Tuesday, July 8, 2025

‘பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.

 

 

KARUPPAIYA BARANI NIVEDHAA 

Year 4- 405 - 2025 



சிங்கை நாடு!

 எந்தன் வீடு!

என்ற பாடல்வரிகளோடு நான் என் உரையைத் தொடங்குகிறேன். மாணவர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர் பிரதமர்  திரு லாவ்ரன்ஸ் வாங் முதலிய அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தையும் தேசியதின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! 

இப்போட்டியில் பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சரி, நான் இழுத்தடிக்கமல் என் தலைப்பைப்பற்றி விவரிக்கிறேன். சிங்கப்பூர், நம் நாடு, இல்லம், உறைவிடம், பள்ளி, என்ற எத்தனை பெயர் கொண்டு அழைத்தாலும் போதாது. உலக வரரைபடத்தில் கண்ணுக்கே தெரியாத சிறு புள்ளியாக இருந்தாலும், கல்வி, மருத்துவம், வணிகம் முதலிய பல்வேறு தொழில்களில் அதிவேகத்தில் முன்னேறுகிறது நம் சிங்கப்பூர். இப்படிப்பட்ட நாட்டின் குடிமக்களாக இருக்க நாம் தினமும் பெருமை கொள்கிறோம், தலை நிமிர்ந்து நடக்கிறோம். ஆனால், சிஙப்பூரை நிம்மதி மிகுந்த வெற்றிகரமான தேசமாக வைத்துக்கொள்வதில் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பங்குண்டு. அதன் ஒரு முக்கிய கூறே சமூக ஒற்றுமையும் நல்லிணக்கமும். இவற்றைக் கடைப்பிடித்து வாழ்வது நம் அனைவரின் தலையாய கடமையாகும். என்னைப் போன்ற மாணவர்களுக்கும்கூட இதில் முக்கியப் பங்குள்ளது. ஆம், நமக்கும் ஒரு மிகப்பெரிய பங்குள்ளது, சரிதானே நண்பர்களே? இப்பங்கைப்பற்றி நான் இவ்வுரையில் மேலும் விளக்குகுகிறேன்!

 

சின்ன சின்ன பிள்ளைகளை நம்பி,

இந்த நாடே இருக்குது தம்பி!

சின்னஞ்சிறு கைகளை நம்பி,

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி!

என்ற பாடல்வரியை நான் பலமுறை கேள்வியுற்றுள்ளேன். சிறுவயதில் கேட்டபோது, அவற்றின்  உண்மையான மகத்துவம் எனக்குப் புரியவில்லை, ஆனால், நான் வளர வளர இவ்வரிகளில் உள்ள உண்மையை நான் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினேன். இக்காலத்து இளையர்களும் பிள்ளைகளுமேதான், நாளைய சமுதாய தலைவர்களாகவும் மாறுகிறார்கள். அதனால்தான், மாணவர்களாகிய நாம், பள்ளிப்பருவத்திலேயே  இன நல்லிணக்கத்தைப் பற்றியும் பிற இனக் கல்லாச்சாரங்களைப்பற்றியும் நன்கு அறிந்து புரிந்துகொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள நம் சீன, மலாய், தமிழ் முதலிய அனைத்து இன நண்பர்களையும் பிரித்துப் பார்க்காமல், ஒரே தராசில் வைத்து வேறுபாடில்லாமல் நட்பு பாராட்ட வேண்டும். 

சிறுவயதில் நம் மனதில் இவ்வெண்ணங்கள் வளர்ந்துவிட்டால், நாம் வளர வளர இதே  நல்லெண்ணத்தோடும் பாகுபாடின்மையோடும் எல்லாரோடும் பழகுவோம்.தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைஎன்று கூறுவர், அதுபோல நாமும் இந்த நல்ல வழக்கத்தைச் சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தால், நம் இறுதிக்காலம் வரை இன நல்லிணக்கத்திற்கு நம்மால் முடிந்த பங்கை ஆற்ற இயலும். நம்மில் ஒருவர்கூட முன்வந்து, இன வேறுபாடுகளை எதிர்த்தாலே போதும், அது நம் சமுதாயத்தையே மாற்றியமைக்கும்.

இரண்டாவதாக, மாணவர்களாகிய நமக்கு இக்காலத்தில் கண்டிப்பாக தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறன் கற்பித்து வளர்க்கப்பட்டிருக்கும். எனக்குத் தெரியும், நீங்கள் அனைவரும் என்ன யோசிக்கிறீர்கள் என்று. தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறனிற்கும், சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருத்தலில் மாணவரின் பங்கிற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று தானே யோசிக்கிறீர்கள்? நான் கூறுகிறேன், கேளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியடந்த இவ்வுலகில், நொடிக்கு நொடி நமக்குத் தகவல்கள் வருகின்றன. ஆனால், அவற்றில் எவை பொய் எவை உண்மை என்பதை நம்மில் பலர் ஆராயத் தவறுகிறோம். அதிலும் சிலர் ஆராயாமலே பல செய்திகளைப் பரப்புகிறார்கள். இதனால், தகவல்கள் மாறுபட்டு, மக்கிளிடையே பொய்யான எண்ணத்தை உருவாக்குகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறு நடப்பது மிகவும் அபாயமான ஒன்றாகும். ஒரு இனத்தைப்பற்றி தவறான, பொய்யான செய்தி ஒன்று வெளிவந்து, அதை அனைவரும் நம்பிவிட்டால், அவர்கள் மனதில் இவ்வினத்தைப்பற்றிய கெட்ட அபிப்பிராயம் ஏற்பட்டுவிடும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் எண்ணங்களும் நிலைப்பாடுகளும்தான், இறுதியில் இனவெறியாகவும் இனவெறுப்பாகவும் வெடிக்கின்றன. ஆனால், நமக்கோ, பொய்யான செய்தியையும் உண்மையான செய்தியையும் வேறுபடுத்த கற்பிக்கப்பட்டுள்ளது. நாம் தவறான தகவல்களின் வலையில் சிக்கிக்கொள்ளாமல், அவ்வாறு பரவும் தவறான தகவல்களைப்பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தலாம். ஓர் இனத்தை அவமானப்படுத்தும் எண்ணத்தோடு பரப்பப்படும் ஏதேனும் ஒரு பொய்யான செய்தியை நாம் கண்டால், அதைப்பற்றி நம் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகிய அனைவரிடமும் கூறி, அதைப் பரப்ப வேண்டாம் என்று கூறலாம். இது ஒரு சிறிய செயலாக தெரிந்தாலும், “சிறு துளி, பெரு வெள்ளம்என்ற பழமொழிக்கேற்ப, நாம் ஒவ்வொருவரும் இச்சிறிய செயலைச் செய்தால், அது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இறுதியாக, மாணவர்களாகிய நாம் அனைவருக்கும் ஒரு குரல் உள்ளது, நீதி மனப்பாண்மை உள்ளது. பள்ளியில் ஒவ்வொரு நாளும் நாம் நியாயத்தைக் கடைப்பிடிப்பது பற்றியும், தவறு நடப்பதைப் பார்த்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்பது பற்றியும்  கற்கிறோம். அது கற்றலோடு  மட்டும் நின்றுவிடாமல், நம் வாழ்வில் இடம்பெற வேண்டும். நம் முன் யாரோ தன் மற்ற இன நண்பனைக் குறைத்துப்  பேசுவதையோ இனரீதியாக அவமானப்படுத்துவதையோ நாம் கண்டால், அதை எதிர்த்து நின்று துணிச்சலாகக் கேள்வி கேட்க வேண்டும்; நடக்கும் தவறைத் தடுக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நான் தவறு செய்யாமல் இருந்தால் மட்டும் போதும்; தவற்றைத் தட்டிக்கேட்பது என் கடமையல்ல என்று எண்ணுவோர் பலருண்டு. ஆனால், அது மிகத்தவறான எண்ணப்போக்கு. கண்ணெதிரே நடக்கும் அநீதியைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். மாணவர்களாகிய நாமும் பள்ளி, கடைத்தொகுதி, உணவகம் என்று பார்க்காமல், எங்கு இனரீதியாக தவறு நேர்ந்தாலும் அதைத் தட்டிக்கேட்க வேண்டும்.

சரி, இவ்வுரையில், மற்ற இனத்தவரை மதித்து நடப்பதைச் சிறு வயதிலிருந்தே பழக்கமாக்குவது, இனந்தொடர்பாக வரும் பொய்யான செய்திகளை முடக்குவது, இனத்தவறுகளைத் தட்டிக்கேட்பது ஆகியவை இன மற்றும் சமூக ஒற்றுமை நிலைத்திருக்க மாணவர் செய்யும் பங்கு என்று பகிர்ந்துகொண்டுள்ளேன். இதுவரை என் உரையைக் கேட்ட அனைவருக்கும், நான் மனதார நன்றி நல்கி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!

                                                      ****





No comments:

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...