Sunday, September 8, 2019

2019 - RGS இல்  உள்ளூர் எழுத்தாளருடன் ஒரு கலந்துரையாடல்

கட்டுரை எழுதிய மாணவிகள்:
ஆனந்தன் விஷ்ணு வர்தினி 
மாதவன்  காருண்யா   

தாய்மொழியாம் தமிழ்மொழியிலான கவிதை, கதை, கட்டுரை எனப் பல்வேறு எழுத்து வடிவங்களைப் படித்துத் தேரலாம். ஆனால், இவற்றைத் தாண்டி, இப்படைப்புகளின் உட்கருத்தை, கதாசிரியரின் மனத்தை, எண்ண ஓட்டங்களை, சரிவரப் புரிந்துகொள்ள, இராஃபிள்ஸ்  பெண்கள் பள்ளி மாணவர்களாகிய எங்களுக்கு மிக அரிய வாய்ப்புக் கிட்டியது.
உயர்நிலை நான்கு மாணவிகளாகிய நாங்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக,  உள்ளூர் எழுத்தாளரான  திரு யூசுப் ராவுத்தர் ரஜித் அவரது ‘உயர்ந்த உள்ளம்' என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளை வகுப்பு நேரங்களிலேயே அவ்வப்போது  படித்து வந்தோம். குழுக்களாகப் பிரிந்து  கதாசிரியர் சமூகத்துக்குச் சொல்லும் செய்தி, கதை சொல்லும் உத்தி,  சொல்லாட்சி, மொழிநடை முதலான  இலக்கிய இயல்புகள் குறித்து விவாதித்துப் புரிந்துணர்வை மேம்படுத்திக்கொண்டு வந்தோம். இதன் மூலம்  கதைகள் வழித் தனிமனிதனுக்கும்  சமூகத்துக்கும் எழுத்தாளர் சொல்லவிரும்பும் வாழ்வியல் உண்மைகளையும் புரிந்துகொண்டோம். ஆழமான வாழ்க்கைப் பாடங்களைப் பிரதிபலிக்கும் இந்த இலக்கியக் கதைத்தொகுப்பினால், சமூகம் மற்றும் உலகக் கண்ணோட்டங்களை விரிவுபடுத்திக்கொண்டோம். 




எங்கள் ஆசிரியர் திரு கும்பலிங்கம் உத்தமன், திரு ரஜித் அவர்களை வகுப்பு நேரத்தில் நேரில் சந்தித்து உரையாடநேற்று ஏற்பாடு செய்திருந்தார். கலந்துரையாடலின்போது ஒரு கதாசிரியரையும் தாண்டி,  பழுத்த அனுபவமுடையவரை,  அறிவில் முதிர்ச்சி பெற்றவரை, சமுதாய அக்கறையுள்ள ஒருத்தரை நாங்கள் அறிந்துகொண்டோம். திரு ரஜித் அவர்கள் தமது சொந்த அனுபவங்களையும் பார்வைகளையும் ஒளிவு மறைவின்றி இளையர்களுக்குப் புரியுமாறு அழகாக எடுத்துக்கூறினார். “ஒவ்வொரு மாணவியும் ஒரு ஆழ்கடல். உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் நீர்மட்டத்தில் பயணிக்கும் கப்பல்கள். ஒரு பத்து மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே வெளிக் காரணங்களால் நீர் சலசலக்குமே ஒழிய, உங்களது தனித்திறமையை யாராலும், எதுவாலும் அசைக்கமுடியாது. நேரம் வரும்போது அதுவாக வெளிப்படும்,” என எங்களுக்கு மன தைரியம் ஊட்டும் வண்ணம் அவர் பேசியது, எங்கள் அனைவரையும் ஈர்த்தது, எங்களுக்கு ஒரு புதுவித உத்வேகத்தை அளித்தது. 

கதைக் கரு ஒன்றினை மனத்தில் வைத்துக்கொண்டால் அதை எங்குச் சென்றாலும் எந்நேரமானாலும் நினைத்துக்கொண்டே, அசை போட்டுக்கொண்டே இருக்கவேண்டும் எனக் கூறி, எங்களை எழுதத் தூண்டினார். அதேப் போலப் படிப்பும் கல்வியும் புத்தகத்தைத் தாண்டி நமது எண்ணங்களில் நிறைந்திருக்கவேண்டும் என்றார். இதுபோன்ற பல வாழ்வியல், உலகியல் கருத்துக்களைச் சிங்கப்பூர்ச் சுழலுக்குத் தொடர்புப்படுத்தி மிக நயமாக, உணர்ச்சிபூர்வமாக சொல்லிச் சென்றது எங்களுக்கு வாழ்வு முழுவதும் மனத்தில் நிலைத்திருக்கும் என்றால் அது மிகையாகாது. 


வெறும் தேர்வுகளுக்கு மட்டும் நித்தம் பயிலாமல் இது போன்ற புத்தாக்கமான, நூதன முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் தமிழ்மொழியின் சிறப்புகளை, வாழ்வியல் அனுபவங்களை, சமூகத்தில் இளையர்களாகிய நாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளைக் கற்றுக்கொள்வதோடு நில்லாமல் மனதார உணர முடிகின்றது.  இக்கலந்துரையாடல்கள் வருங்காலத்தில் மேலும் பல கதாசிரியர்களோடு நிகழ வேண்டும் என நாங்கள் அனைவருமே விருப்பப்படுகின்றோம். 
          ***************************************************************************************








No comments: