Wednesday, November 24, 2021

உன் நெருங்கிய தோழி உன் மேல் கொண்ட பொறாமையால், உன்னைவிட்டு விலகக் காரணமாக அமைந்த நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக - ZAFIRAH BINTE SABIR MOHAMED 104 - 2021

அன்று சூரியன் தனது பொன்னொளிக் கதிர்களை உலகெங்கும் பரப்பினான். பறவைகளின் 'கீச் கீச்' என்ற ஒலியைக் கேட்டு நான் எழுந்தேன். அவசர அவசரமாக எனது காலைக்கடன்களை முடித்து பள்ளிக்குப் புறப்பட்டேன். அன்றுதான், உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றனர். எனக்கு மிகவும் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. என் தோழி மாலாவிற்கும் அதே பள்ளி கிடைத்திருந்தது. நாங்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் நெருக்கமாக பழகினோம். அதே உயர்நிலை பள்ளிக்கு மாலாவும் வருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. சந்தோஷத்தில் நான் மானைப் போல துள்ளிக் குதித்துப் பள்ளிக்குச் சென்றேன். அங்கு நான் மாலாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். நானும் அவளும் ஒரே வகுப்பில் இருந்தோம். பள்ளியின் முதல் வாரம் பள்ளியைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள பல விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் போட்டிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனக்கும் மாலாவுக்கும் சிறுவயதிலிருந்தே போட்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும். நாங்கள் அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவோம். அதேபோல் இப்போட்டிகளிலும் கலந்துகொள்ள எங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. மாலாவுக்கு எப்போதும் தான் மட்டும்தான் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரு தவறான குணம். அக்குணத்தை தவிர்க்கச் சொல்லி நான் அவளிடம் பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால், அவள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. நான் அவளுக்கு மீண்டும் ஒரு முறை அவ்வாறு ஒரு குணத்தை கைவிடச் சொல்லி எடுத்துரைத்தேன். ஆனால், எனது அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது. போட்டிகளும் ஆர்வமூட்டும் நடவடிக்கைகளும் தொடங்கின. பல போட்டிகளில் மாலா வெற்றி அடைந்தாள். நானும் சில போட்டிகளில் வெற்றி அடைந்தேன். அது மாலாவுக்கு பிடிக்கவில்லை. அனைத்துப் புகழும் அவளுக்கு தான் கிடைக்க வேண்டும் என்று எண்ணினாள். அதனால், நான் சில போட்டிகளில் கலந்து கொள்ளாமல் விலகினேன். மாலாவுடைய குணத்தை மாற்றுவது மிகவும் முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன். அப்போது, ஒரு நாள் ஓட்டப்பந்தயப் போட்டி ஒன்று வந்தது. மாலாவுக்கு ஓட்டப்பந்தயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால், அவள் அதில் கலந்துகொண்டாள். எனக்கு ஓடுவது என்றாலே பிடிக்காது. அதனால், நான் அப்போட்டியிலிருந்து விலகினேன். மாலா அப்போட்டியில் வெற்றி அடையக் கடுமையாக உழைத்தாள். போட்டியின் நாளும் வந்தது. அனைத்து போட்டியாளர்களும் திடலில் இருந்தனர். அவர்கள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஆயத்த பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நான் மாலாவிடம், "உன்னால் முடியும்!" என்று கூச்சலிட்டேன். அவளும் தன்னம்பிக்கையுடன் இருந்தாள். போட்டி தொடங்கியது. மாலா மின்னல் வேகத்தில் ஓடினாள். அவள் வெற்றி எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தாள். அப்போது தான் இன்னொரு மாணவியும் மாலாவுக்குச் சரிக்கு சமமாக ஓடினாள். அது மாலாவுக்குப் பிடிக்கவில்லை. தான் மட்டும் தான் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணினாள். அவள் உடனே தன்னுடைய கையை நீட்டி அம்மாணவியை விழ வைத்தாள். அதைப் பார்த்த என்னால் எனது கண்களை நம்பவே முடியவில்லை. எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சிலை போல் நின்றேன். இறுதியில் மாலா தான் வெற்றி அடைந்தாள். மாலாவுக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால், அவள் குறுக்கு வழியில் வெற்றி பெற்றது சரியில்லை என்பதை நான் உணர்ந்தேன். என் மனதில் பல கேள்விகளும் எண்ணங்களும் ஓடிக்கொண்டிருந்தன. 'நான் இந்த உண்மையை எனது ஆசிரியரிடம் கூறவா? வேண்டாமா?' 'மாலா என்னுடன் உள்ள நட்பை துண்டித்துவிட்டால்?' என்ற பல கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. இறுதியில், ஆசிரியரிடம் உண்மையைச் சொல்ல முடிவெடுத்தேன். ஏனென்றால், எச்சூழலிலும் உண்மையை மட்டும் தான் கூற வேண்டும் என்று எனது அம்மா எப்போதும் கூறுவார். ஆசிரியரிடம் நான் மாலா குறுக்கு வழியில் வெற்றி அடைந்ததைப் பற்றிக் கூறினேன். என் நெருங்கிய தோழியாக இருந்தாலும் உண்மையைக் கூறிய என்னை என் ஆசிரியர் மெச்சினார். அவர் மாலாவை அவ்வாறு செய்ததற்கு கண்டித்தார். நான் தான் அந்த உண்மையைக் கூறினேன் என்பது மாலாவுக்குத் தெரிய வந்தது. கோபத்தில் அவளுடைய முகம் கோவைப் பழம் போல் சிவந்தது. அவளுக்குக் கிடைத்த புகழ் இப்போது எனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மிகவும் பொறாமை கொண்டாள். அவளுக்குக் கிடைத்த பாராட்டுகளை, உண்மையைக் கூறி நான் அனைத்தையும் கெடுத்துவிட்டதாக எண்ணிப் பொறாமையில் என்னுடன் உள்ள நட்பைத் துண்டித்துக்கொண்டாள். என் இணைபிரியா தோழி, மாலா என்னுடன் உள்ள நட்பைத் துண்டித்துக்கொண்டதை எண்ணி சோகமடைந்தேன். என்னால் பாடங்களில் கவனம் செலுத்த இயலவில்லை. உலகமே இருண்டுவிட்டது போல இருந்தது. பீறிட்டு வரும் துக்கத்தை மென்று விழுங்கினேன். என் மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள சிரமப்பட்டேன். என் ஆசிரியர் என் அம்மாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைப் பற்றி கூறி என்னை பாராட்டினார். 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்' என்ற திருக்குறளுக்கு ஏற்ப என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் என்னை மெச்சினார். நான் அவரிடம் எனது வருத்தத்தைப் பற்றி கூறினேன். அவர் என்னிடம், "நீ கவலைப்படாதே. ஒரு நாள் மாலா தான் உன் மீது பொறாமை கொண்டது தவறு என்பதை உணர்ந்து உன்னுடன் மீண்டும் பழக ஆரம்பிப்பாள்," என்று கூறினார். என் அம்மாவின் சொற்கள் எனக்கு ஆறுதலாக இருந்தது. அச்சம்பவம் என் மனத்தில் கல்லில் செதுக்கிய எழுத்துக்களைப் போல பதிந்தது.

No comments: