Monday, November 30, 2020

இளையர்கள் இந்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கிறார்களா


ஆராதனா- 204

      இன்றைய இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் சிறிதளவும் ஆர்வம் காட்டுவதில்லை. பெண்கள் பொட்டு வைப்பதிலிருந்து ஆண்கள் வேட்டி கட்டுவது வரை இன்றைய இளையர்களிடம் காணமுடிவதில்லை. விழாக்காலங்களில் கூட கோவில்களுக்குப் போவதோ , குடும்பத்தினருடன் வாழை இலையில் சாப்பாடு சாப்பிடுவதோ, அவ்வளவு செய்வதில்லை. அவ்வாறு செய்தாலும், பெற்றோர்கள் வற்புறுத்துவதால்தான் செய்கிறார்கள். இந்தியர்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் பல நன்மைகள் உண்டு என்று இளைஞர்களுக்குப் புரிவதில்லை.

 

      நம் இந்தியப் பாரம்பரியத்தில், பாரம்பரிய ஆடைகள் அணிவது வழக்கம். பெண்கள் தங்கள் நெற்றியில் பொட்டுவைத்து, பூவைத்து, பல்வேறு நகைகளும் அணிவதுண்டு. நெற்றியில் திருநீறு, குங்குமம் ஆகியவற்றையும் பூசுவார்கள். ஆண்கள் வேட்டி, சட்டை அணிவதும், பெண்கள் சேலை கட்டுவதும் உண்டு. ஆனால் இன்றைய இளைஞர்கள் அவற்றைச் செய்வதில்லை. அவ்வாறு செய்வதில் ஆர்வமும் காட்டுவதில்லை. பாரம்பரிய ஆடைகளையோ ஆபரணங்களையோ அணிவதற்கு அவமானப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் செய்வதற்குத் சோம்பேறித்தனமாகவும் இருக்கிறார்கள். மேலும் பாரம்பரிய ஆடைகள் அணிந்தால் சூடாக இருக்கிறது என்றும் பலர் புலம்புகிறார்கள். ஆனால், இவ்வாறு செய்வது நம்முடைய அடையாளம் என்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் அணியும் உடைகளையோ ஆபரணங்களையோ பார்த்துத் தான் மற்றவர்கள் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காண்கிறார்கள். இப்படிப்பட்ட பழக்கவழக்கத்தை நாம் கடைப்பிடிக்காவிட்டால், யார் கடைப்பிடிப்பார்? அதோடு இவ்வாறு பாரம்பரிய உடைகள் அணியும்போது தான் மிகவும் அழகாக இருக்கும். 

 

      விழாக்காலங்களின் போது , நாம் வழக்கமாகக் கோவிலுக்குச் செல்வோம். ஆனால் ,  இளைஞர்கள் பலர் கோவிலுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவதில்லை. சிங்கப்பூரில் , இந்தியப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பல கோவில்களும் கட்டி இருக்கிறார்கள். ஆனால் , கோவிலுக்குச் செல்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள மறக்கிறார்கள் இளைஞர்கள். விழா நாளின்போது கோவிலுக்குச்சென்று , காலையில் கடவுளை வணங்கி , ஆசிர்வாதம் பெற்றால் , அந்நாள் நல்லபடியாக இருக்கும். அதுவும் கோவிலுக்குச் சென்று, சாமியைக் கும்பிட்டுச் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்து இருப்பது நமக்கு மனஉளைச்சலைக் குறைத்து , நிம்மதியைத் தரும். அதுவும் பல்வேறு கோவில்கள் முன்னோர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. கோவிலின் கோபுரத்தில் இருக்கும் சிலைகள் எல்லாம் கையாலேயே செய்யப்பட்ட பொருட்கள். அதன் பின் பல கதைகளும் அதிசயங்களும் உண்டு. இவற்றைத் தெரிந்துகொள்ள முயன்றால் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். 

 

      வாழை இலைகளில் சாப்பிடுவதை இளைஞர்கள் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால், எவ்வளவு பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்பது வேறொரு விஷயம். வாழை இலையில் உணவு பரிமாறுவது இக்காலத்தில் அரிது. ஆனால் , அவ்வாறு செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. வாழை இலையில் சாப்பிடும்போது , அதன் மருத்துவக்குணம் நமக்குக் கிடைக்கும். வாழை இலைக்குப் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கின்றன. அதுவும் உணவைக் கையில் எடுத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. அப்போதுதான் நமக்கு வேண்டிய அளவுக்கு எடுத்துச் சாப்பிட முடியும். கையில் எடுத்துச் சாப்பிடுவது நம்முடைய முக்கியப் பழக்கவழக்கமாகும். ஆனால், கைகள் அழுக்காகிவிடும் என்று இளையர்கள் கூறி அவ்வாறு செய்வதில்லை. அவ்வாறு செய்வதன் நன்மைகளை முதலில் புரிந்துகொண்டு , இளைஞர்கள் செயல்பட வேண்டும். 

 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்பது பழமொழி.

      நம் பெற்றோர்கள் நம் கண்களுக்கு முன் தென்படும் தெய்வங்கள் என்று நாம் கருதுகிறோம். அவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது ஒரு இந்தியப் பழக்கவழக்கம். ஆனால் , இளைஞர்கள் அவ்வாறு செய்வதும் இல்லை, பெற்றோர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் , நம்மை இந்த உலகிற்கு கொண்டுவந்ததே அவர்கள் தான். அவர்கள் இல்லாமல் நாம் இல்லை.மாதா பிதா குரு தெய்வம்என்பதில் நம் அம்மாவும் அப்பாவும் தான் முதல். அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்போது நமக்குப் புண்ணியம் கிடைக்கும். இவ்வளவு மரியாதையுள்ள இந்தப் பழக்கவழக்கத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுபோல் நம் பாரம்பரியத்தில் பல பழக்கங்கள் இருக்கின்றன. அவற்றின் பின் காரணங்களும் இருக்கின்றன , நன்மைகளும் இருக்கின்றன. இவற்றை இளையர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்தியப் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொன்டே வருகிறது. இளையர்கள் தான் அதைக் கடைப்பிடித்து பாரம்பரியத்தைக் காக்க வேண்டும். அவ்வாறு செய்வது அவர்களுடைய கடமை.ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?" இளமையிலேயே இதுபோன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தால் தான் முதுமை வரை பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம். இளமையிலேயே பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நன்மைகளையும் அவர்களுக்கு விளக்குவது இளைஞர்களின் பொறுப்பு. நம் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் வேறு யார் கடைப்பிடிப்பார்? அதனால் , இளையர்கள் இந்தியப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது முக்கியம் மற்றும் அவசியம். 

 

      இந்தியப் பழக்கவழக்கங்களே நம்முடைய அடையாளம் அவற்றை மறக்காமல் கடைப்பிடிப்பது அவசியம். இளையர்கள் பழக்கவழக்கங்களின் அவசியத்தையும் நன்மைகளையும் புரிந்துகொள்வது முக்கியம். அப்போது தான் கடைப்பிடிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். அவ்வாறு செய்வதற்கு அவமானமோ சோம்பேறித்தனமோ படக்கூடாது. இந்தியப் பாரம்பரியத்தை காப்பது அவர்களின் கைகளில் தான் இருக்கிறது.இந்தியர்கள் நாம்! பெருமையாக இருப்போம்!யாமறிந்த பாரம்பரியங்களில் இந்தியப் பாரம்பரியம் மிகச்சிறந்தது. இளையர்கள் பெருமையாகப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். 

 

 

No comments: