Monday, November 6, 2017

மனித மனங்களைப் பண்படுத்தும் கலைகள்

May 3, 2011
    (  நன்றி:    http://www.tamilhindu.com/2011/05/arts-culturing-human-minds/)


பண்டைய காலத்தில் மனிதனின் செயல்பாடு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்திருந்தன. இன்றுபோல நினைத்த மாத்திரத்தில் உலகத்தைச் சுற்றிவரும் வசதிகள் இல்லாததால் சுற்றுப்புறத்திலுள்ள சில கல் தொலைவுக்குள் அவன் செயல்பாடுகள் நின்றுவிட்டன. அவனுக்கு இட்ட தொழிலைச் செவ்வனே செய்து கொண்டு, எஞ்சிய நேரத்தில் இறைவனை நினைத்து அவனுக்குத் தெரிந்த முறையில் வழிபாடு, ஆலயங்களுக்குச் செல்லுதல், பண்டைய கலைகளைப் பேணிப் பாதுகாத்தல், புதிய தலைமுறைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்தல் என வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டான்.
மனிதனுடைய செயல்பாடுகளுக்கு மையமாகப் பயன்பட்டது ஆலயங்கள். ஆலயங்களை இன்றைய பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடலாம். அந்த வகையில் இறை வழிபாடு முதன்மையிடம் பெற்றிருந்தாலும் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் பேணிப் பாதுகாத்தது நமது ஆலயங்களே. இதனால்தான் அன்றைய மன்னர்கள் ஒவ்வொரு ஊரிலும் வானளாவிய கோபுரங்களை அமைத்து இறைவனுக்கு ஆலயங்களை எடுப்பித்தார்கள்.
(கங்கை கொண்ட சோழபுரம் -  முதலாம் இராஜ இராஜ சோழனுடைய மகன் இராஜேந்திர சோழனால்  கட்டப்பட்டது.) 


இறை வழிபாட்டில் பூசனைகள் தவிர, வேதம் ஓதுதல், தேவாரம் ஓதுதல், இசை, நடனம் போன்ற நளின கலைகளை வளர்த்தல், சிற்பம், சித்திரம் வரைதல் போன்ற அனைத்தும் மையமாக வைத்து வளர்ந்தது இதுபோன்ற ஆலயங்களில்தான். இன்று உலக மக்கள் அனைவரும் பார்த்து வியந்து பாராட்டும் வகையில் இந்தியப் பாரம்பரியப் பண்பாட்டைப் பறைசாற்றி வரும் சிற்பக் கலைக்கு எத்தனை ஆலயங்களைக் குறிப்பிடலாம்.
(குடைவரக் கோயில் - மாமல்லபுரம்)


(முதலாம் இராஜ இராஜ சோழன் எழுப்பிய
பெரிய கோயிலின்  இராஜ கோபுரம் )
 குடவரைக் கோயில்களும் பாறைகளே இல்லாத இடங்களில்கூட வானளாவிய கோபுரங்களையும் கருங்கற்களால் கட்டப்பட்ட புராதன ஆலயங்களையும் இன்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், நமது முன்னோர்களின் புகழ்பரப்பிக் கொண்டிருக்கும் நிலைமையைப் பார்த்துப் பரவசம் அடையும்படி அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அன்றைய மனிதர்களுக்கு இருந்த அடிப்படை நம்பிக்கை, பக்தி, மக்களுக்கு என அர்ப்பணிக்கும் அறிவு இவையெல்லாம் இன்று உண்டா என்று சற்று சிந்திக்கலாம்.

இன்றைய காலகட்டம் வேறு என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். உலகம் மிகவும் சுருங்கிவிட்டது. ஒரே நாளில் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று விடலாம். கால ஓட்டத்தில் மனிதனின் கவனம் எங்கெல்லாமோ சிதறிச் சென்று கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பண்டைய கலை கலாசாரம் பற்றி நினைக்கக்கூட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தனை பரபரப்புகளுக்குமிடையே, கிராமங்கள் கூட அல்ல, பெருநகரங்களில் நமது சிறார்கள், பள்ளி, கல்லூரி இவற்றில் பயிலும் மாணவ மாணவியர், நமது பாரம்பரியக் கலைகளின்பால் ஈர்ப்பு கொண்டு, அவற்றைத் தகுந்த குருமார்களிடம் சென்று கற்று, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கள் திறமையை நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தான் நமது பாரம்பரியப்
பெருமையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் கலாசாரத் தூதர்கள் எனலாம்.
குறிப்பாக இசை என்பது, நமது பாரம்பரியப் பாட்டையிலிருந்து விலகி, மெல்லிசை, திரை இசை என்று மாறிச் சென்று கொண்டிருக்கிறது. அவைகளும் இசைதான். அதற்காக நமது பாரம்பரியப் பண், இசை இவற்றை ஒதுக்கிவிட்டு ஓசையை மட்டும் இசை என்று ஏற்றுக் கொள்ளலாமா? புதுமைகள் வேண்டும். அதற்காக நமது பாரம்பரியத்தையே அழித்து, அந்த அழிவின் மீது புதுமை என்ற பெயரில் சம்பந்தமில்லாத புதிய கற்பனைகளை, இசை என்று போற்றிக் கொண்டாடலாமா?
நல்ல காலம்! நமது பாரம்பரிய இசை, பண்கள் இவைகளுக்கு அடித்தளமாக இருக்கும் தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திருப்புகழ் தவிர கர்நாடக இசையின் மூலவர்களான ஸ்ரீ தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி போன்றோரது சாகித்யங்களும் தமிழிசையின் மூலவர்களான முத்துத் தாண்டவர், அருணாசல கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பல ஆசான்களின் பாடல்களும் இன்றும் உயிர்ப்போடு கற்றுக் கொண்டு பாடப்படுகின்றன.
சிங்கப்பூரில் சிறுமிகளின் பரதநாட்டியம்

பரதக் கலை என்பது எழுபது ஆண்டுகளுக்கு முன்புவரை ஆலயங்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரால் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. மிக உயரிய கலை இது என்பதோடு, இறை வழிபாட்டில் முக்கிய இடம்பெற்றும் இருந்தது பரதக் கலை. இதனை ஆடியவர்கள் ஆலயத்தின் சொத்தாக மதிக்கப்பட்டவர்கள். அவர்கள் பணி இறைவன் சந்நிதியில் ஆடுவதும் பாடுவதும் என்றிருந்ததை, சில மூடர்கள் குலைத்து இழிவு செய்யத் தொடங்கினர். சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவமும், ருத்ர தாண்டவமும், இந்த ஆடற்கலைக்கு மூலாதாரமாக அமைந்திருந்தன. நமது கலைகள் அனைத்துமே இறைவனுக்கு அர்ப்பணம் என்ற குறிக்கோளில் அமைந்திருந்தன.
பரத நாட்டியக் கலையை அனைவருமே ஆடிவிட முடியாது. ஆயிரத்தில் ஒருவருக்கு இந்தக் கலையில் தேர்ச்சி கிடைக்குமானால் அதுவே மிகச் சிறப்பானதாகக் கருதப்படும். இது ஒரு யோகம். ஒரே நேரத்தில் மனத்தை ஒருமைப்படுத்தி, கால் தாளத்திலும், உடல், கரங்கள், விரல்கள் முத்திரையைப் பொருளுணரும் வகையில் காட்டி, முகத்தில் பாவங்களை, நவரசங்களை வெளிப்படுத்தும் அரியதொரு கலை. இதனை இன்று இளம் பெண்களும், சிறுவர்களும் கற்று தலைசிறந்த கலைஞர்களாக ஆகிவருகிறார்கள் என்பதைக் காணும்போது, இந்தப் புனித கலைகள் அழியவே அழியாது என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் உண்டாகிறது.
கிராம தேவதைகளின் கோயில்களில் சில காலம் முன்புவரை திருவிழா என்றால், திரை இசைப் பாடல்கள் நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது பெருமைக்குரியதாக இருந்தது. மக்கள் ரசனை என்பது நாம் கொண்டு செல்லும் திசையில்தான் செல்லும். அந்த வகையில் அந்தப் பாடல்கள் உற்சாகமூட்டுவதாக அமைந்திருந்தாலும், அதை ஆலயங்களில் கொண்டு வந்து சேர்ப்பது என்பது பொருத்தமாக இல்லை.
இறைவழிபாட்டுக்குரிய பாடல்கள், அவை சாஸ்திரிய சங்கீதமானாலும், மெல்லிசையானாலும் அடிப்படையில் மக்கள் உள்ளங்களில் பக்தி எனும் உணர்வை ஊட்டுவனவாக அமைய வேண்டுமே தவிர, சிற்றின்ப உணர்ச்சிகளைத் தூண்டும் கவர்ச்சிப் பாடல்களாக அமையக்கூடாது. அது போலவே, நடனம் என்பதும் இறைவழிபாட்டிற்குரியதாக இருக்க வேண்டும். குத்துப் பாட்டுகளும் கவர்ச்சி நடனங்களும் ஆலயங்களுக்கு ஏற்றவை அல்ல.
பரத நாட்டியம் ஒரு புனிதமான கலை. இன்று நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சின்னஞ் சிறிய குழந்தைகளிலிருந்து, பெரியவர்கள் வரை இந்தக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்று மேடைகள் தோறும், இந்தப் புனிதக் கலையைப் பரப்பி வருகின்றனர். இவைகளை மக்கள் ஆதரிப்பதோடு, தத்தமது குழந்தைகளையும் இந்தத் துறைகளில் பயிற்றுவித்து, அவர்கள் இசையிலும், நடனத்திலும் திறமை வாய்ந்தவர்களாக ஆக்க முயலுதல் வேண்டும். இப்போதெல்லாம் ‘நாட்டியாஞ்சலி’ என்ற பெயரில், சிவாலயங்களில் பரத நாட்டியத்தின் மூலம் இறைவழிபாடு நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வோராண்டும் பல ஊர்களில் பங்குபெறும் கலைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலுள்ள ஏராளமான ஆலயங்கள் இதுபோன்ற கலைகளை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இங்குதான் வியக்கத்தக்க இந்தக் கலைக்குப் பெருமை சேர்த்த பல ஆசான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பரத நாட்டிய பாணிகளில், வழுவூர் பாணி என்றும் பந்தநல்லூர் பாணி என்றும் தோற்றுவித்தது இங்குதான்.
தஞ்சை நால்வர் பாணி என்று ஒரு பாணி உண்டு. இதனை உருவாக்கியவர்கள் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு எனப்படும் இசை நாட்டிய ஆசான்கள். இவர்கள் தஞ்சையிலும் பின்னர் திருவாங்கூர் சமஸ்தானத்திலும் இருந்து இசை நாட்டியப் பணியாற்றியவர்கள். இவர்களின் வாரிசாக தஞ்சையில் ஒரு நாட்டியப் பள்ளியை நடத்தி வந்தவர் கிட்டப்பா பிள்ளை என்பவர். அவர்கள் நினைவாக தஞ்சை பெரிய கோயிலில் “சின்ன மேளம்” எனும் தலைப்பில் ஒரு நாட்டிய விழாவை நட்டுவனார் ஹேரம்பநாதன் நடத்துகிறார். இதில் தமிழகத்தின் தலைசிறந்த நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பாக ஆடுகிறார்கள். இப்படி இந்தக் கலை பல கிளைகளாகப் பிரிந்து, சிறப்பாகப் பணியாற்றுவது இந்தக் கலையின் வசந்த காலம் எனக் கூறலாம்.
சென்னை போன்ற நகரங்களில் கலாக்ஷேத்ரா போன்ற அமைப்புகளும் வேறு பல தனியார் அமைப்புகளும் இன்று இந்தக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை உருவாக்குகின்றன. பல பல்கலைக் கழகங்களில் இசை, நாட்டியம் போன்ற கலைகளுக்குத் தனித் துறை அமைத்து சிறப்பாக இயங்குகின்றன. தமிழகத்தில் இசைக்கென்றும், நாட்டியத்துக்கென்றும் ஒரு பல்கலைக் கழகம் அமைய வேண்டியது அவசியம்.
இந்த நளின கலைகளைக் கற்றுக் கொள்வதால், கலைகள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது என்பதோடு, அதனைக் கற்றுக் கொள்பவர்களின் மனமும் மென்மை அடைகிறது. வன்முறை, தீங்கு இவற்றை இவர்கள் மனம் தீண்டுவதில்லை. அமைதியான, கலை, இலக்கியம் பரவிய ஒரு பண்பான சமுதாயத்தை இவர்களால் உருவாக்கிட முடியும். கலைகள்தான் நமது அடிப்படை நாகரிகம். இவற்றைப் போற்றி, வழிபட்டு, கற்றுக்கொண்டு, இந்த பாரத சமுதாயத்தை வாழ்விக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபடவேண்டும். பாரத நாகரிகம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

No comments: