Monday, November 30, 2020

நம் வாழ்வில் பரபரப்பு மிகுந்துவிட்டாலும், நமது அடையாளங்களை நாம் மறந்துவிடலாகாது - எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு


ரித்திக்கா ரங்கநாதன் (401) 

“ஒன்பது மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை

ஒன்பதரை ஆனால் உன் அம்மா சொந்தமில்லை 

தாயென்று காட்டுவதற்கும் தாவி எடுப்பதற்கும் 

ஞாயிற்றுக்கிழமை வரும், நல்லவளே கண்ணுறங்கு” 


அவையோர் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கங்கள். நான் இன்று பேச எடுத்துக்கொண்ட தலைப்பு, நம் வாழ்வில் பரபரப்பு மிகுந்துவிட்டாலும், நமது அடையாளங்களை நாம் மறந்துவிடலாகாது. 


அவையோரே, இன்றைய நவீன இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு வாழ்க்கை தொழில்நுட்ப வளர்ச்சியால் மிகுந்த பரபரப்பாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக நமது சிங்கை நகரில், நாம் அனைவரும் ஒரு நாளுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதால் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருக்கிறோம். இதன் காரணமாக, சுயமுன்னேற்றம், வெற்றி முதலானவற்றை மட்டுமே மனதில் கொண்டு, நமக்கென ஓர் அடையாளத்தைக் கொடுக்கும் குடும்பம், கலாச்சாரம், நாடு முதலான அம்சங்களை மறந்து நிற்கும் அவலநிலையை அடைந்திருக்குகிறோம். ஆனால், எவ்வளவுதான் வெற்றியைத் துரத்து வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாலும் தனிமனிதனாக நாம் நம் அடையாளங்களை நிச்சயமாக மறந்துவிடலாகாது. 


முதலாவதாக, நமக்கு மிக அருகில் இருக்கும் குடும்ப நிலையிலிருந்தே துவங்குவோம். அவையோரே, ஒரு நிமிடம் கண்களை மூடிச் சிந்தித்துப் பாருங்கள். கடைசியாக உங்களது தூரத்துச் சொந்தங்களிடம் நீங்கள் எப்போது பேசியிருப்பீர்கள்? ஒரு சில மாதங்கள் ஆகியிருக்குமா? அல்லது ஒரு வருடமே ஆகியிருக்குமா? நம் அடையாளத்தை நாம் எவ்வளவுதான் பேணுகின்றோம் என்பது இதிலிருந்தே தெரிகிறதே அவையோரே! நான் உரையின் தொடக்கத்தில் கூறிய வரிகள் இதை அழகாக எடுதிரைக்கின்றன. நமது பிஞ்சுக் கால்களால் இவ்வுலகிற்குள் முதல் பதம் எடுத்து வைக்கும்போதே, நம்மைச் சூழ்ந்திருப்பது நம் குடும்பம்தான். நன்மை தீமை கற்றுக்கொடுத்து, நமது எண்ணங்களைச் செதுக்கி, புத்திக்கூர்மையும் நற்பண்புகளும் கொண்ட சிறந்த மனிதனாக நம்மை உலக அரங்கில் நிற்கவைப்பவர்கள் நம் குடும்பம்தான். நமது அடையாளத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பார் நம் குடும்பம்தான். வாழ்க்கை பரபரப்பில் நம் குடும்பத்தை நாம் மறந்துவிடலாகுமா? குடும்பம், சொந்தம், பந்தம் எனும் நம் அடையாளங்களை நாம் மறந்துவிட்டால், எவ்வளவுதான் வாழ்க்கை எனும் ஏணியில் மேலே ஏறினாலும், ஆதரவின்றி அங்கே நிலைக்கமுடியாமல் கீழே விழுந்துவிடுவோம். நமது நற்பண்புகளை என்றும் நம்மை இழக்கவிடாமல் வைத்திருப்பது, வாழ்க்கைக்கு காட்டில் நாம் தொலைந்துவிடாமலிருக்க வழிகாட்டியாய் இருப்பது, நம் குடும்பத்தினர் தான். ஆகவே, வாழ்க்கை பரபரப்பில் குடும்பம் எனும் அடையாளத்தை நாம் மறந்துவிட்டால், வாழ்வில் நாம் சிகரங்களைத் தொட்டு சிங்கார நடை போடவியலாது. 


அடுத்தபடியாக, நாம் கலாச்சார நிலைக்குச் செல்வோம் அவையோரே. தனிமனிதனாக நமது அடையாளத்தில் மிகப்பெரிய பங்கை வகிப்பது நம் கலாச்சாரமும் பாரம்பரியமும் தான். குறிப்பாக நம் தமிழ்க்கலாச்சாரத்திற்கு இது நூற்றுக்கு நூறு உண்மையே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ்க் குடி அல்லவா அவையோரே? நமது கலாச்சாரத்திலே தமிழ்மொழி, உணவுமுறை, உறவுமுறை முதலான பற்பல அம்சங்கள் சேர்ந்து நம் கலாச்சாரத்திற்கு விண்ணளவு தொன்மையும் மண்ணளவு பெருமையும் தருகின்றன; தமிழன் எனும் அடையாளத்தை நமக்குத் தருகின்றன. ஆனால், தொழில்நுட்பத்தாலும் உலகமயமாக்கலாலும் வாழ்க்கை பரபரப்பாலும் இந்த மிக முக்கிய அடையாளத்தை நாம் இழந்துவருவதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறவில்லையா அவையோரே? பரபரப்பான உலகில் வாழ்கின்றோம் என்ற பெயரில் நாம் நம் மொழியை மறந்துவிட்டு அதை அழிய விடலாமா? நமது கலாச்சார பழக்கவழக்கங்களை புறக்கணிக்கலாமா? நமது அடையாளத்தைச் சாம்பலாய் எரியவிடலாமா? இந்தத் துயரத்தை நோக்கித்தான் நாம் பயணிக்கிறோம் அவையோரே! இந்நிலை நம்மைத் தாக்காமலிருக்க, கலாச்சாரம் எனும் அடையாளத்தை நாம் என்றும் மறக்கக்கூடாது. நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்ளவேண்டும். அப்போதே உலகம் நம்மை மதிக்கும், நமது அடையாளம் நிலைத்து நிற்கும்!


இறுதியாக, மானிடனிற்கு ஆகப்பெரிய அடையாளம்? அவனது மண்தான்; அவனது நாடுதான். "நாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் எது வீடு?" எனும் பாடல் வரி காலத்தால் அழியாதது. ஆனால், இன்றைய பரபரப்பான, நவீன உலகில், பல மக்கள் சொந்த நாட்டிலேயே இருப்பதில்லை என்பதை நீங்களே கண்டு அனுபவித்திருக்கலாம் அவையோரே! இப்படி இருக்கும் பெரும்பாலான மக்கள், நாதங்கள் தாயநாடு எனும் அடையாளத்தையே மறந்து, வெவ்வேறு நாடுகளில் வாழும் பரபரப்பான வாழ்க்கையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். அவையோரே, வாழ்வின் பயணத்தில் நாம் எங்கே சென்றாலும், நமது அடையாளத்தை நமக்குத் தருவது நாம் பிறந்து, வளர்ந்து, படித்து, மகிழ்ந்த நம் தாய்நாடுதான். இந்த அடையாளத்தை மட்டுமே நாம் மறந்துவிட்டால், நம் வாழ்விற்கு ஒரு பொருளோ அர்த்தமோ இல்லாமல் போய்விடும். ஆனால், மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், நாடு எனும் அடையாளத்தை மறந்து நிற்பவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மட்டுமல்ல, தாய்நாட்டிலே தொடர்ந்து வாழ்பவர்களும்தான். வீடு, வேலை எனும் நம் சிங்கை நாட்டு பரபரப்பில், நாட்டுப்பற்றை இழந்து, நாட்டை நம் அடையாளமாக நாம் காண்பது கூட அல்ல இவ்வாறே நாம் வாழ்ந்தால், நாடு என்பது வீடாய் இருக்காது, வெறும் நிலமாய் ஆகிவிடும். அந்நிமிடமே, நாம் அனைவரும் அடையாளத்தை இழந்து அனாதையாகிவிடுவோம்! ஆகையால், வாழ்வின் எந்த மூலைக்குச் சென்று என்ன செய்தாலும், நாம் சிங்கப்பூரர்கள் எனும் அடையாளத்தை மட்டுமே மறந்துவிடலாகாது, அவையோரே!


அவையோரே, அடையாளம் என்பது மனிதனாகிய மரத்திற்கு வேரைப்போன்றது. மரம் எவ்வளவுதான் செழித்து வளர்ந்தாலும், அதன் வேர்களை மட்டுமே இழந்துவிட்டால் அடியோடு சாய்ந்துவிடுமல்லவா? அதை போல், மனிதன் எவ்வளவுதான் இன்றைய பரபரப்பான உலகிற்குள் தன்னைப் பூட்டிக்கொண்டு வெற்றியைத் துரத்தித் துரத்திச் சென்றாலும், அடையாளம் எனும் வேர்கள் இல்லாவிடில் மடிந்துவிடுவான். எனவே, நமக்கு என்றென்றும் அடையாளாமாகத் திகழும் குடும்பம், கலாச்சாரம் மற்றும் நாட்டை மறந்துவிடாமல், அவற்றில் பெருமை கொள்ளவேண்டும் அவையோரே! அப்போதுதான் வாழ்க்கை முழுமையானதாகவும் நிறைவானதாகவும் இருக்கும். எனவே, தேடித் சோறு நித்தம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, நரை கூடி கிழப்பருவம் எய்தி, கொடுங்கூற்றுக்கு இரை எனபின் மாயும், பல வேடிக்கை மனிதரைப்போல் வீழாமல் நம் அடையாளத்தைக் கட்டிக்காப்போம், பேணுவோம், போற்றுவோம் -- நமது அடையாள அம்சங்களே நமது மூச்சு என்று உணர்வோம் எனக்கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!




No comments: