Wednesday, September 13, 2023

சொற்பொழிவுக் கட்டுரை - நான் மதித்துப் போற்றும் தமிழறிஞர் டாக்டர் மு வரதராசனார்

தமிழறிஞர் — டாக்டர் மு வரதராசனார் ஸ்மிருதி ச ஐயர் – Year 3 – 2023 “உன்னுதிரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆயிரம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!” என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிகளுடன் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். நமது செம்மொழியின் நீடித்த நிலைதன்மைக்கும் வளர்ச்சிக்கும் அல்லும் பகலும் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த பேராசிரியர்கள் பலர்; அவர்களில் சிலர் மட்டுமே தமிழர்களின் மனத்தில் மறைந்தும் மறையாமல் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவரான டாக்டர் மு வரதராசனார் அவர்களைப் பற்றியே இன்று நான் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டின் பெரும்பாலன தலைசிறந்த தமிழாசிரியர்களைப் போலவே டாக்டர் மு வரதராசனார் ஏராளமான பதவிகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார் — அவை அனைத்தையும் நான் இப்போது கூறினால், அன் வாய்தான் வலிக்கும்! ஆனால், பல கல்வியறிவு பெற்ற ஆசிரியர்களிடம் இன்றும் காணப்படாத உயர்ந்த விழுமியங்கள் அவரிடம் காளப்பட்டன; அவரின் வாழ்வு முழுவதும் அவரிடம் காணப்பட்ட கடின உழைப்பும் எல்லையில்லா உதவும் மணப்பான்மையும் அவரை முன்னேற்றத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றன. ‘மு.வ.’ என்ற செல்லப்பெயரைப் பெற்ற டாக்டர் மு வரதராசர், ஆயிரத்து தொள்ளாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு ஏப்ரல் இருபத்தைந்து அன்று, எளிய குடும்பத்தில் பிறந்தார். இவ்வாறு அதிக பணமோ உதவியோ இல்லாமல் வளர்ந்த ஒருவர் எவ்வாறு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் தலைசிறந்து விளங்கி, புகழ்பெற்ற கதாசிரியராகவும் தமிழாசிரியராகவும் பிரபலம் பெற்றார், என்று சந்தேகம் உங்களினுள்ளே இப்போது எழலாம். இதற்கான பதில் என்னவென்றால், கடின உழைப்பே ஆகும். பள்ளிப்படிப்பை முடித்தபின்னர், அவர் பிறந்த திருப்பத்தூரிலே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், அவர் கொண்டிருந்த தமிழ்ப்பற்றினால், தனியே படித்துப் புலவர் தேர்வில் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார்; அவ்வூர் நகராட்சி உயர்னிலைப் பள்ளி ஆசிரியரானர்; பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அங்கே, அவர் விடாமுயற்சியுடன் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கத்துடன் அயராது உழைத்தார்; பெராசிரியராக உயர்ந்தார்; மதுரை காமராசர் பல்கலைகழக்த்தின் துணைவேந்தராக கௌரவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் உறுதியான ஓர் இலத்சியத்திற்காக அரும்பாடு பட்டதால் அவரால் வானத்தை வசப்படுத்த முடிந்தது. “இதையெல்லாம் விடுங்கள்; அவர் சிறந்த ஆசிரியராக விளங்கினார் என்பதற்கான சான்றுகள் என்ன?” என்ற எண்ணம் உங்களிடையே பலருக்குத் தோன்றலாம். சில ஆசிரியர்கள் மாணவர்களை அதிரிகலாகக் கருதி அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவற்றுக்கும் தண்டனை வழங்குவர்; மற்ற சிலர் மாணவர்களுக்குக் கற்பித்துவிட்டு, வேலையை மட்டும் முடித்துவிட்டு சென்றுவிடுவர். ஆனால் மிகச்சிலரே மாணவர்களைத் தங்கள் மக்களாகக் கருதி, எல்லா வகையிலும் துணையாக நிற்பார்கள். இறுதிவகை ஆசிரியர்களைச் சேர்ந்த ஒருவர்தான் டாக்டர் முவ. “அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்” என்ற வள்ளுவரின் வார்த்தைக்கேற்ப, ஒவ்வொரு மாண்வரையும் அன்புடனும் மனிதநேயத்துடனும் நடத்தினார் டாக்டர் முவ. மாணவர்களுகுப் பாடங்கற்பிக்கும் ஆசிரியராக மட்டுமின்றி, ஒரு வழிகாட்டும் தந்தையாகவும் திகழ்ந்தார். ஒவ்வொருவரின் குடும்பச் சூழலையும் உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உதவி வழங்கினார். எடுத்துக்காட்டாக, தன் எளிய மாணவர்களைத் தம் வீட்டிலேயே தங்கச்செய்து உணவளித்துப் படிக்க செய்தார்; மற்ற சில மாணவர்கள் வறுமையில் வாடியபோது அவர்களின் பள்ளி அல்லது கல்லூரிக் கட்டணத்தைக் கட்டி அவர்களிக்குக் கல்வி வழங்கினார். இவ்வாறு, தம் மாணவர்கள் பிறந்த சூரல் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இல்லாததை உறுதிசெய்து, பல தமிழ்பேராசிரியர்களை உருவாக்கினார். தமது பணியை தமக்கு வருவாய் கொடுக்கும் வேலையாக மட்டும் கருதாமல், மாணவர்களை வாழ்விக்கும் பணியாகக் கருதி அரும்பாடுபட்ட டாக்டர் முவ தமிழகத்தின் வரலாற்றில் என்றுமே மெச்சப்படுவார் என்று கூறினால் மிகையாகாது என்று நாம் நம்புகிறேன். முவ அவர்கள் பேரும் புகழும் பெறுவதற்கு அவரின் கொள்கைதான் காரணம் என்று நான் மீண்டும் ஒருமுறைகூட கூறினால் உங்களின் காது வலிக்கும். இக்கொள்கையின் மிக முக்கியமான அம்சங்கள், வள்ளுவமும் காந்தியமும் ஆகும். தேசியத்தை மறவாத தமிழ்ப்பற்றும், இறைப்பற்றை இகழாத சீர்திருத்தமும், பிறர் மனதைக் காயப்படுத்தாத எழுத்தாற்றலும் பெற்றிருந்த டாக்டர் முவ, நமது முன்னோர்களின் உயர்ந்த நெறிகளுக்கும் வள்ளுவரின் வார்த்தைகளுக்கும் தூய வாழ்வொன்றுக்கும் அடங்கி வாழ்ந்தார். எவ்வளவு சிரமப்பட்டுக்கொண்டிருந்தாலும் பிறரிடமிருந்து பறித்து வாழாமல் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் வைராகியத்தினாலும் கஷ்டத்திலிரிந்து மீண்டு வந்தார். அனைவரிடத்திலும் அன்பும் மனிதனேயமும் காட்டி வந்ததோடு, இந்நெறிகளை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்க, தங்கைக்கு போன்ற பல தமிழ்ப்புத்தகங்களை எழுதினார். டாக்டர் மு வரதராசனார் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து நான்காம் ஆண்டு காலமானாலும், தமிழர்களின் மனங்களிலும் நினைவுகளிலும் ஓர் உயர்ந்த மனிதராகவும் புலவராகவும் தொடர்ந்து உயிர்வாழ்ந்து வருகிறார். இன்று இங்கே உட்கார்ந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் தெரிவிக்க விரும்பும் மையகருத்து இதோ — டாக்டர் மு வரதராசனார் அவர்கள் உயர்ந்த வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து, தமிழ்மொழிக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் அளவில்லா பேரும் புகழும் சேர்த்துள்ளார். அவரை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, நாம் நமது நெறிகளிலும் வாழ்விலும், தேசபற்றிலும் தமிழ்ப்பற்றிலும், பணியிலும் செயலிலும் தூய்மையையும் அறத்தையும் கடைபிடித்தால், நமகும் நமது கலாச்சாரத்திற்கும் பெருமை சேருவது நிச்சயம். இறுதியாக — தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்! நன்றி வணக்கம். ஸ்மிருதி ச ஐயர் – Year 3 – 2023

No comments: