Saturday, November 13, 2021

சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவுணர்வு மிக்கவர்கள். விவாதிக்க - ஸ்ரேயா (303) 2021

ஸ்ரேயா (303) 2021 ‘அன்பிருந்தால் ஆகாததும் ஆகும்.’ இன்றைய பரபரப்பான, போட்டித்தன்மை மிகுந்த உலகத்தில், பரிவுணர்வு காண்பது அரிது. பொதுவாக, மனித இனத்தினர், தங்களது சொந்த செயலுகளில்தான் கவனம் செலுத்தி, பிற மனிதர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதில்லை; நீட்டும்பொழுது, அவர்கள் வழக்கமாக முழு ஈடுப்பாட்டுடன் கைகொடுப்பதில்லை. இது வருந்தத்தக்க நிலைதான். ஆனால், இந்நிலைக்கும் அடிமையாகாத குழு ஒன்று இருக்கின்றது: சிங்கை நாட்டின் இளையர்கள். பெற்றோரின் அரவணைப்புடனும், பள்ளி ஆசிரியர்களின் அறிவுரை மற்றும் ஆதரவுடனும், அவர்கள் தன்னலமற்ற, பரிவுணர்வுடையவர்களாகத் திகழ்கின்றனர். சக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி, முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கும் சமுதாய உறுப்பினர்களுக்கும் அன்றும் இன்றும் உதவிக் கரம் நீட்டி, தங்களது பரிவுணர்வை வெளிக்காட்டுகின்றனர்; சமூகத்தை மேன்மையடையச் செய்கின்றனர். முதலாவதாக, சிங்கப்பூர் இளையர்கள் தங்களது சக இளையர்களுக்கும் மாணவர்களுக்கும், பல்வேறு அம்சங்களிலும் பல்வேறு வகைகளிலும் உதவுகின்றனர். அவர்கள், பள்ளியின் ஏட்டுக்கல்வியென்ற அம்சத்திலும், உடல்நலம் மற்றும் மனநிலையென்ற அம்சத்திலும், வெவ்வேளு வகைகளில் கைகொடுக்கின்றனர். உதாரணமாக, வயதில உயர்ந்த மாணவர்கள், வயதில் குறைந்த மாணவர்களுக்குப் பாட ஐயங்களுக்குப் பதிலளித்து, புதுமையான கருத்துகளை அவர்களுக்கு விரிவாக விளக்கி கூறுவதும் உண்டு. குறிப்பாக, இது மாணவர்களின் இணைப்பாட நடவடிக்கை குழுக்களில், ஓய்வு நேரத்தின்போது காணலாம். அதுமட்டுமல்லாமல், இளையர்கள் ஒருவரொருவருடைய மனநிலையின் மேல் அதிக அக்கறை செலுத்துவதையும் காணலாம். பள்ளித் தேர்வுக் காலத்தின்போது, சில மாணவர்கள், குழுக்களாகச் சேர்ந்து படித்து, ஒருவரொருவருக்கு ஆதரவு அளிக்கின்றனர். வகுப்புகளிற்குள், மாணவர்கள் சிறு சிறு நொறுக்குத்தீணிகள் அல்லது மிட்டாய்களை வாங்கி, சக மாணவர்களோடு பகிர்ந்து, ஆதரவு அளிக்கின்றனர். அவர்கள், சக மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் நோக்கத்துடன் இம்முயற்சிகளை வழக்கமாக எடுக்கின்றனர். இவற்றின் மூலம், இளைஞர்கள் எப்பொழுதுமே தங்களது சக மாணவர்களின் மீது அக்கறை கொள்கின்றனர் என்பதையும், அதனால் பரிவுணர்வு மிக்கவர்கள் என்பதையும் காண முடிகின்றது. இரண்டாவதாக, இளைஞர்கள், பொதுவிடங்களில் இருக்கும் முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கும், முடிந்தவரை பரிவுணர்வை வெளிகாட்டுகின்றனர், ஆம், சில சமயங்களில், இளைஞர்கள் உதவிக் கரம் நீட்ட தயங்குகின்றனர். ஆனால், பெரும்பாலான இளைஞர்கள், ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போலவே தாமதமின்றி, வினாடியைக்கூட விரயமாக்காமல் மற்றவர்களுக்கு உதவியளிக்கின்றனர். உதாரணமாக, பல இளைஞர்கள் – குறிப்பாக இளம் வயதினர் – பொது இடங்களில் நாற்காலியில் அமரும்போது, முதியவர் அல்லது கற்ப்பணி பெண்ணைக் காணும்போது, தயக்கமின்றி தங்களது இருக்கையை விட்டுகொடுக்கின்றனர். ஓர் இடத்திற்குத் தாமதமாகச் செல்லும்போதும், அவர்கள் ஓர் அறையின் கதவை மற்றவர்களுக்குத் திறந்து வைத்து, உள்ளே வர அனுதிப்பர். முதியவர்களைக் கைப்பற்றி சாலையைக் கடக்க உதவுகின்றனர். இச்செயல்களிலிருந்து, இளைஞர்கள், தங்களது நலனில் மட்டும் அக்கறை கொள்ளாமல், மற்றவர்களைக் கருதியும் செயல்படுகின்றனர் என்பதைக் காண முடிகின்றது. ஆம், முற்காலத்தில், இச்செயல்களைக் காண்பது அரிதாக இருந்தது, எண்ணிக்கையிலும் குறைந்ததாக இருந்தது. ஆனால், காலச்சக்கரம் உருண்டோட, அதிகமான இளைஞர்கள், பொதுவிடங்களிலும் தேவைப்படும்போது கைகொடுக்கத் தொடங்குகின்றனர். பொதுவிடங்களிலும் உதவிக் கரம் நீட்ட பெருமளவு துணிவு இருக்க வேண்டும், அல்லவா? ஆகையால், இதிலிருந்து, இளைஞர்களுக்குப் பெருமளவில் பரிவுணர்வு இருக்கின்றது என்பதை அறிய முடிகிறது. மூன்றாவதாக, இளைஞர்கள் பல்வேறு வகைகளில் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கின்றனர். இதை சிறு வயது மற்றும் பதின்ம வயதினரிடம் காண முடியும் தணித்துவமான பண்பாகும். சிறு வயதிலிருந்தே, இளைஞர்கள் பள்ளியால் கட்டாயப்படுத்தப்பட்ட தொண்டூழிய நடவடிக்கைகளில் முழு மனதோடு ஈடுபடுவதனால், அவர்களது மனதில், மற்றவர் மேல் ஒரு வகையான அன்பும் அக்கறையும் மலர்கின்றன. அதனால், உயர்நிலை பள்ளியில் பயிலும்போது, பல மாணவர்கள் சொந்தமாகவே பள்ளியால் அளிக்கப்பட்ட தொண்டூழிய வாய்ப்புகளையெடுத்து, சமூகத்தை மேம்படுத்தும் வழிகளில் உதவுயாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், சிலர் தற்முயற்சியெடுத்து, சொந்த தொண்டூழிய குழுக்களையும் (SVIA) தொடங்கி, அனாதப் பிள்ளைகள், முதியவர்களுக்குச் சேவையாற்றுகின்றனர். சிலரோ, கோவிட்-19 ஏற்பட்டபோது, சொந்த தொண்டூழிய அமைப்புகளையும் தொடங்கி, பொதுமக்களையும் அவற்றில் ஈடுபட செய்யும் வகையில் தொழிலாளர்களுக்கும், அவதிப்பட்டவர்களுக்கும் சேவையாற்றினர். இவற்றின் மூலம், இளைஞர்கள் சமூகத்தை மேம்படுத்தவும், அவதி்ப்படுபவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பெருமுயற்சிகளையெடுத்து, தங்களது பரிவுணர்வைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றர். இருந்தும், சிலரோ, போட்டித்தன்மை மற்றும் விறுவிறுப்பான வாழ்க்கை முறையின் தாக்கத்தினால், இளைஞர்கள் தங்களது பள்ளி படிப்புகளில்தான் அதிக கவனம் செலுத்தி, மற்றவர்களின்மீது அக்கறை செலுத்துவதில்லை என்கின்றனர், மேலும், மற்றவர்களுக்கு உதவியளிக்கும்போது, ஒரு வகையான பயன் அவர்களுக்குப் பெற வேண்டும் என்ற சுயநலமான மனநிலையோடு செயல்படுகின்றனர் என்று கூறுவர். ஆம், சில இளையர்கள், துரதிர்ஷ்டவசமாக இம்மனநிலையோடு செயல்படுகின்றனர். இவ்வுலகத்தின் இயல்புதான் போட்டித்தன்மையும் அவசரமும் — ஆகையால், அவற்றின் இறுக்கமான பிடியைத் தவிர்ப்பது மிகவும் கஷ்டமானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்ற கருத்தாகும். ஆனால், இது சில இளைஞர்களின் நடப்புதான். பெரும்பாலான இளைஞர்கள், போட்டித்தன்மை மற்றும் பரபரப்பைப் பொருட்படுத்தாமல், மனிதநேயமுடைய மனப்போக்கோடு செயல்படுகின்றர். சில சமயங்களில், சுயநலத்திற்கு அடிமையாகிவிடுகின்றனர்; ஆனால், பெரும்பாலானோர், மற்றவர்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கின்றனர். தங்களது நேரம் பொன் போல் இருந்தாலும், மற்றவர் மேல் பரிவு செலுத்தி, அவர்களது மலர்ந்த முகங்களைக் காண்பது விலைமதிப்பற்றது என்பதை உள்வாங்கிக்கொண்டிருக்கின்றர். ஏனெனில், இளைஞர்கள் பெரும்பாலானோர், தாங்கள் முடிந்தவரை எப்பொழுதும் பரிவுடனும் அக்கறையுடனும் செயல்படுகின்றனர். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இளைஞர்கள் போட்டித்தன்மையைப் பொருட்படுத்தாமல் சக மாணவர்களுக்கு உதவியளித்து, முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்குத் துணிவோடு பொதுவிடங்களில் உதவியளித்து, சமூகத்தையும் சமூகத்தினரது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த உதவியளித்து, தங்களது மனதில் வேரூன்றியிருக்கும் பரிவுணர்வைத் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். ஆகையால், வண்ண வண்ண பூக்களைப் போல் அமையும் இளைஞர்கள், தோட்டமாக இருக்கும் சிங்கை நாட்டை அழகப்படுத்தியுள்ளனர், அதற்கு உயிரளித்துள்ளனர். ‘ஒழுக்கம் எய்துவர் மேன்மை’ என்பதகேற்ப, இளைஞர்களின் பரிவுணர்வு, நாட்டை மேம்படுத்துவதோடு, இளைஞர்களின் மனதையும் மேம்படுத்துகின்றது. தொடர்ந்து எதிர்காலத்திலும் வரும் சிங்கப்பூர் இளைஞர்கள், இன்றைய இளைஞர்களைப் போலவே பரிவணர்வு மிக்கவர்களாகத் திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவுணர்வு மிக்கவர்கள். விவாதிக்க

இஷா (304) 2021 “அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு அன்புதோல் போர்த்த உடம்பு” இக்குறளைப் பள்ளியில் படித்ததுடன் நிறுத்தாமல் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் சிங்கப்பூர் இளையர்களை எண்ணும்போது நான் அளவுகடந்த பெருமையடைகிறேன். “சிங்கப்பூர் இளையர்கள் பெரும்பாலோர் பரிவுமிக்கவர்கள்” என்ற தலைப்பை ஆதரிக்கும் வகையில் நான் இத்தலைப்பை மூன்று கோணங்களிலிருந்து ஆராயவுள்ளேன். என்ற தலைப்பை இளையர்கள் என்பவர் தொடக்கப்பள்ளியில் படிப்பவர்கள் முதல் புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள் வரை குறிப்பிடலாம். இவர்கள் வாழ்கையின் உச்சியில் மிகுந்த உற்சாகத்துடன் இருப்ப்தால் இவர்களுக்கு சமுதாயத்திற்க்கு பெரிய அளவில் பங்களிக்க முடிகிறது.பரிவு அன்பது எல்லா உயிரினங்களின் மீதும் அன்பையும் கருணையையும் செலுத்துவதைக் குறிக்கிறது. சரி நம் இளையர்கள் அவ்வாறு இந்த உன்னதமான் வழுமியத்தைக் கடைபிடிக்கிறார்கள்? பள்ளி சார்ந்த நடவடிக்கைகள், சமுதாய அளவில் சேவை, மற்றும் அன்மைய கொவ்ட்-19 சூழ்னிலையில் இளையர் அளித்த பங்கு ஆகிய மூன்று கோணங்களில் நாம் இத்தலைப்பை அலசி ஆரய்வோம். “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்ற உண்மையை உணர்ந்தே நம் பள்ளிகளில் ‘சேவை வழி விழுமியம்’ என்ற திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சமூகசேவை செய்து சமூகத்திற்கு நன்றிகடன் செலுத்துகிறார்கள். அவர்கள் முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று தங்கள் நேரத்தையும் சேவையையும் தொண்டூழியமாக அளிக்கிறார்கள். என்றோ ஆரம்பிக்கப்பட்டத் திட்டம் இன்றும் வரவேற்புடன் சிறப்புற்றுத் தொடர்கிறது என்பதைக் கேட்க சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இத்திட்டத்தின் நீடித்தத் தன்மைக்குக் காரணம், அதன் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் நம் சிங்கப்பூர் மாணவர்களே ஆவர். அவர்களின் சிறியச் செயல்கள் மற்றவர்களின் வாழ்வில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து மாணவர்கள் சேவைச் செய்கின்றனர். இவ்விளையர்களின் பரிவுணர்வு கடலலைப் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதற்கு வேறு சான்று வேண்டுமா? இளையர்கள் பள்ளி முடித்ததும் சமுதாயத்திலும் பல மாற்றங்களை வித்தியாசமான வகைகளில் உருவாக்கி வருகின்றனர். சமூக ஊடகங்களின் தாக்கம் காட்டுத்தீப் போல் பரவி இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கிறது. நம் இளையர்கள் அப்படி இதை நன்மைக்காக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் தங்கள் கணிணி சார்ந்த அறிவைப் பயன்படுத்தி பல பரிவுமிக்க முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.’இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்’ என்ற அமைப்பு முக நூலின் வழி பிரபலம் அடைந்து பல இளையர்களை ஈர்த்து வெளி நாட்டு ஊழியர்களுக்குப் பல வழிகளில் தொண்டூழியமும் உதவிகளையும் அளித்து வருகிறது. இளையர்களின் உதவியால் பல ஊழியர்களின் வாழ்வில் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுவருகிறது.இவ்வமைப்பைத் தொடங்கிய இளையர்களும், ஆதரவு தங்த இளையர்களும் மற்றவர்கள் பதிவேற்றம் செய்யும் படங்களையும் காணொலிகளையும் பார்த்து நேரத்தை வீணாக்காமல் வெளி நாட்டு ஊழியர்களின் மீது உள்ள பரிவினால் தொண்டூழியம் செய்தனர். அண்மை காலத்தில் கொவிட் கிறுமித்தொற்று இளையர்களின் பரிவை வெளிக்காட்ட மேலும் வாய்ப்பை அளித்தது. பொது இடங்களில் பாதுகாப்பு இடைவெளியை கண்காணிப்பதற்கு உதவியாளர்கள் தேவை என்று அரசாங்கம் அறிவித்தபோது பல இளையர்கள் தங்கள் சொந்த நலனையும் துச்சமாக மதித்து தொண்டூழியம் செய்ய முன்வந்தனர்.அவர்களின் பரிவுமிக்க முயற்சி நம்மிடையே தொற்றை ஓரளவு குறைக்க உதவியது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு அல்லவா? இல்லை! இந்த இளையர்கள் நல்ல பெயர் வாங்க தான் இவ்வாறு தொண்டூழியம் புரிகிறார்கள் என்று ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம் பிடிப்பவர்களிடம் ஒரு கேள்வி. யாராவது இளையர்களை வற்புறுத்தினார்களா? இல்லையே! இச்சேவையை செய்பவர்கள் தங்கள் சொந்த முயற்சி கொண்டு சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்துகிறார்கள். ‘அன்பிலார் எல்லாம் தமக்குறியர் அன்புடையார் எல்லாம் உரியர் பிறர்க்கு’ நம் சிங்கப்பூர் இளையர்கள் மற்றவர்களின் வாழ்கைத் தரத்தை எவ்வளவோ உயர்த்தியுள்ளனர்.இவ்வளவு சான்றுகள் இருந்தும் இளையர்கள் பரிவில்லாதவர்கள் என்று கூறுவது மூடத்தனம்.

குழுமப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் 'நான் மிகவும் மதித்துப் போற்றும் ஒரு மாமனிதர்' எனும் தலைப்பில் நீவீர் ஆற்றும் சொற்பொழிவு.

 ஆராதனா  (306)  2021  


“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று ஒளவை பாட்டி நமக்கு கூறியுள்ளார். வாழ்க்கையில் பலவற்றைக் கற்றுக்கொண்டு, நல்ல வேலை, நல்ல குடும்பம், போன்றவற்றை பெற்று வாழ்வதற்கும் மேல் அரிய பண்புகளைப் பெற்று மானிடராய் வாழ்வது அரிது.


 அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்! என் பெயர் ஆராதனா. நான் ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலை பள்ளியை பிரதிநிதித்து பேசுகிறேன். என் சொற்பொழிவுக்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு “நான் மிகவும் மதித்துப் போற்றும் மாமனிதர்” என்பதே ஆகும். 


சிறிய தீவாக இருந்த சிங்கப்பூர், இப்போது பல்வேறு நாடுகளைக் காட்டிலும் மிகவும் முன்னேற்றம் அடைந்து திகழும் நாடாகும். சிங்கப்பூரை ஒரு மரத்துடன் ஒப்பிட்டால், திரு லீ குவான் யூ என்ற மாமனிதர், இம்மரத்தின் வேறுகள் வேர்கள் போல். சிங்கப்பூருக்கு அளவில்லா உதவிகளை செய்து, நம் நாடு வளர ஒரு மிகப்பெரிய காரணமாக இருந்த இவரைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள என் உள்ளம் விழைகிறது. 


திரு லீ சிங்கப்பூரை இவ்வளவு உயர்த்தி இருக்கிறார் என்றால் அது சாதாரணமான விஷயம் அல்ல. இது எல்லாம் அவருடைய கடின உழைப்பால் தான். சிங்கப்பூருக்கு அதிகம் போராடியிருக்கிறார். மலேசியாவிலிருந்து பிரிந்த போது, சிங்கப்பூரால் வளர முடியாது , தனி நாடாக திகழ இயலாது என்று பலர் கூறியிருப்பார். ஆனாலும் திரு லீ அவற்றைக் கண்டுக்கொள்ளாமல், தம் வேளையில் மட்டும் முழூக் கவனத்தையும் செலுத்தினார். சிங்கப்பூர் முன்னேற பல திட்டங்களை கொண்டு வந்து மக்களின் நம்பிக்கையை பெற்று, இந்நிலைக்கு கொண்டு வர, இரவும் பகலுமாக உழைத்தார். தேர்வுக்கு கடினமாக படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவதும் நல்ல விஷயம் தான். ஆனால் ஒரு நாடையே, உலகளவில் சிறப்பாக திகழ வைக்க திரு லீ அவர்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்? 


அது மட்டுமா? அவர் விடாமுயற்சியுடனும் செயல் பட்டார். சிங்கப்பூரில் தண்ணீரோ அதிக நிலமோ இல்லை. வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகும் தண்ணீர், எண்ணெய், பலவித காய்கறிகளும் பழங்களும் கூட இறக்குமதி செய்யும் இந்நாட்டின் மீது நம்பிக்கையை இழக்காமல், முயற்சியை கைவிடாமல், விடாமுயற்சியுடன் செயல்பட்டார் திரு லீ அவர்கள். “முயற்சி திருவினையாக்கும்” என்பதைப்போலவே, திரு லீயின் முயற்சிகள் வீண்போகவில்லை. இவற்றை கற்றுக்கொண்டு, நாமும் நம் வாழ்வில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் ஆகாததும் ஆகும்! 


சிங்கப்பூரில் நிறைய கட்டடங்கள், நல்ல போக்குவரத்து சேவைகள், சுகாதாரம், நல்ல மருத்துவச் சேவைகள் போல அடுக்கிக்கொண்டே போகலாம்! எத்தனை விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் அல்லவா? திரு லீ அவர்கள் மிகவும் பரந்த கண்ணோட்டமும், ஆழமான அறிவும் பெற்றவர். அவர் முதலில் அரசியலில் சேர்ந்த அந்த இளமை வயதிலேயே, சிங்கப்பூரின் எதிர்காலத்தைப்பற்றி யோசித்தார். சிங்கப்பூர் எவ்வாறு நல்ல கல்வி, மருத்துவம், இனநல்லிணக்கம் போன்றவற்றை பெற்று திகழவேண்டும் என்று அவர் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டார். பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வரும் நாடுகளை காட்டின், ஐம்பத்தாறு வயதிலேயே சிங்கப்பூர் மிகவும் வளர்ந்து, அனைவராலும் போற்றப்படும் நாடாக திகழ்கிறது. இதன் பின்னால், திரு லீயின் ஆழமான சிந்தனைகளும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் பரந்த கண்ணோட்டமும் தான் தென்படும்.


திரு லீயை நான் மதிப்பதற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்வது அவருடைய பணிவான மனப்பான்மையே ஆகும். சிங்கப்பூரின் பிரதமராக இருந்தாலும் அவர் மிகவும் அடக்கமாக இருந்தார் எனக் கூறலாம். அவருடைய அருமை பெருமைகளை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் பணிவாக நடந்துகொண்டார். சிங்கப்பூருக்கு நான் இது செய்திருக்கிறேன், அது செய்திருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளாமல் அடக்கமாக இருந்தார். “அடக்கம் ஆயிரம் போன் தரும்” எனும் பழமொழிக்குச் சிறப்பான எடுத்துக்காட்டு, திரு லீ அவர்களே. சிங்கப்பூருக்கும் அதன் குடிமக்களுக்கும் அளவில்லா நல்ல காரியங்களைச் செய்து, எதுவும் திருப்பி எதிர்பார்க்காமல், பணிவாக இருந்தார். இவரை மாமனிதர் என்று கூறுவதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை! 


இதுபோல் அவருக்கு எத்தனையோ அரிய பண்புகள் இருக்கின்றன. ஆனால் , அனைத்தையும் விளக்கினால் மணிக்கணக்காக பேச வேண்டியதாகும். ஆனால் பலரிடம் இல்லாத ஒரு அரிய குணம் ஒன்று இவரிடம் காணப்பட்டது! அது மீளும்தன்மையே ஆகும்! பல ஆண்டுகளாக , சிங்கப்பூர் பல சவால்களை எதிர்நோக்கியது. உதாரணத்திற்க்கு, மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாக இருந்தது, தண்ணீர் பற்றாக்குறை, சார்ஸ் எனும் நோய் பரவல் என நினைத்துக்கூட பார்க்க முடியாத பல சவால்களை எதிர்நோக்கியது. இருந்தாலும், திரு லீ அவர்கள் மனந்தளராமல் நின்றார். குடிமக்களுக்கு ஆதரவளித்ததோடு, தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். பலர் அவரை நம்பாமல் இருந்தாலும், அவர் உறுதியாக நின்றார். சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு, இது ஒரு அடிப்படை காரணமாகும்! இப்படி ஒரு அரிதான குணத்தைப் பெற்ற திரு லீ அவர்களை மாமனிதர் என்று கூறாவிட்டால் வேறு என்ன சொல்வது? 


திரு லீ அவர்களை நான் மனதளவில் மதித்துப் போற்றுகிறேன். அவருடைய பணிவன்பாக இருக்கட்டும், மீளும்தன்மையாக இருக்கட்டும், அவருடைய கடின உழைப்பு, விடாமுயற்சி, ஏன், அவருடைய பரந்த கண்ணோட்டமாகக்கூட இருக்கட்டும்! இவர் அணைத்து சிங்கப்பூர் மக்களின் மனதிலும் ஒரு நீங்கா இடம்பெற்றுள்ளார் என்பது வெள்ளிடைமலை! இந்த மாமனிதரை பற்றி நினைக்கும்போது என் உள்ளம் பூரிக்கின்றது, உடல் சிலிர்க்கின்றது, கண்ணீர் துளிக்கின்றது, கரம் குவிக்கிறது! இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல என்று கூறியவாறு நான் விடைபெற்றுக்கொள்கிறேன்! நன்றி வணக்கம்!


குழுமப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் 'நான் மிகவும் மதித்துப் போற்றும் ஒரு மாமனிதர்' எனும் தலைப்பில் நீவீர் ஆற்றும் சொற்பொழிவு.

 யாழினி ஶ்ரீ அண்ணாதுரை (307) - 2021 


ஆன்றோரே, சான்றோரே, என்னைப் போன்றோரே - உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம். இந்த இனிய வேளையில் நான் உங்கள் முன் , ‘நான் மிகவும் மதித்துப் போற்றும் ஒரு மாமனிதர்' என்றத் தலைப்பில் உரையாற்றவிருக்கிறேன். 

“ உறுபசியும் ஒவாப்பிணியும் செறு பகையும் 

சேரா தியல்வது நாடு " 

என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்காகும். அதாவது பசியும், போர்பகையும் இல்லாமல் மக்களின் நல்வாழ்வைப் பொருத்தே ஒரு நாட்டின் மகிமை உள்ளது. பாதுகாப்பு என்றால் சிங்கப்பூர், சிறந்த கல்வி என்றால் சிங்கப்பூர், நல்லிணக்கம் என்றால் சிங்கப்பூர், நிலைக்குலையா அரசு என்றால் சிங்கப்பூர் என்று அடுக்கடுக்காக நம் நாடு பலவற்றில் முத்திரைப் பதித்துள்ளது. நமது தேசம் இவ்வாறு உருவாக பலரும் அரும்பாடுப்பட்டுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவரான ஒருவரே நான் மிகவும் மதித்துப் போற்றும் மாமனிதர் ஆவார். அவர் தான் சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ அவர்கள். 


லாபம் தந்த வழக்கறிஞர் தொழிலில் வேலை செய்து வந்த திரு லீ ஒரு நாள், தமது தாய்நாடான சிங்கப்பூரின் நிலையை எண்ணி வருந்தினார். அக்காலத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டு வர முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில், தாய்நாட்டைக் காப்பவன் தாயைக் காப்பவனுக்குச் சமம் என்பதற்கேற்ப திரு லீ குவான் யூ சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆனார். சிங்கப்பூர் மலேயாவுடன் சேர்ந்தால் தமது தாய்நாட்டிற்கு நன்மை விளையும் என்று எண்ணிய அவர் அவ்வாறு இரு நாடுகளைச் சேர்க்க முற்பட்டார். இம்முயற்சி தோல்வியைக் கண்டாலும், திரு லீ மனந்தளராமல் “முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன், முன்வைத்தக் காலை நான் பின்வைக்க மாட்டேன்" என்பதற்கேற்பச் சிங்கப்பூர் ஒரு வளமிக்க நாடாகத் திகழ பாடுப்பட்டார். அவர் செய்தவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். நீங்களும் கேட்டு மகிழுங்கள். 


“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”. அதிலும் பல இன மக்கள் கூடி வாழ்ந்தால் நன்மை பல கோடி என்று திரு லீ குவான் யூ நம்பினார். பல இன மக்கள் கொண்ட சிங்கப்பூரை இணைக்க அவர் பல முயற்சிகளில் ஈடுப்பட்டார். அனைவருக்கும் சம உரிமை வழங்கித் தாமும் இன நல்லிணக்கத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக விளங்கினார். குடியிருப்பு பேட்டைகளில் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழும்படிச் செய்தார். தமிழ், மலாய், சீனம் ஆகிய மூன்று மொழிகளுக்கு அங்கீகாரம் தந்தார். 


அடுத்து அவர் “இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்" என்பதிலும் பண்பட்ட அறிவு பெற்ற குடிமக்களை உருவாக்குவதிலும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். சிறு வயதிலிருந்தே சிங்கப்பூரர்களுக்கிடையே நாட்டுப்பற்று, சமூகப் பொறுப்பு, கடமை உணர்வு, நன்றியுணர்வு ஆகியப் பண்புகளைப் போதிக்கும் பாடங்களைக் கல்வித் திட்டத்தில் இழையோடச் செய்தார். அதோடு சிங்கப்பூர் கல்வித்திட்டம் உலகப் புகழ் பெற அல்லும் பகலும் உழைத்தார். 

“ மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 

காடும் உடையத் தரண் “ 

என்பது வள்ளுவரின் பொன்சொற்கள் ஆகும். அதவாது ஒரு நாட்டின் வளம் அதன் இயற்கை வளங்களின் செழிப்போடு இணைந்துள்ளது. சிங்கப்பூரில் நிலவசதி இல்லாவிட்டாலும் தம் நாட்டைக் கண்ணுக்குக் கவர்ச்சித் தரும் வகையில் பச்சைப் பசேலான நாடாக உருவாக்க திரு லீ பல முயற்சிகளை மேற்கொண்டார். மரங்களை நட்டும், பூங்காக்களையும் நீர் தேக்கங்களையும் அமைத்தார். இவர் மேற்கொண்ட முயற்சிகளால் சிங்கப்பூர் இன்றும் இயற்கையைச் சார்ந்த நகரமாகத் திகழ்கிறது. 


மேலும் திரு லீ சிங்கப்பூர் ஓர் உலகத்தரம் வாய்ந்த நாடாகத் திகழ தம் வாழ்க்கையையே அற்ப்பணித்தார் என்று கூறினால் அது மிகையாகாது. மீன்பிடிக் கிராமமாக இருந்த சிங்கப்பூரை வானை உரசும் கட்டடங்களைக் கொண்ட நாடாக வளரச் செய்தார். “சுத்தம் சுகம் தரும்” என்பதற்கேற்ப சிங்கப்பூர் தூய்மையான நாடாகத் திகழ வழி கண்டார். இவ்வாறு அவர் செய்ததால் சிங்கப்பூர் பல சுற்றுப்பயணிகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியும் அடைந்தது. அவர் மற்ற சான்றோருடன் சேர்ந்து வடிவமைத்த சுகாதார அமைச்சு இந்த கோவிட்-19 கிறுமித்தொற்றின் காலத்திலும் நமக்குப் பயன் தந்து வருகிறது. போக்குவரத்து அமைச்சை நிறுவி சிங்கப்பூரர்களாகிய நாம் பெருவிரைவுப் போக்குவரத்து ரயில் அல்லது பொதுப் பேருந்தில் பயணித்து ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாகவும் சுலபமாகவும் செல்ல வழி வகுத்தார். 


இவ்வாறு திரு லீ குவான் யூ அவர்களின் பெருமைகளைக் கூறிக் கொண்டேப் போக முடியும். ஆனால், அதற்கு ஏடுகள் பல தேவை. ஏனென்றால் அவர் செய்தது அனைத்தும் அவ்வளவு நன்மை. ஆயினும் நான் அவர் புரிந்த சாதனைகளைப் பற்றி மட்டும் நினைத்து அவரைப் போற்றவில்லை, அவரது பண்புகளும் கூட பெரிதும் போற்றத்தக்கவை.


“ அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் 

பெருமை முயற்சித் தரும் “ 

என்று தெய்வப்புலவரான வள்ளுவர் விடாமுயற்சியின் சிறப்பை எடுத்துரைக்கிறார். பலர், சிங்கப்பூர் வளராது என்று கூறியபோதும் திரு லீ குவான் யூ தம் எதிரே தோன்றிய தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு விடாமுயற்சியுடன் போராடினார். அடுத்து, வெற்றி கண்டபோதும் கூட அவர் “அடக்கம் ஆயிரம் பொன் தரும்” என்பதற்கேற்ப ஆடம்பரவாழ்க்கையையோ பொன்னோப் பொருளையோ விரும்பாமல் அடக்கத்தைக் கடைபிடித்துத் தம் வாழ்க்கையை நடத்தினார். இறுதியாக, “மன்னன் எவ்வழி, நாடும் அவ்வழி”, என்பதற்கேற்ப ஒரு நல்ல தலைவர் கொண்டிருக்க வேண்டிய அனைத்து நெறிகளையும் பின்பற்றி முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். 


“அரிது, அரிது மனிதராய் பிறத்தல் அரிது”. அதைவிட அரிது மாமனிதராய்த் திகழ்வது. சிங்கப்பூர் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறியதற்கு திரு லீ குவான் யூ அவர்கள் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. அவரது பண்புநலன்களும் அவர் பின்பற்றியவையும் மகத்தானவை என்று சொன்னால் அதுவும் மிகையாகாது. ஆஹா ! அவருக்குப் புகழ் மாலைகளைப் பொழிந்துகொண்டே போக வேண்டும் தான். இவரே நான் மிகவும் மதித்துப் போற்றும் ஒரு மாமனிதர் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைக் கொள்கிறேன். நாம் அனைவரும் அவரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அவரைப் போல் சாதனை புரிந்து மாமனிதராய்த் திகழ முயல்வோமாக என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். 


Friday, November 5, 2021

ஓர் உணவகத்திற்குச் சென்ற நீ, உன் நண்பர்களுக்காகச் சில இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களது வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தாய். அப்போது அவசரமாக வந்த வாடிக்கையாளர் ஒருவர், அவற்றுள் ஒன்றைத் தம் வசமாக்கிக்கொண்டார். அந்தச் சம்பவத்தையும் அதன்பின் நடந்தவற்றையும் பொருத்தமான வர்ணனைகளோடு விளக்கி எழுது

 

RAJADURAI YAZHINI - 2021 

என்னது? நூறு வெள்ளியா!” என்று நானும் நிலாவும் குமுதா சொன்னதை கேட்டு அப்படியே திகைத்துப் போய் நின்றோம். குமுதா பெருமிதத்துடன் தலையை ஆட்டினாள். குமுதா தன்னுடைய தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்ததால் அவளுடைய மாமா அவளுக்கு நூறு வெள்ளியைப் பரிசாக வழங்கியிருந்தார். “நுறு வெள்ளிஎன்பதைக் கேட்டபோதே எங்களுக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. “அந்த நூறு வெள்ளியை வைத்து நானே எனக்காக மட்டும் செலவிட முடியுமா  எனவே நாம் அடுத்த வாரம் என் வீட்டிற்கு அருகில் உள்ள உணவகத்திற்குச் சென்று வயிறு வெடிக்க சாப்பிட்டு வரலாம்! பின்பு நாம் கடைத்தொகுதிதிக்குச் சென்று அந்த நாளை கோலாகலமாக கொண்டாடலாம்!” என்று கூறினாள் குமுதா. அவளுடைய ஒவ்வோரு வார்த்தையும் என் செவியில் தேனாய் பாய்ந்தது. ஆனந்தத்தில் என் மனம் ஆர்ப்பரித்தது . நாங்கள் மூவரும் இந்த நல்ல செய்தியை நினைத்து கொண்டாடினோம். இலவசமாக சாப்பிடுவதோடு மனம் நிறைய கடைத்தொகுதியில் கழிப்பதா! நான் என் பிறவிப் பயனை அடைந்ததுபோல மகிழ்ச்சி என்னுள் நிரம்பியது. அந்த நாளின் வருகைக்காக நாங்கள் ஆவலாக காத்திருந்தோம்.

காலச் சக்கரம் உருண்டோடியது அந்த முக்கியமான நாளும் வந்தது. வழக்கத்திற்கு மாறாக ,நான்  சீக்கிரமாக எழுந்து என் காலைக் கடன்களை முடித்து உணவகத்திற்குச் செல்ல புறப்பட்டேன். நான் சுற்றுப்புறத்தைப் பார்த்து கொண்டே சென்றபோது அந்த நாள் மிகவும் பிரகாசமாக இருந்தது. உணவகத்திற்குச் செல்லும் வழியில் பச்சைப் பசேல் என்று இருந்த செடிகொடிகள் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. பறவைகளின் கீச் கீச் என்னும் சத்தம் என்னுடைய செவிக்கு விருந்தாக இருந்ததோடு நான் ஒரு திரைப்படத்தில் இருப்பதுபோன்ற ஒரு உணர்வை கொடுத்தது. நான் உணவகத்திற்கு சென்றடைந்தேன். உள்ளே நுழைந்ததும் குளிரான காற்று என் உடம்பை முத்தமிட்டது. அன்று வார இறுதி என்பதால் எல்லோரும் தங்களின் குடும்பத்தோடு சேர்ந்து உரையாடிக் கொண்டே சாப்பிட்டார்கள். அந்த கூட்டத்தில் என் கண்களுக்கு யாருமில்லாத இடம் ஒன்றும் தென்படவில்லை. குழந்தைகள் எப்போதும் போல சத்தம்போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி தங்களின் பெற்றோருக்கு தலைவலியைக் கொடுத்தனர். சில சிறுவர்கள் உடும்புப் பிடியாக நின்று தங்களுக்குப் பிடித்த உணவை வாங்க தங்கள் பெற்றோரிடம் அடம்பிடித்தனர். இளைஞர்கள் பலர் தங்கள் கைத்தொலைபேசியில் மூழ்கி என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். முதியவர்கள் மெதுவாக தங்கள் சாப்பாட்டை மென்று கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு காட்சியை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது! நான் அப்படியே மெய்மறந்து எவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தபோது என் கைத்தொலைபேசியிலிருந்து சத்தம் வந்தது. “மாலா! எங்களை மன்னித்துவிடு பேருந்து வருவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. அதனால் நாங்கள் சற்று தாமதமாக வருவோம். எங்களுக்கும் சேர்த்து காலியான இடங்களைப்  பார்த்துவை.” என்று குமுதா கூறினாள். நான் மட்டும் தனியாக அங்கே இருப்பதை நினைத்து வருந்தினேன்.

சற்று நேரத்தில் சில இடங்கள் காலியாகின. கண்களை கழுகைப்போல திறந்துவைத்திருந்த நான் அதை கண்டு அங்கே சிட்டாய் பறந்து உட்கார்ந்தேன். இறுதியாக இடம் கிடைத்ததே என்று எண்ணி பெருமூச்சு விட்டேன். என் நண்பர்களின் தாமதத்தை நினைத்து எனக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. அனால் குமுதா எங்களுக்கு செய்கிற ஒரு நல்ல விஷயத்தை நினைத்து நான் என்னையே தேற்றிக்கொண்டேன். மனதளவில் அவளுடைய மாமாவிற்கு நான் நன்றி கூறினேன். அந்த நாற்காலியிலேயே தூசி வர ஆரம்பித்தது அனால் என் நண்பர்களைத்தான் காணவில்லை. நேரம் போக போக எரிச்சலும் கோபமும் என் தலைக்கு ஏற  ஆரம்பித்தது. அப்போது ஒரு வாடிக்கையாளர் நான் என் நண்பர்களுக்காக வைத்திருந்த இடத்தில் வந்து உட்கார்ந்துவிட்டார். ஒரு கணம் என்ன  நடக்கிறது என்பதே எனக்குத் தெரியவில்லை.”எப்படி அவரால் இப்படி மற்றவர்களுக்காக வைத்திருந்த இடத்தில வந்து உட்கார முடியும்? அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை? இப்படி செய்வது ஒரு பண்பற்ற செயல் அல்லவா?” என்று எண்ண அலை என்னுள் முகாமிட்டது. பேச்சிழந்து இருந்த நான் அவரை கோபக்ககனலுடன் பார்த்தேன். ஆனால் அவர் கண்கள் அவருடைய தலைக்குப் பின்னால் இருந்ததுபோல என்னை கண்டுகொள்ளவில்லை. முன்பு இருந்த எரிச்சலும் கோபமும் என்னை அறியாமலேயே என் வார்த்தைகளின் வழி வெளிவந்தன.” நீங்கள் இங்கே உட்காரக்கூடாது! இது நான் என் நண்பர்களுக்குகாக பார்த்துவைத்திருக்கும் இடங்கள்!” என்று அனல்தெறிக்கும் வார்த்தைகளால் நான் கடுமையாக பேசினேன். என்னுடைய பேச்சையும் பாவனையும் கண்டு அவர் திகைத்துப்போனார். “மன்னிக்கவும் என் வேலைக்கு செல்ல தாமதமாகிவிட்டது. நான் இன்னும் பத்து நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துவிடுவேன்.” என்று பணிவுடன் கூறினார். அவருடைய பணிவு என் செவிக்கு எட்டவில்லை. அவரின் நிலையை புரிந்துகொள்வதற்கும் எனக்கு போதுமான பொறுமை அப்போது இல்லை. நான் அவர் கூறியதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினேன். “என் நண்பர்கள் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார்கள். அவர்கள் நீங்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டு நிற்கவேண்டும் என்று சொல்லுகிறீர்களா? “ என்று எரிச்சலுடன் பேசினேன். கோபம் என் கண்களையும் என் முடிவெடுக்கும் திறனையும் மறைத்தது. எங்களை சுற்றி உள்ளவர்கள் இதை கவனித்தபோது அவர்களின் முகம் சுருங்கியது. அந்த நபருக்கு அவமானமாக இருந்தது. அனால் நான் என்னுடைய உலகில் என் மனதிற்கு தோன்றியதைப் பேசினேன். ஒரு வழியாக அவர் அந்த இடத்தைவிட்டு எழுந்தார்.

அப்போது என்னுடைய நண்பர்களும் உள்ளே நுழைந்தனர். அங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தை சற்று நேரம் கண்டனர். அவர்களின் வருகையை கண்டபின் என் கோபம் சற்று கரைந்தது. அனால் அவர்கள் பேயறைந்தது போல் வாசலிலேயே நின்றனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அவர்களிடம் சென்றேன். குமுதாவின் முகம் வாடி அவள் என்னை அருவருப்புடன் பார்த்தாள். நிலா என் கண்களைக்கூடப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள். பதற்றம் என் தொண்டையை அடைத்தது. நான் என்ன தவறு செய்தேன் என்று எண்ணி குழம்பினேன். கேள்வி அம்புகளை நான் அவர்களிடம் தொடுக்க அவர்கள் ஒரு பதிலும் கூறவில்லை. அப்போது நிலாமாலா நீ அப்படி கடினமாக திட்டிய ஆடவர் குமுதாவின் மாமா.” என்றாள். என்னை அப்படியே அறைந்ததுபோல ஒரு உணர்வு. என்னுடைய தவற்றை தீர்க்க என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் திக்குமுக்காடிப்போனேன். கண்ணீர் என் கண்களை முட்ட நான் அவரிடமும் குமுதாவிடமும் மனமார மன்னிப்பு கேட்டேன். அப்போதுதான் நான் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டேன் என்று எனக்கு தெரிய வந்தது. கோபத்தை காரணமாக கொண்டு நான் அப்படி நடந்திருக்கக்கூடாது. என்னுடைய புத்தியின்மையினாலும் கோபத்தை அடக்கமுடியாததாலும் நான் குமுதாவின் மாமாவை மட்டுமல்ல அவளையும் புண்படுத்திவிட்டேன். அதனால் அமோகமாக செல்லவேண்டிய நாள் அப்படி வருத்தமாக முடிந்தது. ஆயிரம் புத்தகங்களைப் படித்து வராதவொரு படிப்பினையை அந்த அனுபவம் எனக்குக்  கற்றுக்கொடுத்தது.

ஓர் உணவகத்திற்குச் சென்ற நீ, உன் நண்பர்களுக்காகச் சில இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களது வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தாய். அப்போது அவசரமாக வந்த வாடிக்கையாளர் ஒருவர், அவற்றுள் ஒன்றைத் தம் வசமாக்கிக்கொண்டார். அந்தச் சம்பவத்தையும் அதன்பின் நடந்தவற்றையும் பொருத்தமான வர்ணனைகளோடு விளக்கி எழுது

 

RADINKA SHANMUGANATHAN   - 2021 

ரிங்! ரிங்!” என்று என் தொலைபோசி அடித்தது. அழைப்பாளரை கண்டவிடும் என் முகம் ஒரு நொடியில் மலர்ந்து. “ரதின்கா, நானும் கமலாவும் உனக்குப் பிடித்த உணவங்காடிக்குச் சென்று உணவு உண்ண போகிறோம். உனக்கு அங்குள்ள கோழி கறி மிகவும் பிடிக்கும் அல்லவா? நீ எங்களோடு சேர்ந்து சாப்பிட விரும்புகிறாயா?” என்று என் நெருங்கிய தோழி, ஓவியா மறுமுனையிலிருந்து வினவினாள். அவள் சொற்கள் என் காதில் தேன் ஊற்றுவதுபோல் இருந்தது. நான் இருமுறைகூட யோசிக்காமல் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். நாங்கள் அனைவரும் உணவங்காடியில் இருபது நிமிடங்களில் சந்திக்கவிருந்தோம். ஆனால் அந்த உணவங்காடி எப்போதும் பழத்தை மொய்க்கும் ஈக்களைப்போல் கூடமாக இருக்கும் என்பதை உணர்ந்து நான் சில நிமிடங்களுக்கு முன்பே உணவங்காடிக்குச் சென்று என் நண்பர்களுக்கு இருக்கைகளை பிடித்து வைக்க தீர்மானித்தேன்.

நான் உணவகத்திற்கு ஒட்டமும் நடையுமாகச் சென்றேன். உணவங்காடிக்குச் சென்றதும் அங்கே இருந்த உணவுப் பொருட்களின் வாசனைகம கம' என்று வீச என் நாவில் எச்சில் ஊரத் தொடங்கியது. அனைத்து கடைகளின் முன் பாம்பைப்போல் நீளமான வரிசைகள் இருந்தது நான் உணவங்காடியின் ஓரத்தில் மூன்று இருக்கைகள் காலியாக இருப்பதைக் கண்ணுற்று விரைந்தேன். நான் ஒரு மேசையில் அமர்ந்து மற்ற இரண்டு இடங்களில் ஒருடிசு' தாளைவைத்தேன். என் நன்பர்கள் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்ததால் நான் என் கைத்தொலைபோசியை பயன்படுத்த தொடங்கினேன். அப்போது என் தோளை யாரோ தட்டுவதை உணர்ந்து திரும்பினேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. என் முன் என்னுடைய தொடக்கப்பள்ளி தோழி, கல்யாணி நின்றுகொண்டிருந்தாள். ஐந்து வருடங்களிக்கு முன் நானும் கல்யாணியும் நகமும் சதையும் போன்ற இனைபிறியா தோழிகளாக இருந்தோம். ஆனால் தொடக்கப்பள்ளிக்கு பிறகு நாங்கள் இருவரும் வெவ்வேறு உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றதாலும், கல்யாணி வீடு மாறிச் சென்றதாலும் நாங்கள் அதற்குபின் தொடர்புகொள்ளவோ சந்திக்கவோ இல்லை. நாங்கள் இருவரும் அளவளாவத் தொடங்கினோம்.

அப்போது ஓவியாவும் கமலாவும் எங்களை அருகுவதைக் கூட கவனிக்கவில்லை. “ரதின்கா!” என்று அவர்கள் என்னை அமைத்தபிறகுதான் நான் அவர்களை கவனித்தோம். நானும் கல்யாணியும் தொலைபோசி என்னை மாற்றிக்கொண்டபின் கல்யாணி விடைபெற்றுக்கொண்டாள். நான் கமலாவிடமும் ஓவியாவிடமும் என் எதிர்பாராத சந்திப்பைப் பற்றிக் கூறி அவர்களுக்கு இருக்கைகளை கண்டுபிடுத்துவிட்டேன் என்ற நற்செய்தியை பகிர்ந்துகொண்டேன். ஆனால் அதை செவியுற்றதும் அவர்கள் இருவரும் மகிழ்ச்சி அடையாமல் ஒருவரை யொருவர் குழப்பத்தோடு பார்த்தார்கள். நான் திரும்பி பார்த்தபோது நான் கண்ட காட்சி என்னைதிடுக்கிட்டன

மூன்று இருக்கைகளில் ஒரு ஆடவர் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் என் முகம் தக்காளி பழத்தைப்போல் சிவந்தது. நான் எந்த சொல்லையும் வாயால் பேச இயலவில்லை. வார்த்தைகள் முட்டிமோத நான் எரிமலையைப்போல் வெடித்து, “ஐயா, உங்களுக்கு கண்கோலாறு ஏதுவும் உள்ளதா? அள்ளது என்டிசு' தாளை கண்டும் அதை பொருட்டடுத்தாமல் இந்த இருக்கையில் அமர்ந்து விட்டீர்களா? நான் பதின்னைந்து நிமிடங்களுக்கு முன்பே உணவங்காடிக்கு வந்து இவ்விடங்களை என் நண்பர்களுக்கு ஒதுக்கிவைக்க வேண்டியிருந்தது என்று தெரியுமா?” என்று அவரை திட்டத்தொடங்கினேன். இக்காட்சியைக் கண்டு கமலாவும் ஓவியாவும் அதிர்ந்து போய்விட்டனர். உணவங்காடியில் இருந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் தன்  உடலை என் வசப்படுத்திக்கொண்டு நான் எழுப்பிய சத்தத்தினால் என்னை எரிச்சலோடு பார்த்தார்கள். அந்த ஆடவர் செய்வதரியாது வாயைப் பிளந்தவாறு இருந்தார்.  அப்போதுதான் நான் மேசையில் வைத்தடிசு' தாள் மின்விசிறியிலிருந்து வந்த காற்றினால் பறந்து தரையில் விழுந்துவிட்டது என்பதையும் அவர் உடல் குறையுள்ளோர் என்பதையும் அவர் கூடல் குறையுள்ளோர் என்பதையும் நான் உணர்ந்தேன்.

நான் அந்த ஆடவரை கடிந்துகொண்டு திட்டினாலும், அவர் நிதாரனமாகவும் எரிச்சலடையாமலும், “ என்னை மன்னித்துவிடு, உன்டிசு தாள்' விழுந்துவிட்டதால் இந்த இருக்கையை யாரும் பயன்படுத்தவதில்லை என்று எண்ணி அதில் அமேர்ந்தேன். அதுமட்டுமில்லாமல் நான் வேலைக்கு செல்ல இன்று சிறிது தாமதமாகிவிட்டதால் நான் அவசர அவசரமாக உணவை வாங்கி உன்னிடம் இந்த இருக்கையை பயன்படுத்துகிறாயா என்பதை கேப்காமல் அதை பயன்படுத்திவிட்டேன். அதற்கு என்னை மன்னித்துக்கொள். ஆனால் என்னுடைய காரணத்தை அறிவதற்கு முன் என் மீது சினங்கொண்டதும் உன்னுடன் வயதில் பெரியவரை கடுமையான சொற்களை பயன்படுத்தி ஏசியதும் தவறான செயலாகும். இப்பழக்கத்தை சிறுவயதிலேயே மாற்றிக்கொள்வது சிறப்பாக இருக்கும்" என்று மன்னிப்பு கேட்டு அறிவுரையும் கூறினார்.

அதை செவியுற்றதும் என் முகம் காற்றுபோன பலுனைப்போல் ஆனது. நான் அனைவருக்கும்முன் வெட்கி தலைகுணியும் நிலை ஏற்பட்டது. நான் உடனடியாக அந்த ஆடவரிடம் என் மன்னிப்பைக்கூறி வெட்கத்தால் கமலாவுடனும் ஓவியாவுடனும் உணவங்காடியைவிட்டு வெளியேறினேன். அப்போது கமலா என்னிடம்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு"

என்ற திருக்குறளை படித்து என்ன பயன். அதை கற்பதோடு மட்டுமில்லாமல் அவ்வாறு வாழ்க்கை நடத்துவதும் மிகவும் அவசியம். இனிமேல் எல்லா சூழ்நிலைகளிலும் கோபட்பட்டு பேசுவதற்கு முன் சிந்திப்பதை பழக்கமாக்கிக்கொள்என்று கூறினாள். ஓவியாவும் அதை ஆமோதித்தாள். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்ற தொடர் எத்தனை உண்மை என்பதை அன்றுதான் நான் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். நான் கமலா மற்றும் ஓவியாவிடம் இன்று நேர்ந்த சமவத்திற்காக மன்னிப்பு கூறி இனிபேசுவதற்கு சிந்தித்து செயல்படுவேன் என்று உறுதி பூண்டேன்.

ஓர் உணவகத்திற்குச் சென்ற நீ, உன் நண்பர்களுக்காகச் சில இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களது வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தாய். அப்போது அவசரமாக வந்த வாடிக்கையாளர் ஒருவர், அவற்றுள் ஒன்றைத் தம் வசமாக்கிக்கொண்டார். அந்தச் சம்பவத்தையும் அதன்பின் நடந்தவற்றையும் பொருத்தமான வர்ணனைகளோடு விளக்கி எழுது

 CHEZHIAN NANDHANA - 2021

எனக்குப் பசி வயிற்றை கிள்ளுகிறது! நம் தேர்வுகள் அனைத்தையும் முடித்து விட்டோம். ஒரு உணவகத்திற்குச் சென்று சாப்பிடலாம்!” என்று நான் என் மூன்று தோழிகளான , கலா , ராதா மற்றும் ரதியிடம் கூறினேன். அவர்களும் உடனே என்னுடைய யோசனையை ஆமோதித்தனர். நாங்கள் அனைவரும் அன்று தான் எல்லா தேர்வுகளையும் முடித்து இருந்ததால் உணவகத்திற்கு சென்று சாப்பிட மிகவும் ஆர்வமாகவும் ஆவலாகவும் இருந்தோம்.

எங்களின் பள்ளி அருகில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு உணவகத்திற்கு நானும் என் தோழிகளும் சென்றோம். ஆனால் அந்த உணவங்காடியில் கூட்டம் அலை மோதியது. எந்த திசையில் திரும்பினாலும் மக்கள் தேனீக்களை போல பரபரப்பாக உணவு தட்டுகளை தூக்கி கொண்டு அங்கும் இங்கும் இருந்தனர். “மாலதி, உணவகம் இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே! நாம் வேறு இடத்திற்கு செல்வோமா?” என்று என் தோழி கலா என்னை வினவினாள். ஆனால் அந்த உணவங்காடியில் இருந்த அற்புத பிரியாணியின் வாசனை என்னை பிடித்துக்கொண்டு, “போகவேண்டாம்!” என்று கூறியது போலவே எனக்கு தோன்றியது. “வேண்டாம் கலா, நான் நாம் அமர ஒரு இடத்தை தேடுகிறேன். நீங்கள் அனைவரும் சென்று உணவை வாங்கி வாருங்கள்.” என்று ஆடம் பிடித்தேன். அவர்களும் அதிக பசியில் இருந்ததால் நான் கூறிய யோசனையை மறுக்கவில்லை . அப்போது நான்கு பேர் அமரும் படி ஒரு காலியான இடத்தை பார்த்த நான் ஓட்டமும் நடையுமாக அந்த காலியான இடத்தை நோக்கி ஓடினேன். நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து மற்ற மூன்று நாற்காலியிலும் திசு தாள்களை வைத்து அந்த இடத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டேன், பிறகு என் கைத்தொலைபேசியை பயன்படுத்த தொடங்கினேன்.

அப்போது ஒரு முதியவர் அவசர அவசரமாக உணவகத்திற்குள் நுழைந்தார். அவருடைய நெற்றியில் வியர்வை முத்துக்கள் வழிந்தன. சுற்றும் முற்றும் அமர இடத்தை தேடிய அவரின் கண்கள் நான் என் நண்பர்களுக்க்காக ஒதுக்கி வைத்த காலியான இடத்தின் மீது விழுந்தது. சற்றும் தாமதிக்காமல் அந்த காலியான இடத்திற்கு விரைந்து, நான் வைத்து இருந்த திசு தாளை தள்ளி விட்டு அங்கு அமர்ந்து தன் கைத்தொலைபேசியில் யாரிடமோ பேசத் தொடங்கினர். எனக்கு கோபத்தில் ரத்தம் கொதித்தது. நான் சிரமப்பட்டு தேடி பிடத்து வாய்த்த இந்த இடத்தை இந்த முதியவர் அப்பிடியே திருடி விட்டார் என்ற கோபம் என் கண்களை மறைத்தது. எரிச்சலும் கோபமும் என்னுள் சூறாவளியாக சுழன்றது. என்னுடைய நண்பர்கள் முன்பே வேறு இடத்திற்கு செல்லலாம் என்று கூறியும் நான் தந் இந்த உணவகத்திலேயே உண்ணலாம் என்று வற்புறுத்தினேன்.  ஆனால் இப்போது அவர்களுக்கு அமர இடம் கிடைக்கவில்லையென்றால் என் மீது தான்  கோபப்படுவார்கள் என்று நான் அறிந்தேன். நான் வைத்து இருந்த திசு தாளையும் அவர் தள்ளியது எனக்கு அதிக கோபத்தை உண்டாக்கியது. உடனே நான் எழுந்து, “உங்களுக்கு சற்றும் அறிவு இல்லையா? நான் என் நண்பர்களுக்காக வைத்து இருந்த இடத்தில் இருந்த திசு தலை தள்ளிவிட்டு என் இடத்தை திருடி வீட்டர்கள். உடனடியாக இங்கிருந்து எழுந்து செல்லுங்கள்என்று கண்களால் சுட்டெரிப்பது போல் அந்த முதியவரை முறைத்து பார்த்து கத்தினேன். உடனே அந்த முதியவரின் முகம் தக்காளியை போல் சிவந்தது. அவர் சுற்றும் முற்றும் மக்கள் அவரை பார்த்ததை கண்டு தலைகுனிந்து நின்றார். “என்னை மன்னித்து விடு சிறுமி... நான் அவசரத்தில் இந்த திசு தாளை பார்க்கவில்லை..." என்று திக்கி திணறி மெதுவாக கூறி எழுந்தார். நான் கோபத்தில் பதில் கூறாமல் அவரை முறைத்து பார்த்தேன். அப்போது தான் என் தோழிகளும் உணவுத்தட்டுகளை தூக்கிக்கொண்டு அந்த இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் கண்களில் கேள்விகளுடன் என்னையும் அந்த முதியவரையும் மாறி மாறி பார்த்தார்கள். அப்போது தீடீரெண்டு,  நிறுத்து! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் தந்தையை பார்த்து கத்துகிறாய்!” என்று ஒரு ஆத்திரம் நிறைந்த குரல் உணவகத்தின் நுழைவாயிலிலிருந்து கேட்டது. நான் அதிர்ச்சியில் உடனே திரும்பி பார்த்தேன். அங்கு கண்கள் கோவைப்பழம் போல் சிவந்த ஒரு பெண்மணியும் அவர் பக்கத்தில் தள்ளுவண்டியில் ஒரு சிறுவனும் இருந்தான். அந்த பெண்மணி என்னை நோக்கி வந்து, “நானும் என் மகனும் மருத்துவமனையிலிருந்து வருகிறோம். என் மகன் விழுந்து முட்டியில் ஒரு முறிவு இருப்பதால் அவனால் நடக்க முடியாது. தள்ளுவண்டியில் தான் இருக்க முடியும். நங்கள் இருவரும் காலையிலிருந்து சாப்பிடால் இருப்பதால் என் தந்தை நங்கள் அமர அவசர அவசரமாக ஒரு இடத்தை தேடி இருக்கிறார். அவர் ஒரு முதியவர் என்று கூட மதிக்காமல் அவரை பார்த்து கத்தி இருக்கும் உன்னை நினைத்தால் அருவெறுப்பாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இது போல் திசு தால் வைத்து இடம் பிடிப்பது சரியே இல்லை!” என்று அந்தப் பெண்மணி எடுத்தெறிந்து கத்தினார்.

அப்போது தான் அந்த சூழ்நிலையே எனக்கு புரிந்தது. தன்னுடைய மகளுக்கும் நடக்க முடியாத பேரனுக்கும் அமர இடம் தேடிய அவசரத்தில் இவர் திசு தாளை பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவசரமாக சிறப்பு தேவைகள் உள்ள வாடிக்கையாளர்களும் உணவகத்திற்கு வருவார்கள் என்று அவர்களின் நிலைமையை பற்றி சற்றும் சிந்திக்காமல் நான் மூடத்தனமாக திசு தாளை வைத்து அமர இடம் பிடித்து இருந்தேன். 

வெட்கத்தில் தலைகுனிவதை தவிர வேறு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் தவறு எனக்கு தெள்ள தெளிவாக புரிந்தது. ஒரு சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ளாமல் ஆத்திரத்தை தாண்டவம் ஆட விட்டதால் வந்த விளைவுகளை தெள்ள தெளிவாக கண்டேன். “என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது பெரும் குற்றம் ஆகும். சிந்திக்காமல் இப்படி கத்திவிட்டேன்என்று கண்களில் கண்ணீர் மழுக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்டேன். அந்த பெண்மணியிடமும் மன்னிப்பு  கேட்டுக்கொண்டேன். ஆனால் அந்த முதியவரோ என்னை வெறுக்காமல் புன்னகை பூத்த முகத்தோடு, “பரவாயில்லை சிறுமி அனைவருக்கும் கோபம் வருவது மனித இயல்பு தான். ஆனால் ஒரு சூழ்நிலையை நன்கு ஆராய்ந்து நீ ஆத்திரத்தை ஒழித்து விட்டு சிந்தித்து நடந்துகொள்ள வேண்டும். மேலும் இது போன்று திசு தாளை வைத்து இடத்தை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விடு,” என்று கூறினார். நானும் இவர் கூறியதை முழுமையாக ஒப்புக்கொண்டு என்னை மன்னித்ததற்கு நன்றி கூறினேன். நானும் என் தோழிகளும் அதற்கு மேலும் அந்த உணவகத்தில் இருக்க வேண்டாம் என்று சாப்பிடாமல் உடனே கிளம்பிவிட்டோம்.

அன்று ஒரு கசப்பான சம்பவம்  நிகழ்ந்து இருந்தாலும் நான் அதிலிருந்து ஒரு பெரும் பாடத்தை கற்றுக்கொண்டேன்.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுஎன்ற பழமொழிக்கு ஏற்ப நான்  கோபத்தில் சற்றும் சிந்திக்காமல் செயல்பட்டது  எனக்கு புரிந்தது. மேலும் மற்றவர்களின் நிலையை பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கற்றக்கொண்டேன். அந்த சம்பவம் என் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

 

 

 

 

 

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...