Tuesday, September 10, 2019



2017 இல்  பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வென்ற RGS மாணவிகள்



RI இல் நடைபெற்ற இலக்கியப் போட்டிகளில் சவால் கிண்ணம் வென்ற மாணவியர்க்குழு
 

கவிமாலையின் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வென்ற மாணவியர்



 கல்வியமைச்சின் எழுத்துத் திறன் போட்டியில் கலந்துகொண்டு வென்ற மாணவியர்கள் 
ஷக்தி மோகன் 
ஆனந்தன் விஷ்ணுவர்தினி

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்க் கழகம்  மாதந்தோறும் நடத்தும் கதைக் களம் எனும் சிறுகதை எழுதும்போட்டி, சிறுகதைத் திறனாய்வுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவியர்க்குழு

 கதைக்களப் போட்டியில் பரிசு வென்ற இனியா செந்தில்குமார்

பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்ட பரிசு வென்ற மாணவி சுபத்ரா மணிகண்டன்,  மலேசியா சென்று பரிசைப்பெற்றுவந்தார்.  போட்டியாளர்கள் 100 சிறுகதைகள்   தெரிவு செய்து புத்தகமாகப் பதிப்பித்தார்கள். அவற்றுள்  சுபத்ரா மணிகண்டன் எழுதிய கதையும் விஷ்ணுவர்தினி எழுதிய கதையும் இடம்பெற்றுள்ளன.  
 







RGS இல் உயர்நிலை மூன்றில் பயிலும் அனைத்து   

மாணவிகளுக்கான கற்றல் பயணம்  - 2017














 2017 - RGS     இல் சீனப்புத்தாண்டுக்  கொண்டாட்டம் - அதிர்ஷ்ட கடவுளாக  வேடமிட்டது





 

Monday, September 9, 2019



2018 - RGS மாணவியரோடு  எழுத்தாளர் கலந்துரையாடல்

                                                          
கூவி அழைக்குது காகம் எனும்  நூல் ஒரு கடித இலக்கியம்.
அந் நூலில் உள்ள  கட்டுரைகளை  வாசித்த பின்பு எழுத்தாளர்
திரு மாசிலாமணி அன்பழகனோடு 2018 இல்  மேற்கொள்ளப்பட்ட  
இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வை ஒட்டிய படங்களும் பதிவுகளும்











2017 - RGS மாணவியரோடு  எழுத்தாளர் கலந்துரையாடல்

                                                          
கூவி அழைக்குது காகம் எனும்  நூல் ஒரு கடித இலக்கியம்.
அந் நூலில் உள்ள  கட்டுரைகளை  வாசித்த பின்பு எழுத்தாளர்
திரு மாசிலாமணி அன்பழகனோடு 2017 இல்  மேற்கொள்ளப்பட்ட  
இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்வை ஒட்டிய படங்களும் பதிவுகளும்


















2016  பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வென்றவர்கள்


 2016 செயலி உருவாக்கும் 
போட்டியில்  முதற்பரிசு, இரண்டாம் பரிசு இரண்டையும்
வென்றவர்கள்

 ஷக்தி மோகன்
 சுஜா  ஞானசேகரன்
 தர்ஷிணி 
 சோடசி 


 2016 நாடகப்போட்டியில்
சவால் கிண்ணம் வென்றவர்கள் 


 வான்ஷிகா பாரதி, நிகாரிகா
 கோபிகா, சிநேகா முரளி
 காயத்ரி, ஜெஸ்வின்
தேவன் பூஜா, ஆ. விஷ்ணு வர்திணி

கவிமாலை அமைப்பு நடத்திய கவிதை எழுதும்போட்டி வெற்றியாளர் - 2016


ஷக்தி மோகன் 


 2016 - சிகரம் போட்டி வெற்றியாளர்கள்

சிடார் - விக்டோரியா தொடக்கக் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்தது
1. தாரணி
2. ஜெயஸ்ரீ
3. மகிமா 
4. கிருத்திகா
5. சுபிக்ஷா 
6. தேவன் பூஜா
7.சரண்யா
8. பவித்ரா
9.ஷக்தி 
10. காயத்ரி
11. சுஜா 



 2016 - RI - நடத்திய பல்வேறு போட்டிகளில்  வென்று சவால் கிண்ணம் கைப்பற்றியவர்கள்






Sunday, September 8, 2019

2019 - RGS இல்  உள்ளூர் எழுத்தாளருடன் ஒரு கலந்துரையாடல்

கட்டுரை எழுதிய மாணவிகள்:
ஆனந்தன் விஷ்ணு வர்தினி 
மாதவன்  காருண்யா   

தாய்மொழியாம் தமிழ்மொழியிலான கவிதை, கதை, கட்டுரை எனப் பல்வேறு எழுத்து வடிவங்களைப் படித்துத் தேரலாம். ஆனால், இவற்றைத் தாண்டி, இப்படைப்புகளின் உட்கருத்தை, கதாசிரியரின் மனத்தை, எண்ண ஓட்டங்களை, சரிவரப் புரிந்துகொள்ள, இராஃபிள்ஸ்  பெண்கள் பள்ளி மாணவர்களாகிய எங்களுக்கு மிக அரிய வாய்ப்புக் கிட்டியது.
உயர்நிலை நான்கு மாணவிகளாகிய நாங்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக,  உள்ளூர் எழுத்தாளரான  திரு யூசுப் ராவுத்தர் ரஜித் அவரது ‘உயர்ந்த உள்ளம்' என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளை வகுப்பு நேரங்களிலேயே அவ்வப்போது  படித்து வந்தோம். குழுக்களாகப் பிரிந்து  கதாசிரியர் சமூகத்துக்குச் சொல்லும் செய்தி, கதை சொல்லும் உத்தி,  சொல்லாட்சி, மொழிநடை முதலான  இலக்கிய இயல்புகள் குறித்து விவாதித்துப் புரிந்துணர்வை மேம்படுத்திக்கொண்டு வந்தோம். இதன் மூலம்  கதைகள் வழித் தனிமனிதனுக்கும்  சமூகத்துக்கும் எழுத்தாளர் சொல்லவிரும்பும் வாழ்வியல் உண்மைகளையும் புரிந்துகொண்டோம். ஆழமான வாழ்க்கைப் பாடங்களைப் பிரதிபலிக்கும் இந்த இலக்கியக் கதைத்தொகுப்பினால், சமூகம் மற்றும் உலகக் கண்ணோட்டங்களை விரிவுபடுத்திக்கொண்டோம். 




எங்கள் ஆசிரியர் திரு கும்பலிங்கம் உத்தமன், திரு ரஜித் அவர்களை வகுப்பு நேரத்தில் நேரில் சந்தித்து உரையாடநேற்று ஏற்பாடு செய்திருந்தார். கலந்துரையாடலின்போது ஒரு கதாசிரியரையும் தாண்டி,  பழுத்த அனுபவமுடையவரை,  அறிவில் முதிர்ச்சி பெற்றவரை, சமுதாய அக்கறையுள்ள ஒருத்தரை நாங்கள் அறிந்துகொண்டோம். திரு ரஜித் அவர்கள் தமது சொந்த அனுபவங்களையும் பார்வைகளையும் ஒளிவு மறைவின்றி இளையர்களுக்குப் புரியுமாறு அழகாக எடுத்துக்கூறினார். “ஒவ்வொரு மாணவியும் ஒரு ஆழ்கடல். உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் நீர்மட்டத்தில் பயணிக்கும் கப்பல்கள். ஒரு பத்து மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே வெளிக் காரணங்களால் நீர் சலசலக்குமே ஒழிய, உங்களது தனித்திறமையை யாராலும், எதுவாலும் அசைக்கமுடியாது. நேரம் வரும்போது அதுவாக வெளிப்படும்,” என எங்களுக்கு மன தைரியம் ஊட்டும் வண்ணம் அவர் பேசியது, எங்கள் அனைவரையும் ஈர்த்தது, எங்களுக்கு ஒரு புதுவித உத்வேகத்தை அளித்தது. 

கதைக் கரு ஒன்றினை மனத்தில் வைத்துக்கொண்டால் அதை எங்குச் சென்றாலும் எந்நேரமானாலும் நினைத்துக்கொண்டே, அசை போட்டுக்கொண்டே இருக்கவேண்டும் எனக் கூறி, எங்களை எழுதத் தூண்டினார். அதேப் போலப் படிப்பும் கல்வியும் புத்தகத்தைத் தாண்டி நமது எண்ணங்களில் நிறைந்திருக்கவேண்டும் என்றார். இதுபோன்ற பல வாழ்வியல், உலகியல் கருத்துக்களைச் சிங்கப்பூர்ச் சுழலுக்குத் தொடர்புப்படுத்தி மிக நயமாக, உணர்ச்சிபூர்வமாக சொல்லிச் சென்றது எங்களுக்கு வாழ்வு முழுவதும் மனத்தில் நிலைத்திருக்கும் என்றால் அது மிகையாகாது. 


வெறும் தேர்வுகளுக்கு மட்டும் நித்தம் பயிலாமல் இது போன்ற புத்தாக்கமான, நூதன முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் தமிழ்மொழியின் சிறப்புகளை, வாழ்வியல் அனுபவங்களை, சமூகத்தில் இளையர்களாகிய நாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளைக் கற்றுக்கொள்வதோடு நில்லாமல் மனதார உணர முடிகின்றது.  இக்கலந்துரையாடல்கள் வருங்காலத்தில் மேலும் பல கதாசிரியர்களோடு நிகழ வேண்டும் என நாங்கள் அனைவருமே விருப்பப்படுகின்றோம். 
          ***************************************************************************************








Monday, July 22, 2019

தகவல் தொடர்பு தொழில்நுட்ப வாரத்தையொட்டி உன் பள்ளியில் ஒரு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. நீ அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவிருக்கிறாய். கைத்தொலைப்பேசிகளைப் பொது இடங்களில் பயன்படுத்துவதற்கு விதிகள் தேவை என்னும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்

கட்டுரையாளர் :  Sruthi Annamalai

இங்கு வருகை தந்திருக்கும் தலைமையாசிரியர்களுக்கும், துணைத் தலைமையாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சக மாணவர்களுக்கும், மதிப்பிற்குரிய நீதிபதிகளுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.
காற்று, நீர், உணவு, ஆகியவை மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. ஆனால், இருபத்தொன்றாம் நூற்றாண்டிலிருந்து இப்பட்டியலில் கைத்தொலைபேசிகளும் இணைந்துவிட்டன என்று சொன்னால் அது மிகையாகாது. கைத்தொலைபேசிகள் இல்லாமல் நம்மில் பலர் மூச்சு விட முடியாத நிலையை அடைந்திருக்கிறோம். சிலர் அதை குளிக்கும்போது கூட அருகில் வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவையோரே, நாம் கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. 


நம் சௌகரியத்திற்காக உருவாக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் இக்காலத்தில் நம் வாழ்க்கைமுறையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது வெள்ளிடை மலை. பொது இடங்களில் நம்மை சுற்றியுள்ளவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். ஆனால், நாம் கைத்தொலைபேசியில் லயித்தபடி நம் போக்கில் செல்வதனால் மற்றவர்களுக்குத் தொந்தரவாக மட்டும் இருப்பதில்லை, சில சமயங்களில் ஆபத்தையும் விளைவிக்கிறோம். எனவே, அவையோரே, கைத்தொலைபேசிகளைப் பொது இடங்களில் பயன்படுத்துவதற்கு விதிகள் தேவை என்னும் தலைப்பில் இன்று நான் உரையாற்ற வந்துள்ளேன். 


அவையோரே, சாலையைக் கடக்கும்போது நாம் மட்டுமா சாலையைக் கடக்கிறோம்? இல்லை. நம்முடன் சேர்ந்து மற்ற பாதசாரிகளும் சாலையைக் கடக்கிறார்கள். நாம் கைத்தொலைபேசியில் மூழ்கியவாறு சாலையைக் கடப்பதால், நாம் விபத்துக்கு ஆளாவது மட்டுமில்லாமல், நம் எதிரில் வருபவர்களின்மீது மோதி, அவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறோம். “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்ததே. அது போல, பல வகைகளில் நம் வாழ்க்கைக்கு உதவும் கைத்தொலைபேசியே உயிர்கொல்லியாகவும் மாறிவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. 


“கண் போன போக்கிலே கால் போகலாமா” நண்பர்களே? கூடாதல்லவா! ஆனால், கூட்ட நெரிசலில்கூட சிலர் அருகிலோ எதிரிலோ நடப்பவர்களைக் கண்டுகொள்ளாமல் கைத்தொலைப்பேசியே கதி என்று நடப்பதால், எதிரில் வருபவர்கள் தான் வளைந்து நெளிந்து நடக்க வேண்டியதாக உள்ளது. இந்த சுயநலபோக்கு மற்ற பாதசாரிகளுக்குச் சிரமத்தை உண்டாக்குகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. எனவே, நாம் நடைபாதையிலும் சாலையிலும் கைத்தொலைபேசியைப் பயன்படுத்திய வண்ணம் நடக்கக் கூடாது என்ற விதி நடைமுறைக்கு வர வேண்டும் என்ற என் கருத்தை நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். 


நண்பர்களே, பாதசாரிகளின் அலட்சியப்போக்கினால் மட்டும் சாலை விபத்துகள் நிகழ்வதில்லை. வாகன ஓட்டுனர்களுக்கும் இதில் பங்கு உண்டு. வாகன ஓட்டுனர்கள் கைத்தொலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டே ஓட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும் 1.6 மில்லியன் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. ஆகவே, வாகனத்தை ஓட்டும்போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை இன்னும் கண்டிப்பாகச் செயல்படுத்தபட வேண்டும் என்ற என் கருத்துடன் நீங்கள் ஒத்துப்போவீர்கள் என நம்புகிறேன். 


அவையோரே, நாம் தினசரி காணும் நிகழ்வு ஒன்று உள்ளது. நாம் அனைவரும் பேருந்திலோ ரயிலிலோ பயணித்திருப்போம். பெரும்பாலான பயணிகள் தங்கள் கைத்தொலைபேசிகளில் மூழ்கியிருப்பதை நிச்சயம் கண்டிருப்பீர்கள். சிலர் செவியொலிக் கருவியை அணிந்தவாறு பாட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அல்லது படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், மற்றும் சிலரோ, செவியொலிக் கருவியை அணியாமல், படத்தையோ பாட்டையோ சத்தமாகக் கேட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். அவையோரே, இது உங்களுக்கும் எரிச்சலை உண்டாக்கியிருக்கும் அல்லவா?. ஆகவே, நாம் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போதும் மற்ற பயணிகளுக்குத் தொந்தரவு இல்லாத முறையில் செவியொலிக் கருவியை அணிந்துகொண்டுதான் தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும். தொலைபேசியின் மூலம் உரையாடும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இல்லாத முறையில் மெதுவாக பேச வேண்டும் என்று விதிகள் இருக்க வேண்டும்.  


அது மட்டுமா? நூலகத்தில் கைத்தொலைபேசியை அமைதியான நிலையில் (silent mode) வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்தும், சில பொறுப்பில்லாதவர்கள் தங்கள் கைத்தொலைப்பேசிகளை அமைதியான நிலையில் வைத்திருக்காமல் புத்தகம் படிப்பதை நாம் அனைவரும் கண்டிருப்போம். திடீரென அவர்களுடைய தொலைபேசி சத்தமாக அலறும். அவர்கள் அழைப்பவரிடம் பேச வெளியே கூட செல்லாமல் அமர்ந்த இடத்திலேயே உரத்த குரலில் உரையாடுவார்கள். இதை நீங்கள் கண்டிப்பாக அனுபவித்திருப்பீர்கள். சில தருணங்களில் நூலக அதிகாரி அவர்களை வெளியே செல்லுமாறு கட்டளையிடுவார். ஆனால், பெரும்பாலான சமயங்களில் நாம் தான் சத்தத்தைப் பொருத்துக்கொள்ள வேண்டும், அல்லது நகர வேண்டும். 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு 


என்பது  தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாக்கு. கைத்தொலைபேசியின் மோகத்தில் சிக்கிப் பொது இடங்களையும் தனி உடமையாக கருதும் அன்பில்லாத மனிதர்களாக நாம் மாறி வருகிறோம். ஆகையால், நூலகத்தில் கைத்தொலைபேசியை அமைதியான நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை இன்னும் கடுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்ற என் கருத்தை இங்குப் பதிவு செய்கிறேன்.


அவையோரே, திரையரங்கில் நாம் படம் பார்க்கும்போது சிலர் கைத்தொலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களது கைத்தொலைபேசியிலிருந்து வரும் ஒளி படம் பார்க்கும் அனுபவத்திற்கு இடையூறாக இருந்திருக்கும். ஆனால், தொந்தரவை பொருத்துக்கொண்டு, திரைப்படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல், எரிச்சலுடன் படத்தைப் பார்த்திருப்பீர்கள். படம் பார்க்கும் மற்றவரைப் பொருட்படுத்தாமல் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துபவர்களைத் தடுக்க விதிகள் தேவை என்ற என் கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


நம் அத்தியாவசிய தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் இன்றைய நவீன யுகத்தில் நம்மை அறியாமலேயே உடலின் ஓர் அங்கமாகிவிட்டன. கைத்தொலைபேசியின் தாக்கம் தொற்று நோய் போல அனைத்து தரப்பினரையும் ஆட்கொண்டுள்ளது. பொது இடங்களில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துபவர்களால் மற்றவர்களுக்கு அது தொல்லைபேசியாக மாறிவிட்டது. ஆகவே, கைத்தொலைபேசிகளைப் பொது இடங்களில் பயன்படுத்துவதற்கு விதிகள் தேவை, என்று கூறி என் உரையை செவிமடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.