Monday, September 15, 2008

Saranya`s Letter

பேருந்துகளில் இளையர் சிலர் நடந்துகொள்வது பொதுமக்களுக்கு இடையூறாகவும் எரிச்சல் ஊட்டும்படியும் இருக்கிறது. இது குறித்துத் தமிழ் முழக்கம் செய்தித்தாளுக்கு ஒரு கடிதம்.


அனுப்புநர்:

மதி
புளோக் 125, அங் மோ கியோ சாலை 12
# 10 – 888
சிங்கப்பூர் 560 125


26.08.08

பெறுநர்:

ஆசிரியர்
தமிழ் முழக்கம்
555, அங் மோ கியோ அவென்யூ 5
சிங்கப்பூர் 569555



மதிப்பிற்குரிய ஐயா,

கரு: பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும் எரிச்சல் ஊட்டும்படியும் நடந்துகொள்ளும் இளையர்கள்


வணக்கம்! பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாகவும் எரிச்சல் ஊட்டும்படியும் பேருந்துகளில் நடந்துகொள்ளும் சில இளையர்களைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவர ‘தமிழ் முழக்கம்’ செய்தித்தாள் உறுதுணையாயிருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். என்னுடைய பல நண்பர்களும் இதைப் ஓப்னறு இளையர்களின் நடவடிக்கைகளால் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.


நான் ஓர் இல்லத்தரசி.சந்தைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் சில இளையர்கள் நாஃன பயணம் செய்துகொண்டிருந்த பேருந்தில் ஏறினர். அவர்களில் பதினைந்து வயதுடைய இளம் பெண்ணும் இளம் பையனும் மிகவும் ஆபாசமான முஐறயில் கட்டித் தழுவிக்கொண்டிருந்தனர். பேருந்தில் உள்ள அனைவரும் அருவருப்புடனும் எரிச்சலுடனும் தங்களைப் பார்ப்பது தெரிந்தும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. மேலும், அவர்கள் பள்ளிச் சீருடை அணிந்திருந்னர். தங்களின் பள்ளிக்கு அவமானம் கொண்டுவருவதை நினைத்துப் பார்க்காமல் அவர்கள் செய்த லீலைகள் என்னை ஆழ்ந்த வருத்தத்திற்கு உள்ளாக்கின. இவர்களால் மற்ற நலல் இளையர்களும் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்புண்டு. இரு இளையர்களின் தாயாகயிருப்பதால் இச்சம்பவம் என் மனத்திரையில் மறுபடியும் ஓடி என்னைத் தூக்கமிழக்கச் செய்துவிட்டது.

இவை தவிர இளையர்கள் செய்யும் அட்டூழியங்கள் பல. பேருந்து பொதுப்போக்குவரத்து என்பதைச் சுத்தமாக மறந்து பல இளையர்கள் அளவுக்கதிகமாகச் சத்தம் போடுகிறார்கள். அச்சத்தத்தால் பலர், குறிப்பாகக் காலையில் வேலைக்குச் செல்வதால் அயர்ந்து தூங்குபவர்களும் மழலைகளும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், மிகவும் பணிவன்பு நிறைந்த நாடு சிங்கப்பூர் என்ற பெயரை மாற்றும் வண்ணம் வாயைத் திறந்தால் சொல்லத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர் இவ்விளையர்கள். இதனால் அதிர்ந்துபோன பல சுற்றுலாப் பயணிகள், சிங்கப்பூரைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? சில இளையர்கள், வேற்று மதத்தினரைப் பற்றியும் இழிவாகப் பெசிப் பலரின் கோபத்தைத் தூண்டுகிறார்கள்.

பேருந்தில் சாப்பிடக்கூடாது என்று தெரிந்தும் சாப்பிடும் இளையர்களுமுண்டு. இது அவர்கள் எந்த அளவுக்குப் பொதுவிதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. சிறு பிள்ளைகள்தான் ஓடிப் பிடித்து விளையாடுவார்கள் என்ற கருத்துக்கு மாறாக, இளையர்களும் அவ்வாறு செய்கிறார்கள். இது கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் முதியோர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இறுதியாக என்னை மிகவும் பாதித்தது இதுதான். சில இளையர்கள் பெரும் கும்பல்களில் ஒளிந்துகொண்டு தங்களுடைய ஈ சிலிங் அட்டைகளைப் பயன்படுத்தாமல் தப்பித்துவிடுகிறார்கள். இன்றைய இளையர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் இருப்பது என்னை ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கடித்தது. அவர்களைத் தட்டிக்கேட்டாலும் தவறே செய்யாததைப் போல் பாசாங்கு காட்டுகின்றனர்.

சிங்கப்பூர் இளையர்கள் பொறுப்பானவர்கள், பக்குமடைந்தவர்கள் என்றெண்ணிய எனக்கு இச்சம்பவங்கள் ஒரு பெரும் அதிர்ச்சியாகவே வந்துள்ளன. ஒரு பக்கம் நமது இளையர்கள் பல போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்க மறுபக்கத்தில் இப்படிப்பட்ட இளையர்களிருப்பது வேதனையளிக்கிறது. அப்படியென்றால் இளையர்களைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். இவ்வாறு என் இளைய பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுவிடுவார்களோ என்று பயம் என்னை ஆட்கொண்டுள்ளது. உங்கள் செய்தித்தாளின் மூலமாவது இவ்விளையர்களின் மனங்கள்மாறி இனி இதைப் போன்று செய்ய நினைக்கும் இளையர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு
உங்கள் உண்மையுள்ள
மதி.
(291 சொற்கள்)
சரண்யா சரவணன் 4 HTL 2008

Janani`s Essay

நீவிர் ஓர் இரவு விருந்து நிகழ்ச்சிக்குச் சென்றீர். குதூகலமாகத் தொடங்கி நடந்துகொண்டிருந்த அந்த நிகழ்ச்சியின் இடையே எதிர்பாராத வகையில் ஒரு குழப்பம் ஏற்பட்டு எல்லாம் தலைகீழாகப் போய்விட்டது. அந்த நிகழ்ச்சியை விவரித்து எழுதுக.
இடம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகள் ஜொலித்தன. பாட்டுச் இசையும் ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டிருந்தது. எல்லோருடைய முகத்திலும் ஆனந்தம் அலை பாய்ந்தது. அன்று என் சித்தப்பா மகளின் கல்யாணத்தையொட்டி அவர், உற்றார் உறவினர் அனவைருக்கும் ஒரு சிறப்பு இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஆகவே, அந்நிகழ்ச்சியில் நானும் என் குடும்பத்தினரும் கலந்துகொள்ளச் சென்றிருந்தோம்.

மணப்பெண்ணாகத் தோற்றமளித்த என் சித்தப்பா மகள் ராதா, அழகான ஒரு புடவையில் அனைவரையும் கவரும் வகையில் காணப்பட்டாள். அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவரது மாப்பிள்ளையும் ‘ஜம்’ என்று இருந்தார். அம்மாப்பிள்ளை, ராதா அமெரிக்காவில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவளைப் பார்த்தாராம். இருவருக்கும் கண்டதும் காதல் மலர்ந்தது. விரைவில் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை வற்புறுத்தியதால் ராதாவும் என் சித்தப்பாவின் சம்மதத்துடன் திருமணத்திற்குச் சம்மதித்தார். ராதா கண்ணைக் கவரும் அழகு படைத்தவள்; நற்குணங்கள் நிறைந்தவள். அவளுக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்று என் பெற்றோர்கள் பேசிக்கொண்டதை நானும் கேட்டேன். ராதாவைப் போல் நானும் காதல் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். நன்கு எனது ‘ஓ’ நிலைத் தேர்வை எழுதி முடித்து, பின்னர் ‘ஏ’ நிலைத் தேர்வையும் சிறப்பாக எழுதித் தேர்ச்சி பெற்று வெளிநாட்டிற்குச் சென்று படிக்க உறுதி கொண்டேன்.

இரவு விருந்து நிகழ்ச்சியில் உணவிற்றகு குறையே இல்லை. அனைத்தும் அற்புதம். விதவிதமான உணவு வகைகள் மலை போன்று தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேசைகள் சுமை தாங்க முடியாமல் உடைந்துவிடும் நிலையில் இருந்தது. நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு அமர்ந்து உண்டேன். ஆட்டம் பாட்டம் கலைகட்டிக்கொண்டிருந்தது. பெரியோர்கள் எல்லோரும் கல்யாணத்தை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பிள்ளைகள் அனைவரும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். நான் மட்டும் அந்த இடத்தில் பதின்ம வயதினராய் இருந்ததால் செய்வதறியாது தவித்தேன். சிறு வயதினிலே எனக்கு ஆட்டம் பாட்டத்தில் ஆர்வம் குறைவு. விருந்து நிகழ்ச்சி சிற்றப்பாவின் தரைவீட்டின் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தது. எனவே, உள்ளே சென்று தொலைக்காட்சி காணலாம் என முடிவு செய்தேன்.

தொலைக்காட்சியில் செய்திகளின் சாரம் ஓடிக்கொண்டிருந்தது. என் சிற்றப்பாவின் வீட்டில். ‘சன் டி.வி’ இல்லாததால் நான் செய்திகளையே பார்க்க முடிவெடுத்தேன். செய்திகள் தான் இன்னும் பத்து நிமிடங்களில் முடிந்துவிடுமே என்று நான் செய்திகளின் முடிவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது முக்கியச் செய்தி அறிக்கை ஒன்று வெளிவந்தது. காவலர்கள் ஒரு முக்கிய ஏமாற்றுக் கும்பலைத் தேடிக்கொண்டிருந்ததாம். அக்கும்பல் அழகான பெண்களாகத் தேடிப் பிடித்து ஆசை வார்த்தை காட்டி கல்யாணம் செய்துகொள்ளுமாம். பின்பு பெண்களின் பணம், சொத்து, நகைநட்டு முதலியவற்றையெல்லாம் சுருட்டிக்கொண்டு அப்பெண்களை அமெரிக்கா போன்ற நாட்டிற்குக் கூட்டிச்சென்று விபச்சார விடுதியில் அம்மாதுகளை விற்றுவிடுவராம். அவர்களைப் பற்றி எச்சரித்துக் காவலர்கள் பல புகைப்படங்களைக் காண்ப்பித்தனர். நான் சட்டென்று திடுக்கிட்டேன். என் கால்கள் என்னைச் சுமக்க முடியாமல் தவிப்பதைப் போல் ஓர் உணர்வு. தொலைக்காட்சியில் திருமண வேடங்களில் ராதாவின் வருங்கால மாப்பிள்ளை தோற்றமளித்தார்.

நான் செய்வதறியாது தவித்தேன். என் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. விரைவாகச் சென்று என் பெற்றோரை அழைத்து வந்தேன். அவர்கள் வாயடைத்துப் போனார்கள். சட்டென்று என் தந்தை காவலர்களுக்குத் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார். பின்பு நாங்கள் மூவரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு எல்லோரிடமும் அமைதியாக நடந்ததைக் கூறினோம். கேள்விப்பட்ட என் சிற்றப்பா சீற்றம் கொண்டு மாப்பிள்ளையை இரண்டில் ஒன்று பார்க்கப்போவதாகக் கிளம்பினார். என் தந்தை மட்டுமே அவரைச் சமாதானப்படுத்தி, கவாலர்கள் வரும்வரை பொருத்திருக்கச் சொன்னார். யாரும் ராதாவிடம் நடந்ததைக் கூறவில்லை; கூறவும் மனசு வரவில்லை. ஆனந்தமாகச் சிரித்துக்கொண்டிருந்த தனது மகளைப் பார்த்துக் கண்ணீர் தேங்கி நிற்கும் விழிகளுடன் அவர் தாயார் தோற்றமளித்தார். என் மனமும் வாணியது.

காவலர்கள் விரைந்து வந்தனர். அதிர்ச்சியில் மாப்பிள்ளையினால் தப்பிக்க முடியவில்லை. கோழியை அமுக்குவதைப் போல் அவனை அமுக்கிக்கொண்டு காவலர்கள் விரைந்தனர். ராதா பல நாட்களாகத் தொடர்ந்து அழுதாள். தனக்கு நடக்கவிருந்த சம்பவத்தை அவளால் பல வருடங்களுக்கு மறகக முடியவில்லை. ஏழுவருடங்கள் கழிந்த பின்னரே தனது திருமணம் தனது பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையையே மணம் புரிந்துகொண்டாள். நானும் என் காதல் கல்யாண ஆசையை மனதிலேயே புதைத்தேன். என் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையையே கட்டிக்கொள்ள முடிவெடுத்தேன். (416 சொற்கள்)

ஜனனி. SEC 4 HTL 2008

Saranya`s Essay

"வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தினால் ( Students Exchange
Programme) சிங்கப்பூர் மாணவர்கள் மிகவும் பயன்பெறுகிறார்கள்"- விவாதிக்க.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்று முழங்கினார் பாரதி. அன்று அவர் கூறியதைப் பிரதிபலிக்கும் விதத்தில் இன்றோ, இளையர்கள் பலர் வேறு வேறு நாடுகளுக்குச் சென்று தங்களைத் தாங்களே முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்கின்றனர் என்றால் அது மிகையாகாது. பார்ப்பதையும் கேட்பதையும் ரசிப்பதையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு செயல்படும் மாணவ சமுதாயம் மட்டும் இது விலக்கா என்ன? இதைப் போன்ற பயனுள்ள நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த பள்ளி நிர்வாகமே பல வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டங்களை ஏற்பாடு செய்கின்றது. ஆனாலும், பலரின் உள்ளங்களை முள் போலக் குத்திக்கொண்டிருப்பது, “சிங்கப்பூர் மாணவர்கள் இதனால் பயன்பெறுகிறார்களா?” என்ற கேள்விதான். வினவியவர்களுக்கு விடையளிக்கும் வகையில் இந்நிலைமையைச் சற்றே ஆராய்வோம்.

முதலில் நன்மைகளைப் பகுத்தாராய்வோம். இயற்கை கனிமங்கள் எள்ளளவும் இல்லாமல் கடும் முயற்சியாலும் உழைப்பாலும் உலக அரங்கில் பல வல்லரசு நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நாடு, எந்நாடு? சிங்கப்பூர். நாம் இந்நிலைக்கு வந்துவிட்டாலும், சிறிய நாடு என்பதனால் நம்மில் பலரின் சிந்தனை வட்டமும் சிறியதாகவே அமைந்திருக்கிறது. இது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. அப்படியிருக்க உலகத்தை நன்கு அறிய வேண்டியவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவசியமே. அப்படி செல்லும்போது மற்ற நாட்டினரின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிக பழக்கவழக்கங்கள் இவர்களுக்கு அத்துப்படியாகின்றன. இவ்வாறானவற்றைக் கற்கும்போது மாணவர்களின் பொதுஅறிவோடு மற்றவர்களுடைய பழக்கவழக்கங்களை மதித்துச் செயல்பட வேண்டிய அவசியமும் பக்குவமும் கூடுகிறது.

இன்றைய மாணவர்களில் பலருக்குச் சொகுசான வாழ்க்கைமுறை கைவசமாகியும் தங்களிடம் இருப்பவற்றை ரசிக்காமல் சலித்துக்கொள்கிறார்கள். இவ்வாறான மாணவர்கள் சற்றே வசதி குறைந்த நாடுகளுக்குச் செல்லும்போது தங்களிடம் இருப்பவை எவ்வளவு மதிப்புடையது என்பதை உணர்கிறார்கள். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சிலர் இருக்கும்போது, நம் அரசாங்கம் நம்மை எப்படி தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள இவ்வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன. எனவே, மாணவர்களுக்குத் தேசிய பற்று வெகுவாக வளர்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

கூண்டிற்குள் அடைபட்ட பட்சிகளாயிருக்கும் பல மாணவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவர்களிடமிருக்கும் தனித்திறமைகள் குன்றின் மேலிட்ட விளக்குப் போல் வெளிவர வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு, என்தோழி ஒருத்தி நன்றாக நடிப்பாள். ஆனால், அவளின் திறமை வெளிபடுத்தப் படவேயில்லை. ஒருமுறை இத்தகைய பரிமாற்றத் திட்டத்தின் மூலம் வெளியூர் சென்றவள் அங்குள்ளவர்களின் உந்துதலால் தன் முழுத் திறமையை வெளிப்படுத்திப் பலரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டாள். உதாரணம் போதுமா? மேலும், மாணவர்கள் தங்களின் திறமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் செய்கிறார்கள். அவற்றினால் அரிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.

இன்றைய உலகில், “ பணமில்லாதவன் பிணம்” என்ற முதுமொழியைப் பின்பற்றி, மனித உறவுகளை உதாசீனபடுத்துபவர்கள் பலர். ஆனால், மனித வாழ்வின் அடிப்படையே இத்தகைய உறவுகள் தான். இதைப் போற்றும் விதமாக மாணவர்கள் சக வெளிநாட்டு மாணவர்களுடன் பேசிப் பழகி, நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். “உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவரின் வாக்கினபடி பல உண்மையான நட்புகள் நிலைநாட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் இதே நட்புகள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையோ குடும்ப வாய்ப்புகளையோ ஏற்படுத்தித் தரலாமல்லவா?

சிங்கப்பூர் மாணவர்கள் இவற்றையெல்லாம் வெளிநாட்டிற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல் வேறு நாடுகளிலிருந்து வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் வாயிலாக இங்கு வந்திறங்கும் மாணவர்களின் மூலமும் நம் நாட்டு மாணவர்கள் இவற்றைக் கற்றுக்கொள்ளலாம். ஆகவே, இறுதியாக இத்திட்டம் பல வகையில் பயனளிக்கின்றது.

இறுதியாக இவ்வாறான திட்டங்கள் இத்தனை அனுபங்களையும் குறைந்த விலையில் வழக்குகின்றன. பள்ளி ஏற்பாடு செய்யும் சுற்றுலா என்பதினால் மாணவர்களுக்குப் பல சலுகைகள் கிடைப்பது திண்ணம். சொந்தச் செலவில் போவதைவிட இது மலிவானதே. பெற்றோருக்கும் பாரமில்லை. அதோடு பள்ளி மாணவர்கள் அன்றாகச் செல்லும்போது அவர்களிடையே உள்ள புரிந்துணர்வும் ஒற்றுமையும் கூடுகிறது. குடும்பத்தோடு செல்லும்போது ஒரு மாணவனுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெற்றோரோ பணிப்பெண்ணோ இருப்பார்கள். ஆனால், சக நண்பர்களுடன் செல்லும்போது ஒருவன் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறான். இதனால், அவனுடைய பொறுப்புணர்வு கூடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையல்லவா?

அப்படியென்றால்,வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத்தினால் தீமைகளே இல்லையா? நிச்சயமாக இருக்கின்றன. சில மாணவர்கள் ஓரிரு நாட்களுக்கு வெளிநாட்டு மாணவர்களுடன் தங்கிவிட்டு அவர்களுக்குப் பிரச்சனைகளேயில்லாததைப் போல் நினைத்து அத்தகைய வாழ்க்கைமுறைக்கு ஏங்கத் தொடங்குகின்றனர். அவர்களைக் கண்டு பொறாமைபடுகின்றனர். நம் நாடும் வீடும் ஏன் இப்படியில்லை என்று நினைத்து அவற்றை வெறுக்கத் தொடங்குகின்றனர். இது அவ்ரகளில் கோபம், தாபம் ஆகியவற்றை ஏற்படுத்தி அவர்களின் மனங்களைக் கரையாக்குகின்றன.

நட்பு கிடைக்கலாமென்றேன். அதுவே, கூடாநட்பாகிவிட்டால்? கவனிக்க வேண்டிய விஷயம் இது. மேலும், சில மாணவர்கள் தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அதிலும் மேல் நாட்டினரின் ஆபாசமான உடைகள், அபத்தமான செயல்முறைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டால்?

சரி அப்படியென்றால், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுதான் என்ன? முதலில் பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்குப் பயனிக்கும் வகையில் இருக்கக்கூடிய வெளிநாட்டுப் பரிமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியம். ஆனாலும், எவ்வளவுதான் பள்ளி நல்ல விதமாக முடிவெடுத்தாலும் அத்திட்டத்தை எவ்வகையில் பயன்படுத்துவதென்பது ஒவ்வொரு மாணவனின் கையில்தான் உள்ளது. பாலும் தண்ணீரும் கலந்த கலவையிலிருந்து பாலை மட்டும் பருகும் அன்னப்பறவையைப் போலிருக்க அவன் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தினால் சிங்கப்பூர் மாணவர்கள் மிகவும் பயன்பெறுகிறார்கள் அதை ஒழுங்காகப் பயன்படுத்துவோருக்கு இத்திட்டம் முக்கனியாய் இனிக்கும் என்பது திண்ணம்.

(527 சொற்கள்)
சரண்யா சரவணன். SEC 4 HTL – 2008

Sunday, August 3, 2008

Seyyul - Module 1

மாணவர்களே சில செய்யுள்களை இங்கே கொடுத்துள்ளேன். அவற்றை நீங்கள் உங்கள் கட்டுரைகளில் மேற்கோள்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதைவிடச் சற்று நீளமான செய்யுள்களை அடுத்த முறை தருவேன்.
செய்யுள் - கொன்றை வேந்தன்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

( நாம் நம் பெற்றோர்களை வணங்க வேண்டும். அவர்களே முதலில் வணங்கத் தக்கப் பெருமை உடையவர்கள்)

2. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.

( கல்வி ஒருவர் உலில் உள்ள உறுப்புகளிலேயே மதிப்பு மிக்க கண்ணைப் போன்றது. எனவே, அக்ல்வியை மதித்துப் போற்ற வேண்டும்)

3. கீழோர் ஆயினும் தாழ உரை.

(நாம் நம்மைவிட அறிவிலோ செல்வத்திலோ வயதிலோ குறைந்த ஒருவரிடம் பேசினாலும் அவரை அலட்சியப்படுத்தாமல் பணிவாகவே பேச வேண்டும்.)

4. சூதும் வாதும் வேதனை செய்யும்.

(வஞ்சகமான செயல்களைச் செய்யக்கூடாது. ஏனென்றால் அவை நமக்குத் துன்பத்தையே உண்டாக்கும்.)

5. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

(சோம்பேறிகள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
அவர்கள் தம் வாழ்வில் துன்பம்தான் மிஞ்சும். அதனால்
அவர்கள் வருந்த நேரிடும்.)

6. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

(ஒருவருக்கு அவருடைய அப்பாவின் அறிவுரையே மேலானது.)

7. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.

(அம்மாவைவிட வணங்கத் தக்க வேறு ஒரு கோவில் இல்லை. அதாவது அம்மாவை மதித்துப் போற்ற வேண்டும்.)


8. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
(கடல் கடந்தும் வெளிநாடுகளுக்குச் சென்று பொருட்செல்வத்தைச் சம்பாதித்து வரவேண்டும்.)


9. தீராக் கோபம் போராய் முடியும்.
(ஒருவர் மேல் நாம் கொண்ட கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து இறுதியில் அந்தக் கோபத்தை மறந்தே விடவேண்டும். அதற்கு மாறாக மேலும் மேலும் அவர் மேல் கோபத்தை வளர்த்துக்கொண்டே போனால், சண்டையே ஏற்படும். அது தீராப் பகையாய் முடிந்துவிடும்.)

10. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.

(நல்ல இணக்கத்தோடு பழகாவிட்டால் துன்பமே ஏற்படும்.)


11. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.

(பாலோடு உண்ணும் எளிய உணவே ஆனாலும், உண்ண வேண்டிய காலத்தில் உண்ண வேண்டும்.)

12. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
(பெரிய செல்வந்தன் ஆனாலும், முன்பு உண்ட உணவு நன்றாகச் செறிக்கச் செய்து அதன்பிறகு உண்ண வேண்டும்.
பெரிய செல்வந்தன் ஆனாலும், உணவுக்காக அதிகம் செலவிடாமல், தன் செல்வ நிலை அறிந்து அளவோடு செலவு செய்து உண்பாயாக.)

Saturday, August 2, 2008

Thirukkural Prize Winners











தமிழ்மொழி பண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் நடத்திவரும் திருக்குறள் தொடர்பான போட்டியில் 2008 ஆம் ஆண்டு கலந்துகொண்டு பரிசு பெற்ற நம் பள்ளி மாணவர்கள் மீனாட்சி, ஜனனி.

Minu`s Letter

அன்பு மாணவர்களே

அண்மையில் நடைபெற்ற தாஜ்மஹால் நாடகத்திற்கு நம் பள்ளியிலிருந்து பன்னிரெண்டு மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தேன். அந்நாடகத்தை மாணவர்கள் விரும்பிப் பார்த்து மகிழ்ந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அது தொடர்பாக மாணவர்களை ஒரு கடிதம் எழுதச் சொன்னேன். மாணவர்களின் கடிதங்களிலேயே மீனு என்னும் பெயர்கொண்ட மாணவர் எழுதிய கடிதம் மிகச் சிறப்பாக இருந்தது. எனவே, அவரின் எழுத்தார்வத்தையும் ஆற்றலையும் ஊக்குவிக்கும் வண்ணம் அதை இங்குப் பிரசுரிக்கிறேன். மாணவர்கள் படித்துப் பார்த்துப் பயன் அடையலாம்.
இனி மற்ற மாணவர்களின் சிறந்த படைப்புகளும் இங்கு இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தக்கொள்கிறேன்.
அன்புடன்
கு. உத்தமன்.
தமிழாசிரியர்
ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளி.



தாஜ் மஹால் நாடகத்திற்குப் பாராட்டுக் கடிதம்.



திரு. செல்வாநந்தன்,
ரவீந்திரன் நாடகக்குழு,
சிங்கப்பூர்.

13.7.2008

மதிப்பிற்குரியீர்,

கரு: தாஜ் மஹால் நாடகத்திற்குப் பாராட்டு

வணக்கம் ஐயா, சமீபத்தில் தாங்கள் இயக்கிய 'தாஜ்மஹால் ' என்ற அற்புத நாடகத்தைக் கண்டு களித்தேன். அதை நான் கண்டு பல வாரங்கள் ஆகியும், தாஜ்மஹால் நாடகத்தின் அருமையான நடிப்பும், இசையும் கண்ணைக் கவரும் காட்சி அமைப்பும் இன்னும் என் இமைகளிலேயே நிற்கிறது.

தாஜ்மஹால் நாடகம் எல்லாக் கோணங்களிலேயும் மிகச் சிறப்பாக நடந்தேறியது என்று சொன்னால் அது மிகையாகாது. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? முதலில் நாடகத்திற்குத் தேவை ஒரு கதை. ஏற்கெனவே நடந்த ஒரு நிகழ்ச்சியை நாடகமாக்குவது என்றாலும் கூட, நாடகத்திற்கு எது பொருத்தமாக இருக்கும். பார்வையாளர்கள் கதையைப் புரிந்துகொண்டு ரசிக்கும் வண்ணம் எது இருக்கும் என்று அறிந்துகொண்டு, கதையை மிகச் சிறந்த முறையில் வடிவமைத்துள்ளார் கதை எழுதியவர்.

மிக அற்புதமாகக் கதை இருந்தாலும்கூட நாடகத்தின் முழு அழகைக் குன்றின் மேல இட்ட விளக்குப்போல வெளிக்கொண்டுவர நல்ல திறமை வாய்ந்த நடிகர்கள் இன்றியமையாதவர்களாவர். அந்த அடிப்படையில் தாஜ்மஹாலில் நடித்த நடிகர்களின் அபாரமான திறமைக்குத் தனிப் பாராட்டு தேவை என்று நான் கருதுகிறேன். சிறுசிறு காதாப்பாத்திரங்களிலிருந்து, மிகப்பெரிய கதாப்பாத்திரங்கள்வரை நடிகர்கள், தம் நடிப்பில் ஒருவரை ஒருவர் விஞ்சினார்கள். நடிகர்களின் இயல்பான நடிப்புத் திறமை பார்வையாளர்கள் அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. உள்ளூர்க் கலைஞர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர் என்று மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு நிரூபித்துவிட்டனர் நடிகர்கள்.

வசனங்களும் இசையுமில்லாத எவ்வித நாடகத்தையோ திரைப்படத்தையோ காண விரும்பமாட்டார்கள் மக்கள். ஆக, வசனங்களும் இசையும் நாடகம் ஒன்றிற்குப் பெரும் பங்கு வகிக்கின்றன. தாஜ்மஹால் நாடகத்தின் அற்புதமான வசனங்கள் தமிழின் அழகை மிகப்பிரம்மாதமாக வெளிக்கொண்டு வந்தன. அதே சமயத்தில் அனைத்துப் பார்வையாளர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்தது.

மேலும், தாஜ்மஹால் நாடகத்தின் இன்னிசை அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் அரங்கம் முழுவதும் இன்னிசை மழை பொழிய வைத்த இரு பிரதான பாடகர்களுக்கும் எனது சீரிய பாராட்டுகள். செவிகளில் தேன் வந்து பாய வைத்த இசையுடன் இணைந்து ஆடி, கண்களுக்கு விருந்தளித்தனர் நடன மணிகள். மிகக் கடினமான நடன அசைவுகளையும் அலட்சியமாகச் செய்து பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர் நடனத் தாரகைகள்.

தாஜ்மஹால் நாடகத்தின் மேடை அலங்காரங்களும் இவை அனைத்துக்கும் சிகரமாக அமைந்தது. நடிகர்களின் ஆடை அணிகலன்களும், நடிகர்களின் சிகை அலங்காரங்ளும் பார்வையாளர்களைச் சுல்தான் காலத்திற்கே இழுத்துச் சென்றுவிட்டது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளும் அற்புத அலங்காரங்களும் உடை அலங்கரிப்பு நிபுணரின் கலைத்திறனைச் சித்தரித்தன.

தாஜ்மஹால் நாடகம் இவ்வளவு அருமையாக நடந்தேறியது நடிகர்களும் அதில் பங்கு பெற்ற அனைவரும் செய்த விடாமுயற்சியையும் அவர்கள் இரவு பகலாக உழைத்துச் சிந்திய வியர்வைத் துளிகளையும் மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. தாஜ்மஹால் என் மனத்திரையில் நீங்கா இடம் பெற்றுவிட்டது என்றே கூறலாம். இவ்வளவு அற்புதமான இணையற்ற நாடகத்தைப் பார்க்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாஜ்மஹால் நாடகத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக வெற்றியடையச் செய்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இப்படிக்கு.

R. மீனு.
4 E1, HTL ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி
சிங்கப்பூர்.

Monday, January 21, 2008

இளையர்கள் சுயநலவாதிகளா?

இக்கால இளையர்கள் குடும்ப நலனையோ, பள்ளிக்கூட நலனையோ நினைக்காமல் தங்களின் சுய நலத்தை மட்டுமே நினைத்துச் செயல்படுகிறார்கள். - இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எழுதவும்.