Saturday, November 13, 2021

குழுமப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் 'நான் மிகவும் மதித்துப் போற்றும் ஒரு மாமனிதர்' எனும் தலைப்பில் நீவீர் ஆற்றும் சொற்பொழிவு.

 ஆராதனா  (306)  2021  


“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று ஒளவை பாட்டி நமக்கு கூறியுள்ளார். வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொண்டு, நல்ல வேலை, நல்ல குடும்பம், போன்றவற்றை பெற்று வாழ்வதற்கும் மேல் அரிய பண்புகளைப் பெற்று மானிடராய் வாழ்வது அரிது.


 அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்! என் பெயர் ஆராதனா. நான் ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலை பள்ளியை பிரதிநிதித்து பேசுகிறேன். என் சொற்பொழிவுக்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு “நான் மிகவும் மதித்துப் போற்றும் மாமனிதர்” என்பதே ஆகும். 


சிறிய தீவாக இருந்த சிங்கப்பூர், இப்போது பல்வேறு நாடுகளைக் காட்டிலும் மிகவும் முன்னேற்றம் அடைந்து திகழும் நாடாகும். சிங்கப்பூரை ஒரு மரத்துடன் ஒப்பிட்டால், திரு லீ குவான் யூ என்ற மாமனிதர், இம்மரத்தின் வேறுகள் வேர்கள் போல். சிங்கப்பூருக்கு அளவில்லா உதவிகளை செய்து, நம் நாடு வளர ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்த இவரைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள என் உள்ளம் விழைகிறது. 


திரு லீ சிங்கப்பூரை இவ்வளவு உயர்த்தி இருக்கிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் அல்ல. இது எல்லாம் அவருடைய கடின உழைப்பால் தான். சிங்கப்பூருக்கு அதிகம் போராடியிருக்கிறார். மலேசியாவிலிருந்து பிரிந்த போது, சிங்கப்பூரால் வளர முடியாது , தனி நாடாக திகழ இயலாது என்று பலர் கூறியிருப்பார். ஆனாலும் திரு லீ அவற்றைக் கண்டுக்கொள்ளாமல், தம் வேளையில் மட்டும் முழூக் கவனத்தையும் செலுத்தினார். சிங்கப்பூர் முன்னேற பல திட்டங்களை கொண்டு வந்து மக்களின் நம்பிக்கையை பெற்று, இந்நிலைக்கு கொண்டு வர, இரவும் பகலுமாக உழைத்தார். தேர்வுக்கு கடினமாக படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவதும் நல்ல விஷயம் தான். ஆனால் ஒரு நாடையே, உலகளவில் சிறப்பாக திகழ வைக்க திரு லீ அவர்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்? 


அது மட்டுமா? அவர் விடாமுயற்சியுடனும் செயல் பட்டார். சிங்கப்பூரில் தண்ணீரோ அதிக நிலமோ இல்லை. வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகும் தண்ணீர், எண்ணெய், பலவித காய்கறிகளும் பழங்களும் கூட இறக்குமதி செய்யும் இந்நாட்டின் மீது நம்பிக்கையை இழக்காமல், முயற்சியை கைவிடாமல், விடாமுயற்சியுடன் செயல்பட்டார் திரு லீ அவர்கள். “முயற்சி திருவினையாக்கும்” என்பதைப்போலவே, திரு லீயின் முயற்சிகள் வீண்போகவில்லை. இவற்றை கற்றுக்கொண்டு, நாமும் நம் வாழ்வில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் ஆகாததும் ஆகும்! 


சிங்கப்பூரில் நிறைய கட்டடங்கள், நல்ல போக்குவரத்து சேவைகள், சுகாதாரம், நல்ல மருத்துவச் சேவைகள் போல அடுக்கிக்கொண்டே போகலாம்! எத்தனை விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் அல்லவா? திரு லீ அவர்கள் மிகவும் பரந்த கண்ணோட்டமும், ஆழமான அறிவும் பெற்றவர். அவர் முதலில் அரசியலில் சேர்ந்த அந்த இளமை வயதிலேயே, சிங்கப்பூரின் எதிர்காலத்தைப்பற்றி யோசித்தார். சிங்கப்பூர் எவ்வாறு நல்ல கல்வி, மருத்துவம், இனநல்லிணக்கம் போன்றவற்றை பெற்று திகழவேண்டும் என்று அவர் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டார். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வரும் நாடுகளை காட்டின், ஐம்பத்தாறு வயதிலேயே சிங்கப்பூர் மிகவும் வளர்ந்து, அனைவராலும் போற்றப்படும் நாடாக திகழ்கிறது. இதன் பின்னால், திரு லீயின் ஆழமான சிந்தனைகளும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் பரந்த கண்ணோட்டமும் தான் தென்படும்.


திரு லீயை நான் மதிப்பதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்வது அவருடைய பணிவான மனப்பான்மையே ஆகும். சிங்கப்பூரின் பிரதமராக இருந்தாலும் அவர் மிகவும் அடக்கமாக இருந்தார் எனக் கூறலாம். அவருடைய அருமை பெருமைகளை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் பணிவாக நடந்துகொண்டார். சிங்கப்பூருக்கு நான் இது செய்திருக்கிறேன், அது செய்திருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளாமல் அடக்கமாக இருந்தார். “அடக்கம் ஆயிரம் போன் தரும்” எனும் பழமொழிக்குச் சிறப்பான எடுத்துக்காட்டு, திரு லீ அவர்களே. சிங்கப்பூருக்கும் அதன் குடிமக்களுக்கும் அளவில்லா நல்ல காரியங்களைச் செய்து, எதுவும் திருப்பி எதிர்பார்க்காமல், பணிவாக இருந்தார். இவரை மாமனிதர் என்று கூறுவதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை! 


இதுபோல் அவருக்கு எத்தனையோ அரிய பண்புகள் இருக்கின்றன. ஆனால் , அனைத்தையும் விளக்கினால் மணிக்கணக்காக பேச வேண்டியதாகும். ஆனால் பலரிடம் இல்லாத ஒரு அரிய குணம் ஒன்று இவரிடம் காணப்பட்டது! அது மீளும்தன்மையே ஆகும்! பல ஆண்டுகளாக , சிங்கப்பூர் பல சவால்களை எதிர்நோக்கியது. உதாரணத்திற்க்கு, மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக இருந்தது, தண்ணீர் பற்றாக்குறை, சார்ஸ் எனும் நோய் பரவல் என நினைத்துக்கூட பார்க்க முடியாத பல சவால்களை எதிர்நோக்கியது. இருந்தாலும், திரு லீ அவர்கள் மனந்தளராமல் நின்றார். குடிமக்களுக்கு ஆதரவளித்ததோடு, தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். பலர் அவரை நம்பாமல் இருந்தாலும், அவர் உறுதியாக நின்றார். சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு, இது ஒரு அடிப்படை காரணமாகும்! இப்படி ஒரு அரிதான குணத்தைப் பெற்ற திரு லீ அவர்களை மாமனிதர் என்று கூறாவிட்டால் வேறு என்ன சொல்வது? 


திரு லீ அவர்களை நான் மனதளவில் மதித்துப் போற்றுகிறேன். அவருடைய பணிவன்பாக இருக்கட்டும், மீளும்தன்மையாக இருக்கட்டும், அவருடைய கடின உழைப்பு, விடாமுயற்சி, ஏன், அவருடைய பரந்த கண்ணோட்டமாகக்கூட இருக்கட்டும்! இவர் அணைத்து சிங்கப்பூர் மக்களின் மனதிலும் ஒரு நீங்கா இடம்பெற்றுள்ளார் என்பது வெள்ளிடைமலை! இந்த மாமனிதரை பற்றி நினைக்கும்போது என் உள்ளம் பூரிக்கின்றது, உடல் சிலிர்க்கின்றது, கண்ணீர் துளிக்கின்றது, கரம் குவிக்கிறது! இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல என்று கூறியவாறு நான் விடைபெற்றுக்கொள்கிறேன்! நன்றி வணக்கம்!


No comments: