Friday, November 19, 2021

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

சுசித்தா.ம - 2021 கோயில் கோபுரத்திலுள்ள எழில் மிக்க கலசத்தை மட்டுமே மக்களான நாம் எப்பொழுதும் ரசிக்கிறோம். அதன் அருமையையும் பெருமையையும் போற்றிப் பாடுகிறோம், வியப்பில் ஆழ்கிறோம். ஆனால் அக்கலசம் நூறடி உயரத்தில் உயர்ந்து, கம்பீரமாக நிற்கக் காரணமான தூண்களை அறவே மறந்துவிடுகிறோம். இத்தூண்களே கோயிலின் எடையை தாங்கி, அதை உயர்த்தி காட்டுகின்றன. அதைப் போலவே, மக்களாகிய நாம், உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ, அடிப்படை காரணமாக அமைவது நமது குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள வசதிகளே என்பதை அடிக்கடி உணர தவறுகிறோம். சிங்கப்பூரில் இத்தகைய வசதிகள், குறிப்பாக விளையாட்டு வசதிகள், உதவியாக இருக்கின்றனவா என்று வினவினால், ஆம் என்றே நான் கூறுவேன். சிறு மீன் பிடி கிராமமாக இருந்த ஊரை, உலகே திரும்பி பார்க்குமாறு நம் அரசங்கம் அதை மாற்றியுள்ளது. அப்போதெல்லாம் குடிசை வீடுகள் மட்டுமே அனைத்து இடங்களிலும் தென்பட்டன, ஆனால், இப்போது அடுக்குமாடி கட்டடங்களையும் தாண்டி குடியிருப்பு பேட்டைகளில் விளையாட்டு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தீட்டாத வைரத்தை தோண்டி, தீட்டி பளபளக்க செய்வது போல நமது குடியிருப்பு பேட்டைகளை விளையாட்டு திடல்கள், அடுக்குமாடி கீழ்த்தளத்தில் விளையாட்டு மேசைகள், பூங்காக்கள் போன்றவற்றால் செழிப்புற செய்துள்ளது. இவை மக்களின் ஆரோக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் நிச்சயம் மேம்படுத்துகின்றன. முதலில், விளையாட்டு திடல்கள். சிங்கப்பூர் குடியிருப்புப் பேட்டைகளில், பூப்பந்து திடல்களையும் வலைப்பந்து திடல்களையும் காண்பது அதிசயமல்ல. அவை அமைக்கப்பட்டது மட்டுமின்றி, வசதியாக பல குடியிருப்பு கட்டடங்களின் மத்தியில் பலருக்கும் சொந்தமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு மக்கள் கூடி விளையாடுமிடமாக இவை திகழ்கின்றன. “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடின் தாழ்வு" என்பது பழமொழி. அதற்கேற்ப இவ்வசதிகள் மக்களை ஒன்று திரட்டி பழக அனுமதி தருவன. ஒருவருக்கு ஒருவர் இணைந்து விளையாடுகையில் தங்களது ஆனந்தத்தையும் உவகையையும் பகிர்ந்து கொள்கின்றனர். இது ஐயமின்றி சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும். விளையாட்டுகள் மக்களை இணைக்க கூடியவை. அது மட்டுமல்லாது, அவை உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதவையாக விளங்குகின்றன. “ஆரோக்கிய வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். தற்போதைய பரபரப்பான சூழலில் சிங்கப்பூர் மக்களுக்கு உடற்பயிற்சி செய்ய நேரமே கிட்டுவதில்லை. சிங்கபூரில் சராசரி பணியாளருக்கு வேலை நேரம் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தான். ஆனால் பேரங்காடியில் வேலை செய்யும் துப்புரவாளரிலிருந்து பெரும் நிறுவனங்களுக்கு முதலாளியாக இருப்பவர்கள் வரை அனைவரும் இதைவிட அதிக நேரம் பணி புரிகிறார்கள். ஆனால், நாளைக்கு அரைமணி நேரமாவது உடற்பயிற்சி அவசியம் என்பதால், எளிதில் அடைய கூடிய தூரத்தில் அமைந்திருக்கும் இவ்விளையாட்டு திடங்கள் மக்களுக்கு ஊக்குவிப்பை அளிக்கின்றன. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய இயலும்? ஆக உடற்பயிற்சி பெற்று புத்துணர்ச்சி பெறுவது இன்றியமையாததாகும். பூப்பந்து மற்றும் வலை பந்து போன்ற விளையாட்டுகளை விளையாட அமைந்திருக்கும் இவ்வசதிகள் இதற்கு வழி வகுக்கின்றன. அடுத்தது, அடுக்குமாடி கீழ்தளங்களில் அமைந்திருக்கும் மேசை விளையாட்டுகள். இவை மேசை மேல் அமைந்திருக்கும் தாய விளையாட்டுகள். இது நல்லிணக்கத்தை தூண்டுவதற்கு செழிப்பான விளையாட்டு வசதியாக அமைகின்றது. ஏனெனில், இதை இரண்டுக்கு மேற்பட்டோரால் தான் விளையாட இயலும். ஆக, அடுக்குமாடி கட்டடங்களில் வாழ்பவர்கள் இங்கே ஒருவரோடு ஒருவர் பழகலாம். குறிப்பாக முதியோர்கள், வீட்டில் துணையின்றி இருக்கையில் இங்கு வந்து சகவயதினரோடு பழகும் பொழுது வயதான காலத்தில் நெருங்கிய நண்பர்களை உண்டாக்கி கொள்வார்கள். “நவில்தோறும் நூல் நயம் போலும் பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு" என்பது அன்புமிகு வள்ளுவரின் குறள். அதாவது, படிக்க படிக்க இன்பமளிக்கும் நூல்களை போல, நல்லோருடன் பழக பழக அன்னட்பானது இனிக்கும். இவ்வாறு சேர்ந்து விளையாடுபவர்களிடேயே சமூக நல்லிணக்கம் அதிக வலு பெற்று அழகிய நட்பாக மலர்கிறது. இவர்கள் ஒரு படி மேலே சென்று, துன்பத்தில் தோள் நண்பர்களாகின்றனர். பண உதவி, மன உதவி ஆகியவற்றையெல்லாம் புரியும் நகமும் சதையும் போன்ற நண்பர்களாகின்றனர். அது மட்டுமல்லாது, தனிமையாக இருப்பதை விடுத்து சமூகத்தில் வாழும் மற்றவர்களோடு பழகுகையில் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. ஏன்? ஏனென்றால், ஒருவரோடு ஒருவர் பழகி சமூக தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளும் போது, நாம் கவலைகளை மறந்துவிட்டு சிரிக்கின்றோம், உல்லாச வானில் சிறகடித்து பறக்கின்றோம். “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்பார்கள். சிரிப்பதென்பது நம் இரத்த ஓட்டத்தை சீர் படுத்துவதால், நாம் உடல் ஆரோக்கியத்தை பெறுகின்றோம் என்பது நிதர்சனமான உண்மையாகும். அடுத்து, பூங்காக்கள். சிங்கப்பூர் குடியிருப்புப் பேட்டைகளில் அநேக பூங்காக்கள் அமைந்துள்ளன. இவை இயற்கை நிறைந்த, பச்சை பசேல் இடங்களாகவும் இருப்பதால், தூய காற்று மிக்க இடங்களாக உள்ளன. இங்கு ஊஞ்சல்கள் போன்ற விளையாட்டு வசதிகளுண்டு. அங்கு இருக்கையில் தூய காற்றையும் இயற்கையின் வனப்பையும் ரசிக்கும் வாய்ப்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த துணை புரிகிறது. இங்குள்ள ஊஞ்சல்கள் சமீபத்தில் நான்கு பேர் எதிர் எதிரே அமரும் ஊஞ்சல்களாக மாற்றி அமைக்கபட்டுள்ளன. ஆக, சிறுவர்கள் மட்டுமின்றி வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்த ஆடவர்களும் அமரலாம். இது சமூக நல்லிணக்கத்தை நிச்சயம் மேம்படுத்தும். அல்லும் பகலும் செருப்பாய் அயராது உழைக்கும் நடு வயதினருக்கு ஒய்வெடுக்கவும் இது சிறந்த வாய்ப்பு. “பணம் பத்தும் செய்யும்” என்பது உண்மை தான். அதற்காக இவர்களின் வாழ்க்கை அதையே சுற்றி இருக்க இயலுமா? மக்கள் தொடர்பு வேண்டாமா? “பணம் இல்லாதவன் பிணம்” என்பது போல உறவுகள் இல்லாதவனும் அனாதை ஆவான். ஆகையால், வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக குடியிருப்பு பேட்டைகளில் அமைந்துள்ள இவ்விளையாட்டு வசதிகள் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, சமூக நல்லிணக்கத்தை உண்டாக்க உதவுகின்றன. “ஆடி அடங்கும் வாழ்கையடா, அறடி நிலமே சொந்தமடா.” நாம் உண்மையில் சம்பாதிக்க வேண்டியது பொன்னோ பொருளோ அல்ல, உறவுகளையும் நல்லிணக்கத்தையும். அதற்கு புதுமையாக அமைக்கப்பட்ட இப்பூங்கா விளையாட்டு வசதிகள் பெரும் வகையில் வழி வகுக்கின்றன. சுருக்கமாக, சிங்கபூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் அரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளனவா என்றால், நான் ஆணித்தரமாக ஒப்புக்கொள்கிறேன். சிங்கப்பூரில் அமைந்துள்ள வசதிகள் தொலை நோக்கு சிந்தனையோடும் புத்தாக்க சிந்தனையோடும் ஆரோக்கியம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை உண்டாக்க அமைக்கப்பட்டுள்ளன. தாமரை மலரின் காம்பு எவ்வளவு நீளமோ, அதன் அளவே அது மேலோங்கி நிற்கும். அது போல, மக்களது ஆரோக்கியமும் நல்லிணக்கமும் எவ்வளவோ, அவ்வளவே அவர்களது வாழ்கையின் இன்பம் மற்றும் அனுபவம்.

No comments: