Tuesday, July 8, 2025

‘பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.

 

 

KARUPPAIYA BARANI NIVEDHAA 

Year 4- 405 - 2025 



சிங்கை நாடு!

 எந்தன் வீடு!

என்ற பாடல்வரிகளோடு நான் என் உரையைத் தொடங்குகிறேன். மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர் பிரதமர்  திரு லாவ்ரன்ஸ் வாங் முதலிய அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தையும் தேசியதின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! 

இப்போட்டியில் பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சரி, நான் இழுத்தடிக்கமல் என் தலைப்பைப்பற்றி விவரிக்கிறேன். சிங்கப்பூர், நம் நாடு, இல்லம், உறைவிடம், பள்ளி, என்ற எத்தனை பெயர் கொண்டு அழைத்தாலும் போதாது. உலக வரரைபடத்தில் கண்ணுக்கே தெரியாத சிறு புள்ளியாக இருந்தாலும், கல்வி, மருத்துவம், வணிகம் முதலிய பல்வேறு தொழில்களில் அதிவேகத்தில் முன்னேறுகிறது நம் சிங்கப்பூர். இப்படிப்பட்ட நாட்டின் குடிமக்களாக இருக்க நாம் தினமும் பெருமை கொள்கிறோம், தலை நிமிர்ந்து நடக்கிறோம். ஆனால், சிஙப்பூரை நிம்மதி மிகுந்த வெற்றிகரமான தேசமாக வைத்துக்கொள்வதில் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பங்குண்டு. அதன் ஒரு முக்கிய கூறே சமூக ஒற்றுமையும் நல்லிணக்கமும். இவற்றைக் கடைப்பிடித்து வாழ்வது நம் அனைவரின் தலையாய கடமையாகும். என்னைப் போன்ற மாணவர்களுக்கும்கூட இதில் முக்கியப் பங்குள்ளது. ஆம், நமக்கும் ஒரு மிகப்பெரிய பங்குள்ளது, சரிதானே நண்பர்களே? இப்பங்கைப்பற்றி நான் இவ்வுரையில் மேலும் விளக்குகுகிறேன்!

 

சின்ன சின்ன பிள்ளைகளை நம்பி,

இந்த நாடே இருக்குது தம்பி!

சின்னஞ்சிறு கைகளை நம்பி,

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி!

என்ற பாடல்வரியை நான் பலமுறை கேள்வியுற்றுள்ளேன். சிறுவயதில் கேட்டபோது, அவற்றின்  உண்மையான மகத்துவம் எனக்குப் புரியவில்லை, ஆனால், நான் வளர வளர இவ்வரிகளில் உள்ள உண்மையை நான் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினேன். இக்காலத்து இளையர்களும் பிள்ளைகளுமேதான், நாளைய சமுதாய தலைவர்களாகவும் மாறுகிறார்கள். அதனால்தான், மாணவர்களாகிய நாம், பள்ளிப்பருவத்திலேயே  இன நல்லிணக்கத்தைப் பற்றியும் பிற இனக் கல்லாச்சாரங்களைப்பற்றியும் நன்கு அறிந்து புரிந்துகொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள நம் சீன, மலாய், தமிழ் முதலிய அனைத்து இன நண்பர்களையும் பிரித்துப் பார்க்காமல், ஒரே தராசில் வைத்து வேறுபாடில்லாமல் நட்பு பாராட்ட வேண்டும். 

சிறுவயதில் நம் மனதில் இவ்வெண்ணங்கள் வளர்ந்துவிட்டால், நாம் வளர வளர இதே  நல்லெண்ணத்தோடும் பாகுபாடின்மையோடும் எல்லாரோடும் பழகுவோம்.தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைஎன்று கூறுவர், அதுபோல நாமும் இந்த நல்ல வழக்கத்தைச் சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தால், நம் இறுதிக்காலம் வரை இன நல்லிணக்கத்திற்கு நம்மால் முடிந்த பங்கை ஆற்ற இயலும். நம்மில் ஒருவர்கூட முன்வந்து, இன வேறுபாடுகளை எதிர்த்தாலே போதும், அது நம் சமுதாயத்தையே மாற்றியமைக்கும்.

இரண்டாவதாக, மாணவர்களாகிய நமக்கு இக்காலத்தில் கண்டிப்பாக தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறன் கற்பித்து வளர்க்கப்பட்டிருக்கும். எனக்குத் தெரியும், நீங்கள் அனைவரும் என்ன யோசிக்கிறீர்கள் என்று. தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறனிற்கும், சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருத்தலில் மாணவரின் பங்கிற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று தானே யோசிக்கிறீர்கள்? நான் கூறுகிறேன், கேளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியடந்த இவ்வுலகில், நொடிக்கு நொடி நமக்குத் தகவல்கள் வருகின்றன. ஆனால், அவற்றில் எவை பொய் எவை உண்மை என்பதை நம்மில் பலர் ஆராயத் தவறுகிறோம். அதிலும் சிலர் ஆராயாமலே பல செய்திகளைப் பரப்புகிறார்கள். இதனால், தகவல்கள் மாறுபட்டு, மக்கிளிடையே பொய்யான எண்ணத்தை உருவாக்குகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறு நடப்பது மிகவும் அபாயமான ஒன்றாகும். ஒரு இனத்தைப்பற்றி தவறான, பொய்யான செய்தி ஒன்று வெளிவந்து, அதை அனைவரும் நம்பிவிட்டால், அவர்கள் மனதில் இவ்வினத்தைப்பற்றிய கெட்ட அபிப்பிராயம் ஏற்பட்டுவிடும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் எண்ணங்களும் நிலைப்பாடுகளும்தான், இறுதியில் இனவெறியாகவும் இனவெறுப்பாகவும் வெடிக்கின்றன. ஆனால், நமக்கோ, பொய்யான செய்தியையும் உண்மையான செய்தியையும் வேறுபடுத்த கற்பிக்கப்பட்டுள்ளது. நாம் தவறான தகவல்களின் வலையில் சிக்கிக்கொள்ளாமல், அவ்வாறு பரவும் தவறான தகவல்களைப்பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தலாம். ஓர் இனத்தை அவமானப்படுத்தும் எண்ணத்தோடு பரப்பப்படும் ஏதேனும் ஒரு பொய்யான செய்தியை நாம் கண்டால், அதைப்பற்றி நம் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகிய அனைவரிடமும் கூறி, அதைப் பரப்ப வேண்டாம் என்று கூறலாம். இது ஒரு சிறிய செயலாக தெரிந்தாலும், “சிறு துளி, பெரு வெள்ளம்என்ற பழமொழிக்கேற்ப, நாம் ஒவ்வொருவரும் இச்சிறிய செயலைச் செய்தால், அது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இறுதியாக, மாணவர்களாகிய நாம் அனைவருக்கும் ஒரு குரல் உள்ளது, நீதி மனப்பாண்மை உள்ளது. பள்ளியில் ஒவ்வொரு நாளும் நாம் நியாயத்தைக் கடைப்பிடிப்பது பற்றியும், தவறு நடப்பதைப் பார்த்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்பது பற்றியும்  கற்கிறோம். அது கற்றலோடு  மட்டும் நின்றுவிடாமல், நம் வாழ்வில் இடம்பெற வேண்டும். நம் முன் யாரோ தன் மற்ற இன நண்பனைக் குறைத்துப்  பேசுவதையோ இனரீதியாக அவமானப்படுத்துவதையோ நாம் கண்டால், அதை எதிர்த்து நின்று துணிச்சலாகக் கேள்வி கேட்க வேண்டும்; நடக்கும் தவறைத் தடுக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நான் தவறு செய்யாமல் இருந்தால் மட்டும் போதும்; தவற்றைத் தட்டிக்கேட்பது என் கடமையல்ல என்று எண்ணுவோர் பலருண்டு. ஆனால், அது மிகத்தவறான எண்ணப்போக்கு. கண்ணெதிரே நடக்கும் அநீதியைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். மாணவர்களாகிய நாமும் பள்ளி, கடைத்தொகுதி, உணவகம் என்று பார்க்காமல், எங்கு இனரீதியாக தவறு நேர்ந்தாலும் அதைத் தட்டிக்கேட்க வேண்டும்.

சரி, இவ்வுரையில், மற்ற இனத்தவரை மதித்து நடப்பதைச் சிறு வயதிலிருந்தே பழக்கமாக்குவது, இனந்தொடர்பாக வரும் பொய்யான செய்திகளை முடக்குவது, இனத்தவறுகளைத் தட்டிக்கேட்பது ஆகியவை இன மற்றும் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க மாணவர் செய்யும் பங்கு என்று பகிர்ந்துகொண்டுள்ளேன். இதுவரை என் உரையைக் கேட்ட அனைவருக்கும், நான் மனதார நன்றி நல்கி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!

                                                      ****





'பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.

 

Lithra Ramamoorthy -  Year 4 - 408 - 2025 

இனிய மாணவர்களே; வருங்கால தலைவர்களே!  மற்றுமுள்ள பார்வையாளர்களே! உங்களஉங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்களைத் தெரிவித்து எனது சொற்பொழிவைத் தொடங்க விரும்புகிறேன். இப்போது, நான் உங்கள் அனைவரையுமே சற்றுச் சிந்திக்க வைக்கும் விதத்தில் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். உங்களில் எத்தனை பேரின் பெற்றோர்மலாய் தோழிகளை வைத்துக்கொள்ளாதே,” அல்லது, “சீனக்காரர்கள் இப்படித் தான்,” அல்லது, “இந்தியர்களுடன் பழகாதே,” போன்ற கருத்துகளைக் கூறிக் கேட்டிருக்கிறீர்கள்? இது போன்ற கருத்துகள் இப்பொழுது சிறியதாகத் தெரியும்; “வீட்டிற்குள் பேசுவதுதானே? அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பலர் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற சிறிய சிறிய கருத்துகள் சிறு துளி பெருவெள்ளமாய்ச் சேர்ந்து, நமது சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் சூழலை எழுப்புவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்தச் சிற்றுரையின் மூலம், நமது நாட்டிற்கு வருங்கால தலைவர்களாக விளங்கப்போகிற மாணவர்களாகிய உங்களிடம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவர்களின் பங்கு பற்றி விளக்கப் போகிறேன்.

முதலாவதாக, “மாணவர்களாகிய நாம் எதற்காகப்  பங்காற்ற வேண்டும்? அதற்குத்தான்  அரசாங்கம் இருக்கிறதே,” என்ற கேள்வி இந்நேரம் உங்களில் பலரது மனங்களில் எழுந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்குப் பதிலளிக்க, மானவர்களாகிய நாங்கள் தான் போன தலைமுறைகளின் தவறான எண்ணங்களை உடைத்து, வரும் தலைமுறைகளுக்குச் சிறந்த முன்னோடிகளாக விளங்கவேண்டும். அதனுடைய முதல் படி, நமது வீட்டிற்குள்ளே ஆரம்பமாகுகிறது. மற்ற இனத்தவரிடம் கோபமாகவோ எரிச்சலுடனோ நடந்துகொள்ளும் பெரும்பாலான இளையர்கள் உண்மையில் அதுபோன்ற கருத்துகளைக் கொள்வதில்லை. பெற்றோர் அல்லது மூத்த உறவினர்கள்கள் தான் அதுபோன்ற தவறான கருத்துகளை அவர்களது மனங்களில் பதியும் சூழலை உருவாக்குவர். இதனைத் தடுத்து நிறுத்துவது, மாணவர்களாகிய நமது தலையாய கடமையாக விளங்கவேண்டும். வீட்டினுள் மற்ற இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளைப் பேசும்போது, அதனைச் சுட்டிக்காட்டி, வேரோடு அறுக்க வேண்டும். அதன் மூலம், இது போன்ற தவறான கருத்துகளைப் பரப்புவதை நிறுத்தலாம். சில நேரம், நாமே மற்ற இனத்தவரைத் தவறாக பேசுகிறோம்  என்று உணரவே மாட்டோம். ஆனால், அவை நம் அன்றாட கலந்துரையாடல்களில் இலைமறை காய்போல் ஒளிந்திருந்தும், அவற்றைச் சுட்டிக்காட்டி, கண்டிப்பதுதான் சமூக ஒற்றுமைக்குப் பங்காற்ற நமக்கு வழிவகுக்கும். 

இரண்டாவதாக, தவறான கருத்துகளை ஒழிப்பது மட்டும் போதாது; புதிய நல்லக் கருத்துகளைப் பரப்பவேண்டும். அடுத்த படியாக, வீட்டுக்குள் மட்டுமின்றி, வெளியுலகத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மீது ஆர்வம் கொள்ளவேண்டும். மற்ற இனத்தவரிடம் போய் பேசி, பழகி, அவர்களின் கலாச்சாரம் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! அப்போது, அவர்கள் மீது இருந்த உங்களது தவறான அபிப்பிராயங்கள் எவ்வளவு வேகமாக களைபிடுங்கப்படும் என்று நீங்களே பார்ப்பீர்கள். பெரும்பாலான தவறான கருத்துகள்; புண்படுத்தும் வார்த்தைகள் ஏதோ ஒரு அறியாமையிலிருந்துதான் எழுகின்றன. அந்த அறியாமையைக் கோபமாகக் காட்டாமல் ஆர்வமாகக் காட்டப் பழகுங்கள்!உணவு வாசனை மிகவும் அதிகமாக இருக்கிறது, எனக்குப் பிடிக்கவில்லை,” என்று நினைக்காமல், “இவ்வுணவு வகையில் எவற்றைச் சேர்த்திருக்கிறீர்கள்? நான் சுவைத்துப் பார்க்கலாமா?” என்று கேட்டுப் பழகுங்கள்! இதன் மூலம், ஒருவரைப் பற்றி இன்னொருவர் ஆர்வம் கொண்டு, கலாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமுதாயத்தை உருவாக்கலாம். 

கடைசியாக, “நான் அடுத்த படியாக பங்காற்ற விரும்புகிறேன்! எவ்வழிகள் உள்ளன?” என்று உங்களில் பலரிடம் ஆர்வம் தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். முதலில், உங்கள் பள்ளிகளிலே சமூக ஒற்றுமையைப் பாதுகாப்பதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பள்ளியில் நண்பர்களிடம் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வழிகளைப் பகிர்ந்துகொள்வதோடு, பிறர் மற்ற இனத்தவர்மீது தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும்போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் புதிய நல்ல கருத்துகளை எடுத்துரைக்கலாம். இதன் மூலம், அவர்கள் தவற்றை உணர்ந்து, தமது தவறான கருத்துகளை விட்டுவிடுவார்கள். மேலும், தமது இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளால் புண்பட்டு துடுப்பில்லாமல் நீரில் தத்தளிக்கும் ஒருவரிடம் கைகொடுக்கலாம். இதுபோன்ற செயல்கள் சிறியதாகத் தெரியும். ஆனால், அவை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கலாம். அனைவரும் இதுபோன்ற சிறிய படியை முன்வைத்தால் போதும், நம் சமுதாயம் மேலும் ஒற்றுமையாகத் திகழும்.  மாணவர்களுள் சிலர் சமூக ஊடகங்களில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அதுபோன்றவர்கள் சமூக ஊடகங்களில் இன நல்லிணக்கத்தை உண்டாக்கும் தகவல்களைப் பகிர்வதன் மூலம், மற்ற மாணவர்களுக்கு இத்தகவல்கள் விரைவாகப் போய் சேரும்; விழிப்புணர்வை உருவாக்கலாம்.

சுருங்கக்கூறின், மாணவர்களாகிய நாம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையை நிலைத்திருக்க செய்வதில் பங்காற்ற பல வழிகள் உள்ளன. வீட்டிலிருந்து ஆரம்பித்து, பள்ளியில் தொடர்ந்து, சமுதாய அளவிற்கு கூட விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் நிறைந்திருக்கிறது.ஊருடன் ஒத்து வாழ்என்ற ஔவையின் எளிய, அழகிய பொன்மொழியை மனதில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால், நமது சமூகம் விதவிதமான அழகிய பூக்களைக் கொண்ட பூந்தோட்டத்தைப் போல் திகழும். என் சிற்றுரையை இதுகாறும் செவிமடுத்ததற்கு என் அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்து, பணிவுடன் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

                                              *****


Monday, June 23, 2025

நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது. இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?

பாண்டியன் மல்லிகா ஶ்ரீ - 405 - 2025 

மகிழ்ச்சி என்பது இயற்கை, மனிதர்களுக்கு அளித்த பரிசாகும். நாம் நமக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடும்போதோ, பெற்றோர்களுடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்கும்போதோ மகிழ்ச்சியில் இதயம் ஊஞ்சலாடும். மகிழ்ச்சியைப் பெறுவதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன.

மகிழ்ச்சி என்ற உணர்வு ஒரு பொருளால்  வரலாம், விலங்கால்  வரலாம் அல்லது ஒரு மனிதனால் கூட  வரலாம். அம்மகிழ்ச்சி வெவ்வேறு மனிதனுக்கும் வேறுபட்டதாக இருக்கும். ஆனால், இக்காலத்தில், பெரும்பாலான  மக்கள் தங்களது கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அக்கைத்தொலைபேசியில் இருக்கும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு நிறுவனங்கள்ஒவ்வொரு மாதமும் புதிதாக வெளியிடும் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். 'shein', 'lululemon' போன்ற உடைகள் விற்கும் கடைகள் ‘Instagram', 'Tiktok’ போன்ற இணைய வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. 

மேலும், இக்காலத்தினர்  அந்நிறுவனங்கள், வெளியிடும் பொருட்களை உடனுக்குடன் வாங்கி மற்றவர்களிடம் காட்டுவதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகிறார்கள். மற்றவர்கள் அப்பொருட்களைப் பார்த்து ஆச்சரியம் அடையும்போது அப்பொருட்களை வாங்கியவருக்குப் பாலில் விழுந்த பழத்தைப் போல் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நிறுவனங்கள் வெளியிடும் புதிய புதிய பொருட்களை வாங்குவதன் மூலம் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சி பெறுகிறாரா? இதற்காகவா இயற்கையாகவே மனிதனுக்குள் மகிழ்ச்சி என்ற சிறப்பான உணர்வு உள்ளது? ஆகையால், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது என்பது எனது ஆணித்தரமான கருத்தாகும். 

முதலாவதாக, குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் அன்பார்ந்த நேரத்தைச் செலவிடுவது. அன்பு என்ற உணர்வு நம் அனைவரிடமுமே உள்ளது. நாம் நம் குடும்பத்தினரிடம் அல்லது நண்பர்களிடம் அதிக அன்பை வெளிக்காட்டுகிறோம். குடும்பம் இல்லாமல் நம்மால் யாராலும் வாழ இயலாது.

" அன்பிற்கு உண்டோ அடைகுந்தாழ் ஆர்வலர்

   பூசல் தரும் புன்கணீர்” 

என்ற திருகுறளுக்கேற்ப, ஒருவர் தம்மிடம் உள்ள அன்பை அடக்கி வைக்க நினைத்தாலும், தம் குடும்பத்தினர் வேதனையில் இருக்கும்போது அன்பு என்ற உணர்வு வழியும். நாம் நம் குடும்பத்தினருடன் பூங்காவிற்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, அல்லது வெளியூருக்கு  சென்று நேரத்தை கழிக்கும் போது நமக்கு ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படும். இல்லையென்றால், நாம் ஒரு பிரச்சனையை  எதிர்க்கொள்ளும்போது நமது குடும்பத்தினர் நமக்கு ஊன்றுகோலாக இருப்பதும் நம்மிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி மகிழ்ச்சி அடைய வைக்கும். மேலும், நாம் நம் குடும்பத்துடன் விழாக்கள் அல்லது பண்டிகைகளைக் கொண்டாடும்போது ஒரு தனிக் குடும்ப உணர்வு ஏற்படும். அவ்வுணர்வே குடும்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும். இதனால், குடும்பத்துடன் அதிகளவு நேரத்தைச்  செலவிடுவது ஒரு தனித்துவமான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

அடுத்ததாக, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுலது. பள்ளிப் பருவத்திலிருந்தே வேலை செய்யும் பருவம் வரை ஒரு மனிதனுக்கு நண்பர்கள் இருப்பார்கள். நண்பர்கள் என்பவர்கள் நாமே  உருவாக்கிக்கொள்ளும் குடும்பமாகும். நாம் நம் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள முடியாத கவலைகளையும் தகவல்களையும் நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். நண்பர்கள் நாம் ஒரு வெற்றியை அடையும்போது நம்மை மேலும் ஊக்குவிப்பார்கள். அதைக் கேட்பதால் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களுடன் புதிய புதிய வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தைச்  செலவிடுவதிலும் ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. இதனால், நண்பர்களுடன் அதிகளவு நேரத்தைச் செலவிடுவது ஒரு அற்புதமான ஆனந்தத்தை அளிக்கும். 

அடுத்ததாக, நன்னெறிகளை வளர்த்து, தொண்டூழியம் புரிவது.

"காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின்  மாணப் பெரிது"  

 

என்ற குறளுக்கேற்ப, நாம் செய்யும் தொண்டூழியச் சேவை. சிறிதளவில் இருந்தாலும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சக்தியைப் பெற்றுள்ளது. நாம் வேலை முடித்த பின்போ பள்ளி விடுமுறைக்காலங்களிலோ நமது நேரத்தைத் திட்டமிட்டுச் செயல்பட்டுத் தொண்டூழிய வேலையில் ஈடுபடவேண்டும். நாம் தொண்டூழியம் புரிவதால், நாம் உதவி செய்யும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்படும்.சமூகத்தில் நமக்கு  உதவுவதற்காக மக்கள் தயாராக இருக்கின்றனர், " என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். வயதானவர்களுடன் அல்லது பிள்ளைகளுடன் நேரத்தைச்  செலவிடுவது அவர்களுக்கும் இனிய அனுபவமாக இருக்கும், நாமும் நமது சமுகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஒருவருக்கு நாம் உதவி செய்யும் பொழுது அவரது முகத்தில் தெரியும் பிரகாசத்தைப்  பார்த்தாலே போதும், ஒரு அளவுக்கு மீறி மகிழ்ச்சி மழை கொட்டும். இதனால், தொண்டூழியம் செய்வதாலும் ஒருவர் மகிழ்ச்சி அடைவார் என்று  உறுதியாகக் கருதுகிறேன்.

ஆனால், சிலர், குடும்பங்களுடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்கோ  தொண்டூழியம் புரிவதற்கோ அதிக நேரம் இல்லாத  காரணத்தினாலும் கைத்தொலைப்பேசியிலேயே வாங்கக்கூடிய புதிய புதிய பொருட்களால் ஈர்க்கப்படுகின்றனர் என்றும் அப்பொருட்களை வாங்குவதிலேயே அதிகளவு மகிழ்ச்சி இருக்கிறது என்றும் கருதுகின்றனர்.

அக்கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனென்றால், இக்காலத்தில் வேலைப்பளுவால் பலரால் தங்களது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட முடிவதில்லை. அதற்கு மேல் தொண்டூழியம் புரிவதற்கும் அதிக ஈடுபாடில்லை. இதனால், பலர் ஒய்வு நேரங்களில் கைத்தொலைபேசியையே பயன்படுத்தி புதிய புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். 

ஆனால், மனிதர்களுடன் இருக்கும் உறவுகளை விட இந்நிறுவனங்கள் தயாரிக்கின்ற பொருட்கள் உயர்ந்ததா? மற்ற மனிதர்களுடன் வளர்த்துக்கொள்ளும் உறவை விட ஒரு பொருள் உயர்ந்தது அல்ல. நாம் வாழ்க்கையில் முன்னேறியதற்கான காரணமாகத்  திகழும் நம் குரும்பத்தினருடன் பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கவேண்டும், நமது வாழ்க்கைப்  பயணத்தில் நம்முடன் பயணித்த நண்பர்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். முக்கியமாக, இச்சமூகத்திற்கு நாம் திரும்பி உதவி புரிவதற்கும் நாம் நம் நேரத்தை ஒதுக்கவேண்டும். இம்மூன்றைச் செய்தாலே, நமக்கு ஏற்படும்

மனநிறைவும் மகிழ்ச்சியும் மேலானதாக இருக்கும். இதனால்,

               "ஞாலம் கருதினும் கைக்கூடும் காலம்

               கருதி யிடத்தாற் செயின் "

 

என்பதற்கேற்ப நமது நேரத்தைத் தகுந்த முறையில் திட்டமிட்டுத்  தகுந்த காலத்தில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரம் செலவிடுவது, தொண்டூழியம் புரிவது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலமும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

இறுதியாக, நிறுவனங்கள் விற்கும் புதிய புதிய பொருட்களை வாங்கிக் குவிப்பது ஆடம்பர வாழ்க்கையாகும். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமையாகும். நாம் மாதந்தோறும் பணத்தைச்  செலவழித்துக்கொண்டே இருந்தால், இறுதியில், கடன்களைப்  பெற வேண்டியிருக்கும். இதனால் என்ன மகிழ்ச்சி ஏற்படுகிறது? ஆனந்தம் ஏற்பட்டலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, என்பதை நினைவில் கொண்டு புதியபுதிய பொருட்களை வாங்காதது சிறப்பானதாகும்.

இக்கட்டுரையில், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிக் சேர்ப்பதால்  ஒருவர் மகிழ்ச்சியைப் பெற இயலாதென்றும் குடும்பத்துடன், நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்டும் தொண்டூழியும் புரிவதும் ஒரு தனித்துவமான மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது என்பதை விளக்கினேன். மகிழ்ச்சி புதிய பொருட்களை வாங்குவதால் மட்டும் ஏற்படாது. மகிழ்ச்சியைல் பணம் கொடுத்து வாங்க முடியாது, உறவுகளால் வளர்க்க முடியும்.

                               ***************

எல்லாத்துறைகளிலும், சிறப்பாகச் செய்யும் நாட்டில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடைவதில்லை. கருத்துரைக்க.


பாண்டியன் மல்லிகா ஶ்ரீ - 405 - 2025 

எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், அமெரிக்க, ஜப்பான், பின்லாந்து, சிங்கப்பூர் போன்ற பற்பல நாடுகள் அடங்கும். இந்நாடுகள், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்வதால், அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைகிறார்களா? முதலில், மனநிறைவு எப்படி நம் வயிறு நிரம்பியவுடன் போதும் என்று தோன்றுகிறதோ, அவ்வாறு மனம் கிடைத்ததை வைத்து நிறைவு அடைவது ஆகும். ஆனால், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், போட்டித்தன்மை, விலைவாசி உயர்வு, அதிகரித்த எதிர்பார்ப்புகள், மனஅழுத்தும் போன்ற காரணங்களால் அந்நாடுகளில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடைவதில்லை என்பது என் ஆணித்தரமான கருத்தாகும். இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாட்டில் வாழும் மக்கள் எளிதில் மனநிறைவு அடையாததன் காரணங்களை விளக்குகிறேன்.

முதலாவதாக, போட்டித்எண்மை அதிகரிப்பு. எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் நாடுகளில், எடுத்துக்காட்டாக, தொழில் நுட்பம் அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அசுரவளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொள்ள இயலாதவர்களால், போட்டித்தன்மை மிகுந்த உலகில் முன்னேற இயலாது. இம்மாதிரியான போட்டித்தன்மையால், குறைந்த வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதோடு, வேலை செய்பவர்களும் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால், வேலை வாய்ப்புகளைத் தேடும் நபர்களும் வேலை வாய்ப்பை நழுவவிடாமல் கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் நபர்களும் போட்டித்தன்மையால் மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர்.

உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில், எல்லாத்துறைகளிலும் சிறப்பாகச் செய்யும் ஒரு நாடாக திகழும் சிங்கப்பூர், போட்டித்தன்மைத் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பெற்றதாக 'தமிழ் முரசு குறிப்பிட்டது. மேலும், சிங்கப்பூரில், மன அழுத்த சதவீதம் 2021 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றும், 87 சதவீதம் சிங்கப்பூரர்கள் மன அழுத்தத்தை உணர்ந்ததாக

தெரிவித்துள்ளனர் என்று 'CNA' தெரிவித்துள்ளது. இதனால், சிங்கப்பூரில் கல்வித்துறை சிறந்து விளங்குவதால், அனைத்து மாணவர்களுக்கும் போதுமான கற்றல் பாடங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், அனைத்து மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, கடினமாக உழைத்து கற்றுக்கொள்கிறார்கள். சிங்கப்பூர் மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சிபெறாமல் இருந்தால், மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். 

‘NTU’ வெளியிட்ட தகவலின்படி, 86 சதவீதம் சிங்கப்பூர் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கல்வித்துறையில் அல்லது எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளில் போட்டித்தன்மை அதிகரிப்பால் அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைவதில்லை. பொருளாதார உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஒரு நாடு எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படுவதால், அதனுடைய பொருளாதாரமும் உயரும். அந்நாட்டில் பொருளாதாரம் அதிகரிப்பால், விலைவாசியும் உயருகிறது. விலைவாசி உயர்ந்தாலும், மக்களது சம்பளம் அதிகமாகாமல் இருப்பதால், மக்கள் பணப்பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கையின் தினசரி தேவைகள் படிப்படியாக உயர்கின்ற நிலையில், பணப்பற்றாக்குறை ஏற்படுவதால், மக்கள் மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, மருத்துவத்திலும் சிறந்து விளங்கும் நாடாகத் திகழும் சிங்கப்பூரில், மருத்துவ சேவைகளின் செலவுகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருக்கின்றன. மருத்துவ சேவைகளின் தரம் உயர்ந்ததாக இருப்பதால், கட்டணங்களும் அதிகரிக்கின்றன. இதனால், மக்கள் மருத்துவச் செலவுகளைக் கண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாட்டில் வாழும் மக்கள், விலைவாசி உயர்வால், மனநிறைவு அடைவதில்லை.

மூன்றாவதாக, அதிகரிக்கும் எதிர்ப்பார்ப்புகள். எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடுகளில், பெரும்பாலான  சேவைகளும் வசதிகளும் சிறந்த தரத்தில் இருக்கும். இவையெல்லாம் மந்திரத்தினால் வருவதில்லை, அந்நாட்டில் உள்ள உழைப்பாளர்கள் கடினமாக உழைத்து நாட்டின்

பொருளாதாரத்தை உயர்த்தியும், அரசாங்கத்தின் நல்ல அணுகுமுறைகளாலும் திட்டங்களாலும் உருவாக்கப்படுகின்றன. எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல் படுகின்ற நாடாக உலகளவில்  தோன்றுவது அந்நாட்டின் மக்களுக்குப் பெருமையாக இருப்பதோடு மற்ற நாடுகளுக்கும் அந்நாடு ஒரு முன்மாதிரியாகத் திகழும். எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடு என்ற முத்திரையை ஒரு நாடு அடையும்போது, அதைப் பல வருடங்களுக்கு தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களும் அரசாங்கமும் ஆசைப்படும். இதனால், இம்முத்திரையை நிலைக்க வைக்க, அந்நாட்டு மக்கள் மேலும் தங்களது. வேலைகளில் சிறந்து செயல்பட்டு, மேலும் கடினமாக உழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இம்மாதிரியான எதிர்பார்ப்புகளால், எல்லாத்துறைகளிலும்  சிறந்து செயல்படும் நாட்டில் வாழும் மக்கள் மனநிறைவு அடைவதில்லை.

"மனநிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம்

உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே 

தேடிக்கொள்ளும் வறுமை

 

என்று சாக்ரடீஸ் கூறியதுபோல, மனிதர்களாகிய நாம், நம்மிடம் இருப்பதை வைத்து எந்நேரமும் மகிழ்ச்சியாகவோ மனநிறைவாகவோ இருந்ததில்லை. நாம் எப்பொழுதும் முன்னேறப் பார்க்கிறோம். இதனால், நம்மிடம் இருக்கும் செல்வத்தை நாம் பொருட்படுத்தாமல், மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டும், நம்மை நாமே மாற்றிக்கொள்கிறோம். 

இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் இருக்கின்ற மக்கள், தங்களது நிலையின் மதிப்பை அறியாமல் நன்றியற்றவராக இருக்கின்றனர். எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படாத நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையை ஒப்பிடும்போது, எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்களின் நிலை ஓரளவிற்கு மேம்பட்டு இருக்கும். ஆனால், இதை அந்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாததாலும், அந்நாடு வழங்கும் வசதிகளையும் சேவைகளையும் பொருட்படுத்தாததாலும், அந்நாட்டு மக்கள் மனநிறைவு அடைவதில்லை. தங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து அவரவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலே, அவர்கள் எப்பொழுதும் மனநிறைவாக இருப்பார்கள். இதனால், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள், மனிதனின் ஆசைப்படும் குணத்தால் மனநிறைவு அடைவதில்லை.

இக்கட்டுரையில், எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள் மனநிறைவு அடையாததற்கான  காரணங்களைப் பற்றி என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். சுருக்கமாக, அதிகரிக்கும் போட்டித்தன்மையினால் ஏற்படும் மன அழுத்தம், பொருளாதார உயர்வால் விளையும் விலைவாசி உயர்வு, 'எல்லாத்துறைகளிலும் சிறந்து செயல்படும் நாடு' என்ற எதிர்ப்பார்ப்பைத் தக்கவைப்பது மற்றும் மனிதனின் ஆசைப்படும் குணம் ஆகிய காரணங்களால் எல்லாத்துறைகளிலும்,சிறந்து செயல்படும் நாடுகளில் வாழும் மக்கள் மனநிறைவு அடைவதில்லை, என்ற எனது ஆணத்தரமான கருத்தை இக்கட்டுரையில் முன்வைத்துள்ளேன். 

****************


Saturday, June 21, 2025

நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது. இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?

 

    

LAKSHMI KANTHAN SRIVIKA

         Class 405 - 2025 

    மகிழ்ச்சி, அப்படியென்றால் என்ன? மகிழ்ச்சி என்பது பல பாகங்களைக் கொண்ட, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறாக அர்த்தமளிக்கும், வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்ச்சியாகும். யாருக்க்கு எது மகிழ்ச்சியளுக்கும் என்பது யாராலும் கணிக்க இயலாது; சில சமயங்களில் அவர்களாலே கணிக்க இயலாது. ஆனால், அதுதான் இவ்வுலகில் உள்ள அனைவரும் அடைய விழையும் மிகத் தலைமையான லட்சியம். ஒவ்வொருவரும் நாம் நம் வாழ்க்கையில் எதைச் செய்தால் நம் வாழ்வு ஓர் இன்பக் கடலாய் மாறும் என்று பாடுபடுகிறார்கள். அவற்றில் சிலர், பொருட்செல்வத்தையே மிக முக்கியமாக கருதுகிறார்கள். அவ்வாறானோர், நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய புதிய பொருட்களை உடனுக்குடன் வாங்கிச் சேர்ப்பதால் மட்டும் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலும் என்றெண்ணுகிறார்கள். என்னைப் பொருத்தமட்டில், இக்கருத்தை நான் அறவே ஏற்றுக்கொள்ளமாட்டேன். இவ்வாறு எண்ணுபவர்கள் பெரும்பாலும் சிறிய பிள்ளைகள்தான் என்று அலட்சியாஅக விட்டுவிடுவது தவறு. ஏனெனில், பெரியோர்கள் பலரும்கூட பல பொருட்களைச் சேர்த்தால் மனநிறைவு அடைந்து, நாளடைவில் மகிழ்ச்சியையும் அடையலாம் என்ற தவறான சிந்தனையோட்டத்தைக் கொண்டுள்ளனர். அவற்றையெல்லாம் உடைத்து, இக்கருத்தையொட்டி என்னுடைய வாதத்தை நிலைநாட்டவே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். 

    பல புதிய பொருட்களுக்கு உரிமை கொண்டாடினாலே இன்பத்தை அடையமுடியும் எனில், வசதி குறைவுள்ளோர் மகிழ்ச்சியாக வாழத் தகிதியற்றவர்களா? உதாரணத்திற்கு, புதிய ஒரு விளையாட்டுப்பொருளை ஒரு தம்பதியினரால் தங்கள் மகனுக்கு வாங்கித்தர முடியவில்லையெனில், அவன் மகிழ்ச்சியாக வாழவில்லை என்பதில்லையே. அவ்வாறான குழந்தைகள், தங்களின் பெற்றோருடன் நேரம் செலவிடுவதை பொன்னான நேரமாக கருதுவார்கள். குறிப்பாக, இருவரும் வேலைக்குச் சென்று பணம் ஈட்ட பாடுபடும்போது, வாரயிறுதி நாட்களில் ஒன்றாக உணவகம் சென்றாலே அவர்களுக்குப் போதும். புதிய பொருட்களைச் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்திற்கு இடமேயில்லை. பெரியோர்க்கும் இது பொருந்தும். அந்தத் தந்தையானவர், புதிதாக வெளிவந்த உந்துவண்டியை வாங்கினால் மட்டுமே மகிழ்ச்சியை எட்டுவார் என்றில்லை. தன் மனைவி மற்றும் மகனுடன் சிறுசிறு செயல்களைச் செய்வதோ, அன்பான வார்த்தைகளை உதிர்ப்பதோதான் எப்பொருளைக் காட்டிலும் அவருக்கு பேரின்பத்தைத் தேடித்தரும். இத்தகைய பல குடும்பங்கள் கவலையின்றி மனநிறைவுடன் வாழும்போது, புதிய புதிய பொருள்களைச் சேர்ப்பதால் மட்டும் மகிழ்ச்சியைப் பெற்றுவிடமுடியும் என்றெண்ணுவது மெய்யாகாது.

    ஆனால், ஒருவருக்கு நிறைய பணச்செல்வம் இருந்தாலும், அவற்றையெல்லாம் பயன்படுத்திப் பொருட்களை உடனுக்குடன் வாங்கிக்கொண்டாலும், அவர் பெருமகிழ்ச்சி அடைவார் என்று திண்ணமாக கூற இயலாது. உணமையான மகிழ்ச்சி என்பது உறவுகள் மூலமே தோன்றும். ஒருவர் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் ஆளும் அளவு செல்வம் கொண்டிருந்தாலும், தனிமையை எதிர்நோக்கினால், மகிழ்ச்சியை அடைய வழியின்றி திணறுவார். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒருவர் கொள்ளும் உறவு விலைமதிப்பில்லா ஒன்றாகும். நம் வாழ்க்கையை நாம் தனியே செலுத்தாமல், நம்முடன் ஒருவர் நடக்கும்போதுதான் உறவுகளின் சிறப்பை அறிந்து இன்னும் அதிகமான இன்பத்தைக் காணமுடியும். மனிதனுக்குத் தேவைப்படும் துணை, புரிந்துணர்வு, அன்பு போன்றவற்றை இன்னொரு மனிதன்தான் வழங்கமுடியும். உணர்ச்சியளவில் எப்பயனும் தராத பொருட்களை வாங்குவதன் மூலமே மகிழ்ச்சியை அடைந்துவிடமுடியும் என்றெண்ணுபவர், தன்னத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

    இருப்பினும், புதிய பொருள்களை உடனுக்குடன் வாங்குவதால் மட்டுமே மகிழ்ச்சியைப் பெற்றுவிடமுடியும் என்றெண்ணுவோரின் சிந்தனைக்கும் சில அடிப்படை காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் போன்ற போட்டித்தன்மை மிக்க தேசத்தில், பின்தங்கிவிடகூடாது என்ற அச்சத்தை அனைவரும் கொண்டிருப்பது இயல்பு. சில மாணவர்கள், தாமும் மற்ற மாணவர்களைப் போலவே இருக்கவேண்டும் என்ற இச்சையால், தங்கள் பெற்றோரிடம் இவ்வாறான பொருட்களை வாங்கிக்கொடுக்குமாறு வேண்டுகிறார்கள். மற்றவர்கள் தன்னைத் தாழ்வாக எண்ணினால், தனக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள் என்று அஞ்சுவார்கள். இக்கருத்து வேலைக்குச் செல்லும் பெரியோர்க்கும் பொருந்தும். தங்களிடம் உள்ள பொருள்களைப் பற்றி பெருமையாக பேசுவதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

     இம்மாற்றுக்கருத்துக்களைப்பற்றி நான் விளக்கினாலும், நான் என் வாதத்தை முழுமனதுடன் மீண்டும் நிலைநாட்டுகிறேன். பொருட்களுக்கு உயிரில்லை. அந்த நிறுவனம் வேறு ஏதேனும் புதிய பொருளை வெளியிட்டால், அனைவரும் அதை வாங்க விழைவார்கள். ஒவ்வோராண்டும், ‘ஐஃபோன்’ நிறுவனம் புதிய தொலைபேசியை வெளியிட்டவுடன், அதில் எவ்வித மாற்றமும் இல்லாவிடிலும், அதை அனைவரும் வாங்குவதைப்போல், புதிய பொருட்கள் ஒருநாள் பழையதாக மாறும். அவ்வாறு பொருள்கள் பழையதாக மாறும்போது, அவை மகிழ்ச்சியளிக்கப்போவதில்லை. நம் வாழ்நாள் முழுதும் நிலைக்கப்போவது நம் உறவுகள்தான். பொருட்செல்வன் ஓர் ஆற்றில் வாழும் பறவைகள் போன்றவை. ஆறு நாளடைவில் வற்றினாலும், அல்லது வற்றாத நிலையிலும், அதாவது காலம் உருண்டோடியவுடன், பறவைகள் வேறு ஆற்றைத் தேடிச் சென்றுவிடும். அதைப் போலவெ, நம் வாழ்வில் நாம் சேர்த்துவைத்திருந்த பொருட்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். ஆனால், நம் உறவுகள் அவ்வாற்றில் வாழும் மீன்கள் மற்றும் செடிகள் போன்றவை. எவ்வளவுதான் காலம் கடந்தாலும் நம்முடனே இருப்பார்கள்; நம் வாழ்க்கையில் வாழ்நாள் முழுதும் வெளிச்சத்தை அளிப்பார்கள். 

     இரண்டாவதாக, நம்மை மற்றவர்கள் தாழ்வாக எண்ணக்கூடாது என்பதற்காகவே பல பொருள்களை வாங்கக்கூடாது.

உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே

 இடுக்கண் களைவதாம் நட்பு”

என்ற திருக்குறளிற்கேற்ப, நட்பு என்பது துணை, உதவி, அன்பால் கட்டப்பட்ட ஒரு வீடாகும். ஒருவன் வசதி குறைந்தவனாக இருப்பதாலே அந்த வீடு உடைந்து பாழாகுமெனில், அந்த வீடு உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படவில்லை. அவ்வாறு ஏற்படும்போது, அந்நட்பை விட்டொழித்துவிட்டு நமக்கு உண்மையான அன்பளிக்கும் நண்பர்களுடன் பழகினாலே மகிழ்ச்சி கிட்டும்.

     சுருக்கமாக, நிறுவனங்கள் அறிமுகப்ப்டுத்தும் புதிய பொருள்களை உடனக்குடன் வாங்கிச் சேர்பதால் மட்டுமே ஒருவர் மகிழ்ச்சியைப் பெற்றுவிட இயலாது என்பதை நான் உறுதியாக ஏற்கிறேன். நாளடைவில் பழையதாக மாறும் பொருட்களால் விளையும் எவ்வித இன்பமும் நிலைத்திருக்காது. ஆகவே, அதற்குப் பதிலாக, நம் வாழ்நாள் முழுதும் நம்முடன் பயனிக்கும் நபர்களுடன் சிறந்த உறவைக் கொண்டாடுவதே உண்மையான பெருமகிழ்ச்சியை நம் வாழ்விற்குச் சேர்க்கும்.

                               ********************

 


Monday, May 26, 2025

சொற்பொழிவு - தேசியதினக் கொண்டாட்டத்தை ஒட்டிப் பேச்சுப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. அதில் நீ கலந்துகொள்ளவிருக்கிறாய். “பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு” எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.


SELVAKUMAR KANISHKA - YEAR 4 - 407- 2025 


“கசடதபற வல்லினம், ஙஞநணமன மெல்லினம், யரலவழள இடையினம், யாவரும் இங்கே ஓரினம்!”


அமுதே, தமிழே, அழகிய மொழியே எனதுயிரே! முதலில் உன்னை மனம், மொழி, மெய்யால் வணங்கி மகிழ்கிறேன். அடுத்து, என்னருந் தமிழ்மொழி என்போன்ற இளம்பருவத்தினர் நாவிலும் நற்சிந்தையிலும் நிலைத்திட வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த குழுவினருக்கும் இங்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் இன்தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


வேற்றுமை மறந்து ஒற்றுமை என்ற கூற்றிற்கேற்ப, சமூக ஒற்றுமை என்பது அனைத்து இனங்களைச் சார்ந்த மக்களும், இனம், மதம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் முதலிய வேறுபாடுகளைத் தாண்டி கூட்டுறவுடன் வாழ்வதாகும். அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அடித்தளமானது சமூக ஒற்றுமை. இது நிலைத்திருத்தல் என்பது, எப்போதும், இன்னும் வரவிருக்கும் தலைமுறைகளிலும் சமூக ஒற்றுமை வேறூன்றியிருப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு பல இனத்தவரும் வாழும் சிங்கை நாட்டில் சமூக ஒற்றுமையை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவர்களின் இன்றியமையாத பங்கு என்ன என ஆராய்வோம். 


இக்காலக்கட்டத்தில், பள்ளியில் மாணவர்கள் கற்றலில் மட்டும்தான் ஈடுபடுகிறார்களா என்ன? இணைப்பாடம், குழு திட்டப்பணிகள், கலை சார்ந்த நடவடிக்கைகள் என எண்ணற்ற வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சமூக ஒற்றுமை என்பதற்கான அஸ்திவாரம் சமூகப் பிணைப்பு என்பதில் துளி அளவும் ஐயம் இல்லை. தமக்கு முக்கியமான சமூக பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் சக மாணவர்களுடன் ஈடுபட ஏகப்பட்ட வாய்ப்புகளும் ஆதரவும் பள்ளிகளால் வழங்கப்படுகையில், பெரும்பாலான மாணவர்கள் மக்கள் சார்ந்த சமூக பிணைப்பை மேம்படுத்த முன்வருகின்றனர். மற்ற அமைப்புகளுடன் ஒன்றாகச் செயற்பட்டு பலதரப்பட்ட மக்களிடையே இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் அதிகரிக்க, நிகழ்ச்சிகள் பலவற்றை அரங்கேற்றுகின்றனர். சிங்கப்பூரிலுள்ள பல இனங்களையும் அவற்றின் தனித்துவமான கலாச்சாரத்தையும் வெளிக்கொண்டுவருவதற்காக, கலை அரங்கேற்றங்கள், பாரம்பரிய விளையாட்டுகளைக் கொண்ட குடும்ப விழாக்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கக்கூடிய நடவடிக்கைகள், முதலியவற்றை மாணவர்களே தன்னிச்சையாகத் திட்டமிட்டு நடத்துகின்றனர். தேசிய அளவில் நிகழும் நிகழ்ச்சிகளில் கூட, குழுக்களில் செயற்படும் மாணவர்கள் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையைப் பற்றியும் பொதுமக்களுக்குக் கற்பிக்க, பயிலரங்குகள், கண்காட்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்கின்றனர். 


இதற்கெல்லாம் முக்கிய காரணங்கள் மாணவர்களின் ஆர்வமும் பற்றுமே ஆகும். பள்ளியில் செய்யவேண்டும் என்பதற்காக ஏனோ தானோ என மாணவர்கள் திட்டப்பணிகளில் ஈடுபடுவரில்லை. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்பதற்கேற்ப, சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையைத் தக்கவைப்பதில் தம்முடைய இன்றியமையாப் பங்கை உணர்ந்து மாணவர்கள் முழு மனதுடனும் உந்துதலுடனும் செயல்படுகின்றனர். அவர்கள் நடத்தும் இந்நிகழ்ச்சிகள் எவ்வாறு உண்மையான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என நீங்கள் நினைக்கலாம். கலாச்சாரம் ஒட்டிய கருத்துப்பரிமாற்றம் மூலம், மக்கள் ஒருவரையொருவர் பொருத்துக்கொள்ளாமல் புரிந்துகொள்கின்றனர்; மற்ற இனங்களைப் பற்றிய ஆர்வத்தை வளர்த்துக்கொள்கின்றனர். 


இரண்டாவதாக, இன்றைய மாணவ செல்வங்களாகிய நாம்தான் நாளைய தூண்களாவோம், அடுத்த தலைமுறையே நம்மால்தான் வடிவமைக்கப்படுகிறது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். அவ்வாறு இருக்கையில், சமூக ஒற்றுமையைக் கட்டி காக்க வேண்டுமென்றால், நாம் தானே முதல் குரலை எழுப்பவேண்டும்? என்னதான் நிகழ்ச்சிகள், அரங்கேற்றங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தினாலும், உண்மையான சமூகப் பிணைப்பை வளர்ப்பது அதையும் தாண்டியது. மாணவ குரல்களாகிய நமக்குதான் சமுதாயத்தோடு தொடர்புகொண்டு மனந்திறந்து பேசுவதற்கான தளங்களை உருவாக்கவேண்டிய கடமை உள்ளது. “கூட்டுறவே நாட்டு உயர்வு” என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர். முதலில் கூட்டுறவை வளர்ப்பதற்கு எது தேவை? மக்கள் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துப் பேசவேண்டும். மாணவ பேச்சு தளங்கள், பட்டிமன்றங்கள், சமூக உரையாடல் மேடைகள் முதலியவை சில எடுத்துக்காட்டுகள். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் பேச்சு போட்டியைவிட வேறு சிறந்த உதாரணம் இல்லை. என்ன கூற வருகிறேன் என்றால், சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கு மாணவர்கள் தாமே உரையாடல் தளங்களை உருவாக்குகின்றனர், மற்றவர்களை அவற்றில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துகின்றனர். தினசரி சமுதாய சிக்கல்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளையும் மாணவர்கள் ஒன்றாகத் திரட்டுகின்றனர். இதன்மூலம், சமூக ஒற்றுமை இல்லாததற்கான மூல காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண்கிறார்கள். 


இறுதியாக, மாணவர்கள் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எந்த அளவிற்குப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கின்றனரோ, அதே அளவிற்குத் தம் சொந்த பள்ளிகளிலும் சக மாணவர்களுக்கும் பாடங்கள் மூலமும் விளையாட்டுகள் மூலமும் சுலபமாக கற்பிக்கின்றனர். முன்புபோல், சமூக நல்லிணக்கத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்துவதில்லை, மாணவர்களே கற்கிறார்கள், கற்பிக்கிறார்கள். தொடக்கநிலை மாணவர்களிலிருத்து உயர்நிலை மாணவர்கள் வரைக்கும், சமூக ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதற்கான வழிகள், ஆலோசனைகள், ஒற்றுமையை ஒட்டிய குழு நடவடிக்கைகள் முதலியவை வழங்கப்படுகின்றன. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பதற்கேற்ப, சிறு வயதிலிருந்தே சமூக ஒற்றுமையை வாழ்க்கையின் அடிப்படையாக மாணவர்கள் காண்பதால், எதிர்காலத்திலும் அதைக் கடைப்பிடிக்கின்றனர். 


சுருங்கக் கூறின், பள்ளி திட்டப்பணிகள் மூலம் சமூக பிணைப்பை வட்டாரங்களில் வளர்ப்பது, மக்களுக்கு திறந்த உரையாடல் தளங்களை அமைத்துக்கொடுப்பது, மற்றும் சக மாணவர்களையும் சமூக ஒற்றுமை குறித்த கற்றலில் ஈடுபடுத்துவது ஆகிய வழிகள் மூலம் மாணவர்கள் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க பங்காற்றுகின்றனர். இதுவரை என் உரையைச் செவிமடுத்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். 


~ முற்றும் ~


Saturday, May 24, 2025

சொற்பொழிவு - பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு

            RADHAKRISHNAN SUJITHA - உயர்நிலை 4 ஆம் ஆண்டு - 2025

எனது தாய்மொழியான தமிழை வணங்கி இந்த அவையில் இருக்கும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு தரப்பினர் சிங்கப்பூரில் குடியேறுகின்றனர். சீனாவிலிருந்து வருகிறார்கள். இந்தியாவிலிருந்து வருகிறார்கள். ஏன், அமெரிக்காவிலிருந்து கூட வருகிறார்கள். இந்த உலகமயமாக்கும் சூழலில் பலர் வேலை வாய்ப்புகளுக்காக சிங்கப்பூருக்கு வருகின்றனர் என்பதே உண்மை. ஆகவே, சிங்கப்பூரில் பல்லினத்தவர் வாழும் நிலை ஏற்படுகிறது. சேர்ந்து படிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை மனதில்கொண்டு “பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு” என்ற தலைப்பையொட்டி உங்களிடம் பேசப்போகிறேன்.


சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. உலகத்தில் வெரும் சின்ன புள்ளிதான். சிறிய நாடாக இருந்தாலும் உலகத்திலே உள்ள முதல் 20 செழிப்பான நாடுகளில் இடம்பெறுகிறது. ஏன்? சிறப்பான நீதி, தேர்ச்சிப்பெற்ற பலர் என்ற பல காரணங்களை சொல்லிக்கொண்டே வரலாம். ஆனால், முக்கியக் காரணம்? சமூக ஒற்றுமையே! சிங்கப்பூர் என்பது ஒரு மரம் போல, சமூக ஒற்றுமை என்பது அதன் வேர்கள் போல. வேர்கள் இல்லாவிட்டால், மரமே சாய்ந்துவிடும். ஏன்? வேர்களே மரத்தின் அடித்தளம். அதே போல் நமது அடித்தளமான சமூக ஒற்றுமை கலந்துவிட்டால், சிங்கப்பூர் சிரமப்படும் அவல நிலை ஏற்படும். அதற்கு பிறகு கரை ஏறுவது மிகவும் சிரமம்.


சரி, நான் ஏன் சமூக ஒற்றுமை முக்கியம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், மாணவர்களின் பங்கு என்ன? இப்போது பார்ப்போம். மாணவர்கள் என்பவர்கள் நமது அடுத்த தலைமுறையினர். அவர்கள் தான் எதிர்காலத்தில் சிங்கப்பூரை ஆள்வார்கள். ஆகவே, மாணவர் பருவத்திலே சமூக ஒற்றுமையை கடைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டால்தான் எதிர்காலத்தில் அவர்கள் சமூக ஒற்றுமையைச் சிங்கப்பூரில் நிலைநாட்ட முடியும். “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை,” என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஆகவே, சிறு வயதிலிருந்தே மாணவர்கள் ஒவ்வொரு இனத்தவருடன் பழகுவது இன்றியமையாததாகும். அதுமட்டுமா? இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் வீட்டில் செலவிடும் நேரத்தை விட பள்ளியில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆகவே, மாணவர்கள் தங்களுடைய பங்கை ஆற்றாவிட்டால், பள்ளி படிப்பதற்கு ஒரு சிறந்த சூழலாக அமையாது. அவர்களுக்கிடையே சண்டைப்போட்டால் என்ன பயன்? மற்றவருக்குத் தீமையே அளிக்கும். எந்த நன்மையும் இருக்காது. ஆகவே, மாணவர்கள் ஒருவருடன் ஒருவர் எந்த இனத்தவராக இருந்தாலும் சரி, பழகிக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும். பழக வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நமக்கு இருக்கும் நிம்மதி சீர்குலைய அதிக வாய்ப்புள்ளது.


”வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்” என்று நமது முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஏன்? ஒரு பிரச்சனை வரும் முன் நாம் ஆயுத்தமாய் இருந்தால்தான் நம்மை ஒரு பிரச்சனையின் விளைவுகளுக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொள்ளலாம். இது சிங்கப்பூருக்கும் பொருந்தும். சிங்கப்பூர் முதலில் சுதந்திரம் பெற்றபோது, பல பூசல்கள், பல சண்டைகள் என்று நிலவின. நீங்கள் பெரியவர்கள் மட்டுமே இந்த பூசல்களில் பங்கேற்றனர் என்று நினைத்திருக்காலாம். ஆனால், அவ்வாறு அல்ல. மாணவர்கள் கூட இது போன்ற சண்டைகளில் ஈடுப்பட்டனர். இந்த சண்டைகளில் பலர் காயமடைந்தனர், கட்டடங்கள் சேதமடைந்தன. சிலர் அதிக காயங்களாலும் உயிரை இழந்தனர். சிங்கப்பூரின் நிலையே கண்ணீரும் கம்பலையுமாக இருந்தது. இது போன்ற நிலை யாருக்கும் ஏற்படக்க்கூடாது என்ற மனப்போக்கை நாம் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல், தற்காத்துக்கொள்ள மாணவர்கள் தங்கள் பங்கையாற்ற வேண்டும். எவ்வாறு? அவர்கள் பள்ளியில் சிறு வாக்குவாதங்களை பெரும் சண்டையாக உருவாவதை தடுக்க வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இனத்தைப் பற்றி பேசாமல், பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். இத்தகைய வழிகள் மூலம் சிறு வாக்குவாதங்கள் பெரிதாக்காமல் இருக்கும்.


அடுத்து, சமூக ஒற்றுமை என்பது ஒரு வாழ்க்கைத்திறன் என்று நான் முழுமனதோடு நம்புகிறேன். ஆகவே, அவர்கள் வெளிநாட்டிற்கு செல்லும்போதோ, அல்லது சிங்கப்பூரிலோ மற்றவர்களுடன் சேர்ந்து வேலைகளை வாக்குவாதமின்றி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். “ஒரு கைத் தட்டினால் ஓசை எழும்புமா?” என்பது போல சமூக ஒற்றுமையோடு ஒருவருடன் ஒருவர் வேலை செய்தால்தான் நாம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த வேலை செய்யும் சூழலை உருவாக்க இயலும். மாணவர்கள் இப்போதே ஒப்படைப்புகளின்போது மற்ற இனத்தவருடன் சேர்ந்து செய்ய முடியாவிட்டால், எதிர்காலத்தில் எப்படி செய்வார்கள்? நீங்கள் இவ்வாறு மாணவர்களால் செய்ய முடியும் என்று நினைத்தால், இது ஒரு மூட நம்பிக்கை என்று நானே கூறுகிறேன். சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் கடமை மாணவர்களின் கைகளிலே இருக்கிறது. அந்த கடமையை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான், தற்போதைய வேளையிலும், எதிர்காலத்திலும் சமூக ஒற்றுமையை நிலை நாட்ட முடியும் என்று நான் நம்புகிறேன். 


இறுதியாக, மாணவர்கள் தான் எதிர்காலத்தில் சமூகத்தில் பெரியவர்களாக வாழ்வார்கள். அவர்கள் வீடு வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆகவே, புது வாழ்வை எதிர்காலத்தில் வாழும்போது மற்ற இனத்தவருடன் ஒற்றுமையாக வாழவேண்டும். சிங்கப்பூரில் சுமார் 70% மக்கள் அடுக்குமாடி கட்டடங்களில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த சதவிதம் மாறும். ஆகவே, ஒரே மாடியில், ஒரே கட்டடத்தில் பல்லினத்தவர் சேர்ந்து வாழும் நிலை ஏற்படும். ஆகவே, மாணவர்கள் இப்போதிலிருந்தே அண்டைவீட்டார் வீட்டுக்கு வரும்போது இன்முகத்தோடு வரவேற்க வேண்டும். விருந்தோம்பலை கடைப்பிடித்து வாழ வேண்டும். இவ்வாறுச் செய்யாவிட்டால், மற்றவர்களின் உணர்வுகள் அதிக அளவில் பாதிக்கப்படும். செடிகளை தட்டுவது, முட்டைகளை எறிவது என்று பல நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்க அதிக வாய்புண்டு. ஆகவே, எதிர்காலத்திலும், இப்போதைய சூழலிலும், கட்டடங்களிலே சமூக ஒற்றுமையை நிலைநாட்டுவது முக்கியம்.


ஆகவே, மாணவர்களே! நமது பங்கு சமூக ஒற்றுமைக்கு மிகவும் முக்கியம். சமூக ஒற்றுமைக்கு நாமே ஒரு நுழைவுச்சீட்டுப் போல். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை கடைப்பிடித்து வாழ்ந்து நிம்மதியாக வாழ்வோம். முழு சமூக ஒற்றுமையை அடைவது கடினம் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மற்றவர்களை மதிப்பது, மற்ற கலாச்சாரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது, வாக்குவாதங்களை பெரிதுபடுத்தாமல் இருப்பது போன்ற எளிய முறைகளின் மூலம் இந்த இலக்கை அடையலாம். சிரமமாக இருந்தாலும் ஒன்றுபட்டு இந்த இலக்கை அடைவோம். ஆகவே, இந்த அவையில் இருக்கும் ஆட்கள் மாணவர்களாக இருந்தால், இந்த பாட்டை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


’வெற்றிக்கொடி கட்டு

மலையை முட்டும் வரை முட்டு 

இலட்சியம் எட்டும் வரை எட்டு

படையெடு படையப்பா’


வெற்றிக்கொடியைக் கட்டுவோம். சிரமமாக இருந்தாலும் இலட்சியத்தை எட்டுவோம், சமூக ஒற்றுமையை நிலைத்திருப்போம். இதோடு எனது உரையை முடித்துக்கொள்றேன்.

அனைவருக்கும் தேசிய தின நல்வாழ்த்துக்கள்!


நன்றி வணக்கம்!


குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...