Sunday, April 25, 2010

Surekha`s Esaay _ Experiential Learning Cycle Lesson

என் மனதில் நீங்கா இடம் பெற்ற மலாக்காச் சுற்றுலா

(Experiential Learning Cycle - Lesson)

Surekha Sujith Sec 2/3 Higher Tamil

9ஆம் தேதி, 3-ஆம் மாதம் 2010 ஆம் ஆண்டு அன்று. எனக்கு தூக்கம் வரவேயில்லை. நான் கட்டிலில் இங்கும் அங்கும் உருண்டு கொண்டிருந்தேன். மறு நாள் சக மாணவர்களுடன் மலாக்காவிறகுச் செல்ல போகிறோம் என்ற ஆவல் என்னைத் தூங்குவதிலிருந்து தடுத்தது. மலாக்காவுக்கு நாளை செல்லப் போகிறோம் என்று என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு என் நண்பர்ளுடன் மட்டும் இருந்து கூத்தடிப்பதைத் தவிர வேறு ஏதும் செய்யமாட்டேன் என்ற எண்ணம் என்னை ஆவலுடன் காத்திருக்கவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றது. எப்படியோ கட்டில் முழுவதும் உருண்ட பிறகு தான் தூங்கினேன்.

காலை கடிகார மணி ஒலித்தது. நான் முதல் ஒலியிலே எழுந்தேன். நான் அப்போழுதே மிகத் தெளிவுடன் இருந்தேன். விரைவாக என் காலைக் கடன்களை முடித்தவுடன் நான் என் பள்ளிக்குப் புறப்பட்டேன். என் பெற்றோரிடம் விடைப்பெற்று என் மூன்று நாள் பயணத்தைத் தொடங்கினேன். நான் ஒரு சிறிய பயணப் பெட்டியைக் கொண்டு போனேன். அதில் மூன்று நாளுக்கும் தேவைப்படும் துணிமணி எல்லாம் இருந்தன.

பள்ளியை அடைந்ததும் என்னைப் போலவே ஆவலுடன் இருந்த நண்பர்களை நான் பார்த்தேன். அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தோம். மலாக்காவுக்கு நம்மைக் கொண்டு செல்லும் பேருந்து வந்தது. நாங்கள் அதில் ஏறி சிங்கப்பூர் சுங்கச் சாவடிக்குப் புறப்பட்டோம். அதை அடைந்து அதிலிருந்து வெளியானவுடன் மலேசியாவினுள் என் முதல் காலடியை எடுத்து வைத்தேன். மலேசியாவின் காற்று எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டியது. அங்கிருந்து மலாக்காவுக்கு ஐந்து மணி நேரப் பயணத்தைத் தொடங்கினனோம். வழியில் நாங்கள் ஒரு பழமையான உணவகத்தில் காலை உணவை உண்டோம். சற்றுத் தூரம் சென்ற பிறகு மதிய உணவை வேறு உணவகத்தில் உண்டோம். இப்படி நாங்கள் எங்கள் முதல் நாளைத் தொடங்கினோம்.

முதலாவதாக நாங்கள் ஒரு தேவாலயத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். அது ‘டச்’ காலத்தின் போது கட்டப்பட்டது. இன்றுவரை அது இவ்வளவு பலமாக நிற்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒர் விஷயமாகும். ஆனால், ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும்போதுதான் மலாக்காவிலுள்ள பெரும்பாலான கட்டடங்கள் பழமையானவை என்றும், இது ‘டச்’ ஆட்களும் ‘பிரிட்டிஷ்’ ஆட்களும் அக்காலத்தில் கொஞ்சம் அறிவியல் வளர்ச்சியுடனும் தம் மூளையை நன்றாக உபயோகித்தும் கட்டியுள்ளனர் என்று காட்டுகிறது.

அடுத்ததாக நாங்கள் ‘பார்ச்சுகீஸ்’ காலத்தில் பயன்படுத்தப்பட்ட விளக்கு வீட்டிற்குச் சென்றோம். அது பாழடைந்த மாளிகையின் தோற்றத்தைக் கொடுத்தது. எங்கள் சுற்றுலா ஆசிரியர் அதைப் பற்றி விளக்கும் போது என் வகுப்பு மாணவர்களின் காதுகளும் கவனமும் அவரிடம் இருந்தன. ஏனென்றால், அந்த இடம் அவ்வளவு சுவாரஸியமாக இருந்தது. முதல் நாள் அப்படியே கழிந்தது. நாங்கள் எங்களுக்குச் சொந்தமான விடுமுறை விடுதியின் அறைகளுக்குச் சென்று மெத்தையில் கிடந்தவாறு ஆழ்ந்து உறங்கினோம்.

அடுத்த நாள் அதிகாலையில் எழவேண்டியிருந்தது. அன்று எங்களுக்குப் ‘பார்ச்சுகீஸ்’ விளக்குவீட்டின் அருகே ஒரு புதையல் வேட்டை நடக்கவிருந்தது. நாங்கள் அனைவரும் ஆர்வத்துடன் வேட்டை ஆரம்பிக்கக் காத்திருந்தோம். வேட்டை மூன்று மணி நேரத்தில் முடிந்தது. நாங்கள் படி ஏறி, படி இறங்கிக் களைத்துப் போனோம். இந்தச் சுற்றுலாவுக்குப் பிறகு எல்லோரும் இளைத்துக்களைத்து இருப்போம் என்று நான் நம்பினேன். அதன் பிறகு நாங்கள் ‘ஹங் துவா’ கிணற்றுக்குச் சென்றோம். அங்கு ஒரு பெரிய கிணற்றைப் பார்த்தோம். அதன் பெயர் கூறும்படி அது ‘ஹங் துவா’ என்ற மஹா வீரனுக்குப் பிறகு க் கூப்பிடப்பட்டது. அவர் கடைசி மூச்சு வரை தன் அண்ணனுக்கு எதிராகச் செல்லவில்லை. ‘ஹங் துவா’ கிணற்றிலுள்ள தண்ணீரைக் குடித்தால் நாமும் ஹங் துவாவைப் போலச் சுத்தமாகவும் மெய் பேசுபவர்களாகவும் இருப்போம் என்று சுற்றியிருப்பவர்கள் நம்புகின்றனர்.

கடைசி நாள் அன்று நாங்கள் ஒரு வித்தியாசமான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டோம். அவ்விடத்தில் மலேசியாவிலுள்ள அனைத்து நகரிலுள்ள வீடுகள் இருந்தன. அங்கும் ஒரு சிறிய புதையல் வேட்டை இருந்தது. அதைத் தொடர்ந்து எங்களுக்கு ஒரு கலை நிகழ்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அது ஒரு வேடிக்கையான கலைநிகழ்ச்சியாக இருந்தது. என் நண்பர்களும் நானும் கைத்தட்டி விழுந்து விழுந்து சிரித்தோம். அதன் பிறகு ஒரு பிரம்மாண்டமான விருந்து எங்களை வந்து சேர்ந்தது. என் நண்பர்களுடன் மலாக்காவில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த கடைசி உணவு என்று தெரிந்தவுடன் நான் கண்கலங்கினேன். இனிச் சிங்கப்பூருக்குச் சென்றால் சோதனை மேல் சோதனை, மன உளைச்சல் – இவை போன்றவைதான் இருக்கும் என்று எனக்குத் தெரிந்தவுடன் எனக்குக் கவலையாக இருந்தது.
மதியம் சுமார் இரண்டு மணிக்கு நாங்கள் சிங்கப்பூரை நோக்கிச் சென்றோம். ஐந்து மணி நேரப் பேருந்துச் சவாரி முடிந்து நான் என் தாய் மண்ணை அடைந்தேன். சோகம் ஒரு புறமும் இன்பம் மறு புறமும் என்னை வாட்டிவதைக்க நான் வீட்டிற்குச் சென்றேன். இந்த மலாக்காச் சுற்றுலா என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. நான் இதை எந்தக் காரணத்தாலும் மறக்க மாட்டேன்.

1 comment:

Anonymous said...

The essay was fantastic.It was very useful and fun to read. I learnt many new phrases and new words. Thank you!
N Sanmitha