Wednesday, May 20, 2009

உன்னைப் பார்த்து மற்றவர் கேலியும் கிண்டலும் செய்தபோதும் நீ அவற்றைப் பொருட்படுத்தாமல் எப்படி ஒரு செயலில் ஈடுபட்டுச் சாதித்தாய் என்பதை விளக்கி எழுதுக.

S. Dakanie . செ. தஷ்ணி. 4 HTL . 20.2.2009.

A movie clip which was shown to the pupils. In which a mechanic suggested something in a presentation. Thus, the presenter felt uncomfortable. He insulted the mechanic and asked him to get out of the room. Than the mecahnic felt ashamed and wanted to proof himself right. In the end the mechanic succeeded. Pupils were asked to wirte a essay on how a student proofed him/herself right despite others teasing.

அன்று இனிய மாலைப்பொழுது. காற்று மெல்ல வீச, மரங்கள் அசைந்தாடின. பள்ளியின் வாசலைவிட்டுக் கிளம்பிய ஒரு இனிமையான புல்லாங்குழல் இசையைக் கேட்ட நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே கண்ணன் புல்லாங்குழலை வாசித்துக்கொண்டு இருந்தான். அந்த அழகிய கண்ணன் சிலையை நான் ரசித்துப் பார்த்தேன். அந்தக் கண்ணன் சிலையைக் காணும்போதெல்லாம் எனக்கு அன்று நடந்த சம்பவம் மனத்தில் தோன்றும்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றது. உயர்நிலை இரண்டில் படித்துக்கொண்டிருந்த நான் சந்தர்ப்ப சூழ்நிலையினால் இரண்டு உயிர்த்தோழிகளைப் பெற்றிருந்தேன். அவர்கள் இருவரும் இசையில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களுடன் நான் எங்குச் சென்றாலும் ஒரு சிறந்த கச்சேரியை , அதாவது அவர்கள் இருவரும் பாடுவதைக் கேட்டுக்கொண்டு தான் செல்வேன். தேன் போன்ற இனிமையான குரல்களைப் பெற்றிருந்த அவர்கள் சிறந்த பாடகர்களாக விளங்கினர். இவர்களின் இசைத் திறமையைக் கண்டு வியந்த நான், நானும் இசையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற வேட்கை கொண்டேன். என்னுடைய இரண்டு தோழிகளின் அறிவுரையின்படி நான் வீணையை வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

வழக்கம்போல அவ்வாண்டின் பள்ளி இசைப்போட்டி நடைபெற இருந்தது. போட்டியின் மூலம் இந்திய இசையின் அற்புதத்தைப் பள்ளிக்குச் சித்தரிக்க என்னுடைய நண்பர்கள் ஆசைப்பட்டனர். அதனால், அவர்கள் இருவரிம் போட்டியில் கலந்துகொள்ள தீர்மானித்தனர். என் உயிர்த்தோழிகளான அவர்கள் எச்செயலில் இறங்கினாலும் என்னையும் கலந்துகொள்ள அழைப்பார்கள். அதனால், அவர்கள் என்னை இசைப்போட்டியில் பங்கேற்கும்படி வற்புறுத்தினர். என்னுடைய நண்பர்களின் மனத்தைப் புண்படுத்த நான் விரும்பாததால் நான் போட்டியில் பங்கேற்க இசைந்தேன். என்னுடைய முடிவை அறிந்த அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். நாங்கள் போட்டிக்காகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம்.

ஒரு போட்டியில் பங்கேற்பது நான் நினைத்ததுபோல ஒரு சுலபமான செயலாக அமையவில்லை. என்னுடைய நண்பர்களின் திறமைக்கு என்னால் வீணையை வாசிக்க இயலவில்லை. நான் எவ்வளவு முயன்றும் அவர்களின் தகுதிக்கு ஒப்பாக என்னால் வாசிக்க முடியவில்லை. இதை அறிந்து நான் மனம் தளர்ந்தேன்.

போட்டி நடைபெறுவதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. எங்களின் முயற்சி எவ்வாறு சென்றுகொண்டிருந்தது என்று அறிய என்னுடைய வகுப்பு ஆசிரியர் ஆசைப்பட்டார். அவர் எங்களை வகுப்புக்கு முன்னால் எங்களுடைய திறமையைக் காட்டும்படி கேட்டுக்கொண்டார். நாங்கள் அதற்கு இசைந்தோம்.

அதற்கு அடுத்த நாள் அன்று நாங்கள் எங்களின் வகுப்புக்கு முன்னால் எங்களுடைய இசையாற்றலை வெளிப்படுத்தச் சென்றோம். நான் வீணையை வாசித்தேன். மாலதி தபலாவை வாசித்தாள். ராணி சங்கீதம் பாடினாள். ஆனால், வகுப்புக்கு முன்னால் வாசிப்பதற்கு எனக்குச் சற்றுப் பயமாக இருந்தது. என்னுடைய தோழிகளைப் போல எனக்கு இசை வாசிப்பதில் முன் அனுபவம் இல்லை. அதனால், எங்களின் ஆசிரியர் எங்களை வாசிக்கும்படி கூறியபோது எனக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பயத்தால் நான் நடுங்கினேன். இதைக் கண்டு என்னுடைய வகுப்பு மாணவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தனர். சிலர் என்னைக் கேலியும் கிண்டலும் செய்தனர். இதைக் கண்டு என்னுடைய கண்களிலிருந்து கணணீர் ஆறுபோல வழிந்தது. அவமானத்தைத் தாங்க முடியாமல் நான் வகுப்பைவிட்டு ஓடினேன். என்னுடைய மாணவர்கள் சிரிக்கும் சத்தம் என்னுடைய செவிகளில் ரீங்காரமிட்டது.

அன்று இரவு நான் பள்ளியில் நடந்ததைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தேன். என்னுடைய வகுப்பு என்னைப் பார்த்துச் சிரித்த காரணத்தால் எனக்குப் போட்டியில் கலந்துகொள்ள சற்றுப் பயமாக இருந்தது. ஆனால், பயம் என்னை ஆளவைத்தால் நான் என்றும் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியாது என்பதை நான் அறிந்தேன். மேலும், தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் சவால்களைத் தைரியமாக எதிர்நோக்குபவன்தான் உண்மையான சாதனையாளன் என்பதையும் நான் அறிந்தேன். அதுமட்டுமன்றி, நான் போட்டியில் பங்கேற்க அசைப்படும் என்னுடைய நண்பர்களின் மனங்களையும் புண்படுத்த நான் விரும்பவில்லை. அதனால், நான் போட்டிக்காகத் தீவிரமாகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய ஈடுபாட்டைக் கண்டு என்னுடைய நண்பர்கள் வியந்தனர். ஆனால், அதே சமயத்தில் அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர். தினந்தோறும் பள்ளி முடிந்ததும் வீணையை இரண்டு மணி நேரத்திற்காவது வாசித்துப் பயிற்சி செய்வேன் என்ற வாக்குறுதியையும் நான் எடுத்தேன். அதேபோல நான் தினந்தோறும் பயிற்சி செய்தேன்.

போட்டி நடைபெறும் நாள் வந்தது. எங்களுக்கு எதிராக ஐந்து குழுக்கள் போட்டியில் இருந்தன. அவர்களின் இசைப் படைப்புகளைக் கண்டு களித்த சமயத்தில் எனக்குச் சற்றுப் பயமும் ஏற்பட்டது. அவர்களின் இசைப்படைப்புகள் அமைத்தும் சிறந்து விளங்கின. அவர்களைப் போல நாங்களும் சிறந்து விளங்குவோமா என்ற சந்தேகமும் பயமும் இருந்தது. இருந்தாலும் நான் என்னுடைய அச்சத்தை ஒரு புறம் தள்ளிவிட்டுப் போட்டிக்குத் தயாராகினேன்.

நாங்கள் எங்களின் இசையைப் படைக்கும் நேரம் வந்தது. நான் தைரியத்துடன் மேடையின் மேல் ஏறினேன். அச்சமயத்தில் அங்கிருந்த என்னுடைய வகுப்பு மாணவர்கள் சிரித்தனர். ஆனால், நான் அதைப் பொருட்படுத்தாமல் வாசிக்க ஆரம்பித்தேன். நாங்கள் எப்பிழையுமின்றி இசை படைத்தோம். எங்களுடைய படைப்பு முடிந்ததும் பள்ளி மண்டபமே அதிரும்படி அனைவரும் கைகளைத் தட்டினர். நான் எப்பிழையுமின்றி வாசித்ததைக் கண்டு வியந்த என்னுடைய சக வகுப்பு மாணவர்கள் என்னைப் பாராட்டினார்கள்.

இச்சம்பவம் இன்னும் என்னுடைய மனத்தில் பசுமரத்தாணியைப் போலப் பதிந்து இருக்கிறது. இதன்மூலம் தன்னம்பிக்கையே வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான வழிகாட்டி என்பதைக் கற்றுக்கொண்டேன். பிறர் நம்மை கேலி செய்தாலும் நாம் அதைப் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் ஒரு செயலில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.

Sunday, May 17, 2009

I want to ask the GOD!

நான் கடவுளிடம் கேட்க விரும்புபவை

R. அஸ்வினி . உயர் நிலை 4 உயர்தமிழ். 22.4.2009

கடவுள்! இந்த நான்கு எழுத்து வார்த்தைக்குள் தான் எத்தைனை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன? பலர் கடவுள் ஓர் உயர்ந்த சக்தி என்கிறார்கள். ஆக, கடவுள் என்பது, உலகிற்கு அப்பால் உள்ள, அண்ட சராசரத்தில் வசிக்கும் ஆறறிவு படைத்த மனிதனையும் ஐந்தறிவு படைத்த மிருகங்களையும் ஆளும் ஓர் உயர் சக்தி என்பதுதான் ஐதீகம். உலகத்தில் பிறந்து, கல்வி கற்று, சக்தி என்ற வார்த்தைக்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்ட நான் அந்த உயர் சக்தியிடம் சிலவற்றைக் கோர இருக்கிறேன்.

முதலாவதாக மனிதனைப் படைத்தாளும் இந்த உயர் சக்தியே பல சமயங்களில் மனிதனைக் கைவிட்டது ஏன் என்பதைக் கேட்டு அறிய விரும்புகிறேன். சமீபத்தில் நாடுகளைத் தாக்கிப் பல உயிர்களை ஈவிரக்கம் இல்லாமல் பறித்துச் சென்ற அந்தச் சுனாமியிலிருந்து மனிதனைக் காக்க ஏன் கடவுள் வரவில்லை? பச்சிளம் குழந்தைகளும் சிறுவயது பாலர்களும் தங்கள் பெற்றோர்களை இழந்து வீதியில் கதறி அழுமாறு செய்த அந்தக் கொடிய ராட்சசனை ஏன் அவர் தடுக்கவில்லை? அப்படி என்றால், கடவுள் என்பவர் மனிதனைக் கடலில் தள்ளி வேடிக்கை பார்க்கும் கல்நெஞ்சம் கொண்டவரா? மனிதனைப் படைத்து அவனுக்கு மகிழ்ச்சி என்ற உயிர் நாடியை ஊட்டிய அவர், எவ்வாறு கல் நெஞ்சம் கொண்டவராக இருக்க முடியும்? இதனை அந்த உயர் சக்தியிடம் கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இரண்டாவதாக உலகத்தில் சட்டத்தைப் படைத்து நியாயத்தை நிலைநிறுத்த முற்பட்ட அவர் ஏன் மனிதனுக்குள் பிரிவினைகளை உண்டாக்க வேண்டும்? மதத்தால், மொழியால், கலாசாரத்தால், நிறத்தால் ஏன் மனிதர்களுள் வேறுபாடுகளை உண்டாக்க வேண்டும். பலவகையில் மனதளவிலும் சமூகத்தின் அளவிலும் வேறுபட்டுக் கிடக்கும் மனிதர்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ முடியும். இத்தகைய வித்தியாசங்களால் தங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு சிலர் ஒதுங்கிவிட, சிலர் தங்கள் வித்தியாசங்களைப் பெரிதாக எண்ணிக்கொண்டு சண்டையிடுகின்றனர். இதனால், புவியில் அமைதி என்பது குலைக்கப்பட்டுவிட்டது. ஒரு குழுவை அமைத்து அமைதியைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் நாம். இது ஏன்?

மூன்றாவதாக, பசி, பட்டினி, வறுமை என்ற கொடியவற்றை ஏன் படைக்க வேண்டும்? ஒருபக்கம் மைனாக்களைத் துரத்தி விளையாடும் சந்தோஷமான குழந்தைகள். மறு பக்கம் கழுகுகளால் துரத்தப்படும் பட்டினியால் எலும்பும் தோலுமான குழந்தைகள். இந்த இரு பக்கம் எதற்கு? அமுதத்தைப் படைத்த நீ, ஏன் ஆலகால விஷத்தையும் படைத்தாய்? ஏன்?எதற்காக? பட்டினியில் வாடி வதங்கும் பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை அவசியம் தானா? அவசியம் என்றால் அதற்கான காரணம் என்ன?

அடுத்ததாக, வியாதிகள். கண்களுக்குத் தெரியாத சிறு சிறு கிருமிகள் உண்டாக்கும் குணப்படுத்த முடியாத வியாதிகள். புற்றுநோய். எயிட்ஸ் போன்றவற்றை ஏன் கடவுள் உருவாக்கினார்? இந்த நோய்களுக்கு இன்றுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுசிறு நோய்கள் வந்துபோனால் உடல் மேலும் வலுப்பெறும் என்பது விஞ்ஞான உண்மையாகும். ஆனால், உயிரைப் பறிக்கும் நோய்களின் நோக்கம் என்ன? உலகு மிகவும் கூட்டமான இடமாக மாறுவதைத் தவிர்க்கக் கடவுள் கையாளும் ராட்சச வழிகளுள் இதுவும் ஒன்றோ. இந்த நோய்களின் நோக்கத்தை நான் கடவுளிடம் கேட்டு அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

கடைசியாக உலகில் நிறைய அநியாயங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்று நிறைய அநியாயங்கள் உககெங்கும் எப்பொழுதும் நடந்துகொண்டே இருக்கின்றன. இவை நடப்பது மனிதர்களின் தீய எண்ணங்களாலும் குணங்களாலும்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால், நான் கடவுளிடம் இவற்றைத் தடுக்கும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை உருவாக்கக் கூறுவேன். அநியாயங்களை இந்த ஆயுதம் ஒடுக்கும். அநியாயம் செய்பவர்களை இந்த ஆயுதம் தண்டிக்கும். அதுமட்டுமன்றி மனிதர்களுள் தீய எண்ணங்களும் குணங்களும் எழாமல் தடுக்கும். இப்டிப்பட்ட ஒர் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கடவுள் படைக்க நான் அவரிடம் கோருவேன்.

ஆயுதம் படைத்தால் மட்டும் போதுமா? அதனைப் பயன்படுத்த ஒருவர் வேண்டுமே? நான் ஒரு நியாயவாதி. அநியாயங்களைக் கண்டு, என் மனம் ஆத்திரத்தில் பொங்கி எழுந்தாலும் என்னால் அவற்றைத் தடுக்க முடியாத நிலை. என் எதிரிகளுக்குக் கூட நான் நன்மையையே நினைப்பேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் என் உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடாமல் என் அறிவைக் கொண்டு சிந்திக்கும் ஆற்றல் படைத்தவள் நான். ஆகவே, கடவுள் என்னிடம் அந்தச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை ஒப்படைக்குமாறு கோருவேன். அப்படி அவர் செய்தால், உலகில் அமைதி என்றும் நிலவும். அனைவரும் நல்ல வழியில் செல்வர் என்று, நான் அவருக்கு உறுதியளித்து அந்த ஆயுதத்தை என்னிடம் ஒப்படைக்குமாறு அவரிடம் வேண்டுவேன்.

நான் கடவளிடம் அதீத நம்பிக்கையுடையவள். தினமும் கடவுளை வணங்கும் ஒரு பக்தை நான். எனவே, என் பக்தியால் கடவுள் திருப்தி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை இங்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதனால், இன்று முதல் இக்கட்டுரையைப் படிக்கும், நீங்கள் அனைவரும் நியாயமாக நடந்துகொள்ளுங்கள். அல்லாவிடில் வெகுவிரைவில் என்னைச் சந்திக்க நேரிடலாம்!