Friday, September 22, 2023

தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன. கருத்துரைக்க.Aravinthan Yathuri - 205 - 2023

சமீபத்தில், ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் அனைத்து செயல்களைச் செய்யக்கூடிய அளவிற்கு நம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக்காலத்தைப் போல சிரமப்பட்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவோ மற்ற நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமது நண்பர்களையும் உறவினர்களையும் தொடர்புக்கொள்ளவோ தேவையில்லை என்பதால் நமது அன்றாட வாழ்க்கை சுலபமாகிவிட்டது. ஆனால், அதே சமயத்தில் நம்மிடம் பெரும்பாலும் குறைவான வேலைப்பளு இருப்பதால் குறைந்த சுறுசுறுப்புடன் நமது வேலைகளைச் செய்கிறோம். ஆகவே, தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாகவுள்ளது என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறேன். // கோவிட்-19 கிருமித்தொற்றின்போது அனைவரும் வெளியே சென்று உணவுகளை உணவகங்களில் வாங்கமுடியாமல் இருந்ததால், “டெலிவரூ”, “கிரப்” போன்ற உணவு விநியோக செயலிகள் மூலம் உணவுகளை வாங்க ஆரம்பித்தனர். அனைவரிடமும் அந்தச் செயலிகள் பிரபலமானதால் மக்கள் அதிகமாக அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர். வீட்டிலிருந்து வேலை செய்தவர்களுக்கும் இது நல்ல வசதியாக இருந்தது. கொவிட் 19 காலங்கள் கடந்த பின்னரும் மக்கள் இந்தச் செயலிகளை இன்னும் அதிகமாக நாடுகின்றனர் என்றே கூறலாம். இன்றைய நாட்களில் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்துவதில் உள்ள ஆர்வம் மற்றைய விடயங்களில் குறைவாகவே உள்ளது. தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகளின் பயன்பாட்டால் சோம்பேறிகளாகியவர்கள் உணவு வாங்க அருகில் உள்ள உணவுக் கடைகளுக்குக் கூடச் செல்லத் தயங்குகின்றனர் மற்றும் சமையல் செய்வதில் ஈடுபாடும் காட்டுவதில்லை. சிலர் நேரமின்மையால் இவ்வாறு செய்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அந்த வசதி பழகியதால் உணவை உணவு விநியோகம் செய்யும் செயலிகளை அணுகி வாங்குகின்றனர். இதனால், வீட்டிற்கு வெளியே நடந்து சென்று சுமார் ஐந்து நிமிடங்களில் உணவகத்திலிருந்து உணவை வாங்குவதைவிட வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே உணவை வாங்க அதிகமாக விரும்புகின்றனர். இதனால், வெளியே உணவை வாங்குவதற்கு நடந்து செல்வதிலிருந்தும் வீட்டிலே தங்களுக்குப் பிடித்த உணவைத் தாங்களே சமைப்பதிலிருந்தும் கிடைத்த உடற்பயிற்சியும், சுறுசுறுப்பும் இன்று இவர்களிடம் காணவில்லை. உணவுச் செயலிகளின் பொத்தான்களை அமுக்கியதும் சுமார் அரை மணி நேரத்தில் தங்களுக்குப் பிடித்த உணவு வீட்டு வாசலில் கிடைப்பதால் இவர்கள் சுறுசுறுப்பின்றிச் சோம்பேறிகளாக மாறுகின்றனர். // உணவு விநியோகம் மட்டுமின்றி, பல்வேறு பொருட்கள் இணையத்தில் வாங்கித் தங்கள் வீடுகளுக்கே விநியோகம் செய்தலும் கோவி-19 கிருமித்தொற்றால் பரவலானது. இரண்டு மாதங்களாக மக்கள் எந்தக் கடைக்கும் சென்று பொருட்களை வாங்கமுடியாமல் இருந்ததால், “ஷொப்பீ”, “லசாடா” போன்ற செயலிகள் அவர்களின் தேவைகளை நிறைவேற்றின. இன்றும் இதுபோன்ற செயலிகள் சிங்கப்பூரில் மக்கள் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. மக்களிடையே பிரபலமைந்துள்ளன என்றே கூறலாம். சிங்கப்பூரில் இருந்துகொண்டு மற்ற நாடுகளில் விற்கப்படும் பொருட்களையும் இந்தச் செயலிகள் மூலம் வாங்கக் கூடியதாகவுள்ளது. விரைவாகவும் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில், கணினிக்கு முன்னால் இருந்து பிடித்ததையெல்லாம் சுலபமாக வாங்குவதையும், எக்கச்சக்கமான பொருட்களை உடனடியாக பார்ப்பதையும் நிறைய மக்கள் விரும்புவதால், அவர்கள் அதிகமாக பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்லாமல் தங்களது கணினிகளையோ திறன்பேசிகளையோ தான் நாடுகின்றனர். அதனால் தேவையில்லாத பொருட்களை வாங்கும் நிலை ஏற்படுகிறது. அருகிலிருக்கும் கடைக்குச் சென்று அங்கிருக்கும் மின்விளக்கையோ திரைச்சீலைகளையோ வாங்காமல், அதற்கும் பொருள் வாங்கும் செயலிகளை நாடுகின்றனர். இதனால் இவர்கள் சோம்பேறிகளாகியது மட்டுமில்லாமல் உள்ளூர் வியாபாரங்களுக்கும் சரிவு ஏற்படுகிறது. சிறிய வேலைக்கும் செயலிகளைச் சார்ந்து வாழ்கின்றனர். // புத்தகம் வாசிப்போர் பலர் கோவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நூலகங்களுக்குச் சென்று அங்கே நேரம் செலவழித்து தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை இரவல் வாங்க முடியாமல் இருந்ததால் “லிபி” பொன்ற செயலிகளை நாடிப் புத்தகங்களை வீட்டிலிருந்தே இரவல் வாங்க நேர்ந்தது. இதனால், நூலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமும் குறைந்தது. இன்று பலர் தமது திறன்பேசிகள் மூலமாகவே தாங்கள் வாசிக்க விரும்பும் புத்தகத்தை இரவல் வாங்குகின்றனர். ஆனால், வீட்டிலிருந்தே தங்களது கருவிகளின் மூலம் புத்தகத்தை வாசிப்பது இம்மக்களுக்கு வசதியாக இருந்தாலும், அதே புத்தகத்தைக் கைகளில் பிடித்துக்கொண்டு நூலகத்தில் வாசிப்பதன் அழகை இவர்கள் மறக்க ஆரம்பிக்கின்றனர். வசதிக்காகவே நூலகங்களின் அருமையை மறந்து அதற்காக வெளியே செல்லவேண்டுமே என்ற நோக்கில் சோம்பேறிகளாகி இவர்கள் வீட்டிலேயே இருந்து புத்தகங்களை வாசிக்கின்றனர். // மேலும், நண்பருடைய வீட்டிற்குச் செல்லவோ உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லவோ பெரும்பாலானோர் நடந்து செல்கின்றனர். அல்லது பொது போக்குவரத்து எடுக்கின்றனர். ஆனால், சமீபத்தில், “க்ரேப்” போன்ற வாடகை உந்துவண்டிச் செயலிகளால், ஐந்து நிமிடங்களில் நடந்து ஓரிடத்திற்குச் செல்லாமல் அதிகமான மக்கள் தங்களது காசையும் வீணாக்கி உடற்பயிற்சி நேரத்தையும் குறைத்து வசதிக்காக வாடகை உந்துவண்டிகளையழைத்து அதில் பயணம் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றனர். நல்லக் காற்றைச் சுவாசித்து உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் நடைப்பயிற்சியில் ஈடுபடாமல், அது தங்களைச் சோர்வடையச் செய்யும் என்றெண்ணி உந்துவண்டியில் உட்கார்ந்து தங்களது பணத்தை விரமாக்குகின்றனர். உடல் வலுவையும் இழக்கின்றனர். இவ்வாறு செய்வதால் நடக்கக்கூட இவர்களுக்குச் சோர்வாக இருக்கும். அந்தளவுக்குச் சோம்பேறிகளாக மாறிவிடுவார்கள். ஆரோக்கியமான உணவு, நல்ல உடற்பயிற்சி இரண்டும், இரண்டு கண்கள் போன்றவை. இந்தத் தொழில்நுட்ப செயலிகளால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்ற பொன்மொழியையும் மறந்துவிட்டனர். // கடைசியாக, நிறைய மாணவர்கள் இன்று தமது வீட்டுப்பாடங்களுக்கும் ஒப்படைப்புகளுக்கும் “ச்சேட் ஜீபீதீ” என்ற செயலியை அணுகுகின்றனர். இதனால் அவர்களது வேலைப்பளு குறைவதோடு தமது பாடங்களைச் சுலபத்துடன் செய்கின்றனர். ஆனால், இதனால் இம்மாணவர்கள் தாங்களே சொந்தமாக யோசித்து விடையளிக்கச் சோர்வடைகின்றனர். தங்களிடம் உள்ள ஆக்கப்பூர்வமான யோசனைகளைத் திரட்டாமல் ஏற்கனவே எல்லா ஆலோசனைகளையும் கொண்ட இச்செயலிகளை நாடுகின்றனர். இதனால், இவர்களுடைய ஒப்படைப்புகள் தங்களது தனி முயற்சியில்லாமல் போய்விடுகிறது. தனித்தன்மையும் இல்லாமல் போகிறது. தேர்வுகளின்போதும் யோசித்துத் தமது சொந்த பதில்களை எழுதச் சிரமப்படுகின்றனர். ஆகவே, 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா' என்ற பொன்மொழிக்கேற்ப இன்று செய்யச் சோம்பல்படும் செயல்கள் நாளை நடக்கா.// ஆகவே, பெரும்பாலான மக்கள் தங்களின் திறன்பேசிகள், கணினிகள் முதலிய தொழில்நுட்பக் கருவிகளில் இருக்கும் செயலிகளின் மூலம், உணவை வாங்குவதற்கும், பொருட்களை வாங்குவதற்கும், புத்தகங்களை இரவல் வாங்குவதற்கும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கும், செயலியை அணுகி விடைகளைத் திரட்டுவதற்கும் செயல்படுவதால், அவர்கள் இன்னும் சோம்பேறிகளாகத்தான் மாறுகின்றனர். இச்செயலிகளில்லாமல் இவர்களால் சுறுசுறுப்புடன் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. ஆகையால், தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாகவுள்ளது என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.

No comments: