Srutika Sanjaykumar - Year 3 - 2025
என் மாமாவின் கடையில் அன்று அமைதி
நிலவியது. பணமே இல்லாத பணப்பதிவேட்டின் பின்னால் மாமா தொலைபேசியைப் பார்த்தவாறே
உட்கார்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி ஆறாக ஓடியது.
அழுது அழுது அவர் கண்கள் சிவந்து இருந்தன. மாமாவின் நிலையைப் பார்த்து, என் உள்ளம் நொந்தது. நம்பிக்கை
என்பது கண்ணாடி போன்றது. ஒரு முறை அதை உடைத்துவிட்டால், சரி செய்தாலும், வடுக்கள் என்றைக்கும் மறையாது. நான் செய்த தவறு
சமூகத்தில் என் மாமா கடினமாக உழைத்து பெற்றிருந்த நற்பெயரைச் சிதைத்தபோது, இதைக் கற்றுக்கொண்டேன். கண்கலங்கிய
என் மாமாவைப் பார்த்தவாறே, என்
எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன.
“வா மலர், உன் மாமாவின் கடைக்குச் செல்லலாம்!” என்று அம்மா
அழைத்ததும், நான் என்
மெத்தையிலிருந்து ஆனந்தத்தில் குதித்தேன். என் மாமாவின் மீது எனக்கு அளவில்லாத
அன்பு இருந்தது. தினந்தோறும் அவருடைய கடைக்குச் சென்று நான் உதவிக்கரம் நீட்டுவேன்.
அன்றைக்கும் அப்படி தான். என் முகத்தில் புன்னகை பூத்தவாறு என் மாமாவின் சிறிய
உணவு கடைக்குச் சென்றேன். “மாமா!” என்று நான் கூறி, மாமாவை அனணைத்துக் கொண்டேன். நேரம் சென்றதே
எனக்குத் தெரியவில்லை. என் மாமாவின் கடையிலிருந்த பல உணவுப் பொருட்களைச் சரியாக,
ஒழுங்கான முறையில் அடுக்க உதவினேன்.
வியர்வை முத்துகள் என் நெற்றியிலிருந்து வழிந்தன. வேலை அனைத்தும் முடிந்தவுடன்,
நான் என் தொலைபேசியில் ஒரு
புகைப்படத்தை எடுத்து, “மாமாவின்
கடையில் வேலை முடிந்தது!” என்ற தலைப்புடன் இணைய தளங்களில் பதிவேற்றினேன். பின்னர்
மாமாவிடம், “புறப்படுகிறேன்!”
என்று கூறி, அம்மாவுடன்
வீட்டிற்குச் சென்றேன். ஆனால், நான்
இவ்வாறு செய்தது மாமாவின் நன்மதிப்பைப் பாதித்துவிடும் என்பதை நான் அறியவில்லை.
மறுநாள் காலை இருட்டாக இருந்தது.
பலத்த காற்றுடன் கனத்த மழையும் இனணந்தது. கார்மேகங்கள் வானத்தை சூழ்ந்தன. நான் என்
மெத்தையிலிருந்து மெதுவாக எழுந்து, என்
தொலைபேசியை எடுத்தேன். மலர்ந்திருந்த என் முகம் உடனே வாடியது. என் கண்கள் அகல
விரிந்தன. நான் பதிவேற்றிய புகப்படம் ஆயிரக்கணக்கான வெறுப்புக் கருத்துக்களைப்
பெற்றிருந்தது. “நான் இந்தக் கடையிலா உணவைச் சாப்பிட்டேன்?” , “ஏமாற்றம்!”, “இப்படிப்பட்ட பொருட்களை விற்பது தவறு!” என்று பல
கருத்துக்களை வாசிக்க என் கண்கள் அங்கும் இங்கும் ஓடின. அப்போது மாமா என்
தொலைபேசியில் அழைத்தார். “இப்படி நீ செய்வாய் என்று நான் நினைத்துப்பார்க்கவே
இல்லை மலர். என் கடைக்கு இனி என்ன நடக்குமோ…” என்று கவலையுடன் கூறியவாறே
தொலைபேசியை வைத்தார். அன்று நாள் முழுவதும் மாமாவின் கடைக்கு யாரும் வரவில்லை.
மேசைகளும் நாற்காலிகளும் அசையாமல் இருந்தன. என் மாமாவின் கடையைத் திட்டிய பல
பதிவுகளை நான் இணையத் தளங்களில் பார்த்தேன். கடையைத் தாண்டி நடப்பவர்கள் அதைச்
சுட்டிக்காட்டி, மும்முரமாகப்
பேசினர். ஆனால், யாரும்
உள்ளே வரவில்லை. நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. குழப்பதில் என் தலை
சுற்றியது. நான் பதிவேற்றிய புகைப்படத்தை உற்றுப் பார்த்தேன். சில
நிமிடங்களுக்குப் பிறகு தான் நான் செய்த தவறு எனக்குப் புரிந்து விட்டது. என்
கண்கள் அகல விரிந்தன. நான் செய்த தவறு என்னால் நம்பவே முடியவில்லை. நான் என்ன தவறு
செய்தேன் என்று தெரியுமா?
புகைப்படத்தை உற்றுப்
பார்த்தபோதுதான் என் உருவத்தின் பின்னால் காலாவதியான உணவுப் பொருட்கள் இருந்ததைக்
கவனித்தேன். ஆனால், இந்த
உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தத்தான் மாமா ஒரு மேசையில் வைத்திருந்தார். இதை
அறியாத இணைய பயணர்கள் என் மாமாவின் கடைக்குச் செல்வதையே நிறுத்திவிட்டனர்.
வழக்கமான வாடிக்கையாளர்கள் கடையைத் தவிர்த்தனர். அக்கம் பக்கத்திலிருந்த பலர்
கடையின் தரம் எப்படி குறைந்துவிட்டது என்று பேசினர். கடையில் தூய்மைக்கும்
தரத்திற்கும் பெயர் பெற்ற என் மாமா வேதனையில் தவித்தார். நான் செய்த தவற்றைச் சரி
செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, மாமாவின் கடைக்கு ஓடினேன்.
“இப்பொழுது நான் என்ன செய்வேன் மலர்?”
என்று மாமா கவலையுடன் கேட்டது என்னை
நிகழ்காலத்திற்குச் சுண்டியிழுத்தது. “என்னை மன்னித்து விடுங்கள் மாமா. நான் தவறு
செய்துவிட்டேன். ஆனால், அதைச்
சரி செய்ய நான் முயற்சி செய்கிறேன் மாமா…” என்று நான் மன்னிப்பு கோரியதற்கு என்
மாமா கவலையுடன் தலையசைத்தார். என் மாமா அனலில் இட்ட புழுவைப்போல்
துடித்துக்கொண்டிருந்தது என் தவறால் தான். உடனே, நான் பதிவேற்றிய புகைப்படத்தை நீக்கினேன்.
பின்னர் என் தவற்றை ஒப்புக்கொண்டு, என்
புகைப்படத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் அப்புறப்படுத்த வைத்திருந்தவை என்பதைத்
தெளிவுபடுத்தி, இணையத்தில்
பதிவேற்றினேன். அதுமட்டுமின்றி, என்
மாமாவின் அன்றாட வழக்கத்தில், அவர்
எவ்வாறு கடையைச் சுத்தம் செய்கிறார் என்றும் காலாவதி தேதிகளைச் சரிபார்ப்பதும்
ஒவ்வொரு வாடிக்கையாளருடன் அவர் எவ்வாறு பணிவுடன் பழகினார் என்றும் ஒரு காணொளியை
உருவாக்கி, இணையத்தில்
பதிவேற்றினேன்.
மறுநாள் காலையில் ஆவலுடன் என்
தொலைபேசியை எடுத்தேன். மக்கள் நான் கூறிய உண்மையை நம்புவார்களா? அல்லது அலட்சியப்படுத்துவார்களா?
என் மனம் படபடவென்று அடித்தது.
நடுநடுங்கும் கைகளுடன் தொலைபேசியைத் திறந்தேன். என் கண்களை என்னால் நம்பவே
முடியவில்லை. என்ன ஆச்சரியம்! இணையத்தில் இருந்த அனைவரும் நான் செய்த தவற்றைப்
புரிந்து கொண்டு, என்னை
மன்னித்துவிட்டனர். பலர் என் நேர்மையைப் பாராட்டினர். “நல்ல வேளை! கடைக்குச்
செல்லாமல் இருந்தது எனக்குக் கவலையாக இருந்தது.” போன்ற பல கருத்துகள் இருந்தன. என்
முகத்தில் புன்னகை பூத்தது. மாமாவின் கடையில் மக்கள் கூட்டம் மீண்டும் அலைமோதியது.
வியாபாரமும் செழித்தது. என் மாமா? முகத்தில்
அப்போது தான் புன்னகை பூத்து, “அடுத்தமுறை,
சரிபார்த்துவிட்டு, புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்று
மலர்! ஆனால், உன்
தவற்றை உணர்ந்து, ஏற்பட்ட
பாதிப்புகளைப் போக்க முயற்சிகளை மேற்கொண்டது நன்று!” என்று மாமா கூறினார்.
அன்றிலிருந்து, நன்மதிப்பு வளர பல வருடங்கள்
எடுக்கும் என்றாலும், அதை ஒரு
நொடியிலேயே சேதப்படுத்த முடியும் என்று கற்றுக்கொண்டேன். நான் அறியாது செய்த
தவறினால், என்
மாமாவின் நன்மதிப்பே பாதிக்கப்பட்டது. அன்று நடந்த மறக்க முடியாத சம்பவம், இணையத்தில் பதிவேற்றுவதற்கு முன்பு
சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது.
- முற்றும்
-
No comments:
Post a Comment