Wednesday, November 24, 2021
காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. கேரன் பெனீட்டா 107 - 2021
“டிம்மி! டிம்மி!” என்று காதை பிளக்கும் வண்ணம் அலறிக் கொண்டிருந்தேன். நான் கத்திக்கொண்டே இருந்தது கண்டிப்பாக அடுத்த நாள் என்னை குரல் இல்லாமலேயே ஆக்கிவிடும் என்று என்னை உறுதியாக நினைக்க வைத்தது.
அன்று குளிர்காற்று என்னை முத்தமிட்டு சென்றது. எங்கும் பச்சே பசேலென இருந்தது. அங்கும் இங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. மாலை மங்கி இலேசாக இருள் வானைக் கௌவத் தொடங்கியது.
என் நாய்க்குட்டி, டிம்மியுடன், பூங்காவில் நடக்க இது என்ன ஒரு அருமையான நாள் என்று நினைத்திருந்தேன். ஆனால் வழியில் கண்ட நண்பனிடம் ஐந்து நிமிடம் பேசிய நான் அந்நேரத்தில் என் செல்லப்பிராணி தொலைந்து போய் விடும் என்று சிந்தித்தே பார்க்கவில்லை.
என்னுடன் நெருக்கமாகப் பழகியிருந்த என் தாத்தா இறப்பதற்கு முன் எனக்கு அளித்த கடைசிப் பரிசு டிம்மிதான். தாத்தா இறந்த பிறகு அதனுடன்தான் என் முழு நேரத்தை செலவழித்தேன்.
எப்போதும் என் அறுகிலேயே இருக்கும் டிம்மி இப்பொழுது காணாமல் போனது என் வயிற்றில் இடி விழுந்தது போலிருந்தது. “கண்டிப்பாக யாராவது டிம்மியை நான் கவனிக்காதபோது தூக்கியிருப்பார்கள்!” என்று எண்ணிப் பதறினேன்.
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என்னால் சோர்வைத் தாங்க முடியவில்லை. என் முகம் சிவந்திருந்தது. என் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வீழ்ச்சியைப் போல் வழிந்தது. “டிம்மி அடுத்த நிமிடமே என் கைகளில் இருக்க வேண்டும்!” என்று கடவுளிடம் என் மனதில் கெஞ்சினேன்.
யாரை வினவினாலும் டிம்மியை பார்க்கவில்லை என்று பதிலளித்தனர். அப்பொழுது நிறைய நீர் ஒரு ஆறுபோல் ஓடுவதைச் செவி மடுத்தேன். திரும்பிப் பார்த்த நான், என் அருகே ஒரு பெரிய கால்வாய் இருப்பதை அறிந்தேன். கருப்பு நிறமான ஒரு பை கால்வாயின் நேரில் என் கண்ணுக்கு புலப்பட்டது. உற்றுப் பார்த்த நான் அந்த பையினுள் எதோ நகர்வது போல் இருப்பதை உணர்ந்தேன்!
“யாரோ டிம்மியை பையினுள் அடைத்து வைத்து விட்டார்களா ?
என்ற கேள்வி என் மனதில் எழும்பியது. என் இதயம் “படக் படக் “ என்று பதற்றத்தில் தாளம் போடுவது என் கைக்கடிகாரத்தின் “டிக் டிக் “ ஒலியை விட சத்தமாக இருப்பதை போல் இருந்தது. என் சிந்தனைகள் பயத்தில் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது.
“டிம்மியை காப்பாற்ற ஒரே வழிதான் உள்ளது,” என்று எண்ணினேன். நான் எதிர்பாராததைச் செய்தேன் ஒரு கணம் கூட செலவழிக்காமல் கால்வாயினுள் இறங்கி நீரினுள் குதித்தேன்!
வேகமாக ஓடிக் கொண்டிருந்த நீர் என்னைத் தள்ள கடினமாக உழைத்து நீச்சலடித்தேன். “டிம்மி!” என்று அலறியபடியே என் அருகில் நீருடன் ஓடிக்கொண்டிருந்த கருப்பு பையை நீட்டி பிடித்து கொண்டபின் ஆனந்த கண்ணீர் வடித்தேன். என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது.
டிம்மியை பையிலிருந்து மீட்க பையைத் திறந்தேன். கருப்பு பையினுள் ஒரு காலணிதான் இருந்தது என்று அறிந்த எனக்கு யாரோ ‘டமார்!’ என்று தலையில் அடித்ததுப் போலிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. டிம்மி என்னிடம் இல்லை!
கால்வாயிலிருந்து வெளியே வர முயன்ற நான் அப்பொழுதுதான் என் முட்டாள்தனத்தை புரிந்துகொண்டேன். நான் நீரின் வேகத்தைப் பற்றி யோசிக்காமல் கால்வாயினுள் குதித்திருந்தேன். நீர் என்னை இழுத்துக்கொண்டே இருந்தது. அச்சம் என் மனதை கௌவியது. எப்படி நீரிலிருந்து வெளியே வருவது என்று தெரியவில்லை. பயத்தால் என் இரதம் பனிக்கட்டியைப்போல் உறைந்தது.
“காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று நான் காது பிள்ளைக்கும் வண்ணம் அலறினேன். ஏன் நான் சிந்திக்காமல் கால்வாயினுள் இறங்கினேன் என்று வருந்தினேன். அப்பொழுது,
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு”
என்ற திருக்குறள் என் ஞாபகத்திற்கு வந்தது.
நல்ல வேலை சில பேர் கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்தி மீட்புக் குழுவை அழைத்தனர். அவர்கள் உடனே என்னைக் காப்பாற்றினார்கள். நான் சிந்தித்து செயல்படாததற்கு என்னைக் கண்டித்தார்கள். என்னை அவர்கள் காப்பாற்றாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருந்தது.
டிம்மியை இன்னும் காணவில்லை என்ற வருத்தமும் நான் செய்த முட்டால் செயலினாள் எனக்கு என் மீது ஏற்பட்ட கோபமும் சேர்த்து கண்ணீராக வெளிவந்தது.
அப்பொழுது என் கையை யாரோ தொடுவதுப் போல் இருக்க நான் திரும்பிப் பார்த்தேன். என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. ஓர் ஆடவர் டிம்மியை தன் கையில் ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்தார்! “நீ முன்பு என்னிடம் ஒன நாய்க்குட்டியைப் பார்த்தாயா என்று வினவியிருந்தாய். அதன் பிறகு அதை ஒரு புதரினருகில் பட்டாம்பூச்சியுடன் விளையாடுவதைக் கண்டேன்,” என்று கூறினார்.
வானிலிருந்து வந்த தெய்வம் போல் அவர் எனக்குத் தோற்றமளித்தார். நான் என் நன்றியைப் பலமுறை தெரிவித்த பிறகு டிம்மியை ஆரத்தழுவிக்கொண்டேன்.
அந்த சம்பவம் என் மனதில் பசுமரத்தாணியைப்போல் பதிந்தது. அன்றிலிருந்து நான் எப்பொழுதும் ஒரு செயலைச் செய்வதற்கு முன் இரண்டு முறையாவது சிந்தித்து பார்க்க முடிவு செய்தேன். மேலும் டிம்மியை இன்னும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள தொடங்கினேன்.
~முற்றம்~
உன் நெருங்கிய தோழி உன் மேல் கொண்ட பொறாமையால், உன்னைவிட்டு விலகக் காரணமாக அமைந்த நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. பெயர்: மகேஷ் காயத்ரி வகுப்பு: 108 (2021)
பொறாமை. பொறாமை என்பது நம் அனைவரிடத்திலும் உள்ள ஓர் உணர்வு தான். ஆனால், அதை நாம் மற்றவர்களிடம் வெளிக்காட்டுவதும் வெளிக்காட்டாததும் நம் கையில் உள்ளது. மற்றவர்கள் நம்மைவிட எதிலாவது சிறந்து விளங்கினாலோ நம்மை வென்றுவிட்டாலோ நம்முள் சிலர், “அடாடா! அவர்கள் நம்மைவிட இதில் நன்றாகச் செயல்படுகின்றனரே!” என்று நினைத்துச் சற்று பொறாமையடைவோம். இதற்குப்பதிலாக, வேறு சிலர் அவர்களது வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல் நினைத்து மகிழ்ச்சியடைந்து அவர்களை வாழ்த்துவார்கள். அவர்களுள் பொறாமை இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். அத்துடன், நட்பினுள் பொறாமை ஏற்பட்டால் நிறைய சண்டை தான் ஏற்படும். சற்றுமுன் நகமும் சதையும் போல இருந்த நண்பர்கள் பொறாமையினால் நாயும் பூனையும்போல் சண்டைபோட்டு நிலைமை மோசமானால் எதிரிகளாகக் கூட ஆகிவிடுவார்கள். இந்தச் சதிக்கெல்லாம் காரணம் பொறாமையே!
“ட்ரிங்! ட்ரிங்!” பள்ளி இடைவேளை மணி ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் வகுப்பைவிட்டு உணவகத்தை நோக்கி சிட்டாய்ப் பறந்தனர். புன்னகைத் தவழ்ந்த முகத்துடன் எனது இணைபிரியாத் தோழி, மாலதி, என்னிடம், “மாயா! நீ வருகிறாயா?” என்று கேட்டாள். நானும் சூரியனைக் கண்ட தாமரையைப் போல மலர்ந்த முகத்துடன் என் தலையை ஆட்டினேன். என் கையடக்கத் தொலைப்பேசியையும் பணப்பையையும் எடுத்துக்கொண்டு மாலதியுடன் உணவகத்திற்குச் செல்லத் தொடங்கினேன். மாலதியும் நானும் தொடக்கப்பள்ளியிலிருந்தே புவும் நாரும் போல நெருங்கிய நண்பர்கள் ஆவோம்! நாங்கள் இருவரும் பணக்கார குடும்பங்களிலிருந்தே வந்தோம். அவளும் நானும் எப்போதுமே சிறந்த மதிப்பெண்கள் எடுப்போம். சொல்லப்போனால், எங்கள் இருவரையும் இரட்டை சகோதரிகள் என்றே கூறலாம். ஆனால், மாலதியோ மிகவும் அழகானவள். அவளது கருப்பு நிற தலைமுடி, பழுப்பு நிற கண்கள் எல்லாம் அவளை ஒரு ராணியைப்போல் அலங்காரப்படுத்தின. மற்றவர்கள் என்னையும் ஓர் அழகானவள் என்று தான் கருதுகின்றனர். இருந்தாலும் மாலதியின் அழகே வேற விதம்! இன்னொன்று! அவளுக்கு எப்பொழுதுமே மேடை மீது நின்றுபேசும்போது அவள் மனதினுள் பீதி குடிக்கொள்ளும். இதை அவள் உணர்ந்தாலும் அவளுக்கு அனைவர் முன் நின்று பேசுவதற்கு ஆசையுண்டு. அந்த அச்சத்தை மட்டும் மாலதியால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனக்கோ மேடையில் பேசுவது என்பது இயல்பானது என்றே கூறலாம். இதையறிந்த அசிரியர்கள் பலர் என்னை போட்டிகளில் கலந்துகொள்ள வைத்திருகின்றனர். அவை அனைத்தும் எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தன. மேலும், அவற்றில் கலந்துகொள்வது எனக்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்கும்.
“மாயா, நீ நேற்று உன் குடும்பத்துடன் எங்கேயோ சென்றதாக கூறினாயே. எங்கே?” என்று வினவினாள், மாலதி. நானும் பதிலளிக்க வார இறுதியில் நடந்த நகைச்சுவையான சில விஷயங்களைப் பற்றி பாட்டிகள் போல் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வழக்கம்போல நாங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவாரே வயிறு குலுங்க சிரித்தோம். சிரிப்பு மருந்தைக் குடிப்பதுபோல் இருந்தது! எங்களது வகுப்பு மாணவர்கள் சிலர் எங்களைச் சுலித்த முகத்துடன் பார்த்து, “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்க நான் “‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நானும் மாலதியும் நல்ல மாணவர்களாக ஆசிரியர் கற்றுக்கொடுத்ததைச் செய்துகொண்டிருக்கிறோம்!” என்றேன். அடுத்த கணமே, நானும் மாலதியும் கண்ணீர் வரும்வரை சிரிக்காரம்பித்தோம் . இந்தப் பதிலைக் கேட்ட எங்கள் வகுப்பு மாணவர்கள் வெறுப்புடனும் கோவைப்பழம்போல் சிவந்த முகத்துடனும் வேறெங்கேயோ சென்றனர். எங்கள் ஆங்கில அசிரியர் எங்களிடம் வந்தபின்னே நாங்கள் பிசாசுகள்போல சிரிப்பதை நிறுத்தினோம். “மாயா, மாலதி! நீங்கள் சிரிப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. உங்களை தொந்தரவு செய்வதற்கு என் மன்னிப்பு. ஆனால், மாயா நான் உன்னிடம் சற்று பேசவேண்டும்!” என்றார், ஆசிரியர். இதைக் கேட்டவுடன் என்னுடைய கண்கள் அகல விரிந்தன. என் இதயம் ‘படக், படக்’ என்று தாளம்போட நான் என்ன தவறுசெய்தேன் என யோசித்தவாரே ஆசிரியரை அச்சத்துடன் பின்தொடர்ந்தேன்.
“மாயா, நீ ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் மாணவி. மேலும், நீ பல பேச்சு போட்டிகளில் பங்கெடுத்து வென்றிருக்கின்றாய். அதனால் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒரு போட்டியில் கலந்துகொள்வாயா? நீ நம் பள்ளிக்குப் பெருமை கொண்டு வருவாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று என் ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். எனக்கு அப்பொழுது உல்லாச வானில் சிறகடித்துப் பறப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் என் ஆசிரியரிடம் என் விருப்பத்தைக் கூறி என்னுடைய தன்னிப்பட்ட தகவல்களை அளித்தேன்.
எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! அவ்வளவு குஷி! நான் மானைப்போல் துள்ளி குதித்தவாறே மீண்டும் மாலதியிடம் சென்றேன். அவளது முகத்தில் ஈயாடவில்லை. “இன்னொரு போட்டியா?” என்று அவள் முறைத்தவாறு கேட்டாள். நானும், “ஆம்! நீ சந்தோஷமாகத் தானே இருக்கிறாய்?” என்று வினவினேன். அவள் கண்கள் கோபக் கனல்களைச் சுட்டெரித்ததுப்போல் இருந்தது. அவள் என்னைப்ல பொரிந்து தள்ளினாள். “ஏ, மாயா? நான் எதற்கு நீ போட்டியில் கலந்துகொண்டால் மகிழ்ச்சியடையனும்? நான் எந்த ஒரு போட்டியிலும் பங்கெடுக்கவில்லை!” என்று காதைப் பிளக்கும் வண்ணம் கத்தினாள். நான் வியப்பில் வாயைப் பிளந்தவாறு திகைத்து நின்றேன். “இனி, நாம் நண்பர்களே இல்லை!” என்று கூறியப்படி அவள் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள்.
மாலதி, என் நெருங்கிய தோழி, என் சகோதரிபோல் இருந்தவள். என் பிரிய தோழி, என்னைவிட்டு விலகிச்சென்றுவிட்டாள். துக்கம் என் தொண்டையை அடைத்தது. முத்துக்கள் போல் கண்ணீர்த் துளிகள் என் முகத்திலிருந்து வழிந்தோடின. நான் அவற்றைத் துடைத்துவிட்டு வகுப்புக்குச் சென்று மாலதி ஓர் உண்மையான தோழியில்லை என உணர்ந்தேன். உண்மையான நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிய மாட்டார்கள், உங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவார்கள் முக்கியமாக அவர்களுள் பொறாமை இருந்தால் வெளியே காட்டி நட்பை முறிக்க மாட்டார்கள்!
மெதுவாக, என் துக்கம் சினமாக மாறியது. நான் மாலதியைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிட்டு என் படிப்பில் கவனம்செலுத்தினேன். அவளைப் பற்றி நினைத்து படிப்பில் பின்தங்கி விடக்கூடாது என்பதே என் ஒரே எண்ணம். அந்தப் பேச்சுப் போட்டியில் நான் மீண்டும் முதல் பரிசை வென்றேன்.
இந்த நிகழ்வுகளிலிந்து நான் கற்றுக்கொண்டது, பிறர் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்பதே. மாலதி பொறாமையாக இருந்திருந்தாலும் அவள் அதைக் காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் நண்பர்களாகத் தான் இருந்திருப்போம்.
‘அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்’
என்று திருவள்ளுவர் போதித்ததற்கேறப பொறாமைக் கொள்வதை நாம் கட்டுப்படுத்திக்கொண்டும் சினம், பேராசை மற்றும் தீங்கு விளைவிப்பது ஆகிய மற்ற மூன்றையும் தவிர்த்துக் கட்டுப்படுவதே சிறந்ததாகும்.
‘ஒருவர் பொறை இருவர் நட்பு’
என்பதற்கேற்பவும் பொறாமை, சினம் போன்றவையில்லாத நட்பே நல்ல நெருக்கமான நட்பாகும். மாலதியுடன் எனக்கு நடந்தது ஒரு சிறபற்ற அனுபவமாக இருந்தாலும் நான் பலவற்றை உணர்ந்துகொண்டேன்.
இதுதான் என் பெற்றோர் கூறிய, ‘அனுபவம் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பதற்கு அர்த்தம் போல!
காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. - JANANI BALAMURUGAN 104- 2021
“ஜனனி! உன் அறையைச் சுத்தப்படுத்து! தீபவாளி வருகிறது!" என்று அம்மா சமையலறையிலிருந்து கூகுரலிட்டார். "சரி அம்மா!" என்று எரிச்சலுடன் கூறிவிட்டு என் அறையை சுத்தப்படுத்தத் தொடங்கினேன்.
தொடக்கநிலையிலிருந்து வைத்திருந்த புகைப்படங்கள், கடிதங்கள் முதலியவற்றை கண்டேன். அந்தக் கோப்பை எடுத்தபோது, அதிலிருந்து ஒரு புகைப்படம் விழுந்தது. அப்புகைப்படம் கசப்பான நினைவுகளை என் கண்முன் நிறுத்தியது. அப்படத்தில் நானும் மாலாவும் சிரித்துக்கொண்டிருந்தோம். தொடக்கப்பள்ளியின் இறுதி நாள். எங்கள் மலர்ந்த முகங்களைக் கண்டு எனது கண்ணிலிருந்து ஒரு கண்ணீர் விழுந்தது. என் எண்ண அலைகள் பின்னோக்கிச் சென்றன…
நானும் மாலாவும் நகமும் சதையும் போல இருந்தோம். என் சகோதரியாக அவளை நான் கருதினேன். ஆறு வருடங்களாக நெருங்கிய தோழிகளாக இருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் இடைவேளையின்போது பள்ளி உணவகத்தில் அமர்ந்து கல கலவென்று சிரித்தவாறு நேர்த்தை செலவழித்தோம். தொடக்கப்பள்ளி முடிந்ததும் நாங்கள் பிரிந்தோம். நட்பைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள நினைத்தோம். எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பொறாமை அவளை அதன் கட்டுக்குள் இழுத்தது. அதன்பிறகு எங்களின் நட்பு …
தொடக்கப்பள்ளி இருதியாண்டு தேர்வில் நான் சிறப்பாக செய்தேன். எனது மதிப்பெண்களைக் கண்டு நான் ஆனந்தக் கண்ணீர் விட்டேன். ஆனால் மாலாவோ, அவளவு நன்றாகச் செய்யவில்லை. என் மகிழ்ச்சியை நான் அடக்கிக்கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னேன். இருப்பினும் அவள் அன்று பள்ளியைவிட்டு அழுகையுடன் சென்றாள்.
புது உயர்நிலைப்பள்ளியில் நான் வகுப்புத் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்தேன். மாலாவும் தனது பள்ளியில் வகுப்புத் தலைவியாக இருக்க ஆசைப்பட்டாள். ஆனால் அவள் நியமிக்கப்படவில்லை. நான் எனக்குப் பிடித்த இணைப்பாட வகுப்பில் சேர்ந்தேன். மாலா அவள்ளது பள்ளிப் பாடல் குழுவை சேர விழைந்தாள். ஆனால் மறுபடியும் தோல்வியடைந்தாள். நான் வகுப்பினரிடம் உரையாடி சீக்கிரம் நண்பர்களைக் கண்டறிந்தேன். ஆனால் மாலா பள்ளியில் தனிமையில் வாடினாள். இருப்பினும் அவளுக்கு ஆதரவாக இருந்தேன். குறுஞ்செய்தி அனுப்பி, தொலைபேசியில் உரையாடி, அவளுக்கு உற்சாகம் அளித்தேன். என்னைச் சந்தித்தப்போதெல்லாம், இன்முகத்துடன் பேசினாள். சிறுவயதில் இருந்த மாலா மாறாததுபோல் இருந்தது. ஆனால் அவளுள்ளிருந்த கோபமும் பொறாமையும் என்னிடம் அவள் காட்டவில்லை.
சூரியன் தன் செங்கதிர்களால் பூமியைச் சுட்டெரித்தான். நான் சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து என் நீச்சல் போட்டிக்குத் தயாரானேன். பள்ளியை நான் பிரதிநிதித்து பங்கேற்கும் முதல் போட்டி அது. பல நாட்களாக நான் அதற்கு அல்லும் பகலும் தயார் செய்துகொண்டு வந்திருந்தேன். அங்குள்ள அதிகாரி, "கோ!" என்று கூறியவுடன், நான் அசூர வேகத்தில் நீந்தினேன். என்னை ஒருமுகப்படுத்தி கவனத்தை நீந்துவதில் செலுத்தினேன். வெற்றி கோட்டை தாண்டினேன். பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர். முதல் பரிசை வென்றுவிட்டேன்! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து பரிசைப் பெற்றேன். வீட்டிற்குச் சென்றதும் என் இணையத் தளத்தில் என் வெற்றியைப் பற்றி பகிர்ந்துகொண்டேன்.
காலம் உருண்டோடியது. மறுநாள், நான் என் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்தைப் பார்த்தேன். நிறைய நண்பர்கள் எனக்கு ஊக்கமளித்தனர். ஆனால் ஒரு குறிப்பு என் முகத்தை வாட வைத்தது. "ஜனனி மிகவும் கர்வம் கொண்டவள்! அவள் எப்பொழுதும் என்னைப்பற்றி கேவலமாக பேசுவாள்!" என்றது ஒரு குறிப்பு. அதை யார் எழுதியிருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அது உண்மையன்று! முன்பு இணையப்பக்கத்தில் போட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தேன். வெவ்வேறு மக்கள் என்னைப்பற்றி அவமதிக்கும் குறிப்புகளை எழுதியிருந்தார்கள். என் மனம் சுக்குநூறாக உடைந்தது. எனது முகம், உடம்பு, நண்பர்கள், குணம் அனைத்தையும் பற்றி புண்படுத்தும் குறிப்புகள் இருந்தன. என் கண்களிலிருந்து கண்ணீர் அருவிநீர் போல் வழிந்தோடியது.
எனது உயர்நிலைப்பள்ளி நண்பர்கள் அக்குறிப்புகளை நம்பவில்லை. ஆனால் திடீரென்று என் தொடக்கப்பள்ளி தோழர்கள் என்னைவிட்டு விலகினார்கள். மாலாவிடம் இதைப்பற்றிக் கேட்டப்போது, அவள் தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் இருந்தாள். நாட்கள் போகப் போக, என் தொடக்கப்பள்ளி நண்பர்கள் என்னிடம் பேசவில்லை. நான் சோகத்தில் வாடினேன். ஆனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாட்கள் உருண்டோடின. ஒரு வாரம் கழித்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. என் நெடுங்கால தோழி கவிதா ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள். மாலா என்னைப்பற்றி தவறாகப் பேசியாதாகக் கூறினாள். முதலில் நான் அதை நம்பவில்லை. என் நெருங்கிய தோழி ஏன் அவ்வாறு செய்வாள்? ஆனால் கவிதா மாலா என்னைப்பற்றி அவமதிக்கும் வகையில் பேசி, பொய்த் தகவல்களை பரப்பும் குறுஞ்செய்திகளைப் புகைப்படங்கள் எடுத்து எனக்கு அனுப்பினாள். அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன். எனது கவலைகளுக்குக் காரணம் மாலா தான்.
அந்தச் செய்தி என் மனதை உடைத்தது. தேம்பித் தேம்பி அழுதேன். அழுதும் மனம் ஆறுதல் அடையவில்லை. அன்று உலகமே இருண்டது போல் இருந்தது. இவ்வளவு நாட்களாக அவளுக்கு உதவி, தோழியாக இருந்த என்னை அவள் கைவிட்டுவிட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு குறிப்பும் என் மனதைக் குத்தும் கத்திப்போல் இருந்தது. துரோகத்தின் வலியை நான் அன்றுதான் முதன்முறையாக உணர்ந்தேன். "ஏன் மாலா இவ்வாறு செய்தாள்? நான் என்ன தவறு செய்தேன்?" என்று மீண்டும் மீண்டும் எண்ணியவாறு கண்ணீர்விட்டு உறங்கினேன்.
மறுநாள் மாலாவிடம் அதைப்பற்றி கேட்க ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். பதில் வரவில்லை. ஒரு வாரம் கடந்தது. பதில் வரவில்லை, ஆனால் எனது வலி அங்கேயே இருந்தது. ஒரு மாதம் கடந்தும் பதில் வரவில்லை. அதன்பிறகு நான் அவளிடமிருந்து விலக முடிவெடுத்தேன். என் இணையத்தலங்களிலிருந்து அவளை நீக்கினேன். என் உயர்நிலைப்பள்ளி நண்பர்களுடன் நெருக்கமானேன். என் வாழ்க்கையை மீண்டும் இன்பமாக வாழ முயற்சித்தேன். என் தொடக்கப்பள்ளி நண்பர்களிடம் பேசி, சிக்கலை எடுத்துரைத்தேன். அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்து, மன்னிப்புக்கூறி, எனக்கு ஆதரவு அளித்தார்கள். என் வாழ்க்கை மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தது.
"ஜனனி! சாப்பிடவா!" என்று என் அம்மாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தது. மணி எட்டு. சாப்பிடும்போது மாலாவைப் பற்றி யோசித்தேன். அப்பொழுது அன்று ஆசிரியர் கூறிய ஒரு பழமொழி என் நினைவுக்கு வந்தது. "போகவிட்டு புறம் சொல்லி திரியவேண்டாம்" என்ற பழமொழிப்படி மாலா நடந்திருந்தால், அவளும் நானும் இன்றும் தோழிகளாக இருந்திருப்போம். ஆனால் அவளது பொறாமை அவளைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றது. இருப்பினும், நான் அவளை ஏன் வெறுக்கவேண்டும்? தோழிகளில்லை என்றாலும் நாங்கள் எதிரிகளாக இருப்பது சரியல்ல. நான் என் கைத்தொலைபேசியை எடுத்தேன். அவளது எண்ணை ஒரு நண்பரிடமிருந்து கேட்டறிந்து மாலாவிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன்.
"எப்படி இருக்கிறாய், மாலா?"
அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன்.
உன் நண்பர் எப்போதும் எதிலும் பிடிவாதமாக நடந்துகொள்வார். ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அது தவறென்பதை அவருக்கு உணர்த்தி அவரிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுபற்றி விளக்கி எழுதுக. - SAMIKSHA GIRISH 105 -2021
“திங்கட்கிழமை வகுப்பு முடிவதற்குள் எல்லா கட்டுரைகளும் என் மேசைமீது இருக்கவேண்டும், ” என்று ஆசிரியர் கூற என் முகம் வாடியது. 'மறுபடியும் கட்டுறையா?' என்று நான் நினைத்துக்கொண்டே தலைப்பைப் படித்தேன். 'பிடிவாதம்' என்ற வார்த்தையைப் பார்த்தவுடன் என் எண்ணங்கள் கிளர்ந்தன. பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் என் நினைவுக்கு வந்தது. நான் வகுப்பைவிட்டு முன்நோக்கி நடக்க, என் எண்ணங்கள் பின்நோக்கி சென்றன…
'மாறன்! அந்தக் கைத்தொலைப்பேசியைப் பார்த்தாயா? எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கும் ஒன்று வேண்டும்,' என்று என் தோழன், கவின் கூறினான். அன்று வெள்ளிக்கிழமை கதிரவன் உச்சி வானத்திற்கு வந்துவிட்ட நடுப்பகல் நேரம். அப்போது மதிய உணவு உண்பதற்கான இடைவேளை நரம் என்பதால், பள்ளி உணவகத்தில் கூட்டம் அலைமோதியது. எங்கும் ஒரே ஆரவாரமும் ஆர்ப்பாட்டமுமாய் இருந்தது. சில மாணவர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு கடைகளிலிருந்து உணவு வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். மற்ற சில மாணவர்கள் எங்கு நடந்துகொண்டிருப்பதைக்கூட கவனிக்காமல் கைத்தொலைபேசியில் மூழ்கியிருந்தார்கள். சிலர் மேசைகளில் உட்கார்ந்து மும்முரமாக தங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்துகொண்டிருந்தார்கள். மற்ற சிலர் புன்னகைத் தவழும் முகங்களுடன் தங்கள் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். நான் கவினுடன் மேசையில் உட்கார்ந்து, என் உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அண்மையில்தானே நீ புதிய கைத்தொலைபெசியை வாங்கினாய்? அது இன்னும் சரியாகத்தான் வேலை செய்கிறது அல்லவா? பிறகு ஏன் உனக்கு புதிய கைத்தொலைபேசி தேவை?' என்று நான் வினவினேன். புதிய பொருள்களைப் பயன்படுத்தினால்தான் மற்றவர்கள் என்னிடம் பேசி பழகுவார்கள், என்று அவன் கூறிவிட்டு, நான் பதிலளிக்கும் முன் 'போகவேண்டும்' என்று சோல்லி சென்றுவிட்டான். கவின் மிகவும் பிடிவாதமான ஒருவன் ஏன்று நான் அறிந்திருந்தேன். அவனுக்கு ஏதாவது வேண்டுமானால், அது தன் கையில் கிட்டும்வரை அவன் விடமாட்டான் என்று எனக்குத் தெரியும்.
உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
என்று திருவள்ளுவர் கூறியதற்கேற்ப ஒரு நல்ல நண்பனாக இருந்து அவனிடம் பிடிவாதமாக இருப்பது தவறு என்று எடுத்துசொல்ல நான் பலமுறை முயற்சி செய்திருந்தேன். ஆனால், ஒவ்வோரு முறையும், என்னுடைய வார்ததைகள் செவிடனின் காதில் ஊதிய சங்குபோல் வீணாகி போயின.
மறுவாரம், நான் பள்ளிக்கு வரும்போது, கவின் எல்லோரிடமும் தன் புதிய கைத்தொலைபேசியை காட்டுவதை நான் கண்டேன். அவனுடைய பிடிவாத குணத்தைத் தாங்க முடியாமல் மறுபடியும் அவன் விரும்பியதை வாங்கித் தந்த அவனுடைய பெற்றொரை எண்ணி வருந்தினேன். அவர்கள் இப்படி செய்துகொண்டே இருந்தால் பிற்காலத்தில் கவின் என்ன ஆவான்? என் மனத்தில் பல எண்ண அலைகள் தோன்றின. அப்பொது, என்னைக் கண்ட கவினின் முகம் சூரியனைக் கண்ட தாமரையைப் பொல மலர்ந்தது. 'பார்! எனக்கு கைத்தொலைபேசி கிடைத்துவிட்டது! நான் இப்போது மட்டில்லா ஆனந்தத்தை அடைந்துவிட்டேன்!' ஏன்று உற்சாகமாக கூறினான். ஆனால், நான் சிரிக்கவில்லை. அவனுடைய செயல் தவறு என்று அறிந்ததால், 'கவின்...' என்று சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், நான் பேசி முடிப்பதற்குள் அவன் இன்னொரு தோழனிடம் சென்று தன் புதிய கைத்தொலைபேசியை காட்டத் தொடங்கினான்.
அந்த இரவு, நான் என் மெத்தை மீது படுத்துக்கொண்டு பள்ளியில் நடந்ததைப் பற்றி நினைத்துக்கொஙண்டிருந்தேன். அவனை எப்படி திருத்துவது? என்ற கேள்வி மனத்தில் தோன்றியது. அப்போது, 'கவின்' என்று யாரோ கூறுவது என் செவிகளுக்கு எட்டியது.
நான் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க, அவ்வார்த்தை கூறியது என் அம்மாதான் என்று உணர்ந்தேன். 'இன்று காலை கவினின் அம்மாவுடன் நான் தொலைபேசி மூலம்
தொடர்புகொண்டேன். அவர் கண் கலங்கி விட்டார், தெரியுமா? அவர் அண்மையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர் இப்போது வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால் எதுவும் கிடைப்பதில்லை என்று சொன்னார். தன் கணவரின் சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும், அவர்கள் இருவருக்கும் மிகவும் மன உளைச்சளாக இருப்பதாகவும் கூறினார். அது மட்டுமில்லாமல், கவினின் பிடிவாத குணம் உயர்ந்திருக்கிறது என்றும் அவர் சொன்னார். சென்ற வாரம் அவன் ஒரு புதிய கைத்தொலைபேசியை வாங்கித் தரும்படி அடம்பிடித்தான். இப்போது, அவன் விலை உயர்வான ஒரு பையை வாங்கித் தரும்படி கூறுகிறான் என்று அவர் விளக்கினார். விரும்புவது எல்லாவற்றையும் வாங்கித்தர முடியாது என்று அவர்கள் சொல்லும்போது, அவன் கேட்காமல் பிடிவாதம் செய்கிறான் என்று அவர் கூறினார். தங்களிடம் பணமில்லை என்பதை எப்படி எடுத்துறைப்பது என்று அவர் வருந்துகிறார், ' என்று அம்மா அப்பாவிடம் கூறுவதை நான் செவிமடுத்தேன். அப்போது, எனக்கு எண்ணம் மின்னலெனப் பளிச்சிட்டது. கவினைத் திருந்தவைக்க என்ன செய்யவேண்டும் என்று நான் புரிந்துகொண்டேன்.
மறுநாள், நான் வகுப்புக்குள் நுழைந்தவுடன் கவின் என் அருகில் வந்து, அவனுடைய பெற்றோர் புதிய பையை வஅங்க முடியாது என்று சொன்னதைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தான். அப்போத் நான் அவனைத் தடுத்து நிறுத்தினேன். 'கவின், தான் சோல்வதைக் கவனமாகக் கேள்,' என்று ஆரம்பித்து என் அம்மா கூறிய செய்திகளை அவனிடம் சொன்னேன். நடந்ததைக் கேட்ட அவன் வாயைப் பிளந்து சிலையாய் இருந்தான். முத்துக்கள் போல கண்ணீர் சொட்டுகள் அவன் கண்களிலிருந்து வடிந்தன. அவனுடைய உலகமே இருண்டது போல இருந்தது. எ...என் அம்மா வேலையிலிருந்து நீ...நீக்க...நீக்கப்பட்ட செய்தி எனக்குத் தெரியவில்லை! இவ்வளவு நாளாக என் பிடிவாத குணத்தால் அவரும் என் தந்தையும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். நான் நிலைமையைப் புரிந்துக்கொள்ளாமல் இப்படி ஓரு முறையில் நடந்துகொண்டேன்!' என்று அவன் அணலில் விழுந்த புழுபோல துடித்தான். 'நீ நடந்துகொண்ட முறை தவறு என்று புரிந்துகொண்டாய் அல்லவா? இன்று வீட்டிற்கு சென்றவுடன் பெற்றோரிடம் மன்னிப்புக்கேள். மீண்டும் இதுபோல பிடிவாதமாக நடந்துகொள்ளாமல் தேவையுள்ளதை மட்டும் கேளு, சரியா?' என்று நான் அறிவுரை கூறினேன். அவன் அவமானத்தில் தலை குணிந்து நின்றான்.
அந்த நாளிலிருந்து, அவன் பிடிவாதமாக நடந்துகொள்வதை நிறுத்தினான். அந்தச் சம்பவம் உண்மையாகவே அவனுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. இதைப் பற்றியே கட்டுரை எழுதலாம் என்று முடிவு செய்து, நான் வீட்டிற்குச் சென்றேன்.
காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக . SHAMITA BALAKRISHNAN 109 -2021
“மணி! இங்கே வா!” என்று நான் என்னுடைய செல்லபிராணியான நாயை அன்புடன் அழைத்தேன். நான் என்னுடைய நாயைக் கண்ணை இமைக் காப்பதுப்போல் காத்துவந்தேன். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தான் நான் என்னுடைய நாயைப் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை அறிந்தேன். அச்சம்பவம் எனக்கு ஒரு நல்ல பாடத்தைப் புகட்டியது. மணியைக் கண்டவுடன் சில நாட்களுக்கு முன் நடந்த அச்சம்பவம் என் நினைவிற்கு வந்தது.
“ராதா! எவ்வளவு நேரம் தான் கைத்தொலைபேசியையே பார்த்துக்கொண்டிருப்பாய்? இப்படி செய்தால் சீக்கிரமாகவே நீ முக்குக்கண்ணாடி போட அவசியமாகும். மணியைச் சற்று நேரம் பூங்காவிற்கு அழைத்துச் செல்!” என்று எனது தாயார் கத்தினார்.இன்னும் வீட்டிலே இருந்தால் அம்மா திட்டுவார். நாம் கீழே சென்றால்தான் அவர் நிறுத்துவார்,” என்று நான் முகம் சுளித்துக்கொண்டே கோபமாக மணியை அழைத்து பூங்காவிற்குச் சென்றேன்.
மாலை மங்கி இலேசான இருள் கௌவத் தொடங்கியது. காற்றில் மரங்கள் தலை அசைத்தன. அனைவரும் கலகலப்பாக இருந்தனர். அனால் என் முகம் மட்டும் வாடியிருந்தது. மணியோ புத்துணர்ச்சியுடன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறு மணி என்னையும் பூங்காவில் ஓட வைத்தது. விருப்பமில்லாத நான் வேறு வழியில்லாமல் மணியுடன் பூங்கா முழுவதும் ஓடினேன். ஆனால் என் கோபமோ அதிகரித்தது. “நான் எதற்கு மணியைப் பூங்காவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்? நான் யாரையும் தொந்தரவு செய்யாமல் வீட்டில் தானே இருந்தேன்?” என்று கோவைப்பழம் போல் சிவந்துகொண்டவாறே நினைத்தேன். அனால் மணி என் கோபத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் விளையாட்டுத் தனமாகவே இருந்தது.
அப்போது மின்னலென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் ஓர் ஓரமாகச் சென்று என் கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டே மணியையும் கவனிக்கலாம். இதே இடத்தில் தானே மணி விளையாடும்? ஆனால் நான் அவ்வாறு நினைத்தது எவ்வளவு தவறு என்பது எனக்குப் பிறகு தான் புரிந்தது.
நான் உடனே இந்த யோசனையின்படி நடந்து கொண்டேன். ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டே, ஒரு கண் கைத்தொலைபேசியையும், ஒரு கண் மணியையும் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் நேரம் செல்ல கண்கள் இரண்டும் கைத்தொலைபேசியைப் பார்த்து மணியைக் கவனிக்காமல் இருந்தேன். எவ்வளவு நிமிடங்கள் சென்றதோ தெரியவில்லை. ஆனால் நான் கடைசியாக ஓர் ஒளிக்காட்சியைப் பார்த்து வீடு திரும்ப எண்ணினேன். “மணி! வா, போகலாம்!” என்று மணியைக் கூப்பிட்டேன். ஆனால் பதிலுக்கு மணி குரைக்கவில்லை. திரம்பிப் பார்த்த நான் மணியைப் பார்க்கவில்லை. அப்போதுதான் மணி காணவில்லை என்பதை உணர்ந்தேன்.
ஒரு கணம் என் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஆனால் மணி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து அங்கும் இங்கும் அலைந்தேன். “மணி! மணி!” என்று தொண்டைக்கிழிய கத்தினேன். என் மனத்தில் பதற்றம் அதிகரித்தது. ஏன் நான் மணியைக் கவனிக்கவில்லை? என் பொறுப்பில் தானே அம்மா அதை விட்டார்! ஆனால் ‘பதறாத காரியம் சிதறாது’ என்று என்னுடைய ஆசிரியர் நிறைய முறை கூறியுள்ளார். அதற்கேற்ப பதறாமல் நிதானமாக யோசித்தால் மணி மீண்டும் கிடைக்கும். இவ்வாறு எண்ணிக் கொண்டே நான் பூங்காவைச் சுற்றி நடந்து மணியைத் தேடினேன்.
இருப்பினும் எவ்வளவு முறை தேடியும் மணியைக் காணவில்லை. என் மனத்தில் அச்சம் குடியேறியது. முன்பு என் தோழி, ஒரு நாய் இவ்வாறு தொலைந்தபோது உணவில்லாமல் இறந்ததைப் பற்றிக் கூறினாள். இந்த கதையைப் பற்றி நினைத்தபோது என் இதய துடிப்பு ஒரு கணம் நின்றுவிட்டதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. என் கண்கள் குளமாயின. செய்வதறியாது திகைத்து நின்றேன். அப்போது ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாரதியாரின் பாட்டு என் நினைவிற்கு வந்தது. நான் மனத்தில் உறுதி கொண்டால்தான் மணி நிச்சயமாக மீண்டும் கிடைக்கும். அப்போது வட்டாரத்தைச் சுற்றி சுவரொட்டிகள் ஒட்டினால் யாராவது மணியைப் பார்த்தால் நம்மிடம் கூறுவர் என்ற யோசனை தோன்றியது. மணி நமக்கு உறுதியாகத் திரும்பி வரும். இதைப் பற்றி எண்ணிக்கொண்டே வீடு திரும்பினேன்.
வீட்டுவாசலில் அம்மா எனக்குக் காத்துகொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் நான் தாரைத் தாரையாக அழத் தொடங்கினேன். “அம்மா, மணியைக் கா…” என்று ஆரம்பித்தபோது மணி வீட்டிலிருந்து என்னிடம் ஓட வந்தது. “மணி?” என்று ஆச்சரியமும் இன்பமும் கலந்து மணியைக் கட்டி அணைத்தேன். போன உயிர் திரும்பி வந்தது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் உடனே நடந்ததையெல்லாம் அம்மாவிடம் கூறி மன்னப்பு கேட்டேன். அம்மாவும் நடந்ததைப் புரிந்துகொண்டு நான் தவற்றை உணர்ந்ததே போதும் என்று கூறினார்.
“லொல் லொல்!” என்று மணி குரைக்கும் சத்தத்தைக் கேட்டு நான் நிகழ்காலத்திற்கு வந்தேன். அச்சம்பவத்திலிருந்து நான், என்றும் நம் பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும் மணியை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றும் உணர்ந்தேன். இனிமேலாவது மணியைக் காணாமல் போகாமல் பார்ததுக்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டேன். நல்ல வேளை அன்று மணி மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பியது. இச்சம்பவமும் இதிலிருந்து நான் கற்றுகொண்ட பாடமும் என் மனதில் அழியா வடுக்களாக ஆழம் பதிந்தது.
உன் நெருங்கிய தோழி உன் மேல் கொண்ட பொறாமையால், உன்னைவிட்டு விலகக் காரணமாக அமைந்த நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக - ZAFIRAH BINTE SABIR MOHAMED 104 - 2021
அன்று சூரியன் தனது பொன்னொளிக் கதிர்களை உலகெங்கும் பரப்பினான். பறவைகளின் 'கீச் கீச்' என்ற ஒலியைக் கேட்டு நான் எழுந்தேன். அவசர அவசரமாக எனது காலைக்கடன்களை முடித்து பள்ளிக்குப் புறப்பட்டேன். அன்றுதான், உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றனர். எனக்கு மிகவும் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. என் தோழி மாலாவிற்கும் அதே பள்ளி கிடைத்திருந்தது. நாங்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் நெருக்கமாக பழகினோம். அதே உயர்நிலை பள்ளிக்கு மாலாவும் வருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. சந்தோஷத்தில் நான் மானைப் போல துள்ளிக் குதித்துப் பள்ளிக்குச் சென்றேன். அங்கு நான் மாலாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். நானும் அவளும் ஒரே வகுப்பில் இருந்தோம். பள்ளியின் முதல் வாரம் பள்ளியைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள பல விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் போட்டிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனக்கும் மாலாவுக்கும் சிறுவயதிலிருந்தே போட்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும். நாங்கள் அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவோம். அதேபோல் இப்போட்டிகளிலும் கலந்துகொள்ள எங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.
ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. மாலாவுக்கு எப்போதும் தான் மட்டும்தான் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரு தவறான குணம். அக்குணத்தை தவிர்க்கச் சொல்லி நான் அவளிடம் பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால், அவள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. நான் அவளுக்கு மீண்டும் ஒரு முறை அவ்வாறு ஒரு குணத்தை கைவிடச் சொல்லி எடுத்துரைத்தேன். ஆனால், எனது அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது. போட்டிகளும் ஆர்வமூட்டும் நடவடிக்கைகளும் தொடங்கின. பல போட்டிகளில் மாலா வெற்றி அடைந்தாள். நானும் சில போட்டிகளில் வெற்றி அடைந்தேன். அது மாலாவுக்கு பிடிக்கவில்லை. அனைத்துப் புகழும் அவளுக்கு தான் கிடைக்க வேண்டும் என்று எண்ணினாள். அதனால், நான் சில போட்டிகளில் கலந்து கொள்ளாமல் விலகினேன். மாலாவுடைய குணத்தை மாற்றுவது மிகவும் முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன். அப்போது, ஒரு நாள் ஓட்டப்பந்தயப் போட்டி ஒன்று வந்தது. மாலாவுக்கு ஓட்டப்பந்தயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால், அவள் அதில் கலந்துகொண்டாள். எனக்கு ஓடுவது என்றாலே பிடிக்காது. அதனால், நான் அப்போட்டியிலிருந்து விலகினேன்.
மாலா அப்போட்டியில் வெற்றி அடையக் கடுமையாக உழைத்தாள். போட்டியின் நாளும் வந்தது. அனைத்து போட்டியாளர்களும் திடலில் இருந்தனர். அவர்கள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஆயத்த பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நான் மாலாவிடம், "உன்னால் முடியும்!" என்று கூச்சலிட்டேன். அவளும் தன்னம்பிக்கையுடன் இருந்தாள். போட்டி தொடங்கியது. மாலா மின்னல் வேகத்தில் ஓடினாள். அவள் வெற்றி எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தாள். அப்போது தான் இன்னொரு மாணவியும் மாலாவுக்குச் சரிக்கு சமமாக ஓடினாள். அது மாலாவுக்குப் பிடிக்கவில்லை. தான் மட்டும் தான் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணினாள். அவள் உடனே தன்னுடைய கையை நீட்டி அம்மாணவியை விழ வைத்தாள். அதைப் பார்த்த என்னால் எனது கண்களை நம்பவே முடியவில்லை. எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சிலை போல் நின்றேன். இறுதியில் மாலா தான் வெற்றி அடைந்தாள். மாலாவுக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால், அவள் குறுக்கு வழியில் வெற்றி பெற்றது சரியில்லை என்பதை நான் உணர்ந்தேன். என் மனதில் பல கேள்விகளும் எண்ணங்களும் ஓடிக்கொண்டிருந்தன. 'நான் இந்த உண்மையை எனது ஆசிரியரிடம் கூறவா? வேண்டாமா?' 'மாலா என்னுடன் உள்ள நட்பை துண்டித்துவிட்டால்?' என்ற பல கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.
இறுதியில், ஆசிரியரிடம் உண்மையைச் சொல்ல முடிவெடுத்தேன். ஏனென்றால், எச்சூழலிலும் உண்மையை மட்டும் தான் கூற வேண்டும் என்று எனது அம்மா எப்போதும் கூறுவார். ஆசிரியரிடம் நான் மாலா குறுக்கு வழியில் வெற்றி அடைந்ததைப் பற்றிக் கூறினேன். என் நெருங்கிய தோழியாக இருந்தாலும் உண்மையைக் கூறிய என்னை என் ஆசிரியர் மெச்சினார். அவர் மாலாவை அவ்வாறு செய்ததற்கு கண்டித்தார். நான் தான் அந்த உண்மையைக் கூறினேன் என்பது மாலாவுக்குத் தெரிய வந்தது. கோபத்தில் அவளுடைய முகம் கோவைப் பழம் போல் சிவந்தது. அவளுக்குக் கிடைத்த புகழ் இப்போது எனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மிகவும் பொறாமை கொண்டாள். அவளுக்குக் கிடைத்த பாராட்டுகளை, உண்மையைக் கூறி நான் அனைத்தையும் கெடுத்துவிட்டதாக எண்ணிப் பொறாமையில் என்னுடன் உள்ள நட்பைத் துண்டித்துக்கொண்டாள். என் இணைபிரியா தோழி, மாலா என்னுடன் உள்ள நட்பைத் துண்டித்துக்கொண்டதை எண்ணி சோகமடைந்தேன். என்னால் பாடங்களில் கவனம் செலுத்த இயலவில்லை. உலகமே இருண்டுவிட்டது போல இருந்தது. பீறிட்டு வரும் துக்கத்தை மென்று விழுங்கினேன். என் மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள சிரமப்பட்டேன். என் ஆசிரியர் என் அம்மாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைப் பற்றி கூறி என்னை பாராட்டினார்.
'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்'
என்ற திருக்குறளுக்கு ஏற்ப என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் என்னை மெச்சினார். நான் அவரிடம் எனது வருத்தத்தைப் பற்றி கூறினேன். அவர் என்னிடம், "நீ கவலைப்படாதே. ஒரு நாள் மாலா தான் உன் மீது பொறாமை கொண்டது தவறு என்பதை உணர்ந்து உன்னுடன் மீண்டும் பழக ஆரம்பிப்பாள்," என்று கூறினார். என் அம்மாவின் சொற்கள் எனக்கு ஆறுதலாக இருந்தது. அச்சம்பவம் என் மனத்தில் கல்லில் செதுக்கிய எழுத்துக்களைப் போல பதிந்தது.
உன் நண்பர் எப்போதும் எதிலும் பிடிவாதமாக நடந்துகொள்வார். ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அது தவறென்பதை அவருக்கு உணர்த்தி அவரிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுபற்றி விளக்கி எழுதுக - Darshana Ganesan 105 - 2021
“அவன்தான் பிடிவாதமாக எல்லாவற்றையும் ஒரே காலில் நின்று கேட்டுக்கொண்டிருக்கிறான் என்றால் நீங்களும் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு கொடுத்துக்கொண்டிருக்கிறீகள்? சிறிது புத்திமதி கூறவேண்டியதானே?” என்று எப்போதும் போல ரவியின் அம்மா ரவியின் அப்பாவை வினவினார். ரவியின் அம்மா எதிர்பார்த்தது போலவே அவர், “விடு விடு , சின்னப் பையன் தானே” என்று கூறி வேலைக்குப் புறப்பட்டார். ரவியின் அப்பா நீங்கள் நினைப்பது போல பணக்காரர் அல்ல. அவர் ஒரு சாதாரண மனிதர். மிகவும் கடினமாக வேலை செய்யும் மனிதர். அவர் நெகிழி பொருட்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்பவர். ஒரு காக்கிச் சட்டையையும் காலச்சட்டையையும் தான் அவர் எப்போதுமே அணிந்து காணப்படுவார். அதில் வேலை செய்யும் இடத்திலிருந்து கறைகள் ஏராளமாகப் படிந்து இருக்கும். ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளாமல், இருப்பதை வைத்துக்கொண்டு இது போதும் நமக்கு என்று வாழ்வார். அவருக்கு மிகவும் பிடித்த பாடல், “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போறாடும் போர்களமே,” என்றும் அது அவருடைய வாழ்கைக்கு மிகவும் பொருந்தும் என்றும் என்னிடமும் ரவியிடமும் அடிக்கடி கூறுவார். ஆனால் தன்னுடைய அப்பாவின் குணங்கள் சுத்தமாகவே இல்லாதவந்தான் ரவி.
ரவி மிகவும் பிடிவாதமாக எல்லாவற்றுக்கும் நடந்துகொள்வான். ஒரு பொருள் அவனுக்கு வேண்டும் என்றால், அது கிடைக்கும் வரை அடம்பிடிப்பான். என்னதான் இவனின் குடும்பம் வசதியில்லாத குடும்பமாக இருந்தாலும், வேண்டியவற்றை எப்படியாவது வாங்கிக்கொள்வான். என் பெயர் கதிர். ராமு என்னுடைய நெருங்கிய நண்பன். நாங்கள் மேகமும் வானமும் பொல நண்பர்கள். அவனில்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவனில்லை. எல்லா நட்பு பொல நாங்களும் சில சமயங்களில் சண்டைபோடுவோம். பெரும்பாலும் எங்களிடையே நடக்கும் சண்டைக்கு காரணம் அவனுடைய பிடிவாதத்தனம். அவன் பிடிவாதமாக நடந்துகொள்வது என்னை கடுப்பாக்கும். ஆனால் நண்பந்தானே என்கிற காரணத்தால் அமைதியாக இருப்பேன்.
ஒரு நாள், ரவியும் அவனுடைய குடும்பமும் தீபாவளிக்குத் துணி வாங்கச் செல்லும்போது, அவனுடைய கண்களில் படக்கூடாத ஒரு பொருள், அவனுடைய பார்வையை ஈர்த்தன. அது அவனை “வா, வா” என கூப்பிடுவது போல இருந்தது. அவன் உடனே தன்னுடைய அப்பவின் சட்டையை இழுத்து, “அம்மா, அப்பா, எனக்கு அந்த விளையாட்டுக் கருவி வேண்டும்!” என்று அடம்பிடித்தான். ரவியின் அப்பா அந்த பொருளின் மதிப்பைப் பார்த்தார். அவ்வளவுதான்! அவருடைய கண்கள் பிதுங்கின. நெஞ்சுவலியே வந்து விடுவது போலிருந்தது. அவருடைய மனத்திற்கு தெரியும், இதை இப்போது கண்டிப்பாக வாங்கித் தர முடியாது என்று. ஆனால், அவரால் தன்னுடைய மகனிடம் முடியாது என்று சொல்லமுடியவில்லை. “இங்குப்பாருப்பா கண்ணா! இதை நான் உன் பிறந்தநாளுக்கு வாங்கித்தரேன்!” என்று மெல்லிய குரலில் கூரினார். ரவியின் முகம் வாடியது. அவன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டான். நீண்ட நேரம் அடம்பிடித்த பிறகு, சரி! அன்று அவன் கோபமாக கூறினான். “ஆனால், நீங்கள் இதை வாங்கியே ஆகனும்!” என்று அடம்பிடித்தான். தன் மகன் இவ்வாறு நடந்துகொண்டதைப் பார்த்து, ரவியின் அம்மா அவனை கண்டித்தார். “பரவாயில்லை விடு,” அன்று ரவியின் அப்பா ரவியின் அம்மாவிடம் கூறினார். பிறகு, மூவரும் அந்த இடத்தைக் காலிச்செய்தனர்.
ரவியின் அப்பாவிற்குத் தெரியும். அவர் நீண்ட நேரம் வேலை பார்த்தால் ஒழிய ரவிக்கு விளையாட்டுக் கருவியை வாங்கித் தர இயலாது. ஆகையால் தான் பெற்ற மகனுக்காகத்தானே இவ்வளவு உழைக்கிறார், இன்னும் சிறிது கடினமாக உழைப்பதில் ஒன்றும் ஆக போவதில்லை என்று 10 மணி நேரம் பார்த்துக்கொண்டிருந்த வேலையை 12 மணினேரம் பார்க்க ஆரம்பித்தார். அவருடைய மனைவி வேண்டாம் என்று கூறியும் அவர் மறுத்து நீண்ட நேரம் வேலைக்குச் சென்றார்.
ரவியின் அம்மா ரவியிடம் இந்த விளையாட்டுக் கருவியை வாங்கினால், அவனுடைய அப்பாவுக்கு இன்னும் கஷ்டம் என்று எடுத்து கூறியும் அவன் அந்தக் கருவி வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான். அவர், ரவியின் பிடிவாத்த்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது என்று எண்ணியபடியே பெருமூச்சு விட்டார்.
ஒரு வாரம் சென்றது. இரண்டாவது வாரமும் சென்றது. மூன்று வாரங்களாக ரவியின் அப்பா தினமும் நீண்ட நேரமாக தொழிற்சாலையில் வேலை செய்தார். அன்று எதிர்பாராத விதமாக இரவு நேரத்தில் தொலைப்பேசி மணி ஒலித்தது. அதில் ஒருவர், ரவியின் அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், சீக்கிரம் கிளம்பி அங்கு வாங்கள் என்று ரவியின் அம்மாவிடம் சொன்னார். ரவியின் அம்மாவிற்கு உலகமே இருட்டியது போல இருந்தது. ரவி அதைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் ஒரு கணம் திகைத்துப் போய் சிலையாய் நின்றான்.
பிறகு இருவரும் என்ன ஆகிவிட்டதோ ஏது ஆகிவிட்டதோ என்று அறியாமல் மருத்துவமனைக்கு ஓடோடி சென்றனர். அங்கு மருத்துவர், “உங்களுடைய கனவரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம், அவர் தொழிற்சாலையில் நீண்ட நேரம் வேலைப்பார்த்ததே ஆகும். அங்கிருக்கும் கெடுதலான புகைமூட்டம் அவருடைய நுரையீறலைப் பாதித்துவிட்டது.” என்று சொன்னார். உடனே குற்ற உணர்ச்சி ரவியின் மனதைத் தாக்கியது. அவன் மட்டும் பிடிவாதமாக இல்லாவிட்டால் இதெல்லாம் நடந்திருக்காது.
“மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்”
என்று உலகநீதியில் சும்மாவா சொல்லியுள்ளார்கள். ரவி அழ ஆரம்பித்தான். அவன் தன் அப்பவிற்கு ஒன்றும் ஆகக்கூடாது என வேண்டினான். “நாம் நேசிப்பவர்கள் எல்லாரும் நம்மோடு நிலைத்துவிட்டால், நினைவின் மொழியும் பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்” என்று அவன் படித்தது ஞாபகம் வந்தது. அது போன்று ஒன்றும் ஆகக்கூடாது என அவன் வேண்டாத கடவுள் இல்லை. இனிமேல் பிடிவாதமாக இருக்கக்கூடாது என்றும் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றும் முடிவெடுத்தான்.
அப்போது மருத்துவர் வெளியே வந்து, “கவலைப்படுவது போல இப்போது ஒன்றும் இல்லை! சரிசெய்து விட்டேன். அவர் சிறிது நேரம் உறங்கட்டும். பிறகு நீங்கள் அவரிடம் பேசலாம்,” என்று தெய்வம் போல வந்து கூறிச் சென்றார். அப்போது அடைந்த மகிழ்ச்சி இதுவரை ரவி அடைந்த்ததே இல்லை.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தந்தையின் அன்பின் முன்னே!” என்ற பாடல் வரிகள் உண்மையிலையே ரவி அப்போது உணர்ந்தான். என்னதான் ரவி அடம்பிடித்தாலும் அவனின் அப்பா ரவிக்கு எல்லாவற்றையும் செய்துள்ளார். ரவி தன் வாழ்நாள் முழுவதுமே தன் தந்தக்கு நன்றிக்கடன் பட்டுள்ளான்.
Subscribe to:
Posts (Atom)
-
மொழி மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் படைத்துக்கொண்ட மொழி இல்லை என்றால், இன்றைய நாகரிக வளர்ச்சியே இல்லை. உலகின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கு...
-
நான் கடவுளிடம் கேட்க விரும்புபவை R. அஸ்வினி . உயர் நிலை 4 உயர்தமிழ். 22.4.2009 கடவுள்! இந்த நான்கு எழுத்து வார்த்தைக்குள் தான் எத்தைனை அர்த...
-
சமீபத்தில், ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் அனைத்து செயல்களைச் செய்யக்கூடிய அளவிற்கு நம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக்காலத்தைப் போல ...