Wednesday, September 13, 2023

சொற்பொழிவுக் கட்டுரை - நான் மதித்துப் போற்றும் ஒரு தமிழர் - ஶ்ரீநிதி பேரின்பநாதன் - (308 - 2023 )

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழுக்கும் வீரம் நிறைந்த தமிழ் மண்ணுக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய செந்தமிழ் மொழி வானத்தில் அணையா நட்சத்திரமாக மிளிர காரணம், தங்களின் ஒவ்வொரு எண்ணத்தை, சுவாசிப்பை, இதயத்துடிப்பை தமிழ்மொழியின் தொடர்ந்த வாழ்விற்காக அர்பணித்த நமது தமிழ் அறிஞர்களேதான். அப்படிப்பட்ட நிகரற்ற தமிழ் பற்றை கொண்ட தமிழுக்காகவே உழைத்த ஒருவர் வ.சுப.மாணிக்கம் அவர்கள் ஆவார்.// வ.சுப.மாணிக்கம் அவர்கள் 17 ஏப்ரல் 1917 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரியில் வ.சுப்ரமணியன் செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் ஐந்தாவது மகனாக பிறந்தார். தமது தாயை ஆறாம் வயதில் இழந்து பின் பத்து மாதங்கள் கழித்து தந்தையையும் இழந்த இவர் தாய்வழி பாட்டனார் மற்றும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார் // “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பதற்கேற்ப வ.சுப. மாணிக்கம் அவர்களின் சிறந்த பண்புகள் தமது சிறிய வயதிலேயே தெரிந்தன. தமது பதினொன்றாம் வயதில் வட்டித்தொழில் கற்றுக்கொள்வதற்காக பர்மாவுக்கு சென்று பெட்டி அடிப்பையனாக ஒரு வட்டிக்கடையில் பணிபுரிந்தார். அக்கடையின் முதலாளி ஒருமுறை இவரிடம் ஒருவரின் பெயரை கொடுத்து, அந்த நபர் கடைக்கு வந்து தன்னை எங்கே என்று கேட்டால் “முதலாளி இல்லை” என்று சொல்லிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் அப்படி நேர்மையற்ற வகையில் பொய்சொல்ல விரும்பாத சிறுவன் பிடிவாதமாக இதனை மறுத்தான். இறுதியில் இதற்காக வட்டிக்கடையில் பணியாற்றுவதிலிருந்து நீக்கப்பட்டான். நம்மில் எத்தனை பெயர் அதிகாரத்தின் இருப்பிலும், சம்பாத்திய இழப்பிலும், அச்சுறுத்தலிலும் விழுமியங்களை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்கிறோம். அந்த சிறிய வயதிலும் கூட எந்த வெள்ளம் வந்தாலும் கல்லணையாக உடையாமல் நின்றது அவரது நேர்மை // வட்டிக்கடையில் வேலை செய்ய முடியாத நிலையில் பர்மாவிலிருந்து இந்தியாவிற்க்குத் திரும்பிய வ.சுப.மாணிக்கத்தின் தமிழ்ப் பயணம் நிலைக்கத்துவங்கியது. ஊர் திரும்பிய அவருக்குத் தமிழ் நூல்களை ஊன்றிக் கற்ற பண்டிதமணி மு.கதிரேச செட்டியார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் தமிழில் உள்ள அவரது நாட்டம் சிறகடித்துப் பறந்தது. பண்டிதமணி அவர்களின் வழி புகழ்பெற்ற அண்ணாமலை பல்கலைகழகத்தில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதுமட்டுமில்லாமல் அவர் விடாமுயற்சியுடன் பயின்று முனைவர் பட்டத்தைப் பெற்றார். தமிழ்க் கல்விப்பணியில் வாழ்நாள் முழுவதும் இறங்கி, 1941 இலிருந்து 1982ல் இறப்புவரை பல்கலைகழகங்களில் பல உயர்ந்த பதவிகளைப் பெற்றிருந்தார்.// ஆனால் நீங்கள் இதுமட்டும்தான் அவர் தமிழ்மொழிக்குச் செய்த தொண்டு என்று நினைத்துவிடாதீர்கள்! புத்தகங்கள், இயக்கங்கள், விருப்புமுறிகள் என எண்ணற்ற வழிகளில் தொண்டு செய்துள்ளார். வ.சுப.மாணிக்கம் தமது வாழ்நாள் முழுவதும் இலக்கணம், இலக்கியம், காப்பியம் என தான் இயற்றிய இருபத்தி எட்டுப் புத்தகங்களாகிய ரத்தினங்களைத் தமிழ் மொழி என்ற கருவூலத்திற்க்கு வழங்கியுள்ளார். மேலும் வ.சு.மாணிக்கம் சீரான சிந்தனையாளராகத் திகழ்ந்து, பழைமையையும் புதுமையையும் ஒருமித்த மனதோடு ஏற்றுப்போற்றினார். இதனால், அவர் தமிழ் சொல்லாக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் முனைப்புக்காட்டினார். அதுமட்டுமா, அவர் தமிழ் வழி கல்வி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி, இவ்வியக்கம் நன்கு பரவும் வழி காண தமிழ் சுற்றுலாவையும் மேற்கொண்டார்! வ.சுப.மாணிக்கம் உண்மையிலேயே மக்களிடமும் தமிழ் அக்கினியைப் பரப்ப முற்பட்டார். நம்மைப் போன்ற சாதாரண தமிழ் மக்கள் தமிழைப் பயன்படுத்தவில்லை என்றால், தமிழ் மொழியின் புழக்கம் எப்படி தொடரும்?// வா.சுப.மாணிக்கம் தமிழ் மொழிக்கு மட்டும்தான் உழைத்தார் என்று நினைக்கிறீர்களா? இல்லை இல்லை, அவர் தமிழ் சமூகத்திற்கும் தொண்டு செய்தார்! தம் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்திற்கு வழங்க விரும்பினார். இவர் பிறந்த ஊரான மேலச்சிவபுரியில் தன் சேமிப்பிலிருந்து செலவு செய்து மருத்துவம், குழந்தை நலம், நலவாழ்வு கல்வி போன்ற தொண்டுகளைச் சாதி சமய வேறுபாடின்றி இலவசமாக வழங்கினார். அதுமட்டுமின்றி, சொந்த நூலகத்தில் இவர் தொகுத்துவைத்த 4500 நூல்களைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு இலவசமாக வழங்கினார். // வா.சுப.மாணிக்கம் தமிழுக்காகவும், தமிழ் சமுதாயத்திற்காகவும் முழுமூச்சுடன் மற்றும் இடைவிடாப் பற்றுடன் அரும்பாடு பட்டிருக்கிறார். இவர் மற்றும் இவரை போன்ற நமது தமிழ் சேவையாளர்களின் முயற்சிகளை கௌரவித்து, அவற்றை வாழ வைப்பதற்கான பொறுப்பை நாமே சுமக்கவேண்டும் // தமிழில் சிறந்து விளங்கி அதை உபயோகப்படுத்த சற்று ஆர்வமும் திறந்த மனமும் மட்டுமே தேவை. தமிழ் நூல்களை படிக்கலாம், தமிழில் பேச முற்படலாம். தமிழில் தேர்ச்சி அடைந்த நம்மில் சிலர் தமிழில் ஆர்வத்தையும் கற்றலையும் வளர்த்துகொள்ள தமிழ் இலக்கியங்களையும் படிக்கலாம்; எழுதவும் செய்யலாம். இந்த சிறு சிறு முயற்சிகள் மூலம், தமிழின் படைவீரர்களாகிய நாம் தமிழ் என்ற நமது இராச்சியத்தை பாதுகாத்து நமது அறிஞர்களின் சேவைகளை கௌரவித்து நமது சமுகத்தின் செழிப்பை உலகத்திடம் உரக்க உரைப்போம்.// தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!! நன்றி வணக்கம்.

No comments: