Monday, November 30, 2020

மற்றவர்களது குறைகளைப் பற்றிக் கேலி பேசும் பழக்கத்தால் ஏற்பட்ட விளைவு - யாழினிஸ்ரீ அண்ணாதுரை வகுப்பு : 206 - 2020

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நன்று” என்ற வள்ளுவரின் பொன்சொற்களை நாம் பல முறை கேட்டிருப்போம். ஆனால், இக்குறளை அறிந்தும் நான் அதை நடைமுறையில் கொண்டு வராமல் செயல்பட்ட சம்பவம் என் மனதில் எப்போதும் நிழலாடிக்கொண்டே இருக்கும். நான் அப்போது உயர்நிலை இரண்டில் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நெருங்கிய தோழிகள் பலர் இருந்தாலும், ஒரு தோழி மட்டும் வித்தியாசமாக இருந்தாள். மாதவி என்ற பெயர் கொண்ட அவள் திக்கித் திக்கிப் பேசுபவள். வகுப்பில் யாரும் அவளுடன் சேரமாட்டார்கள். உயர்நிலை ஒன்றில் அவள் எந்த நண்பரும் இன்றி தனியாகத் தான் இருந்தாள். அவளுக்கும் எனக்கும் இடையே எந்தவித பேச்சு வார்த்தையும் இல்லை. நானும் மற்ற மாணவர்களைப் போல் அவளை விட்டு விலகியே இருந்தேன். ஆனால், உயர்நிலை இரண்டில் எங்களின் வகுப்பாசிரியர் அவளை என் பக்கத்தில் உட்காரச் செய்தார். கணக்கிலும் அறிவியலிலும் நான் சிரம்ப்பட்டுக் கொண்டிருக்க, அவள் அவற்றில் மேதையாக விளங்கினாள். நாட்கள் செல்லச் செல்ல நான் சிரமப்படுவதை அறிந்த அவள் , ‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்பதற்கேற்ப தன் தாட்களை என்னிடம் காட்டி எனக்குப் புரிய வைக்கும்படி கூறினாள். திடீரென்று, அவள் எனக்கு உதவுவதை உணர்ந்த நான் முதலில் அவள் கூறியவற்றைப் பொருட்படுத்தாமல் , “நன்றி. ஆனால், எனக்கு உதவி தேவையில்லை,” என்று அலட்சியமாகக் கூறினேன். ஆனால், இந்த எண்ணத்தை என் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் சுக்கு நூறாக்கிக் காற்றில் பறக்கவிட்டன. கணக்கிலும் அறிவியலிலும் தேர்ச்சி பெறாத நான் இம்முறை தானாகவேச் சென்று மாதவியிடம் உதவி கேட்டேன். அவள் என்னை மன்னித்துவிட்டு எனக்கு ஒவ்வொரு நாளும் உதவ உதவ, நானும் அவளும் கூடிய சீக்கிரத்தில் இணைபிரியா தோழிகள் ஆனோம். ஆனால், என்னிடம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பழக்கம் இருந்தது. அதாவது வகுப்பு மாணவர்களிடம் உள்ள குறைகளைப் பற்றி மற்றவர்களிடம் கூறிக் கேலி பேசி மகிழ்வது ஆகும். மாதவி என் நண்பர்களிலேயே அதிகக் கருணை குணம் கொண்டவள் என்றாலும் அவளது திக்கித் திக்கிப் பேசும் பழக்கம் எனக்கு அதிக வியப்பையேத் தந்தது. என் மற்ற நண்பர்கள் என்னிடம், “நீ ஏன் அவளுடன் பழகுகிறாய்? அவள் பேசுவதை யாராலும் புரிந்துகொள்ள முடியாதே,” என்றெல்லாம் வினவியபோது நான் அவர்களிடம் கல்வியில் உதவி பெறுவதற்காகவே அவளுடன் பழகுவதாகப் பொய் சொல்வேன். பிறகு, அவர்களும் நானும் அவளைத் தொடர்ந்து கேலி செய்வோம். என் மற்ற நண்பர்களை இழக்க விரும்பாத நான் இப்போக்கை ஓட்டிக்கொண்டே இருந்தேன். முகத்தளவில் மட்டும் மாதவியுடன் நட்புகொண்டிருந்ததால் என் உள்ளத்தில் அவள் மீது ஒருவகையான வெறுப்பு வளர்ந்தது. இவை அனைத்தையும் அறியாத மாதவி தனது ஒரே நெருங்கிய தோழியாக விளங்கிய என்னை மிகவும் நேசித்தாள். “உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவரது சொற்களைப் போல் அவள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எனக்குத் துணையாக நின்றாள். அம்மாதிரியான நற்குணம் படைக்காத நான் அவள் எனக்குச் செய்ததை எல்லாம் புறக்கணித்து அடுத்த வருடம் வகுப்பு பிரிவதால் அவளைவிட்டுப் போய் விடலாம் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு முற்றுப்புள்ளியை வைத்தது. ஒருமுறை நான் மாதவியை ஏளனம் செய்துகொண்டிருந்தபோது மாதவி அங்கே இருப்பதை நான் கவனிக்கவில்லை. அன்று உலக நண்பர்கள் தினம் என்பதால் அவள் எனக்காக ஒரு பெரிய பரிசுப்பொருளுடன் நின்றுகொண்டிருப்பதை நான் பார்க்கவில்லை. நான் தொடர்ந்து என் நண்பர்களுடன் அவளைக் கேலி செய்ய, திடீரென்று ஒரு பொருள் பலத்த சத்தத்துடன் விழுவது என் காதுகளில் விழுந்தது. ஆம், அது மாதவி எனக்கு வாங்கி வந்த பொருளாகும். திரும்பிப் பார்த்தபோது மாதவியைக் கண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளது கண்களிலிருந்து நீர் அருவிபோல் வழிந்தது. இதைக் கண்ட என் மற்ற நண்பர்கள் நான் நேர்மையின்றி நடப்பதை அறிந்தனர். அவர்கள் என்னை வெறுப்புடன் பார்க்க நான் வெட்கத்தில் தலைகுனிந்து நின்றேன். ஆனால், என் கால்களோ மாதவி சென்ற வழியைப் பின்தொடரச் சென்றன. மாதவி ஓர் ஊஞ்சலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பதைக் கண்டபோது என் மனம் உடைந்தது. “என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன், ஓர் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்” என்ற பாடல் வரிகள் என் மனத்தில் ஒலித்தன. நான் ஒரு நல்ல தோழி என்று என்னை நம்பி வந்த மாதவியை ஏமாற்றி விட்டேன் என்ற குற்ற உணர்வு என்னுள் குடிகொள்ள நான் கண்ணீர் மல்க என் போக்கைப் பற்றிய உண்மையைக் கூறி அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். அவள் திக்கித் திக்கி “என்னுடன் இனிமேல் பேசவேப் பேசாதே!” என்று தன் பலத்தைத் திரட்டிக்கொண்டு தொண்டை கிழியக் கத்தினாள். அவள் மனம் புண்படுமாறு நடந்துகொண்ட என்னை அவள் எவ்வாறு மன்னிப்பாள். இவ்வளவு நாள் அவள் முன் மட்டும் இனிதாகப் பேசி அவளுக்குப் பின் அவளைக் கேலி செய்ததை எப்படி மன்னிப்பாள் ? இக்கேள்விகள் அனைத்தும் என் மனத்தை ஆட்கொள்ள நான் என் செயல்களை நினைத்து ஒரு நல்ல தோழியை இழந்துவிட்டோமே என்று வருந்தி வீடு திரும்பினேன். அன்றிலிருந்து என் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் என்னுடன் பழகுவதை நிறுத்தினார்கள். அவர்கள் எல்லோரும் மாதவி மீது பரிதாபப்பட்டு அவளுக்குத் துணையாக இருக்க நான் மட்டும் தனிமையில் வாடினேன். என் செயல்களின் விளைவுகளை அனுபவித்தேன். “நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா” என்ற பாடல் வரிகளை நாம் பல முறை கேட்டிருப்போம். நேர்மை என்பது மனிதர்களுக்கு இருக்க வேண்டிய தலைசிறந்த பண்பாகும். நம்மை நம்பி இருப்பவர்களைக் கைவிடாமல் அவர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்டுவது போல் நாமும் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு வாழ்ந்தால் தான், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்று நாம் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வள்ளுவர் கூறும் தெய்வ நிலையை அடைய முடியும். நல்லொழுக்கத்தின் முக்கியமான பண்பாக விளங்கும் நேர்மையை உணர்த்திய இச்சம்பவத்தை நான் என்றென்றும் நினைவில் வைத்துக்கொண்டு நேர்மையுடன் நடத்துகொள்ளத் தொடர்ந்து முற்படுவேன்.

No comments: