Friday, November 5, 2021

மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் சமூகம் பயனடைவதோடு மாணவர்களும் பயன்பெறுகிறார்கள்” எனும் தலைப்பில் குழுமப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு

ARTHI VENKATARAMANAN  - 2021

 "சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு!"

இங்குள்ள அனைவருக்கும் என் முதற்கண் தமிழ் வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? இது மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பாடலாகும். அவர்களின் உத்வேகத்தை வலுப்படுத்தும் பாடலுமாகும். மாணவர்கள் படிப்பதை மட்டும் அழுத்தம் திருத்தமாக செய்தால் போதாது. அவர்கள் சமுதாயத்தை வழிநடத்த பாடுபடவும் வேண்டும். நமது நாடு எனும் தோட்டத்தில் மாணவர்களே நாளை மலரும் முல்லைகள். இவர்களே நமது வருங்கால தலைவர்கள். ஆகையால் மாணவர்களை செடிகள் போல பெயர்ந்து நட்டு, நன்கு கவனித்து, தக்க சூழலில் வளரச் செய்தால் இவர்கள் செழிப்பார்கள். இது நடக்க வேண்டுமென்றால் பகற்கனவு மட்டும் கண்டால் போதாது. சமூக சேவை என்னும் தாரக மந்திரத்தை நமது மாணவர்கள் புரிய வேண்டியது கண்களைப் போன்றது என வர்ணிப்பதில் தவறு இல்லை.

நமது வருங்கால தலைவர்களான மாணவர்கள் தொண்டூழியம் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நமது சிங்காரச் சிங்கை கனிவாகக் கனிகிறது. இதனால் மாணவர்களுக்கிடையே மகிழ்ச்சியும் உற்சாகமும் பிறக்கின்றது. இவை இரண்டும் மலரும் மனமும் சேர்வது போலாகும். உதாரணத்திற்கு, 'Budding Minds' எனும் அமைப்பு வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாக பாடம் கற்பிக்கும் தொண்டூழியம் சேவையை செய்து வருகிறது. இது பல்கலைக்கழக மாணவர், திரு லீ, கண்டுபிடித்த ஓர் அமைப்பாகும். சுமார் நூறு பிள்ளைகள் இங்கு பயில்கிறார்கள். இன்று நமது பணவேட்கை மிக்க சமுதாயத்தில் அனைவரும் எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வறுமையில் வாடுபவர்களுக்கு அன்பு காட்டும் பழக்க வழக்கங்களுக்கு இன்று மக்களுக்கு நேரமும் இல்லை மனமும் இல்லை. அன்பில்லாத வாழ்க்கையை வறண்ட பாலை வனத்திற்கு ஒப்பிடுகிறார் நமது தெய்வப்புலவர் வள்ளுவர். நமது சமுதாயம் அன்பாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திரு லீ போன்ற மாணவர்கள் பொறுப்பேற்பதால் நமது நாடும் சிங்கார சிங்கை என்று மட்டுமல்லாமல் அன்பான சிங்கையாகவும் உலக அளவில் பெயர் பெறுகிறது. இங்கு சேவை புரிவதால் 21-ஆம் திறனான, சமூக திறனை மாணவர்கள் வளர்க்கின்றார்கள். ஏனென்றால் மற்றவர்களுடன் பேசி பழகுவதால் சமுதாயத்தில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன, அதை எப்படி சரி செய்யலாம், என்று மாணவர்கள் திரு லீ போல சிந்திக்கத் தொடர்வார்கள். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் சமுதாயத்தை பற்றி அக்கறை காட்டாததால் பாலகர்கள் பரிதவிக்கிறார்கள், சிறுவர்கள் சீரழிகிறார்கள், இளையர்கள் இழிநிலை அடைகிறார்கள். ஆகையால் தோழர்களே, நாம் சமூக சேவை செய்வதால் சமுதாயம் அன்பாக இருப்பதோடு நாமும் சமூக உணர்வை ஏற்படுத்தி நாளைய தலைவராக தகுதி பெற முடியும் என்பது வெள்ளிடை மலை அல்லவா?

 இன்றைய நமது உலகில் கோவிட்-19 ஆட்டிப் படைக்கின்றது. வருங்கால சமுதாயம் எப்படி இருக்கும் என்று தெரியாத கலிகாலமாக அமைகிறது. சலனமும் சஞ்சலமும் நமது உலகத்தை ஆக்கிரமித்துள்ளது. இதுபோன்ற நேரத்தில் மற்ற மனிதர்களை பார்க்காமல் வெளி உலகத்தில் வாழாமல் பிணி, பகை இவையாவும் தலைகாட்டுகிறது நமது சிங்கையில். கேட்கவே இறுக்கமாக இருக்கின்றது அல்லவா? ஆமாம். ஆனால் இது போன்ற நேரங்களிலும் மாணவர்கள் மனித நேயத்தையும் மனித குலத்தையும் விட்டுக் கொடுக்கக்கூடாது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார. இது போன்று புரியாத புதிராக இருக்கும் இந்த காலகட்டத்தில் மனித நேயத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. நமது சமுதாயம் இந்த விஷயத்தில் தலையாய இடம்பிடித்துள்ளது. இணையத்தின் வழி தொண்டூழியம் ஆற்ற மாணவர்களுக்கு பற்பல வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சிண்டா,மெண்டாக்கி, போன்ற சமூக அமைப்புகள் இணையத்தின் வழி பல மகிழ்ச்சியூட்டும் போட்டிகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி கொடுக்கிறார்கள்.

இதுபான்ற நேரத்தில்            

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

 என்பும் உரியர் பிறர்க்கு

 எனும் திருவள்ளுவரின் வாக்கு நமக்கு நினைவுக்கு வருகின்றது அல்லவா? மேலும், முதியவர்களுக்கும் இணையத்தை எப்படி பயன்படுத்துவது போன்ற பாடங்களை இணையத்தின் வழி மாணவர்கள் செய்கிறார்கள். இதனால் நமது சமூகம், கோவிட்-19 ஆல் சோர்வடைந்து மன நல பாதிப்பால் பாதிப்படையாததோடு, மாணவர்களும் மனித நேயத்தின் மீது நம்பிக்கையை கைவிட மாட்டார்கள். இது போல நீங்களும் கோவிட்-19 இல் சமூக சேவை செய்திருக்கின்றீர்களா? செய்ய உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா? முன்னாள் அமெரிக்க பிரதமர் கெனடி, ‘’நாடு உனக்கென்ன செய்தது என்று கேட்காதே நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்,’’ என்று கூறுகிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு மாணவர்கள் இந்த காலத்தில் சமூகத்திற்கு சேவை செய்து அனைவரையும் உற்சாகப்படுத்துவதால் நமது நாட்டில் புதிய உத்வேகம் பிறக்கிறது.

ஸ்வீடன் எனும் நாட்டில் 16 வயதான கிரெட்டா தன்பர்க் சுற்றுச்சூழலுக்கு செய்த தொண்டூழியம் உலக மேடையில் பிரபலமாகிவிட்டது என்பது நீங்கள் அறிந்த மெய். இவர் சாதாரண பள்ளி மாணவியாக இருந்தாலும் உலகத்தின் வெப்ப நிலையை குறைக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் பாடு படுகின்றார். 'விதை போட்டவன் விதை அறுப்பான் வினை போட்டவன் வினை அறுப்பான்' என்பதை இவரின் செயல் புலப்படுத்துகிறது. சுற்றுச்சூழலை பற்றி நூற்றுக்கும் மேலான முயற்சிகளை உலக அதிபர்களுடன் இவர் பேசியுள்ளார். இவருடைய நெருப்பு போன்ற சொற்களாலும் சிங்கத்தை போல தைரியத்தாலும் உலகம் பயன் அடைந்துள்ளது. எவ்வளவு நன்றாக உள்ளது?

 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

 தெய்வத்துள் வைக்கப் படும்'

என்பதற்கேற்ப கிரெட்டா தன்பர்கின் பெருமுயற்சியால் இவர் தெய்வத்துக்கு நிகராக இருக்கிறார் என்று நாம் கூறலாம் அல்லவா? இதுபோன்ற ஆக்கபூர்வமாக சிந்திப்பவர்களை பார்த்து நடப்பதால் மாணவர்களுக்கும் உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறி பிறக்கும். இதனால் சமுதாயம் பொறுப்பான தலைவர்களை உருவாக்குகின்றது.

 காலச்சுழற்சியாலும் மனிதனின் சாதனைகளாலும் இன்று நமது உலகம் வெகுவாக மாறியுள்ளது. ஆனால் மனித நேயத்தை தொண்டூழியம் செய்வதன் வழி கட்டிக்காத்து அதை விடாமல் பாதுகாக்க வேண்டும். நமது நாடு சூரியனைப் போன்றது, மாணவர்கள் நிலத்தைப் போன்றவர்கள். சூரியன் எப்படி நிலத்தை சுட்டெறித்துக்கொண்டே இருக்கிறதோ அதை போலவே மாணவர்கள் நமது சமுதாயத்தை நல்வழிப்படுத்த தொண்டூழியம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதனால் மாணவர்கள் சமூக உணர்வு மற்றும் பொறுப்பு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டு நாளைய தலைவர்களாகிறார்கள். ஆகையால் மாணவ செல்வங்களே! உங்களுடைய நாளங்களில் ஓடும் இரத்தத்தோடு தொண்டூழியத்தையும் சமூக பொறுப்பையும் இரண்டறக் கலந்து நாட்டை வலுவாக்குங்கள்! அதற்காக மனதை பரவலாக்குகிறேன் என்று சொல்லி மனதை பறக்க வைத்து விடாதீர்கள்! நன்றி, வணக்கம்!

No comments: