Thursday, September 24, 2020

 பிள்ளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோரின் அதிகமான எதிர்பார்ப்பே காரணம். விவாதிக்க.   

                       (ரித்திக்கா ரங்கநாதன் உயர்நிலை 3 – 2019)

 

"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

    எழுமையும் ஏமாப்பு உடைத்து"  


என்பது வள்ளுவரின் வாக்கு. இன்றைய காலக்கட்டத்தில், குறிப்பாக நம் சிங்கை நாட்டில், கல்வி, அறிவு, என்பவைதான் நாட்டை ஆள்கின்றன. அன்னையின் கருவறையிலிருந்தே கல்வி, படிப்பு, மதிப்பெண்கள், எனும் சித்தாத்தங்களின் முக்கியத்துவத்தை குழந்தை புரிந்துகொள்ளும். நிச்சயமாக கல்வி என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றுதான். ஆனால், இன்றைய சூழலில், பெற்றோர் கல்வியை அறிவுப்பசியை வளர்த்து திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் தளமாகக் கருதாமல், மதிப்பெண் வாங்கி புகழ்பெற்ற பள்ளிகளுக்கும் பணிகளுக்கும் செல்லும் ஒட்டப்பந்தயமாகவே கருதுகிறார்கள். இப்பார்வையின் காரணமாக, பெரும்பாலான பெற்றோர் தங்கள் எதிர்பார்ப்புகளை விண்ணை முட்டும் அளவிற்கு கொண்டிருப்பதால், இவ்வெதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய பாடுபட்டு முயற்சிக்கும் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் வெகுவாக அதிகரிக்கின்றது. நம் சிங்கையில் தான் அதிக மாணவர்கள் மன உளைச்சலோடு வாழ்கிறார்கள் என்பதை பற்பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, பிள்ளைகளின் மன உளைச்சலுக்கு பெற்றோரின் அதிகமான எதிர்பார்ப்பே காரணம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.   

 

முதலாவதாக, பெரும்பாலான பெற்றோரின் அழியா எதிர்பார்ப்பு, பிள்ளை மதிப்பெண் பெறவேண்டும் என்பதுதான். பள்ளிப் பருவத்தில் பெறும் மதிப்பெண்கள் தான் வாழ்க்கையே தீர்மானிக்கும் எனும் தவறான அனுமானத்தைப்  பெற்றோர் கொண்டுள்ளதால், விடாமல் படித்து மதிப்பெண் வாங்குமாறு பிள்ளைகளை வற்புறுத்துகிறார்கள். இது பிள்ளைகளை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. மதிப்பெண் பெறவேண்டும், மதிப்பெண் பெறவேண்டும் எனும் பெற்றோரின் எதிர்பார்ப்பு பிள்ளைகளைப் பேயாய்த் துரத்தி வருகின்றது. இதன் காரணமாக, பள்ளிப் பருவத்தில் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டிய இன்பம் சுக்குநூறாய் உடைகிறது. வாழ்க்கை என்பது போர்க்களமாக இருக்கவேண்டியது, சர்க்கஸ் அரங்காக அல்ல. ஆனால், இக்கால பெற்றோர் எதிர்பார்ப்புகள் எனும் வேலியை சர்க்கஸ் மிருகங்களாக இருக்கும் பிள்ளைகளைச் சுற்றி அமைத்து, அவர்களைத் துரத்தித் துரத்திச் செல்கிறார்கள். இதன் காரணமாக, பிள்ளைகள் பள்ளி வாழ்க்கையையே வெறுத்து, பெற்றோர்களைக் கண்டு பயந்து, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை வரைச் செல்லத் தயாராக உள்ளார்கள். இதற்கு மூலக் காரணம்? பெற்றோரின் அதிகமான எதிர்பார்ப்பு! 

 

இரண்டாவதாக, பெற்றோர்கள் சமுதாயத்தில் பெரும்பாலானோர் விரும்புவதையும் சாதிப்பதையும் தம் பிள்ளைகளும் விரும்பி சாதிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஈடுபட எதிர்பார்க்கும் தொழில்கள். வரலாறு முதல் இன்று வரை, மும்மூர்த்திகளைப்போல் மூன்று தொழில்கள்தான் சிறந்த தொழில்களாக கருதப்பட்டு வருகின்றன; ஒன்று மருத்துவம், இரண்டாவது பொறியியல், மூன்றாவது வழக்கறிஞர் வேலை. ஆகவே, சமூக களங்கத்தை எண்ணி, பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பள்ளியில் சிறந்த தேர்ச்சி பெற்று, இத்தொழில்களில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பினால், பிள்ளைகளின் விருப்பமும் சுதந்திரமும் பறிபோய், அறிவுப்பசியை இழந்து, கல்வியையும் வாழ்க்கையையும் வெறுக்கத் துவங்குகிறார்கள். இறுதியில், இதுதான் மனவுளைச்சலாக முடிகிறது. ஆகவே, மீண்டு தெள்ளத் தெளிவாக தெரிவது என்ன? பிள்ளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோரின் அதிகமான எதிர்பார்ப்பே காரணம்!     

 

இறுதியாக, எவ்வளவுதான் காலம் மாறினாலும், அனுபவக்கல்வியையும் தொழில்நுட்பத்தைச் சார்ந்த கல்வியையும் பெற்றோர்கள் கல்வியாகவே கருதுவதில்லை. கல்வி என்பதை பாடப்புத்தகத்திலிருந்துதான் தம் பிள்ளைகள் கற்கவேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பு. மடிக்கணினியை வைத்து பிள்ளை கல்வி கற்பத்தைக் கண்டால், அப்பிள்ளை இணையத்தில்  விளையாடிக்கொண்டிருப்பதாக எண்ணி, பிள்ளையைத் திட்டுவது மட்டுமல்லாமல் மடிக்கணினியை அவர்களிடம் கொடுக்காமல் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள்! அறிவினையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள பள்ளிக்கு வெளியே போட்டிகள் அல்லது பட்டறைகளுக்குச் செல்ல அனுமதி கேட்டால், அதை நேர விரயமாக எண்ணி பெற்றோர்கள் மறுக்கிறார்கள்! இது நியாயமா? புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டுதான் பிள்ளை மனனம் செய்து படிக்கவேண்டும் என்ற பெற்றோரின் எதிர்ப்பு, கல்வி கற்கும் பிள்ளைகளுக்குச் சலிப்பூட்டுகிறது. இந்த சலிப்பினால், கல்வி எனும் பயணமே பிள்ளைகளுக்கு பிடிக்காமல் போகின்றது. பிடிக்காத ஒன்றை செய்யும்போது எவ்வாறு மன உளைச்சல் இல்லாமல் இருக்கும்? எனவே, மீண்டும் பிள்ளைகளின் மன உளைச்சலுக்குக் காரணியாகத் திகழ்வதென்ன? பெற்றோரின் அதிக எதிர்ப்பார்ப்புகள்!

 

சிலரோ, பெற்றோர்கள் தான் உலகையும் குழந்தையையும் அறிந்தவர்கள், எனவே அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நன்மைக்காகவே என வாதிடலாம். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து. பெற்றோர்கள் படித்த காலமும் இன்றைய காலக்கட்டத்திலும் வெவ்வேறு சூழல்கள் ஆகும். ஆகவே, அவர்களுடைய உலகையும் இன்றைய உலகையும் ஒப்பிடமுடியாது. எனவே, இதைக் கருத்தில் கொள்ளும்போது, பெற்றோரை விடவே பிள்ளைகள்தான் உலகை நன்கு அறிந்திருக்கிறார்கள். மேலும், இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் பிள்ளையின் மனத்தை அறிந்திருக்கிறார்கள் என்றுகூட சொல்ல முடியாது. “பேசும் உறவுகள் எல்லாம் பேசாமல் போனதால், பேசாத மிருகங்கள் நம் பிள்ளைகளிடம் பேசுகின்றன, தொலைக்காட்சியின் மூலம்" என்றார் புகழ்பெற்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர். பெற்றோர் பிள்ளைகளிடம் உரையாடாத இன்றைய சூழலில் அவர்கள் எப்படி பிள்ளைகளின் மனதை அறிந்திருப்பார்கள்? கண்டிப்பாக இயலாது! எனவே, அவர்களின் எதிர்பார்ப்புகளும் உலகையும் பிள்ளைகளையும் புரிந்துகொண்டு வைக்கப்படும் எதிர்பார்ப்புகளாக இரா.

 

முடிவாக, பிள்ளளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோரின் அதிகமான எதிர்பார்ப்பே காரணம் என்பதை நான் நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன். ஏனெனில், இன்றைய காலக்கட்டத்திற்கு பொருந்தாத பெற்றோரின் அதிக எதிர்பார்ப்புகள் பிள்ளைகளை கல்வியை வெறுக்க வைத்து, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. அதிக எதிர்பார்ப்புகள் என்பது, பிள்ளையை இருண்ட அறைக்குள் பூட்டிவைப்பதைப் போன்று. இவ்வாறு செய்தால், வாழ்வின் வெளிச்சத்தை அவர்கள் காண முடியாதவாறு செய்து, அவர்கள் மன உளைச்சலுக்குத் தான் ஆளாகுவர். எனவே, பிள்ளைகளின் மனவுளைச்சலுக்குப் பெற்றோரின் அதிகமான எதிர்பார்ப்புகள் தான் காரணம் என்பதை நான் முற்றிலுமாக ஒப்புக்கொள்கிறேன். 

 

 

No comments: