Sunday, May 5, 2024

ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை. விவாதிக்க.

லக்‌ஷணா ராஜதுரை உயர்நிலை 3 - 2024 ஆம், ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை என்பது என் கருத்து. ஆற்றல் என்றால் திறமை. அதனால், ஒருவர் ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ திறமையுடையவராக இருக்கவேண்டும். திறன் என்பது செயல், தொழில், வேலை முதலானவற்றில் திறமையாகச் செயல்படும் ஆற்றலைக் குறிக்கின்றது. பண்பு என்பது குணம், தன்மை மற்றும் இயல்பைக் குறிக்கின்றது. பண்புகள் இருப்பதைவிட திறன்கள் இருந்தால்தான் ஒருவரால் ஆற்றல் மிகுந்த தலைவராகச் செயல்பட முடியும். ஒருவருக்குத் திறன்கள் இருந்தால் பண்புகள் தானாகவே இருக்கும். எனவே, திறமையாக செயல்படத் திறன்கள் அவசியம் தேவை என்பதையும் திறன்கள் இருந்தால் பண்புகள் தானாகவே வளரும் என்பதையும் இக்கட்டுரையில் காண்போம். முதலாவதாக, தீர்வு காணும் திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். தலைவர்கள் அடிக்கடி சவால்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்வார்கள். சிக்கல்களை அடையாளம் கண்டு, மூல காரணங்களைப் பகுப்பாய்வு செய்து, பயனுள்ள தீர்வுகளைக் காணத் தீர்வு காணும் திறன் தேவை. குழு உறுப்பினர்களிடையே நம்பிக்கையைப் பெறவும், யாரையும் சார்ந்து இருக்காமலிருக்கவும் இத்திறன் உதவும். தீர்வு காண்பதன் மூலம் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, சவால்களைச் சமாளிக்கும்போது நாம் மீளும் தன்மையை வளர்த்துக்கொள்கின்றோம். அதோடு, பிரச்சனைகளுக்குப் புதுமையான தீர்வுகளைத் தேடிக் கண்டுப்பிடிப்பது கற்பனையாற்றலையும் தரும். ஆகவே, ஆற்றல் மிக்க தலைவர்களுக்கத் தீர்வு காணும் திறன் தேவை. இரண்டாவதாக, தொடர்புத்திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். தகவல்களை விரைவாகவும் சரியாகவும் வழங்கும் ஆற்றல் ஒரு தலைவருக்கு மிக அவசியம். மற்றவர்களது கருத்துக்களைக் காதுகொடுத்தக் கேட்பதும் தொடர்புத்திறன் ஆகும். அதுமட்டுமில்லாமல், எத்தகைய செய்திகளை எந்த நேரத்தில் வழங்க வேண்டுமோ அவற்றைப் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான வடிவத்தில் வழங்குவது தொடர்புத்திறன். தொடர்புத்திறன் தவறான புரிதல்களையும் பிழைகளையும் குறைத்து, கருத்துக்கள் தெளிவாக தெரிவிக்கப்படுவதை உறுதி செய்கிறது. தொடர்புத்திறன் இருந்தால் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, தெளிவாகத் தொடர்புகொள்ளும்போது கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதிலும் நம்பிக்கையை அதிகரித்து, தன்னம்பிக்கையையும் துணிவையும் அளிக்கின்றது. மூன்றாவதாக, தகவமைத் திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடப்பதே தகவமைத் திறனாகும். திறமையான தலைவர்கள் துன்பங்களை எதிர்கொள்ளும்போது நெகிழ்வுடனும் திறந்த மனத்துடனும் இருப்பதன் மூலம் தகவமைப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்கள். இன்றைய வேகமான மற்றும் சுறுசுறுப்பான உலகில், தகவமைப்புத் திறனைக்கொண்டுள்ள தலைவர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப உத்திகளையும் அணுகுமுறைகளையும் மாற்றி வெற்றி பெறலாம். தகவமைத் திறன் இருந்தால் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, தகவமைக்கக்கூடிய தலைவர்கள் புதிய யோசனைகள் மற்றும் அணுகுமுறைகளுக்குத் திறந்த மனத்துடன் இருப்பர். எனவே அவர்கள் பல தகவல்களைக் கற்றுக்கொண்டு கற்பனையாற்றலை வளர்த்துக்கொள்வர். இறுதியாக, துணிவுடன் முடிவெடுக்கும் திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். இத்திறன் தலைவர்களைத் தயக்கமின்றி விரைவாக முடிவெடுக்க உதவுகிறது, ஏனெனில் அவர்கள் ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். துணிவுடன் முடிவெடுக்கும் திறனைக் கொண்ட தலைவர்கள் தமது முடிவுகள் மேல் நம்பிக்கை கொண்டிருப்பர், எனவே அனைவரும் அவர்களை நம்புவார்கள்; மதிப்பளிப்பார்கள். துணிவுடன் முடிவெடுக்கும் திறன் இருந்தால் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, துணிவுடன் முடிவெடுக்கும் தலைவர்கள் சுயமாகச் செயற்படுவர்; ஒரு முடிவுக்கு வரும்போது மற்றவர்களின் கருத்துக்களைச் சார்ந்திருக்கமாட்டார்கள். உலகில் பிரபலமான தலைவராகத் திகழ்ந்த திரு லீ குவான் யூ தொடர்புத்திறனைக் கொண்டிருந்தார். அவர் தமது பார்வைகளையும் கொள்கைகளையும் பொதுமக்களிடம் திறம்பட வெளிப்படுத்தினார். தெளிவாகவும் உறுதியாகவும் தொடர்புகொள்ளும் திறன் அவரது முயற்சிகளுக்கு ஆதரவைப் பெறவும் வேறுபட்ட விருப்பங்களைக் கொண்டுள்ள மக்களுக்கு ஒருங்கிணைப்பைப் பெற்றுக்கொடுக்கவும் உதவியளித்தது. அதுமட்டுமின்றி, அவர் மூலோபாய சிந்தனை திறனைக் கொண்டிருந்தார். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியையும் இன நல்லிணக்கத்தையும் உறுதி செய்ய தகுந்த கொள்கைகளையும் முயற்சிகளையும் எடுத்தார். ஆகவே, பல திறன்களைக் கொண்டிருந்த திரு லீ குவான் யூ ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இந்தியாவில் பார்வையற்றவராகப் பிறந்தார், ஶ்ரீகாந்த் பொலா. சிறுவயதிலேயே அவரைக் கைவிட அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறினர். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அவரது பெற்றோர் அன்புடன் அவரை வளர்த்தனர். அவர் சிரமப்பட்டுப் படித்தார்; பெறோரும் அவருக்கு ஆதரவளித்தனர். இறுதியில், அவர் ஒரு $80 மில்லியன் நிறுவனத்திற்கு “சி.யி.ஒ”வாக திகழ்ந்தார். வணிக வேலைகளைக் கற்றுக்கொள்ள காது மற்றும் கை போன்ற பிற புலன்களைப் பயன்படுத்தும் திறனை வைத்துத் தான் அவர் அவ்வளவு பெரிய நிறுவனத்திற்கே தலைவராகியிருப்பார். எனவே, ஶ்ரீகாந்த் பொலா என்பவர் ஆற்றல்மிக்க தலைவருக்கு மற்றொரு நல்ல உதாரணமாகத் திகழ்கிறார். ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்கத் தலைமைத்துவத் திறன்களைவிட பண்புகளே தேவை எனச் சிலர் கருதுவர். அவர்கள் பண்புகள் தான் ஒரு தலைவருக்கு அடிப்படையாக இருக்க வேண்டியவை எனக் கூறுவர். ஆனால், நான் அதை மறுக்கிறேன். பண்பு என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டியது. திறன்கள் இருந்தால்தான் ஒரு மனிதனால் தலைவனாக முடியும்; பண்புகள் இருந்தால் மட்டும் போதாது. ஏனெனில், அந்தப் பண்புகளைச் செயற்படுத்த திறன்கள் தேவை. உதாரணத்திற்கு, ஒருவருக்குத் துணிவு என்ற பண்பு இருப்பதோடு துணிவுடன் முடிவெடுக்கும் திறன் இருந்தால் தலைவனாக இருக்கலாம்; ஆனால், துணிவு என்ற பண்பு இருந்தும் துணிவுடன் முடிவெடுக்கும் திறன் இல்லாவிட்டால் அவன் சாதாரண மனிதனாகத் தான் கருதப்படுவான். எனவே, பண்பு இருந்தும் திறன் இல்லாவிட்டால் ஒரு மனிதன் தலைவராக முடியாது; ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ முடியாது. சுருங்கக்கூறின், ஒருவர் ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ, பண்புகளைவிட திறன்களே தேவை. ஒரு தலைவரைச் சாதாரண மனிதரிடமிருந்து வேறுபடுத்துவது அவரிடமிருக்கும் திறன்கள் ஆகும். பண்புகள் என்பது பக்க உணவு போன்றது; திறன்கள் என்பது பிரதான உணவு போன்றது. பிறதான உணவு இல்லாமல், பக்க உணவை மட்டும் எவ்வாறு சாப்பிட முடியாதோ, அதே போல திறன்கள் இன்றி, பண்புகளை மட்டுமே கொண்ட ஒரு மனிதனால் ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ இயலாது. ஆனால், பக்க உணவு இல்லாமலும் பிரதான உணவை எவ்வாறு சாப்பிடமுடியுமோ, அதே போல பண்புகள் இல்லாமலும், திறன்களைக் கொண்ட மனிதன் தலைவராகத் திகழ முடியும்; சிறிது சுவையாக மட்டும் இருக்காது. ஆகவே, ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை என்பதே என் வாதமாகும்.

No comments: