Wednesday, January 25, 2012

இலக்கியமும் அதன் அடிப்படைக் கூறுகளும்

மொழி

மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் படைத்துக்கொண்ட மொழி இல்லை என்றால், இன்றைய நாகரிக வளர்ச்சியே இல்லை. உலகின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடிப்படையான மொழியை மிகமிகச் சிறந்த நாகரிகக் கருவி எனலாம். அத்தகைய மொழியை, மொழியின் சொற்களையே பயன்படுத்தி அமைப்பது இலக்கியம். ஆகையால், இலக்கியம் சிறந்த ஒரு கலை ஆகும். ஆனால், இலக்கணம் என்பது மொழியின் அமைப்பையும் சொல்லின் அமைப்பையும் பற்றிப் பேசுவது ஆகும்.
ஆகையால், இலக்கியமும் இலக்கணமும் வேறு வேறு.

செய்தித்தாள் இலக்கியம் ஆகுமா?

செய்தித்தாளில் இடம்பெறும் தகவல் ஒரு நாளுக்கு உரியது. அது அடுத்த நாளுக்குப் பெரிதும் பயன்படுவதில்லை. ஆனால், நூல்கள் பல ஆண்டுகள் மக்கள் மத்தியில் வாழ்கின்றன. பிறகு அழிகின்றன. ஆனால், அத்தகைய நூல்களுள் சில அழிவதே இல்லை. அந்தச் சில தான் இலக்கியங்களாகப் போற்றத் தக்கவை. அத்தகைய இலக்கியங்கள் தமிழில் எண்ணற்றவை உள்ளன.


இலக்கியம் செய்யுளிலோ உரைநடையிலோ அமையலாம்:
இலக்கியம் செய்யுள் வடிவமாகவும் அமையும். உரைநடையாகவும் அமையும். இலக்கியம் செய்யுள் வடிவில் அமைந்தவைக்கு எடுத்துக்காட்டாக, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவ்ற்றைக் குறிப்பிடலாம். ஆனால், தமிழில் உள்ள நாவல்கள், சிறுகதைகள் ஆகியவை அனைத்தும் உரைநடையில் அமைந்த இலக்கியத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

செய்யுள், பாட்டு , உரைநடை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு:
பாட்டு,செய்யுளுக்கு மாறானது அல்ல. உணர்ச்சியும் கற்பனையும் அமைந்த செய்யுள் (Verse) எல்லாம் பாட்டு (Poetry) எனத் தகும். செய்யுள் உரைநடைக்கு மாறானது. ஏனென்றால் செய்யுளுக்கு எதுகை, மோனை, யாப்பு ஆகியவை அவசியம். உரைநடைக்கு அவை தேவை அல்ல.

இலக்கியத்துக்கு அடிப்படை அம்சங்கள்:
இலக்கியத்துக்கு  உணர்ச்சி, கற்பனை, வடிவம், கருத்து, என்னும் நான்கு கூறுகள்  முக்கியம். இதையே இலக்கியத்தின் நான்கு பக்கங்கள் உண்டு என்றும் கூறுவர். அவற்றுள்  முதலில் உணர்ச்சி பற்றிப் பார்ப்போம்.






உணர்ச்சி:
இலக்க¢யம் படைப்பவர் ஒரு சம்பவத்தை உணர்ச்சி பூர்வமாகப் படைக்கிறார். அவ்வாறு படைக்கும்பே¡து கதாப்பாத்திரத்தில் அந்த உணர்ச்சியைச் சிறப்பாக அமைத்துத் தருகிறார். உதாரணமாக, ஓர் எழுத்தாளர் ஒருதாய் தன் குழந்தையை இழந்து துயரத்தில் வாடுவதைப் பார்த்தால் அதை அப்படியே கதையாகவோ, கவிதையாகவோ வடித்துத் தருக¢றார். பிறகு, ஒரு வாசகன் அந்த இலக்கியத்தைப் படிக்கும்போது அந்தப் பாத்திரம் அனுபவிக்கும் உணர்ச்சியோடு ஒன்றித் தானும் அந்த உணர்ச்சியை அடைகிறான். அவ்வாறு வாசகன் ஒன்றும்போது இலக்கியம் க¡லத்தை வென்று வாழ்கிறது. மகிழ்ச்சி, வேடிக்கை, மனநிறைவு முதலிய உணரச்சிகளைக்கொண்ட இலக்கியத்தைவிட அச்சம், துயரம், கவலை முதலிய உணர்ச்சிகளை உடைய இலக்கியமே மக்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது.

அடுத்ததாக இலக்கியத்துக்குத் தேவையான கற்பனை குறித்துக் காண்போம்

கற்பனை: எழுத்தாளர்கள் தாம் பார்த்ததையோ கேட்டதையோ அனுபவித்ததையோ அவ்வாறே எழுதுவதில்ல; பாடுவதில்லை. அதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியும் கதையாகவோ கவிதையாகவோ படைக்க¢றார்கள். எழுத்தாளர்கள் தமது கற்பனை சிறப்பாக அமைய உவமை, உருவகம் முதலியற்றைப் பயன்படுத்தி எழுதுகிறார். எடுத்துக்காட்டாகப் பின்வரும் கற்பனையைப் பாருங்கள்.

மழைக்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான் ஒரு காதலன். மழைக்காலம் தொடங்கிவிட்டது. அதற்கு அடையாளமாக முல்லைக்கொடிகளில் அரும்புகள் தோன்றிவிட்டன. ஆயினும், அவன் வரவில்லை. முல்லை அரும்புகள் நிறைந்த முல்லைக்கொடியைப் பார்க்கிறாள் காதலி. கார்காலம் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவதாக அதாவது ஏளமாகச் சிரிப்பதாக உணர்கிறாள் காதலி. சிரிக்கும்போது பற்கள் தெரியும் அல்லவா? சிரிக்கும் கார்காலத்தின் பற்களாக அந்த முல்லைக்கொடியின் வெள்ளைநிற அரும்புகளைக் கற்பனை செய்கிறார் கவிஞர். இதோ அந்தப்பாடல்,




இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரார்
எவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே.
( நூல் - குறுந்தொகை - புலவர் : ஒக்கூர் மாசாத்தியார்.)
இனி இலக்கியத்துக்கு அடிப்படையான கருத்துக் குறித்துக் காண்போம்.


கருத்து: ஒவ்வொரு எழுத்தாளரும் தம் படைப்பின் வழியாகச் சமுதாயத்துக்கோ ஒரு தனிமனிதனுக்கோ ஏதோ ஒரு கருத்தையோ பல கருத்துகளையோ சொல்ல விரும்புகிறார். அதனால்தான் அவர் இலக்கியத்தைப் படைக்கிறார். மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடலில் ஒரு காதலன், காதலிக்குச் சொன்ன வாக்கைக் காப்பாற்றாதபோது, அக்காதலியின் இக்கட்டான நிலையைச் சித்தரிப்பதன் மூலம் ஆண்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அவ்வாறு அவன் அதைக் காப்பாற்றாதபோது, அவனை நம்பிய பெண்ணின் ந¢லை சமுதாயத்தில் பலரும் பார்த்துச் ச¢ரிக்கும்படி ஆகிவிடும். அவளின் நிலை கவலைக்கு உரியதாகிவிடும் என்பதைப் படிப்பவர் மனத்த¢ல் பதிய வைக்கிறார்.

அடுத்ததாக இராமணயத்தை எடுத்துக்கொண்டால் தந்த சொல் மிக்க மந்திரமில்லை. சகோதரபாசம், தர்மமே வெல்லும் அதர்மம் அழியும், பிறர் மனைவியைக் கவர்தல் கூடாது என்று பல்வேறு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. ஆகையால், இலக்கியத்தின் நோக்கம் படிப்பவர்க்கு இன்பம் தருவதோடு அறக்கருத்துகளை வலியுறுத்துவதும் ஆகும் என்பது தெளிவு.

நிறைவாக இலக்கிய வடிவம் குறித்துக் காண்போம்:

வடிவம்: உணவைப் பரிமாற நினைக்கும் தாயார், அதை வட்டமான தட்டிலோ, ஓவல் வடிவிலான தட்டிலோ, குழியான பீங்கான் கோப்பையிலோ, வ¡ழை இலையிலோ பரிமாறுகிறார் இல்லையா? அதுபோல எழுத்தாளரும் தாம் பார்த்த ஒரு சம்பவத்தை, தம்முடைய அனுபவத்தை, சொல்ல நினைக்கும் கருத்தைக் கவிதையாகவோ, சிறுகதையாகவோ, நீண்ட நாவலாகவோ, நாடகமாகவோ படைத்துத் தருகிறார். அது எழுத்தாளரின் விருப்பம். ஆக இலக்கியம் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்னும் எந்த வடிவத்திலும் பிறக்கலாம் என்பதுதான் உண்மை. (இப்பாடத் தயாரிப்புக்குத் துணை நின்ற நூல்: இலக்கியத் திறன். டாக்டர் மு. வரதராசன்)
மாணவர் ஒப்படைப்பு:

1.இப்பாடம் தொடர்பான உனது புரிந்துணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மன
வரைபடம் தயார் செய்து ஒப்படைக்கவும்.
                                                     (அல்லது)
2. இப்பாடம் வழி நீ புரிந்துகொண்ட கருத்துகளை ஒன்றின் கீழ் ஒன்றாக ( Point form)
எழுதி ஒப்படைக்கவும்.

3. இறுதியில் இப்பாடம் குறித்த உமது கருத்துகளைக் குறிப்பிடவும். வேறு
     எதுபற்றி அறிந்துகொள்ள விருப்பம் என்பதையும் குறிப்பிடவும்.

13 comments:

Jeswin Leo said...

-மொழி நாகரிக வளர்ச்சியின் அடிப்படையாகும்
-இலக்கியம் நிலையானது
-உணர்ச்சி,கற்பனை,வடிவம்,கருத்து என்னும் நான்கு கூறுகள்
-தாம் பார்த்த ஒரு சம்பவத்தை,தம்முடைய அனுபவத்தை,சொல்ல நினைக்கும் கருத்தைக் கவிதையாகவோ, சிறுகதையாகவோ,நீண்ட நாவலாகவோ,நாடகமாகவோ படைத்துத் தருகிறார்

Unknown said...

1. இலக்கியம் காலங்கடந்து வாழும் தன்மை கொண்டது
2. இலக்கியம் செய்யுள் வடிவத்திலோ அல்லது உரைனடையிலோ அமையலாம்
3. இலக்கியத்தின் முக்கியக் கூறுகள்: உணர்ச்சி, வடிவம், கற்பனை மற்றும் கருத்து
4. உணர்ச்சியே இலக்கியதிற்கு அதன் காலங்கடந்த தன்மையை அளிக்கிறது
5. கற்பனைக்கு அடிப்படை - உவமைகள் கொண்டு வருணிப்பது
6. சமுதாயத்தையும் இலக்கியத்தையும் இணைக்கும் பாலமே கருத்து

Unknown said...

இலக்கியம் வெறும் சாதாரன கதையாக இருக்காமல் அது உணர்ச்சி, கற்பனை, வடிவம், கருத்து ஆகியவை உடையது. மேலும் அது மக்களின் உள்ளங்களில் பல ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கும். இலக்கியம் எந்த வடிவத்திலும் இருக்கலாம்.
நாம் நல்ல இலக்கியங்களை படித்தால் நற்பண்புயுள்ளவர்களாக இருப்போம். ஆகையால் அனைவரும் இலக்கியத்தை படிக்கவும் அதன் அருமையை ரசிக்கவும் வாய்ப்பு பெற வேண்டும்

Unknown said...

இலக்கியத்தின் மூலம் நாம் உணர்ச்சி, வடிவம், கர்பணை, கருத்து ஆகிய கூறுகளைப் பற்றி அறிந்துக்கொள்ளலாம். மேலும் இலக்கியங்கள் என்பவை என்றும் நில்த்துநிற்க்க கூடியவை. அவற்றைப் படிப்பதன் மூலம் நமது மொழித்திறன் வளர்கிறது. இலக்கியங்கள், கவிதைகளாகவோ, நாடகமாகவோ, நாவலாகவோ, சிறுகதையாகவோ இடம்பெறலாம்.

என்னை பொருத்தமட்டில் இலக்கியம் நமது வாழ்க்கையில் ஒரு முக்கி பங்கை வகிக்கிறது. இலக்கியங்களிலிருந்து நம்மால் மொழிக்கூறுகள், நற்பண்புகள், சமுதாயப் பிரட்சனைகள் முதலயவற்றைப் பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

Unknown said...

இக்கட்டுரையிலிருந்து நாங்கள் புரிந்துக்கொண்டவை:
- இன்று, நேற்று, நாளை என்று தற்காலிகமாக வந்துச் செல்லும் படைப்புகள் இலக்கியமாக கருதப்படுவதில்லை
- இலக்கியம் காலத்தை வென்று நிலைத்து நிற்கக்கூடியது
- எவை இலக்கியமாக கருதப்படும், எவை கருதப்படா என்பதைப் பற்றிய ஒரு பார்வை
- இலக்கியப் படைப்பில் அமைந்துள்ள கூறுகள்
- வடிவமைப்பில் வேறுபட்டிருந்தாலும் எக்கால வாழ்க்கைக்கு பொருந்துவதாக அதில் உள்ள கருத்துகள் அமைந்திருக்கும்

மிருதுளா மற்றும் சரண்யா

Janhavi said...

- மொழி இல்லாமல் நாகரிக வளர்ச்சி நேர்ந்திருக்க முடியாது
- தமிழில் பேசுவது, தமிழ் இலக்கியம் படிப்பது நம் கலசாரத்தை நன்கு புரிந்துக் கொள்ள உதவும்
- இலக்கியக் கூருகள்: உணர்ச்சி, கற்பனை, வடிவம், கருத்து
- இந்தக் கூருகளை பிரிந்துக் கொள்ளும் பொழுது நம்மால் இலக்கியத்தை ரசிக்க முடிகிரத

Somakala said...

- மொழி சமூதாய வளர்ச்சியின் அடிப்படை என்பதால், நாம் அதை காக்கவேண்டும்.
- உதாரணத்திற்கு, நாம் தமிழில் எழிதியருக்கும் இலக்கியங்களைப் படிப்பது, தமிழில் உரையாடுவது, தமிழில் படைப்புகளைப் படைப்பது போன்றவற்றைச் செய்யவேண்டும்
- நாம் இலக்கியங்களைப் படிக்கும்போதோ பார்க்கும்போதோ அதனுடைய கூறுகளைப் (உணர்ச்சி, கற்பனை, வடிவம், கருத்து) புரிந்துக்கொண்டால், நம்மால் அவ்விலக்கியத்தை நன்கு ரசிக்க முடியுபம்
- இலக்கியம் நம் மனதைப் பன்படுத்தி அதை செம்மையாக்கிறுது. அதன் மூலம், உலகத்தைப் பற்றி இருக்கும் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளலாம்.

Harshini Rayasam said...

1. காலத்தோடு அழியாதத் தன்மை கொண்டவை மட்டும் இலக்கியங்களால் போற்றப்படலாம்.
2. இலக்கியம் செய்யுள் வடிவமாகவும் உரைநடையாகவும் அமையலாம். செய்யுள்ளுக்கு எதுகை, மோனை போன்ற கருவிகள் தேவை என்றாலும் உரைநடைக்கு அது தேவையில்லை என்பதே அவற்றுள் முக்கிய வேருப்பாடாகும்.
3. வாசிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியும் கேளிக்கையும் தருவதைவிட உணர்ச்சி, கற்பனை, வடிவம், கருத்து என்ற நான்கையும் வெளிப்படுத்துவதே இலக்கியத்தின் குறிக்கோள்.

Raven said...
This comment has been removed by the author.
Unknown said...

1. இலக்கியம் என்று எவற்றை நாம் அழைக்கலாம் என்பதை எனக்கு இதுவரை தெரியாது. இந்த பனுவலின் மூலம் நான், பழங்காலத்திற்கு அழியாமல் இருக்கும் படைப்புகளே இலக்கியத்தைச் சேரும் எனபதை அறிந்துக்கொண்டேன்.
2. இலக்கியம் மூன்று வகையாக பிரியும் என்பதையும், அவ்வகைகளிலுள் உள்ள வேறுபாட்டையும் பற்றி நான் கொண்டுள்ள புரிந்துணர்வை இந்த பகுதி மேம்படுத்தியது. அவ்வகைகள் செய்யுள், பாட்டு, உரைநடை. ஒவ்வொரு வகைக்கும் தனித்தன்மை இருப்பதால், ஒரே கருத்தை இந்த மூன்று வகைகளும் படிப்பவர்களை வெவ்வேறு வழிகளில் தூண்டி, மாறுப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.
3. இலக்கியத்தை அமைத்து, அதற்கு அழகூட்டும் நான்கு கூறுகள் என்னவென்றும், அவற்றை எழுத்தாளர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் நான் அறிந்துக் கொண்டேன். உணர்ச்சி, கற்வனை, வ்ட்வம், கருத்து, ஆகிய நான்கையும் சேர்த்து, பல வகைகளில், பல விதமான இலக்கியத்தைப் படைக்கலாம் என்பதை உணர்ந்தேன்.

அம்ரித்தா, 404

gayatri said...

1.இப்பாடம் வழி, நான் எது இல்லகியம், எது இல்லகியம் இல்லை என்பதைக் கற்றுகொண்டேன். காலத்தை வென்று நிலைத்து நிற்பதே இல்லகியம்; ஒரே நாளில் அஹன் முக்கியத்துவத்தை இழக்கும் செய்தித்தாள்களும், என்றும் பொருத்தமாக இருக்கும் கருத்துகளைக் கொள்ளாத புத்தகங்களும் இலக்கியம் இல்லை.

2.மேலும், இல்லகியம் செய்யுள் வடிவத்திலும் அமையலாம், உரைநடையாலும் அமையலாம். செய்யுள் வடிவத்தில் அமையும் இல்லகியங்கள் பெரும்பாலானவை பழமையானவை. (எ.க திருக்குறள், எட்டுத்தொகை) ஆனால், சிறுகதைகள், நாவல்கள் போன்ற புதிய வகையான இல்லக்கியங்கள், உரைநடையில் எழுதப்பட்டிருக்கின்றன.

3. உணர்ச்சி, கற்பனை, கருத்து ஆகியவை இருந்தாலே ஓர் எழுத்து நல்ல எழுத்தாகும்.

laklar said...

(lakshana, shobana & harshini)

1. இலக்கியத்தின் பாதிப்பு உலக முழுவதும் பரவி உள்ளது.
2. இலக்கியம காலம் கடந்தாலும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது.
3. அவை புத்தாக்கத்தையும் நல்ல மொழி வளத்தையும் கொண்டவையாக இருப்பதோடு படிப்பவரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மையையும் கொண்டவையாக அமையும். இதுவே சராசரி எழுத்து படைப்புகளுக்கும் இலக்கியங்களுக்கும் உள்ள வேறுபாடு என்று புரிந்துக்கொண்டோம்.
4. நாம் மொழியை காக்கவேண்டும்.
5. உணர்ச்சியும், கற்பனையும், வடிவமும் நன்கு பயன்படுத்தினால் இலக்கிய படைப்பு நன்றாக அமையும்.

Unknown said...

1. இலக்கியம் காலங்கடந்தும் அழியாத் தன்மை உடையது
2. இலக்கியம் செய்யுளிலோ உரைநடையிலோ அமையலாம்
3. இலக்கியத்துக்கு நான்கு பக்கங்கள் உண்டு: உணர்ச்சி, கற்பனை, வடிவம் & கருத்து
4. உணர்ச்சியே இலக்கியத்திற்கு அதன் காலங்கடந்த தன்மையை அளிக்கிறது
5. கற்பனைக்கு முக்கியமானது உவமைகளைப் பயன்படுத்துவதே அகும்