சப்ரினா கான் (302)
அவைக்கு முதற்கண் என் வணக்கம்! இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலைப்பை மையமாக வைத்து என் கருத்துகளை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா? ஆம், அதில் ஐயம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நன்மை தீமை என அனைத்து இடங்களிலும் தங்கள் பங்களிப்பை அளிப்பது அவசியம். இவ்வாறு, குடும்பத்தில் அன்பும் பண்பும் அறிவும் கற்றுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி, புரிதலை ஏற்படுத்தி, பிணைப்பையும் வலுப்படுத்துகிறார்கள் அல்லவா? ஆனால், இது சாத்தியமாக அனைவரும் தங்கள் உறுப்பினர்களுடன் சேர்ந்து அதிக நேரத்தை ஆக்ககரமாகச் செலவு செய்ய ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஆகும். அதற்குத் தான் குடும்பக் கொண்டாட்டங்கள் இருக்கின்றன! பாரம்பரிய திருவிழாக்கள், பிறந்தநாட்கள், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற அனைத்துக் குடும்ப விழாக்களும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடன் நேரத்தை செலவழிக்க இழக்க முடியாத ஒரு வாய்ப்பை அளிக்கிறன. இக்கொண்டாட்டங்களிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் பண்புகள் கற்றுக் கொள்கிறார்கள், புரிதல் ஏற்படுத்துகிறார்கள், மறக்க முடியா நினைவுகளையும் உருவாக்குகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு இடையே உள்ள அன்பு, ஆதரவு, மற்றும் புரிதலை நாம் எந்த நாளில் காணலாம்? நிச்சயம் பிறந்தநாள் அன்று தான்! பிறந்தநாளின்போது பெற்றோர்கள் உங்களுக்குப் பிடித்த உணவையோ, ஆடையையோ, பொம்மையையோ நிச்சயம் வாங்கியிருப்பார்கள். இதிலிருந்தே அவர்கள் உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்று நன்கு அறிந்ததைக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, நிச்சயமாக பிறந்தநாளன்று இன்னும் உங்களுக்குப் பரிசு வாங்கித் தர முடியாத வயதில் இருக்கும் உங்கள் சகோதரரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றிருப்பீர்கள் அல்லவா? நினைவிருக்கிறதா? அந்தக் கடிதங்களில் இருக்கும் அழகிய சிறு சிறு வரைபடங்கள், வண்ணம் பூசப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஒன்று ஒன்றாக சரியான உணர்வை உணர்த்த கையால் எழுதப்பட்ட சொற்கள், முடிவில் ஒரு ஓரத்தில் தெரிவித்த நன்றிகள் ஆகியவை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அந்த எளிய கடிதத்தில் கொடுக்கப்பட்ட முயற்சி, சிந்தனை, நேரம் ஆகியவை நீங்கள் உண்மையாகக் குடும்ப உறுப்பினர்களால் நேசிக்கப்படுகிறீர்கள் என்று உணர்த்துவதில் உங்கள் பிறந்தநாளன்று ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக அமைகிறது.
“தந்தை தாய் பேண்” என்பதற்கு ஏற்பவும் தந்தையர் தினம் மற்றும் அன்னையர் தினத்தன்று எப்போதும் செலுத்துவதை விட நீங்கள் கொஞ்சம் கூடுதலாக அவர்களிடம் அன்பு செலுத்தியிருப்பீர்கள் அல்லவா? குடும்பத்திற்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்று அன்று மீண்டும் உங்கள் நினைவிற்கு வருகிறது. அப்போது, அவர்களிடம் உங்கள் நன்றியைத் தெரிவிக்க, அதிக அன்பும் செலுத்தி உதவியும் செய்வீர்கள். பெற்றோரும் அளவு கடந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். எனவே, இதிலிருந்து பிறந்தநாட்கள், பெற்றோர் தினங்கள் ஆகிய குடும்பக் கொண்டாட்டங்கள் உறுப்பினர்களுக்கும் தங்கள் அன்பையும், பிறரைப் பற்றி வைத்திருக்கும் புரிந்துணர்வையும் தெள்ளத் தெளிவாக எல்லோரிடமும் வெளிக்காட்டுகின்றன.
நாம் அனைவரும் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறோம். தீபாவளி, பொங்கல், நோன்புப் பெருநாள் ஆகிய நாட்களன்று பெற்றோர்கள் எல்லாம் ஏன் அதைக் கொண்டாடுகிறோம், யாரிடமெல்லாம் மதிப்பு காட்ட வேண்டும், பாரம்பரிய மரபாக என்ன செய்ய வேண்டும் என்று பிள்ளைகளிடம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கற்றுக் கொடுக்கின்றனர்.
“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
என்பதற்கு ஏற்ப பெற்றோருக்குப் பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது அவர்களுடைய உடலுக்கும் இன்பம், அவர்களின் பேச்சைக் கேட்பது அவர்களுடைய காதிற்கு இன்பம். அதனால், கொண்டாட்ட நாளன்று தங்கள் பிள்ளைகள் ஓடி, ஆடி, விளையாடி மகிழ்வதைக் காணுவதையே பெற்றோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கி அவர்கள் முகத்தில் புன்னகை தோன்ற போதுமானதாக அமைகிறது. இவ்வாறு குடும்பப் பாரம்பரியக் கொண்டாட்டங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே போதனைகளைப் பரிமாறிக் கொள்ளவும் அனைவரும் மகிழ்ச்சியடையவும் வாய்ப்பு அளிக்கிறது.
ஆம், இக்குடும்பக் கொண்டாட்டங்களின்போது சில நேரங்களில் நம் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட நேரிடும் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்கள் சகோதரர் உங்கள் உணவிலிருந்து சிலவற்றைத் திருடியிருக்கலாம், உங்கள் பெற்றோர் நீங்கள் பெரியவர்களுக்குச் சரியான மரியாதை கொடுக்காமல் இருந்ததற்கு உங்களைத் திட்டியிருக்கலாம், அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் உங்களுக்குக் கொடுத்த பரிசு உங்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்பிரச்சனைகள் எல்லாக் குடும்பத்திலும் இயல்பாக ஏற்படும் பிரச்சனைகள் தானே? இப்பிரச்சனைகளிலிருந்து நாம் எப்படி உணர்கிறோம் என்பதை ஒருவருக்கொருவர் பேசி உணர்த்துவதன் மூலம் பிறரைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. அவ்வாறு செய்தால் நாம் அனைவரும் ஒருவரையொருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும், வலுவான பிணைப்பையும் மறக்க முடியா இன்ப நினைவுகளையும் உருவாக்கவும் முடியும். அதோடு, அந்த நாளில் ஒரு பிரச்சனை இருந்தாலும் அதற்கு ஈடுசெய்ய பல நல்ல நினைவுகள் ஏற்பட்டிருக்கலாம் – வேடிக்கையான உரையாடல்கள், மனம் விட்டுப் பேசும் நிகழ்வுகள், சேர்ந்து வாய்விட்டுச் சிரிக்கும் நொடிகள் போன்றவை எல்லாம் கொண்டாட்டங்களின்போது எழுந்த பிரச்சனையை மறக்க வாய்ப்புகளை நமக்கு உருவாக்குகின்றன.
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது குடும்பத்திற்கும் பொருந்தும். சண்டையிட்டுப் பிரிந்து கிடப்பதைவிட ஒற்றுமையாக இருப்பது ஒரு குடும்பத்திற்கு நன்மையைத் தரும். மானிடராய் பிறத்தல் அரிது என்பது போல் ஒருவருக்கு நல்ல குடும்பம் அமைவதும் அரிதே. ஆனால் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க குடும்பக் கொண்டாட்டங்கள் வாய்ப்புகள் நிறைய தருகின்றன. அவை, குடும்பத்துடன் சேர்ந்து இருக்க நேரம், ஒற்றுமையை வளர்க்கும் சந்தர்ப்பம், கற்றுக்கொள்ள பாடங்கள், மனதில் எப்போதும் மறையாமல் இருக்கும் நினைவுகள் ஆகியவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
ஆனால், உங்கள் குடும்பத்திடம் உங்கள் அன்பைத் தெரிவிக்கக் குடும்ப கொண்டாட்டங்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் — இன்றே அவர்களிடம் உங்கள் மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவியுங்கள்!
இததுடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம் !