Sunday, September 17, 2023

சிங்கப்பூரில் அதிக இயற்கை வளங்கள் இல்லாததால், அண்டை நாடுகளோடு எச்சூழலிலும் நமது நாடு சுமூகமான உறவை கட்டிக் காக்க வேண்டியுள்ளது. கருத்துரைக்க. சுசித்தா மணிகண்டன் ( 406 - 2023)

மனிதர்களாகிய நாம் கோவில் கோபுரத்தில் உள்ள சிறப்பும் வனப்புமிக்க கலசத்தையும் தான் பெரும்பாலும் ரசிப்போம். ஆனால், அக்கலசம் நூறடி உயரத்தில் கம்பீரமாக நிலைத்து நிறக காரணமாக உள்ள தூண்களையும் அடித்தளத்தையும் மறந்துவிடுகிறோம். மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர், இன்று வையகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதற்கு அடிப்படைக் காரணம், அண்டை நாடுகளுடன் நாம் கொண்டுள்ள வலிமையான உறவே ஆகும். பூப் பூத்திட வேண்டுமாயின் வேர்கள் நீர் ஈர்த்திட தான் வேண்டும். அதுபோல், வளங்கள் இல்லா சிங்கப்பூர் செழிப்புற வேண்டுமானால் நம் அண்டை நாடுகள் துணை புரிய வேண்டும். ஆக , சிங்கப்பூரில் அதிக இயற்கை வளங்கள் இல்லாததால், அண்டை நாடுகளோடு எச்சூழலிலும் நமது நாடு சமூகமான உறவைக் கட்டிக் காக்க வேண்டியுள்ளது எனும் கூற்றை நான் திணை அளவும் ஐயம் இன்றி ஏற்கிறேன். அண்டை நாடுகளை மலேசியா இந்தோனேசியா போன்ற ஆசியான் நாடுகளாக காணலாம். சுமூகமான உறவு என்பதே சண்டை, சச்சரவு, கசப்புகள் இல்லாத இரு வழி உறவாக எடுத்துக் கொள்ளலாம். இதை மனதில் கொண்டு தண்ணீர், மின்சாரம், வர்த்தகம் ஆகிய மூன்று மேலோட்டமான பார்வைகளில் ஆராய்வோம். // முதலில், தண்ணீர். சிங்கப்பூரில் நியூ வாட்டர் (NeWater), தண்ணீர் தேக்கங்கள் போன்ற அமைப்புகள் இருந்தாலும், இவை நமது தண்ணீர் தேவையில் 50% கீழே தான் பூர்த்தி செய்கின்றன. ஆகையால் தண்ணீர் வளத்திற்கு நாம் பெரும்பாலும் மலேசியாவைத் தான் நம்பி உள்ளோம். சுற்றிலும் கடல் இருக்கும் ஒரு தீவாக இருந்தாலும், தண்ணீர் வளம் என்பது நம்மிடம் குறைவே. இவ்வடிப்படைத் தேவையின்றி சிங்கப்பூரர்கள் யாவரும் எவ்வாறு இயங்குவார்கள்? இதுபோன்று ஒரு இன்றியமையாத வளத்திற்கு நாம் மலேசியாவை சார்ந்திருப்பதால், மலேசியாவுடன் சுமூகமான உறவைக் கட்டிக்காப்பது அவசியமானதாகும். “வரும் முன்னர் காவாத்தான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்பது அன்பு வள்ளுவரின் கூற்று. அதாவது, பிரச்சனையோ துன்பமா வருவதற்கு முன்பே எச்சரிக்கையுடன் தன்னை காத்துக் கொள்ளாதவனின் வாழ்க்கை தீமுன் உள்ள வைக்கோல் போர் போல் கெடும். ஆக தண்ணீர் பற்றாக்குறை என்று ஓரு சவால் ஏற்படுவதற்கு முன்னரே நாம் எச்சரிக்கையாய் செயல்பட வேண்டும். கவனித்துகொள்ளலாம் என்ற மனப்போக்குடன் அண்டை நாடுகளோடு வளர்த்துள்ள உறவினை துண்டித்துக்கொள்வதோ அவ்வுறவுக்கு ஆபத்துண்டாக்குமாறு நடந்து கொள்வதோ சாமர்த்தியமல்ல. அது நமது தலையிலேயே மண்ணை வாரி கொட்டிக்கொள்வது போன்றதாகும். // அடுத்து மின்சாரப் பற்றாக்குறை. மின்சாரம் என்பது அனைத்து சேவைகளுக்கும் அடிப்படையான தேவையாக அமைகிறது. சாலையில் உள்ள விளக்குகளிலிருந்து வீட்டில் ஆகாரம் சமைக்க பயன்படுத்தும் அடுப்பு வரை அனைத்தும் மின்சாரத்தை நம்பியே உள்ளன. அலுவலகங்கள், பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் இயங்க மின்சாரம் தேவை. அத்தகைய மின்சார வளமும் சிங்கப்பூரிடம் போதுமான அளவில்லை. இதற்கும் நாம் மலேசியா, இந்தோனேசியா, லாவோஸ் போன்ற அண்டை நாடுகளை நம்பித்தான் உள்ளோம். அண்டை நாடுகளுடன் உள்ள நல்லுறவு என்பது மிகவும் வலிமையானதாகும். அதற்குக் கற்பாரையையும் ஒரே நொடியில் ஈர மண்ணாக்கும் திறன் உண்டு. சிங்கப்பூர் முழுவதும் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் மின்சாரம் செலுத்த இவ்வளவு உதவிக்கரம் நீட்டுகிறது. இது இல்லையேல் இரவில் வெளிச்சம் இருக்காது, பகலில் குளிர்ச்சி இருக்காது. ஆனால், இது தான் பிரச்சனை. முழு சிங்கையும் இயங்க நாம் அண்டை நாடுகளை நம்பி உள்ளோம் என்றால் அவர்களுடனான உறவு எவ்வளவு முக்கியமானது? உறவுகள் என்பது மெல்லிய நூலில் கோர்க்கப்பட்ட மல்லிப் பூப் போல். சற்று இறுக்கிக் கட்டினால் , பூ கசங்கிவிடும். அதனால், உறவுகளைக் கவனமாக கட்டி காப்பது என்பது அவசியமானது. அன்று நம் முன்னாள் பிரதமர் கூறியது போல் “அண்டை நாடுகளுடன் நாம் கொண்டுள்ள நல்லுறவே நமது பலம்.” இவ்வுறவு சுமூகமாக இல்லையேல் அண்டை நாடுகள் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் வளங்களை துண்டிக்கும் . இது நமக்குப் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, மலேசியாவில் ஏற்பட்ட கோழி குறைவால் சிங்கப்பூருக்குக் கோழிகள் அனுப்புவதை ரத்து செய்தபோது, பலரும் அவர்கள் விரும்பி உண்ணும் சிக்கன் ரைஸ் போன்ற பாரம்பரிய உணவுகளின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டனர். கோழிக்கே இந்நிலை என்றால் மின்சாரத்திற்கு? // அடுத்து, சிங்கப்பூர் ஒரு வர்த்தகமையமாக அமைந்திருப்பது. இயற்கை வளம் இல்லாத நாம், வர்த்தகத்தின் மூலம் தேவையான பொருட்களை ஈட்டுவதோடு உற்பத்தி சேவைகள் இல்லாமலும் பொருளாதார ரீதியாக பயன் பெறுகிறோம். வெட்டப்படாத, பொலிவில்லாத வைரத்தை தோண்டி, வெட்டி, பட்டைத் தீட்டி, பளபளப்பாக்குவது போல் எவ்விதமான வளங்களும் இல்லாத நம் நாட்டை செழிப்புறச் செய்தது வர்த்தகமே. வர்த்தகமும் அண்டை நாடுகளுடன் கொண்ட உறவுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது. நீரின் உயரத்திற்கு ஏற்ப பூவின் தாளுடைய உயரம். அதேபோல நம் உறவுகளின் ஆழம் அளவே, நமது வர்த்தகமும். “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்பது வள்ளுவரின் மற்றொரு கூற்று. ஆக ஒரு செயலைப் புரிவதற்கு முன் நன்கு ஆராய்ந்து நடக்க வேண்டும். அண்டை நாடுகளோடு கசப்பினை உண்டாக்கிக் கொண்டால், பிற்காலத்தில் அது சிறியதாக இருந்தாலும் நம்மை பாதிக்கக்கூடும். ஏனெனில், நாடுகளுக்கு இடையே உண்டாகும் கசப்பு எளிதில் தீர்க்கக்கூடியது அல்ல. தவிர, வர்த்தகம் சிங்கப்பூர் பொருளாதரத்திற்கு பில்லியன் கணக்கில் உதவுகையில், அதனை தொடர்ந்து கட்டிக்காப்பது அவசியமாகும். அண்டை நாடுகள் நட்புடன் இருப்பதால்தான் மின் சாதனங்கள், காய்கறிகள், விளையாட்டுப் பொருள்கள் போன்ற எக்கச்சக்க பொருள்களை நம்மிடம் வர்த்தகம் செய்கின்றன. இசசுமுகமான உறவு இல்லையேல், வளம் இல்லாத நாம் கரை காணா கப்பலாக திண்டாடத்தான் வேண்டும். ஆக கலங்கரை விளக்கமாக திகழும் இவ்வுறவே பாதுகாப்பது, இன்றியமையாதது. // ஆனால், வேறு சிலரோ அனைத்துச் சூழல்களிலும் இயற்கை வளங்கள் இல்லாத ஒரே காரணத்தால் நமது அண்டை நாடுகளுடன் நாம் சுமூகமான உறவை கட்டிக்காக வேண்டுமா என வினவலாம். அந்நாடு அதர்மம் வழியில் செயல்பட்டுக் கொண்டிருந்தால்? அந்நாடு நமக்குத் தீங்கு நினைத்திருந்தால்? எடுத்துக்காட்டாக, ரஷ்ய நாடு உக்ரேனின் மீது போர் தொடுத்த போது, உலக நாடுகள் அனைத்தும் அந்நாட்டிற்கு எதிராயினர். ஏனென்றால், அவர்களது செயல் மனிதநேயமும் நியாயமும் இன்றி அமைந்தன. இது போன்ற சூழலிலும் சமூகமான உறவினை கட்டிக்காப்பது அவசியமா? பாரதியார் கூறியபடி, ரௌத்திரம் பழக வேண்டுமா? எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா? என்னை பொறுத்தவரையில், வேண்டும்தான் ஆனால் எல்லையை மீற லாகாது. ரஷ்யா போன்ற பெரும் நாடுகள் மின்சாரம் போன்ற துறைகளில் அதிகம் வளம் கொண்டவை. ஆனால் அவற்றின் செயல்களை நாம் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நடுநிலையை நாம் எடுத்துக்கொள்ளலாம். இது அண்டை நாடுகளுக்கும் பொருந்தும். அண்டை நாடுகளோடு பகையை உண்டாக்குவதற்கு மாறாக பிரச்சனைகளை ஒன்று கூடிப் பேசித் தீர்க்க வேண்டும் அல்லது நடுநிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். இது சுமூகமான உறவு இல்லை என்றாலும் பகையையாவது தவிர்க்கலாம். // சுருங்கக்கூறின், தண்ணீர், மின்சாரம், வர்த்தகம் போன்ற அடிப்படை மற்றும் அவசியமான துறைகளில் நாம் அண்டை நாடுகளை நம்பி இருப்பதாலும் உறவுகள் எளிதில் இதனை பாதிக்கும் என்பதாலும் தனி நாடாக சிங்கப்பூரால் இயங்க இயலாது என்பதாலும் அண்டை நாடுகளோடு எச்சூழலிலும் நமது நாடு சமூகமான உறவைக் கட்டிக்காக வேண்டியுள்ளது என்பதே என் ஆணித்தரமான கருத்து. நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு ஏணியை கட்டுவது போன்றதாகும். வெறும் ரம்பமும் கயிறும் இருந்தால் ஏணி கட்ட இயலுமா? சுத்தியல், ஆணிகள், கட்டைகள் போன்ற எண்ணற்ற பொருள்கள் தேவை. அவற்றுக்காக வேறொரு ஆசாரியிடம் நம் பொருள்களை இரவல் பெறத்தான் வேண்டும். சண்டையிட்டோ மரியாதையின்றியோ பொருள்களைக் கேட்டால் அவை கிடைக்குமா? சமூகமாக அன்புடன் வினவினால் தான் கிட்டும். இயற்கை வளம் இல்லாத நிலையிலும் “யார் என்ன சொன்னாலும் யார் என்ன செய்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்” என்பதைப்போல நாம் அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள நல்லுறவே நமக்கு உதவிக் கரம் நீட்டும். மண்ணுக்கடியில் உள்ள விதை போராடி வெளிவந்து செழிப்பான செடியாக உருவெடுக்கத் தண்ணீர், மண், சூரிய வெளிச்சம் என நிறைய தேவைகள் உண்டு. அதுபோல், இயற்கை வளம் குறைவாக இருக்கும் நம் நாட்டின் வளர்ச்சிக்குச் சமூகமான அண்டை நாடு உறவுகளும் அவசியமே… ~ முற்றும் ~

No comments: