Friday, November 5, 2021

மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் சமூகம் பயனடைவதோடு மாணவர்களும் பயன்பெறுகிறார்கள்” எனும் தலைப்பில் குழுமப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு

 Pooja Shankar - 2021 

தித்திக்கும் தெள்ளமுதாம் தெள்ளமுதினும் மேலான முத்திக் கனியம் நம் முத்தமிழை அரியணையில் ஏற்றி வைத்து அகமகிழ்ந்து இருக்கும் அவையோர் அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் ராணி. இன்று நான்மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் சமூகம் பயனடைவதோடு மாணவர்களும் பயன் பெறுகிறார்கள்என்ற தலைப்பையொட்டி பேச வந்துள்ளேன்.

நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே

என்ற பாட்டு வரிகளுக்கேற்ப, மாணவர்கள் எதிர்கால நாட்டுத் தலைவர்களாகத் திகழ பல பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதில் மிக முக்கியமான பாடம் சமூக சேவையும் தொண்டூழியமுமேயாகும். பலர் இந்த தொண்டூழியத்தினால் சமூகம் மட்டுமே பயன் அடைகிறது என்ற தவறான யோசனையுடன் இருக்கிறார்கள். இன்று, சமூகத்தோடு மாணவர்களும் பயன் அடைகிறார்கள் என்பதை உணர்த்த நான் வந்துள்ளேன்.

மாணவர்கள் பல தொண்டூழியங்களை செய்கிறார்கள். முதியோர் இல்லங்களுக்குச் செல்வது, நூலகங்களில் வசதி குறைந்த குழந்தைகளுக்குப் புத்தகங்கள் படிப்பது, இலவச துணைப்பாட வகுப்புகள் எடுப்பது, வசதி குறைந்த குடும்பங்களுக்கு சாப்பாடு பைகளை அளிப்பது, அமைப்புகளின் கொடி நாளுக்கு நிதி திரட்டுவது போன்ற எண்ணற்ற தொண்டூழியச் சேவைகளைச் செய்கிறார்கள்.

இவற்றின் மூலம், முதியோர்கள் தனிமையில் தவிக்காமல் பலர் புதிய திறன்களை கற்றுக் கொள்கிறார்கள். வசதி குறைந்த குடும்பங்களிலுள்ள குழந்தைகள் படிப்பில் தவிக்காமல் நூல்களை விரும்பி வாசிக்கிறார்கள். வசதி குறைந்த குடும்பங்களுக்கு கெட்டுப் போகாத உணவு கிடைக்கிறது. என். கே. எப் (NKF) போன்ற பெரிய அமைப்புகள், கொடிநாளின்போது நிதி திரட்டி ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையை அளிக்கின்றன. 

இந்தப் பயன்கள் மட்டுமில்லாமல், இது நம் சமூகத்தின் பந்தத்தையும். மேம்படுத்துகிறது. சிறு குழந்தைகளான மாணவர்களே இவ்வளவு உதவி செய்ய முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது என்று பலர் நினைத்துள்ளனர். இத்தொண்டூழியங்கள் மூலம் நம் சமூகம் இணைந்து, சமூக மன்றங்களில் நடைபெறும் தொண்டூழியம் நிகழ்ச்சிகளிலும் நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு அனைவருக்கும் உதவி அளித்து, இன மத வேறுபாடில்லாமல் அனைவரையும் குடும்ப உறுப்பினர்களைப் போல கருதுகிறது. 

ஆனால், நான் என் உரையை இங்கு முடிக்க முடியாது. இத்தொண்டூழியத்திலிருந்து மாணவர்களும் எல்லையில்லாப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.

'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு 

என்பதற்கேற்ப மாணவர்கள் தொண்டூழியம் செய்வதன்மூலம் வகுப்புகளில் ஏட்டுக்கல்வியின் மூலம் கற்றுக் கொள்ள இயலாத சிலவற்றை இங்கு கற்றுக்கொள்கிறார்கள்.

மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள் என்ற அனைத்து வயதினரும் பேசுவதன் மூலம் மற்றவர்களிடம் இவ்வாறு மரியாதையுடன் பேசுவது என்பதையும், சகிப்புத்தன்மையுடன் எவ்வாறு கோபத்தை காட்டாமல் நிதானமாக இருப்பது என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்தால், அவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சி அளிக்காமல் உதவி செய்த நமக்கும் மகிழ்ச்சி வரும் என்பதையும் உணர்ந்து கொள்கிறார்கள். நாம், மற்றவர்களுக்கு ஒரு சிறு உதவியைச் செய்தால்கூட அத்தருணத்தில் அது பெரும் உதவியாகத் தெரியும் என்பதையையும் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால், இது அனைத்துக்கும் பெரிது, உலகச் சாதனை என்னவென்றால், மாணவர்கள் கைத்தொலைபேசியை வைத்துவிட்டு இத்தொண்டூழியங்களைச் செய்கிறார்கள். அனைத்து பெற்றோர்களின் முகங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் ஓடுகிறது.

'அருகலை (wifi) இல்லை என்றால் நான் இல்லை'

என்று கூறும் பல மாணவர்கள், தொண்டூழியம் செய்யும் போது அவர்களின் கைத்தொலைபேசிகளைத் தொடாமல் தங்கள் இதயபூர்வமாக மற்றவர்களுக்கு உதவி அளிக்கின்றனர். 

'அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே'

என்பதற்கேற்ப, மனிதர்களுக்குத் தேவையான அடிப்படை உணர்வு, அன்பைப் பற்றியும் மாணவர்கள் மேலும் கற்றுக்கொள்கிறார்கள். எவ்வாறு அன்புடன் உலகைக் கண்டு அனைவருக்கும் தங்களால் முடிந்த உதவியை அளிக்கவேண்டும் என்பதை மனதில் பசுமரத்தாணியைபோல் நிலையாக வைத்துக்கொள்கிறார்கள்

இவையனைத்தோடு, தன்னம்பிக்கையுடன் எவ்வாறு பொதுமக்களிடம் சென்று நிதி திரட்ட உதவி கேட்பது என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள். மாணவர்கள் இருக்கும் இவ்வயது பருவத்தில்தான் அவர்களால் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இயலும். இத்தொண்டூழியங்களின் மூலம் மாணவர்கள், எவ்வாறு உலகில் செயல்படவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டு, தன்னம்பிக்கை, அன்பு, சகிப்புத்தன்மை, உதவும் மனப்பான்மை போன்ற தன்மைகள் உள்ளத் தலைவர்களாகத் திகழ்கிறார்கள்.

சமூகச் சேவையை செய்வது

தெய்வத்தின் வேலையை செய்வது

என்று கூறி, மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் சமூகமும் மாணவர்களும் பயனடைகிறார்கள் என்று உறுதியாகக் கூறி, வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

No comments: