Saturday, November 13, 2021

சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவுணர்வு மிக்கவர்கள். விவாதிக்க - அசீரா ஜன்னத் (306) 2021

அசீரா ஜன்னத் (306) 2021 ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும், சாதனையிலும், சரித்திரத்திலும், பின்புலமாய் அமைவது அதனின் சமுதாயத்தைச் சார்ந்துள்ளது. அந்தச் சமூகத்தில் நிலவும் பரிவுணர்வையே சார்ந்துள்ளது. ஒரு பரிவு மிக்க சமுதாயத்தால் மட்டுமே இவ்வுலகில் உதயசூரியனைப் போல் ஒளிவீச முடியும். அச்சமுதாயம் மட்டுமே உலகத்தில் எந்தவொரு துன்பத்திலும் இடையூரிலும் மடங்கிவிடாமல் சிறந்தோங்கி திகழ இயலும். அது போன்ற சமுதாயமே நம் சிங்கப்பூர் என்று நான் பெருமையோடு கூறுகிறேன். அதுமட்டுமின்றி, நம் சிங்கப்பூரிலுள்ள இளையர்களுள் பெரும்பாலானோரே இந்த பரிவுமிக்க சமுதாயத்திற்கு அடித்தளமாக அமைந்து பரிவுணர்வை என்றும் கைவிடாதவர்கள் என்பது என் ஆணித்தரமான கருத்தாகும். முதலில், இவ்வுலகையே ஆட்டி படைத்த கொவிட்-19 கிருமித்தொற்று எல்லோரையும் குழப்பம் என்னும் இருளில் ஆழ்த்தியது. அனால் நம் சிங்கார சிங்கையின் இளையர்களின் உள்ளத்தில் என்றுமே பரிவு என்னும் ஊற்று வற்றாமல் சுரக்கியது. உதாரணத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களிடம் கொவிட்-19 கிருமித்தொற்று வெகுவாக பரவிய பொழுது, நம் இளையர்கள் பயந்து ஒதுங்கவில்லை. அவ்வூழியர்களின் மனதில் பிரகாசிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அவர்களோடு கைகோர்த்து நடந்தார்கள். அவர்களுக்கு பல தேவையான பொருட்களை தானம் செய்து அவர்களின் துன்பங்களைப் பற்றி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஊட்டினர். இவர்களுக்கு என்று மட்டுமல்லாமல், சொல்லொண்ணாத் துன்பத்தில் சிக்குண்டு அல்லல்படும் சிங்கப்பூரர்களுக்ககே தங்களது உன்னதமான சேவையை வழங்கிக்கொன்டே இருந்தனர். இதைக் கண்டு நாம் எப்படி சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவற்றவர் என்று கூறலாம்? அடுத்து, நம் கல்வியமைச்சு பிரதிபலன் எதிர்பாராது, உதவும் மனப்பான்மை கொண்ட சமூக தொண்டூழியத்தின் முக்கியத்துவத்தை இளையர்களுக்கு என்றுமே ஊட்டி வளர்க்க முற்படுகிறது. இளய வயதிலிருந்தே சிங்கப்பூரில் மீள முடியாத துன்ப வலையில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ வேண்டியதன் முக்கியத்துவம் பள்ளிகளில் போதிக்கப்படுகிறது. ஆதலால், இளையர்கள் சிறு வயதிலிருந்தே இப்படிப் போன்ற சமூக தொண்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். மற்றவர்களின் இடுக்கனை கண்ட இளையர்களுக்கு இன்னும் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்னும் அவா பிறக்கிறது. அதனால் இன்று பல இளையர் குழுக்கள் பள்ளிகளில் பல்வேறு மக்களுக்கு உதவ முன்வருகிறார்கள். மற்றவர்களின் துயரத்தை பூரணமாக துடைத்தொழிப்பதற்கு விழைகிறார்கள். கைமாறு கருதாது கருணை மழையாய் மக்களின் உள்ளத்தில் ஒளிவூட்டும் தீபங்களாக சிறந்தோங்குகிறார்கள். அதுமட்டுமா, ஆலமரத்தின் விழுதுகளைப்போல தேவையுள்ளவர்களுக்கு அதிக தானமும் சேவையும் செய்து அவர்கள் வாழ்க்கையின் படிகளை ஏறி கரையேறுவதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார்கள். இதைப் பல வேளைகளில் இளையர் குழுக்கள் இலவச துணைப் பாட வகுப்புகள், உணவு தானம், முதியோர் இல்லத்தில் நடவடிக்கைகள் நடத்தி வருவது, பணம் சேகரித்து தானம் செய்வது, போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் சிங்கப்பூரின் இளையர்களுள் எண்ணற்றவர்கள் பரிவுணர்வோடு இருப்பது வெள்ளிடைமலையாக புலப்படுகிறது. மூன்றாவதாக, இளையர்களிடம் பரிவுணர்வு இழையோடுவதை நாம் பொது இடங்களில் அதிகமாக கவனிக்கலாம். உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு நெஞ்சை உலுக்கும் சாலை விபரீதம் நடந்த பொழுது, அதைக் கண்ட ஒரு இளையரான மாணவரே அதில் சிக்கிய உயிர்களைக் காப்பாற்ற முன்வந்தான். அதற்காக அவனுக்கு ‘ஆண்டின் சிங்கப்பூரர்’ என்ற விருது அளிக்கப்பட்டது. இதுவே இளையர்களின் பரிவுணர்வை தெள்ளத்தெளிவாக பிரதிபலிக்கிறதல்லவா? மேலும், பேருந்துகளிலும் ரயில்களிலும் பல இளையர்கள் தாங்கள் உட்காராமல், இன்னும் சிரமப்படும் முதியோர்களுக்கே இருக்கைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். முதியோர்களுக்கு உதவி தேவை என்னும் பொழுது தயங்காமல் கனிவன்போடு முன்வருகிறார்கள் என்பன பல எடுத்துக்காட்டுகள் இளையர்கள் பரிவுணர்வை மறக்கவுமில்லை துறக்கவுமில்லை என்பதற்கு சான்றுகளாக அமைகின்றன அல்லவா? ஆனாலும் சிலரோ, பெரும்பாலான இளையர்கள் வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓய்வின்றி ஓடிக்கொண்டு பாடச்சுமையில் மூழ்கியிருப்பதால் அவர்கள் பொறுமை இழந்து என்றுமே எரிச்சலுடன் நடந்து கொள்கிறார்கள் என்று கூறுவார்கள். அதனால் அவர்கள் பரிவுடன் நடந்து கொள்ள நேரமின்றி பரிவை இழந்துவிடுகிறார்கள் என்றும் கூறலாம். ஆனால் இக்கருத்து சமூகத்தில் மிகக் குறைவான இளையர்களுக்கே பொருந்தும். இளையர்களுக்கு அதிக வேலையும் பாடச்சுமையும் இருக்கும்போதே அவர்கள் சமுதாயத்தின் நலனைக் கருதி தொண்டூழியம், கனிவு மிக்க செயல்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் என்றால் இளையர்கள் எந்தளவுக்குப் பரிவு மிக்கவர்கள் என்பதை சிறிது எண்ணிப் பாருங்கள். அவர்கள் தந்நலமில்லாமல் தங்கள் நேரத்தை தியாகம் செய்து எவ்வளவோ பரிவுமிக்க செயல்களில் ஈடுபடுவது சிங்கப்பூர் இளையர்களுள் பரிவுணர்வு இழையோடுகிறது என்பதை பறைசாற்றுகிறதல்லவா? இளையர்கள் பரிவு மிக்கவர்கள் என்பதாலே இன்றைய காலத்தில் உயர்தர குடிமக்களாக, பண்பாடு மிக்க சான்றோர்களாக இமயத்தின் உச்சியை அடைவார்கள் என்பது திண்ணம். அவர்கள் ‘கடுகு போல் சிறிதுள்ளம்’ கொண்டவர்கள் அல்ல, வானுலகத்தினளவு பரிவு கொண்டவர்கள். ‘யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன், ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்’ என்பதற்கேற்ப இந்த சமூகத்தில் புனிதர்களாக மக்களுக்கு தூணாக அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். கொவிட்-19தின் பொழுதும், தொண்டூழியத்தின் மூலமும், பொது இடங்களிலும், மற்றவர் நலனைக் கருதி பரிவுணர்வுடன் நடந்துகொள்வதை பார்க்கும் பொழுது, மனம் பூரிக்கின்றது, உடல் சிலிர்க்கின்றது, கண்ணீர் துளிர்க்கின்றது, உள்ளமே நெகிழ்கிறது. இளையர்கள் பரிவு என்னும் அணிகலனை அணிவது அவர்களை மெருகூட்டி உள்ளத்தில் கவின்மிகு மாமனிதர்களாக கரையேறச் செய்கிறது. அவர்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கலங்கரை விளக்காகவும் அமைகிறார்கள். பரிவுமிக்க சமுதாயம் என்னும் விருட்சத்திற்கு அவர்களே விதைகளாகவும், தண்ணீராகவும், உரமாகவும், திகழ்கிறார்கள். இக்காரணங்களை கேட்டப்பின்பும் சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவுணர்வு மிக்கவர்கள் என்பதை மறுத்தால் அது தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதற்கு ஈடாகாதோ?

No comments: