Sunday, August 24, 2025

குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

 


சப்ரினா கான் (302)

அவைக்கு முதற்கண் என் வணக்கம்!  இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலைப்பை மையமாக வைத்து என் கருத்துகளை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா? ஆம், அதில் ஐயம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நன்மை தீமை என அனைத்து இடங்களிலும் தங்கள் பங்களிப்பை அளிப்பது அவசியம். இவ்வாறு, குடும்பத்தில் அன்பும் பண்பும் அறிவும் கற்றுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி, புரிதலை ஏற்படுத்தி, பிணைப்பையும் வலுப்படுத்துகிறார்கள் அல்லவா? ஆனால், இது சாத்தியமாக அனைவரும் தங்கள் உறுப்பினர்களுடன் சேர்ந்து அதிக நேரத்தை ஆக்ககரமாகச்  செலவு செய்ய ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஆகும். அதற்குத் தான் குடும்பக் கொண்டாட்டங்கள் இருக்கின்றன! பாரம்பரிய திருவிழாக்கள், பிறந்தநாட்கள், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற அனைத்துக் குடும்ப விழாக்களும்  குடும்ப  உறுப்பினர்கள் தங்களுடன் நேரத்தை செலவழிக்க இழக்க முடியாத ஒரு வாய்ப்பை அளிக்கிறன. இக்கொண்டாட்டங்களிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் பண்புகள் கற்றுக் கொள்கிறார்கள், புரிதல் ஏற்படுத்துகிறார்கள், மறக்க முடியா நினைவுகளையும் உருவாக்குகிறார்கள்.

ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு இடையே உள்ள அன்பு, ஆதரவு, மற்றும் புரிதலை நாம் எந்த நாளில் காணலாம்? நிச்சயம் பிறந்தநாள் அன்று தான்!  பிறந்தநாளின்போது பெற்றோர்கள் உங்களுக்குப் பிடித்த உணவையோ, ஆடையையோபொம்மையையோ நிச்சயம் வாங்கியிருப்பார்கள். இதிலிருந்தே அவர்கள் உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்று நன்கு அறிந்ததைக் காட்டுகிறது.  அதுமட்டுமல்லநிச்சயமாக பிறந்தநாளன்று  இன்னும்  உங்களுக்குப் பரிசு  வாங்கித் தர முடியாத  வயதில்  இருக்கும் உங்கள் சகோதரரிடமிருந்து  ஒரு கடிதத்தைப் பெற்றிருப்பீர்கள் அல்லவா? நினைவிருக்கிறதா? அந்தக் கடிதங்களில் இருக்கும் அழகிய சிறு சிறு வரைபடங்கள், வண்ணம் பூசப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஒன்று ஒன்றாக சரியான உணர்வை உணர்த்த கையால் எழுதப்பட்ட சொற்கள்முடிவில் ஒரு ஓரத்தில் தெரிவித்த நன்றிகள் ஆகியவை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அந்த எளிய கடிதத்தில் கொடுக்கப்பட்ட முயற்சி, சிந்தனை, நேரம் ஆகியவை நீங்கள் உண்மையாகக் குடும்ப உறுப்பினர்களால் நேசிக்கப்படுகிறீர்கள் என்று உணர்த்துவதில் உங்கள் பிறந்தநாளன்று ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக அமைகிறது. 

தந்தை தாய் பேண்” என்பதற்கு ஏற்பவும் தந்தையர் தினம் மற்றும் அன்னையர் தினத்தன்று எப்போதும்  செலுத்துவதை விட நீங்கள் கொஞ்சம் கூடுதலாக அவர்களிடம்  அன்பு  செலுத்தியிருப்பீர்கள்  அல்லவா? குடும்பத்திற்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்று  அன்று மீண்டும்  உங்கள் நினைவிற்கு வருகிறது.  அப்போதுஅவர்களிடம் உங்கள் நன்றியைத் தெரிவிக்க, அதிக அன்பும் செலுத்தி உதவியும் செய்வீர்கள்.  பெற்றோரும் அளவு கடந்த  மகிழ்ச்சியை அடைகிறார்கள். எனவே, இதிலிருந்து பிறந்தநாட்கள், பெற்றோர் தினங்கள்  ஆகிய குடும்பக் கொண்டாட்டங்கள் உறுப்பினர்களுக்கும் தங்கள் அன்பையும்பிறரைப் பற்றி வைத்திருக்கும் புரிந்துணர்வையும் தெள்ளத் தெளிவாக எல்லோரிடமும்  வெளிக்காட்டுகின்றன. 

நாம் அனைவரும் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறோம். தீபாவளி, பொங்கல், நோன்புப் பெருநாள் ஆகிய நாட்களன்று  பெற்றோர்கள் எல்லாம் ஏன் அதைக் கொண்டாடுகிறோம், யாரிடமெல்லாம் மதிப்பு காட்ட வேண்டும்பாரம்பரிய மரபாக  என்ன செய்ய வேண்டும் என்று பிள்ளைகளிடம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கற்றுக் கொடுக்கின்றனர். 

மக்கள்மெய் தீண்டல்   உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

என்பதற்கு ஏற்ப பெற்றோருக்குப் பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது அவர்களுடைய உடலுக்கும் இன்பம்அவர்களின் பேச்சைக் கேட்பது அவர்களுடைய காதிற்கு இன்பம். அதனால், கொண்டாட்ட நாளன்று தங்கள் பிள்ளைகள் ஓடி, ஆடி, விளையாடி மகிழ்வதைக் காணுவதையே பெற்றோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கி அவர்கள் முகத்தில் புன்னகை தோன்ற போதுமானதாக அமைகிறது.  இவ்வாறு குடும்பப் பாரம்பரியக் கொண்டாட்டங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே போதனைகளைப் பரிமாறிக் கொள்ளவும் அனைவரும் மகிழ்ச்சியடையவும் வாய்ப்பு அளிக்கிறது. 

ஆம், இக்குடும்பக் கொண்டாட்டங்களின்போது  சில நேரங்களில் நம் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட நேரிடும் என்பது எனக்கு நன்கு தெரியும்.  உங்கள் சகோதரர் உங்கள் உணவிலிருந்து சிலவற்றைத் திருடியிருக்கலாம்உங்கள் பெற்றோர் நீங்கள் பெரியவர்களுக்குச் சரியான மரியாதை கொடுக்காமல் இருந்ததற்கு உங்களைத் திட்டியிருக்கலாம், அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் உங்களுக்குக் கொடுத்த பரிசு உங்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.  ஆனால், இப்பிரச்சனைகள் எல்லாக் குடும்பத்திலும் இயல்பாக ஏற்படும் பிரச்சனைகள் தானே? இப்பிரச்சனைகளிலிருந்து நாம் எப்படி உணர்கிறோம் என்பதை ஒருவருக்கொருவர் பேசி உணர்த்துவதன் மூலம் பிறரைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. அவ்வாறு செய்தால் நாம் அனைவரும் ஒருவரையொருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும், வலுவான பிணைப்பையும் மறக்க முடியா இன்ப நினைவுகளையும் உருவாக்கவும் முடியும்.  அதோடு, அந்த நாளில் ஒரு பிரச்சனை இருந்தாலும் அதற்கு ஈடுசெய்ய  பல நல்ல நினைவுகள் ஏற்பட்டிருக்கலாம் –  வேடிக்கையான உரையாடல்கள்மனம் விட்டுப் பேசும் நிகழ்வுகள்சேர்ந்து வாய்விட்டுச் சிரிக்கும் நொடிகள் போன்றவை எல்லாம் கொண்டாட்டங்களின்போது எழுந்த  பிரச்சனையை மறக்க வாய்ப்புகளை நமக்கு உருவாக்குகின்றன.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது குடும்பத்திற்கும் பொருந்தும்.  சண்டையிட்டுப்  பிரிந்து கிடப்பதைவிட  ஒற்றுமையாக இருப்பது ஒரு குடும்பத்திற்கு நன்மையைத் தரும். மானிடராய் பிறத்தல் அரிது என்பது போல் ஒருவருக்கு நல்ல குடும்பம் அமைவதும் அரிதே. ஆனால் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க குடும்பக் கொண்டாட்டங்கள் வாய்ப்புகள் நிறைய தருகின்றன. அவைகுடும்பத்துடன் சேர்ந்து இருக்க நேரம், ஒற்றுமையை வளர்க்கும் சந்தர்ப்பம், கற்றுக்கொள்ள பாடங்கள், மனதில் எப்போதும் மறையாமல் இருக்கும் நினைவுகள் ஆகியவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

ஆனால், உங்கள் குடும்பத்திடம் உங்கள் அன்பைத் தெரிவிக்கக் குடும்ப கொண்டாட்டங்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் — இன்றே அவர்களிடம் உங்கள் மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவியுங்கள்!   

இததுடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்.  நன்றி. வணக்கம் !

 


Friday, August 8, 2025

நீ அறியாது செய்த செயலால், உன் உறவினர் ஒருவருக்குச் சமூகத்தில் இருந்த நன்மதிப்பு பாதிக்கப்பட்டது

 


Srutika Sanjaykumar - Year 3 - 2025 

என் மாமாவின் கடையில் அன்று அமைதி நிலவியது. பணமே இல்லாத பணப்பதிவேட்டின் பின்னால் மாமா தொலைபேசியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி ஆறாக ஓடியது. அழுது அழுது அவர் கண்கள் சிவந்து இருந்தன. மாமாவின் நிலையைப் பார்த்து, என் உள்ளம் நொந்தது. நம்பிக்கை என்பது கண்ணாடி போன்றது. ஒரு முறை அதை உடைத்துவிட்டால், சரி செய்தாலும், வடுக்கள் என்றைக்கும் மறையாது. நான் செய்த தவறு சமூகத்தில் என் மாமா கடினமாக உழைத்து பெற்றிருந்த நற்பெயரைச் சிதைத்தபோது, இதைக் கற்றுக்கொண்டேன். கண்கலங்கிய என் மாமாவைப் பார்த்தவாறே, என் எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன. 

 

வா மலர், உன் மாமாவின் கடைக்குச் செல்லலாம்!” என்று அம்மா அழைத்ததும், நான் என் மெத்தையிலிருந்து ஆனந்தத்தில் குதித்தேன். என் மாமாவின் மீது எனக்கு அளவில்லாத அன்பு இருந்தது. தினந்தோறும் அவருடைய கடைக்குச் சென்று நான் உதவிக்கரம் நீட்டுவேன். அன்றைக்கும் அப்படி தான். என் முகத்தில் புன்னகை பூத்தவாறு என் மாமாவின் சிறிய உணவு கடைக்குச் சென்றேன். “மாமா!” என்று நான் கூறி, மாமாவை அனணைத்துக் கொண்டேன். நேரம் சென்றதே எனக்குத் தெரியவில்லை. என் மாமாவின் கடையிலிருந்த பல உணவுப் பொருட்களைச் சரியாக, ஒழுங்கான முறையில் அடுக்க உதவினேன். வியர்வை முத்துகள் என் நெற்றியிலிருந்து வழிந்தன. வேலை அனைத்தும் முடிந்தவுடன், நான் என் தொலைபேசியில் ஒரு புகைப்படத்தை எடுத்து, “மாமாவின் கடையில் வேலை முடிந்தது!” என்ற தலைப்புடன் இணைய தளங்களில் பதிவேற்றினேன். பின்னர் மாமாவிடம், “புறப்படுகிறேன்!” என்று கூறி, அம்மாவுடன் வீட்டிற்குச் சென்றேன். ஆனால், நான் இவ்வாறு செய்தது மாமாவின் நன்மதிப்பைப் பாதித்துவிடும் என்பதை நான் அறியவில்லை. 

 

மறுநாள் காலை இருட்டாக இருந்தது. பலத்த காற்றுடன் கனத்த மழையும் இனணந்தது. கார்மேகங்கள் வானத்தை சூழ்ந்தன. நான் என் மெத்தையிலிருந்து மெதுவாக எழுந்து, என் தொலைபேசியை எடுத்தேன். மலர்ந்திருந்த என் முகம் உடனே வாடியது. என் கண்கள் அகல விரிந்தன. நான் பதிவேற்றிய புகப்படம் ஆயிரக்கணக்கான வெறுப்புக் கருத்துக்களைப் பெற்றிருந்தது. “நான் இந்தக் கடையிலா உணவைச் சாப்பிட்டேன்?” , “ஏமாற்றம்!”, “இப்படிப்பட்ட பொருட்களை விற்பது தவறு!” என்று பல கருத்துக்களை வாசிக்க என் கண்கள் அங்கும் இங்கும் ஓடின. அப்போது மாமா என் தொலைபேசியில் அழைத்தார். “இப்படி நீ செய்வாய் என்று நான் நினைத்துப்பார்க்கவே இல்லை மலர். என் கடைக்கு இனி என்ன நடக்குமோ…” என்று கவலையுடன் கூறியவாறே தொலைபேசியை வைத்தார். அன்று நாள் முழுவதும் மாமாவின் கடைக்கு யாரும் வரவில்லை. மேசைகளும் நாற்காலிகளும் அசையாமல் இருந்தன. என் மாமாவின் கடையைத் திட்டிய பல பதிவுகளை நான் இணையத் தளங்களில் பார்த்தேன். கடையைத் தாண்டி நடப்பவர்கள் அதைச் சுட்டிக்காட்டி, மும்முரமாகப் பேசினர். ஆனால், யாரும் உள்ளே வரவில்லை. நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. குழப்பதில் என் தலை சுற்றியது. நான் பதிவேற்றிய புகைப்படத்தை உற்றுப் பார்த்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு தான் நான் செய்த தவறு எனக்குப் புரிந்து விட்டது. என் கண்கள் அகல விரிந்தன. நான் செய்த தவறு என்னால் நம்பவே முடியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியுமா

 

புகைப்படத்தை உற்றுப் பார்த்தபோதுதான் என் உருவத்தின் பின்னால் காலாவதியான உணவுப் பொருட்கள் இருந்ததைக் கவனித்தேன். ஆனால், இந்த உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தத்தான் மாமா ஒரு மேசையில் வைத்திருந்தார். இதை அறியாத இணைய பயணர்கள் என் மாமாவின் கடைக்குச் செல்வதையே நிறுத்திவிட்டனர். வழக்கமான வாடிக்கையாளர்கள் கடையைத் தவிர்த்தனர். அக்கம் பக்கத்திலிருந்த பலர் கடையின் தரம் எப்படி குறைந்துவிட்டது என்று பேசினர். கடையில் தூய்மைக்கும் தரத்திற்கும் பெயர் பெற்ற என் மாமா வேதனையில் தவித்தார். நான் செய்த தவற்றைச் சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, மாமாவின் கடைக்கு ஓடினேன். 

 

இப்பொழுது நான் என்ன செய்வேன் மலர்?” என்று மாமா கவலையுடன் கேட்டது என்னை நிகழ்காலத்திற்குச் சுண்டியிழுத்தது. “என்னை மன்னித்து விடுங்கள் மாமா. நான் தவறு செய்துவிட்டேன். ஆனால், அதைச் சரி செய்ய நான் முயற்சி செய்கிறேன் மாமா…” என்று நான் மன்னிப்பு கோரியதற்கு என் மாமா கவலையுடன் தலையசைத்தார். என் மாமா அனலில் இட்ட புழுவைப்போல் துடித்துக்கொண்டிருந்தது என் தவறால் தான். உடனே, நான் பதிவேற்றிய புகைப்படத்தை நீக்கினேன். பின்னர் என் தவற்றை ஒப்புக்கொண்டு, என் புகைப்படத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் அப்புறப்படுத்த வைத்திருந்தவை என்பதைத் தெளிவுபடுத்தி, இணையத்தில் பதிவேற்றினேன். அதுமட்டுமின்றி, என் மாமாவின் அன்றாட வழக்கத்தில், அவர் எவ்வாறு கடையைச் சுத்தம் செய்கிறார் என்றும் காலாவதி தேதிகளைச் சரிபார்ப்பதும் ஒவ்வொரு வாடிக்கையாளருடன் அவர் எவ்வாறு பணிவுடன் பழகினார் என்றும் ஒரு காணொளியை உருவாக்கி, இணையத்தில் பதிவேற்றினேன். 

 

மறுநாள் காலையில் ஆவலுடன் என் தொலைபேசியை எடுத்தேன். மக்கள் நான் கூறிய உண்மையை நம்புவார்களா? அல்லது அலட்சியப்படுத்துவார்களா? என் மனம் படபடவென்று அடித்தது. நடுநடுங்கும் கைகளுடன் தொலைபேசியைத் திறந்தேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன ஆச்சரியம்! இணையத்தில் இருந்த அனைவரும் நான் செய்த தவற்றைப் புரிந்து கொண்டு, என்னை மன்னித்துவிட்டனர். பலர் என் நேர்மையைப் பாராட்டினர். “நல்ல வேளை! கடைக்குச் செல்லாமல் இருந்தது எனக்குக் கவலையாக இருந்தது.” போன்ற பல கருத்துகள் இருந்தன. என் முகத்தில் புன்னகை பூத்தது. மாமாவின் கடையில் மக்கள் கூட்டம் மீண்டும் அலைமோதியது. வியாபாரமும் செழித்தது. என் மாமா? முகத்தில் அப்போது தான் புன்னகை பூத்து, “அடுத்தமுறை, சரிபார்த்துவிட்டு, புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்று மலர்! ஆனால், உன் தவற்றை உணர்ந்து, ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்க முயற்சிகளை மேற்கொண்டது நன்று!” என்று மாமா கூறினார். 



அன்றிலிருந்து, நன்மதிப்பு வளர பல வருடங்கள் எடுக்கும் என்றாலும், அதை ஒரு நொடியிலேயே சேதப்படுத்த முடியும் என்று கற்றுக்கொண்டேன். நான் அறியாது செய்த தவறினால், என் மாமாவின் நன்மதிப்பே பாதிக்கப்பட்டது. அன்று நடந்த மறக்க முடியாத சம்பவம், இணையத்தில் பதிவேற்றுவதற்கு முன்பு சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது. 

 

                                                                    - முற்றும் -

 


குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

  சப்ரினா கான் (302) அவைக்கு முதற்கண் என் வணக்கம்!   இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலை...