Saturday, August 2, 2008

Minu`s Letter

அன்பு மாணவர்களே

அண்மையில் நடைபெற்ற தாஜ்மஹால் நாடகத்திற்கு நம் பள்ளியிலிருந்து பன்னிரெண்டு மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தேன். அந்நாடகத்தை மாணவர்கள் விரும்பிப் பார்த்து மகிழ்ந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, அது தொடர்பாக மாணவர்களை ஒரு கடிதம் எழுதச் சொன்னேன். மாணவர்களின் கடிதங்களிலேயே மீனு என்னும் பெயர்கொண்ட மாணவர் எழுதிய கடிதம் மிகச் சிறப்பாக இருந்தது. எனவே, அவரின் எழுத்தார்வத்தையும் ஆற்றலையும் ஊக்குவிக்கும் வண்ணம் அதை இங்குப் பிரசுரிக்கிறேன். மாணவர்கள் படித்துப் பார்த்துப் பயன் அடையலாம்.
இனி மற்ற மாணவர்களின் சிறந்த படைப்புகளும் இங்கு இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தக்கொள்கிறேன்.
அன்புடன்
கு. உத்தமன்.
தமிழாசிரியர்
ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளி.



தாஜ் மஹால் நாடகத்திற்குப் பாராட்டுக் கடிதம்.



திரு. செல்வாநந்தன்,
ரவீந்திரன் நாடகக்குழு,
சிங்கப்பூர்.

13.7.2008

மதிப்பிற்குரியீர்,

கரு: தாஜ் மஹால் நாடகத்திற்குப் பாராட்டு

வணக்கம் ஐயா, சமீபத்தில் தாங்கள் இயக்கிய 'தாஜ்மஹால் ' என்ற அற்புத நாடகத்தைக் கண்டு களித்தேன். அதை நான் கண்டு பல வாரங்கள் ஆகியும், தாஜ்மஹால் நாடகத்தின் அருமையான நடிப்பும், இசையும் கண்ணைக் கவரும் காட்சி அமைப்பும் இன்னும் என் இமைகளிலேயே நிற்கிறது.

தாஜ்மஹால் நாடகம் எல்லாக் கோணங்களிலேயும் மிகச் சிறப்பாக நடந்தேறியது என்று சொன்னால் அது மிகையாகாது. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? முதலில் நாடகத்திற்குத் தேவை ஒரு கதை. ஏற்கெனவே நடந்த ஒரு நிகழ்ச்சியை நாடகமாக்குவது என்றாலும் கூட, நாடகத்திற்கு எது பொருத்தமாக இருக்கும். பார்வையாளர்கள் கதையைப் புரிந்துகொண்டு ரசிக்கும் வண்ணம் எது இருக்கும் என்று அறிந்துகொண்டு, கதையை மிகச் சிறந்த முறையில் வடிவமைத்துள்ளார் கதை எழுதியவர்.

மிக அற்புதமாகக் கதை இருந்தாலும்கூட நாடகத்தின் முழு அழகைக் குன்றின் மேல இட்ட விளக்குப்போல வெளிக்கொண்டுவர நல்ல திறமை வாய்ந்த நடிகர்கள் இன்றியமையாதவர்களாவர். அந்த அடிப்படையில் தாஜ்மஹாலில் நடித்த நடிகர்களின் அபாரமான திறமைக்குத் தனிப் பாராட்டு தேவை என்று நான் கருதுகிறேன். சிறுசிறு காதாப்பாத்திரங்களிலிருந்து, மிகப்பெரிய கதாப்பாத்திரங்கள்வரை நடிகர்கள், தம் நடிப்பில் ஒருவரை ஒருவர் விஞ்சினார்கள். நடிகர்களின் இயல்பான நடிப்புத் திறமை பார்வையாளர்கள் அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. உள்ளூர்க் கலைஞர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர் என்று மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு நிரூபித்துவிட்டனர் நடிகர்கள்.

வசனங்களும் இசையுமில்லாத எவ்வித நாடகத்தையோ திரைப்படத்தையோ காண விரும்பமாட்டார்கள் மக்கள். ஆக, வசனங்களும் இசையும் நாடகம் ஒன்றிற்குப் பெரும் பங்கு வகிக்கின்றன. தாஜ்மஹால் நாடகத்தின் அற்புதமான வசனங்கள் தமிழின் அழகை மிகப்பிரம்மாதமாக வெளிக்கொண்டு வந்தன. அதே சமயத்தில் அனைத்துப் பார்வையாளர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்தது.

மேலும், தாஜ்மஹால் நாடகத்தின் இன்னிசை அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் அரங்கம் முழுவதும் இன்னிசை மழை பொழிய வைத்த இரு பிரதான பாடகர்களுக்கும் எனது சீரிய பாராட்டுகள். செவிகளில் தேன் வந்து பாய வைத்த இசையுடன் இணைந்து ஆடி, கண்களுக்கு விருந்தளித்தனர் நடன மணிகள். மிகக் கடினமான நடன அசைவுகளையும் அலட்சியமாகச் செய்து பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர் நடனத் தாரகைகள்.

தாஜ்மஹால் நாடகத்தின் மேடை அலங்காரங்களும் இவை அனைத்துக்கும் சிகரமாக அமைந்தது. நடிகர்களின் ஆடை அணிகலன்களும், நடிகர்களின் சிகை அலங்காரங்ளும் பார்வையாளர்களைச் சுல்தான் காலத்திற்கே இழுத்துச் சென்றுவிட்டது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளும் அற்புத அலங்காரங்களும் உடை அலங்கரிப்பு நிபுணரின் கலைத்திறனைச் சித்தரித்தன.

தாஜ்மஹால் நாடகம் இவ்வளவு அருமையாக நடந்தேறியது நடிகர்களும் அதில் பங்கு பெற்ற அனைவரும் செய்த விடாமுயற்சியையும் அவர்கள் இரவு பகலாக உழைத்துச் சிந்திய வியர்வைத் துளிகளையும் மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. தாஜ்மஹால் என் மனத்திரையில் நீங்கா இடம் பெற்றுவிட்டது என்றே கூறலாம். இவ்வளவு அற்புதமான இணையற்ற நாடகத்தைப் பார்க்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாஜ்மஹால் நாடகத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக வெற்றியடையச் செய்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இப்படிக்கு.

R. மீனு.
4 E1, HTL ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி
சிங்கப்பூர்.

No comments: