Monday, September 15, 2008

Saranya`s Essay

"வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தினால் ( Students Exchange
Programme) சிங்கப்பூர் மாணவர்கள் மிகவும் பயன்பெறுகிறார்கள்"- விவாதிக்க.

"சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்று முழங்கினார் பாரதி. அன்று அவர் கூறியதைப் பிரதிபலிக்கும் விதத்தில் இன்றோ, இளையர்கள் பலர் வேறு வேறு நாடுகளுக்குச் சென்று தங்களைத் தாங்களே முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்கின்றனர் என்றால் அது மிகையாகாது. பார்ப்பதையும் கேட்பதையும் ரசிப்பதையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு செயல்படும் மாணவ சமுதாயம் மட்டும் இது விலக்கா என்ன? இதைப் போன்ற பயனுள்ள நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த பள்ளி நிர்வாகமே பல வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டங்களை ஏற்பாடு செய்கின்றது. ஆனாலும், பலரின் உள்ளங்களை முள் போலக் குத்திக்கொண்டிருப்பது, “சிங்கப்பூர் மாணவர்கள் இதனால் பயன்பெறுகிறார்களா?” என்ற கேள்விதான். வினவியவர்களுக்கு விடையளிக்கும் வகையில் இந்நிலைமையைச் சற்றே ஆராய்வோம்.

முதலில் நன்மைகளைப் பகுத்தாராய்வோம். இயற்கை கனிமங்கள் எள்ளளவும் இல்லாமல் கடும் முயற்சியாலும் உழைப்பாலும் உலக அரங்கில் பல வல்லரசு நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நாடு, எந்நாடு? சிங்கப்பூர். நாம் இந்நிலைக்கு வந்துவிட்டாலும், சிறிய நாடு என்பதனால் நம்மில் பலரின் சிந்தனை வட்டமும் சிறியதாகவே அமைந்திருக்கிறது. இது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. அப்படியிருக்க உலகத்தை நன்கு அறிய வேண்டியவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது அவசியமே. அப்படி செல்லும்போது மற்ற நாட்டினரின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிக பழக்கவழக்கங்கள் இவர்களுக்கு அத்துப்படியாகின்றன. இவ்வாறானவற்றைக் கற்கும்போது மாணவர்களின் பொதுஅறிவோடு மற்றவர்களுடைய பழக்கவழக்கங்களை மதித்துச் செயல்பட வேண்டிய அவசியமும் பக்குவமும் கூடுகிறது.

இன்றைய மாணவர்களில் பலருக்குச் சொகுசான வாழ்க்கைமுறை கைவசமாகியும் தங்களிடம் இருப்பவற்றை ரசிக்காமல் சலித்துக்கொள்கிறார்கள். இவ்வாறான மாணவர்கள் சற்றே வசதி குறைந்த நாடுகளுக்குச் செல்லும்போது தங்களிடம் இருப்பவை எவ்வளவு மதிப்புடையது என்பதை உணர்கிறார்கள். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சிலர் இருக்கும்போது, நம் அரசாங்கம் நம்மை எப்படி தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள இவ்வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் வாய்ப்பளிக்கின்றன. எனவே, மாணவர்களுக்குத் தேசிய பற்று வெகுவாக வளர்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

கூண்டிற்குள் அடைபட்ட பட்சிகளாயிருக்கும் பல மாணவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அவர்களிடமிருக்கும் தனித்திறமைகள் குன்றின் மேலிட்ட விளக்குப் போல் வெளிவர வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு, என்தோழி ஒருத்தி நன்றாக நடிப்பாள். ஆனால், அவளின் திறமை வெளிபடுத்தப் படவேயில்லை. ஒருமுறை இத்தகைய பரிமாற்றத் திட்டத்தின் மூலம் வெளியூர் சென்றவள் அங்குள்ளவர்களின் உந்துதலால் தன் முழுத் திறமையை வெளிப்படுத்திப் பலரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டாள். உதாரணம் போதுமா? மேலும், மாணவர்கள் தங்களின் திறமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் செய்கிறார்கள். அவற்றினால் அரிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்.

இன்றைய உலகில், “ பணமில்லாதவன் பிணம்” என்ற முதுமொழியைப் பின்பற்றி, மனித உறவுகளை உதாசீனபடுத்துபவர்கள் பலர். ஆனால், மனித வாழ்வின் அடிப்படையே இத்தகைய உறவுகள் தான். இதைப் போற்றும் விதமாக மாணவர்கள் சக வெளிநாட்டு மாணவர்களுடன் பேசிப் பழகி, நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். “உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவரின் வாக்கினபடி பல உண்மையான நட்புகள் நிலைநாட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் இதே நட்புகள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையோ குடும்ப வாய்ப்புகளையோ ஏற்படுத்தித் தரலாமல்லவா?

சிங்கப்பூர் மாணவர்கள் இவற்றையெல்லாம் வெளிநாட்டிற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல் வேறு நாடுகளிலிருந்து வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் வாயிலாக இங்கு வந்திறங்கும் மாணவர்களின் மூலமும் நம் நாட்டு மாணவர்கள் இவற்றைக் கற்றுக்கொள்ளலாம். ஆகவே, இறுதியாக இத்திட்டம் பல வகையில் பயனளிக்கின்றது.

இறுதியாக இவ்வாறான திட்டங்கள் இத்தனை அனுபங்களையும் குறைந்த விலையில் வழக்குகின்றன. பள்ளி ஏற்பாடு செய்யும் சுற்றுலா என்பதினால் மாணவர்களுக்குப் பல சலுகைகள் கிடைப்பது திண்ணம். சொந்தச் செலவில் போவதைவிட இது மலிவானதே. பெற்றோருக்கும் பாரமில்லை. அதோடு பள்ளி மாணவர்கள் அன்றாகச் செல்லும்போது அவர்களிடையே உள்ள புரிந்துணர்வும் ஒற்றுமையும் கூடுகிறது. குடும்பத்தோடு செல்லும்போது ஒரு மாணவனுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெற்றோரோ பணிப்பெண்ணோ இருப்பார்கள். ஆனால், சக நண்பர்களுடன் செல்லும்போது ஒருவன் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறான். இதனால், அவனுடைய பொறுப்புணர்வு கூடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையல்லவா?

அப்படியென்றால்,வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத்தினால் தீமைகளே இல்லையா? நிச்சயமாக இருக்கின்றன. சில மாணவர்கள் ஓரிரு நாட்களுக்கு வெளிநாட்டு மாணவர்களுடன் தங்கிவிட்டு அவர்களுக்குப் பிரச்சனைகளேயில்லாததைப் போல் நினைத்து அத்தகைய வாழ்க்கைமுறைக்கு ஏங்கத் தொடங்குகின்றனர். அவர்களைக் கண்டு பொறாமைபடுகின்றனர். நம் நாடும் வீடும் ஏன் இப்படியில்லை என்று நினைத்து அவற்றை வெறுக்கத் தொடங்குகின்றனர். இது அவ்ரகளில் கோபம், தாபம் ஆகியவற்றை ஏற்படுத்தி அவர்களின் மனங்களைக் கரையாக்குகின்றன.

நட்பு கிடைக்கலாமென்றேன். அதுவே, கூடாநட்பாகிவிட்டால்? கவனிக்க வேண்டிய விஷயம் இது. மேலும், சில மாணவர்கள் தவறான பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அதிலும் மேல் நாட்டினரின் ஆபாசமான உடைகள், அபத்தமான செயல்முறைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டுவிட்டால்?

சரி அப்படியென்றால், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுதான் என்ன? முதலில் பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்குப் பயனிக்கும் வகையில் இருக்கக்கூடிய வெளிநாட்டுப் பரிமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்துவது அவசியம். ஆனாலும், எவ்வளவுதான் பள்ளி நல்ல விதமாக முடிவெடுத்தாலும் அத்திட்டத்தை எவ்வகையில் பயன்படுத்துவதென்பது ஒவ்வொரு மாணவனின் கையில்தான் உள்ளது. பாலும் தண்ணீரும் கலந்த கலவையிலிருந்து பாலை மட்டும் பருகும் அன்னப்பறவையைப் போலிருக்க அவன் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, வெளிநாட்டு மாணவர் பரிமாற்றத் திட்டத்தினால் சிங்கப்பூர் மாணவர்கள் மிகவும் பயன்பெறுகிறார்கள் அதை ஒழுங்காகப் பயன்படுத்துவோருக்கு இத்திட்டம் முக்கனியாய் இனிக்கும் என்பது திண்ணம்.

(527 சொற்கள்)
சரண்யா சரவணன். SEC 4 HTL – 2008

2 comments:

R.Arvindren said...

The story is nice. However,it could have been improved by adding more phrases and elaborations.Overall,the story is good.

Unknown said...

The argument was well phrased with lots of examples and quotations.

The points could have been better supported with evidence