Lithra Ramamoorthy - Year 4 - 408 - 2025
இனிய மாணவர்களே; வருங்கால தலைவர்களே! மற்றுமுள்ள பார்வையாளர்களே! உங்களஉங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்களைத் தெரிவித்து எனது சொற்பொழிவைத் தொடங்க விரும்புகிறேன். இப்போது, நான் உங்கள் அனைவரையுமே சற்றுச் சிந்திக்க வைக்கும் விதத்தில் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். உங்களில் எத்தனை பேரின் பெற்றோர் “மலாய் தோழிகளை வைத்துக்கொள்ளாதே,” அல்லது, “சீனக்காரர்கள் இப்படித் தான்,” அல்லது, “இந்தியர்களுடன் பழகாதே,” போன்ற கருத்துகளைக் கூறிக் கேட்டிருக்கிறீர்கள்? இது போன்ற கருத்துகள் இப்பொழுது சிறியதாகத் தெரியும்; “வீட்டிற்குள் பேசுவதுதானே? அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பலர் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற சிறிய சிறிய கருத்துகள் சிறு துளி பெருவெள்ளமாய்ச் சேர்ந்து, நமது சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் சூழலை எழுப்புவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்தச் சிற்றுரையின் மூலம், நமது நாட்டிற்கு வருங்கால தலைவர்களாக விளங்கப்போகிற மாணவர்களாகிய உங்களிடம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவர்களின் பங்கு பற்றி விளக்கப் போகிறேன்.
முதலாவதாக, “மாணவர்களாகிய நாம் எதற்காகப் பங்காற்ற வேண்டும்? அதற்குத்தான் அரசாங்கம் இருக்கிறதே,” என்ற கேள்வி இந்நேரம் உங்களில் பலரது மனங்களில் எழுந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்குப் பதிலளிக்க, மானவர்களாகிய நாங்கள் தான் போன தலைமுறைகளின் தவறான எண்ணங்களை உடைத்து, வரும் தலைமுறைகளுக்குச் சிறந்த முன்னோடிகளாக விளங்கவேண்டும். அதனுடைய முதல் படி, நமது வீட்டிற்குள்ளே ஆரம்பமாகுகிறது. மற்ற இனத்தவரிடம் கோபமாகவோ எரிச்சலுடனோ நடந்துகொள்ளும் பெரும்பாலான இளையர்கள் உண்மையில் அதுபோன்ற கருத்துகளைக் கொள்வதில்லை. பெற்றோர் அல்லது மூத்த உறவினர்கள்கள் தான் அதுபோன்ற தவறான கருத்துகளை அவர்களது மனங்களில் பதியும் சூழலை உருவாக்குவர். இதனைத் தடுத்து நிறுத்துவது, மாணவர்களாகிய நமது தலையாய கடமையாக விளங்கவேண்டும். வீட்டினுள் மற்ற இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளைப் பேசும்போது, அதனைச் சுட்டிக்காட்டி, வேரோடு அறுக்க வேண்டும். அதன் மூலம், இது போன்ற தவறான கருத்துகளைப் பரப்புவதை நிறுத்தலாம். சில நேரம், நாமே மற்ற இனத்தவரைத் தவறாக பேசுகிறோம் என்று உணரவே மாட்டோம். ஆனால், அவை நம் அன்றாட கலந்துரையாடல்களில் இலைமறை காய்போல் ஒளிந்திருந்தும், அவற்றைச் சுட்டிக்காட்டி, கண்டிப்பதுதான் சமூக ஒற்றுமைக்குப் பங்காற்ற நமக்கு வழிவகுக்கும்.
இரண்டாவதாக, தவறான கருத்துகளை ஒழிப்பது மட்டும் போதாது; புதிய நல்லக் கருத்துகளைப் பரப்பவேண்டும். அடுத்த படியாக, வீட்டுக்குள் மட்டுமின்றி, வெளியுலகத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மீது ஆர்வம் கொள்ளவேண்டும். மற்ற இனத்தவரிடம் போய் பேசி, பழகி, அவர்களின் கலாச்சாரம் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! அப்போது, அவர்கள் மீது இருந்த உங்களது தவறான அபிப்பிராயங்கள் எவ்வளவு வேகமாக களைபிடுங்கப்படும் என்று நீங்களே பார்ப்பீர்கள். பெரும்பாலான தவறான கருத்துகள்; புண்படுத்தும் வார்த்தைகள் ஏதோ ஒரு அறியாமையிலிருந்துதான் எழுகின்றன. அந்த அறியாமையைக் கோபமாகக் காட்டாமல் ஆர்வமாகக் காட்டப் பழகுங்கள்! “உணவு வாசனை மிகவும் அதிகமாக இருக்கிறது, எனக்குப் பிடிக்கவில்லை,” என்று நினைக்காமல், “இவ்வுணவு வகையில் எவற்றைச் சேர்த்திருக்கிறீர்கள்? நான் சுவைத்துப் பார்க்கலாமா?” என்று கேட்டுப் பழகுங்கள்! இதன் மூலம், ஒருவரைப் பற்றி இன்னொருவர் ஆர்வம் கொண்டு, கலாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமுதாயத்தை உருவாக்கலாம்.
கடைசியாக, “நான் அடுத்த படியாக பங்காற்ற விரும்புகிறேன்! எவ்வழிகள் உள்ளன?” என்று உங்களில் பலரிடம் ஆர்வம் தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். முதலில், உங்கள் பள்ளிகளிலே சமூக ஒற்றுமையைப் பாதுகாப்பதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பள்ளியில் நண்பர்களிடம் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வழிகளைப் பகிர்ந்துகொள்வதோடு, பிறர் மற்ற இனத்தவர்மீது தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும்போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் புதிய நல்ல கருத்துகளை எடுத்துரைக்கலாம். இதன் மூலம், அவர்கள் தவற்றை உணர்ந்து, தமது தவறான கருத்துகளை விட்டுவிடுவார்கள். மேலும், தமது இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளால் புண்பட்டு துடுப்பில்லாமல் நீரில் தத்தளிக்கும் ஒருவரிடம் கைகொடுக்கலாம். இதுபோன்ற செயல்கள் சிறியதாகத் தெரியும். ஆனால், அவை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கலாம். அனைவரும் இதுபோன்ற சிறிய படியை முன்வைத்தால் போதும், நம் சமுதாயம் மேலும் ஒற்றுமையாகத் திகழும். மாணவர்களுள் சிலர் சமூக ஊடகங்களில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அதுபோன்றவர்கள் சமூக ஊடகங்களில் இன நல்லிணக்கத்தை உண்டாக்கும் தகவல்களைப் பகிர்வதன் மூலம், மற்ற மாணவர்களுக்கு இத்தகவல்கள் விரைவாகப் போய் சேரும்; விழிப்புணர்வை உருவாக்கலாம்.
சுருங்கக்கூறின், மாணவர்களாகிய
நாம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையை
நிலைத்திருக்க செய்வதில் பங்காற்ற பல வழிகள் உள்ளன. வீட்டிலிருந்து ஆரம்பித்து,
பள்ளியில் தொடர்ந்து, சமுதாய அளவிற்கு கூட
விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் நிறைந்திருக்கிறது.
“ஊருடன் ஒத்து வாழ்” என்ற ஔவையின் எளிய,
அழகிய பொன்மொழியை மனதில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால்,
நமது சமூகம் விதவிதமான அழகிய பூக்களைக் கொண்ட பூந்தோட்டத்தைப் போல்
திகழும். என் சிற்றுரையை இதுகாறும் செவிமடுத்ததற்கு என் அன்பார்ந்த நன்றிகளைத்
தெரிவித்து, பணிவுடன் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
*****
No comments:
Post a Comment