Friday, November 5, 2021

ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும்” கருத்துரைக்க

 SANYUKTA ARUNKUMAR - 2021

‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து

என்பதற்கேற்ப நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் அல்லது வளம், இன்பவாழ்வு மற்றும் நல்ல காவல் ஒரு நாட்டிற்கு அழகு. இவை ஐந்தும் உள்ளடக்கும் நாடாக மாறி உலக அளவில் சிறக்க சட்டங்கள் தேவை என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. சட்டங்கள் இல்லாமல் மக்கள் இந்த ஐந்து தன்மைகளும் உடைய நாடாக மாற்றும் முயற்சிகளில் அவ்வளவு ஈடுபாடு காட்டமாட்டார்கள். மக்களின் ஆதரவில்லாமல் ஒரு நாட்டில் எந்த மாற்றமும் கொண்டுவர இயலாது என்பது உலகம் அறிந்த உண்மை. எனவே, ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும் எனும் கூற்றை முழுமையாக ஆமோதிக்கிறேன்.

முதலாவதாக, நோயில்லாமல் மக்கள் உடல்நலம் ரீதியாக பாதுகாப்பாக இருக்கும் ஒரு நோயற்ற நாடாக மாறுவதற்குச் சட்டங்கள் தேவை. இதை இன்றைய கோவில்-19 சூழலில் கண்கூடாகக் காணலாம். உலகில் பல குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகளான இந்தியா, ஆப்ரிக்கா, பிரெசில் முதலிய நாடுகளில் கோவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வளர்ந்த நாடான சிங்கப்பூரிலோ கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இதற்குக் காரணம் சிங்கப்பூரில் முகக்கவசம் அணிய வேண்டும் என்னும் சட்டமிருப்பது ஆகும். இதிலிருந்து நோயில்லாத பாதுகாப்பான நாடாக மாற சட்டங்கள் எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது. சட்டங்கள் இல்லாவிடில் மக்கள் தங்கள் மனம் போன போக்கில் நடந்துகொள்வார்கள்; கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த இயலாது. சட்டங்களால் ஒரு நாட்டின் குடிமக்கள் அவற்றுக்குப் பயந்து அல்லது அவற்றை மீறுவதால் வரும் விளைவுகளை எண்ணி அஞ்சி அச்செயலைச் செய்யமாட்டார்கள். நாட்டுடன் ஒத்துப்போய் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து நாட்டை நோயற்றதாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவர். எனவே, நோயில்லாத நாடாக மாற சட்டங்கள் அவசியம்.

இரண்டாவதாக, கடுமையான சட்டங்களையும் தண்டனைகளையும் விதிக்கும்போது தான் ஒரு நாட்டைப் பாதுகாப்பானதாக ஒன்றாகவும் நல்ல காவலுடையதாகவும் மாற்ற இயலும். கடுமையான சட்டங்கள் இருக்கும்போது அந்த நாட்டின் மக்கள் ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அச்செயலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள். அதன் விளைவுகளை எண்ணிப்பார்ப்பார்கள்; தயங்குவார்கள். இத்தகைய அச்சத்தை மக்களின் மனதில் நிறுத்தினால் மட்டுமே ஒரு நாட்டைப் பாதுகாப்புடையதாகவும் நல்ல காவலுடையதாகவும் மாற்ற இயலும். உதாரணத்திற்கு, சிங்கப்புரில் போதைப் பொருளை ஊருக்குள் திருட்டுத்தனமாக கொண்டுவருவதற்கும் கொலை செய்வதற்கும் மிகவும் கடுமையான சட்டங்களை விதித்துள்ளது. இத்தவறுகளைச் செய்பவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்கப்படும். எனவே, சட்டத்திற்கு அஞ்சி யாரும் இவற்றை செய்யமாட்டார்கள். நாடும் ஒரு பாதுகாப்புடையதாக மாறும். இத்தகைய மாற்றத்தை வேறு எந்த வழியிலும் கொண்டு வர இயலாது. எனவே, நல்ல காவல் மற்றும் பாதுகாப்பு உடைய நாடாக மாற்றுவதற்கு ஒரு நாட்டின் சட்டங்களால் இயன்ற ஒன்றே.

மூன்றாவதாக, ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே சமூகத்தையும் அதன் அமைதியையும் சீரழிக்கும் தன்மையுடைய பிரச்சினைகளை ஒழிக்க இயலும். சமூகத்தையும் நாட்டின் அமைதியையும் சீர்குலைக்கும் பிரச்சினைகள் பெரும்பாலும் மக்களால் தொடங்கப்படுபவையாகவே இருக்கின்றன. உதாரணத்திற்கு, பொய்ச் செய்தி பரவலின் பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். பொய்ச் செய்தி சமுதாயத்திலிருக்கும் ஒருவரிடம் தொடங்கி மின்னிலக்கமயமாக்குதலால் காட்டு தீ போல் நாடு முழுவதும் பரவுகிறது. ஒரு தடவை, சிங்கப்பூரில் இன்னொரு நடமாட்ட கட்டுப்பாடு வரப்போகிறது என்னும் பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. இதனால் நாட்டு மக்களுக்குத் தேவையில்லாத பதற்றம் உருவாகியது. பேரங்காடியிலிருக்கும் பொருட்களைச் சுயநலமாக தாங்களே வாங்கிக்கொண்டனர். இச்சம்பவம் நாட்டின் அமைதியையே சீர்குலைத்துவிட்டது. அதனால் சிங்கப்பூரில் பொய்ச் செய்திகளுக்கு எதிராக POFMA என்னும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சமூகத்தில் இதுபோன்ற பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டால் அவற்றை முடக்கி திருத்தம்செய்வதோடு தவறு செய்தவரையும் தண்டிக்கிறது. எனவே, சமூகத்தின் அமைதியைச் சீர்குலைத்து நாட்டை உடைக்கும் பிரச்சினைகளைத் தடுத்து ஓர் அமைதியான நாடாக மாற்ற சட்டங்கள் இல்லாவிடில் வேறு யார் உதவுவார்?

இறுதியாக, ஒரு நாட்டில் சட்டங்கள் சமுதாயத்தில் இன்பவாழ்வுக்கு வழி வகுத்து ஒரு மகிழ்ச்சியான, ஒற்றுமையான நாடாக மாற்றுகின்றன. கூடி வாழ்ந்தால் கோடி நன்மைஎன்பதற்கேற்ப நாட்டில் இருக்கும் பல்லின மக்கள் ஒற்றுமையாக இணைந்து வாழ்வது இன்றியமையாதது. ஒரு நாடு மலர் தோட்டம் போன்றது. அதில் பல்லின மக்கள் எனும் மலர்கள் சிறப்பாக செழிப்புடன் வாழ்வது அவசியம். இனங்களுக்கு இடையே மனக்கசப்போ சண்டையோ உருவாகும் வண்ணம் நடந்துகொண்டால் கலவரத்தில் நாடே சுக்குநூறாக உடைந்து விடும். எனவே, இத்தகைய இனப்பிரச்சினைகளை நீக்கி இன்பவாழ்வுடைய மகிழ்ச்சியான, ஒற்றுமையான நாடாக மாற்ற சட்டங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, சிங்கப்பூரில் ‘Sedition Act’ என்னும் சட்டம் உள்ளது. இது அரசாங்கத்திற்கு எதிராகவோ மற்ற இனங்களுக்கு எதிராகவோ சொல்லப்படும் கடும் பேச்சை (Hate Speech) தடுக்கிறது. எனவே, ஒரு நாட்டில் சட்டங்கள் இருந்தால்தான் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைக் குறைப்பது, இனக் கலவரங்கள் முதலியவற்றை தடுத்து மகிழ்ச்சியான நாடாக மாற்றலாம்.

ஆகையால், நோயில்லாமை, நல்ல காவல், அமைதி, இன்பவாழ்வு முதலியவற்றை உள்ளடக்கும் நாடாக மாற்ற ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே இயலும் என்று கூறினால் அது மிகையாகாது. எனவே, ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும் என்பதை முழுமையாக ஆமோதிக்கிறேன்.

No comments: