Friday, November 5, 2021

ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பதக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும். கருத்துரைக்க.

MUTHU DHARANA. - 2021 

      ஒவ்வொரு நாடும் ஒரு பூந்தோட்டமென்றால், அந்நாட்டில் சட்டங்களே அப்பூந்தோட்டதிற்கு இன்றியமையாத மழை மற்றும் மாரியாக அமையும். எனவே ஒவ்வொரு பூந்தொட்டமும் அழகாக வளர எவ்வாறு மாரி தேவையோ, அதே போல ஒவ்வொரு நாடும் சிறந்து விளங்குவதற்கும் விரும்பதக்க மாற்றங்களை அனுபவிக்கும் சட்டங்களும் மிக அவசியம். இருப்பினும், மழை மட்டுமிருந்தால் பூக்கள் எழில்மிக்கவையாக வளருமா? இல்லை. சூரிய ஒலி, உணவு மற்றும் காற்று முதலிய மற்ற பல விஷயங்களும் தேவை. அதே போலதான் ஒரு நாட்டில் விரும்பதக்க மாற்றங்களை கொண்டுவர சட்டங்களை தேவையென்றாலும் அவை மட்டுமே போதாது; திட்டங்கள் மற்றும் தண்டனைகளும் தேவை. மேலும், அளவுக்கு மீறி சட்டங்களை மட்டுமே பயன்படுத்தினால் அந்நாட்டில் விரும்பதக்க மாற்றதிற்குப் பதிலாக எதிர்மறையான பாதிப்புகளும் நடக்கக்கூடும். ஆதலால், ஒரு நாட்டில் விரும்பதக்க மாற்றங்களை கொண்டுவர சட்டங்கள் மட்டுமே பொதாது. இக்காரணங்கள் இன்னும் விவரமாக இனிக் காண்போம்.

      முதலாவதாக, ஒரு நாட்டில் விரும்பதக்க மாற்றங்களை கொண்டுவர சட்டங்கள் மட்டும் இருந்தால் போதாது. அவற்றோடு சேர்ந்து திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற வேண்டும். ஏனெனில், நாட்டில் விரும்பதக்க மாற்றத்தை ஓர் அரசாங்கம் கொண்டு வர எண்ணினால், முதலில் அவ்வரசாங்கத்துக்கு மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை. ஏனென்றால், நாளடைவில் அச்சட்டங்களை பின்பற்றி கடைபிடிக்க வேண்டியபவர்கள் ஒவ்வொரு நாட்டின் மக்கள்தான். அதனால், அச்சட்டங்களை கடைபிடிப்பதன்மூலம் நல்ல மாற்றங்களை கொண்டுவர மக்களின் கவனத்தையும் ஈடுபாடையும் அரசாங்கம் கவரவேண்டும். அப்போதுதான் அவர்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள சட்டங்களைப் பின்பற்றி தங்கள் ஈடுபாட்டையும் ஆதரவையும் வழங்குவார்கள். எனவே, நாட்டுமக்களின் ஒத்துழப்பைப் பெற நாட்டின் அரசாங்கம் சட்டங்களோடு சேர்த்து பல்வேறு திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடைபெற வைக்கவேண்டும். இதற்கு சான்றாக, சிங்கப்பூரில் முதன்முதலில் பொது இடங்களில் குப்பைப் போடக்கூடது என்ற சட்டன் ஒருசாக்கப்பட்டப்போது, மக்கள் அதை அதிகமாக கடைப்பிடிக்காமல் இருந்தனர். இதற்குக் காரணம்? மக்களின் கவனம் அச்சட்டத்தால் ஈர்க்கப்படவில்லை என்பதால் மக்கள் முதலில் அச்சட்டத்திலும் அச்சட்டத்தை பின்பற்றுவதிலும் பெரும் ஈடுபாடு காட்டவில்லை. எனவே, இதையறிந்த சிங்கப்பூர் அரசாங்கம் பல புது திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் தொடங்கியது. அப்பல திட்டங்கலில் பச்சை திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களைப் பொது இடங்கலிலுள்ள குப்பையை எடுத்து பொது இடங்களை சுத்தம் செய்யவைக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப்பட்டப்பின்னர், மக்கள் அச்சட்டத்தை இன்னும் ஈடுபாட்டுடனும் கவனத்துனடும் கடைபிடிக்க தொடங்கினர். 2019-இல் சிங்கப்பூர் சுற்றுப்புற அமைச்சால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அந்நிகழ்ச்சியின் பின், சுமார் 89 விழுக்காடு சிங்கப்பூரர்கள் அச்சட்டத்தை கடைபிடித்து வந்த்தாக தெரிய வந்தது. அதற்கு முன்பு, வெறும் 20 விழுக்காடு மக்களே அச்சட்டத்தை பின்பற்றினார்கள். எனவே, அந்நிகழ்ச்சியின்மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடிந்தது, நாட்டை சுத்தமாக ஆக்கும் விரும்பதக்க மாற்றத்தை கொண்டுவர முடிந்தது. ஆதலால் ஒரு நாட்டில் விரும்பத்தக்க மாற்றத்தைக் கொண்டுவர சட்டங்கள் மட்டுமில்லாமல் இதுபோன்ற திட்டங்களும் வேண்டும்.

      இரண்டாவதாக, ஒரு நாட்டில் சட்டங்கள் மட்டுமிருந்தால் விரும்பத்தக்க மாற்ற்ங்களை கொண்டுவர முடியாது. சட்டங்களோடு சேர்ந்து தண்டனைகளும் தேவை. மனித சுபாவம் எப்படியென்றால், ஒவ்வொரு செயலையும் அதன் விளைவுகளை வைத்துத்தான் செய்வான். நல்ல விளைவுகள் அதிகமிருந்தால் ஒரு செயலை செய்வான். இல்லாவிடில், அவன் அச்செயலை செய்யமாட்டான். எனவே, அதே போல ஒரு நாட்டின் அரசாங்கம் எவ்வளவுதான் சட்டங்களை உருவாக்கினாலும், அதை பின்பற்றாதபோது நடக்கவேண்டிய ஏதேனும் ஒரு தண்டனையை விளைவாக தரவில்லையானால், குடிமக்கள் சட்டங்களை பின்பற்றமாட்டார்கள். அவ்வாறு சட்டங்களை பின்பற்றாதபோது, சட்டங்களால் ஏற்பட வேண்டிய நல்ல, விரும்பத்தக்க மாற்றங்களை கொண்டு வர இயலாது. எனவே, இதுவே ஒவ்வொரு சட்டத்திற்கும் பின்பற்றாதபோது கிடைக்கவேண்டிய ஒரு தண்டனையிருந்தால், மக்கள் அத்தண்டனை பெறுவதை தவிர்ப்பதற்காகவாவது அச்சட்டத்தை பின்பற்றுவர். தண்டனை இல்லாவிடில், மக்கள் அச்சத்திற்கு பெரும் முக்கியத்துவம் தராமல் ஏனோ தானோ என்று சொந்த பொக்கிர்கேற்ப , விரும்பத்தகாத மாற்றங்களை கொண்டு வரும்படியாக நடந்துகொள்வார்கள். இதற்கு சான்றாக, 2013-இல் அமெரிக்காவில் துப்பாக்கிகளை கொண்டிருக்க அரசாங்க அனுமதி தேவை என்ற சட்டம் ஏற்படுத்தப்பட்டபோது பெரும்பாலான மக்கள் அதை பெரிதும் கடைபிடிக்கவில்லை. ஏனெனில், அப்போது அரசாங்க அனுமதி பெறாமல் வைத்திருப்பவர்களுக்கு ஒரு தண்டனையும் இல்லை. ஆனால் , பல எதிர்பாராத துப்பாக்கி சூடுகள் நடக்க தொடங்கியபோது, அரசாங்கம் சிறைத்தண்டனையை கொண்டுவந்தது. அப்போதிலிருந்துதான் மக்கள் அரசாங்க அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்துக்கொள்வதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி சட்டத்தை பின்பற்றத் தொடங்கினார்கள்; நாட்டில் அமைதியும் நிலவத்தொடங்கியது. எனவே, சட்டங்கள் மட்டுமில்லாமல் தண்டனைகளும் தேவை. அபோதுதான் ஒரு நாட்டில் விரும்பத்தக்க மாற்றங்களை கொண்டுவர இயலும். கடைசியாக, ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களை கொண்டுவர இயலாது. ஏனெனில், சட்டங்களை மட்டுமே சார்ந்திருந்தால், அது ஒரு கட்டத்தில் விரும்பதக்க மாற்றங்களுக்கு பதிலாக, எதிர்மறையான மாற்றங்களைத்தான் கொண்டுவரும். எப்படி? என்று நீங்கள் கேட்பீர்கள். ஆனால் இது உண்மைதான். சில சமயங்கள், ஒரு நாடு வேறு எதையும் பயன்படுத்தாமல் சட்டங்களையே ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போனால் அது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்க்கேற்ப விரும்பத்தக்க மாற்றங்களுக்கு பதிலாக விரும்பத்தகாத மாற்றங்களை கொண்டு வந்துவிடும். ஏனென்றால், பல எண்ணற்ற சட்டங்களை அமைத்து மக்களைக் கடைபிடிக்க சொன்னால் அது ஒரு கட்டத்தில் அவர்களை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துவதுபோல் ஆகிவிடும். பல்வேறு இக்கட்டான பயங்கரமான சட்டங்களை அமைத்து விரும்பத்தக்க மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இதற்குக் காரணம், அரசாங்கத்தால் மக்கள் கட்டுப்படுத்தப்பட்டது போல் உணருவார்கள். மேலும், மக்களுக்காக சேவையாற்றும் பண்புமிக்க அரசாங்கம் என்று மக்களிடையே இருக்கும் நற்பெயரை அரசாங்கம் இசந்துவிடும். பின், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இதற்கு சான்றாக, 1978-இல் சீனாவில், அந்நாட்டு அரசாங்கம் நாட்டை மேம்படுத்தவேண்டும் என்ற பெயரில் பலதரப்பட்ட சட்டங்களை அமைத்தது. ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒரு பிள்ளை மட்டுமே, ஒரு நாளுக்கு 18 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும் மற்றும் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே ரேஷன் வாங்கமுடியும் என்றும் அந்த ரேஷனிலும் ஒரு கிலோ அரிசிக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் பல்வேறு சட்டங்களை அமைத்தது அக்காலத்து அரசாங்கம். அதன் விளைவாக அச்சட்டங்களினால் ஏற்பட்ட அதிக கட்டுப்பாட்டினாலும், சுந்ததிரமில்லாத நிலையினாலும் மக்கள் சட்டங்களை அமைத்த அரசாங்கத்தை வெறுக்க தொடங்கினர். ஒரு கட்டத்தில், மக்கள் அனைவரும் ஒரு போராட்டத்தையே நடத்தி அரசாங்க கடடத்திலும் பிரதமரின் வீட்டிலும் கலவரம் நடத்தி நாட்டையே சீரழித்தனர். அதனால், இதிலிருந்தே நமக்குப் புரிகிறது; என்னதான் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் இயல்பு சட்டங்களிடம் இருந்தாலும், அவற்றை மட்டும் சார்ந்து அளவுக்கு அதிகமாக அவற்றை  பயன்படுத்தக்கூடாது. எனவே, ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும் என்பது உண்மை இல்லை.

      எனவே, இக்கட்டுரையிலிருந்து ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களை கொண்டுவர இயலாது என்று நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. சட்டங்கள் மட்டுமில்லாமல், திட்டங்கள், நிகழ்சிகள் மற்றும் தண்டனைகளும் தேவை. அதுமட்டுமில்லாமல், விரும்பத்தக்க மாற்றங்களை ஒரு நாட்டில் கொண்டுவர சட்டங்களை மட்டுமே சார்ந்திருந்தது பலதரப்பட்ட சட்டங்களை அளவுக்கு மீறி உருவாக்கக் கூடாது. ஆகையால் ஒரு நாடு என்ற பூந்தோட்டம் எழில் மிகுந்து வளர சட்டமென்ற மழை மட்டுமில்லாமல், அதோடு சேர்ந்து, திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்ற ஆதவனின் ஒளியும், தண்டனையென்ற மண்ணும் தேவை. அம்மழையும் அளவை மீறி பெய்தால் பூக்கள் பட்டுவிடும்! எனவே, ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலாது.

No comments: