Friday, April 16, 2021

முன்னாள் மாணவர்களின் ( 1998- 2002) கட்டுரைகள்

  உன் மனத்தைப் பாதித்த ஒரு கசப்பான சம்பவம்.

முன்னுரை

மனித வாழ்க்கையில் நாம் எல்லோரும் நிச்சயமாக ஏதாவது கசப்பான அனுபவத்தைக் கடந்து வந்திருக்கலாம். கசப்பான அனுபவம் என்று குறிப்பிடும்போது அச்சம்பவம் நம் மனத்தைப் பாதித்து இருக்கலாம். பலர் வாழ்க்கையில் அச்சம்பவம் பெரும் அளவில் பாதித்திருக்கும். மற்ற சிலர் வாழ்க்கையில் சிறிய அளவில் பாதித்து இருக்கும். 

கசப்பான அனுபவம் அல்லது சம்பவம் என்று கூறும்போது , நிறைய குறிப்பிடலாம். என் பதினைந்து வருட வாழ்க்கையில் , என்னைப் பெரிதும் பாதித்த ஒரு கசப்பான அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இச்சம்பவம் என்னையும் பால் வடியும் முகம் கொண்ட என் அன்புத் தம்பியையும் பற்றியது.

அன்று புனிதமான வெள்ளிக் கிழமை , நான் குட்டிபோட்ட பூனை போல மருத்துவமனையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன். ஏனென்றால் எனக்குத் தம்பி பாப்பா பிறக்கப் போகிறான். களிப்பு என்னும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். எனக்குக் காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை.எனக்கென்று ஒரு தம்பி வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.

 என் தம்பி எப்படி இருப்பான்  என்று கனவு என்னும் உலகில் தத்தளித்தேன். கண்மூடி கண் திறப்பதற்குள்ளாகக் குழந்தை அழும் சத்தம் என் காதில் ஒலித்தது. தாதி ஒருவர் என்னை என் தாயார் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே நுழைந்ததும் நான் என் அம்மாவிடம் பசுவைப் பார்த்த கன்றுக் குட்டிபோல ஓடினேன். என் தந்தை, என் தாயார்  இருக்கும் இடத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். என் அம்மா பக்கத்தில் ஒரு அழகான குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அதை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை தான் என் தம்பி என்று நினைவுக்குத் தோன்றியது. நான் என் தம்பியை அன்பாக தூக்கி அவனை அணைத்தேன்.

நாங்கள் நால்வரும் வீட்டிற்குத் திரும்பினோம் .அன்று முதல் நான் என் தம்பியைக் கண்ணை இமை காப்பது போல காத்து வந்தேன். பள்ளி முடிந்து வந்தவுடன், முதல் வேலை நான் என் தம்பியோடு விளையாடுவேன்.  அவனின் கண்கள் நட்சத்திரம் போல் மின்னின.பெயர் சூட்டும் விழாவில் என் தம்பிக்கு `தேவராஜ்` என்ற பெயரைச் சூட்டினோம்.

நாட்கள் கடந்து ஓடின. என் தம்பி  மழலை மொழியில் பேசத் தொடங்கினான்.  அதை கேட்கக் கேட்க நான் எப்பொழுதும் மெய்மறந்து நிற்பேன்.

ஆண்டுகள் பல கடந்தன. என் தம்பி பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் படிப்பில் நன்கு விளங்கினான். எல்லோரும் பாராட்டியபடி அவன் பெயர் வாங்கினான். படிப்பு உயர உயர அவன் வகுப்பில் குன்றின் மேலிட்ட விளக்குப் போல தோன்றினான். அதைப் பார்த்து நான் மிக பெருமை அடைந்தேன்.ஒரு நாள் என் தம்பிக்காக ஆசையாகக் காத்துக் கொண்டிருந்தேன். காரணம் அன்று அவனின் பதினொன்றாவது ஆண்டு பிறந்த நாள். அவன் எங்களிடம் ஆசையோடு கேட்ட நாய்க்குட்டியோடு வாசற்படியில் நின்று கொண்டிருந்தேன்.

மணி சுமார் பிற்பகல் இரண்டாயிற்று . அவன் ஒன்றறைக்கெல்லாம் வீட்டில் இருப்பேன் என்று கூறினானே இன்னும் காணவில்லையே என்று என் மனம் பதறியது. என் தாயர் ஒரு பெரிய பரிசுப் பொருள் ஒன்றை வாங்கி வந்தார்.  ``தேவா இன்னும் வரவில்லையா ? `` என்று ஒரு புன்னகையோடு கேட்டார். நான் தலையசைத்தவாறு `` இன்னும் வரவில்லை`` என்றேன். 

மணி  மூன்றாயிற்று நான் என் அம்மாவிடம் கூறாமல் நான் என் தம்பியின் பாடசாலைக்கு விரைந்து ஓடினேன். என் தம்பியின் தோழன் ஒருவன் அங்கே இருந்தான். அவனிடம் விசாரித்தேன். என் தம்பி ஒரு மணிக்கெல்லாம் சென்று விட்டான் என்று என் தலையில் குண்டு ஒன்றை போட்டான். அவன் வீட்டிற்கு வரும் பாதையில் மனம் ``படபட`` வென்று அடிக்க ஓடினேன். ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டடக் கீழ்த்தளத்தில் பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. நான் வேதனையோடு அங்கே சென்றேன். கூட்டத்தில் வளைந்து நெளிந்து நுழைந்தேன்.நான் கண்ட காட்சி என் தலையில் இடி விழுந்தாற்போல இருந்தது. காரணம், கள்ளம் கபடமில்லாத பிஞ்சு உள்ளம் கொண்ட என் தம்பி இரத்தக் கடலில் மிதந்து கொண்டிருந்தான். நான் அவனின் அருகில் சென்று கதறிக்கதறி அழுதேன். என் தம்பியை யாரோ கொலை செய்து விட்டான் என்ற செய்தி கேட்டவுடன் என் மனம்  சுக்கு நூறாக உடைந்தது.

சிறிது நேரத்தில்  மருத்துவமனை வண்டி என் தம்பியைக் கொண்டு சென்றது..நான என் கைத் தொலைபேசியில் என் தந்தைக்குத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறினேன். நான் வீட்டிற்கு அழுதுகொண்டே சென்றேன். என் அம்மா அங்கே வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தார். ` எப்படி சொல்லப்போகிறேன்` என்று திருதிருவென்று விழித்தேன். என் தந்தை கண்கலங்கியவாறு வீட்டை அடைந்தார். என் அம்மாவிடம் நடந்ததைக் கூறினார். என் அம்மாவும் நானும் கதறி அழத் தொடங்கினோம்.

நாங்கள் மருத்துவமனையை அடைந்ததும் மருத்துவர் என் தம்பி இறந்து விட்டான் என்று மொழிந்தார். என் தம்பி இருக்கும் அறைக்குச் சென்றோம். அவன் பரிதாப நிலையில் இருந்தான். நான் அவனை அணைத்து அழுதேன். என் செல்லத் தம்பிக்கு  இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தோம். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

நாட்கள் பறந்தோடின. என் வீடு அமைதியாக இருந்தது. நான் என் தம்பியின் ஆசை நாய்க்குட்டியைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் விடுவேன். `` ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ`` என்ற பழமொழி என் நினைவுக்கு வரும்.

என்னால் பல வாரங்கள் படிப்பில் கவனஞ்செலுத்த முடியவில்லை. என் தம்பியின் குரல், சிரிப்பு என் காதில் தினமும் ஒலித்துக்கொண்டேயிருகும். என் தம்பியின் இறப்பு என்னை மிகவம் பாதித்தது. இது தான் என் கசப்பான அனுபவம் என்று மன வருத்தத்தோடு கூறுகிறேன்.

முடிவுரை

நமக்கு எந்தக் கசப்பான நிலை வந்தாலும் நாம் அதை கனவு என்று நினைத்து மறந்து விடவேண்டும். நாம் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கை பாதிக்கப்படால்ம. நம் வாழ் நாள் மிகவும் குறைவு. எனவே நாம் அதை நல்வழியில் செலுத்த வேண்டும்.     (சுந்தரவள்ளி   Sec 4  )


  **************************************************************

அறிவை வளர்க்க இணையத்தை) விட நூலகமே மாணவர்க்குப் பொருத்தமானது - கருத்துரை

``கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே`` என்று நம் முன்னோர் கல்வியின் அருமை குறித்துக் கூறிச் சென்றதை நாம் கேட்டிருக்கலாம். நம் மாணவர்கள் படிப்பதற்கு இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். `` காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ளவேண்டும். ``இக்கால மாணவர்கள் தாங்கள் கற்றது போதாது என்று சிறுவயதிலேயே அறிந்து கொள்கின்றனர். ``கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு`` அல்லவா?

ஆகையால் அவர்கள் தங்கள் பள்ளிப் பாடங்களை மட்டும் படிக்காமல் வேறு இடங்களிலிருந்தும் தங்கள் பாடங்கள் தொடர்பான  செய்திகளைத் திரட்டுகின்றனர். இக்கால மாணவர்கள் தங்களுக்குத் தேவையான செய்திகளை இணையத்திலிருந்தும் நூலகத்தில் இருக்கும் புத்தகங்களிலிருந்தும் சேகரிக்கின்றனர்.இவ்வழியில் செய்திகளைச் சேகரிக்கும்போது அவர்கள் அவற்றில் இருக்கும் நன்மை தீமைகளை நன்கு ஆராய வேண்டும்.

 

நூலகத்திற்குச் செல்வது ஒரு மிகச்சிறப்பான நடவடிக்கை. அறிவை வளர்க்க வேண்டும் என்றால் நூலகம் ஒரு மிகப் பெரிய உதவியாக இருக்கிறது. பாடப்புத்தகங்கள் முதல் தினசரி செய்தித் தாள் வரை அங்கி¢ருக்கும் புத்தகங்கள் பற்பல.நூலகங்களை ஒரு புத்தகக் கடல் என்று வர்ணிக்கலாம். அங்கு சென்றால் நமக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்கும். நம் பொது அறிவு உலக சஞ்சிகைகள் படிக்கப் படிக்க அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஆகவே பொது அறிவைச் செலவில்லாமல் வளர்த்துக் கொள்ள நூலங்கள் தூண்களாக இருக்கின்றன.

 

இணையம் என்ற வார்த்தையைக் கேட்டதும் பலருக்குப் பல எண்ணங்கள் ஆசைகள். இணையம் மற்றொரு களஞ்சியம். அதில் இல்லாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். பொது அறிவையும் , கல்வி அறிவையும் வளர்த்துக்கொள்ள அது மிகவும் துணையாக இருக்கின்ற காரணத்தினால் அதை இக்காலத்தில் மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

 

நூலகத்தில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் இணையத்தில் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் வேற்றுமைகள் பல. நூலகத்திற்குச் செல்லும்போது நடந்து சென்றால் உடல் உறுதியாகும். `` உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே `` என்று திருமூலர் கூறினார். நீண்ட நாட்கள் வாழ்ந்தால் தான் நாம் நிறைய விசயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் , இணையத்தில் அறிவை வளர்த்துக் கொண்டால் நம் கண்களுக்கும், நம் உடம்பிற்கும் கெடுதல் விளையலாம்.

 

நூலகம் செல்வது ஒரு விலை மலிவான நடவடிக்கை ஆகும். புத்தகங்களை அமைதியான சூழ்நிலையில் படிக்க அங்கே பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்பொழுது அதிக அளவிலான நூலகங்கள் நம் வீடமைப்புப் பேட்டைகளில் இருக்கின்றன. ஆகவே சென்று வரும் செலவும் மிச்சம். ஆனால், இணையத்தில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் கணினி வாங்க வேண்டும்,அதற்கு இணைய சேவை வாங்க வேண்டும், என பல செலவுகள். ஆகவே, நம் அறிவை வளர்க்கச் சிக்கனமான வழி நூலகத்திற்குச் செல்வது தான்.

 

இணையம் பலருக்கு ஒரு தகவல் பரிமாற்றக் கருவியாக பயன்படுகிறது. ஒரு மாணவர் செய்யும் ஆராய்ச்சியை வெளிநாட்டு மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இணையத்தில் வசதி உண்டு. ஆனால் நூலகத்தில் இது இல்லை.

 

இணையத்தில் தகவல்கள் மட்டும் இல்லாமல் பல விசயங்கள் இருக்கின்றன. விளையாட்டுத் தளங்கள், ஆபாசதளங்கள் உள்ளன. வேடிக்கைத் தளங்கள் என்று பல தளங்கள் உள்ளன. இவற்றிற்கு மாணவர்கள் தற்செயலாகச் சென்றாலும் அவர்களுடைய மனம் படிப்பதலிருந்து திசை திரும்பி விடும். ஆனால், செய்திகளை  உடனுக்குடன் இணையத்தில் மட்டுந் தான் பார்க்க முடியும். குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவது போல இல்லாமல் நம் மாணவர்கள் அவ்வப்போதைய சம்பவங்கள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தங்கள் எண்ணங்களைச் சிதைக்கும் பக்கங்களுக்குச்  சென்று தங்கள் நேரத்தை வீணாக்கக் கூடாது. காலம் பொன் போன்றது அல்லவா?

தங்கள் அறிவை வளர்க்க மாணவர்கள் இணையத்தையும் நாடவேண்டும். நூலகங்களுக்கும் செல்ல வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவர்கள் இருந்தால் அறிவை வளர்க்க முடியாது.முயற்சி எடுத்தால் தான் அறிவை வளர்க்க முடியும். முயற்சி திரு வினையாக்கும்.

( கலைச் செல்வன். 3 E) 

********************************************************************** 

சிங்கப்பூரில் தைப்பூசத்திருநாள் கொண்டாட்டத்தின்போது  நீ வழக்கமாகக்   காணும் காட்சிகளை விவரித்து எழுதுக.   

Note: இந்துக்கள் அல்லாத மாணவர்கள் விரும்பினால் படிக்கலாம்.  விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம்.

முன்னுரை

தைப்பூசத் திருநாள் சிங்கப்பூரில் பல்லாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் , நான் என் குடும்பத்தினரோடு ஸ்ரீ தண்டபாணிக் கோயிலுக்குத் தைப் பூசத்திருநாளைக் காணச் செல்வேன்.  

பாடல்கள் வரவசப்படுத்தும் காகண்களுக்கு விருந்தளிக்கும்

     `` வேல் ! வேல் ! வெற்றி வேல் ! `` என ஒரு  கூட்டத்தினர் ஒரு மூளையில் பாடிக்கொண்டே காவடிகளோடு நடந்து வர, இன்னொரு மூளையில் `` கந்தனுக்கு  அரோகரா, முருகனுக்கு அரோகரா `` என்று பஜனைக் குழுக்கள் கைகளில் மேள தாள வாத்தியங்களோடு இசைத்து வருவர். பக்தி மிக்க இப்பாடல்களைக் கேட்கும்போது காதுகளுக்கும் மனத்திற்கும் இன்பமாகவும் இனிமையாகவும் இருக்கும். பலநாள் விரதம் இருந்து வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்களுக்கும் இப்பாடல் பலம் கொடுக்கும். பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என பல்வேறு காவடிகளைக் காணும்போது என் கண்களையே என்னால் நம்ப முடியாது. அழகுக்கு அழகூட்டும் விதத்தில் சில காவடிகளில் முருகளை வரைந்திருப்பார்கள் மயில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் கந்தனைக் காண என் கண் இரண்டு போதாது.

கூட்டமும் குழந்தைக

கோயிலுக்குச் செல்லும் வழியில் மிக கூட்டமாக இருக்கும். நான் என் தந்தையாரின் கரத்தை இருக்கமாகப் பிடித்துக் கொள்வேன். சில நேரங்களில்  குழந்தைகள் சிலர் கூட்டத்தில் தொலைந்து போயிருப்பார்கள். இதனால் சில பெற்றொர்களின் முகத்தில் ஈ ஆடாது. பதற்றமும் பயமும் அவர்கைளப் பற்றிக் கொள்ள கதிகலங்கிய நிலையில் கண்களில் கண்ணீர் மல்க, வருவோர் போவோர் அனைவரிடமும் தங்களின் காணாமல் போனக் குழந்தைகளைப் பற்றி விசாரிப்பர். காவல் அதிகாரிகள் இப்பெற்றோருக்கு உதவி செய்வார்கள். ஒலிப் பெருக்கியில் இக்குழந்தைகளைப் பற்றி அறிவிப்பு செய்வர்.

சின்னஞ்சிறு கடைகள்

கோயிலுக்குச் செல்லும் பாதையில் சில வயதான முதியோர்கள் வளைகள், சாமிப்படங்கள், திரு நீர் போன்ற பல பொருட்களை நடைபாதையின் வழியின் ஓரமாக  அமர்ந்தபடி விற்றுக் கொண்டிருப்பார்கள். சில சின்ன கூடாரங்களினுள் மங்கையர்  சிலர் வடை, பாயசம், லட்டு, இட்லி, தோசை மற்றும் பல தின்பண்டங்களையும் குளிர்பானங்களையும் பசியுடையோர் வாங்கி புசிப்பதற்காக விற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்களின் உயவுப்பொருள்களின் வாசனை கமகமவென்று மூக்கைத் துளைக்கும்.

பஞ்சாமிர்தம்

நினைக்கவே எனக்குப் பசிக்கிறதே .எனக்கு மிகவும் பிடித்தது பஞ்சாமிர்தம்.பக்தர்கள் பலரும் தங்களுடைய நேர்த்திக் கடன்களை முடித்த பின்னர் பஞ்சாமிர்தத்தை வழிபட வந்திருப்போரிடம் வழங்குவர். `` ஆசை வெட்கம்அறியாது `` என்று கூறுவர் .நான் கூச்சப்படாமல் நிறைய பஞ்சாமிர்தத்தை வாங்கி உண்ணுவேன்.வாழைப்பழத்தால் செய்யப்பட்ட இந்த பஞ்சாமிர்தம் மிக இனிப்பாக இருக்கும்.

முருகனின் சன்னிதானம்

முருகனின் சன்னிதானத்திற்குள் மக்கள் கூட்டம் அலைமோதும். முட்டி மோதி தான்  கடவுளைக் காண இயலும். மக்கள் நடமாட்டத்தைச் சுலபாக்குவதற்காக பல  தடுப்புக் கம்பிகள்  காவல் அதிகாரிகளால்  போடப்பட்டிருக்கும். இவை ஒரு சில நிமிடங்களுக்கு நாம் முருகளைக் கண்டு வணங்க உதவும் . அதன் பின் நம்மை ஓட ஓட விரட்டி விடுவர் கடமையைச் செய்யும் கண்ணிய காவலர்கள். என் அன்பு வேலனைக் கண்டதே எனக்குக் கிடைத்த  அதிர்ஷ்டம் என நினைத்துக் கொண்டு நான் என்னைத் திருப்தி படுத்திக் கொள்வேன். காவடிகளுடன்  பக்தர்கள் முருகனின் முன் நின்று சில நிமிடங்களுக்குப் பாட்டு தாளத்துக் கேற்றபடி ஆடுவார்கள். காவடிகளைச் சில  பக்தர்கள் சுழற்றும் விதத்தைக் காண அழகாக இருக்கும். சதங்கை ஒலி `` ஜல் ஜல் `` என்று ஒலிக்க என் கால்களும் தன்னை மறந்து தாளம்போடும் . எனக்கும் ஆட ஆசையாக இருக்கும்.

முடிவுரை

ஒவ்வொரு வருடமும் நான் காணும் காவடிகள் வேறு வேறு வகையில் அலங்கரிக்கப் பட்டிருக்கும். நிறைய மயில் தோகைகள், இறகுகள் கொண்டும் , வண்ண வண்ண மாலைகள் கொண்டும் , விதவிதமான பூக்கள் கொண்டும் காவடிகள் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன.  முத்து மணிகளும் மாலைகளும் , முருகனின் புகைப்படங்களும் , வரைபடங்களும்  கூட அலங்காரத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் நான் கேட்கும் பாடல்களும் காணும் வாத்திய இசைக்கருவிகளும் கூட நவீன காலத்திற்கு ஏற்றபடி மாறி வருகின்றன. இவையே சிங்கப்பூரில் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டத்தின் போது நான் வழக்கமாகக் காணும் காட்சிகள் ஆகும். எது எப்படி இருந்தாலும் நான் தைப்பூசத்திருநாளில் கோயிலுக்குச் சென்று பெரும் உவகை அடைகின்றேன். நான் மட்டுமல்ல கடவுளை வணங்கும் அனைவருக்கும் மனத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருகி இருக்கும்.   (மு. இராஜி 3 )

                                             


Monday, November 30, 2020

நம் வாழ்வில் பரபரப்பு மிகுந்துவிட்டாலும், நமது அடையாளங்களை நாம் மறந்துவிடலாகாது - எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு


ரித்திக்கா ரங்கநாதன் (401) 

“ஒன்பது மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை

ஒன்பதரை ஆனால் உன் அம்மா சொந்தமில்லை 

தாயென்று காட்டுவதற்கும் தாவி எடுப்பதற்கும் 

ஞாயிற்றுக்கிழமை வரும், நல்லவளே கண்ணுறங்கு” 


அவையோர் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கங்கள். நான் இன்று பேச எடுத்துக்கொண்ட தலைப்பு, நம் வாழ்வில் பரபரப்பு மிகுந்துவிட்டாலும், நமது அடையாளங்களை நாம் மறந்துவிடலாகாது. 


அவையோரே, இன்றைய நவீன இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு வாழ்க்கை தொழில்நுட்ப வளர்ச்சியால் மிகுந்த பரபரப்பாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக நமது சிங்கை நகரில், நாம் அனைவரும் ஒரு நாளுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதால் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருக்கிறோம். இதன் காரணமாக, சுயமுன்னேற்றம், வெற்றி முதலானவற்றை மட்டுமே மனதில் கொண்டு, நமக்கென ஓர் அடையாளத்தைக் கொடுக்கும் குடும்பம், கலாச்சாரம், நாடு முதலான அம்சங்களை மறந்து நிற்கும் அவலநிலையை அடைந்திருக்குகிறோம். ஆனால், எவ்வளவுதான் வெற்றியைத் துரத்து வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாலும் தனிமனிதனாக நாம் நம் அடையாளங்களை நிச்சயமாக மறந்துவிடலாகாது. 


முதலாவதாக, நமக்கு மிக அருகில் இருக்கும் குடும்ப நிலையிலிருந்தே துவங்குவோம். அவையோரே, ஒரு நிமிடம் கண்களை மூடிச் சிந்தித்துப் பாருங்கள். கடைசியாக உங்களது தூரத்துச் சொந்தங்களிடம் நீங்கள் எப்போது பேசியிருப்பீர்கள்? ஒரு சில மாதங்கள் ஆகியிருக்குமா? அல்லது ஒரு வருடமே ஆகியிருக்குமா? நம் அடையாளத்தை நாம் எவ்வளவுதான் பேணுகின்றோம் என்பது இதிலிருந்தே தெரிகிறதே அவையோரே! நான் உரையின் தொடக்கத்தில் கூறிய வரிகள் இதை அழகாக எடுதிரைக்கின்றன. நமது பிஞ்சுக் கால்களால் இவ்வுலகிற்குள் முதல் பதம் எடுத்து வைக்கும்போதே, நம்மைச் சூழ்ந்திருப்பது நம் குடும்பம்தான். நன்மை தீமை கற்றுக்கொடுத்து, நமது எண்ணங்களைச் செதுக்கி, புத்திக்கூர்மையும் நற்பண்புகளும் கொண்ட சிறந்த மனிதனாக நம்மை உலக அரங்கில் நிற்கவைப்பவர்கள் நம் குடும்பம்தான். நமது அடையாளத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பார் நம் குடும்பம்தான். வாழ்க்கை பரபரப்பில் நம் குடும்பத்தை நாம் மறந்துவிடலாகுமா? குடும்பம், சொந்தம், பந்தம் எனும் நம் அடையாளங்களை நாம் மறந்துவிட்டால், எவ்வளவுதான் வாழ்க்கை எனும் ஏணியில் மேலே ஏறினாலும், ஆதரவின்றி அங்கே நிலைக்கமுடியாமல் கீழே விழுந்துவிடுவோம். நமது நற்பண்புகளை என்றும் நம்மை இழக்கவிடாமல் வைத்திருப்பது, வாழ்க்கைக்கு காட்டில் நாம் தொலைந்துவிடாமலிருக்க வழிகாட்டியாய் இருப்பது, நம் குடும்பத்தினர் தான். ஆகவே, வாழ்க்கை பரபரப்பில் குடும்பம் எனும் அடையாளத்தை நாம் மறந்துவிட்டால், வாழ்வில் நாம் சிகரங்களைத் தொட்டு சிங்கார நடை போடவியலாது. 


அடுத்தபடியாக, நாம் கலாச்சார நிலைக்குச் செல்வோம் அவையோரே. தனிமனிதனாக நமது அடையாளத்தில் மிகப்பெரிய பங்கை வகிப்பது நம் கலாச்சாரமும் பாரம்பரியமும் தான். குறிப்பாக நம் தமிழ்க்கலாச்சாரத்திற்கு இது நூற்றுக்கு நூறு உண்மையே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ்க் குடி அல்லவா அவையோரே? நமது கலாச்சாரத்திலே தமிழ்மொழி, உணவுமுறை, உறவுமுறை முதலான பற்பல அம்சங்கள் சேர்ந்து நம் கலாச்சாரத்திற்கு விண்ணளவு தொன்மையும் மண்ணளவு பெருமையும் தருகின்றன; தமிழன் எனும் அடையாளத்தை நமக்குத் தருகின்றன. ஆனால், தொழில்நுட்பத்தாலும் உலகமயமாக்கலாலும் வாழ்க்கை பரபரப்பாலும் இந்த மிக முக்கிய அடையாளத்தை நாம் இழந்துவருவதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறவில்லையா அவையோரே? பரபரப்பான உலகில் வாழ்கின்றோம் என்ற பெயரில் நாம் நம் மொழியை மறந்துவிட்டு அதை அழிய விடலாமா? நமது கலாச்சார பழக்கவழக்கங்களை புறக்கணிக்கலாமா? நமது அடையாளத்தைச் சாம்பலாய் எரியவிடலாமா? இந்தத் துயரத்தை நோக்கித்தான் நாம் பயணிக்கிறோம் அவையோரே! இந்நிலை நம்மைத் தாக்காமலிருக்க, கலாச்சாரம் எனும் அடையாளத்தை நாம் என்றும் மறக்கக்கூடாது. நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்ளவேண்டும். அப்போதே உலகம் நம்மை மதிக்கும், நமது அடையாளம் நிலைத்து நிற்கும்!


இறுதியாக, மானிடனிற்கு ஆகப்பெரிய அடையாளம்? அவனது மண்தான்; அவனது நாடுதான். "நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் எது வீடு?" எனும் பாடல் வரி காலத்தால் அழியாதது. ஆனால், இன்றைய பரபரப்பான, நவீன உலகில், பல மக்கள் சொந்த நாட்டிலேயே இருப்பதில்லை என்பதை நீங்களே கண்டு அனுபவித்திருக்கலாம் அவையோரே! இப்படி இருக்கும் பெரும்பாலான மக்கள், நாதங்கள் தாயநாடு எனும் அடையாளத்தையே மறந்து, வெவ்வேறு நாடுகளில் வாழும் பரபரப்பான வாழ்க்கையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். அவையோரே, வாழ்வின் பயணத்தில் நாம் எங்கே சென்றாலும், நமது அடையாளத்தை நமக்குத் தருவது நாம் பிறந்து, வளர்ந்து, படித்து, மகிழ்ந்த நம் தாய்நாடுதான். இந்த அடையாளத்தை மட்டுமே நாம் மறந்துவிட்டால், நம் வாழ்விற்கு ஒரு பொருளோ அர்த்தமோ இல்லாமல் போய்விடும். ஆனால், மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், நாடு எனும் அடையாளத்தை மறந்து நிற்பவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மட்டுமல்ல, தாய்நாட்டிலே தொடர்ந்து வாழ்பவர்களும்தான். வீடு, வேலை எனும் நம் சிங்கை நாட்டு பரபரப்பில், நாட்டுப்பற்றை இழந்து, நாட்டை நம் அடையாளமாக நாம் காண்பது கூட அல்ல இவ்வாறே நாம் வாழ்ந்தால், நாடு என்பது வீடாய் இருக்காது, வெறும் நிலமாய் ஆகிவிடும். அந்நிமிடமே, நாம் அனைவரும் அடையாளத்தை இழந்து அனாதையாகிவிடுவோம்! ஆகையால், வாழ்வின் எந்த மூலைக்குச் சென்று என்ன செய்தாலும், நாம் சிங்கப்பூரர்கள் எனும் அடையாளத்தை மட்டுமே மறந்துவிடலாகாது, அவையோரே!


அவையோரே, அடையாளம் என்பது மனிதனாகிய மரத்திற்கு வேரைப்போன்றது. மரம் எவ்வளவுதான் செழித்து வளர்ந்தாலும், அதன் வேர்களை மட்டுமே இழந்துவிட்டால் அடியோடு சாய்ந்துவிடுமல்லவா? அதை போல், மனிதன் எவ்வளவுதான் இன்றைய பரபரப்பான உலகிற்குள் தன்னைப் பூட்டிக்கொண்டு வெற்றியைத் துரத்தித் துரத்திச் சென்றாலும், அடையாளம் எனும் வேர்கள் இல்லாவிடில் மடிந்துவிடுவான். எனவே, நமக்கு என்றென்றும் அடையாளாமாகத் திகழும் குடும்பம், கலாச்சாரம் மற்றும் நாட்டை மறந்துவிடாமல், அவற்றில் பெருமை கொள்ளவேண்டும் அவையோரே! அப்போதுதான் வாழ்க்கை முழுமையானதாகவும் நிறைவானதாகவும் இருக்கும். எனவே, தேடித் சோறு நித்தம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, நரை கூடி கிழப்பருவம் எய்தி, கொடுங்கூற்றுக்கு இரை எனபின் மாயும், பல வேடிக்கை மனிதரைப்போல் வீழாமல் நம் அடையாளத்தைக் கட்டிக்காப்போம், பேணுவோம், போற்றுவோம் -- நமது அடையாள அம்சங்களே நமது மூச்சு என்று உணர்வோம் எனக்கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!




இளையர்கள் இந்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கிறார்களா


ஆராதனா- 204

      இன்றைய இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் சிறிதளவும் ஆர்வம் காட்டுவதில்லை. பெண்கள் பொட்டு வைப்பதிலிருந்து ஆண்கள் வேட்டி கட்டுவது வரை இன்றைய இளையர்களிடம் காணமுடிவதில்லை. விழாக்காலங்களில் கூட கோவில்களுக்குப் போவதோ , குடும்பத்தினருடன் வாழை இலையில் சாப்பாடு சாப்பிடுவதோ, அவ்வளவு செய்வதில்லை. அவ்வாறு செய்தாலும், பெற்றோர்கள் வற்புறுத்துவதால்தான் செய்கிறார்கள். இந்தியர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் பல நன்மைகள் உண்டு என்று இளைஞர்களுக்குப் புரிவதில்லை.

 

      நம் இந்தியப் பாரம்பரியத்தில், பாரம்பரிய ஆடைகள் அணிவது வழக்கம். பெண்கள் தங்கள் நெற்றியில் பொட்டுவைத்து, பூவைத்து, பல்வேறு நகைகளும் அணிவதுண்டு. நெற்றியில் திருநீறு, குங்குமம் ஆகியவற்றையும் பூசுவார்கள். ஆண்கள் வேட்டி, சட்டை அணிவதும், பெண்கள் சேலை கட்டுவதும் உண்டு. ஆனால் இன்றைய இளைஞர்கள் அவற்றைச் செய்வதில்லை. அவ்வாறு செய்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. பாரம்பரிய ஆடைகளையோ ஆபரணங்களையோ அணிவதற்கு அவமானப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் செய்வதற்குத் சோம்பேறித்தனமாகவும் இருக்கிறார்கள். மேலும் பாரம்பரிய ஆடைகள் அணிந்தால் சூடாக இருக்கிறது என்றும் பலர் புலம்புகிறார்கள். ஆனால், இவ்வாறு செய்வது நம்முடைய அடையாளம் என்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் அணியும் உடைகளையோ ஆபரணங்களையோ பார்த்துத் தான் மற்றவர்கள் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். இப்படிப்பட்ட பழக்கவழக்கத்தை நாம் கடைப்பிடிக்காவிட்டால், யார் கடைப்பிடிப்பார்? அதோடு இவ்வாறு பாரம்பரிய உடைகள் அணியும்போது தான் மிகவும் அழகாக இருக்கும். 

 

      விழாக்காலங்களின் போது , நாம் வழக்கமாகக் கோவிலுக்குச் செல்வோம். ஆனால் ,  இளைஞர்கள் பலர் கோவிலுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சிங்கப்பூரில் , இந்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பல கோவில்களும் கட்டி இருக்கிறார்கள். ஆனால் , கோவிலுக்குச் செல்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள மறக்கிறார்கள் இளைஞர்கள். விழா நாளின்போது கோவிலுக்குச்சென்று , காலையில் கடவுளை வணங்கி , ஆசிர்வாதம் பெற்றால் , அந்நாள் நல்லபடியாக இருக்கும். அதுவும் கோவிலுக்குச் சென்று, சாமியைக் கும்பிட்டுச் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இருப்பது நமக்கு மனஉளைச்சலைக் குறைத்து , நிம்மதியைத் தரும். அதுவும் பல்வேறு கோவில்கள் முன்னோர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. கோவிலின் கோபுரத்தில் இருக்கும் சிலைகள் எல்லாம் கையாலேயே செய்யப்பட்ட பொருட்கள். அதன் பின் பல கதைகளும் அதிசயங்களும் உண்டு. இவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றால் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். 

 

      வாழை இலைகளில் சாப்பிடுவதை இளைஞர்கள் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், எவ்வளவு பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பது வேறொரு விஷயம். வாழை இலையில் உணவு பரிமாறுவது இக்காலத்தில் அரிது. ஆனால் , அவ்வாறு செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. வாழை இலையில் சாப்பிடும்போது , அதன் மருத்துவக்குணம் நமக்குக் கிடைக்கும். வாழை இலைக்குப் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. அதுவும் உணவைக் கையில் எடுத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்போதுதான் நமக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் சாப்பிட முடியும். கையில் எடுத்துச் சாப்பிடுவது நம்முடைய முக்கியப் பழக்கவழக்கமாகும். ஆனால், கைகள் அழுக்காகிவிடும் என்று இளையர்கள் கூறி அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு செய்வதன் நன்மைகளை முதலில் புரிந்துகொண்டு , இளைஞர்கள் செயல்பட வேண்டும். 

 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்பது பழமொழி.

      நம் பெற்றோர்கள் நம் கண்களுக்கு முன் தென்படும் தெய்வங்கள் என்று நாம் கருதுகிறோம். அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது ஒரு இந்தியப் பழக்கவழக்கம். ஆனால் , இளைஞர்கள் அவ்வாறு செய்வதும் இல்லை, பெற்றோர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் , நம்மை இந்த உலகிற்கு கொண்டுவந்ததே அவர்கள் தான். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை.மாதா பிதா குரு தெய்வம்என்பதில் நம் அம்மாவும் அப்பாவும் தான் முதல். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்போது நமக்குப் புண்ணியம் கிடைக்கும். இவ்வளவு மரியாதையுள்ள இந்தப் பழக்கவழக்கத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுபோல் நம் பாரம்பரியத்தில் பல பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றின் பின் காரணங்களும் இருக்கின்றன , நன்மைகளும் இருக்கின்றன. இவற்றை இளையர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்தியப் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொன்டே வருகிறது. இளையர்கள் தான் அதைக் கடைப்பிடித்து பாரம்பரியத்தைக் காக்க வேண்டும். அவ்வாறு செய்வது அவர்களுடைய கடமை.ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?" இளமையிலேயே இதுபோன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தால் தான் முதுமை வரை பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம். இளமையிலேயே பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நன்மைகளையும் அவர்களுக்கு விளக்குவது இளைஞர்களின் பொறுப்பு. நம் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் வேறு யார் கடைப்பிடிப்பார்? அதனால் , இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது முக்கியம் மற்றும் அவசியம். 

 

      இந்தியப் பழக்கவழக்கங்களே நம்முடைய அடையாளம் அவற்றை மறக்காமல் கடைப்பிடிப்பது அவசியம். இளையர்கள் பழக்கவழக்கங்களின் அவசியத்தையும் நன்மைகளையும் புரிந்துகொள்வது முக்கியம். அப்போது தான் கடைப்பிடிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். அவ்வாறு செய்வதற்கு அவமானமோ சோம்பேறித்தனமோ படக்கூடாது. இந்தியப் பாரம்பரியத்தை காப்பது அவர்களின் கைகளில் தான் இருக்கிறது.இந்தியர்கள் நாம்! பெருமையாக இருப்போம்!யாமறிந்த பாரம்பரியங்களில் இந்தியப் பாரம்பரியம் மிகச்சிறந்தது. இளையர்கள் பெருமையாகப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். 

 

 

மற்றவர்களது குறைகளைப் பற்றிக் கேலி பேசும் பழக்கத்தால் ஏற்பட்ட விளைவு - யாழினிஸ்ரீ அண்ணாதுரை வகுப்பு : 206 - 2020

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நன்று” என்ற வள்ளுவரின் பொன்சொற்களை நாம் பல முறை கேட்டிருப்போம். ஆனால், இக்குறளை அறிந்தும் நான் அதை நடைமுறையில் கொண்டு வராமல் செயல்பட்ட சம்பவம் என் மனதில் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கும். நான் அப்போது உயர்நிலை இரண்டில் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நெருங்கிய தோழிகள் பலர் இருந்தாலும், ஒரு தோழி மட்டும் வித்தியாசமாக இருந்தாள். மாதவி என்ற பெயர் கொண்ட அவள் திக்கித் திக்கிப் பேசுபவள். வகுப்பில் யாரும் அவளுடன் சேரமாட்டார்கள். உயர்நிலை ஒன்றில் அவள் எந்த நண்பரும் இன்றி தனியாகத் தான் இருந்தாள். அவளுக்கும் எனக்கும் இடையே எந்தவித பேச்சு வார்த்தையும் இல்லை. நானும் மற்ற மாணவர்களைப் போல் அவளை விட்டு விலகியே இருந்தேன். ஆனால், உயர்நிலை இரண்டில் எங்களின் வகுப்பாசிரியர் அவளை என் பக்கத்தில் உட்காரச் செய்தார். கணக்கிலும் அறிவியலிலும் நான் சிரம்ப்பட்டுக் கொண்டிருக்க, அவள் அவற்றில் மேதையாக விளங்கினாள். நாட்கள் செல்லச் செல்ல நான் சிரமப்படுவதை அறிந்த அவள் , ‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்பதற்கேற்ப தன் தாட்களை என்னிடம் காட்டி எனக்குப் புரிய வைக்கும்படி கூறினாள். திடீரென்று, அவள் எனக்கு உதவுவதை உணர்ந்த நான் முதலில் அவள் கூறியவற்றைப் பொருட்படுத்தாமல் , “நன்றி. ஆனால், எனக்கு உதவி தேவையில்லை,” என்று அலட்சியமாகக் கூறினேன். ஆனால், இந்த எண்ணத்தை என் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் சுக்கு நூறாக்கிக் காற்றில் பறக்கவிட்டன. கணக்கிலும் அறிவியலிலும் தேர்ச்சி பெறாத நான் இம்முறை தானாகவேச் சென்று மாதவியிடம் உதவி கேட்டேன். அவள் என்னை மன்னித்துவிட்டு எனக்கு ஒவ்வொரு நாளும் உதவ உதவ, நானும் அவளும் கூடிய சீக்கிரத்தில் இணைபிரியா தோழிகள் ஆனோம். ஆனால், என்னிடம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பழக்கம் இருந்தது. அதாவது வகுப்பு மாணவர்களிடம் உள்ள குறைகளைப் பற்றி மற்றவர்களிடம் கூறிக் கேலி பேசி மகிழ்வது ஆகும். மாதவி என் நண்பர்களிலேயே அதிகக் கருணை குணம் கொண்டவள் என்றாலும் அவளது திக்கித் திக்கிப் பேசும் பழக்கம் எனக்கு அதிக வியப்பையேத் தந்தது. என் மற்ற நண்பர்கள் என்னிடம், “நீ ஏன் அவளுடன் பழகுகிறாய்? அவள் பேசுவதை யாராலும் புரிந்துகொள்ள முடியாதே,” என்றெல்லாம் வினவியபோது நான் அவர்களிடம் கல்வியில் உதவி பெறுவதற்காகவே அவளுடன் பழகுவதாகப் பொய் சொல்வேன். பிறகு, அவர்களும் நானும் அவளைத் தொடர்ந்து கேலி செய்வோம். என் மற்ற நண்பர்களை இழக்க விரும்பாத நான் இப்போக்கை ஓட்டிக்கொண்டே இருந்தேன். முகத்தளவில் மட்டும் மாதவியுடன் நட்புகொண்டிருந்ததால் என் உள்ளத்தில் அவள் மீது ஒருவகையான வெறுப்பு வளர்ந்தது. இவை அனைத்தையும் அறியாத மாதவி தனது ஒரே நெருங்கிய தோழியாக விளங்கிய என்னை மிகவும் நேசித்தாள். “உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவரது சொற்களைப் போல் அவள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எனக்குத் துணையாக நின்றாள். அம்மாதிரியான நற்குணம் படைக்காத நான் அவள் எனக்குச் செய்ததை எல்லாம் புறக்கணித்து அடுத்த வருடம் வகுப்பு பிரிவதால் அவளைவிட்டுப் போய் விடலாம் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு முற்றுப்புள்ளியை வைத்தது. ஒருமுறை நான் மாதவியை ஏளனம் செய்துகொண்டிருந்தபோது மாதவி அங்கே இருப்பதை நான் கவனிக்கவில்லை. அன்று உலக நண்பர்கள் தினம் என்பதால் அவள் எனக்காக ஒரு பெரிய பரிசுப்பொருளுடன் நின்றுகொண்டிருப்பதை நான் பார்க்கவில்லை. நான் தொடர்ந்து என் நண்பர்களுடன் அவளைக் கேலி செய்ய, திடீரென்று ஒரு பொருள் பலத்த சத்தத்துடன் விழுவது என் காதுகளில் விழுந்தது. ஆம், அது மாதவி எனக்கு வாங்கி வந்த பொருளாகும். திரும்பிப் பார்த்தபோது மாதவியைக் கண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளது கண்களிலிருந்து நீர் அருவிபோல் வழிந்தது. இதைக் கண்ட என் மற்ற நண்பர்கள் நான் நேர்மையின்றி நடப்பதை அறிந்தனர். அவர்கள் என்னை வெறுப்புடன் பார்க்க நான் வெட்கத்தில் தலைகுனிந்து நின்றேன். ஆனால், என் கால்களோ மாதவி சென்ற வழியைப் பின்தொடரச் சென்றன. மாதவி ஓர் ஊஞ்சலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பதைக் கண்டபோது என் மனம் உடைந்தது. “என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன், ஓர் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்” என்ற பாடல் வரிகள் என் மனத்தில் ஒலித்தன. நான் ஒரு நல்ல தோழி என்று என்னை நம்பி வந்த மாதவியை ஏமாற்றி விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னுள் குடிகொள்ள நான் கண்ணீர் மல்க என் போக்கைப் பற்றிய உண்மையைக் கூறி அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். அவள் திக்கித் திக்கி “என்னுடன் இனிமேல் பேசவேப் பேசாதே!” என்று தன் பலத்தைத் திரட்டிக்கொண்டு தொண்டை கிழியக் கத்தினாள். அவள் மனம் புண்படுமாறு நடந்துகொண்ட என்னை அவள் எவ்வாறு மன்னிப்பாள். இவ்வளவு நாள் அவள் முன் மட்டும் இனிதாகப் பேசி அவளுக்குப் பின் அவளைக் கேலி செய்ததை எப்படி மன்னிப்பாள் ? இக்கேள்விகள் அனைத்தும் என் மனத்தை ஆட்கொள்ள நான் என் செயல்களை நினைத்து ஒரு நல்ல தோழியை இழந்துவிட்டோமே என்று வருந்தி வீடு திரும்பினேன். அன்றிலிருந்து என் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் என்னுடன் பழகுவதை நிறுத்தினார்கள். அவர்கள் எல்லோரும் மாதவி மீது பரிதாபப்பட்டு அவளுக்குத் துணையாக இருக்க நான் மட்டும் தனிமையில் வாடினேன். என் செயல்களின் விளைவுகளை அனுபவித்தேன். “நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற பாடல் வரிகளை நாம் பல முறை கேட்டிருப்போம். நேர்மை என்பது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய தலைசிறந்த பண்பாகும். நம்மை நம்பி இருப்பவர்களைக் கைவிடாமல் அவர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்டுவது போல் நாமும் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு வாழ்ந்தால் தான், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்று நாம் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வள்ளுவர் கூறும் தெய்வ நிலையை அடைய முடியும். நல்லொழுக்கத்தின் முக்கியமான பண்பாக விளங்கும் நேர்மையை உணர்த்திய இச்சம்பவத்தை நான் என்றென்றும் நினைவில் வைத்துக்கொண்டு நேர்மையுடன் நடத்துகொள்ளத் தொடர்ந்து முற்படுவேன்.

Thursday, October 29, 2020

 

   பதின்மவயதினர் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்களா? இதுபற்றிய உன் கருத்தை விளக்கி எழுதவும். 

 

         இன்றைய இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் சிறிதளவும் ஆர்வம் காட்டுவதில்லை. பெண்கள் பொட்டு வைப்பதிலிருந்து ஆண்கள் வேட்டி கட்டுவது வரை இன்றைய இளையர்களிடம் காணமுடிவதில்லை. விழாக்காலங்களில் கூட கோவில்களுக்குப் போவதோ , குடும்பத்தினருடன் வாழை இலையில் சாப்பாடு சாப்பிடுவதோ, அவ்வளவு செய்வதில்லை. அவ்வாறு செய்தாலும், பெற்றோர்கள் வற்புறுத்துவதால்தான் செய்கிறார்கள். இந்தியர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களுக்குப் பல நன்மைகள் உண்டு என்று இளைஞர்களுக்குப் புரிவதில்லை.

 

         நம் இந்தியப் பாரம்பரியத்தில், பாரம்பரிய ஆடைகள் அணிவது வழக்கம். பெண்கள் தங்கள் நெற்றியில் பொட்டுவைத்து, பூவைத்து, பல்வேறு நகைகளும் அணிவதுண்டு. நெற்றியில் திருநீர், குங்குமம் ஆகியவற்றையும் பூசுவார்கள். ஆண்கள் வேட்டி சட்டை அணிவதும், பெண்கள் சேலை கட்டுவதும் உண்டு. ஆனால், இன்றைய இளைஞர்கள் அவற்றைச் செய்வதில்லை. அவ்வாறு செய்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. பாரம்பரிய ஆடைகளையோ ஆபரணங்களையோ அணிவதற்கு அவமானப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் செய்வதற்குச் சோம்பேறித்தனமாகவும் இருக்கிறார்கள். மேலும் பாரம்பரிய ஆடைகள் அணிந்தால் சூடாக இருக்கிறது என்றும் பலர் புலம்புகிறார்கள். ஆனால் இவ்வாறு செய்வது நம்முடைய அடையாளம் என்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் அணியும் உடைகளையோ ஆபரணங்களையோ பார்த்துத் தான் மற்றவர்கள் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். இப்படிப்பட்ட பழக்கவழக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் , யார் கடைப்பிடிப்பார்? அதோடு இவ்வாறு பாரம்பரிய உடைகள் அணியும்போது தான் மிகவும் அழகாக இருக்கும்.

 

         விழாக்காலங்கள்போது , நாம் வழக்கமாகக் கோவிலுக்குச் செல்வோம். ஆனால் , பல இளைஞர்கள் கோவிலுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சிங்கப்பூரில் , இந்தியப் பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்குப் , பல கோவில்களும் கட்டி இருக்கிறார்கள். ஆனால் , கோவிலுக்குச் செல்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள மறக்கிறார்கள் இளைஞர்கள். விழாநாளின்போது கோவிலுக்குச்சென்று , காலையில் கடவுளைக் கும்பிட்டு , ஆசிர்வாதம் பெற்றால் , அந்நாள் நல்லபடியாக இருக்கும். அதுவும் கோவிலுக்குச் சென்று , சாமியை கும்பிட்டு சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இருப்பது நமக்கு மனஉளைச்சலைக் குறைத்து , நிம்மதியை தரும். அதுவும் பல்வேறு கோவில்கள் முன்னோர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. கோவிலின் கோபுரத்தில் இருக்கும் சிலைகள் எல்லாம் கையாலேயே செய்யப்பட்ட பொருட்கள். அதன் பின் பல கதைகளும் அதிசயங்களும் உண்டு. இவற்றை தெரிந்துகொள்ள முயன்றால் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

 

         வாழை இலைகளில் சாப்பிடுவதை இளைஞர்கள் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் எவ்வளவு பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பது வேறொரு விஷயம். வாழை இலையில் உணவு பரிமாறுவது இக்காலத்தில் அரிது. ஆனால் , அவ்வாறு செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. வாழை இலையில் சாப்பிடும்போது , அதன் மருத்துவக்குணம் நமக்கு கிடைக்கும். வாழை இலைக்கு பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. அதுவும் உணவை கையில் எடுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்போதுதான் நமக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் சாப்பிட முடியும். கையில் எடுத்து சாப்பிடுவது நம்முடைய முக்கிய பழக்கவழக்கமாகும். ஆனால், கைகள் அழுக்காகிவிடும் என்று இளையர்கள் கூறி அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு செய்வதன் நன்மைகளை முதலில் புரிந்துகொண்டு , இளைஞர்கள் செய்லபட வேண்டும்.

 

அண்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்பது பழமொழி.

         நம் பெற்றோர்கள் நம் கண்களுக்கு முன் தென்படும் தெய்வங்கள் என்று நாம் கருதுகிறோம். அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது ஒரு இந்தியப் பழக்கவழக்கம். ஆனால் , இளைஞர்கள் அவ்வாறு செய்வதும் இல்லை, பெற்றோர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் , நம்மை இந்த உலகிற்கு கொண்டுவந்ததே அவர்கள் தான். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. “மாதா பிதா குரு தெய்வம்என்பதில் நம் அம்மாவும் அப்பாவும் தான் முதல். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்போது நமக்கு புண்ணியம் கிடைக்கும். இவ்வளவு மரியாதையுள்ள இந்த பழக்கவழக்கத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுபோல் நம் பாரம்பரியத்தில் பல பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றின் பின் காரணங்களும் இருக்கின்றன , நன்மைகளும் இருக்கின்றன. இவற்றை இளையர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்தியப் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொன்டே வருகிறது. இளையர்கள் தான் அதைக் கடைப்பிடித்து பாரம்பரியத்தை காக்க வேண்டும். அவ்வாறு செய்வது அவர்களுடைய கடமை. “ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?" இளமையிலேயே இதுபோன்ற பழக்கங்களை செய்து கடைப்பிடித்து வந்தால் தான் முதுமை வரை பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்கலாம். இளமையிலேயே பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நன்மைகளையும் அவர்களுக்கு விளக்குவது இளைஞர்களின் பொறுப்பு. நம் பாரம்பரியத்தை கடைப்பிடிக்காவிட்டால் வேறு யார் கடைப்பிடிப்பார்? அதனால் , இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது முக்கியம் மற்றும் அவசியம்.

 

         இந்தியப் பழக்கவழக்கங்களே நம்முடைய அடையாளம் அவற்றை மறக்காமல் கடைப்பிடிப்பது அவசியம். இளையர்கள் பழக்கவழக்கங்களின் அவசியத்தையும் நன்மைகளையும் புரிந்துகொள்வது முக்கியம். அப்போது தான் கடைப்பிடிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். அவ்வாறு செய்வதற்கு அவமானமோ சோம்பேறித்தனமோ படக்கூடாது. இந்தியப் பாரம்பரியத்தை காப்பது அவர்களின் கைகளில் தான் இருக்கிறது. “இந்தியர்கள் நாம்! பெருமையாக இருப்போம்!” யாமறிந்த பாரம்பரியங்களில் இந்தியப் பாரம்பரியம் மிகச்சிறந்தது. இளையர்கள் பெருமையாக பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.

 

ஆராதனா, 204

        

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...