Friday, November 19, 2021

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க

தமிழினி மகேந்திரன் 206 - 2021 உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், சமூக நல்லிணக்கமும் வாழ்க்கைக்கும் சமூகத்துக்கும் மிக முக்கியமானது. உடல் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் சமூகத்தில் நன்கு இயங்க முடியும். மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். அதேப்போல சமூக நல்லிணக்கமும் இருந்தால்தான் சமூகம் சீரும் சிறப்புமாகயிருக்கும். நாடு முன்னேற்றம் அடையும். இதை உணர்ந்துள்ள சிங்கையின் அரசாங்கம், மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்த குடியிருப்புப் பேட்டைகளில் விளையாட்டு வசதிகளை அமைத்துள்ளது. எனவே, சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன என்னும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். எவ்வாறு இவ்வசதிகள் உதவியாக உள்ளன என்பதை இனிக்காண்போம். சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கு சறுக்கும் பந்து விளையாட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டுகளைப் பலர் சேர்ந்து விளையாடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளி முடிந்த பின்பு கூடைப்பந்தாட்டம் விளையாடுவதை ஒவ்வொரு நாளும் குடியிருப்புப் பேட்டைகளில் பார்க்கலாம். வேலை முடிந்த பின்பு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக விளையாட்டு வசதிகளை மாலையில் பயன்படுத்த பலர் வருவதையும் அடிக்கடி பார்க்கலாம். விளையாடி முடித்த பின்பு மெதுவோட்டப் பாதை போன்ற மற்ற வசதிகளை அவர்கள் பயன்படுத்துவதையும் காணலாம். இறுதியாக, முதியோர் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி மகிழவும் உடல் நலம் குன்றாமல் இருப்பதற்கு விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்துவதையும் காண முடியும். ஆகவே, இதன்வழி இவ்வசதிகள் மக்களின் உடல் நலத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் முக்கியமானவை என்பதை உணர முடிகிறது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும் பொன்மொழிக்கு ஏற்ப நல்ல உடல்நலத்துடன் இருப்பது மிக முக்கியமான ஒன்று. வலுவான உடலுடன் இருந்தால்தான் பல்லாண்டுகளுக்கு நன்றாக வாழ்ந்து வாழ்க்கையை அனுபவிக்க முடியும். முக்கியமாக, பல ஆண்டுகளாக ஒய்வு ஒழிச்சலின்றி உழைத்துள்ள மூத்தோர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே அவர்களுடைய உழைப்பினால் சேர்த்துள்ள பணத்தை அனுபவிக்க முடியும். உடல்நலம் நன்றாக இல்லை எனில் வாழ்க்கையை மருத்துவமனையிலேயேக் கழித்துவிட வேண்டியதாகயிருக்கும். அதே நேரத்தில், மற்ற வயதினருக்கும் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று. ஆனால் இப்பரபரப்பு மிகுந்த வாழ்க்கைச் சூழலால் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவது மிகவும் கடினமாகிவிட்டது. தினமும் விரைவு உணவையும் நொறுக்குத் தீனிகளையும் பலர் உண்பதால் சிங்கையில் பலருக்கு உடல் பருமன் அதிகமாக உள்ளது. ஆனால், வாழும் இடத்திற்குப் பக்கத்திலையே விளையாட்டு வசதிகள் உள்ளதால் பலர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். எனவே உடல் பருமன் அதிகம் உள்ளோரும் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து உடலை வலுவாக்க இவ்வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் உடல் நலத்தை மேம்படுத்துவதோடு மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஏனெனில், உடற்பயிற்சி செய்வது நம்முடைய தசைகள் மற்றும் கைகள் முதலியவற்றை வலுவாக்கி புத்துணர்ச்சியையும் கொடுக்கும். மன உளைச்சலில்லாமல் ஆனந்தத்துடன் வாழ வழி வகுக்கும். மேலும், கூடைப்பந்து போன்ற விளையாட்டு வசதிகளில் விளையாடுகையில் இருதய நோய் போன்ற நோய்கள் வராமல் இருக்கும். உடற்பயிற்சி நம்மை நன்கு தூங்கவும் அனுமதிக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர் உடற்பயிற்சி செய்தாலே அவர்களது பிரச்சினைக்குத் தீர்வு கண்டு சமூதாயத்தில் நன்கு இயங்க முடியும். ஆகவே, இவ்விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்தோடு வாழ உதவியாக உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”என்னும் பொன்மொழிக்கு ஏற்ப மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்தால் மட்டுமே சமுதாயம் மேம்படும். அனைவரும் ஒன்றாக வேலைச் செய்து சிங்கையை சிறந்த நிலைக்குக் கொண்டு போக இயலும். ஒற்றுமையின்மை நிலவினால் எவராலும் மகிழ்ச்சியுடன் வாழ முடியாது. இது போன்ற பிரச்சினையைத் தடுக்க அரசாங்கம் எண்ணற்ற முயற்சிகளை எடுத்துள்ளது. குடியிருப்புப் பேட்டைகளில் விளையாட்டு வசதிகள் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே ஆகும். ஆகவே, பல இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து மகிழும் இடமாக இவ்விளையாட்டு வசதிகள் அமைந்துள்ளன. சிறு பிள்ளைகள் இனம், மதம் ஆகியவற்றையெல்லாம் கருதாமல் சறுக்குப் போன்ற விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்துகையில் மற்றோருடன் நட்புக் கொள்கின்றனர். தங்கள் நண்பர்களுடன் ஓடி ஆடி மகிழ்கின்றனர். இத்தகைய நட்புகள் வாழ்க்கை முழுவதும் நீடிக்க அதிக வாய்ப்புண்டு. இத்தகைய நட்புகளின் வழி விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்தும்போது உதவும் மனப்பான்மையின் முக்கியத்துவம், விட்டுக்கொடுத்து விளையாடும் மனப்பான்மையின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர். வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்களையும் கற்றுக்கொள்கின்றனர். பெரியோர்களும் வேலை முடிந்த பிறகு பூப்பந்தாட்ட விளையாட்டு வசதி போன்றவற்றை சக ஊழியர்களுடனோ நண்பர்களுடனோ பயன்படுத்தி ஆனந்தம் அடைவது மட்டுமில்லாமல் நன்மையும் பெறுகின்றனர். இறுதியாக, முதியோர் விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்தும் நேரத்தை அவர்களுடைய நண்பர்களுடனோ மற்ற முதியவர்களுடனோ பேசுவதற்காகவும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் மற்ற இன முதியோர்களும் நல்ல பிணைப்பையும் உறவையும் உருவாக்கி மகிழ்கின்றனர். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்னும் பொன்மொழிக்கு ஏற்ப இவ்வசதிகளின் வழி எல்லா வயதினரும் ஒற்றுமையுடன் சிறந்த வாழ்க்கையை வாழ முடிகிறது. சிங்கையின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் எண்ணற்ற பயன்களை தினமும் அடைகின்றனர். முக்கியமாக, உடல் நலம் குன்றாமலும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கும் இவ்வசதிகள் பெரும் பங்கை ஆற்றுகின்றன. மக்களின் வாழ்வுகளும் இவ்வசதிகளினால் மேம்பட்டுள்ளன.எனவே,சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன என்னும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

No comments: