Wednesday, September 13, 2023

சொற்பொழிவுக் கட்டுரை - தலைப்பு: ‘ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது’ - இனியா கொண்டாரெட்டி - Year 4 - 2023

இங்குக் கூடியிருக்கும் அவையோர் அனைவருக்கும் எனது முத்தமிழ் வணக்கங்கள். நீங்கள் எப்போதாவது உலகத்திலுள்ள பல நாடுகளை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா? சில நாடுகள் வெற்றி கண்டு வளர்ச்சி அடைந்துள்ளன. மற்றவை சிலபல காரணங்களால் பின்தங்கியுள்ளன. ஆனால் இந்நிலைமை கூடிய சீக்கிரமே மாறவுள்ளது. ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் ஒரு சிலரின் கைகளில் தான் இருக்கிறது. யார் இந்த ‘சிலர்’? ஆம், அது சரி: இளையர்கள் தான்! அவையிலுள்ள அனைத்து இளையர்களும் பெருமையுடன் கையை நன்கு உயரமாகத் தூக்குங்கள் பார்க்கலாம், சிறப்பு! இன்று நான் ஒரு நாட்டின் எதிர்காலம் ஏன் அதன் இளையர்களின் கைகளில் தான் உள்ளது என்பது குறித்து உரையாற்றவிருக்கிறேன். // உங்கள் மனதில் என்ன கேள்வி உள்ளது என்று எனக்குத் தெரியும். “ நான் ஒரு சாதாரணமான குடிமகன் தான், நாட்டின் எதிர்காலம் என் கையில் உள்ளதா?” ‘ தனிமரம் தோப்பாகாது’ என்பதற்கு ஏற்ப தனியாக இருக்கும்போது நாம் ஒருவர், ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் கூடினால் ஒரு நாட்டின் சதித்திரத்தையே எழுதலாம். நம் சமுதாயத்தில் பெரியவர்கள் எப்போதும் இளையர்களின் அறியாமையையும் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், சமுதாய வளர்ச்சிக்கு முக்கிய கருவியாக அமையப்போவது இளையர்கள் தான்! ‘ இளமை வாழ்வின் அறிவு பெருவினை யார்க்கும் தெரியாது’ என்று நம் மூதாதையர்களே பாராட்டி எழுதியுள்ளனர். இப்போது, என் நிலைப்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடுகிறேன். // முதலாவதாக, இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்! ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமே அரசாங்கம் தான். ஒரு நாட்டின் முகமாக அமைந்து, நாட்டு மக்களுக்கு வெற்றிப் பாதையைக் காட்டுவதே ஒரு தலைவனுக்கு அழகு. அரசியல்வாதிகள் அனைவரும் உண்மையாக, வெளிப்படையாக, நேர்மையுடன் நாட்டின் நலன் கருதிச் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். இன்னும் சில வருடங்களில் இன்றைய அரசியல்வாதிகள் ஓய்வு பெற, இச்சவாலைச் சமாளிக்கப் போவது நீங்கள் தான் இளையர்களே. கடந்த தலைமுறையை விட, நம் இளைஞர்கள் தலைமைத்துவத்தில் ஒரு படி மேலே இருப்பார்கள் என நான் திண்ணமாக நம்புகிறேன். ஏன் என்று கேட்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் பள்ளியில் ஒருமுறையாவது தலைவராக இருந்திருக்கிறீர்கள் எனக் கேட்டால் அனைவரும் கைகளை சட்டென்று மேலே உயர்த்துவீர்கள்! இதுதான் காரணம்; பள்ளியில் தலைமைத்துவத்தைக் கற்கவும் அதை அனுபவிக்கவும் இன்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அது மட்டுமா, இளையர்களிடம் புதிய உற்சாகமும் தைரியமும் தெரிகின்றது. ஒரு செயல் தவறு என்று எதிர்த்து கூற மனதில் அச்சம் இருக்காது இன்றைய இளையர்களுக்கு. உதாரணத்திற்கு, இன்று ஊழலில் ஈடுபட்டிருக்கும் பலரைத் தட்டிக் கேட்பவர்கள் இளைஞர்கள் தான். இளைஞர்களின் புதிய சிந்தனைகளும் புத்தாக்கமும் முற்போக்கான சமூகத்தை உருவாக்கும். இளைஞர்கள் மாற்றங்களை உண்டாக்க செயலில் இறங்குவர், பதவியை விரும்பி செயல்படுவதைவிட மக்களுக்குச் சேவை செய்வர். அதாவது, பல வருடங்களுக்கு மாற்றப்படாத பழைய சட்டங்களை இன்றைய சமூகத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பது நாட்டின் அமைப்பை நல்வழியில் மாற்றும். அத்துடன், கண்ணாடியை போலவே வெளிப்படையாக, ஒளிவுமறைவின்றி நடந்து கொள்வர். ‘பிறருக்கு உரைப்பாய்வு ஆகா இறைவன் அறிவர் ஆகும் அறிவு’ என்ற முத்து முத்தான எழுத்துகள், மக்களுடைய கருத்துக்களைப் புரிந்து கொள்வது தான் புத்திசாலியான தலைவருக்கு அழகு என்ற அர்த்தத்தை கொண்டுள்ளன. இளைஞர்களின் தலைமையில் பல குடிமக்கள் அரசியலில் பங்கேற்பர். தங்களுய கருத்துக்களை பகிர்வதும் பொறுப்பாக தேர்தலில் பங்கேற்பதும் குடிமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள இணைப்பை வலிமையாக்கும். // இரண்டாவதாக, இளையர்கள் சமூக பிரச்சினைகளில் அதீத அக்கறையைக் காட்டுகின்றனர். பள்ளியில் கட்டாயத்துக்குச் செய்து வரும் சமூக சேவை வளர வளர பழக்கமாகவே மாறிவிடுகிறது. பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி அல்லது பொருள் உதவி செய்கின்றனர். சிலர் செஞ்சிலுவை சங்கத்தைப் போன்ற இலாப நோக்கமற்ற நிறுவனங்களில் தொண்டூழியம் மேற்கொண்டு சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்கின்றனர். இந்த முயற்சிகளால் சமத்துவத்தையும் நாட்டில் உதவும் கலாச்சாரத்தையும் நாட்டு நிம்மதியையும் நிலவச் செய்யலாம். இதன் மூலம் நாடு வளரும்- மக்களின் மகிழ்ச்சியும் வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதற்கு கரெட்டா தன்பர்கைச் சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம். இளமைப் பருவத்திலேயே பருவநிலை மாற்றத்தை குறைக்க, அனைவரும் பள்ளிக்கு செல்ல, அவர் ‘ வெள்ளை மாளிகைக்கு’ சென்று அரசியல்வாதிகளுடன் பேசினார். இளைஞர்களிடம் உள்ள தைரியத்தையும் உலக பிரச்சனைகளின் மீதான அக்கறையையும் அவர் பிரதிபலிக்கின்றார். இவரைப் போலவே, நம் சிங்கையின் இளையர்கள் கோவிட்-19 நிலையில் சிறு சிறு வழிகளில் நாட்டுக்குச் சேவையாற்றினர். அதைத் தவிர்த்து, சிலர் மற்ற நாடுகளுக்கு பயணித்து இயற்கைப் பேரிடருக்குப் பின்னர் உதவியிருக்கின்றனர். சுற்றுச்சூழல், ஏழ்மை, ஆண்-பெண் சமத்துவம் முதலான பல சிக்கல்களைக் கவனித்து குறைந்தவசதி படைத்தோருக்குக் குரல் தருகின்றனர். இதன்மூலம் வாழ்க்கைகளையும் நாட்டையும் மேம்படுத்துகின்றனர். அன்பு, பரிவு போன்ற பண்புகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்களா, அனைவரும்? சிறப்பு. // மூன்றாவதாக, இளைஞர்களே, உங்கள் பெற்றோர் உங்களை அதிகமாக கண்டிப்பது எந்தச் செயலுக்கு? ஆமாம், நாம் அனைவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தான்! ஆனால், இந்த தொழில்நுட்பம் நமது எதிர்காலத்துக்கு உதவியாக அமையும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஒரு சொடுக்கால் செய்தியை உலக மக்களிடம் பரவச் செய்யலாமே, சமூக ஊடகங்களின் மூலம். விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களை செயல்படுத்தவும் இது மிக பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமின்றி, தலைவர்கள் பிற நாடுகளில் நடந்தவற்றை அறிவதன்மூலம் தங்களுடைய நாட்டில் என்ன செய்யலாம், எவ்வாறு அதைப்போன்ற அசம்பாவிதத்தை தடுக்கலாம் என்று சிந்திப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை நல்லதுக்கு பயன்படுத்த இளைஞர்கள் மருத்துவம், அறிவியல் முதலிய பல துறைகளை வளர்க்கலாம். நாட்டின் வளர்ச்சி அதிகரிக்க, வாழ்க்கைத் தரமும் மேம்படும். தொழில்நுட்பத்துடன் புதிய உருவாக்கங்களை தேவையானபோது பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, ஆப்பிரிக்காவில் ஒரு இளைஞர் குழு வெள்ளம் வரும்போது அனைவரிடமும் செய்தி பரப்ப ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியது. இளைஞர்களின் அறிவு, பற்று மற்றும் புத்தாக்கத்தை இது காட்டுகிறது அல்லவா? // அடுத்ததாக, விளையாட்டு மற்றும் கலைகளைக் கவனிப்போம். சமீபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி சாந்தி பெரெரா ஓட்டப்பந்தயத்தில் சிங்கையைப் பிரதிநிதித்து பல சாதனைகளைப் படைத்துவந்துள்ளார். நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரைப் போலவே பல இளைஞர்கள் தங்களுடைய நாட்டுக்கு எதிர்காலத்தில் பெருமைச் சேர்ப்பார்கள். இளைஞர்கள் கலைகளிலும் விளையாட்டிலும் உள்ள தங்களது ஈடுபாட்டை தங்களுடைய திறனாக மாற்ற பல வாய்ப்புகள் உள்ளன. இன்றைய சமுதாயம் பிடித்ததைப் படிக்காதே, எதிர்காலத்தில் அதிகம் சம்பளம் அளிக்கும் படிப்பைப் படி என்று சொல்கிறது. ஆனால், இந்த போலி சந்தோஷத்தை விட்டுவிட்டு இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமானதைச் செய்வதால் நாட்டுக்குப் பெருமையை வாங்கி தரலாம். // கடைசியாக, கல்வி. உங்களில் எத்தனை பேர் கல்வியின்று ஒரு நாடு வெற்றியடைய முடியாது என்று நம்புகிறீர்கள்? உங்களுக்குக் கிடைத்த கல்வியை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு செல்லுங்கள்! நீங்கள் அனைவரும் தான் உங்களது நாட்டின் தூண்கள் என்பதை மறவாதீர்கள். தலைவர்கள், சேவை செய்யுங்கள்! அனைவரும் சமுதாயத்தில் பண்புகளை வளர்க்க சமூக பிரச்சினைகளில் ஈடுபடுங்கள்! மேலும், உங்களுடைய அறிவை வளர்த்து, தொழில்நுட்பத்தின் உதவியால் நாட்டை மேம்படுத்துங்கள்! நாட்டை பிரதிநிதித்து வென்று வாருங்கள்! // ‘ஒரு நாட்டின் எதிர்காலமே உங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் தான் உள்ளது!’ என்று கூறி எனது உரையை முடிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

No comments: