Monday, November 6, 2017

முன்னாள் மாணவியரின்  கட்டுரைகள் 

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, அதன் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும். விளக்கி எழுதுக.

தேசம் எனப்படுவது ஒரு கப்பல் போன்றது. ஆழிக் கடலில் பிரயாணிக்கும் அக்கப்பல், பாறைகளைத் தவிர்த்து, தரை தட்டாமல், சீராக ஓட, அத்தேசத்தை வழிநடத்திச்செல்ல, அக்கப்பலை ஓட்டிச்செல்ல தலைசிறந்த மாலுமியும், அவரைச் சூழ்ந்து சிறந்த பிற மாலுமிகளும் அவசியம். அவர்களது கைகளில்தான், ஒரு நாட்டின் ஏற்றமும் தாழ்வும் உள்ளது; பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வும் அதில் உள்ளடங்கியுள்ளது. எனவேதான், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்பது முழுக்க முழுக்க மெய்யே!

பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பர். ஆனால், அப்பணம் ஈட்டும் பொருளாதார வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும், அந்நாடு சிறந்து விளங்க ஊன்றுகோலாகவும் திகழ்கிறது. எனவேதான், "சீரான பொருளாதாரம் இல்லாத எத்தேசமும் நெடுநாள் சிறந்து விளங்க முடியாது. வளர்ச்சியை நோக்கி அது எடுக்கும் ஒவ்வொரு அடியும், இறுதியில் அதற்க்கு பங்கம் விளைவித்துவிடும்." என்கிறார் அரசியல் ஆய்வாளரும் சமூக தத்துவ ஞானியுமான காரல் மார்க்ஸ். அவரது பொன்னான வார்த்தைகளின் உண்மை அறியாது செயல்பட்டு, சீனாவின் மாவ் சூ டாங் சீன தேசத்திற்கு பல தலைமுறைகள் தாண்டியும் நீடித்திருக்கும் அளவிற்கு பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் என அனைத்துத் துறைகளிலும் பேரிழப்பை ஏற்ப்படுத்தினார். ஆனால், சிறந்த பொருளாதாரம் ஒன்றினை விரைவில் அமைத்து, தன் நாட்டின் வளர்ச்சிக்கு கண்ணயராமல் உழைத்தவர் நம் சிங்கையின் மதியுரை அமைச்சர் திரு. லீ குவான் யூவ் அவர்களே. பொருளாதார வளர்ச்சிக்கு அவரளித்த முக்கியத்துவமே, அன்று சிறு மீன்பிடி கிராமாகத் திகழ்ந்த சிங்கை, இன்று உலகின் முதற்தர நாடுகளில் ஒன்றாகவும், உலகமெல்லாம் மூக்கின்மீது விரல்வைத்து வியந்து நம்மை அண்ணாந்து பார்த்து போற்றிப் பாடும் அளவிற்கு நம்மை வளர்த்துள்ளது. அப்போருளாதார வளர்ச்சியே சமுகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல் என மற்றத் துறைகளிலும் நமக்கு வளர்ச்சியைத் தந்துள்ளது. ஆக, இதை அறிந்துதான் அகிலமே போற்றும் இந்திய பிரதம மந்திரியான நரேந்திர மோடி அவர்கள், தன் வெளியூர் பயணத்தில் அமேரிக்கா சென்று, அந்நாட்டு தலைசிறந்த வேலை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு அதிகாரிகளைச் சந்தித்து, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். 

மக்களில் பெரும்பாலோர் பணிபுரிந்தால், அவர்களது வருமானத்தின் மூலம் வசூலிக்கப்படும் வருமான வரி, சிறந்த குடி அமைப்பையும் உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிக்கவும், மக்களுக்கு சேவை செய்யவும் பயன்படுத்தப்படும். இதன் விளைவாக, இந்திய பொருளாதாரம் மேலும் உயர்ந்து, மேன்மேலும் பொருளாதார வளர்ச்சியை ஈர்க்கும். ஆனால், ஒரு நாட்டின் சிறந்த பொருளாதார வளர்ச்சியில் அரசியல் தலைவர்களின் பங்கைத் தாண்டி, அந்நாட்டு சமூகத் தலைவர்களின் பங்கும் இன்றியமையாததாகும்.ஏனெனில், அரசு பாரா இடங்களில் தங்கள் பங்கையாற்றி, துணைக்கோள் போல அரசின் செயல்களுக்கு ஏதுவாக செயல்பட்டு,  சமூகம் ஒன்றாக ஒருங்கிணைந்து வளர சமூகத் தலைவர்களின் பங்கு மிக முக்கியம். சிண்டா, மேன்டாக்கி, சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் சங்கம், சிங்கப்பூர் தொழிலாளர்கள் சங்கம் எனச் சங்கத் தலைவர்கள், அரசு செய்வதையும் தாண்டி, உதவித் தேவைப்படுவோருக்குப் பொருளாதார ரீதியில் உதவவேண்டும்; உள்நாட்டுத் திறன்களையும் நிறுவனங்களையும் தொடர்ந்து ஆதரிக்கவேண்டும். அப்பொழுதுதான், நாடு என்ற கப்பல் பொருளாதார வளர்ச்சியை நோக்கி ஒன்றாகப் பிரயாணித்து, சீரும் சிறப்புமாகத் திகழ இயலும்.

பொருளாதார வளர்ச்சிக்கு அடுத்தப்படியான வளர்ச்சி-- சமூக வளர்ச்சியே. ஏழ்மை, கல்வியின்மை, இறப்பு விகிதம், நோய்வாய்ப்பட்டோர் விகிதம், குற்ற விகிதம், ஆகியவை குறைவாக இருந்து, வாழ்க்கைத்தரமும் மக்களின் மகிழ்ச்சி நிலையும் உயர்ந்திருப்பது சமூக வளர்ச்சியைப் புலப்படுத்துகிறது. அப்படிப்பட்ட சமூக வளர்ச்சியை ஆதரிப்போர், கடவுளுக்கு நிகரான நிலையில் வைக்கப்பட்டு என்றென்றும் சாகாப் புகழ்கொண்டு போற்றப்படுவர். படிக்காத மேதை காமராசர் அவர்கள், ஏழை உழவர் பிள்ளைகள்கூடத் தன்னைப்போல் கல்வி கற்காமல் வளரக்கூடாது என்பதற்காக, பள்ளிகளில் "மதிய உணவு திட்டத்தை" அமல்படுத்தினார்; சமூக வளர்ச்சிக்கு அரும்பங்காற்றினார்.

"யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து  உயர்பவன் புனிதன்"
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அவர் வாழ்ந்தார்.
"தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு சோறு சம்பாத்தியம்,
இவையுண்டு தானுண்டு என்பவன் கடுகுபோல் சிறிதுள்ளம் கொண்டவன்"

என்ற பாரதிதாசனார் வரிகளுக்கேற்ப, கடுகுபோல் சிறிதுள்ளம் கொள்ளாமல் ஏழை இந்திய மக்களின் துயரத்தைத் துடைப்பதற்காக வாழ்ந்து, மகாத்மா என புவனமே போற்றும் மாமனிதர் காந்தியடிகள். அவர் ஆற்றிய அரும்பணியும் மக்களுக்கு போதித்த அகிம்சையும், இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது; இந்திய நாடு 15-ஆம் தேதி, ஆகஸ்டு மாதம் 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற நாடாகப் பிறந்தது. 

காந்தி, நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் என்று ஒவ்வோர் நாட்டிலும் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள்
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்று கடுமையாக உழைத்து, தன் நாட்டின் சமூக வளர்ச்சிக்கு உதவி, தாமும் சாகப் புகழ் பெற்றனர். எனவே தான், ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியில் அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் எனலாம். அவர்களின் கடும் முயற்சியின்றி, பலரது வாழ்வில் வளர்ச்சி என்பது கிட்டா அருங்கனியாகவே போயிருக்கும்.
பொருளாதார வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் அடுத்து, கலாச்சார வளர்ச்சியிலும் சமூகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் முக்கியப் பங்காற்றுகின்றனர். மனிதனின் தனிப்பட்ட வளர்ச்சியின் மூலக் காரணம் அவன் மனம் என்றால், ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் துணையாக இருப்பது அதன் கலாச்சாரமே. இளங்கோடியானாலும் ஆலமரமானாலும், தாவரங்கள் தழைத்தோங்க எப்படி வலுவான வேர்கள் அவசியமோ, அதைப்போலவே ஒவ்வொரு  நாடும்  உயரிய நிலையை அடைய, அதன் குடிமக்கள் அவர்களது கலாச்சாரத்தையும், அது கற்பிக்கும் நற்பண்புகளையும் கடைப்பிடிப்பது இன்றியமையாததாகும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
என்ற வள்ளுவர் கூறியதைப்போல், வளரும் சமூகத்திற்கு வலுவான வேர்களான கலாச்சாரம் அவசியம். ஆனால், களை பறிப்பதுபோல, கலாச்சாரத்திலுள்ள மூட நம்பிக்கைகளையும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களையும் களைவது மிக முக்கியம். இதுவே கலாசார வளர்ச்சியாகும். 

அன்று நம் சான்றோர்களான வள்ளுவரும், சமய முனிவர்களும், ஔவையும், கலாச்சார வளர்ச்சிக்கு உதவினர். கைம்பெண்களை கணவனின் சடலத்தோடு உயிருடன் எரிக்கும் வழக்கமான சதியை போக்கி, பல பெண்களின் துயரங்களைத் துடைத்தார் சமூக சீர்த்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராய் அவர்கள். பெண் விடுதலைக்காகவும், ஜாதி ஒழிப்பிற்காகவும், கலாச்சார புரட்சிக்காகவும் வெகுண்டெழுந்தார் முண்டாசு கவி பாரதி. அவரின்றி, நமக்கு ஓர் இந்திரா காந்தி கிடைத்திருப்பாரா? சமய நல்லிணக்கம் அவசியம்; சாதியில் தாழ்ந்தோர் இல்லை, அவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஹரிஜன், என்று இந்தியர்களுக்கு கற்பித்தார் காந்தி. இன்று, பெண்களின் கல்விக்காகவும், அவர்களின் சம உரிமைக்காகவும் போராடுகிறார் 16 வயது இஸ்லாமிய பெண் மலாலா யுசொப்சாய். ஆக, தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவி அளிக்க, தொடர்ந்து கலாச்சார வளர்ச்சிக்காகப் போராடினர் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள். எனவே, கலாச்சார வளர்ச்சியில் அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும்.

உலகமென்ற தோட்டத்தில் வளரும் மரங்கள்-- தேசங்கள். அவை வளர்ச்சிபெற்று முன்னேறினால்தான் அம்மரங்களில் வண்ணமயமான பூக்கள் பூத்து, இனிய கனிகள் காய்க்கும். ஆனால், அவ்வளர்ச்சிக்கு உதவ அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களான, நலம் விரும்பிகள் அவசியம். களை பறித்து, உரமூட்டி, ஒவ்வொரு மரத்தையும் பேண, ஒருவன் அவசியம். அதைப்போல்தான் ஒரு நாட்டின் வளர்ச்சியில் அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என ஆணித்தரமாக நம்புகிறேன்.

~~முற்றும்~~

சாம்பவி ராஜாங்கம்
408

 - 2015  

***********************************************************************************



 ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, அதன் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாகும்.  கருத்துரைக்க 


நாடு அதை நாடு,அதை நாடாவிட்டால் ஏது வீடு என்பது நாம் அனைவரும் செலியுற்றிருக்கும் ஒரு இன்தொடர்.ஆம் ,நாடு வெறும் தங்கும் இடமாக,நம் உள்ளத்தில் அமையக்கூடாது.அதை உரிமையுடன் பாதுகாத்து,வளர்த்து, அது செம்மாந்து வளரவைக்க உழைத்து வருவது ஒரு நாட்டின் தலைவர்களின் பொறுப்பு மட்டுமல்ல. ஒரு நாட்டின் விருத்தியை கருத்தில் கொண்டு செயல்படுவது பலரின் கடமை என்பது என் நம்பிக்கை.
முதன் முதலாக, ஒரு நாட்டின் வளர்ச்சியில் அந்நாட்டு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்காற்றுகிறார்கள் என்பது என்றும் மறுக்க இயலாத ஒன்று. எப்படி மறுக்கமுடியும்? நான்கு வருடங்களுக்கு, முழு நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தும் வகையில், நாட்டுத் தலைவர் தேர்தல்கள் ஏற்படுகின்றன.இதன் முக்கிய அடிப்படை நோக்கமே மக்களையும் நாட்டையும் நல்ல முறையில் பாதுகாத்து அந்த நாட்டை மேம்படுத்தும் திறனை பெற்றவர்களை தேர்வு செய்வதுதான்.”மாலுமி இல்லாத கப்பல் எப்படி ஒடாதோ, தலைவர் இல்லாத நாட்டால் செயல்பட இயலாது.” நாட்டின் தலைவர்கள் தான், தங்கள் தேசத்தின் நந்தா பாசத்தைக் கொண்டு, அதற்காக லட்சியங்களையும், குறிக்கோள்களையும் அமைத்து, அப்பாதையில் செலுத்துவர்.அவர்கள் பற்பல நற்குணங்களையும் திறன்களையும் பெற்றிருப்பவர்கள். நாட்டிற்கு பிரச்சனைகள் வந்தால், பதற்றம் அடைந்து நம்பிக்கையை கைவிடமாட்டார்கள். அவர்கள் நம்பி ஆயிரக்கணக்கான மக்களும் ஒரு நாடுமே இருக்கிறதுஅல்லவா?அந்த நம்பிக்கையின் சுமையில்- மடிந்துவிடாமல், நிதானமாக,புத்திகூர்மையுடன் செயல்படுவார்கள். இதற்கு ஏற்ற உதாரணம்,சிங்கப்பூர், நம் சொந்த நாட்டிலேயே உள்ளது. மலேசியாவுடன் சேர்ந்து, ஒரே நாடாக வாழ்ந்துக்கொண்டிருந்தது சிங்கை நாடு.ஆனால் பூசல்கள் ஏற ஏற, பகைமை பெருக்கிக்கொண்டே செல்ல,சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து பிரிய வேண்டும், என்று எடுத்த முடிவு,நம் நாட்டை உலுக்கியது.சிறு பிஞ்சு நாடு,”தன்னுடையது” என்று அழைத்துக்கொள்ள ஒரு இயற்கை பொருளும் இல்லை,பிரிட்டிஷ் தலைவர்களும் சென்று விட்டார்கள்.”எப்படி உயிருடன் இருப்பது?” போன்ற கேள்விகள் நம் பிரதமர் லீயை வாட்டி வதைத்து அவர் கம்பீரமாக ,உழைப்புடனும்,புத்திகூர்மையுடனும்,சிங்கப்பூரை ஒரு நவீன, உலகால் பாராட்டப்படும் நாடாக மாற்றியுள்ளார்.ஆகையால்,தலைவர் இல்லாமல் சிங்கப்பூரால் பாதி நிலைகூட அடைந்திருக்க முடியுமா?அவர் இல்லாவிட்டல்,ஏன் ஒரு தலைவர் இல்லாவிட்டால்,மக்கள் சேர்ந்து, பதற்றத்தில் ஆழ்ந்து,நாடே அழிந்திருக்கும்.

மேலும் தலைவர்கள் நாடடிற்காக,உலகளவில் நல்ல முடிவுகளை எடுக்கிறார்கள்.உலகமைப்பில்,அவர்கள் நம்பிக்கையுடனும், திறனுடனும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பங்கேற்கிறார்கள்.அங்கு,தங்கள் நாட்டிற்கு வளர்ச்சி தரும் வகையில்,உலக முடிவுகளை நாடுகின்றனர்.கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்பதை பின்பற்றி,நாட்டு விருத்திக்காக உழைக்கிறார்கள்.ஒரு நாட்டின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிப்பதில்லை, மக்களின் வளர்ச்சி, அவர்களிடம் உள்ள நாட்டுப் பற்று, நாட்டின் கலாச்சார, பண்பாட்டுவளர்ச்சி ,நாட்டின் அடையாளம் போன்றவற்றையும் குறிக்கின்றன என்பது என் கருத்து.அவ்வகையில்,ஒவ்வொரு வசிப்பிடத்திற்கும் அந்த இடத்திற்கு தலைவராக உள்ள அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் வந்துச் சென்று, மாந்தர்களின் பிரச்சனைகளை செவியுற்று, தங்களால் முடிந்ததை செய்கின்றனர். மக்களின் இடையே உறவை மேம்பட்டுத்தவும், ஒற்றுமையையும் ,இன நல்லிணக்கத்தையும் வளர்க்கவும் பற்பல நிகழ்ச்சிகளும்,விழாக்களும் ஏற்படுத்துக்கின்றனர்.ஆண்டுதோறும் தேசிய தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடுகிறார்கள்.இவற்றையெல்லாம், மக்களுக்கு நாட்டின் மேல் பாசத்தை உண்டாக்குகிறது.நாட்டிற்காக அதன் வளர்ச்சிக்காக உழைக்க தாங்களே வேட்கை கொள்வார்கள்.

மேற்கத்திய காரணங்களினால் ஆம் ஒப்புக்கொள்கிறேன். நாட்டு விருத்தியில், அதன் தலைவர்கள் மிகப் பெரிய பங்காற்றுகிறார்கள். நாட்டை வளர்ச்சி பெற வைப்பது அவர்களின் கடமை என்றே கூறுவேன்!அதற்காக தான்,அவர்களின் மேல் நம்பிக்கை செலுத்தி,மக்கள் தங்கள் தலைவர்களாக அவர்களைத் தேர்வு செய்துள்ளனர். ஆனால் “உண்மை என்பது புனிதமான சாதனை” என்று இ.ராதாகிருஷ்ணன் சொல்லியிருப்பதை,மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு,தவறான முறையில் நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கும் தலைவர்களை,செய்திகளில் வாசித்திருக்கிறோம்.எடுத்துக்காட்டாக, கீரிஸ் நாட்டில் தவறான முறையில் தன் சொந்த பலனுக்காக நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தார்,ஒரு தலைவர்.பணத்தை மக்கள் கைகளிலிருந்து பிடிங்கிகொண்டிருந்தார்.இந்த சூழ்நிலையில்,மக்களுக்கே சக்தி என்று கூறுவேன்.மக்கள் இல்லாமல்,நாட்டிற்கு அர்த்தம் இருக்காது.மக்கள் இன்றி நாடு இல்லை.ஆகையால் கீரிஸில் மக்களே எழுந்து நி்ன்று உரிமைக்காக போராடினர்.இதிலிருந்து,மக்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் பெறும் பங்கு உள்ளது என்பதை அறியலாம்.கெட்ட பாதையில் சென்று கொண்டிருக்கும் நாட்டை,சரியான பாதையில் செலுத்த மக்களால் முடியும்.அதேபோல் நாட்டை வளர்ச்சி பெற வைப்பது,மக்களின் கைகளிலேயே! “ நாடு உனக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்காதே,நீ நாட்டிற்கு என்ன செய்துள்ளாய் என்று கேள்” என்பது ஜான் எஃ கென்னடியின் வார்த்தைகள்.ஆம்.மக்களின் உழைப்பில்லாமல் நாடு முன்னேறுமா?
  அவ்வாறே,நாம்,நாட்டின் குடிமக்களாகிய நாம்தான்,நாட்டின் வளர்ச்சியை கடமையாக எடுத்து உறிமையுடன் உழைக்க வேண்டும். தினந்தோறும், கைகளை இதயத்தின் இடத்தில் வைத்து,          ,உறுதி மொழிகிறோம்.  நம் நாடு, மகிழ்ச்சி, வளம், முன்னேற்றம் ஆகியவற்றை அடையும் வண்ணம் சமத்துவத்தையும், நீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதற்கு உறுதி மேற்கொள்வோமாக!” என்று தினந்தோறும் எடுக்கும் உறுதி. அதை பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பது மக்களின் கடமை. பெரியவர்கள், அலுவங்களில் உழைகாமல், பிள்ளைகள் பள்ளயில் கல்வி பெறாமல் இருந்தால், தலைவர்கள் இருபதற்கு பயன் என்ன.
இறுதியாக, இன்றைய நவீன உலகில், உலகமயாக்கல் என்பதது கருத்தில் கொள்ள வேண்டும் முன்பு போல் நாடுகள் இடத்தால் பிரிக்கபட்டவை அல்ல. பொருளாதாரத்தால் இணைக்கப்பட்டலை.ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம் மட்ட நிலையை அடைந்தால்,மற்ற நாடுகளுக்கு அதே கதி.உதாரணத்திற்கு,சில ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்காவில் பொருளாதார நிலை,”Wall Street” என்று அழைக்கப்படுவது சரிவை அனுபவித்தது. அமெரிக்கா பொருளாதாரமே அழிவை கண்டது. இதன் காரணமாக உலகமே இத்தகைய பொருளாதார அழிவை அனுபவித்தது.இதை தவிர்க்க இயலாது. இத்தகைய காலகட்டத்தில் கில்லாறான இணைத்த வகையில் தான் உலகம் செயல்படுகிறது.ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சிய மற்ற நாடிகளன் கடமை என்றும் நான் கூறவில்லை.” Globlization” என்பது நமக்கு பற்பல நன்மைகளையும் அளிக்கிறது.ஆகையால்,இதற்கு ஒரே முடிவு,”நாடு”, ,”நாடு”என்ற பரிவை மறந்துவிட்டு,”உலக வளர்ப்பு,மேம்பாடு” என்ற முறையில் சிந்திக்க வேண்டும்.அப்போது தான் எல்லா நாடுகளும், வளர்ச்சி பெற முடியும்.

இறுதியாக நாட்டு வளர்ச்சி என்பது, பொருட்களை ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும் கப்பல்களை ஓட, மாலுமி தேவை, அதைப் போல் நாடு செயல்பட தலைவரும் தேவை, மக்களும் தேவை. ஆனால் ஒரு கப்ப்ல் மூழ்கிணால், எல்லா பொருக்களும் அவ்விடத்திற்கு கொண்டு சேர்க்க முடியாது. ஆகையால் கப்பல்களைப் போல் நாடுகளும் ஒன்று சேர்ந்து வளர்ச்சியை நோக்கி உழைக்க வேண்டும்.

***************************************************************************************
சிங்கப்பூரில் நமது பாரம்பரியக் கலைகள் வருங்காலத்திலும் நிலைத்திருப்பது கடினம். இதுபற்றிக் கருத்துரைக்க.   

            இயல். இசை. நாடகம். இம்மூன்றும்தான் நாம் நம் பாராம்பரிய கலைகளாக கொண்டுள்ளோம் என்று கூறினால் அது மிகையாகது. உலகம் பிறந்ததிலிருந்தே இம்மூன்று முக்கிய கலைகள் இயல்பாக நம் கலாச்சாரத்தில் தென்பட்டுள்ளன. ஓர் உதாரணத்திற்கு இசையை எடுத்துக்கொள்ளலாம். மொழியே இல்லாத சங்க காலத்தில் நம் மக்கள் இசையையே தங்கள் மொழியாக பயன்படுத்தி தொடர்புகொண்டனர். அந்த இசையேதான் இன்னும் நம் உலகில் இடம்பெறுகின்றது. இதைப்போல்தான் மற்றக் கலைகளும். ஆனால், சிங்கப்பூரில் நமது பாரம்பரியக் கலைகள் வருங்காலத்திலும் நிலைத்திருப்பது கடினமா என்பது எல்லோரும் கேட்கும் ஒரு முக்கிய கேள்வியாகும். அதற்கு என் கருத்து, சிங்கப்பூரில் நமது பாரம்பரியக் கலைகள் வருங்காலத்திலும் நிலைத்திருப்பது கடினமில்லை என்பதே ஆகும்.
            முதலில், இயல் என்கிற கலையை நாம் ஆராய்வோம். இயல் என்பது எழுத்து தமிழைக் குறிக்கிறது. இலக்கியங்கள், காப்பியங்கள் அனைத்தும் இயல் என்னும் இக்கலையை சார்ந்தவை.  இக்காலத்தில் பல இலக்கியங்களும் பல காப்பியங்களும் பற்பல விதங்களில் புத்தகமாக வெளியிடப் படுகின்றன. சிறுவர்களுக்காக இலக்கியங்களையும் காப்பியங்களையும் சுருக்கி ஒரு சிறுகதையாக்கி புத்தகமாக வெளியிடுவதை புத்தகக் கடைக்குச் சென்றால் காணமுடியும். அதுமட்டுமல்லாமல், பள்ளிகூடத்து பாடநூல்களிலும் பயிற்சிநூல்களிலும் மாணவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட பல இலக்கியங்களையும் காப்பியங்களையும் புகட்டுவதும் உண்டு. இவ்வாறு நம் அடுத்த தலைமுறையினர் ஆகிய சிறுவர்களிடம் இலக்கியங்களின் நன்மையையும் காப்பியங்களின் உண்மையையும் எடுத்துக் கூறும்போது இயல் என்கிற பாரம்பரிய கலை நிலைத்திருப்பது கடினம் என்பதை கூறுவது மிகவும் தவறு. இவ்வாறு நாம் நம் இளையர்களுக்கு இயல் என்கிற கலையை இலக்கியங்கள் மூலமும் காப்பியங்கள் முலமும் புகட்டினால் இக்கலை அழியவே அழியாது என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன். 

            அடுத்ததாக இசை என்னும் கலையை நாம் ஆராயலாம். இசை என்பது என்னைப் பொருத்தவரை எல்லா இடங்களிலும் காணலாம். ‘சின்ன சின்ன தொட்டில் கட்டி அம்மா சொல்லும் ஆரிராரோ இசைதானே, ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி ஆசை மெட்டு கட்டுறதும் இசைதானே’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப மின்விசிறி சுத்தும் சத்தம், தாளைக் கிழிக்கும் சத்தம் ஆகிய அனைத்தும்கூட இசை என்று நாம் கூறலாம். ஆனால், இசையை ஒரு கலையாகப் பார்த்தால் அதை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகையான இசை, இசை கருவிகளால் நாம் உண்டாக்கும் ஓசையைக் குறிக்கிறது. இரண்டாவது வகையான இசையைதான் நாம் இக்காலத்தில் பாட்டு என்று கூறுகிறோம். இவ்விரண்டு வகையான இசை கலைகள் நீடித்திருப்பது சுலபம் என்பது சிங்கப்பூரிலுள்ள பல இசைக் கழங்கங்கள் சித்தரிக்கின்றன. ஓர் உதாரணத்துக்கு சிங்கப்பூர் இந்திய நுண்கலை கழகத்தை (SIFAS) எடுத்துக்கொள்ளலாம். அங்கு சுமார் முன்னூறு மாணவர்கள் பாட்டு கற்றுகொள்வதாக அண்மையில் நான் அறிந்துக்கொண்டேன். பாட்டு மட்டுமல்லாமல் வீணை, சித்தார், மிருதங்கம், புல்லாங்குழல், போல் பல இசைக் கருவிகளைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகமாக தென்படுகின்றன. இவ்வாறு இத்தனை மாணவர்கள் இசை கற்றுக்கொண்டிருக்கும் போது இசை கலை எவ்வாறு நீடிக்காமல் இருக்கும்? அதுமட்டுமல்லாமல், இக்கழகம் ஆண்டுதோறும் பிரபல பாடகர்களையும் பிரபல இசை அமைப்பாளர்களையும் வரவழைத்து கச்சேரிகள், வகுப்புகள் போன்றவற்றை நடத்துகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகள் இசை கலையின் மீது மக்களிடம் உள்ள ஆர்வத்தை அதிகரிக்கும், கலைகளை வருங்காலமும் நீடித்திருக்கவும் செய்யும். 

            இறுதியாக, நாடகம் என்னும் கலையை ஆராய்வோம். நாடகம் என்பதையும் இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். முதல் வகை நடன நாடகமாகும். இரண்டாவது வகை நாம் இப்பொழுது ‘டிராமா’ என குறிப்பிடும் நாடகமாகும். முதலில் நடனத்தை ஆராயலாம். நடனம் என்பது இசையிலிருந்து தோன்றிய கலையாகும் என்று நான் நம்புகிறேன். நடனம் என்றும்  இக்கலையை சுமார் நானூறு மாணவர்கள் சிங்கப்பூர் இந்திய நுண்கலை கழகத்தில் கற்றுக்கொள்கிறார்கள். இக்கழகத்தைப்போல் சிங்கப்பூரில் நாலைந்து கழகங்கள் உள்ளன. இக்காலத்தில் நடனத்தை எத்தனை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. மாணவர்கள் இக்கழகங்களில் நடனத்தை கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் நடன போட்டிகள், நடன நிகழ்ச்சிகள், போன்றவற்றை நடத்தவும் செய்கின்றனர், அவற்றில் கலந்துக்கொள்ளவும் செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மைதிலி பிரகாஷ், ஷோபனா, தனஜயன், போன்ற பிரபல நடனமணிகளைச் சிங்கப்பூருக்கு அழைத்து பல்வேறு வகுப்புகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்தவும் செய்கின்றன இக் கலை கழகங்கள். இவ்வாறு பல நடவடிக்கைகளை பல கழகங்கள் நடத்துவதால் இக்கலை நீடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இரண்டாவது நாடமாகிய ‘டிராமாவை’ ஆராய்வோம். இதையே எல்லோரும் நாடகம் என்று அழைக்கின்றனர். நாடகம் என்கிற கலை பலவகைகளில் இன்னும் நிலைத்திருக்கிறது எதிர்காலத்திலும் நீடித்திருக்கும். திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற தொழில்நுட்ப நாடகங்கள் இப்பொழுது வெறிபிடித்து அலைகின்றன என்று நான் நம்புகிறேன். நடிகர்கள் நம் கண்முன்னால் நடிக்கும் நாடகங்கள் திரைப்படங்களைப்போல் இல்லை என்றாலும் பலர் அவற்றைப் பார்க்கத்தான் செய்கின்றனர். ஆகையால் நாடகம் என்னும் கலையும் எதிர்காலத்தில் நிலைத்திருப்பது சுலபம் என்று கூறலாம். 

இசை, நடனம், நாடகம், போன்ற கலைகள் நீடித்திருப்பதற்கு காரணங்கள் இக்கழகங்கள் மட்டுமல்ல பள்ளிகளில் இந்திய நடனக் குழு, இந்திய இசைக் குழு, போன்ற துணைப்பாட நடவடிக்கைகள் இருப்பதாலும் இக்கலைகள் நீடித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அதுமட்டுமல்லாமல், இசையைப் பற்றியும் நடனத்தைப் பற்றியும் இக்காலத்தில் வெளியிடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இக்கலைகள் எதிர்காலத்தில் நீடித்திருப்பதற்கு காரணமாகும். ஆகையால், இந்த முக்கிய காரணங்களாலே இயல், இசை, நாடகம் என்னும் நம் பாரம்பரிய கலைகள் நீடித்திருப்பது கடினமல்ல, சுலபம் என்று நான் நம்புகிறேன். கலைகளை வாழ்த்தி நாம் அனைவரும் செழிப்புடன் வாழ முடியும்.
(534 words)    Bala vela 

***********************************************************************************

ஒருவரது மகிழ்ச்சி அவரிடம் உள்ள செல்வத்தைப் பொருத்ததல்ல. இத்தலைப்பை
ஒட்டி உமது கருத்துகளை விளக்கி எழுதவும். 

மகிழ்ச்சி என்றால் என்ன? நடனம் ஆடி கலையை ரசிபத, இல்லை நடன பள்ளியைத் தொடங்கி அதிலிருந்து பணம் சம்பாதிப்பதா? கூட்டுக் குடும்பத்துடன் குடிசையில் வாழ்வதா?, இல்லை மூன்று மாடி வீட்டில் சொகுசாக தனியே வாழ்வதா? மகிழ்ச்சி என்பது மனித இயல்பு; எல்லா மனிதர்களுக்குமே மகிழ்ச்சி வரும். அனால் ஒவ்வொரு ஆளுக்கும் வெவ்வேறு இன்பம். சிலருக்குப் பாட்டு கேட்பதில் மகிழ்ச்சி வரலாம், மற்றவர்களுக்குக் குழந்தைகளுடன் விளையாடுவது முகத்தில் புன்முறுவலை ஏற்படுத்தலாம். மகிழ்ச்சி வெவ்வேறு உருவங்கள் எடுத்து வந்தாலும், இறுதியில் அது எலோருக்கும் இயல்பாக வரக்கொடிய ஒன்று தான். இருப்பினும் மின்னல் வேகத்தில் மாறி வரும் இவ்வுலகில் பணம் தான் பூமியைச் சுற்ற வைக்கிறது என்று நம்பி, சிலர் கண்மூடித்தனமாக மகிழ்ச்சியைத் தேடி செல்வத்தின் பின் "லோ லோ" வென்று அலைகிறார்கள். அனால், பணக்காரன் எலோருக்கும் மகிழ்ச்சியாக இல்லை, ஏழை எல்லாம் மகிழ்ச்சியின்றி வாழ்வதில்லை. ஆதலால், மனித வாழ்கையின் அடிப்படை அம்சமான மகிழ்ச்சி எல்லோருக்கும் சமமாக வரக்கூடியது என்றும், ஒருவருது மகிழ்ச்சி அவரிடம் உள்ள செல்வத்தைப் பொருத்ததல்ல என்றும் நான் கருதுகிறேன். 

மகிழ்ச்சி என்பது ஒருவரின் மனநிலையையும் எண்ணங்களையும் பொருத்தது. ஒரு பரந்த கடலுக்குச் சென்று அங்குள்ள நீரை வாங்க்கி வர ஒரு பாத்திரத்துடன் செல்கிறோம். கடலில் எல்லை இல்ல அளவிற்கு நீர் இருந்தும், நாம் கொண்டு செல்லும் பாத்திரம் அளவிற்குத் தான் நாம் நீரை வாங்க முடியும். இப்பாதிரதைப் போல தான் நமது மனநிலை ஆகும். "பூலோகம் ஆனந்தத்தின் எல்லை, இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை"> இந்த உலகத்தில் ஏராளமான மகிழ்ச்சி உண்டு, ஆனால் ஒருவருக்கு எந்தளவு மகிழ்ச்சி கிடப்பது என்பது அவரின் மனநிலையைப் பொருத்திருக்கிறது. நம்மைச் சுற்றி நடக்கும்ம் நிகழ்வுகளின் நன்மையைப் பார்த்து, இயற்கையில் அடங்கியுள்ள ரகசியங்களைப் பார்த்து, நம்முடன் பழகுவர்களின் நற்குணங்களைக் காணும் பரந்த மனப்பக்குவம் அடைந்தவர்களே அதிக மகிழ்ச்சி அடைவர். மகிழ்ச்சியான எண்ணங்கள் மகிழ்ச்சி தரும். அதைப் போல தான், எப்பொழுதுமே சுற்றி நடக்கும் தீயவற்றைக் கவனித்து கவலையான எண்ணங்களை மனதில் வளர்ப்பர்களுக்கு மகிழ்ச்சி எளிதில் வருவதில்லை. கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு கதிரவனின் ஒளியை ரசிக்கமுடியுமா? அதனால் கவலைகளிலும் பிரச்சனைகளிலும் நல்லதைப் பார்க்க இயலும் ஒரு சிரத மனநிலையை ஒருவருக்கு மகிழ்சி அளிக்கும்.மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்விப்பதை விட, உலகில் வேறேதும் பெரிய சந்தோஷம் இல்லை. "தோன்றின் புகழோடு தோன்றுக" என்பதைக் கடைப்பிக்கவே நாம் மனிதர்களைப் பிறந்திருக்கோம். பிறரையும் மகிழ்வித்து, நாமும் மகிழ்வதே வாழ்கையின் அர்த்தம் ஆகும். மற்றவர்களுக்கு உதவிக் கரம் நீட்டி அவர்களுக்டைய பிரச்சனைகளைத் தீர்ப்பது நமக்குத் தான் அளவில்லா ஆனந்தத்தை அளிக்கும். பண பலமோ பதவியோ இருந்தாலேயொழிய மற்றவர்களுக்கு நம்மால் உதவி இயலாது என்று கூறினால் அது மிகையாகும். மற்றவர்களுக்கு நாம் செய்யும் உஹ்டவி ஆடம்பரமாக இருக்க அவசியமில்லை. களைப்பாக இருக்கும் தோழனை நகைச்சுவையை நகைக்க வைத்து அவரின் களைப்பைக் கலைத்தால் கூட அது உதவி தான். ஆகையினால், நாம்அன்றாடம் செய்யும் சிறு சிறு உதவிகளையும் மற்றவர்களை மகிழ வைப்பதையும் பொருத்து தான் ஒருவரின் மகிழ்ச்சி அமைகிறது.

பணம் என்ற சக்திவாய்ந்த பொருள்தான் இன்றைய பெருளாதார உலகை படித்துள் லோண்டுதுள்ளது. அதனால் இவ்வுலகில் பலர், பணம் என்ற மந்திர விளக்கை பிடிக்க அடித்துப் பார்த்து ஓடுகின்றனர். மந்திர விளக்குக் கிடைத்தால், அதில் அடங்கியிருக்கும் பூதம் கெட்டதையெல்லாம் கொடுத்து அவர்களுக்கு  மகிழ்ச்சியைத் தரும் என்று போலியான எண்ணம் அவர்களுக்கு உண்டு. பணம் உலகத்தையே வாங்க முடியும். ஆனால் பிடித்ததை செய்யும் மகிழ்ச்சியை வாங்க முடியாது. பணத்தின் மீதுள்ள ஆசையினால் பலரும் தனக்கு இருக்கும் ஆசைகளை விட்டுக்கொடுத்து, தனுக்கு பிடிக்காத வேலைகளை வற்புறுத்தி செய்கிறார்கள். ஒருவர் நாட்டிலே மிகப் பெரிய பணக்காரனாக இருப்பினும், அவன் விட்டுகொடுத்த ஆசைகள் அவனைத் தினமும் உறுத்தும். ஆகவே, ஒருவரின் மகிழ்ச்சி அவரது செல்வத்தை பொறுத்ததல்ல, தான் வாழ்க்கையில் விரும்பியதைச் செய்வதைப் பொறுத்தது.

இறுதியாக, ஒருவர் மகிழ்ச்சி அடைய அவரைச் சுற்றி ஒரு நல்ல குடும்பமும் உயிர் பிரிய நண்பர்களும் இருக்க வேண்டும். தன்னைச் சுற்றி தன்னை நேசிப்பவர்கள் இருக்கும் பொழுது கவளிகள் அனைத்தும் தானாகவே மறையும், மகிழ்ச்சி மலரும். நண்பர்களுடன் நேரம் கழிப்பதும், குடும்பத்தின் ஆதரவோடி ஒரு செயலில் ஈடுப்படுவதும் ஒருவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சித் தரக்கூடும். ஒருவருக்கு உலகில் உள்ள அனைத்து செல்வங்களும் இருக்கலாம். இருப்பினும் அது அவருக்டைய தனிமைக் குறையை  தீர்க்க முடியாது, ஒரு குடும்பம் உண்மையான நண்பர்களும் தர முடியாது. ஏனனில், ஒருவரின் மகிழ்ச்சி தனது குடும்பத்தையும் சுற்றியுள்ள நண்பர்களையும் பொறுத்துள்ளது .  

மனநிலை, மற்றவர்களை மகிஹா வைக்கும் தன்மை, வாழ்க்கையில் விரும்பியதைச் செய்வது, சுற்றி குடும்பமும் நண்பர்களும் இருப்பது. இவை நான்கையும் பொருத்தே மகிழ்ச்சி இருக்கிறது. உலகில்லுல எந்தச் செல்வத்துக்கும் இவை வாங்குவதற்கான சக்தி இல்லை. மகிழ்ச்சியை அடைய இவ்வுலகில் எந்த உயிரினத்துக்கும் பணம் ஒரு தடையில்லை. ஏனென்றால் மகிழ்ச்சியே வாழ்கையின் அடிப்படை நோக்கமாக உள்ளது. ஆகவே , ஒருவரின் மகிழ்ச்சி அவரிடம் உள்ள செல்வத்தைப் பொருத்ததல்ல என்பது என் முடிவான கருத்தாகும்.

-  Sri Shivani Sathyan  - 2015   

************************************************************************************
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒருவரைப் பற்றியும், அவர் எவ்வாறு உம்மிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பது பற்றியும் விளக்கி எழுதுக.
அந்த நாளைச் சிந்தித்துப் பார்க்கும் போது ஒரு விதமான அச்சம் என்னைச் சூழ்கிறது – ஒரு நொடியில் என் வாழ்க்கையை நானே வீணாக்கியிருக்கலாம். ஆனால், அந்த முட்டாள் தனமான முடிவை எடுத்திருக்காவிட்டால் அந்த ஒரு நபரைச் சந்தித்திருக்க மாட்டேன்; என் வாழ்க்கையையே மாற்றியவர்.
என்னை அறியாமலேயே என் வாழ்க்கை திருப்பம் கண்டது. திடீரென்று ஒரு சோகம், பயம், வெறுப்பு – அனைத்தும் என் மனதை ஆட்கொண்டன. அதற்குச் சரியான காரணம் கூடத் தெரியவில்லை. என்னால் உண்ண முடியவில்லை, யாரிடமும் பேச இயலவில்லை. பேசுவதே ஒரு சவாலாகத் தோன்றியது. அந்தளவிற்கு என் தன்னம்பிக்கை குறைந்துகொண்டே சென்றது. பள்ளிப் பாடங்களில் கூட கவனம் செலுத்த முடியாமல் தவித்தேன். வாழ்க்கை ஒரு போராட்டம் போல் இருந்தது. முன்பு விரும்பி செய்த செயல்களில் ஆர்வத்தை இழந்தேன். என்னைச் சுற்றி நண்பர்கள் விலக, தனிமையில் தவிப்பது போல் உணர்வு ஏற்பட்டது. என்னை நானே வெறுக்கத் தொடங்கினேன். இந்த உலகத்தில் வாழ்வதற்கு அர்த்தமே இல்லை என்று நினைத்தேன்.
அந்த நாள், நள்ளிரவு மூன்று மணி ஆகிவிட்டது. வழக்கம் போல் நித்திரை இல்லாமல் படுக்கையில் கிடந்தேன். ஆனால் அன்றிரவு ஏதோ வித்தியாசமாக இருந்தது. என் மனம் இறுகியது. திடீரென்று பேயைக் கண்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. அதிர்ச்சியில் படுக்கையை விட்டுக் குதித்தேன். பதற்றத்துடன் முன்னும்பின்னுமாக நடந்தேன். தண்ணீர் அருந்த சமையலறைக்குச் சென்றேன். அப்போது மேசையில் கிடந்த மாத்திரைகள் என் கண்களுக்குத் தென்பட்டன. என்னால் சரியாகச் சிந்திக்க முடியவில்லை. அவற்றை எடுத்துக்கொண்டு அறைக்குச் சென்றேன். பயங்கர எண்ணங்கள் என் மனதில் ஓடின. உலகமே என் தோள்களில் நொறுங்கி விழுவது போல் தோன்றியது. யாரிடமும் பேச இயலாமல், முன்பின் யோசிக்காமல் என் எண்ணங்களை வலைப்பூவில் எழுதினேன். நான் இறந்துபோனால், எனக்கு நிம்மதி; யாருக்கும் பாதிப்பில்லை என்று என்னிடம் நானே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டேன். மாத்திரைகளைக் கையில் எடுத்துக்கொண்டேன்.
அத்தருணத்தில் என் கணினி ஒலித்தது. '1 புதிய மின்னஞ்சல்!' என்று மின்னியதைக் கண்டு தயக்கத்துடன் அதைத் திறந்தேன். என்னால் நம்ப முடியவில்லை. வலைப்பூவில் நான் எழுதியதைக் கண்டு முன்பின் தெரியாத ஒருவர் எனக்குப் பதில் எழுதியிருந்தார்:
தற்கொலை உன் பிரச்சனைகளுக்குத் தீர்வு இல்லை. உன்னைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள் என்று நீ இன்று நினைக்கலாம். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்: நாளை காலையில் கதவைத் திறக்கும்போது நீ மூச்சில்லாமல் கிடப்பதைப் பார்க்கும் உன் தாயின் மனம், உன் பிரச்சனைகளை முன்கூட்டியே கவனிக்கத் தவறியது தன் குற்றம் என்று நினைக்கும் உன் அக்காவின் நிலைமை, சிறு வயதிலிருந்து உன்னைக் கண்ணும் கருத்துமாக வளர்த்த உன் அப்பாவின் மனம். உன்னை எனக்குத் தெரியாவிட்டாலும் எனக்கு உன் மேல் அக்கறை உண்டு. தற்கொலை செய்வது தைரியம் அல்ல. பிரச்சனைகளைத் தாண்டி, வாழ முயற்சி செய்வதே உண்மையான தைரியம். தயவு செய்து உன் முடிவை இன்னொரு முறை சிந்தித்துப் பார்.
என்னை அறியாமலேயே என் கண்களில் மல்கிய கண்ணீர் துளிகள் கன்னங்களிலிருந்து விழுந்து தரையில் சிதறின. என்னைத் தெரியாத ஒருவர் என் மேல் இவ்வளவு அக்கறை கொண்டது என் மனதை உருக வைத்தது. அவர் எழுதியதற்கு நன்றி கூறி பதில் எழுதினேன். அன்றிலிருந்து தினமும் அவருடன் பேச ஆரம்பித்தேன். ஆயிரம் மைல்கள் தொலைவில் வாழும் ஒருவரால் என் வாழ்க்கையையே மாற்ற இயலும் என்று நான் ஒரு நிமிடமும் நினைத்திருக்க மாட்டேன்.
அன்றாடம் என் நலம் பற்றி விசாரித்தார். அவரே சிறு வயதில் மன‍ அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்துகொண்டேன். எத்தனையோ பிரச்சனைகளையோ சவால்களையோ சந்தித்தாலும் தொடர்ந்து முயற்சி செய்வதே வாழ்க்கை என்பதைக் கற்றுக்கொடுத்தார்.
'இடுக்கண் வருங்கால் நடுக அதனை
அடுத்தூர்வ த்தொப்ப தில்'
என்பதின் உண்மையை அறிந்தேன். கஷ்டங்களில் உதவி கேட்பதில் எவ்வித தவறுமில்லை என்றும் கூறினார். என்னை நானே நேசிக்க வேண்டுமென வலியுறுத்தினார். என் தன்னம்பிக்கையை வளர்க்க உதவினார். வாழ்க்கையின் இருளி்ல் வெளிச்சம் காண ஆரம்பித்தேன். 

தினமும் தவறாமல் என்னை உற்சாகப்படுத்த சில வார்த்தைகளையோ பாடல் வரிகளையோ அனுப்பினார். அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள் என்னை ஊக்குவித்தன. சிறு வயதிலேயே தன் தகப்பனை வாகன விபத்தில் இழந்தார். தாயார் மனக் கஷ்ட்ம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். அவர் அனுபவித்த வேதனைகளைக் கேட்டு நானே பயந்தேன். அப்போதுதான் தற்கொலை செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை முழுமையாக உணர்ந்தேன். இத்தனை துன்பங்களிலிருந்து மீண்டு வந்ததைக் கண்டு நான் வியந்தேன். என்னாலும் முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றேன். 

சிறிது சிறிதாக என் வாழ்க்கையும் மாறத் தொடங்கியிது. வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் காண ஆரம்பித்தேன். எளிதாக மனம் தளர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தேன். என்னை நானே தாழ்த்திக்கொள்வதை நிறுத்தினேன்.
'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு'
என்பதற்கேற்ப என் வாழ்க்கையில் இன்பத்தை மட்டும் பங்குகொள்ளாமல் துன்பத்தில் தோள்கொடுத்தார். என்னை ஒரு நாள் கூட நேரில் சந்திக்காமல் என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். என் கவலைகளை மனதினுள்ளேயே பூட்டிக்கொண்டு தவிக்காமல் அவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேச உதவினார்.
ஒரு நாள் வழக்கம் போல் எனக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதன் இறுதியில்:
என்னால் சில நாட்களுக்கு எழுத முடியாது... 

என்று எழுதியிருந்தார். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேலைகள் அதிகமாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். நான்கு நாட்கள் கழிந்தன. அவரிடமிருந்து அல்லாமல், அவரின் நண்பர் வழி மின்னஞ்சல் ஒன்று வந்தது:
நேற்றிரவு புற்றுநோயுடன் இரண்டு வருட போராட்ட்தின் முடிவில் அவர் இறந்துவிட்டார். தாமாகவே உன்னிடம் கூற விரும்பினார். ஆனால் அவரால் முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்க கடைசியாகக் கூறினார்... 

என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியில் வேரூன்றி நின்றேன். கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி பெருக்கெடுத்து ஓடியது. அவரால் எப்படி ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வாழ முடிந்தது? என் வாழ்க்கையையே மாற்றியவர்.
என் கண்களைத் துடைத்துக்கொண்டேன். நான் கவலைப்படுவதை அவர் விரும்ப மாட்டார் என்பதை உணர்ந்தேன். அவருக்காகவாவது நான் சந்தோசமாக இருக்கவேண்டும். அவர் இன்று இல்லாவிட்டாலும், ஒரு நாளும் சந்தித்திருக்காவிட்டாலும், அவர் செய்த உதவிகளுக்கு என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். அவரின் வார்த்தைகள் தொடர்ந்து என் வாழ்க்கையை மாற்றி வருகின்றன. அவர் கடைசியாக எழுதியது என்றும் என் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும்: 

நீ தான் உன் தோழி. உன் தோழிக்குப் பிரச்சனைகள் ஏதாவது நேரும் போது நீ அவளை ஊக்குவிப்பாய், அறிவுரை கூறுவாய். அதுபோல உனக்குப் பிரச்சனைகள் ஏற்படும்போது மனம் தளர்ந்து விடாதே. உன்னை நீயே தாழ்த்திப் பேசாதே. உன்னை நீயே தோழியாகக் கருத வேண்டும். அனைவரும் உன்னை விட்டு விலகும் போது, உனக்கு நீ தான் ஊக்கம் கொடுக்க வேண்டும். நீ கூறுவதை நீ தான் கேட்கிறாய். உன் வாழ்க்கைக்கு அர்த்தம் உண்டு. இந்த உலகத்தில் உனக்கென்று இடம் உண்டு. அதை என்றைக்குமே மறந்துவிடாதே.
அன்புடன்,
உன் ஜேம்ஸ்
(701 words)                                                         மிராணி - 2015 


மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்

May 3, 2011
    (  நன்றி:    http://www.tamilhindu.com/2011/05/arts-culturing-human-minds/)


பண்டைய காலத்தில் மனிதனின் செயல்பாடு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்திருந்தன. இன்றுபோல நினைத்த மாத்திரத்தில் உலகத்தைச் சுற்றிவரும் வசதிகள் இல்லாததால் சுற்றுப்புறத்திலுள்ள சில கல் தொலைவுக்குள் அவன் செயல்பாடுகள் நின்றுவிட்டன. அவனுக்கு இட்ட தொழிலைச் செவ்வனே செய்து கொண்டு, எஞ்சிய நேரத்தில் இறைவனை நினைத்து அவனுக்குத் தெரிந்த முறையில் வழிபாடு, ஆலயங்களுக்குச் செல்லுதல், பண்டைய கலைகளைப் பேணிப் பாதுகாத்தல், புதிய தலைமுறைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்தல் என வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டான்.
மனிதனுடைய செயல்பாடுகளுக்கு மையமாகப் பயன்பட்டது ஆலயங்கள். ஆலயங்களை இன்றைய பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடலாம். அந்த வகையில் இறை வழிபாடு முதன்மையிடம் பெற்றிருந்தாலும் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் பேணிப் பாதுகாத்தது நமது ஆலயங்களே. இதனால்தான் அன்றைய மன்னர்கள் ஒவ்வொரு ஊரிலும் வானளாவிய கோபுரங்களை அமைத்து இறைவனுக்கு ஆலயங்களை எடுப்பித்தார்கள்.
(கங்கை கொண்ட சோழபுரம் -  முதலாம் இராஜ இராஜ சோழனுடைய மகன் இராஜேந்திர சோழனால்  கட்டப்பட்டது.) 


இறை வழிபாட்டில் பூசனைகள் தவிர, வேதம் ஓதுதல், தேவாரம் ஓதுதல், இசை, நடனம் போன்ற நளின கலைகளை வளர்த்தல், சிற்பம், சித்திரம் வரைதல் போன்ற அனைத்தும் மையமாக வைத்து வளர்ந்தது இதுபோன்ற ஆலயங்களில்தான். இன்று உலக மக்கள் அனைவரும் பார்த்து வியந்து பாராட்டும் வகையில் இந்தியப் பாரம்பரியப் பண்பாட்டைப் பறைசாற்றி வரும் சிற்பக் கலைக்கு எத்தனை ஆலயங்களைக் குறிப்பிடலாம்.
(குடைவரக் கோயில் - மாமல்லபுரம்)
தமிழவேள் கோசா
டாக்டர் சுப. திண்ணப்பன்
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம்
சிங்கப்பூர்

 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றிச் சிங்கப்பூர் மலேசியாவில் தமிழர்கள் வாழ்வு சிறக்கப் பணியாற்றிய பெருந்தகை கோ. சாரங்கபாணி (கோசா)அவர்களுக்கு 1955இல் கோலாலம்பூரில் நடந்த அருள்நெறி மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தார். அந்தப் பட்டத்தின் பெயராலேயே - அதாவது தமிழவேள் என்னும் பெயராலேயே மலேசிய சிங்கப்பூர் மக்களால் கோசா இன்றும் அழைக்கப்படுகிறார். அவர் எத்தனையோ பட்டங்கள் பெற்றிருந்தாலும் தமிழவேள் என்னும் பட்டமே தலைமையாய்த் திகழ்கிறது. இந்தத் தமிழவேள் என்னும் பெயருக்குக் கோசா பல்லாற்றானும் தகுதி உடையவர் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


 தமிழவேள் என்னும்தொடர் தமிழ். வேள் என்னும் இரண்டு சொற்கள் இடையே அகரச் சாரியை பெற்று வந்த ஒரு தொடராகும். தமிழென் கிளவியும் அதனோரற்றே” என்று தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் (சூ 386) இவ்வாறு தமிழ் அகரச் சாரியை பெற விதி கூறப்படுகிறது. தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமைநீர்மைஇயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என மூவகையாக விளங்கும் மொழிதமிழ் நூல்தமிழர்தமிழ்நாடு என்னும் ஆறு பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி. (தொகுதி பக் 1756). வேள் என்பதற்குக் கலியாணம்விருப்பம்மன்மதன்முருகன்வேளிர்குலத் தலைவன்சளுக்கவேந்தன்சிற்றரசன்சிறப்புப் பெயர்சிறந்த ஆண்மகன்மண் எனப் பத்துப் பொருள்களை அவ்வகராதி கூறினாலும் தலைவர்ஆண்தகை என்ற பொருள்களையே இத்தொடர்க்கு ஏற்றவையாகக் கொள்ள வேண்டும்.


இனிமைப் பண்பால்

 ‘இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்’ என்று பிங்கல நிகண்டு தமிழுக்குப் பொருள் தருகின்றது. எனவே தமிழவேள் என்னும் தொடர் முதலில் இனிமையும் பண்பும் மிக்க தலைவர் என்பதை உணர்த்தும். கோசா அவர்களை நான் 1970இல் சிங்கப்பூரில் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது சிங்கை வானொலித் தமிழ்ப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய திரு அ. முருகையன்  என்னைக் கோசா இல்லத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். கோசா அவர்கள் தோற்றத்தால் நெடிய உருவமும்பாகவதர் போன்ற தலைமுடியும்புன்னகை தவழும் நன்முகமும் கொண்டவர். பணிவுடையன்இன்சொலன் என்னும் அணிகலன்களை அணிந்த பண்பாளர். நின்ற சொல்லர் நீடு தோன்றினியர்’ என்னும் நற்றிணை அடிக்கு எடுத்துக்காட்டாக இலங்கியவர் செல்விருந்தோம்பி நல்விருந்து பார்த்திருக்கும் செம்மல்” என்பதை நான் அன்று நன்குணர்ந்தேன். இவர் எப்போதும் வெள்ளை வேட்டியும் வெள்ளை ஜிப்பாவும் அணிந்து காட்சி அளிப்பார். எனவே இவர் காட்சிக்கு எளியர். கடுஞ்சொல் கூறாத ஒரு வெள்ளுடை மன்னர். இவர்க்கு வழிகாட்டிய பெரியாரோ வெண்தாடி வேந்தர். அவரைப் பற்றிக் கோசா பெரியார் அறிஞர்க்கு எல்லாம் தந்தைஅறியாதவர்க்கு எல்லாம் விந்தை” என்று குறிப்பிட்டார்.

இன்றமிழ்ப் பணியால்

  ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ என்னும் தொல்காப்பியப் பாயிரத் தொடரும், ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலனும்’ என்னும் தொல்காப்பிய நூற்பாத் தொடரும் ( 885) ‘தமிழ் கெழு கூடல்’ என்னும் புறநானூற்றுத் தொடரும் ( 58:13) தமிழ் என்பது மொழியைக் குறிக்கும் என்பதை எடுத்துரைக்கும். எனவே தமிழ்மொழிக்குத் தலைவர் என்பது தமிழவேள் என்னும் தொடர் தரும் பொருளாகும்.  


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்னும் பாரதியாரின் பாடலுக்கேற்பத் தமிழின் இனிமையையும் ஏற்றத்தையும் மலேசிய சிங்கைத் தமிழர்களுக்குக் கோசா தம் எழுத்தாலும் பேச்சாலும் வலியுறுத்தியதோடு தமிழர் திருநாள்” என்னும் ஒரு சிறந்த நிகழ்ச்சியையும் ஆண்டுதோறும் நடத்திக் காட்டினார். அவ்விழாவிற்குத் தமிழகம், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து தமிழறிஞர்களை அழைத்துப் பல ஊர்களில் சொற்பொழிவுகள் செய்ய ஏற்பாடு செய்தார். இதனால் தமிழார்வமும் தமிழறிவும் இப்பகுதியில் பலர் பெற்றுத் தமிழ்த் தொண்டாற்றிட முன்வந்தனர்.

தமிழ்க் கல்வி நாட்டத்தால்

  சிங்கப்பூரில் தமிழ் ஓர் அதிகாரத்துவ மொழியாக அமைந்ததற்குக் கோசா பெரும்பங்காற்றியுள்ளார். மேலும் அவர் காலத்திலிருந்த தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைத்துத் தமிழ்க் கல்விக் கழகம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கித் தமிழ்க்கல்வி முன்னேற்றம் காண அவர் பாடுபட்டார். தென்கிழக்காசியாவிலேயே தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்ட ஓர் உயர்நிலைப் பள்ளி என்னும் பெயரைப் பெற்றிருந்த உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளி உருவாவதற்கு கோசா உதவி செய்தார். 1956இல் மலேயாப் பல்கலைக் கழகத்தில் தோன்றிய  இந்திய இயற்பகுதி தமிழ்த் துறையாக அமையக் காரணமாக இருந்த பெருமகன் கோசா அவர்களே என்பதை நாடறியும். வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் இப்பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் பகுதி தொடங்கப் பரிந்துரை செய்தபோது அதனை எதிர்த்துத் தமிழ் எங்கள் உயிர் என்னும் பெயரில் நிதி திரட்டி மக்கள் ஆதரவையும் பெருக்கிக் கோசா செய்த போராட்டத்தின் விளைவே மலேயாப் பல்கலைக் கழகத்தில் இந்திய இயற்பகுதி தமிழ்த் துறையாக அமையக் காரணமாக
ஆயிற்று. இந்தத் துறை சிங்கப்பூரில்தான் தொடங்கப்பட்டது. கோசாவின் இந்த உதவி இப்பகுதி மக்களுக்குக் காலத்தினால் செய்த பேருதவியாகக் கருதப்படுகிறது. இதனால் தமிழில் பலர் பட்டம் பெறவும்ஆய்வுகள் நடத்தவும் வழி ஏற்பட்டது. இந்தத் துறைதான் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்த வழிகாட்டியது. அதற்கும் உறுதுணையாக இருந்தவர் கோசாதான்.

இதழியற்பணியால்

  மலேசியா சிங்கைப் பகுதியில் தமிழை வாழ்விக்கக் கோசா தமிழ் முரசு
இதழைத் தொடங்கி நடத்தினார். தமிழாற்றல் மிக்கவர்களைத் துணையாசிரியர்களாக்கினார். பயன் தரும் தலையங்கங்கள் பலவற்றை எழுதினார். இதனால் இப்பகுதியில் நல்ல தமிழ் மணம் வீசியது. தமிழர் வாழ்வில் எத்தனையோ நன்மைகள் ஏற்பட்டன. அறுபது  ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இன்று சிங்கையில் பீடுநடை போடும் ஒரேஒரு தமிழ் நாளிதழ் தமிழ் முரசு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் முன்னேற்றம்’, ‘சீர்திருத்தம்’, ‘தேச தூதன்என்ற தமிழ் இதழ்களும் Reform, Indian Daily என்ற ஆங்கில இதழ்களும் நடத்தித் தமிழ் மொழிதமிழர் நலம் மேம்பட முயன்றார். இத்தகைய இதழியல்பணியும் கோசா செய்துள்ளார். தமிழின் பெருமையையும் தமிழர் சிறப்பையும் தரணிக்குப் பறைசாற்றத் தலைப்பட்ட ஒருவரைத் தமிழ் மொழித் தலைவர்-தமிழவேள் எனக் கூறுவதில் தயக்கம் ஏற்பட வழி இல்லையே.

முத்தமிழ்க் காப்பால்

  இயல்இசைநாடகம் எனத் தமிழை மூவகையாகப் பகுத்து முத்தமிழ்
எனப் பெயரிட்ட பெருமை தமிழர்களைச் சாரும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும். இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச் செய்யும்.நாடகத்தமிழ் நடந்துகாட்டி மக்களை நல்வழிப்படுத்தும்” என்பார் கி.ஆ.பெ.விசுவநாதம். இம் மூவகைத் தமிழும் மலேசிய சிங்கைப் பகுதிகளில் மலரக் கோசா பாடுபட்டார். தமிழர் திருநாளில் இயற்றமிழ்ப் பகுதியைச் சார்ந்த பேச்சுப்போட்டிகதை கவிதை கட்டுரை எழுதும் போட்டிகள் நடத்திப் பலரை ஈடுபடச் செய்தார். பாட்டுப்போட்டி வாயிலாக இசைத்தமிழும்நாடகங்கள் பலவற்றைத் தமிழர் திருநாளின்போது நடத்தியதால் நாடகத்தமிழும் வளர்ச்சி கண்டன. எனவே தான் அவருக்கு 16-1-1966இல் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சியின்போது திருமதி சௌந்தரா கைலாசம்பேராசிரியை சோ. பாகிரதி ஆகியோர் சார்பில் தவத்திரு தனிநாயக அடிகளார் அவர்களால் முத்தமிழ்க் காவலர் என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

 இலக்கியப் பணியால்

  தமிழ் என்பது தமிழ் நூல்தமிழ் இலக்கியம் ஆகியவற்றையும் குறிக்கும். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தற்குக் கபிலர் குறிஞ்சிப்பாட்டு பாடியதாகச் சங்க இலக்கியக் குறிப்பு ஒன்றுண்டு. இந்த இடத்தில் தமிழ் என்பது குறிஞ்சிப் பாட்டாகிய இலக்கிய நூலைக் குறிக்கிறது அல்லவாஇந்த வகையில் பார்த்தாலும் கோசா மலேசிய சிங்கைப் பகுதியில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னாலியன்ற வகையில் எல்லாம் தளராது பாடுபட்டுள்ளார் எனலாம். அவர் தமிழ் முரசு இதழில் மாணவர் மணிமன்ற மலர் என்னும் பகுதி 1953இல் தொடங்கி அதில் இங்குள்ள தமிழ் மாணவர்களையும் இளைஞர்களையும் கதை,கட்டுரை,கவிதை முதலிய படைப்பிலக்கியங்களையும் எழுதத் தூண்டினார். வெண்பாப் போட்டி போன்றவற்றை நடத்தி ஆர்வமூட்டினார். இன்று மலேசிய சிங்கைத் தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர் பலர் இதனால் ஊக்கம் பெற்றவர்களே ஆவர். மலேசிய சிங்கைப் பகுதியில் தமிழ் இலக்கிய நூல்கள்இதழ்கள் உருவாக உழைத்த உத்தமரைத் தமிழ வேள் என்று உரைப்பது பொருத்தம்தானே

தமிழர் தமிழ் பிணைப்பால்


  தமிழ் என்னும் சொல் தமிழரையும் உணர்த்தும், 'அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்என்னும் சிலப்பதிகாரத் தொடர்(26:161) இதனை வலியுறுத்தும். தமிழும் தமிழரும் உயிரும் உடலும் போன்ற உறவுடைய சொற்கள். ஒன்றின்றி ஒன்றில்லை என்பதை நன்குணர்ந்த கோசா தமிழர் சிறந்தால்தான் தமிழ்மொழி சிறக்கும்தமிழ்மொழி வாழ்ந்தால்தான் தமிழர் வாழ முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராய் இருந்தார். எனவேதான் எழுத்தாளர்களை எதனை எழுதினாலும் முதலில் "வாழிய செந்தமிழ்,வாழ்க நற்றமிழர்" என்னும் பாரதியின் அடிகளை முதலில் எழுதிவிட்டுத்தான் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 ஒற்றுமை கண்டதால்

  சாதியால்சமயத்தால்ஊரால் பிரிந்து வாழ்ந்த தமிழரைப் பிணைப்பதற்காகக் கோசா 1951இல் கண்ட ஓர் அமைப்பே தமிழர் பிரதிநிதித்துவ சபை எனப்படும் தமிழர் பேரவை ஆகும். "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுநம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே" என்ற பாரதி வாக்கே அவர் பணிகளுக்கெல்லாம் அடிப்படை நோக்கமாக இருந்தது. சிறுசிறு அமைப்புகளாகச் சிதறிக் கிடந்த சங்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து உருவாக்கிய அமைப்பே தமிழர் பேரவையாகும். ஒற்றுமை என்னும் உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றும் மற்றொரு முயற்சியே தமிழர் திருநாளாகும். மொழியை முன்னிறுத்தி
ஒற்றுமைப்படுத்த விழைந்த வேட்கை அது. "வெள்ளம்போல் தமிழர் கூட்டம்வீரங்கொள் கூட்டம்அன்னார் உள்ளத்தால் ஒருவரேமற்று உடலினால் பலராய்க் காண்பார்கள்ளத்தால் நெருங்கொணாதே என வையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாள்உள்ளம் சொக்கும் நாள் எந்தநாளோ?" என்று பாரதிதாசன் கனவு கண்ட நாளே தமிழர் திருநாளாகும்.


சீர்திருத்தச் செயலால்

 தமிழர் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்த சாதி வேற்றுமைமூட நம்பிக்கைமத நம்பிக்கைபகுத்தறிவுக்குப் புறம்பான பழக்கவழக்கங்கள்குடிப்பழக்கம் முதலானவற்றைக் களையக் கோசா அயராது பாடுபட்டார். பெரியார் ஈ வெ ரா அவர்களை மலேசியாசிங்கைக்கு இருமுறை வருமாறு செய்து இங்குள்ள தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அவர் வாயிலாக எடுத்துணர்த்துமாறு செய்தார். மேலும் தமிழர் சீர்திருத்த சங்கம் 1930இலேயே தொடங்கினார். 1939இல் அகில மலேயா தமிழர் சங்கம் என்னும் அமைப்பை உ. இராமசாமி நாடார் தலைமையில் ஆரம்பித்து வைத்தார். படிப்பகம்நூலகம் பலவற்றைத் திறக்க வழி செய்தார். 1956இல் மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றம் தொடங்க ஆவன செய்தார். இத்தகைய அமைப்புகள் வழி இவர் மேற்கொண்ட செயலாற்றலால் சாதி வேற்றுமை குறைந்தது. கலப்புத் திருமணங்கள் பெருகின. சுயமரியாதைத் திருமணங்கள் நடத்திவைக்கப்பட்டன. தமிழர்கள் தம் திருமணங்களைப் பதிவு செய்துகொள்ள வழிசெய்தார். சொல்லுதல் யார்க்கும் எளியஅரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்பது குறள். ஆனால் கோசா தாமே ஒரு சீனப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். குடி குடியைக் கெடுக்கும்” என்பதை எடுத்துரைத்துத் தமிழ்ச் சமுதாயத்தை திருத்தினார். மேலும் "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்பதைத் தமிழ் மக்கள் உணர்ந்து பின்பற்றும்படி செய்தார். ஏழைத் தொழிலாளர் நலம்பெறவும்தமிழ்ப் பெண்கள் பல உரிமைகளைப் பெறவும் தக்கன செய்தார். பெண்கள் நாடாளு மன்ற உறுப்பினர்களாக வர வேண்டும் என்று தலையங்கங்கள் எழுதினார். இங்குள்ள கோயில்களில் உயிர்க்கொலை செய்வதைத் தடுக்க ஆவன செய்தார்.

குடியுரிமை முயற்சியால்

  எல்லாவற்றுக்கும் மேலாக 'ஆற்றில் ஒருகால்சேற்றில் ஒரு கால்என்பதற்கேற்பத் தமிழகத்தில் ஒருகாலும் சிங்கப்பூரில் ஒருகாலும் வைத்துத் தடுமாறிக்கொண்டிருந்த தமிழ் மக்களைச் சிங்கைக் குடிமக்களாக ஆக்குவதற்குக் கோசா எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிட வேண்டும். இம்முயற்சியின் விளைவாக இன்று சிங்கப்பூரில் செல்வச் செழிப்புடன் தமிழர்கள் வாழ்வதற்கு வழிசெய்த கோசா அவர்களைத் தமிழர் தலைவர்- தமிழவேள்-என்று கூறத் தடை ஏதேனும் உண்டாகூறீர்.


நாட்டுப் புகழ் நாட்டியதால்

  இறுதியாகத் தமிழ் என்னும் சொல் நாட்டையும் உணர்த்தும் நிலையில் தமிழ வேளைக் காண்போம். "தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்" என்னும் புறநானூற்றுத் தொடரில்(51:5) தமிழ் என்பது தமிழ் நாட்டைக் குறிக்கிறது. தமிழ் நாட்டின் பெருமையைத் தரணி அறியச் செய்வதற்கும் கோசா பாடுபட்டார். தமிழ் நாட்டின் பெருமையைப் பாரதியார் " வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று ஓரடியில் கூறிவிட்டார். தமிழர்கள் தரணிக்கு வழங்கிய நன்கொடைகளில் தலையாய நன்கொடையாகிய 
திருக்குறளையும் அந்நூலை ஆக்கிய திருவள்ளுவரையும் தமிழர்களிடையேயும் மற்றவர்களிடையேயும் பரப்பும் நோக்கத்தில் திருக்குறள் விழாதிருவள்ளுவர் விழா ஆகியவற்றைக் கொண்டாட வழிசெய்தார். திருக்குறள் மனனப் போட்டிகள்கதைகள்வகுப்புகள்சொற்பொழிவுகள் நடக்க ஆவன செய்தார். மேலும் தமிழ் முரசில் திருவள்ளுவராண்டு இடம் பெறச் செய்தார். ஏனைய தமிழ் இலக்கியம்தமிழ்ச் சான்றோர்கள்கவிஞர்கள் பற்றிச் சிங்கை மக்கள் அறியப் பத்திரிகைஅமைப்புகள் வாயிலாகப் பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். பாரதிதாசனைப் பற்றித் தமிழர்கள் அறியவும் அவர்க்கு நிதி சேர்த்துதவும் முயன்றார் கோசா. இவ்வாறு தமிழ் நாட்டின் பெருமையையும் போற்ற அவர் தவறவில்லை. 

முடிவுரை

 தமிழவேள் என்னும் தொடரிலுள்ள தமிழ் என்னும் சொல்லுக்கு அகராதி உணர்த்தும் இனிமைநீர்மைமுத்தமிழ்மொழிஇலக்கியம்,தமிழரினம். தமிழ்நாடு ஆகிய அறுவகைப் பொருள் நோக்கிலும் பெரும்பணி செய்து வாழ்ந்து மலேசிய சிங்கைத் தமிழர்க்கு வழிகாட்டிய ஒளிவிளக்கே தலைவர் கோசா எனப்படும் தமிழவேள் கோ சாரங்கபாணி ஆவார். அவரைத்  தமிழவேள் என்ற பெயராலேயே அழைப்பதை மறுப்பார் உண்டோஇல்லை என்றே உறுதியாக இயம்பலாம். சாரங்கபாணி செய்த சாதனையை இனி ஆரங்கே செய்வார்சாற்றுங்கள். 

(கட்டுரையை வடிவமைத்து வலைப்பூவில் பதிவேற்றம் செய்திட்ட பேராசிரியர் ஐயா திண்ணப்பன் அவர்களுக்கு நன்றி)


Thursday, February 9, 2017

Dr. Radha Krishnan

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைவர்கள்JUNE 5, 2013 Radhakrishnan ‘வீ. ராதாகிருஷ்ணன்’ என்றழைக்கப்படும் ‘சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்’ அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

 பிறப்பு: செப்டம்பர் 5, 1888
 பிறப்பிடம்: சர்வபள்ளி கிராமம், திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா
 இறப்பு: ஏப்ரல் 17, 1975
தொழில்: அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர் 
நாட்டுரிமை: இந்தியா


 பிறப்பு :

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழ்மையான  குடும்பத்தில், சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும் :

தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ணன் அவர்கள், தம் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூரிலுள்ள ‘கௌடி’ பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள ‘லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்’ படித்தார்.

அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் முதலில் சேர்ந்தார். பிறகு, சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார்.

இல்லற வாழ்க்கை :

ராதாகிருஷ்ணன் அவர்கள், தமது தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தனது பதினாறாவது வயதில் மணமுடித்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்றுத் துறையில் மிக முக்கியமான ஒருவர். 1956-ம் ஆண்டு, ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி சிவகாமு இறந்தபோது, அவரது இல்லற வாழ்க்கை 56 ஆண்டு காலத்தைக் கடந்தது.

ஆசிரியராக அவருடைய பணி:

  முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியேற்றார். கல்லூரியில், அவர் இந்துமத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, இந்திய நாட்டில் அறிமுகப்படுத்தினார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், இந்திய நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமையுடைய சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன் அவர்களை, பல நாடுகள் கவர்ந்து இழுத்தன. தத்துவமேதையான அவர், இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில் விதைக்கக் காரணமாக இருந்தார்.

தத்துவத் துறையில் அவரது பங்கு:

1918ல், மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார், ராதாகிருஷ்ணன் அவர்கள்.
1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார்.  1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது.  இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைசிறந்தப் படைப்பாகும். இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளன என்று வாதிட்டார். இந்திய தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிபெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்திய தத்துவத்தை, உலக வரைபடத்தில் வைத்த ஒரு தத்துவஞானி என்று அவரைக் கூறலாம்.

அவர் வகித்த பிற பணிகள்:

 1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.
1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி த்துறை , ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவின
.
அரசியல் வாழ்க்கை:

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், 1949 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுக்கு ஒரு வலுவான உறவு அடித்தளம் அமைக்க உதவியது.
1952ல், இந்தியாவின் முதல் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1954ல், இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கி கௌரவித்தது.
இரண்டு முறை துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய பிறகு, 1962ல் இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் இந்திய ஜனாதிபதியாக இருந்த பதவிக்காலத்தின் போது, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தியது. ஜனாதிபதியாக அவர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் பெரிதும் உதவின. 1967ல், ஜனாதிபதி பதவியிலுருந்து ஓய்வு  பெற்று சென்னையில் குடியேறினார்.
இறப்பு :  டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.

காலவரிசை :
 1888: திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார்.
 1918: மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவ பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார்.
 1921: கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 
1923: அவரின் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது.
 1931: ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
1939: பெனாரஸ் இந்து மதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார்.
 1946: அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
 1948: பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது.
 1949: சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார்.
 1954: ‘பாரத ரத்னா’ விருது பெற்றார். 1962: இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967: ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றார்.
 1975: தனது 86வது வயதில், ஏப்ரல் 17, 1975 ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.
 நன்றி : http://www.itstamil.com/sarvepalli-radhakrishnan.html

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...