Saturday, November 13, 2021

எந்த நிகழ்வுக்கும் காலதாமதமாகச் செல்லும் பழக்கம் உன்னிடமிருந்தது. ஆனால் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தால் அப்பழக்கத்தை நீ மாற்றிக்கொண்டு விட்டாய். அந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளோடும் உணர்வுகளோடும் விளக்கி எழுதுக - நிலா இரமமூர்த்தி (307) 2021

நிலா ராமமூர்த்தி (307) 2021 என்னால் எனது காதுகளையே நம்பமுடியவில்லை. எனது கைகளும் கால்களும் ஓடவில்லை. எனது மனதில் ஆசிரியர் கூறிய சொற்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தன. “ கலா, உன்னை ஒரு சர்வதேச அளவிலான போட்டிக்கு பதிவு செய்துள்ளேன். போட்டிக்கு தயார் செய்வதற்கு உனக்கு இரண்டு மாதங்கள் உள்ளது. உன்னை நன்றாக தயார் செய்து கொள். உனது திறமையாலும் உனது விடாமுயற்சியாலும் யாருக்கும் அளிக்காத இந்த அரிய வாய்ப்பை நான் உனக்கு அளித்துள்ளேன். அதை நன்றாக பயன்படுத்திக்கொள், “ என்று கூறியிருந்தார். எனது செவிகளை என்னாலேயே நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நான், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு போட்டியில் முதல் பரிசு வெல்ல கங்கணம் கட்டிக் கொண்டேன். வீட்டை அடைந்ததும் எனது தாயாரிடமும் தந்தையிடமும் நடந்தவற்றை கூறியவுடனே அவர்களின் கண்களிலிருந்து முத்து முத்தான மகிழ்ச்சி கண்ணீர் துளிகள் விழத் துவங்கின. அவர்கள் என்னை புகழ்ந்த போது நான் அக மகிழ்ந்தேன். அதன்பின், நான் எனது அறைக்கு சென்று, போட்டியில் வெல்வதற்கு திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு, நான் திட்டத்தை தீட்டி முடித்துவிட்டேன் அந்தத் திட்டத்தை காணும்போதே எனது மனதில் நான் அந்த வெற்றி கோப்பையை விரைவில் வாங்கும் காட்சி தெரிந்தது. “ஆஹா ஓஹோ” என்று எல்லாரும் என்னை புகழும் சத்தம் எனது செவிகளுக்கு இன்னிசை ஆக இருந்தது. நான் மெய் மறந்து பகற்கனவு காணும் அந்த நேரத்தில் எனது தாயார் உள்ளே வந்து, “கலா, வெற்றி பெறுவதற்கு முன்பே கனவா? நீ ஒழுங்காக போட்டிக்கு தயார் செய்ய ஆரம்பி,” என்று கூறி சென்றுவிட்டார். அதைக்கேட்டு, எனது பேச்சை எழுதத் துவங்கினேன். இரவும் பகலும் உறங்காமல் உழைத்தேன். எனது கண்கள் சொக்கின. என்னால் உடம்பு வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் நான் அதையெல்லாம் பொருட்படுத்திக்கொள்ளாமல், பேச்சுக்குத் தேவையான தகவல்களை, பலவகையான இணையத்தளங்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் சேகரிக்கத் தொடங்கினேன். தகவல்களை சேகரித்து முடிப்பதற்கே ஒரு வாரம் ஆகிவிட்டது. எனது கடின உழைப்பால் எனக்கு போதுமான உறக்கம் கிடைக்கவில்லை. இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் அன்று பள்ளி முடிந்து எனது பேச்சை ஆசிரியரிடம் காட்டுவதற்காக வகுப்பிற்கு சென்றேன். அப்போது, ஆசிரியரின் பக்கத்தில் வேறு ஒரு மாணவி இருப்பதையும் நான் கவனித்தேன். “ இவர் யார்?” என்று எனக்குள் ஒரு கேள்விக்குறி எழுந்தது. ஆசிரியர், “ இவர் மீரா, நீ போட்டி அன்று வரமுடியாமல் போனால், இவர் உனது இடத்தை நிரப்பி உனக்கு பதிலாக பேசுவார்,” என்று கூறினார். அதை கேட்டவுடனே என்னால் என் மனதுக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு ஒருவரா? என்னை போல் திறமையானவர் வேறுயாருமில்லை. நான் ஏன் போட்டிக்கு அன்று வராமல் செல்வேன்? இது எனக்கு வேடிக்கையாக இருந்தது. நான் இதையெல்லாம் பிறகு கண்டு கொள்ளாமல் எனது பேச்சை ஆசிரியரிடம் காட்டினேன். உடனே என்னை புகழ தொடங்கிய அவர், பிறகு எனக்கு பேசுவதற்கான பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். நானும் உன்னிப்பாக கவனித்து அவற்றை நன்றாக உள்வாங்கிக் கொண்டேன். நான் எனது ஆசிரியரை வாரத்திற்கு மூன்று முறை கட்டாயமாக ஒரு மாதத்திற்கு சந்திக்க வேண்டியிருந்தது. எனது இரத்தம், வியர்வை, கண்ணீர் அனைத்தையும் போட்டிக்கு தயார் செய்வதிலேயே செலுத்தி, மனது ஓய்வுக்காக கெஞ்ச, உடம்பு வலிக்க, விடாமல் உழைத்தேன். அவ்வாறு ஒருநாள் உழைத்துக் கொண்டிருந்த போது தாயார் எனது அறைக்குள் வந்து “ கலா, ஒரு நிமிடம், உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்,” என்று கூறினார். “கூறுங்கள், ” என்றேன். “கலா உனது காலதாமதமான பழக்கத்தை பற்றி உனக்கும் எனக்கும் நன்றாக தெரியும், எந்த ஒரு நிகழ்வுக்கும் நீ கடைசி நிமிடம் தான் தயார் செய்து கொண்டு செல்வாய். இந்தப் போட்டி சர்வதேச அளவில் நடைபெறுகிறது. இதற்காக நிறைய உழைத்திருக்கிறாய். இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறவிருக்கிறது என்பது உனக்கும் தெரியும். ஆகவே, கிளம்புவதற்கு முந்தின தினமே உனது பொருட்களை எடுத்து வைத்துக்கொள், இல்லை என்றால் உனது உழைப்பு அனைத்துமே வீணாகிவிடும்,” என்று கூறினார். “சரி அம்மா,” என்று கூறிவிட்டு மறுபடியும் பயிற்சி செய்ய தொடங்கினேன். எனது தாயார் கூறியது, ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ போல் ஆனது. போட்டி தினமும் நெருங்கத் தொடங்கியது. போட்டிக்கு முந்தின நாள் வரை இன்னும் எனக்குத் தேவையானவற்றை எடுத்து வைக்கவில்லை. “ நாளை எடுத்து வைத்துக்கொள்ளலாம், எதற்கு அவசரம்? எனக்கு எடுத்து வைக்க தோன்றவில்லை,” என்று நினைத்துக் கொண்டு நானும் உறங்கச் சென்றேன். அடுத்த நாள் காலையில் எனது தாயார் பதறிக்கொண்டு, “காலா, எழு! கிளம்ப வேண்டும்,” என்று அவசரப்படுத்தினார். நான் மெதுவாக எழுந்து, காலச்சக்கரத்தை பார்த்தவுடன் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. விமான நிலையத்தை அடைவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது! எனது மனது ‘லப்டப், லப்டப்’ என்று பதற்றத்தில் தாளம் போடத் தொடங்கியது. பம்பரத்தைப் போல் சுழன்று ஏனோதானோ என்று பொருட்களை எடுத்துவைத்து வீட்டை விட்டு அரக்க பரக்க வெளியேற தொடங்கியபோது, திறன்பேசி ஒலிக்கத் தொடங்கியது. நான் அதை எடுத்தேன். எனது ஆசிரியர், “கலா, எங்கே இருக்கிறாய்? விமானம் செல்வதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் மட்டுமே இருக்கின்றன! சீக்கிரம் வந்துவிடு!,” என்று கடும் சினத்தோடு கூறினார். “வந்துவிடுகிறேன்,” என்று கூறிவிட்டு உந்து வண்டியில் ஏறி ஓட்டுனரை அவசரப் படுத்தினேன். பதற்றத்தில் எனக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது. இறுதியில் நான் விமான நிலையத்தை சென்றடைந்தேன். ஆனால் எனது ஆசிரியரோ மீராவோ யாரும் அங்கே இல்லை. அப்போது தான் எனக்கு புரிந்தது. அவர்கள் என்னை விட்டு விட்டு சென்று விட்டார்கள். நீர் அருவி போல் என் கண்களிலிருந்து கசிந்தது. செய்வதறியாது திகைத்த நான், என்னை மனதிற்குள் கடிந்து கொள்ள துவங்கினேன். எனது கடின உழைப்பு அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரைப்போல் வீணாகியது. எனக்கு பதிலாக மீரா பேசுவாள், என்னால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. “ஒழுக்கம் விருப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்பதற்கேற்ப ஒழுக்கத்துடன் இருந்து தாமதமாக செல்லக்கூடாது என்ற பாடம் உள்ளங்கை நெல்லிக்கனியைப்போல் என் மனதில் பதிந்தது. ஆனால் இந்த ஏமாற்றும் போதாதென்று, சில வாரங்கள் கழித்து, போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டபோது எனது செவிகளால் அதை நம்பமுடியவில்லை. மீரா வெற்றி பெற்றுவிட்டாலா? எனக்கு கிடைத்திருக்கவேண்டிய கோப்பை அநியாயமாக அவளுக்கு கிடைத்துவிட்டது. என்னால் அந்த பொறாமையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது நெற்றிக் கண் திறந்தது, அந்தளவிற்கு கோபம், விரக்தி. நான் மட்டும் தாமதமாக செல்லாமல் இருந்திருந்தால் இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். அதனால், இனிமேல் எந்த நிகழ்வுக்கும் தாமதமாக செல்லக்கூடாது என்று உறுதி கொண்டேன்.

No comments: