Friday, November 5, 2021

ஓர் உணவகத்திற்குச் சென்ற நீ, உன் நண்பர்களுக்காகச் சில இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களது வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தாய். அப்போது அவசரமாக வந்த வாடிக்கையாளர் ஒருவர், அவற்றுள் ஒன்றைத் தம் வசமாக்கிக்கொண்டார். அந்தச் சம்பவத்தையும் அதன்பின் நடந்தவற்றையும் பொருத்தமான வர்ணனைகளோடு விளக்கி எழுது

 

RAJADURAI YAZHINI - 2021 

என்னது? நூறு வெள்ளியா!” என்று நானும் நிலாவும் குமுதா சொன்னதை கேட்டு அப்படியே திகைத்துப் போய் நின்றோம். குமுதா பெருமிதத்துடன் தலையை ஆட்டினாள். குமுதா தன்னுடைய தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்ததால் அவளுடைய மாமா அவளுக்கு நூறு வெள்ளியைப் பரிசாக வழங்கியிருந்தார். “நுறு வெள்ளிஎன்பதைக் கேட்டபோதே எங்களுக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. “அந்த நூறு வெள்ளியை வைத்து நானே எனக்காக மட்டும் செலவிட முடியுமா  எனவே நாம் அடுத்த வாரம் என் வீட்டிற்கு அருகில் உள்ள உணவகத்திற்குச் சென்று வயிறு வெடிக்க சாப்பிட்டு வரலாம்! பின்பு நாம் கடைத்தொகுதிதிக்குச் சென்று அந்த நாளை கோலாகலமாக கொண்டாடலாம்!” என்று கூறினாள் குமுதா. அவளுடைய ஒவ்வோரு வார்த்தையும் என் செவியில் தேனாய் பாய்ந்தது. ஆனந்தத்தில் என் மனம் ஆர்ப்பரித்தது . நாங்கள் மூவரும் இந்த நல்ல செய்தியை நினைத்து கொண்டாடினோம். இலவசமாக சாப்பிடுவதோடு மனம் நிறைய கடைத்தொகுதியில் கழிப்பதா! நான் என் பிறவிப் பயனை அடைந்ததுபோல மகிழ்ச்சி என்னுள் நிரம்பியது. அந்த நாளின் வருகைக்காக நாங்கள் ஆவலாக காத்திருந்தோம்.

காலச் சக்கரம் உருண்டோடியது அந்த முக்கியமான நாளும் வந்தது. வழக்கத்திற்கு மாறாக ,நான்  சீக்கிரமாக எழுந்து என் காலைக் கடன்களை முடித்து உணவகத்திற்குச் செல்ல புறப்பட்டேன். நான் சுற்றுப்புறத்தைப் பார்த்து கொண்டே சென்றபோது அந்த நாள் மிகவும் பிரகாசமாக இருந்தது. உணவகத்திற்குச் செல்லும் வழியில் பச்சைப் பசேல் என்று இருந்த செடிகொடிகள் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. பறவைகளின் கீச் கீச் என்னும் சத்தம் என்னுடைய செவிக்கு விருந்தாக இருந்ததோடு நான் ஒரு திரைப்படத்தில் இருப்பதுபோன்ற ஒரு உணர்வை கொடுத்தது. நான் உணவகத்திற்கு சென்றடைந்தேன். உள்ளே நுழைந்ததும் குளிரான காற்று என் உடம்பை முத்தமிட்டது. அன்று வார இறுதி என்பதால் எல்லோரும் தங்களின் குடும்பத்தோடு சேர்ந்து உரையாடிக் கொண்டே சாப்பிட்டார்கள். அந்த கூட்டத்தில் என் கண்களுக்கு யாருமில்லாத இடம் ஒன்றும் தென்படவில்லை. குழந்தைகள் எப்போதும் போல சத்தம்போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி தங்களின் பெற்றோருக்கு தலைவலியைக் கொடுத்தனர். சில சிறுவர்கள் உடும்புப் பிடியாக நின்று தங்களுக்குப் பிடித்த உணவை வாங்க தங்கள் பெற்றோரிடம் அடம்பிடித்தனர். இளைஞர்கள் பலர் தங்கள் கைத்தொலைபேசியில் மூழ்கி என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். முதியவர்கள் மெதுவாக தங்கள் சாப்பாட்டை மென்று கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு காட்சியை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது! நான் அப்படியே மெய்மறந்து எவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தபோது என் கைத்தொலைபேசியிலிருந்து சத்தம் வந்தது. “மாலா! எங்களை மன்னித்துவிடு பேருந்து வருவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. அதனால் நாங்கள் சற்று தாமதமாக வருவோம். எங்களுக்கும் சேர்த்து காலியான இடங்களைப்  பார்த்துவை.” என்று குமுதா கூறினாள். நான் மட்டும் தனியாக அங்கே இருப்பதை நினைத்து வருந்தினேன்.

சற்று நேரத்தில் சில இடங்கள் காலியாகின. கண்களை கழுகைப்போல திறந்துவைத்திருந்த நான் அதை கண்டு அங்கே சிட்டாய் பறந்து உட்கார்ந்தேன். இறுதியாக இடம் கிடைத்ததே என்று எண்ணி பெருமூச்சு விட்டேன். என் நண்பர்களின் தாமதத்தை நினைத்து எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. அனால் குமுதா எங்களுக்கு செய்கிற ஒரு நல்ல விஷயத்தை நினைத்து நான் என்னையே தேற்றிக்கொண்டேன். மனதளவில் அவளுடைய மாமாவிற்கு நான் நன்றி கூறினேன். அந்த நாற்காலியிலேயே தூசி வர ஆரம்பித்தது அனால் என் நண்பர்களைத்தான் காணவில்லை. நேரம் போக போக எரிச்சலும் கோபமும் என் தலைக்கு ஏற  ஆரம்பித்தது. அப்போது ஒரு வாடிக்கையாளர் நான் என் நண்பர்களுக்காக வைத்திருந்த இடத்தில் வந்து உட்கார்ந்துவிட்டார். ஒரு கணம் என்ன  நடக்கிறது என்பதே எனக்குத் தெரியவில்லை.”எப்படி அவரால் இப்படி மற்றவர்களுக்காக வைத்திருந்த இடத்தில வந்து உட்கார முடியும்? அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை? இப்படி செய்வது ஒரு பண்பற்ற செயல் அல்லவா?” என்று எண்ண அலை என்னுள் முகாமிட்டது. பேச்சிழந்து இருந்த நான் அவரை கோபக்ககனலுடன் பார்த்தேன். ஆனால் அவர் கண்கள் அவருடைய தலைக்குப் பின்னால் இருந்ததுபோல என்னை கண்டுகொள்ளவில்லை. முன்பு இருந்த எரிச்சலும் கோபமும் என்னை அறியாமலேயே என் வார்த்தைகளின் வழி வெளிவந்தன.” நீங்கள் இங்கே உட்காரக்கூடாது! இது நான் என் நண்பர்களுக்குகாக பார்த்துவைத்திருக்கும் இடங்கள்!” என்று அனல்தெறிக்கும் வார்த்தைகளால் நான் கடுமையாக பேசினேன். என்னுடைய பேச்சையும் பாவனையும் கண்டு அவர் திகைத்துப்போனார். “மன்னிக்கவும் என் வேலைக்கு செல்ல தாமதமாகிவிட்டது. நான் இன்னும் பத்து நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிடுவேன்.” என்று பணிவுடன் கூறினார். அவருடைய பணிவு என் செவிக்கு எட்டவில்லை. அவரின் நிலையை புரிந்துகொள்வதற்கும் எனக்கு போதுமான பொறுமை அப்போது இல்லை. நான் அவர் கூறியதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினேன். “என் நண்பர்கள் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார்கள். அவர்கள் நீங்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டு நிற்கவேண்டும் என்று சொல்லுகிறீர்களா? “ என்று எரிச்சலுடன் பேசினேன். கோபம் என் கண்களையும் என் முடிவெடுக்கும் திறனையும் மறைத்தது. எங்களை சுற்றி உள்ளவர்கள் இதை கவனித்தபோது அவர்களின் முகம் சுருங்கியது. அந்த நபருக்கு அவமானமாக இருந்தது. அனால் நான் என்னுடைய உலகில் என் மனதிற்கு தோன்றியதைப் பேசினேன். ஒரு வழியாக அவர் அந்த இடத்தைவிட்டு எழுந்தார்.

அப்போது என்னுடைய நண்பர்களும் உள்ளே நுழைந்தனர். அங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தை சற்று நேரம் கண்டனர். அவர்களின் வருகையை கண்டபின் என் கோபம் சற்று கரைந்தது. அனால் அவர்கள் பேயறைந்தது போல் வாசலிலேயே நின்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அவர்களிடம் சென்றேன். குமுதாவின் முகம் வாடி அவள் என்னை அருவருப்புடன் பார்த்தாள். நிலா என் கண்களைக்கூடப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள். பதற்றம் என் தொண்டையை அடைத்தது. நான் என்ன தவறு செய்தேன் என்று எண்ணி குழம்பினேன். கேள்வி அம்புகளை நான் அவர்களிடம் தொடுக்க அவர்கள் ஒரு பதிலும் கூறவில்லை. அப்போது நிலாமாலா நீ அப்படி கடினமாக திட்டிய ஆடவர் குமுதாவின் மாமா.” என்றாள். என்னை அப்படியே அறைந்ததுபோல ஒரு உணர்வு. என்னுடைய தவற்றை தீர்க்க என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் திக்குமுக்காடிப்போனேன். கண்ணீர் என் கண்களை முட்ட நான் அவரிடமும் குமுதாவிடமும் மனமார மன்னிப்பு கேட்டேன். அப்போதுதான் நான் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டேன் என்று எனக்கு தெரிய வந்தது. கோபத்தை காரணமாக கொண்டு நான் அப்படி நடந்திருக்கக்கூடாது. என்னுடைய புத்தியின்மையினாலும் கோபத்தை அடக்கமுடியாததாலும் நான் குமுதாவின் மாமாவை மட்டுமல்ல அவளையும் புண்படுத்திவிட்டேன். அதனால் அமோகமாக செல்லவேண்டிய நாள் அப்படி வருத்தமாக முடிந்தது. ஆயிரம் புத்தகங்களைப் படித்து வராதவொரு படிப்பினையை அந்த அனுபவம் எனக்குக்  கற்றுக்கொடுத்தது.

No comments: