Wednesday, November 24, 2021

உன் நெருங்கிய தோழி உன் மேல் கொண்ட பொறாமையால், உன்னைவிட்டு விலகக் காரணமாக அமைந்த நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. பெயர்: மகேஷ் காயத்ரி வகுப்பு: 108 (2021)

பொறாமை. பொறாமை என்பது நம் அனைவரிடத்திலும் உள்ள ஓர் உணர்வு தான். ஆனால், அதை நாம் மற்றவர்களிடம் வெளிக்காட்டுவதும் வெளிக்காட்டாததும் நம் கையில் உள்ளது. மற்றவர்கள் நம்மைவிட எதிலாவது சிறந்து விளங்கினாலோ நம்மை வென்றுவிட்டாலோ நம்முள் சிலர், “அடாடா! அவர்கள் நம்மைவிட இதில் நன்றாகச் செயல்படுகின்றனரே!” என்று நினைத்துச் சற்று பொறாமையடைவோம். இதற்குப்பதிலாக, வேறு சிலர் அவர்களது வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல் நினைத்து மகிழ்ச்சியடைந்து அவர்களை வாழ்த்துவார்கள். அவர்களுள் பொறாமை இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். அத்துடன், நட்பினுள் பொறாமை ஏற்பட்டால் நிறைய சண்டை தான் ஏற்படும். சற்றுமுன் நகமும் சதையும் போல இருந்த நண்பர்கள் பொறாமையினால் நாயும் பூனையும்போல் சண்டைபோட்டு நிலைமை மோசமானால் எதிரிகளாகக் கூட ஆகிவிடுவார்கள். இந்தச் சதிக்கெல்லாம் காரணம் பொறாமையே! “ட்ரிங்! ட்ரிங்!” பள்ளி இடைவேளை மணி ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் வகுப்பைவிட்டு உணவகத்தை நோக்கி சிட்டாய்ப் பறந்தனர். புன்னகைத் தவழ்ந்த முகத்துடன் எனது இணைபிரியாத் தோழி, மாலதி, என்னிடம், “மாயா! நீ வருகிறாயா?” என்று கேட்டாள். நானும் சூரியனைக் கண்ட தாமரையைப் போல மலர்ந்த முகத்துடன் என் தலையை ஆட்டினேன். என் கையடக்கத் தொலைப்பேசியையும் பணப்பையையும் எடுத்துக்கொண்டு மாலதியுடன் உணவகத்திற்குச் செல்லத் தொடங்கினேன். மாலதியும் நானும் தொடக்கப்பள்ளியிலிருந்தே புவும் நாரும் போல நெருங்கிய நண்பர்கள் ஆவோம்! நாங்கள் இருவரும் பணக்கார குடும்பங்களிலிருந்தே வந்தோம். அவளும் நானும் எப்போதுமே சிறந்த மதிப்பெண்கள் எடுப்போம். சொல்லப்போனால், எங்கள் இருவரையும் இரட்டை சகோதரிகள் என்றே கூறலாம். ஆனால், மாலதியோ மிகவும் அழகானவள். அவளது கருப்பு நிற தலைமுடி, பழுப்பு நிற கண்கள் எல்லாம் அவளை ஒரு ராணியைப்போல் அலங்காரப்படுத்தின. மற்றவர்கள் என்னையும் ஓர் அழகானவள் என்று தான் கருதுகின்றனர். இருந்தாலும் மாலதியின் அழகே வேற விதம்! இன்னொன்று! அவளுக்கு எப்பொழுதுமே மேடை மீது நின்றுபேசும்போது அவள் மனதினுள் பீதி குடிக்கொள்ளும். இதை அவள் உணர்ந்தாலும் அவளுக்கு அனைவர் முன் நின்று பேசுவதற்கு ஆசையுண்டு. அந்த அச்சத்தை மட்டும் மாலதியால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனக்கோ மேடையில் பேசுவது என்பது இயல்பானது என்றே கூறலாம். இதையறிந்த அசிரியர்கள் பலர் என்னை போட்டிகளில் கலந்துகொள்ள வைத்திருகின்றனர். அவை அனைத்தும் எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தன. மேலும், அவற்றில் கலந்துகொள்வது எனக்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்கும். “மாயா, நீ நேற்று உன் குடும்பத்துடன் எங்கேயோ சென்றதாக கூறினாயே. எங்கே?” என்று வினவினாள், மாலதி. நானும் பதிலளிக்க வார இறுதியில் நடந்த நகைச்சுவையான சில விஷயங்களைப் பற்றி பாட்டிகள் போல் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வழக்கம்போல நாங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவாரே வயிறு குலுங்க சிரித்தோம். சிரிப்பு மருந்தைக் குடிப்பதுபோல் இருந்தது! எங்களது வகுப்பு மாணவர்கள் சிலர் எங்களைச் சுலித்த முகத்துடன் பார்த்து, “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்க நான் “‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நானும் மாலதியும் நல்ல மாணவர்களாக ஆசிரியர் கற்றுக்கொடுத்ததைச் செய்துகொண்டிருக்கிறோம்!” என்றேன். அடுத்த கணமே, நானும் மாலதியும் கண்ணீர் வரும்வரை சிரிக்காரம்பித்தோம் . இந்தப் பதிலைக் கேட்ட எங்கள் வகுப்பு மாணவர்கள் வெறுப்புடனும் கோவைப்பழம்போல் சிவந்த முகத்துடனும் வேறெங்கேயோ சென்றனர். எங்கள் ஆங்கில அசிரியர் எங்களிடம் வந்தபின்னே நாங்கள் பிசாசுகள்போல சிரிப்பதை நிறுத்தினோம். “மாயா, மாலதி! நீங்கள் சிரிப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. உங்களை தொந்தரவு செய்வதற்கு என் மன்னிப்பு. ஆனால், மாயா நான் உன்னிடம் சற்று பேசவேண்டும்!” என்றார், ஆசிரியர். இதைக் கேட்டவுடன் என்னுடைய கண்கள் அகல விரிந்தன. என் இதயம் ‘படக், படக்’ என்று தாளம்போட நான் என்ன தவறுசெய்தேன் என யோசித்தவாரே ஆசிரியரை அச்சத்துடன் பின்தொடர்ந்தேன். “மாயா, நீ ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் மாணவி. மேலும், நீ பல பேச்சு போட்டிகளில் பங்கெடுத்து வென்றிருக்கின்றாய். அதனால் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒரு போட்டியில் கலந்துகொள்வாயா? நீ நம் பள்ளிக்குப் பெருமை கொண்டு வருவாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று என் ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். எனக்கு அப்பொழுது உல்லாச வானில் சிறகடித்துப் பறப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் என் ஆசிரியரிடம் என் விருப்பத்தைக் கூறி என்னுடைய தன்னிப்பட்ட தகவல்களை அளித்தேன். எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! அவ்வளவு குஷி! நான் மானைப்போல் துள்ளி குதித்தவாறே மீண்டும் மாலதியிடம் சென்றேன். அவளது முகத்தில் ஈயாடவில்லை. “இன்னொரு போட்டியா?” என்று அவள் முறைத்தவாறு கேட்டாள். நானும், “ஆம்! நீ சந்தோஷமாகத் தானே இருக்கிறாய்?” என்று வினவினேன். அவள் கண்கள் கோபக் கனல்களைச் சுட்டெரித்ததுப்போல் இருந்தது. அவள் என்னைப்ல பொரிந்து தள்ளினாள். “ஏ, மாயா? நான் எதற்கு நீ போட்டியில் கலந்துகொண்டால் மகிழ்ச்சியடையனும்? நான் எந்த ஒரு போட்டியிலும் பங்கெடுக்கவில்லை!” என்று காதைப் பிளக்கும் வண்ணம் கத்தினாள். நான் வியப்பில் வாயைப் பிளந்தவாறு திகைத்து நின்றேன். “இனி, நாம் நண்பர்களே இல்லை!” என்று கூறியப்படி அவள் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். மாலதி, என் நெருங்கிய தோழி, என் சகோதரிபோல் இருந்தவள். என் பிரிய தோழி, என்னைவிட்டு விலகிச்சென்றுவிட்டாள். துக்கம் என் தொண்டையை அடைத்தது. முத்துக்கள் போல் கண்ணீர்த் துளிகள் என் முகத்திலிருந்து வழிந்தோடின. நான் அவற்றைத் துடைத்துவிட்டு வகுப்புக்குச் சென்று மாலதி ஓர் உண்மையான தோழியில்லை என உணர்ந்தேன். உண்மையான நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிய மாட்டார்கள், உங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவார்கள் முக்கியமாக அவர்களுள் பொறாமை இருந்தால் வெளியே காட்டி நட்பை முறிக்க மாட்டார்கள்! மெதுவாக, என் துக்கம் சினமாக மாறியது. நான் மாலதியைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிட்டு என் படிப்பில் கவனம்செலுத்தினேன். அவளைப் பற்றி நினைத்து படிப்பில் பின்தங்கி விடக்கூடாது என்பதே என் ஒரே எண்ணம். அந்தப் பேச்சுப் போட்டியில் நான் மீண்டும் முதல் பரிசை வென்றேன். இந்த நிகழ்வுகளிலிந்து நான் கற்றுக்கொண்டது, பிறர் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்பதே. மாலதி பொறாமையாக இருந்திருந்தாலும் அவள் அதைக் காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் நண்பர்களாகத் தான் இருந்திருப்போம். ‘அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ என்று திருவள்ளுவர் போதித்ததற்கேறப பொறாமைக் கொள்வதை நாம் கட்டுப்படுத்திக்கொண்டும் சினம், பேராசை மற்றும் தீங்கு விளைவிப்பது ஆகிய மற்ற மூன்றையும் தவிர்த்துக் கட்டுப்படுவதே சிறந்ததாகும். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பதற்கேற்பவும் பொறாமை, சினம் போன்றவையில்லாத நட்பே நல்ல நெருக்கமான நட்பாகும். மாலதியுடன் எனக்கு நடந்தது ஒரு சிறபற்ற அனுபவமாக இருந்தாலும் நான் பலவற்றை உணர்ந்துகொண்டேன். இதுதான் என் பெற்றோர் கூறிய, ‘அனுபவம் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பதற்கு அர்த்தம் போல!

No comments: