முறை கூறியுள்ளார். அதற்கேற்ப பதறாமல் நிதானமாக யோசித்தால் மணி மீண்டும் கிடைக்கும். இவ்வாறு எண்ணிக் கொண்டே நான் பூங்காவைச் சுற்றி நடந்து மணியைத் தேடினேன். இருப்பினும் எவ்வளவு முறை தேடியும் மணியைக் காணவில்லை. என் மனத்தில் அச்சம் குடியேறியது. முன்பு என் தோழி, ஒரு நாய் இவ்வாறு தொலைந்தபோது உணவில்லாமல் இறந்ததைப் பற்றிக் கூறினாள். இந்த கதையைப் பற்றி நினைத்தபோது என் இதய துடிப்பு ஒரு கணம் நின்றுவிட்டதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. என் கண்கள் குளமாயின. செய்வதறியாது திகைத்து நின்றேன். அப்போது ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாரதியாரின் பாட்டு என் நினைவிற்கு வந்தது. நான் மனத்தில் உறுதி கொண்டால்தான் மணி நிச்சயமாக மீண்டும் கிடைக்கும். அப்போது வட்டாரத்தைச் சுற்றி சுவரொட்டிகள் ஒட்டினால் யாராவது மணியைப் பார்த்தால் நம்மிடம் கூறுவர் என்ற யோசனை தோன்றியது. மணி நமக்கு உறுதியாகத் திரும்பி வரும். இதைப் பற்றி எண்ணிக்கொண்டே வீடு திரும்பினேன். வீட்டுவாசலில் அம்மா எனக்குக் காத்துகொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் நான் தாரைத் தாரையாக அழத் தொடங்கினேன். “அம்மா, மணியைக் கா…” என்று ஆரம்பித்தபோது மணி வீட்டிலிருந்து என்னிடம் ஓட வந்தது. “மணி?” என்று ஆச்சரியமும் இன்பமும் கலந்து மணியைக் கட்டி அணைத்தேன். போன உயிர் திரும்பி வந்தது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் உடனே நடந்ததையெல்லாம் அம்மாவிடம் கூறி மன்னப்பு கேட்டேன். அம்மாவும் நடந்ததைப் புரிந்துகொண்டு நான் தவற்றை உணர்ந்ததே போதும் என்று கூறினார். “லொல் லொல்!” என்று மணி குரைக்கும் சத்தத்தைக் கேட்டு நான் நிகழ்காலத்திற்கு வந்தேன். அச்சம்பவத்திலிருந்து நான், என்றும் நம் பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும் மணியை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றும் உணர்ந்தேன். இனிமேலாவது மணியைக் காணாமல் போகாமல் பார்ததுக்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டேன். நல்ல வேளை அன்று மணி மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பியது. இச்சம்பவமும் இதிலிருந்து நான் கற்றுகொண்ட பாடமும் என் மனதில் அழியா வடுக்களாக ஆழம் பதிந்தது.

No comments: