Wednesday, December 11, 2024

“நம் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல” என்னும் தலைப்பை ஒட்டி உம் வட்டாரப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு

 

   

பெயர்: கப. நிவேதா - வகுப்பு: S3-05 - ஆண்டு - 2024

‘’தமிழர் என்றோர் இனமுண்டு,

   தனியே அவர்க்கோர் குணமுண்டு,

   மானம் பெரிதென உயிர்விடுவான், 

   மற்றவர்க்காகத் துயர்படுவான்’’

என நாமக்கல் கவிஞர் தமிழரைப் பற்றிகக் கூறிய வார்த்தைகளுடன் நான் என் சொற்பொழிவைத் தொடங்குகிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று, நான் என் சொற்பொழிவில் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல என்ற கருத்தில் சொற்பொழிவு ஆற்றவுள்ளேன். ஒரு மனிதனுக்கு அவன் இரண்டு கண்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவிற்கு நம் கலைகளும் பண்பாடும் நமக்கு முக்கியம். பார்வையின் மூலம் ஒரு பொருளைப் பார்த்துப் புரிந்துகொள்ளவும் அதன் வண்ணமயத்தையும் அழகையும் ரசிக்கவும் முடிவதுபோல், கலைகள் மற்றும் பண்பாடு மூலம் நம்மால் நம் கலாச்சாரத்தின் அழகையும் நுட்பத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. நம் ஒவ்வொருவருக்கும் நம் பண்பாடு ஒரு அடையாளமாகவும் பெருமையாகவும் திகழ்கிறது.

“கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளியிடுவதுடன் பிறருக்கு அவ்வுணர்வை ஊட்டும் பெருமை உடையது” என்றார் டால்ஸ்டாய். கலை கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; நாகரிகத்தின் ஒளிவிளக்கு என்றும் குறிப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். 

முதலாவதாக, கலைகள் தமிழரின் பெருமையாக இன்றும் திகழ்கின்றன. முற்காலத்தில் எழுதப்பட்ட பொன்மொழிகள், வரையப்பட்ட ஓவியங்கள், கட்டப்பட்ட கட்டடங்கள் முதலிய பல வியப்புமிக்க கலையாற்றல்களை இன்றும் நாம் கொண்டாடுகிறோம், கண்டு பெருமைப்படுகிறோம். 1000 ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரியகோவில் இன்றும் நம் நாட்டின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும்  பெருமிதமாகவும் நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கிறது. நினைத்துப் பார்க்கவே வியப்பாகவுள்ளதல்லவா? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், எவ்வித தொழில்நுட்பமோ இயந்திரமோ இல்லாமல் எவ்வாறு இவ்வளவு உறுதியான, திடமான கோவிலைக் கட்ட முடிந்தது என்று யோசித்துப் பார்க்கவே ஆச்சரியமாகவுள்ளதல்லவா? அதுமட்டுமல்லாமல், நம் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்று உலகளவில் போற்றப்படும் நூலாக விளங்குகிறது. ஒன்றே முக்கால் வரியில் அறக்கருத்துகளை எல்லாக் காலங்களிலும் வாழக்கூடிய மனிதர்களுக்கு பொருந்தும் வகையில் எழுதியவர் திருவள்ளுவர். இவ்வாறு தமிழர் தம் கலைகளின் மூலம் நாட்டில் மட்டுமின்றி உலகத்திலேயே அளவில்லா மாற்றத்தை ஏற்படுத்திவுள்ளனர்; நமக்குப் புகழையும் பெருமையையும் கொண்டுவந்துள்ளனர். கலைகளுக்கு உலகில் பெரிய மாற்றத்தை எற்படுத்தும் ஆற்றல் உள்ளது. நாம் நம் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே நாட்டிற்கும் உலகிற்கும் நல்ல முன்னேற்றம் கொண்டுவர இயலும்.

இரண்டாவதாக, நம் கலைகளின் மூலம் நம்மால் நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறையைப் பற்றி மேலும் அறிய முடிகிறது. பரதநாட்டியம் போன்ற கலைகளிலிருந்து நாம் நம் முன்னோர்கள் கூறிய கதைகளைப் பற்றி மேலும் அறிய முடிகிறது! வார்த்தைகளாலும், பாவனைகளாலும் நம்மால் கதைகளையும் உணர்வுகளையும் காண முடிவது நம் நாட்டியக்கலையின் சிறப்பாகும். 

இவற்றிலிருந்து, நம்மால் நம் தமிழரின் கலைகளின் மகிமையையும் பெருமையையும் புரிந்துகொள்ளமுடிகிறது, அல்லவா? இவ்வளவு அழகான கலைகளும் நம் அனைவரின் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்று அனைத்திலும் பங்கேற்று நமக்கு வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதனால்தான், நாம் நம் கலைகளை மதித்து, போற்றி, கற்றுக்கொண்டு அவற்றிற்கு உயிர் கொடுக்க வேண்டும். நம் தமிழரின் பெருமையை விட்டுக்கொடுக்காமல், இக்கலைகளைப் பெருமையுடன் உலகிற்குக்  காண்பிக்க வேண்டும்; தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். 

சரி, இவ்வளவு நேரம் நம் இரு கண்களில் ஒன்றான கலைகளின் பெருமையை எடுத்துரைத்தேன். இனி, நம் மற்றொரு கண்ணாகிய பண்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குகிறேன்.

நம் பண்பாடு நமக்குப் பல நல்ல பாடங்களைச் சொல்லித் தருகிறது. அதனால், அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் நமக்குப் பல நன்மைகளும் ஏற்படும்! எப்படி? ஒருவர் இப்படித்தான் வாழவேண்டும், இப்படி வாழக்கூடாது; இதைத் தான் செய்யவேண்டும், இதைச் செய்யக்கூடாது; மீறீச் செய்தால் இத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பன போன்ற வாழ்க்கை விதிமுறைகளை எடுத்துக்கூறுவது நம் பண்பாடு. அந்த வகையில் பார்த்தால், அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் நீதிநூல்கள் அனைத்தும் நம் பண்பாடை பறைசாற்றுகின்றன என்று கூறினால் அது மிகையாகாது. திண்ணை கட்டுதல், கோலம் இடுதல், விருந்தோம்பல் முதலிய பல செயல்களைக் காலங்காலமாக நாம் செய்துவருகிறோம். ஆனால், இச்செயல்கள் எல்லாம் தமிழரின் நற்குணத்தைக் காட்டுகின்றன என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். அரிசி மாவால் கோலமிட்டு எறும்பு பூச்சிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று எண்ணிய தமிழரே, வந்து போகும் எவரும் இளைப்பாற தங்கள் வீட்டின் வெளியே திண்ணைகளைக் கட்டியிருக்கிறார்கள். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப,  தெரிந்தவர், தெரியாதவர் என்று பார்க்காமல் அனைவரையும் சொந்தம் என்று எண்ணி தம் வீட்டினுள் அழைத்து வயிறு நிரம்பும்வரை உணவு பரிமாறினர்.

மற்றவருக்கு நலன் அளிப்பது மட்டுமல்லாமல், தன் நலனிற்காகவும் தன்னைச் சுற்றியுள்ளோரின் நலனிற்காகவும் தமிழர் சில பாரம்பரிய பழக்கங்களை வைத்திருந்தனர். அவற்றை நாம் இன்றும் பின்பற்றினாலும், காரணம் அறியாமல் பெற்றோர் கூறுவதாலே பின்பற்றுகிறோம். நாம் வணக்கம் கூறும் முறை நம் சொந்த தூய்மையையும் சுத்தத்தையும் கடைப்பிடித்து, தன்னிடம் இருக்கும் கிருமியை மற்றவருக்குச் கொடுக்காமலும், மற்றவரிடம் இருக்கும் கிருமியை வாங்கிக்கொள்ளாமலும் இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாம். ஒரு சிறு வணக்கத்திற்கே இவ்வளவு பெரிய காரணம் இருப்பது ஆச்சரியமாக உள்ளது! அதுமட்டுமின்றி, ஒருவர் தம் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்குமுன், மாப்பிள்ளையின் வீரத்தை அளவிட அவரை, காளை அடக்குதல், பெருங்கல் சுமத்தல் முதலிய விளையாட்டுகளில் ஈடுபடச் சொல்லுவர். இந்நடவடிக்கைகளின் மூலம் மாப்பிளையின் வீரத்தையும், பலத்தையும் மட்டும் பார்ப்பதில்லை, எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை வலிமையுடன் நின்று சமாளிக்க முடியுமா என்பதையும் பார்க்கின்றனர். இப்பண்பாட்டு நடவடிக்கைகள்  பார்ப்பதற்குக்  காரணமில்லாமல் செய்வதுபோல் தெரிந்தாலும், ஒவ்வொன்றிருக்கும் சரியான காரணமும் நன்மையும் உள்ளது!

பண்பாடு என்பது வளர்வது: மனதால் உயர்வது; எல்லோருக்கும் பயன்படும் வகையில் உதவுவது; உலகிற்கு நல்ல ஆதாரமாக இருப்பது. நம் தமிழர் பண்பாடு ஆழமான, அழகான ஒன்றாகும். அதன் நுட்பத்தையும், எழிலையும் புரிந்துகொள்வது நமக்குக் கிடைத்த பாக்கியம். இப்பண்பாடு நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள மக்கள், விலங்கு, செடி அனைத்திற்கும் நன்மை அளிக்கும் விதத்தில் இருப்பதால் அது நமக்கு மிகவும் முக்கியமானது!

இரத்தினச் சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், நம் கலைகளும் பண்பாடும் நம் வாழ்விலும் வரலாற்றிலும் இன்றியமையாத இடம் பிடித்துள்ளன. இவை நமக்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, நமக்குக்  கதைகள், பாடங்கள் புகட்டி நாட்டிற்கே பெருமையும் தந்துள்ளன என்று கூறினால் அது மிகையாகாது. இத்தகைய காரணங்களால், நாம் நம் கலைகளையும் பண்பாட்டையும் மறந்து கைவிட்டுவிடாமல் அவற்றைக் கற்றுக்கொண்டு வாழ வைக்கவேண்டும்! நாம் இக்கலைகளை மதித்துக் கற்றுக்கொண்டால்தான், எதிர்காலத்தில் இவற்றை நம் பிள்ளைகளிடம் கற்றுக்கொடுத்து, கலைகளைக் காலத்தைத் தாண்டி நிற்க வைக்கவேண்டும். இவ்வளவு மகிமையான, அழகான நம் தமிழர் அடையாளத்தை நாம் ஒவ்வொருவரும் உயிர் போல் காத்து, காப்பாற்றினால்தான் அடுத்த தலைமுறையும் நம் கலாச்சாரத்தின் தனித்துவத்தையும் புரிந்துகொள்ளவும், அனுபவிக்கவும் முடியும். மாணவர்களான நாம் அனைவரும் நம் கலைகளையும் பண்பாட்டையும் இரு கண்கள் போல் எண்ணி அவற்றில் பெருமையோடும் பற்றோடும் பங்கேற்க வேண்டும். நீங்கள் அனைவரும் அதைச் செய்வீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன். கலைகளும் பண்பாடும் நமக்கு மிகவும் முக்கியமானவை; நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அழகையும் கொடுப்பவை. இத்தகைய கலைகளையும் பண்பாட்டையும் போற்றுவதில் எவ்வித தவறும் இல்லை னே? யோசித்து பாருங்கள்! இதுவரை என் சொற்பொழிவைக் கேட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்!


Tuesday, December 10, 2024

“நம் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல” என்னும் தலைப்பை ஒட்டி நீவிர் ஆற்றும் சொற்பொழிவு. SELVAKUMAR KANISHKA - வகுப்பு 307 - 2024


‘’தமிழர் என்றோர் இனமுண்டு,

   தனியே அவர்க்கோர் குணமுண்டு "

அமுதே, தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே!

முதலில் உன்னை என் மனம், மொழி, மெய்யால் வணங்கி மகிழ்கிறேன். அடுத்து என்னருந் தமிழ்ழொழி என் போன்ற இளம்பருவத்தினர் நாவிலும் நற்சிந்தையிலும் நானிலம் போற்றும் நவநாகரிகச் சிங்கையிலும் நிலைத்திட வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த குழுவினருக்கும், இங்கு வருகை புரிந்துள்ள பெற்றோருக்கும் பெரியோருக்கும் எனைப் போன்ற மாணவச் செல்வங்களுக்கும் இன்தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழர் பண்பாட்டின் தனித்துவத்தை உணர்த்தும் நாமக்கல் கவிஞரின் வரிகளோடு என் சொற்பொழிவைத் தொடங்கினேன். இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்ன நினைக்கிறேன் என்று. ஆம், நம் கலையும் பண்பாடும் நம்மிரு கண்கள் போல என்ற தலைப்பைப் பற்றி நான் உரையாற்றப்போகிறேன். 


கலைகள் என்பவை எவற்றைக் குறிக்கின்றன? நம் இந்தியக் கிராமியக்  கலைகளான  ஒயிலாட்டம், கரகாட்டம், முதலிய நடன வகைகளையும், நுண்கலைகளான ஓவியக் கலை, சிற்பக்கலை, பிரமிப்பூட்டக்கூடிய கட்டடக்கலைகளையும்,  வில்லுப்பாட்டு, கர்னாடக வாய்ப்பாட்டு போன்ற இசை வகைகளையும், அடிமுறை, சிலம்பம், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளையும் குறிக்கின்றன. நம் பண்பாடு என்பது விழுமிய பண்புகள் பலவும் நிரம்பப் பெற்றுக் குடும்பத்தாருடனும் உலகத்தாருடனும் பொருந்தி அன்புற்று வாழும் மனப்பக்குவத்தைக் குறிக்கிறது. பொறுமை, விட்டுக்கொடுத்தல், பிறர்நலம் பேணுதல் முதலான பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது நம் பண்பாடு.


கலையும் பண்பாடும் காலங்காலமாக ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன. இவை இரண்டையும் ஒரு மரத்தின் வேர்களோடு ஒப்பிடலாம். ஒரு மரத்திற்கு வேர்கள் உறுதியையும் ஊட்டச்சத்தையும் வழங்குவது போல, கலையும் பண்பாடும் நமக்கு ஒரு அடித்தளத்தை வழங்கி நமது பாரம்பரியத்துடன் இருக்கும் தொடர்பையும் ஒற்றுமையையும் அதிகரிக்கின்றன.

முதலாவதாக, நம்மிரு கண்களால் எவ்வாறு வெவ்வேறு பொருட்களை வேறுபடுத்திப் பார்க்க முடிகிறதோ, அதே போல நம் கலையும் பண்பாடும் நம்முடைய சிறப்பு அம்சங்களை வெளிக்காட்டி நம் சமூகத்ததின் தனித்துவத்தைப் புலப்படுகின்றன. 

நாம் யாரென்று இவ்வுலகத்திற்கு நம்மை அடையாளப்படுத்துவது நம் கலையும் பண்பாடும்தான். நமக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிப் பிற கலாச்சாரங்கள் மத்தியில் நமக்கென ஓர் அங்கீகாரம் வழங்குவது நம் பாரம்பரியக் கலைகளின் தனிச் சிறப்பே ஆகும். தஞ்சாவூர் என்றாலே முதலில் உங்களுக்கு நினைவிற்கு வருவது என்ன? தஞ்சைப் பெரிய கோவில் தானே? நம் இந்தியக் கட்டடக்கலையின் பெருமையை உணர்த்துவதற்கு அக்காலத்தில் ராஜராஜ சோழரால் கட்டப்பட்ட இக்கோவிலைவிட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இல்லை.கி.பி 1010 இல் கட்டப்பட்டிருந்தாலும் இன்றுவரை உலகம் முழுவதும் போற்றப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் அதன் பின்னால் இருக்கும் வரலாறும் கலைத்திறனுமே காரணங்களாகும். 

நம் கலையும் பண்பாடும் நம்மால் பின்பற்றப்படவில்லை என்றால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டு ஒன்று கூறுகிறேன். சமோவா, பிஜி போன்ற சிறிய நாடுகள் மேற்கத்திய தாக்கங்களால் குறிப்பிடத்தக்க கலாச்சார மாற்றங்களை அனுபவித்துள்ளன. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organisation - UNESCO) நடத்திய ஆய்வில், இன்னும் 50 வருடங்களில் இதுபோன்ற சிறிய நாடுகளின் மரபும் பண்பாடும் 40% குறைந்துவிடும் எனத் தெரியவந்தது. பாரம்பரியப் பண்பாடுகளைக் கடைப்பிடிக்காவிட்டால், சமூக ஒருங்கிணைப்பில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படுவதோடு, நம் வாழ்க்கை முறையும் நிலையற்றதாக மாறிவிடும். 

அதுமட்டுமல்லாமல், பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளில் முன்பு செழித்திருந்த, போற்றப்பட்ட பலவிதமான கலைகள் தற்போது நவீனமயமாக்கலால் அழிந்துகொண்டு வருகின்றன. அந்நாட்டின் கலாச்சார ஆணையம் நடத்திய ஆய்வில், 70% பாரம்பரிய இசை மற்றும் நடன வகைகள் இன்னும் இரு தலைமுறைகளுக்குப் பிறகு,  காலவோட்டத்தில் மறைந்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக இளையர்கள் இக்கலைகளைப் பயிலவில்லை என்றால் அவை அடுத்த தலைமுறையினரைச் சென்றடையப்போவதில்லை. இதனாலேயே “பண்பாடு இழந்து முன்னேறுவதை விட பண்பாடு குறையாமல் பின்தங்கி இருந்தாலும் தவறில்லை” என்று சிலரால் கூறப்படுகிறது. 

கலையும் பண்பாடும் இல்லையென்றால் கலாச்சாரம் என்ற நம் வாழ்வின் முக்கியப் பங்கு ஒட்டுமொத்தமாக மறைந்துவிடும் என்று மேற்கூறிய சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, நம் அடையாளத்தைக் காப்பதற்குக் கலையும் பண்பாடும் அத்தியாவசியமானவை என்ற கருத்தை உங்களால் மறுக்க முடியுமா?

அடுத்ததாக, நம் கண்களால் எவ்வாறு மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியுமோ, அதே போலக் கலையும் பண்பாடும், பெரியவர் சிறியவர் என அனைத்து வயதினருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பளிக்கின்றன.  


கலைக்கு என்னதான் சக்தி உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். அறிவியலுக்கும் கலைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? உள்ளதை உள்ளவாறு சொல்ல முயல்வது அறிவியல். உள்ளதை உணர்ந்தவாறு உணர்த்துவது கலை. அறிவும், ஆராய்ச்சியும் கொண்டு வளர்வது அறிவியல். உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்வது கலை. அந்தக் கற்பனையைத் தூண்டி மனதில் நினைப்பதை உணர்ச்சியுடன் மற்றவர்களுக்கு வெளிக்காட்டக்கூடிய ஆற்றல் கலைக்கு உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. 


“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு”


அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை என்பது போல, என்னைப் பொறுத்தவரையில் உணர்ச்சியின் வெளிப்பாட்டிற்கு முதன்மையானவை கலையும் பண்பாடுமே ஆகும். மனிதன் முதன்முதலில் அவனுக்குத் தோன்றிய கருத்துக்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தியவை பாறைகளே. அதிலிருந்து மெதுவாக, இயற்கையான சாயங்களைப் பயன்படுத்தி ஓவியம் தீட்டியும், சிற்பங்கள் செதுக்கியும் அவன் தகவல் பறிமாற்றம் செய்யக் கற்றுக்கொண்டான். 


கலையின் மூலம் உரையாடுவதற்கு மொழி தேவையா? சொற்கள் தேவையா? இல்லை. "கலை ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உரையாடும் சங்கேத மொழியாகும்." என்று ரஸ்கின் பாண்டின் கூறுகிறார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வெறும் பாவனைகளைக் கொண்டே நடித்துக்காட்டும் கதக்களி நடனத்திலிருந்து, வண்ணங்களால் மட்டுமே எண்ணங்களை வெளிப்படுத்தும் மதுபானி ஓவியக் கலை வரைக்கும், உணர்வுகளைத் தனித்துவமான வகைகளில் வெளிக்காட்ட உதவுகின்றன நம் கலைகள்.  


‘கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளிக்காட்டுவதுடன் பிறருக்கும் அதே உணர்வை ஊட்டும் திறன் கொண்டது" என்கிறார் டால்ஸ்டாய். கலை என்பது கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; மகிழ்ச்சியின் மாட்சி; இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். பல அரிய கலைகளைப் படைத்தனர். கலை உணர்வு கொண்ட தமிழர்களின் பண்பாட்டைத் தெரிந்துகொள்வதற்கு அவை அடிப்படைச் சான்றுகளாக அமைந்துள்ளன.


"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்

அஃதின்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்று மொழிந்தார் வள்ளுவர் 


தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் ஆகும். முகம் தெரியாதவர் வீட்டிற்கு வந்தால் கூட அவர்களை அன்போடு உபசரித்து, உணவளித்து, புன்சிரிப்புடன் வழியனுப்பிவைக்கும் பழக்கம் காலங்காலமாய்ப் பின்பற்றப்பட்டு வருகிறது. நம் பண்பாடு மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்குவதால் அனைத்து மனிதர்களிடமும் தூய்மையான பாசத்துடன் பழகவேண்டும் என்று இலக்கியங்கள் வழிகாட்டுகின்றன.  இதன் மூலம், அன்பு, பரிவு, இரக்கம் முதலிய பண்புகளை, எவ்வளவு பரபரப்பான வாழ்க்கைச் சூழலிலும், மறந்துவிடுவதில்லை. நம் பண்பாட்டைக் கடைப்பிடிப்பதால் தானே நாம் சிறந்த மனிதர்களாக நம்மை மேம்படுத்திக்கொள்வது மட்டுமல்லாமல், மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் ஒளிவிளக்குகளாகத் திகழ்கிறோம்?


நம் கலையும் பண்பாடும் நம்முடைய தனித்துவத்தையும் அடையாளத்தையும் வலியுறுத்துவதாலும், பண்புகளையும் உணர்வுகளையும் வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பளிப்பதாலும் அவை நம்மிரு கண்களுக்குச் சமம் என ஆணித்தரமாகக் கூறுகிறேன். 


கண் பார்வையை இழந்தால் அதைச் சுலபமாக திரும்பப் பெற முடியுமா? அதேபோல, நம் பாரம்பரியத்தையும் பண்பாடையும் மறந்துவிட்டால் அவற்றை மறுபடியும் நடைமுறைக்குக் கொண்டு வருவது சாத்தியமா? "வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்" என்பதற்கேற்ப, அவற்றை இரு கண்களாகக் கருதி பாதுகாக்கவேண்டியது நம் கடமையாகும். 


"அப்பியாச வித்தைக்கு அழிவில்லை."  என்றொரு பழமொழி உண்டு. வெறுமையான ஏட்டுக் கல்வி கூடச் சில நாளில் மறந்து போய்விடலாம். ஆனால் ஒன்றைச் செய்முறை பயிற்சி செய்து பார்த்துவிட்டோமானால் அதை என்றுமே மறக்கமாட்டோம் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது. ஆகவே, அடுத்த தலைமுறையை வழிநடத்தப்போகும் இளையர்களாகிய நாம், நமது கலையையும் பண்பாட்டையும் கற்போம், கற்பிப்போம், கட்டிக் காப்போம்! கலையும் பண்பாடும் வரும் காலங்களில் அருங்காட்சியகங்களில் காணும் காட்சிகளாக இல்லாமல், மலரும் அரும்புகளின் வளர்ச்சிபோல் அமையட்டும்.


- முற்றும் - 




Sunday, May 5, 2024

ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை. விவாதிக்க.

லக்‌ஷணா ராஜதுரை உயர்நிலை 3 - 2024 ஆம், ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை என்பது என் கருத்து. ஆற்றல் என்றால் திறமை. அதனால், ஒருவர் ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ திறமையுடையவராக இருக்கவேண்டும். திறன் என்பது செயல், தொழில், வேலை முதலானவற்றில் திறமையாகச் செயல்படும் ஆற்றலைக் குறிக்கின்றது. பண்பு என்பது குணம், தன்மை மற்றும் இயல்பைக் குறிக்கின்றது. பண்புகள் இருப்பதைவிட திறன்கள் இருந்தால்தான் ஒருவரால் ஆற்றல் மிகுந்த தலைவராகச் செயல்பட முடியும். ஒருவருக்குத் திறன்கள் இருந்தால் பண்புகள் தானாகவே இருக்கும். எனவே, திறமையாக செயல்படத் திறன்கள் அவசியம் தேவை என்பதையும் திறன்கள் இருந்தால் பண்புகள் தானாகவே வளரும் என்பதையும் இக்கட்டுரையில் காண்போம். முதலாவதாக, தீர்வு காணும் திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். தலைவர்கள் அடிக்கடி சவால்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்வார்கள். சிக்கல்களை அடையாளம் கண்டு, மூல காரணங்களைப் பகுப்பாய்வு செய்து, பயனுள்ள தீர்வுகளைக் காணத் தீர்வு காணும் திறன் தேவை. குழு உறுப்பினர்களிடையே நம்பிக்கையைப் பெறவும், யாரையும் சார்ந்து இருக்காமலிருக்கவும் இத்திறன் உதவும். தீர்வு காண்பதன் மூலம் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, சவால்களைச் சமாளிக்கும்போது நாம் மீளும் தன்மையை வளர்த்துக்கொள்கின்றோம். அதோடு, பிரச்சனைகளுக்குப் புதுமையான தீர்வுகளைத் தேடிக் கண்டுப்பிடிப்பது கற்பனையாற்றலையும் தரும். ஆகவே, ஆற்றல் மிக்க தலைவர்களுக்கத் தீர்வு காணும் திறன் தேவை. இரண்டாவதாக, தொடர்புத்திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். தகவல்களை விரைவாகவும் சரியாகவும் வழங்கும் ஆற்றல் ஒரு தலைவருக்கு மிக அவசியம். மற்றவர்களது கருத்துக்களைக் காதுகொடுத்தக் கேட்பதும் தொடர்புத்திறன் ஆகும். அதுமட்டுமில்லாமல், எத்தகைய செய்திகளை எந்த நேரத்தில் வழங்க வேண்டுமோ அவற்றைப் பொருத்தமான நேரத்தில் பொருத்தமான வடிவத்தில் வழங்குவது தொடர்புத்திறன். தொடர்புத்திறன் தவறான புரிதல்களையும் பிழைகளையும் குறைத்து, கருத்துக்கள் தெளிவாக தெரிவிக்கப்படுவதை உறுதி செய்கிறது. தொடர்புத்திறன் இருந்தால் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, தெளிவாகத் தொடர்புகொள்ளும்போது கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதிலும் நம்பிக்கையை அதிகரித்து, தன்னம்பிக்கையையும் துணிவையும் அளிக்கின்றது. மூன்றாவதாக, தகவமைத் திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடப்பதே தகவமைத் திறனாகும். திறமையான தலைவர்கள் துன்பங்களை எதிர்கொள்ளும்போது நெகிழ்வுடனும் திறந்த மனத்துடனும் இருப்பதன் மூலம் தகவமைப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்கள். இன்றைய வேகமான மற்றும் சுறுசுறுப்பான உலகில், தகவமைப்புத் திறனைக்கொண்டுள்ள தலைவர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப உத்திகளையும் அணுகுமுறைகளையும் மாற்றி வெற்றி பெறலாம். தகவமைத் திறன் இருந்தால் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, தகவமைக்கக்கூடிய தலைவர்கள் புதிய யோசனைகள் மற்றும் அணுகுமுறைகளுக்குத் திறந்த மனத்துடன் இருப்பர். எனவே அவர்கள் பல தகவல்களைக் கற்றுக்கொண்டு கற்பனையாற்றலை வளர்த்துக்கொள்வர். இறுதியாக, துணிவுடன் முடிவெடுக்கும் திறன் ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு அவசியம். இத்திறன் தலைவர்களைத் தயக்கமின்றி விரைவாக முடிவெடுக்க உதவுகிறது, ஏனெனில் அவர்கள் ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர். துணிவுடன் முடிவெடுக்கும் திறனைக் கொண்ட தலைவர்கள் தமது முடிவுகள் மேல் நம்பிக்கை கொண்டிருப்பர், எனவே அனைவரும் அவர்களை நம்புவார்கள்; மதிப்பளிப்பார்கள். துணிவுடன் முடிவெடுக்கும் திறன் இருந்தால் நாம் சில பண்புகளையும் வளர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, துணிவுடன் முடிவெடுக்கும் தலைவர்கள் சுயமாகச் செயற்படுவர்; ஒரு முடிவுக்கு வரும்போது மற்றவர்களின் கருத்துக்களைச் சார்ந்திருக்கமாட்டார்கள். உலகில் பிரபலமான தலைவராகத் திகழ்ந்த திரு லீ குவான் யூ தொடர்புத்திறனைக் கொண்டிருந்தார். அவர் தமது பார்வைகளையும் கொள்கைகளையும் பொதுமக்களிடம் திறம்பட வெளிப்படுத்தினார். தெளிவாகவும் உறுதியாகவும் தொடர்புகொள்ளும் திறன் அவரது முயற்சிகளுக்கு ஆதரவைப் பெறவும் வேறுபட்ட விருப்பங்களைக் கொண்டுள்ள மக்களுக்கு ஒருங்கிணைப்பைப் பெற்றுக்கொடுக்கவும் உதவியளித்தது. அதுமட்டுமின்றி, அவர் மூலோபாய சிந்தனை திறனைக் கொண்டிருந்தார். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியையும் இன நல்லிணக்கத்தையும் உறுதி செய்ய தகுந்த கொள்கைகளையும் முயற்சிகளையும் எடுத்தார். ஆகவே, பல திறன்களைக் கொண்டிருந்த திரு லீ குவான் யூ ஒரு ஆற்றல்மிக்க தலைவருக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இந்தியாவில் பார்வையற்றவராகப் பிறந்தார், ஶ்ரீகாந்த் பொலா. சிறுவயதிலேயே அவரைக் கைவிட அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறினர். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அவரது பெற்றோர் அன்புடன் அவரை வளர்த்தனர். அவர் சிரமப்பட்டுப் படித்தார்; பெறோரும் அவருக்கு ஆதரவளித்தனர். இறுதியில், அவர் ஒரு $80 மில்லியன் நிறுவனத்திற்கு “சி.யி.ஒ”வாக திகழ்ந்தார். வணிக வேலைகளைக் கற்றுக்கொள்ள காது மற்றும் கை போன்ற பிற புலன்களைப் பயன்படுத்தும் திறனை வைத்துத் தான் அவர் அவ்வளவு பெரிய நிறுவனத்திற்கே தலைவராகியிருப்பார். எனவே, ஶ்ரீகாந்த் பொலா என்பவர் ஆற்றல்மிக்க தலைவருக்கு மற்றொரு நல்ல உதாரணமாகத் திகழ்கிறார். ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்கத் தலைமைத்துவத் திறன்களைவிட பண்புகளே தேவை எனச் சிலர் கருதுவர். அவர்கள் பண்புகள் தான் ஒரு தலைவருக்கு அடிப்படையாக இருக்க வேண்டியவை எனக் கூறுவர். ஆனால், நான் அதை மறுக்கிறேன். பண்பு என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டியது. திறன்கள் இருந்தால்தான் ஒரு மனிதனால் தலைவனாக முடியும்; பண்புகள் இருந்தால் மட்டும் போதாது. ஏனெனில், அந்தப் பண்புகளைச் செயற்படுத்த திறன்கள் தேவை. உதாரணத்திற்கு, ஒருவருக்குத் துணிவு என்ற பண்பு இருப்பதோடு துணிவுடன் முடிவெடுக்கும் திறன் இருந்தால் தலைவனாக இருக்கலாம்; ஆனால், துணிவு என்ற பண்பு இருந்தும் துணிவுடன் முடிவெடுக்கும் திறன் இல்லாவிட்டால் அவன் சாதாரண மனிதனாகத் தான் கருதப்படுவான். எனவே, பண்பு இருந்தும் திறன் இல்லாவிட்டால் ஒரு மனிதன் தலைவராக முடியாது; ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ முடியாது. சுருங்கக்கூறின், ஒருவர் ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ, பண்புகளைவிட திறன்களே தேவை. ஒரு தலைவரைச் சாதாரண மனிதரிடமிருந்து வேறுபடுத்துவது அவரிடமிருக்கும் திறன்கள் ஆகும். பண்புகள் என்பது பக்க உணவு போன்றது; திறன்கள் என்பது பிரதான உணவு போன்றது. பிறதான உணவு இல்லாமல், பக்க உணவை மட்டும் எவ்வாறு சாப்பிட முடியாதோ, அதே போல திறன்கள் இன்றி, பண்புகளை மட்டுமே கொண்ட ஒரு மனிதனால் ஆற்றல்மிக்க தலைவராகத் திகழ இயலாது. ஆனால், பக்க உணவு இல்லாமலும் பிரதான உணவை எவ்வாறு சாப்பிடமுடியுமோ, அதே போல பண்புகள் இல்லாமலும், திறன்களைக் கொண்ட மனிதன் தலைவராகத் திகழ முடியும்; சிறிது சுவையாக மட்டும் இருக்காது. ஆகவே, ஒருவர் ஆற்றல் மிக்க தலைவராகத் திகழ்வதற்குப் பண்புகளைவிடத் தலைமைத்துவத் திறன்களே தேவை என்பதே என் வாதமாகும்.

Friday, September 22, 2023

தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன. கருத்துரைக்க.Aravinthan Yathuri - 205 - 2023

சமீபத்தில், ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் அனைத்து செயல்களைச் செய்யக்கூடிய அளவிற்கு நம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக்காலத்தைப் போல சிரமப்பட்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவோ மற்ற நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமது நண்பர்களையும் உறவினர்களையும் தொடர்புக்கொள்ளவோ தேவையில்லை என்பதால் நமது அன்றாட வாழ்க்கை சுலபமாகிவிட்டது. ஆனால், அதே சமயத்தில் நம்மிடம் பெரும்பாலும் குறைவான வேலைப்பளு இருப்பதால் குறைந்த சுறுசுறுப்புடன் நமது வேலைகளைச் செய்கிறோம். ஆகவே, தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாகவுள்ளது என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறேன். // கோவிட்-19 கிருமித்தொற்றின்போது அனைவரும் வெளியே சென்று உணவுகளை உணவகங்களில் வாங்கமுடியாமல் இருந்ததால், “டெலிவரூ”, “கிரப்” போன்ற உணவு விநியோக செயலிகள் மூலம் உணவுகளை வாங்க ஆரம்பித்தனர். அனைவரிடமும் அந்தச் செயலிகள் பிரபலமானதால் மக்கள் அதிகமாக அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினர். வீட்டிலிருந்து வேலை செய்தவர்களுக்கும் இது நல்ல வசதியாக இருந்தது. கொவிட் 19 காலங்கள் கடந்த பின்னரும் மக்கள் இந்தச் செயலிகளை இன்னும் அதிகமாக நாடுகின்றனர் என்றே கூறலாம். இன்றைய நாட்களில் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்துவதில் உள்ள ஆர்வம் மற்றைய விடயங்களில் குறைவாகவே உள்ளது. தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகளின் பயன்பாட்டால் சோம்பேறிகளாகியவர்கள் உணவு வாங்க அருகில் உள்ள உணவுக் கடைகளுக்குக் கூடச் செல்லத் தயங்குகின்றனர் மற்றும் சமையல் செய்வதில் ஈடுபாடும் காட்டுவதில்லை. சிலர் நேரமின்மையால் இவ்வாறு செய்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அந்த வசதி பழகியதால் உணவை உணவு விநியோகம் செய்யும் செயலிகளை அணுகி வாங்குகின்றனர். இதனால், வீட்டிற்கு வெளியே நடந்து சென்று சுமார் ஐந்து நிமிடங்களில் உணவகத்திலிருந்து உணவை வாங்குவதைவிட வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே உணவை வாங்க அதிகமாக விரும்புகின்றனர். இதனால், வெளியே உணவை வாங்குவதற்கு நடந்து செல்வதிலிருந்தும் வீட்டிலே தங்களுக்குப் பிடித்த உணவைத் தாங்களே சமைப்பதிலிருந்தும் கிடைத்த உடற்பயிற்சியும், சுறுசுறுப்பும் இன்று இவர்களிடம் காணவில்லை. உணவுச் செயலிகளின் பொத்தான்களை அமுக்கியதும் சுமார் அரை மணி நேரத்தில் தங்களுக்குப் பிடித்த உணவு வீட்டு வாசலில் கிடைப்பதால் இவர்கள் சுறுசுறுப்பின்றிச் சோம்பேறிகளாக மாறுகின்றனர். // உணவு விநியோகம் மட்டுமின்றி, பல்வேறு பொருட்கள் இணையத்தில் வாங்கித் தங்கள் வீடுகளுக்கே விநியோகம் செய்தலும் கோவி-19 கிருமித்தொற்றால் பரவலானது. இரண்டு மாதங்களாக மக்கள் எந்தக் கடைக்கும் சென்று பொருட்களை வாங்கமுடியாமல் இருந்ததால், “ஷொப்பீ”, “லசாடா” போன்ற செயலிகள் அவர்களின் தேவைகளை நிறைவேற்றின. இன்றும் இதுபோன்ற செயலிகள் சிங்கப்பூரில் மக்கள் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. மக்களிடையே பிரபலமைந்துள்ளன என்றே கூறலாம். சிங்கப்பூரில் இருந்துகொண்டு மற்ற நாடுகளில் விற்கப்படும் பொருட்களையும் இந்தச் செயலிகள் மூலம் வாங்கக் கூடியதாகவுள்ளது. விரைவாகவும் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில், கணினிக்கு முன்னால் இருந்து பிடித்ததையெல்லாம் சுலபமாக வாங்குவதையும், எக்கச்சக்கமான பொருட்களை உடனடியாக பார்ப்பதையும் நிறைய மக்கள் விரும்புவதால், அவர்கள் அதிகமாக பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்லாமல் தங்களது கணினிகளையோ திறன்பேசிகளையோ தான் நாடுகின்றனர். அதனால் தேவையில்லாத பொருட்களை வாங்கும் நிலை ஏற்படுகிறது. அருகிலிருக்கும் கடைக்குச் சென்று அங்கிருக்கும் மின்விளக்கையோ திரைச்சீலைகளையோ வாங்காமல், அதற்கும் பொருள் வாங்கும் செயலிகளை நாடுகின்றனர். இதனால் இவர்கள் சோம்பேறிகளாகியது மட்டுமில்லாமல் உள்ளூர் வியாபாரங்களுக்கும் சரிவு ஏற்படுகிறது. சிறிய வேலைக்கும் செயலிகளைச் சார்ந்து வாழ்கின்றனர். // புத்தகம் வாசிப்போர் பலர் கோவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நூலகங்களுக்குச் சென்று அங்கே நேரம் செலவழித்து தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை இரவல் வாங்க முடியாமல் இருந்ததால் “லிபி” பொன்ற செயலிகளை நாடிப் புத்தகங்களை வீட்டிலிருந்தே இரவல் வாங்க நேர்ந்தது. இதனால், நூலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமும் குறைந்தது. இன்று பலர் தமது திறன்பேசிகள் மூலமாகவே தாங்கள் வாசிக்க விரும்பும் புத்தகத்தை இரவல் வாங்குகின்றனர். ஆனால், வீட்டிலிருந்தே தங்களது கருவிகளின் மூலம் புத்தகத்தை வாசிப்பது இம்மக்களுக்கு வசதியாக இருந்தாலும், அதே புத்தகத்தைக் கைகளில் பிடித்துக்கொண்டு நூலகத்தில் வாசிப்பதன் அழகை இவர்கள் மறக்க ஆரம்பிக்கின்றனர். வசதிக்காகவே நூலகங்களின் அருமையை மறந்து அதற்காக வெளியே செல்லவேண்டுமே என்ற நோக்கில் சோம்பேறிகளாகி இவர்கள் வீட்டிலேயே இருந்து புத்தகங்களை வாசிக்கின்றனர். // மேலும், நண்பருடைய வீட்டிற்குச் செல்லவோ உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லவோ பெரும்பாலானோர் நடந்து செல்கின்றனர். அல்லது பொது போக்குவரத்து எடுக்கின்றனர். ஆனால், சமீபத்தில், “க்ரேப்” போன்ற வாடகை உந்துவண்டிச் செயலிகளால், ஐந்து நிமிடங்களில் நடந்து ஓரிடத்திற்குச் செல்லாமல் அதிகமான மக்கள் தங்களது காசையும் வீணாக்கி உடற்பயிற்சி நேரத்தையும் குறைத்து வசதிக்காக வாடகை உந்துவண்டிகளையழைத்து அதில் பயணம் மேற்கொள்ள ஆரம்பிக்கின்றனர். நல்லக் காற்றைச் சுவாசித்து உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் நடைப்பயிற்சியில் ஈடுபடாமல், அது தங்களைச் சோர்வடையச் செய்யும் என்றெண்ணி உந்துவண்டியில் உட்கார்ந்து தங்களது பணத்தை விரமாக்குகின்றனர். உடல் வலுவையும் இழக்கின்றனர். இவ்வாறு செய்வதால் நடக்கக்கூட இவர்களுக்குச் சோர்வாக இருக்கும். அந்தளவுக்குச் சோம்பேறிகளாக மாறிவிடுவார்கள். ஆரோக்கியமான உணவு, நல்ல உடற்பயிற்சி இரண்டும், இரண்டு கண்கள் போன்றவை. இந்தத் தொழில்நுட்ப செயலிகளால் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்ற பொன்மொழியையும் மறந்துவிட்டனர். // கடைசியாக, நிறைய மாணவர்கள் இன்று தமது வீட்டுப்பாடங்களுக்கும் ஒப்படைப்புகளுக்கும் “ச்சேட் ஜீபீதீ” என்ற செயலியை அணுகுகின்றனர். இதனால் அவர்களது வேலைப்பளு குறைவதோடு தமது பாடங்களைச் சுலபத்துடன் செய்கின்றனர். ஆனால், இதனால் இம்மாணவர்கள் தாங்களே சொந்தமாக யோசித்து விடையளிக்கச் சோர்வடைகின்றனர். தங்களிடம் உள்ள ஆக்கப்பூர்வமான யோசனைகளைத் திரட்டாமல் ஏற்கனவே எல்லா ஆலோசனைகளையும் கொண்ட இச்செயலிகளை நாடுகின்றனர். இதனால், இவர்களுடைய ஒப்படைப்புகள் தங்களது தனி முயற்சியில்லாமல் போய்விடுகிறது. தனித்தன்மையும் இல்லாமல் போகிறது. தேர்வுகளின்போதும் யோசித்துத் தமது சொந்த பதில்களை எழுதச் சிரமப்படுகின்றனர். ஆகவே, 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா' என்ற பொன்மொழிக்கேற்ப இன்று செய்யச் சோம்பல்படும் செயல்கள் நாளை நடக்கா.// ஆகவே, பெரும்பாலான மக்கள் தங்களின் திறன்பேசிகள், கணினிகள் முதலிய தொழில்நுட்பக் கருவிகளில் இருக்கும் செயலிகளின் மூலம், உணவை வாங்குவதற்கும், பொருட்களை வாங்குவதற்கும், புத்தகங்களை இரவல் வாங்குவதற்கும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கும், செயலியை அணுகி விடைகளைத் திரட்டுவதற்கும் செயல்படுவதால், அவர்கள் இன்னும் சோம்பேறிகளாகத்தான் மாறுகின்றனர். இச்செயலிகளில்லாமல் இவர்களால் சுறுசுறுப்புடன் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. ஆகையால், தொழில்நுட்பக் கருவிகளில் உள்ள செயலிகள் நம்மிடையே சோம்பேறிகள் பெருகுவதற்குக் காரணமாகவுள்ளது என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.

Sunday, September 17, 2023

சிங்கப்பூரில் அதிக இயற்கை வளங்கள் இல்லாததால், அண்டை நாடுகளோடு எச்சூழலிலும் நமது நாடு சுமூகமான உறவை கட்டிக் காக்க வேண்டியுள்ளது. கருத்துரைக்க. சுசித்தா மணிகண்டன் ( 406 - 2023)

மனிதர்களாகிய நாம் கோவில் கோபுரத்தில் உள்ள சிறப்பும் வனப்புமிக்க கலசத்தையும் தான் பெரும்பாலும் ரசிப்போம். ஆனால், அக்கலசம் நூறடி உயரத்தில் கம்பீரமாக நிலைத்து நிறக காரணமாக உள்ள தூண்களையும் அடித்தளத்தையும் மறந்துவிடுகிறோம். மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர், இன்று வையகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதற்கு அடிப்படைக் காரணம், அண்டை நாடுகளுடன் நாம் கொண்டுள்ள வலிமையான உறவே ஆகும். பூப் பூத்திட வேண்டுமாயின் வேர்கள் நீர் ஈர்த்திட தான் வேண்டும். அதுபோல், வளங்கள் இல்லா சிங்கப்பூர் செழிப்புற வேண்டுமானால் நம் அண்டை நாடுகள் துணை புரிய வேண்டும். ஆக , சிங்கப்பூரில் அதிக இயற்கை வளங்கள் இல்லாததால், அண்டை நாடுகளோடு எச்சூழலிலும் நமது நாடு சமூகமான உறவைக் கட்டிக் காக்க வேண்டியுள்ளது எனும் கூற்றை நான் திணை அளவும் ஐயம் இன்றி ஏற்கிறேன். அண்டை நாடுகளை மலேசியா இந்தோனேசியா போன்ற ஆசியான் நாடுகளாக காணலாம். சுமூகமான உறவு என்பதே சண்டை, சச்சரவு, கசப்புகள் இல்லாத இரு வழி உறவாக எடுத்துக் கொள்ளலாம். இதை மனதில் கொண்டு தண்ணீர், மின்சாரம், வர்த்தகம் ஆகிய மூன்று மேலோட்டமான பார்வைகளில் ஆராய்வோம். // முதலில், தண்ணீர். சிங்கப்பூரில் நியூ வாட்டர் (NeWater), தண்ணீர் தேக்கங்கள் போன்ற அமைப்புகள் இருந்தாலும், இவை நமது தண்ணீர் தேவையில் 50% கீழே தான் பூர்த்தி செய்கின்றன. ஆகையால் தண்ணீர் வளத்திற்கு நாம் பெரும்பாலும் மலேசியாவைத் தான் நம்பி உள்ளோம். சுற்றிலும் கடல் இருக்கும் ஒரு தீவாக இருந்தாலும், தண்ணீர் வளம் என்பது நம்மிடம் குறைவே. இவ்வடிப்படைத் தேவையின்றி சிங்கப்பூரர்கள் யாவரும் எவ்வாறு இயங்குவார்கள்? இதுபோன்று ஒரு இன்றியமையாத வளத்திற்கு நாம் மலேசியாவை சார்ந்திருப்பதால், மலேசியாவுடன் சுமூகமான உறவைக் கட்டிக்காப்பது அவசியமானதாகும். “வரும் முன்னர் காவாத்தான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” என்பது அன்பு வள்ளுவரின் கூற்று. அதாவது, பிரச்சனையோ துன்பமா வருவதற்கு முன்பே எச்சரிக்கையுடன் தன்னை காத்துக் கொள்ளாதவனின் வாழ்க்கை தீமுன் உள்ள வைக்கோல் போர் போல் கெடும். ஆக தண்ணீர் பற்றாக்குறை என்று ஓரு சவால் ஏற்படுவதற்கு முன்னரே நாம் எச்சரிக்கையாய் செயல்பட வேண்டும். கவனித்துகொள்ளலாம் என்ற மனப்போக்குடன் அண்டை நாடுகளோடு வளர்த்துள்ள உறவினை துண்டித்துக்கொள்வதோ அவ்வுறவுக்கு ஆபத்துண்டாக்குமாறு நடந்து கொள்வதோ சாமர்த்தியமல்ல. அது நமது தலையிலேயே மண்ணை வாரி கொட்டிக்கொள்வது போன்றதாகும். // அடுத்து மின்சாரப் பற்றாக்குறை. மின்சாரம் என்பது அனைத்து சேவைகளுக்கும் அடிப்படையான தேவையாக அமைகிறது. சாலையில் உள்ள விளக்குகளிலிருந்து வீட்டில் ஆகாரம் சமைக்க பயன்படுத்தும் அடுப்பு வரை அனைத்தும் மின்சாரத்தை நம்பியே உள்ளன. அலுவலகங்கள், பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் இயங்க மின்சாரம் தேவை. அத்தகைய மின்சார வளமும் சிங்கப்பூரிடம் போதுமான அளவில்லை. இதற்கும் நாம் மலேசியா, இந்தோனேசியா, லாவோஸ் போன்ற அண்டை நாடுகளை நம்பித்தான் உள்ளோம். அண்டை நாடுகளுடன் உள்ள நல்லுறவு என்பது மிகவும் வலிமையானதாகும். அதற்குக் கற்பாரையையும் ஒரே நொடியில் ஈர மண்ணாக்கும் திறன் உண்டு. சிங்கப்பூர் முழுவதும் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் மின்சாரம் செலுத்த இவ்வளவு உதவிக்கரம் நீட்டுகிறது. இது இல்லையேல் இரவில் வெளிச்சம் இருக்காது, பகலில் குளிர்ச்சி இருக்காது. ஆனால், இது தான் பிரச்சனை. முழு சிங்கையும் இயங்க நாம் அண்டை நாடுகளை நம்பி உள்ளோம் என்றால் அவர்களுடனான உறவு எவ்வளவு முக்கியமானது? உறவுகள் என்பது மெல்லிய நூலில் கோர்க்கப்பட்ட மல்லிப் பூப் போல். சற்று இறுக்கிக் கட்டினால் , பூ கசங்கிவிடும். அதனால், உறவுகளைக் கவனமாக கட்டி காப்பது என்பது அவசியமானது. அன்று நம் முன்னாள் பிரதமர் கூறியது போல் “அண்டை நாடுகளுடன் நாம் கொண்டுள்ள நல்லுறவே நமது பலம்.” இவ்வுறவு சுமூகமாக இல்லையேல் அண்டை நாடுகள் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் வளங்களை துண்டிக்கும் . இது நமக்குப் பெரும் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, மலேசியாவில் ஏற்பட்ட கோழி குறைவால் சிங்கப்பூருக்குக் கோழிகள் அனுப்புவதை ரத்து செய்தபோது, பலரும் அவர்கள் விரும்பி உண்ணும் சிக்கன் ரைஸ் போன்ற பாரம்பரிய உணவுகளின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டனர். கோழிக்கே இந்நிலை என்றால் மின்சாரத்திற்கு? // அடுத்து, சிங்கப்பூர் ஒரு வர்த்தகமையமாக அமைந்திருப்பது. இயற்கை வளம் இல்லாத நாம், வர்த்தகத்தின் மூலம் தேவையான பொருட்களை ஈட்டுவதோடு உற்பத்தி சேவைகள் இல்லாமலும் பொருளாதார ரீதியாக பயன் பெறுகிறோம். வெட்டப்படாத, பொலிவில்லாத வைரத்தை தோண்டி, வெட்டி, பட்டைத் தீட்டி, பளபளப்பாக்குவது போல் எவ்விதமான வளங்களும் இல்லாத நம் நாட்டை செழிப்புறச் செய்தது வர்த்தகமே. வர்த்தகமும் அண்டை நாடுகளுடன் கொண்ட உறவுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது. நீரின் உயரத்திற்கு ஏற்ப பூவின் தாளுடைய உயரம். அதேபோல நம் உறவுகளின் ஆழம் அளவே, நமது வர்த்தகமும். “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்பது வள்ளுவரின் மற்றொரு கூற்று. ஆக ஒரு செயலைப் புரிவதற்கு முன் நன்கு ஆராய்ந்து நடக்க வேண்டும். அண்டை நாடுகளோடு கசப்பினை உண்டாக்கிக் கொண்டால், பிற்காலத்தில் அது சிறியதாக இருந்தாலும் நம்மை பாதிக்கக்கூடும். ஏனெனில், நாடுகளுக்கு இடையே உண்டாகும் கசப்பு எளிதில் தீர்க்கக்கூடியது அல்ல. தவிர, வர்த்தகம் சிங்கப்பூர் பொருளாதரத்திற்கு பில்லியன் கணக்கில் உதவுகையில், அதனை தொடர்ந்து கட்டிக்காப்பது அவசியமாகும். அண்டை நாடுகள் நட்புடன் இருப்பதால்தான் மின் சாதனங்கள், காய்கறிகள், விளையாட்டுப் பொருள்கள் போன்ற எக்கச்சக்க பொருள்களை நம்மிடம் வர்த்தகம் செய்கின்றன. இசசுமுகமான உறவு இல்லையேல், வளம் இல்லாத நாம் கரை காணா கப்பலாக திண்டாடத்தான் வேண்டும். ஆக கலங்கரை விளக்கமாக திகழும் இவ்வுறவே பாதுகாப்பது, இன்றியமையாதது. // ஆனால், வேறு சிலரோ அனைத்துச் சூழல்களிலும் இயற்கை வளங்கள் இல்லாத ஒரே காரணத்தால் நமது அண்டை நாடுகளுடன் நாம் சுமூகமான உறவை கட்டிக்காக வேண்டுமா என வினவலாம். அந்நாடு அதர்மம் வழியில் செயல்பட்டுக் கொண்டிருந்தால்? அந்நாடு நமக்குத் தீங்கு நினைத்திருந்தால்? எடுத்துக்காட்டாக, ரஷ்ய நாடு உக்ரேனின் மீது போர் தொடுத்த போது, உலக நாடுகள் அனைத்தும் அந்நாட்டிற்கு எதிராயினர். ஏனென்றால், அவர்களது செயல் மனிதநேயமும் நியாயமும் இன்றி அமைந்தன. இது போன்ற சூழலிலும் சமூகமான உறவினை கட்டிக்காப்பது அவசியமா? பாரதியார் கூறியபடி, ரௌத்திரம் பழக வேண்டுமா? எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா? என்னை பொறுத்தவரையில், வேண்டும்தான் ஆனால் எல்லையை மீற லாகாது. ரஷ்யா போன்ற பெரும் நாடுகள் மின்சாரம் போன்ற துறைகளில் அதிகம் வளம் கொண்டவை. ஆனால் அவற்றின் செயல்களை நாம் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக நடுநிலையை நாம் எடுத்துக்கொள்ளலாம். இது அண்டை நாடுகளுக்கும் பொருந்தும். அண்டை நாடுகளோடு பகையை உண்டாக்குவதற்கு மாறாக பிரச்சனைகளை ஒன்று கூடிப் பேசித் தீர்க்க வேண்டும் அல்லது நடுநிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். இது சுமூகமான உறவு இல்லை என்றாலும் பகையையாவது தவிர்க்கலாம். // சுருங்கக்கூறின், தண்ணீர், மின்சாரம், வர்த்தகம் போன்ற அடிப்படை மற்றும் அவசியமான துறைகளில் நாம் அண்டை நாடுகளை நம்பி இருப்பதாலும் உறவுகள் எளிதில் இதனை பாதிக்கும் என்பதாலும் தனி நாடாக சிங்கப்பூரால் இயங்க இயலாது என்பதாலும் அண்டை நாடுகளோடு எச்சூழலிலும் நமது நாடு சமூகமான உறவைக் கட்டிக்காக வேண்டியுள்ளது என்பதே என் ஆணித்தரமான கருத்து. நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு ஏணியை கட்டுவது போன்றதாகும். வெறும் ரம்பமும் கயிறும் இருந்தால் ஏணி கட்ட இயலுமா? சுத்தியல், ஆணிகள், கட்டைகள் போன்ற எண்ணற்ற பொருள்கள் தேவை. அவற்றுக்காக வேறொரு ஆசாரியிடம் நம் பொருள்களை இரவல் பெறத்தான் வேண்டும். சண்டையிட்டோ மரியாதையின்றியோ பொருள்களைக் கேட்டால் அவை கிடைக்குமா? சமூகமாக அன்புடன் வினவினால் தான் கிட்டும். இயற்கை வளம் இல்லாத நிலையிலும் “யார் என்ன சொன்னாலும் யார் என்ன செய்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்” என்பதைப்போல நாம் அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள நல்லுறவே நமக்கு உதவிக் கரம் நீட்டும். மண்ணுக்கடியில் உள்ள விதை போராடி வெளிவந்து செழிப்பான செடியாக உருவெடுக்கத் தண்ணீர், மண், சூரிய வெளிச்சம் என நிறைய தேவைகள் உண்டு. அதுபோல், இயற்கை வளம் குறைவாக இருக்கும் நம் நாட்டின் வளர்ச்சிக்குச் சமூகமான அண்டை நாடு உறவுகளும் அவசியமே… ~ முற்றும் ~

Wednesday, September 13, 2023

சொற்பொழிவுக் கட்டுரை - தலைப்பு: ‘ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது’ - இனியா கொண்டாரெட்டி - Year 4 - 2023

இங்குக் கூடியிருக்கும் அவையோர் அனைவருக்கும் எனது முத்தமிழ் வணக்கங்கள். நீங்கள் எப்போதாவது உலகத்திலுள்ள பல நாடுகளை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா? சில நாடுகள் வெற்றி கண்டு வளர்ச்சி அடைந்துள்ளன. மற்றவை சிலபல காரணங்களால் பின்தங்கியுள்ளன. ஆனால் இந்நிலைமை கூடிய சீக்கிரமே மாறவுள்ளது. ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் ஒரு சிலரின் கைகளில் தான் இருக்கிறது. யார் இந்த ‘சிலர்’? ஆம், அது சரி: இளையர்கள் தான்! அவையிலுள்ள அனைத்து இளையர்களும் பெருமையுடன் கையை நன்கு உயரமாகத் தூக்குங்கள் பார்க்கலாம், சிறப்பு! இன்று நான் ஒரு நாட்டின் எதிர்காலம் ஏன் அதன் இளையர்களின் கைகளில் தான் உள்ளது என்பது குறித்து உரையாற்றவிருக்கிறேன். // உங்கள் மனதில் என்ன கேள்வி உள்ளது என்று எனக்குத் தெரியும். “ நான் ஒரு சாதாரணமான குடிமகன் தான், நாட்டின் எதிர்காலம் என் கையில் உள்ளதா?” ‘ தனிமரம் தோப்பாகாது’ என்பதற்கு ஏற்ப தனியாக இருக்கும்போது நாம் ஒருவர், ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் கூடினால் ஒரு நாட்டின் சதித்திரத்தையே எழுதலாம். நம் சமுதாயத்தில் பெரியவர்கள் எப்போதும் இளையர்களின் அறியாமையையும் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், சமுதாய வளர்ச்சிக்கு முக்கிய கருவியாக அமையப்போவது இளையர்கள் தான்! ‘ இளமை வாழ்வின் அறிவு பெருவினை யார்க்கும் தெரியாது’ என்று நம் மூதாதையர்களே பாராட்டி எழுதியுள்ளனர். இப்போது, என் நிலைப்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடுகிறேன். // முதலாவதாக, இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள்! ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அஸ்திவாரமே அரசாங்கம் தான். ஒரு நாட்டின் முகமாக அமைந்து, நாட்டு மக்களுக்கு வெற்றிப் பாதையைக் காட்டுவதே ஒரு தலைவனுக்கு அழகு. அரசியல்வாதிகள் அனைவரும் உண்மையாக, வெளிப்படையாக, நேர்மையுடன் நாட்டின் நலன் கருதிச் சேர்ந்து வேலை செய்ய வேண்டும். இன்னும் சில வருடங்களில் இன்றைய அரசியல்வாதிகள் ஓய்வு பெற, இச்சவாலைச் சமாளிக்கப் போவது நீங்கள் தான் இளையர்களே. கடந்த தலைமுறையை விட, நம் இளைஞர்கள் தலைமைத்துவத்தில் ஒரு படி மேலே இருப்பார்கள் என நான் திண்ணமாக நம்புகிறேன். ஏன் என்று கேட்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் பள்ளியில் ஒருமுறையாவது தலைவராக இருந்திருக்கிறீர்கள் எனக் கேட்டால் அனைவரும் கைகளை சட்டென்று மேலே உயர்த்துவீர்கள்! இதுதான் காரணம்; பள்ளியில் தலைமைத்துவத்தைக் கற்கவும் அதை அனுபவிக்கவும் இன்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அது மட்டுமா, இளையர்களிடம் புதிய உற்சாகமும் தைரியமும் தெரிகின்றது. ஒரு செயல் தவறு என்று எதிர்த்து கூற மனதில் அச்சம் இருக்காது இன்றைய இளையர்களுக்கு. உதாரணத்திற்கு, இன்று ஊழலில் ஈடுபட்டிருக்கும் பலரைத் தட்டிக் கேட்பவர்கள் இளைஞர்கள் தான். இளைஞர்களின் புதிய சிந்தனைகளும் புத்தாக்கமும் முற்போக்கான சமூகத்தை உருவாக்கும். இளைஞர்கள் மாற்றங்களை உண்டாக்க செயலில் இறங்குவர், பதவியை விரும்பி செயல்படுவதைவிட மக்களுக்குச் சேவை செய்வர். அதாவது, பல வருடங்களுக்கு மாற்றப்படாத பழைய சட்டங்களை இன்றைய சமூகத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பது நாட்டின் அமைப்பை நல்வழியில் மாற்றும். அத்துடன், கண்ணாடியை போலவே வெளிப்படையாக, ஒளிவுமறைவின்றி நடந்து கொள்வர். ‘பிறருக்கு உரைப்பாய்வு ஆகா இறைவன் அறிவர் ஆகும் அறிவு’ என்ற முத்து முத்தான எழுத்துகள், மக்களுடைய கருத்துக்களைப் புரிந்து கொள்வது தான் புத்திசாலியான தலைவருக்கு அழகு என்ற அர்த்தத்தை கொண்டுள்ளன. இளைஞர்களின் தலைமையில் பல குடிமக்கள் அரசியலில் பங்கேற்பர். தங்களுய கருத்துக்களை பகிர்வதும் பொறுப்பாக தேர்தலில் பங்கேற்பதும் குடிமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள இணைப்பை வலிமையாக்கும். // இரண்டாவதாக, இளையர்கள் சமூக பிரச்சினைகளில் அதீத அக்கறையைக் காட்டுகின்றனர். பள்ளியில் கட்டாயத்துக்குச் செய்து வரும் சமூக சேவை வளர வளர பழக்கமாகவே மாறிவிடுகிறது. பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவி அல்லது பொருள் உதவி செய்கின்றனர். சிலர் செஞ்சிலுவை சங்கத்தைப் போன்ற இலாப நோக்கமற்ற நிறுவனங்களில் தொண்டூழியம் மேற்கொண்டு சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்கின்றனர். இந்த முயற்சிகளால் சமத்துவத்தையும் நாட்டில் உதவும் கலாச்சாரத்தையும் நாட்டு நிம்மதியையும் நிலவச் செய்யலாம். இதன் மூலம் நாடு வளரும்- மக்களின் மகிழ்ச்சியும் வாழ்க்கைத் தரமும் மேம்படும். இதற்கு கரெட்டா தன்பர்கைச் சிறந்த உதாரணமாக குறிப்பிடலாம். இளமைப் பருவத்திலேயே பருவநிலை மாற்றத்தை குறைக்க, அனைவரும் பள்ளிக்கு செல்ல, அவர் ‘ வெள்ளை மாளிகைக்கு’ சென்று அரசியல்வாதிகளுடன் பேசினார். இளைஞர்களிடம் உள்ள தைரியத்தையும் உலக பிரச்சனைகளின் மீதான அக்கறையையும் அவர் பிரதிபலிக்கின்றார். இவரைப் போலவே, நம் சிங்கையின் இளையர்கள் கோவிட்-19 நிலையில் சிறு சிறு வழிகளில் நாட்டுக்குச் சேவையாற்றினர். அதைத் தவிர்த்து, சிலர் மற்ற நாடுகளுக்கு பயணித்து இயற்கைப் பேரிடருக்குப் பின்னர் உதவியிருக்கின்றனர். சுற்றுச்சூழல், ஏழ்மை, ஆண்-பெண் சமத்துவம் முதலான பல சிக்கல்களைக் கவனித்து குறைந்தவசதி படைத்தோருக்குக் குரல் தருகின்றனர். இதன்மூலம் வாழ்க்கைகளையும் நாட்டையும் மேம்படுத்துகின்றனர். அன்பு, பரிவு போன்ற பண்புகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்களா, அனைவரும்? சிறப்பு. // மூன்றாவதாக, இளைஞர்களே, உங்கள் பெற்றோர் உங்களை அதிகமாக கண்டிப்பது எந்தச் செயலுக்கு? ஆமாம், நாம் அனைவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு தான்! ஆனால், இந்த தொழில்நுட்பம் நமது எதிர்காலத்துக்கு உதவியாக அமையும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஒரு சொடுக்கால் செய்தியை உலக மக்களிடம் பரவச் செய்யலாமே, சமூக ஊடகங்களின் மூலம். விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களை செயல்படுத்தவும் இது மிக பயனுள்ளதாக அமையும். அதுமட்டுமின்றி, தலைவர்கள் பிற நாடுகளில் நடந்தவற்றை அறிவதன்மூலம் தங்களுடைய நாட்டில் என்ன செய்யலாம், எவ்வாறு அதைப்போன்ற அசம்பாவிதத்தை தடுக்கலாம் என்று சிந்திப்பார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை நல்லதுக்கு பயன்படுத்த இளைஞர்கள் மருத்துவம், அறிவியல் முதலிய பல துறைகளை வளர்க்கலாம். நாட்டின் வளர்ச்சி அதிகரிக்க, வாழ்க்கைத் தரமும் மேம்படும். தொழில்நுட்பத்துடன் புதிய உருவாக்கங்களை தேவையானபோது பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, ஆப்பிரிக்காவில் ஒரு இளைஞர் குழு வெள்ளம் வரும்போது அனைவரிடமும் செய்தி பரப்ப ஒரு புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியது. இளைஞர்களின் அறிவு, பற்று மற்றும் புத்தாக்கத்தை இது காட்டுகிறது அல்லவா? // அடுத்ததாக, விளையாட்டு மற்றும் கலைகளைக் கவனிப்போம். சமீபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த திருமதி சாந்தி பெரெரா ஓட்டப்பந்தயத்தில் சிங்கையைப் பிரதிநிதித்து பல சாதனைகளைப் படைத்துவந்துள்ளார். நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரைப் போலவே பல இளைஞர்கள் தங்களுடைய நாட்டுக்கு எதிர்காலத்தில் பெருமைச் சேர்ப்பார்கள். இளைஞர்கள் கலைகளிலும் விளையாட்டிலும் உள்ள தங்களது ஈடுபாட்டை தங்களுடைய திறனாக மாற்ற பல வாய்ப்புகள் உள்ளன. இன்றைய சமுதாயம் பிடித்ததைப் படிக்காதே, எதிர்காலத்தில் அதிகம் சம்பளம் அளிக்கும் படிப்பைப் படி என்று சொல்கிறது. ஆனால், இந்த போலி சந்தோஷத்தை விட்டுவிட்டு இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமானதைச் செய்வதால் நாட்டுக்குப் பெருமையை வாங்கி தரலாம். // கடைசியாக, கல்வி. உங்களில் எத்தனை பேர் கல்வியின்று ஒரு நாடு வெற்றியடைய முடியாது என்று நம்புகிறீர்கள்? உங்களுக்குக் கிடைத்த கல்வியை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு செல்லுங்கள்! நீங்கள் அனைவரும் தான் உங்களது நாட்டின் தூண்கள் என்பதை மறவாதீர்கள். தலைவர்கள், சேவை செய்யுங்கள்! அனைவரும் சமுதாயத்தில் பண்புகளை வளர்க்க சமூக பிரச்சினைகளில் ஈடுபடுங்கள்! மேலும், உங்களுடைய அறிவை வளர்த்து, தொழில்நுட்பத்தின் உதவியால் நாட்டை மேம்படுத்துங்கள்! நாட்டை பிரதிநிதித்து வென்று வாருங்கள்! // ‘ஒரு நாட்டின் எதிர்காலமே உங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் தான் உள்ளது!’ என்று கூறி எனது உரையை முடிக்கிறேன். அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

சொற்பொழிவுக் கட்டுரை - நான் மதித்துப் போற்றும் தமிழறிஞர் டாக்டர் மு வரதராசனார்

தமிழறிஞர் — டாக்டர் மு வரதராசனார் ஸ்மிருதி ச ஐயர் – Year 3 – 2023 “உன்னுதிரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆயிரம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!” என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வரிகளுடன் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். நமது செம்மொழியின் நீடித்த நிலைதன்மைக்கும் வளர்ச்சிக்கும் அல்லும் பகலும் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த பேராசிரியர்கள் பலர்; அவர்களில் சிலர் மட்டுமே தமிழர்களின் மனத்தில் மறைந்தும் மறையாமல் வாழ்கின்றனர். அவர்களில் ஒருவரான டாக்டர் மு வரதராசனார் அவர்களைப் பற்றியே இன்று நான் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டின் பெரும்பாலன தலைசிறந்த தமிழாசிரியர்களைப் போலவே டாக்டர் மு வரதராசனார் ஏராளமான பதவிகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார் — அவை அனைத்தையும் நான் இப்போது கூறினால், அன் வாய்தான் வலிக்கும்! ஆனால், பல கல்வியறிவு பெற்ற ஆசிரியர்களிடம் இன்றும் காணப்படாத உயர்ந்த விழுமியங்கள் அவரிடம் காளப்பட்டன; அவரின் வாழ்வு முழுவதும் அவரிடம் காணப்பட்ட கடின உழைப்பும் எல்லையில்லா உதவும் மணப்பான்மையும் அவரை முன்னேற்றத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றன. ‘மு.வ.’ என்ற செல்லப்பெயரைப் பெற்ற டாக்டர் மு வரதராசர், ஆயிரத்து தொள்ளாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு ஏப்ரல் இருபத்தைந்து அன்று, எளிய குடும்பத்தில் பிறந்தார். இவ்வாறு அதிக பணமோ உதவியோ இல்லாமல் வளர்ந்த ஒருவர் எவ்வாறு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் தலைசிறந்து விளங்கி, புகழ்பெற்ற கதாசிரியராகவும் தமிழாசிரியராகவும் பிரபலம் பெற்றார், என்று சந்தேகம் உங்களினுள்ளே இப்போது எழலாம். இதற்கான பதில் என்னவென்றால், கடின உழைப்பே ஆகும். பள்ளிப்படிப்பை முடித்தபின்னர், அவர் பிறந்த திருப்பத்தூரிலே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், அவர் கொண்டிருந்த தமிழ்ப்பற்றினால், தனியே படித்துப் புலவர் தேர்வில் முதல்வராகத் தேர்ச்சி பெற்றார்; அவ்வூர் நகராட்சி உயர்னிலைப் பள்ளி ஆசிரியரானர்; பின்னர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அங்கே, அவர் விடாமுயற்சியுடன் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கத்துடன் அயராது உழைத்தார்; பெராசிரியராக உயர்ந்தார்; மதுரை காமராசர் பல்கலைகழக்த்தின் துணைவேந்தராக கௌரவிக்கப்பட்டார். இவ்வாறு அவர் உறுதியான ஓர் இலத்சியத்திற்காக அரும்பாடு பட்டதால் அவரால் வானத்தை வசப்படுத்த முடிந்தது. “இதையெல்லாம் விடுங்கள்; அவர் சிறந்த ஆசிரியராக விளங்கினார் என்பதற்கான சான்றுகள் என்ன?” என்ற எண்ணம் உங்களிடையே பலருக்குத் தோன்றலாம். சில ஆசிரியர்கள் மாணவர்களை அதிரிகலாகக் கருதி அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவற்றுக்கும் தண்டனை வழங்குவர்; மற்ற சிலர் மாணவர்களுக்குக் கற்பித்துவிட்டு, வேலையை மட்டும் முடித்துவிட்டு சென்றுவிடுவர். ஆனால் மிகச்சிலரே மாணவர்களைத் தங்கள் மக்களாகக் கருதி, எல்லா வகையிலும் துணையாக நிற்பார்கள். இறுதிவகை ஆசிரியர்களைச் சேர்ந்த ஒருவர்தான் டாக்டர் முவ. “அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்” என்ற வள்ளுவரின் வார்த்தைக்கேற்ப, ஒவ்வொரு மாண்வரையும் அன்புடனும் மனிதநேயத்துடனும் நடத்தினார் டாக்டர் முவ. மாணவர்களுகுப் பாடங்கற்பிக்கும் ஆசிரியராக மட்டுமின்றி, ஒரு வழிகாட்டும் தந்தையாகவும் திகழ்ந்தார். ஒவ்வொருவரின் குடும்பச் சூழலையும் உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உதவி வழங்கினார். எடுத்துக்காட்டாக, தன் எளிய மாணவர்களைத் தம் வீட்டிலேயே தங்கச்செய்து உணவளித்துப் படிக்க செய்தார்; மற்ற சில மாணவர்கள் வறுமையில் வாடியபோது அவர்களின் பள்ளி அல்லது கல்லூரிக் கட்டணத்தைக் கட்டி அவர்களிக்குக் கல்வி வழங்கினார். இவ்வாறு, தம் மாணவர்கள் பிறந்த சூரல் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இல்லாததை உறுதிசெய்து, பல தமிழ்பேராசிரியர்களை உருவாக்கினார். தமது பணியை தமக்கு வருவாய் கொடுக்கும் வேலையாக மட்டும் கருதாமல், மாணவர்களை வாழ்விக்கும் பணியாகக் கருதி அரும்பாடுபட்ட டாக்டர் முவ தமிழகத்தின் வரலாற்றில் என்றுமே மெச்சப்படுவார் என்று கூறினால் மிகையாகாது என்று நாம் நம்புகிறேன். முவ அவர்கள் பேரும் புகழும் பெறுவதற்கு அவரின் கொள்கைதான் காரணம் என்று நான் மீண்டும் ஒருமுறைகூட கூறினால் உங்களின் காது வலிக்கும். இக்கொள்கையின் மிக முக்கியமான அம்சங்கள், வள்ளுவமும் காந்தியமும் ஆகும். தேசியத்தை மறவாத தமிழ்ப்பற்றும், இறைப்பற்றை இகழாத சீர்திருத்தமும், பிறர் மனதைக் காயப்படுத்தாத எழுத்தாற்றலும் பெற்றிருந்த டாக்டர் முவ, நமது முன்னோர்களின் உயர்ந்த நெறிகளுக்கும் வள்ளுவரின் வார்த்தைகளுக்கும் தூய வாழ்வொன்றுக்கும் அடங்கி வாழ்ந்தார். எவ்வளவு சிரமப்பட்டுக்கொண்டிருந்தாலும் பிறரிடமிருந்து பறித்து வாழாமல் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் வைராகியத்தினாலும் கஷ்டத்திலிரிந்து மீண்டு வந்தார். அனைவரிடத்திலும் அன்பும் மனிதனேயமும் காட்டி வந்ததோடு, இந்நெறிகளை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்க, தங்கைக்கு போன்ற பல தமிழ்ப்புத்தகங்களை எழுதினார். டாக்டர் மு வரதராசனார் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து நான்காம் ஆண்டு காலமானாலும், தமிழர்களின் மனங்களிலும் நினைவுகளிலும் ஓர் உயர்ந்த மனிதராகவும் புலவராகவும் தொடர்ந்து உயிர்வாழ்ந்து வருகிறார். இன்று இங்கே உட்கார்ந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நான் தெரிவிக்க விரும்பும் மையகருத்து இதோ — டாக்டர் மு வரதராசனார் அவர்கள் உயர்ந்த வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து, தமிழ்மொழிக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் அளவில்லா பேரும் புகழும் சேர்த்துள்ளார். அவரை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு, நாம் நமது நெறிகளிலும் வாழ்விலும், தேசபற்றிலும் தமிழ்ப்பற்றிலும், பணியிலும் செயலிலும் தூய்மையையும் அறத்தையும் கடைபிடித்தால், நமகும் நமது கலாச்சாரத்திற்கும் பெருமை சேருவது நிச்சயம். இறுதியாக — தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்! நன்றி வணக்கம். ஸ்மிருதி ச ஐயர் – Year 3 – 2023

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...